Wednesday, December 11, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 59

சில மாதங்கள் சூரிய மூலையில் இருந்து பிரசங்கங்களையும் பாடங்களையும் நடத்திக் கொண்டிருந்தார் உ.வே.சா. அங்கிருக்கும் போது தனது நிலையை விவரித்து ஆசிரியருக்கு கடிதம் எழுதுகின்றார். பின்னர் சூரிய மூலையில் ஓரளவு பணிகள் முடிந்து பொருளும் கிடைத்து அப்போதைய கடன் சுமையையும் அடைத்து விட்டு செங்கணம் புறப்படுவதற்கு முன்னரும் ஆசிரியருக்கு மீண்டும் தன் நிலையை விவரித்துக் கடிதம் எழுதுகின்றார். அவர் மனம் முழுக்க அப்போது ஆசிரியர் என்ன பாடம் நடத்திக் கொண்டிருப்பார்? என்ன நூலை இயற்றிக் கொண்டிருப்பார்? நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற தவிப்பு கலந்த நிலை.

தாம் கல்வி மேல் ஆசை இழந்து பொருள் நாட்டம் கொண்டு சென்று விட்டோமோ என ஆசிரியர் நினைத்து விடுவாரோ என்ற சஞ்சலமும் அவர் மனதில் வந்து அமர்ந்து கொண்டது. அதுவரை ஆசிரியருக்கு இவர் எழுதிய கடிதங்களுக்கு ஆசிரியரிடமிருந்து பதிலேதும் வரவும் இல்லை. தன் மேல் ஆசிரியருக்கு அன்பு குறைந்திருக்குமோ? இனி தாம் அவரிடம் பாடல் கேட்கவே செல்லமாட்டோம் என ஆசிரியர் நின்னைத்து விட்டாரோ?  என்ற அச்சமும் மனதில் வியாபித்திருந்தது. ஆரம்ப காலத்தில் தாம் மாணவராகச் சேர தன் தந்தையுடன் சென்ற சமயத்தில் .. 'பலரும் வந்து சேர்கின்றார்கள். ஆனால் இறுதி வரை இருப்பதில்லை' என மன வறுத்ததோடு கூறிய ஆசிரியரின் சொற்களும் காதில் வந்து ஒலித்து அவரை இம்சை செய்து கொண்டிருந்தன.

நம் மனம் தான் விசித்திரமான ஒன்றாயிற்றே. பல நேரங்களில் நம் மனமே நமக்கு எதிரியாகிப் போய்விடுவதுண்டு. ஆறுதல் கூற வேண்டிய நம் மனம் அச்சத்தால் நடுங்கி சந்தேகத்தால் குழம்பி வாடி நம்மை நிலை குலைய செய்து விடும் தன்மை படைத்தது. பயம் வந்தால் சிறிய விஷயம் கூட் பூதாகாரமாகி நம் கண்களுக்கும் மனதிற்கும் அவ்விஷயம் காட்சியளிக்கும். இப்படி இருக்குமோ .. அப்படி இருக்குமோ என சந்தேகமும் சஞ்சலமும் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும். உண்மை நிலையை உணரும் வரை தவித்து தத்தளித்துப் போகும் மனதை ஆற்றுப் படுத்த யாரால் முடியும் ?

தன் மனதின் ஓட்டத்தை இப்படி வடிக்கின்றார் தன் சரிதத்தில்.

என்ன இருந்து என்ன! ஆசிரியர் அன்பு இல்லாத இடம் சொர்க்கலோகமாக இருந்தால்தான் என்ன? ஆசிரியர் பிரிவாகிய வெப்பம் அந்த இடத்தைப் பாலைவனமாக்கி விட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்பு, வைத்துப் பழகினாலும் அந்த ஒருவர் இல்லாத குறையே பெரிதாக இருந்தது. எல்லோருக்கும் முன்னே உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து பிரசங்கம் செய்த போதிலும் என் ஆசிரியருக்குப் பின்னே ஏடும் எழுத்தாணியுமாக நின்று அவர் ஏவல் கேட்டு ஒழுகுவதில் இருந்த இன்பத்தைக் காட்டிலும் அது பெரிதாகத் தோற்றவில்லை.

இந்த எண்ணம் வந்துவிட்ட பிறகு செங்கணத்தில் இருக்க முடியாத நிலை உ.வே.சாவிற்கு. தன் தந்தையிடம் தன் மன நிலையைக் கூறினால் அதற்கு ஏற்ற வகை பதிலோ  தந்தையிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனாலும் தன் முடிவில் மாற்றம் செய்யாமல் ஆசிரியரைக் காணப் புறப்படுகின்றார் உ.வே.சா. அவரது அப்போதைய நிலையை விவரிக்கும் பகுதி அச்சமயத்தில் அவரது தவிப்பை வாசிப்போர் நன்கு உணரும் வகை செய்கின்றது.

என்றைக்குப் புறப்பட்டேன், எப்படி நடந்தேன் முதலியவைகளில் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆவேசம் வந்தவனைப் போல காரையில் புறப்பட்டவன் திருவாவடுதுறைக்குச் சென்று நின்றேன். திருவாவடுதுறை எல்லையை மிதித்தபோது தான் என் இயல்பான உணர்வு எனக்கு வந்தது.

