Sunday, January 5, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 60

கடவுள் அன்பு என்ற ஒரு குணத்தை மக்களுடைய மனக்குகையில் வைத்திருக்கின்றார்.  அப்பெருந்தனம் இல்லாவிட்டால் உலகம் நரகத்துக்குச் சமமாகிவிடும். - உ.வே.சா (அத்தியாயம் 61)

பிள்ளையவர்களைக் காண அம்பருக்கு வந்த போது காரையில் தாம் நிகழ்த்திக் கொண்டிருந்த திருவிளையாடற் புராண பிரசங்கம் முடிவுறாத நிலையிலேயே அங்கிருந்தோரிடம் ஒரு வித அவசர உணர்வோடு விடைபெற்று வந்திருந்தார் உ.வே.சா. பிள்ளையவர்களைப் பார்த்து அவரோடு சில நாட்கள் இருந்ததில் அவர் மனதில் இருந்த பிரிவின் ஏக்கம் தீர்ந்து தடைபட்டுப் போன கல்வி தொடர்ந்ததினால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியும் சேர்ந்திருந்தது. அதோடு அம்பரில் பிள்ளையவர்களைப் பாராட்டி ஆதரித்து வந்த வேலுப்பிள்ளையின் தம்பியார் குழந்தைவேலு பிள்ளைக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய  சேக்கிழார் பிள்ளைத் தமிழும், திருவிடைமருதூர் உலாவும் பாடம் சொல்லிக் கொண்டு காலம் செலுத்தி வந்ததும் தமிழ்க்கல்வியோடு நாட்களைச் செலவிட  வாய்ப்பாக அமைந்ததால் அம்பரில் அவரது நாட்கள் மகிழ்ச்சியாக அமைந்ததை உணர முடிகின்றது.

பின்னர் காரைக்குத் திரும்பச் சென்று முற்றுப் பெறாத நிலையிலிருந்த புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்து விட்டு  வருவதாகக் கேட்க, ஆசிரியருக்கு விடைபெற மனமில்லாத நிலை.  ஆனாலும் உ.வே.சாவின் கையில் ஒரு ரூபாய் பணத்தை வழிச் செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொல்லி கொடுத்து வழியனுப்பி வைத்தாராம். அதுமட்டுமல்ல. உ.வே.சாவை காரையில் பராமரித்து வந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரைப் புகழ்ந்து அவருக்கு ஒரு செய்யுளும் எழுதி கொடுத்ததோடு 'சாமிநாதையரைக் கொண்டு புராணத்தை விரைவில் நிறைவேற்றித் தாமதிக்காமல் அனுப்பி விடுக' எனக் குறிப்பும் எழுதி கொடுத்தனுப்புகின்றார்.

இந்தக் காலகட்டத்தில் உ.வே.சா வின் குடும்ப பொருளாதார நிலை சற்றே பிரச்சனை சூழ இருந்தது என்பதை அவர் குறிப்புக்களாலேயே அறிகின்றோம். காரையில் இறுதி நாள் புராணப் பிரசங்கம் எல்லோரும் பாராட்டும் வண்ணம் நிகழ்வுறுகின்றது. புராணப் பாடங்கள் சில நாட்கள்  நலமே தொடர, புராணம் பூர்த்தி பெறும் நாளும் நெருங்கியது. இந்த நாளை விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தார் ரெட்டியார். புராணப் பிரசங்க இறுதி நாளில் அனைவரும் மனம் நிறைந்து போற்றிப் பாராட்டும் வண்ணம் உ.வே.சாவின் பிரசங்கம் அமைந்திருந்தது. வந்திருந்த கனவான்களும் தமிழ் பெரியோர்களும் ஆடைகளும், சன்மானமும் கொடுத்து உ.வே.சாவைக் கௌரவித்திருக்கின்றனர்.  மொத்தம் 200 ரூபாய் வரை கிடைத்தது என்றும் அதில் தம் செலவுகளுக்காக வாங்கியிருந்த கடன் போக நெடுநாட்கள் தீராமல் இருந்த நமது திருமணக் கடன் 150 ரூபாயையும் தீர்க்க முடிந்திருக்கின்றது என்றும் மேலும் குறிப்பிடுகின்றார்.

காரையில் உ.வே.சா நிகழ்த்திய திருவிளையாடற் புராண பிரசங்கம் பாடம் கேட்டோரை மகிழ்வித்தது போலவே உ.வே.சா அவர்களின் பொருளாதாரச் சுமையையும் குறைத்து அவர் தம் குடும்பத்தார் மனக்குறையையும் நீக்கியது.

உ.வே.சா வின் குறிப்புக்களின் வழி அவரது காலகட்டத்தில் பொருளாதார பலம் படைத்த செல்வந்தர்களில் பலர் தமிழ் வளர்க்கும் புரவலர்களாகவும் இருந்து செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பதை நன்கு அறிகின்றோம். பொருள் படைத்தோர் கல்வி கற்ற புலவர்களைப் போற்றி பாதுகாத்து அவர்களை அரவணைத்தமையினால்தாம் தமிழ் கல்விச் செல்வம் மேலும் தழைத்து வளர்ந்தது. செல்வந்தர்கள் மட்டுமன்றி சைவ ஆதீனங்களின் செயல்பாடுகளும் தெய்வத் தமிழ் திறமுடன் செழித்து வளர மிகச் சிரத்தையுடன் சேவையாற்றியிருக்கின்றன. இந்த நூலில் இடம்பெறும் குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு நோக்கும் போது திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் மடத்தில் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதில் தமக்கு அதிக சந்தோஷமாக இருக்கின்றது எனக் குறிப்பிடுவதிலிருந்து இதனை அறிய முடிகின்றது.

மாணக்கர்கள் அதிகரித்து விட்டனரே. அவர்களுக்கான தங்கும் வசதி, உணவுச் செலவுகளுக்கு என்ன செய்வது எனத் தயங்காமல் கல்வி கற்றலில் ஈடுபாடுடையோரை அரவணைத்து தமிழ்க்கல்வி வழங்கிய காலமது என்பதைக் காண்கின்றோம்.

தொடரும்..

No comments:

Post a Comment