இவரை 10 மாதங்கள் காணாதிருந்த திருவாவடுதுறை மடத்து அன்பர்களும் தம்பிரான்களும் இவரது உடல் நலத்தை விசாரிக்கின்றனர். இவருக்கோ பதில் சொல்ல மனமில்லை. ஆசிரியர் எங்கே எங்கே என்றே மனமும் கண்களும் கால்களும் ஓட தேடுகின்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் திரு அம்பர் புராணம் இயற்ற அத்தலத்திற்குச் சென்றார் என்ற செய்தி கிட்டுகின்றது. இது என்ன சோதனை என சற்றே மனம் சோர்கின்றார். ஆனால் தளரவில்லை. அங்கேயிருந்து அம்பரை நோக்கி புறப்பட்டு விடுகின்றார்.

அம்பர் திருவாவடுதுறைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு ஊர் என்றே நினைக்கின்றேன். காலையில் புறப்பட்டு மதியமே வந்து சேர்ந்து விடுகின்றார். பிள்ளையவரகளை வரவழைத்து ஆதரித்து அம்பர் புராணம் இயற்ற ஆதரித்த செல்வந்தர் வேலுப்பிள்ளை அவர்களைத் தற்செயலாக வழியில் சந்திக்க, பிள்ளையவர்கள் இருக்கும் இடம் பற்றி தெரிய வருகின்றது. சொர்க்கபுர மண்டபத்தில் பிள்ளை இருக்கின்றார் என தெரிந்ததும் அங்கே செல்கின்றார. அது வரை உணவும் உண்ணவில்லை. ஆசிரியரைப் பார்த்த பின்னர் எல்லாம் ஆகட்டும் என்ற எண்ணம். வேலுப்பிள்ளை ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்ல அதில் ஆர்வம் காட்டாது தூங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர் அருகில் செல்கின்றார் உ.வே.சா.

இப்போது நடக்கும் உரையாடல் ஒரு அன்பின் பிரதிபலிப்பு. இதனை உ.வே.சாவின் எழுத்துக்களாலேயே வாசிப்பதே அவர்கள் இருவரின் மனதின் ஓட்டத்தையும் அன்பின் ஆழத்தையும் வாசிப்போர் புரிந்து கொள்ள உதவும் என்பதால் அப்பகுதி இதோ.


அவருடைய குளிர்ந்த அன்புப் பார்வை என் மேல் விழுந்தது.

“சாமிநாதையரா?”

“ஆம்.”

அப்பால் சில நிமிஷங்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை; பேச முடியவில்லை. கண்கள் பேசிக் கொண்டன. என் கண்களில் நீர்த்துளிகள் மிதந்து பார்வையை மறைத்தன.

“சௌக்கியமா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“சௌக்கியம்” என்றேன். நான் ஒரு குற்றவாளியைப் போலத் தீனமான குரலில் பதில் சொன்னேன்.

“போய் அதிக நாள் இருந்து விட்டீரே!” என்று ஆசிரியர் சொன்னார்.

அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்! குடும்பக் கஷ்டத்தால் அவ்வாறு செய்ய நேர்ந்ததென்றும், ஒவ்வொரு நாளும் அவரை நினைந்து நினைந்து வருந்தினேனென்றும் சொன்னேன்.

“இவர் இன்னும் சாப்பிடவில்லை” என்று காரியஸ்தர் இடையே தெரிவித்தார். நான் சாப்பிடவில்லையென்பது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

“சாப்பிடவில்லையா! முன்பே சொல்லக் கூடாதா? முதலிலே போய்ச் சாப்பிட்டு வாரும்” என்று ஆசிரியர் கட்டளையிட்டார். போய் விரைவில் போஜனத்தை முடித்துக் கொண்டு வந்தேன்.

பிறகு இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். பத்து மாதங்களாக அடக்கி வைத்திருந்த அன்பு கரை புரண்டு பொங்கி வழிந்தது. என் உள்ளத்தே இருந்த பசி ஒருவாறு அடங்கியது. ஆசிரியர் கடன் தொல்லையிலிருந்து நீங்கவில்லை என்று நான் தெரிந்து கொண்டேன். அம்பர்ப் புராணம் அரங்கேற்ற வந்ததற்கு அங்கே பொருளுதவி பெறலாமென்ற எண்ணமே காரணம் என்று ஊகித்து உணர்ந்தேன்.

உறவுகளுக்கிடையே தான் ஆழ்ந்த அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும் என்ற நிலை கடந்து, கருத்து ஒருமித்து மனம் லயித்துப் போன  ஜீவன்களுக்கிடையே நடக்கும் அன்பின் சம்பாஷணையாகவே இப்பகுதி என் மனதின் உணர்வுகளுக்குத் தென்படுகின்றது.

தொடரும்

சுபா
குறிப்பு : அத்தியாயம் 60 லிருந்து குறிப்புக்கள் இப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment