Sunday, July 30, 2023

ஓப்பன்ஹைமர்



 இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய செய்திகள் நான் மலேசியாவில் பினாங்கில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஜப்பானிய ராணுவத்தார் ஏற்படுத்திய பேரழிவுகள்.. குறிப்பாக அன்றைய மலாயா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் ஜப்பானிய ராணுவம் ஏற்படுத்திய கொடூரமான வரலாற்று பின்னணி பற்றிய செய்திகள் பாடங்களின் வழியாக எங்களுக்கு அறிமுகமாகி இருந்தது. மிக நீண்ட காலமாக ஜப்பானியர்களைப் பார்த்தாலே பேசுவதற்கும் பிடிக்காத ஒரு மனநிலை எனக்கு மட்டுமல்ல.. மலேசியாவில் பிறந்து வளர்ந்த பலருக்கும் வரலாற்று பின்னணியின் அடிப்படையில் இருக்கின்ற ஒரு இயல்பான ஒரு மனநிலை தான்.

ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து விட்ட கடந்த ஏறக்குறைய 20 ஆண்டுகள் காலகட்டத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி குழுக்கள் ஏற்படுத்திய மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் இத்தாலியில் முசோலினி செயல்படுத்திய பாசிச அரசியல், அதன் பின் விளைவுகள் பற்றியும் என்னால் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
அண்மைய காலமாக ரஷ்ய உக்கிரேன் இரு நாடுகளுக்குமான போர், இன்று ஐரோப்பிய நிலப்பகுதியில் மாபெரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.
போர்கள் என்றைக்குமே நன்மையை செய்ததில்லை. போர்களினால் ஏற்படுவது அழிவு மட்டுமே. மனிதர்களுக்கு ஏற்படுகின்ற உயிர்ச்சேதம் என்பதும் உடல் ரீதியான பாதிப்புகள் என்பது ஒரு புறம் இருக்க, அழகிய இந்த பூமி போர்களினால் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு அழிவை சந்தித்துக் கொண்டே இருக்கின்றது.
அந்த அழிவுகளில் உச்சகட்ட அறிவாக மனிதன் உருவாக்கி வைத்திருப்பது அணு ஆயுதங்கள்.
ஓப்பன்ஹைமர் திரைப்படம் பார்ப்பதற்கு நேற்று ரம்யா-அருள் குடும்பத்தாருடன் சென்றிருந்தோம். இங்கு லியோன்பெர்க் கிராமத்தின் ஒரு பகுதியில் தான் உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் (IMAX) திரையரங்கு இருக்கிறது. ஐமேக்ஸ் திரைக்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஓப்பன்ஹைமர் திரைப்படத்தை நேற்று அதன் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் பார்த்தேன்.
அணு ஆயுத தந்தை என அழைக்கப்படுகின்ற ஓப்பன்ஹைமரின் முழு வரலாற்றையும் மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்கி விட முடியாது என்றாலும் கூட அவர் வாழ்வின் முக்கிய தருணங்களைத் திரைப்படம் வெற்றிகரமாகப் பதிவாக்கி இருக்கிறது.
ஜெர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவிற்குத் தஞ்சம் புகுந்த ஒரு யூத குடும்பத்தில் பிறந்த ஓப்பன்ஹைமர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று பிறகு தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக ஜெர்மனிக்கு கியூட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கு வருகின்றார். கல்வி பயின்று பிறகு மீண்டும் அமெரிக்கா திரும்பி அங்கு பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியைத் தொடங்குகின்றார்.
இடதுசாரி சிந்தனையில் அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தாலும் தன்னை சுற்றியுள்ள சூழ்நிலையை உணர்ந்து கொண்டு தனது கவனத்தை அணு ஆய்வில் செலுத்துகின்றார். யுரேனியம் ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் பற்றி அறிந்திருந்தாலும் அணு ஆயுத தயாரிப்பு இரண்டாம் உலகப்போரை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் இவர்களது ஆய்வு குழு செயல்படுகிறது.
ப்ராஜெக்ட் மேன்ஹேட்டன் என்ற திட்டத்தை வகுக்கின்றார்கள். நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஒரு புதிய நகரை உருவாக்கி அங்கு விஞ்ஞானிகள் குடியேறி ரகசியமாக இந்த திட்டத்தை வடிவமைக்கின்றார்கள். சோதனைத் திட்டத்திற்கு ட்ரினிட்டி என்ற பெயரை வழங்குகின்றார்.
ஓப்பன்ஹைமரின் ஆய்வுக் குழு தயாரித்த அணுகுண்டுகள் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரிலும் 9ஆம் தேதி நாகசாகி நகரிலும் போடப்படுகின்றன. அது மாபெரும் மனித குல அழிவை ஏற்படுத்துகின்றது. ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இறந்து போகின்றார்கள். யுரேனியம் கதிர்வீச்சுகளின் தாக்கம் இப்பகுதிகளில் மிக நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து அதன் தாக்கத்தை வழங்கிக் கொண்டே இருந்தது.
ஓப்பன்ஹைமர் வாழ்க்கை இதற்குப் பின் மாறுகின்றது. தான் செய்தது மனித குலத்திற்கும் இந்த உலகத்திற்கும் மிகப்பெரிய கேடு என்று நினைத்து உளவியல் ரீதியாக தன்னை குற்றவாளியாக நினைத்து வருத்திக் கொள்கின்றார். அதன் பின்னர் அவர் மீது அவரது இடதுசாரி சிந்தனை ஈர்ப்பு தொடர்பான பின்னப்பட்ட கதைகள்.. அவர் அமெரிக்காவிற்கு எதிராக ரகசியங்களை ரஷ்யாவிற்கு வழங்கியிருக்கலாம் என்ற வகையான பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தப்பட்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அதில் அலைக்கழிக்கப்படுகின்றார். இறுதியில் அவர் நாட்டிற்கு துரோகம் செய்யவில்லை என்ற முடிவு வந்தாலும் அவருக்கான செக்யூரிட்டி கிளியரன்ஸ் தருவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை. இதனை திரைப்படம் மிகுந்த கவனம் செலுத்தி இப்பகுதியை விரிவாக காட்டுகின்றது.
திரைப்படம் முடிந்து வந்த பின்னரும் கூட ஓப்பன்ஹைமர் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் மனதை விட்டு அகலவில்லை. ஜப்பான் ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுமே இரண்டாம் உலகப் போரின் காலத்தில் ஏற்படுத்திய அழிவுகள் இன்னும் கூட முழுமையாக உலகிற்கு வெளிவந்திருக்கின்றதா என்பது கேள்விதான். ஏனென்றால் அவ்வப்போது பல செய்திகள் புதிது புதிதாக இன்னும் கூட வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஜப்பானிய ராணுவ வீரர்கள் சீனாவில் இருந்த சீனப் பெண்களுக்கும் மலாயாவில் இருந்த சீனப் பெண்களுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படுத்திய கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாத கொடுமைகள். ஜப்பானிய அரசு கடந்த நூற்றாண்டின் இறுதியில் இதற்காக சீனப் பெண்களிடம் மன்னிப்பு கேட்ட நிகழ்வும் வரலாற்றில் நிகழ்ந்தது.
அணு ஆயுத நாடுகளாக இன்று அமெரிக்கா மட்டுமின்றி ரஷ்யா இந்தியா உட்பட மற்றும் பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளாக மாறி இருக்கின்றன. யுரேனியம் ஏற்படுத்தக்கூடிய தாக்குதல் என்பது எத்தகைய அழிவை ஏற்படுத்தக்கூடும் என்பது தெரிந்தும் கூட அதற்கும் பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரஜன் அணு குண்டுகளை தயாரிக்கின்ற மனநிலைக்கு மனித குலம் சென்று விட்டது.
இந்த் திரைப்படத்தில் பல காட்சிகள் நம் மனதில் ஆழமாக பதிகின்றன. குறிப்பாக ஓப்பன்ஹைமர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இருவரும் சந்திக்கும் தருணங்கள்.. காதலியின் மறைவுக்குப் பின்னர் தன்னை வருத்திக் கொள்ளும் காட்சிகள்.. ஜப்பான் சரணடைந்துவிட்ட பின்னர் ஓப்பன்ஹைமர் வழங்கும் உரை - மனதில் தன்னை வருத்திக்கொண்டு வெளியே தனது அறிவியல் கருத்துக்களை உயர்த்திப் பேசும் காட்சிகள்.. விசாரணை கமிஷனின் போது ஒவ்வொரு தருணத்திலும் அவர் அனுபவிக்கின்ற மன உளைச்சல் என திரைப்படத்தின் பல பகுதிகள் மனதை உருக்கும் காட்சிகளாக அமைகின்றன.
ஒரு நல்ல திரைப்படம் அது பார்த்து முடிந்த பின்னர் நம்மை பல தேடுதல்களுக்கு ஆட்படுத்த வேண்டும். அந்த திரைப்படத்தை ஒட்டிய பல தகவல்களைத் தேடி கண்டுபிடித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்று நான் பொதுவாகவே விரும்புவேன். அந்த வகையில் இந்தத் திரைப்படம் அக்காலகட்டத்தின் அமெரிக்க அரசியல் நுணுக்கங்களை பற்றி அறிந்து கொள்ள பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
-சுபா






Wednesday, July 26, 2023

கம்போடியா நினைவுகள் - நூல் விமர்சனம்

கம்போடியா நினைவுகள் - நூல் விமர்சனம்

 
இந்த நூல் திரு.நரசய்யா அவர்களது அண்மைய வெளியீடுகளில் ஒன்று. 2010ல் சென்னையில் திரு.நரசய்யா அவர்கள் இல்லத்தில் சந்தித்து உரையாடிவிட்டு வரும் போது எனக்கு அன்பளிப்பாக அவரால் கொடுக்கப்பட்ட நூல்களில் ஒன்று.  வாசிக்க வேண்டும் என பல நாட்கள் நினைத்து அது பல வேலைகளினால் தள்ளிப் போய்விட்டன.  வாசிக்கும் வாய்ப்பு அமைந்த போது இரண்டே நாள் மாலை நேரத்தில் இந்த 160 பக்க நூலை வாசித்து முடித்தேன். படித்து முடித்த போது இந்த நூலை நிச்சயம் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு இரண்டு காரணங்கள்.
 
வரலாற்று நூல்களை வாசிக்கும் பழக்கத்தைத்  தமிழ் வாசகர்களிடையே பரவலாகக் கொண்டு செல்லவேண்டும் என்பது முதல் காரணம்.  நூல்களை விரும்பி வாசிக்கும் போக்கு இப்போது தமிழ் மக்களிடையே வளர்ந்து வருகின்றது.  பல்வகை நூல்களும், நாவல்களும் வந்த வண்ணம் இருக்கையில் ஒரு நல்ல நூலுக்குச் விமர்சனபங்கள் வழியாக அறிமுகம் வழங்கப்படும் போது இக்குறிப்பிடத்தக்க நூல்கள் மக்களைச் சென்றடையும் நிலையை உருவாக்க முடியும்.
 
அடுத்ததாக இந்த நூலின் ஒரு தனி சிறப்பு. இது நாவலோ சிறுகதையோ அல்ல. ஆனாலும் படிக்கும் போது ஒரு கதையைப் படிக்கும் ஆர்வத்தை உணர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் இந்தப் பயண நூலின் கதாநாயகனும் கதாநாயகியும் கம்போடியா என்னும் ஒரு நாடு என்பதே. நூல் முழுமைக்கும் உணர்வுகள் மிகுதியாகத் தெரிகின்றன. நூல் ஆசிரியர் இந்த நூலிலுள்ள பகுதிகள் ஒவ்வொன்றையும் காதலித்து எழுதியிருப்பது போல அனபின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. ஆக பக்கத்திற்கு பக்கம் பயணத்தின் அனுபவம்  என்பது அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு படியாக வளர்ந்து ஒரு கதையைப் படித்து முடித்த அனுபவமாக வாசகர்களுக்கு அமைந்து விடுகின்றது.
 
இந்த நூலில் மூன்று விஷயங்கள் விளக்கப்படுகின்றன. ஒன்று - உலகவங்கியின் பிரத்தியேக அழைப்பின் பேரில் திரு.நரசய்யா கம்போடியா சென்று தனக்கிடப்பட்ட திட்டத்தை ஆரம்பித்து சரிபார்த்து, அதனை நிகழ்த்தி முடித்த நிகழ்வுகள். இதனையொட்டி உலக வங்கியின் பொறுப்பில் நிகழும் சில நிதர்சனங்களையும் பிரதிபலிப்பதான சில நிகழ்வுகள். அடுத்து விளக்கப்படுவது கம்போடியா என்னும் நாடு, அதன் பண்டைய சரித்திர வளம், தமிழர்களுக்கும், தமிழ் கலை கலாச்சார பண்புகளுக்கும் பண்டைய கம்பூச்சிய நாட்டின் சிறப்பிற்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விளக்கங்கள்.  இத்தகைய விளக்கங்கள் தக்க வரலாற்றுக் குறிப்புக்களோடு  விளக்கப்படுவதும் மன்னர்களின்  பெயர் பட்டியல் இணைக்கப்பட்டிருப்பதும் வாசிப்பைச் சுலபமாக்கி இந்திய கம்பூச்சிய நாடுகளின் வரலாற்று தொடர்புக்கான காரணங்களை அறிந்து கொள்ளச் செய்கின்றன.
 
அதோடு கடந்த சில நூற்றாண்டுகளில் எவ்வாறு இந்த நாடு அழிவினைச் சந்தித்தது, அரசியல் மாற்றங்கள், அரசாட்சி நிலை, மக்களின் துன்பமே வாழ்க்கையாகிப் போன உண்மை நிலை ஆகியன விளக்கப்படுகின்றன. மூன்றாவதாக அங்கோர் வாட் எனும் பிரமாண்டம் விவரிக்கப்படுகின்றது. இந்த நூலில் அங்கோர் வாட் பற்றிய செய்தி சிறிதளவே இருந்தாலும் இந்த ஆலயத்தின் பால் ஆசிரியர் காட்டும் வியப்பும் ஈடுபாடும்  இதனையொரு முக்கிய கருப்பொருளாகப் பார்க்கச் செய்கின்றது. ஆக இந்த மூன்று முக்கிய விஷயங்களை உள்ளடக்கி தனது பயண காலத்தில், தான் கம்போடிய நாட்டில் இருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த நூலினை அமைத்திருக்கின்றார் திரு.நரசய்யா.
 
 
உலகின் பல்வேறு நாடுகளில் மதவெறி, இனவெறியினால் மக்களை கொன்று குவித்து இன்னல் செய்த கதைகளை நாம் பார்த்திருக்கின்றோம். முதலாம் இரண்டாம் உலகப் போர்கள் மட்டுமின்றி யூத மக்களின் இனப்படுகொலை,  ஆர்மேனிய மக்களை துருக்கியர்கள் கொன்று குவித்த வரலாற்றுச் செய்திகள், செர்பிய நாட்டில் நிகழ்ந்த  பல்வேறு இனக்கலவரங்கள், இலங்கை தமிழர்களின் இன படுகொலை செய்திகள் என பல துரதிஷ்டவசமான நிகழ்வுகளைப் பற்றி பல செய்திகளை நாம் படித்தும் கேட்டும், தெரிந்திருக்கின்றோம்.
 
இவை கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை. உலகம் தோன்றிய நாளிலிருந்து வரலாறு காட்டுவதே போராட்டமும் இனக் குழுக்களின் சண்டை அதனால் ஏற்படும் வெற்றி தோல்விகள், இழப்புக்கள் போன்றவற்றைத்தான். இவை மனதிற்கு ஒரு வித அலுப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. இருப்பினும் இப்படி நடந்தவை தான் வரலாறு என இன்றைய சமுதாயத்திற்கு நிகழ்காலத்தை காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கம்போடியாவில் நிகழ்ந்த வரலாற்றை பலர் அறிந்திரா நிலை என்பது மிகப்பெரிய துரதிஷ்டம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
 
 
உலக வங்கியின் பிரத்தியேக அழைப்பின் காரணமாக நூலாசிரியர் 1995லிருந்து 1996 வரை மூன்று முறை கம்போடியா சென்று அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து தனக்கு வழங்கப்பட்ட திட்டத்தை ஆய்வு செய்து தூர்வாறும் கப்பலை சரிபார்த்து அதனை இயக்கும் வகை செய்து கொடுத்து வந்திருக்கின்றார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நமக்கு தெரிந்த ஒரு நண்பர் உதவியிருக்கின்றார் என்பதை நினைக்கும் போது மனதிற்குள் ஒரு பெறுமிதம் உண்டாகின்றது.  இதனை ஒரு வேலையாக அல்லாமல் தனது கடமையாக ஏற்று இப்பணியை நூலாசிரியர் முடித்திருக்கின்றார் என்பதனை நூலின் பல இடங்களிலிருந்து அவர் காட்டும் நிகழ்வுகளின் உதாரணங்கள் வெளிப்படுத்துகின்றன. 
 
 
கம்போடிய அரசின் அரசியல் செய்திகள் பலவற்றை புரிந்து கொள்ளவும் இந்த நூல் வழிவகுக்கின்றது. உதாரணமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த கம்பூச்சியாவின் வரலாறு, அதில் குறிப்பாக ஃபூனன் வல்லரசு, பிறகு இதனை ஆண்ட ஃபன் சேமன் என்ற அரசனது காலத்தில் இருந்த சிறந்த கடற்படை,  பல்லவ அரசர்களுக்கும் இந்த நாட்டை ஆண்ட அரசர்களுக்கும் தொடர்பிருக்கலாம்  என்ற வகையில் கூறப்படும் விளக்கங்கள்,  சீனாவுக்கும் கம்பூச்சியாவுக்கும் இடையில் இருந்த உறவு, கிபி 600ல்  ஜெயவர்மன் என்ற பெயர் கொண்ட மன்னர் தொடங்கி  அடுத்தடுத்து ஆண்டு வந்த மன்னர்கள் பற்றிய சில செய்திகள், அங்கோர் வாட் கட்டப்பட்ட செய்திள், கட்டப்பட்ட ஆண்டு போன்ற தகவல்கள்  போன்றவை   பழம் கம்பூச்சியாவை விவரிக்கின்றன.
 
1953ல் பிரஞ்சுக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்ற கம்போடியா, விடுதலைக்குப் பின்னர் அரசர் நோரோடம் சிஹோநக் அவர்களது ஆட்சி, அவரது அரசியல் நிலைப்பாடு, குழப்பங்கள் போன்றவை,  அவனால் இழைக்கப்பட்ட கொடுமைகள், வியட்நாம் போர் அதில் கம்போடியாவின் நிலை மற்றும் ஏற்பட்ட பாதிப்பு, கெம்ர் ர்ரூ குழுவினர், அவர்களின் புரட்சியினால் ஏற்பட்ட துன்பங்கள், பால் பாட் என்னும் சர்வாதிகாரி,  போன்றவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றன.
 
இந்த நூலை வாசித்து முடித்த போது மலேசியாவில் எனது பள்ளிப் பருவத்தின் போது கேள்விப்பட்ட ஒரு சில செய்திகள் நினைவில் தோன்றின. ஆசிரியர் குறிப்பிடுவது போல கம்போடியா என்னும் நாட்டிற்கும் அதன் எல்லையைத் தாண்டிய நாடுகளிலிருந்து எல்லா வகையிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டு அந்நாட்டில் நிகழும் எந்த செய்திகளும் வெளியில் தெரியாமல் சில காலம் இருந்து பின்னர் ஐக்கிய நாடுகளின் சபை தலையிட்ட செய்திகளை முன்னர் பள்ளி நாட்களில் வாசித்திருக்கின்றேன்; தொலைகாட்சி செய்திகளில் பார்த்திருக்கின்றேன். அவை இந்த நூலை வாசித்த போது ஞாபகத்திற்கு வந்தன.
 
 
நாட்டின் கதை சொல்லபப்டும் போது அதில் வாழும் மக்களின் பண்புகளும் கூட விளக்கப்படுகின்றன. கம்போடிய மக்களின் பண்பு நலன்களும் இந்த சிறிய நூலில் ஆங்காங்கே விளக்கப்படுகின்றன.
 
நான் வாசித்து முடித்த போது ஒரு வித மெல்லிய சோக உணர்வு மனதில் உருவானது உண்மை. அதிலும் இவை உண்மை  நிகழ்வுகளின் பதிவுகள் என்பது ஒரு முக்கிய விஷயம். சரித்திர நிகழ்வுகள் காலப் போக்கில் நமது ஞாபகப் படிமத்தில் கீழே கீழே சென்று ஞாபகத்திலிருந்து மறைந்தே கூட போய்விடுகின்றன. அந்த வகையில் கம்போடியா என்ற நாடு அந்த நாட்டில் இந்திய நாகரிக பண்பாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், அம்மக்களின் தற்கால நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த நூலும் ஒரு வகையில் துணை புரியும். நான் வாசித்து மகிழ்ந்த நூல். அந்த வகையில் இதனை விமர்சனம் செய்து அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.
 
ஒரு கதையில் பொதுவாக வாசகர்கள் எதிர்பார்ப்பது சுமுகமான ஒரு முடிவு இருக்க வேண்டும்.  பயண நூலில் இந்த வகையில் எதிர்பார்க்க முடியாது தான். ஆனாலும் கம்போடியாவை விட்டு ஆசிரியர் பிரிந்து வருவது ஒரு வித சோக உணர்வை, பிரிவின் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது. ஆசிரியர் மீண்டும் ஒர் முறை கம்போடியா சென்று தனது ஆத்மார்த்த வடிவமான அங்கோர்வாட் பிரமாண்டத்தை ரசிக்க வேண்டும்; அதன் வழி கிடைக்கும் தனது அனுபவங்களைப் பற்றி மேலும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே என மனம் விரும்புகின்றது.
 
நூல் விபரம்:
பெயர்: கடலோடியின் கம்போடியா நினைவுகள்
ஆசிரியர்: நரசய்யா
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை, தமிழ் நாடு.
 
 

Sunday, July 23, 2023

தமிழ்ச்சூழலில் அறிவியல் புரட்சி

 நம்மை சுற்றத்தாரால் மட்டுமல்ல... இணையத்திலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது மூடநம்பிக்கை சார்ந்த விசயங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. நமது சிந்தனையைத் தாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

அறிவியல் அறிவை நம் சிந்தனையில் சேர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நாம் கட்டாயமாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
சிறிவர்களுக்கு மட்டுமல்ல.. பெரியவர்களுக்கும்..!!
நம் தமிழ்ச்சூழலில் அறிவியல் புரட்சி இன்றைய கட்டாயத் தேவை!
-சுபா

Science Advocate

 Science Advocate என்பவர்கள் தமிழகத்திற்கு மிகவும் தேவையான நபர்கள். இவ்விழியம் கண்டால் அதைப் புரிந்து கொள்வீர்கள். நான் 70களில் உயிரியல் படித்தபோது கிடைத்த முக்கிய பாடம் கலப்பற்ற மனிதக்கூட்டம் என்பது ஏதுமில்லை என்பதே. உலகில் எவ்வளவுதான் தனித்து வாழ்ந்தாலும் மனித ரத்தம் சுத்தமானதல்ல. இதைத்தான் டாக்டர் க.சுபாஷிணியின் பேச்சு வலியுறுத்துகிறது.

மேலும், தமிழன் போலியான சில நம்பிக்கைகளின் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் அறிவியல் சார்ந்து தன் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர் அவா. ஜெயகாந்தன் "ஊருக்கு நூறுபேர்" என்ற நூலில் சொல்ல ஆசைப்படுவது போல் சுபாவும் தன்னைப் போல் ஊருக்கு நூறு பேராவது அறிவியல் வாழ்வியலைப் பேச வேண்டும் என ஆசைப்படுவதை விஞ்ஞானியான நான் ஆதரிக்கிறேன்.
நமது சாதீய வாழ்வியல் என்பது மனித பரிணாமத்தை நோக்கும் போது மிக சமீபத்தில் தோன்றியது, அது அறிவியல் ஆதரமற்றது என்பதே உண்மை.
இவ்வகை ஆய்வுகள் தேவையா? எனும் கடைசிக் கேள்விக்குப் பதில் தேவை என்பதே. ரிச்சர்ட் லீக்கியின் ஆற்றுப்படுத்தலில் ஜேன் குடால் சிம்பான்சி குரங்கில் நடத்திய ஆய்வு இன்று நாம் வனவிலங்கின் உலகை அறிந்து கொள்ளத் தூண்டுகோலாய் இருக்கிறது. அதுவே வன விலங்களுக்கும் நமக்குமுள்ள ஆழமான உயிரியல் தொடர்பை நிச்சியப் படுத்துவதாக உள்ளது. மனிதன் எங்கோ வானத்திலிருந்து தோன்றிய தேவதூதன் அல்ல. அவனும் ஓர் உயிரியல் விலங்கே எனும் புரிதலை இத்தகைய ஆய்வுகள்தான் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. ஆயின் கடந்த 50 ஆண்டுகளுக்குள் 60% வனவிலங்குகளை அழித்துவிட்டோம் (உயிரினங்களை). இது கெட்ட சேதி. உயிரியல் அழிப்பு என்பது தற்கொலைக்குச் சமம். அதை இத்தகைய ஆய்வுகள் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
நண்பர் ஒளிவண்ணன் மிக முக்கிய கேள்வி ஒன்றை வைத்தார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றித்தான் உலகப்பரவலை செய்திருக்க வேண்டுமா? என்பது. அறிவியல் என்பது தரவுகளைக் கொண்டு முடிவுகளைக் காண்பது. அவ்வகையில் வந்ததுதான் அம்முடிவு. ஆயினும், மனிதத் தோற்றம் என்பது உலகின் வெவ்வேறு இடங்களில் உண்டாகியிருக்க வாய்ப்புண்டு எனும் கருதுகோளும் உண்டு. குறிப்பாக போர்னியோ காடுகளில்!
இதில் விட்டுப்போன இன்னொரு ஆய்வுச் செய்தி என்பது ஹோமோசெபியன்ஸ் தோற்றமுற்ற பிறகு (படைக்கப்பட்டபின் அல்ல 😉) natural selection (இயற்கைத் தேர்வு) என்பது இயற்கையிடமிருந்து மனிதனுக்கு வந்துவிட்டது. சுபா சொன்ன நாய்கள், பூனைகள், பல்வேறு வகையான ஒட்டு தாவரங்கள், ஜெனிடிக் என்ஜினியரிங் மூலம் உருவாக்கும் செயற்கை உயிரினங்கள், செயற்கை புரதம் போன்ற உணவு உருவாக்கம், இறுதியாக மனதை வைத்து இயங்கும் செயற்கை அறிவு இவையெல்லாம் புதிதாக உருவாகியிருக்கும் cultural evolution எனும் துறையில் அடங்கும். மனிதன் கடவுளின் வேலையை செய்யத் தொடங்கியுள்ளான். எனவே அதைப் புரிந்து கொள்ளவும், இத்தகைய ஆய்வுகள் தேவை.
தமிழகம் அறிவு சார்ந்து இயங்க வேண்டும் எனும் சுபாவின் கனவு நிறைவேற என் நல் வாழ்த்து.
-நா.கண்ணன்

Friday, July 21, 2023

மணிப்பூர் வன்கொடுமை

 மணிப்பூர் வன்கொடுமை மனதை ஆக்கிரமித்து வருத்துகின்றது.

என்ன மனிதர்கள் இவர்கள்.. என்ன நடக்கின்றது என திகைத்துப் போயிருக்கின்றேன். இப்படியெல்லாம் கூட நடக்க முடியுமா என அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றேன்.
பாலியல் வன்கொடுமை நடந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இச்செய்தி வெளியே வருகின்றது என்பது இன்னும் அச்சமூட்டுகின்றது. CNN, BBC, The New York Times, Sky News என பல அயல் நாட்டுப் பத்திரிக்கைகளில் இச்செய்தியை இன்று முக்கியச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.
தலைகுனிவு என்பதா? வெட்கப்படுவதா.. எழுதுவதற்கே வார்த்தைகள் வராதபடி கோபமும், வெறுப்பும், ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்ட அப்பெண்களை நினைக்கும் போது என் மனம் அழுகின்றது.
ஆண்கள் அப்பெண்களை கொடுமைபடுத்திக் கோண்டே இழுத்துச் செல்லும் போது கூடவே வயதில் மூத்தோரும் வருகின்றனர். அவர்களுக்குக் கூட இது மனிதாபிமானமற்ற ஒரு செயல் எனப் புரியவில்லையா? தடுத்து நிறுத்த வேண்டாமா?
காலம் காலமாக எதிர்தாக்குதல் செய்வது என்றாலே பெண்களை உடல் ரீதியாகத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் வெறித்தனமான செயல் இன்றும் இப்படி மிகக் கொடூரமாகத் தொடர்கின்றது. இப்படி இன்னும் எத்தனை கொடுமைகளைப் பார்ப்பது?
ஆண்கள் இப்பெண்களைக் கொடுமை படுத்தி நிர்வாணமாக்கி அழைத்து வருவதை அதே ஆண்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூட எதிர்க்கவில்லையே.. தடுக்கவில்லையே ஏன் ? அவர்களுக்கு தனது சக சகோதரி ஒருவர் துன்பப்படுகின்றாளே.. அவளைக் காப்பாற்றுவோம்.. கொடூர மனம் படைத்த தங்கள் குடும்பத்தவர்களிடமிருந்து அப்பெண்ணை பாதுகாப்போம் என்ற எண்ணம் எழவில்லையே ஏன்?
அவர்கள் தங்களைத் தாக்கி விடுவார்கள் என்ற அச்சமா?
இல்லை இது அந்த வேற்று இனத்து பெண்ணுக்கு நடக்கட்டும் என அவர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா..?
பெண்களின் மனமும் கொடூரமாகிவிட்டதா?
நாகரிகம் அடைந்துவிட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.. ஆனால்.. காட்டு வாசிகளுக்குள் இருக்கும் ஒழுக்கம் கூட தொலைந்து போன வகையில் தான் இந்த நிகழ்வு இருக்கின்றது.
இதில் ஈடுபட்ட அத்தனை பேரும் பிடிக்கப்பட்டு சட்டப்படி அதிகபட்ச தண்டனை கிடைத்தால் தான் நம் மனம் ஆறும்.
-சுபா

Wednesday, July 19, 2023

39,000 ஆண்டுகள் பழமையான உலகின் மிகத் தொன்மையான தாய் சிற்பம்

 ஜெர்மனி ப்லவ்பேரன் தொல்மாந்தர்கள் அருங்காட்சியகம்

உலகின் மிகத் தொன்மையான தாய் சிற்பம்



தொன்மையான மனித இனங்கள் குழந்தை பிறப்பை அதிசயத்துப் பார்த்து தாய் வடிவத்தை வழிபடும் உருவமாக வடிவமைக்க தொடங்கிய காலகட்டம் தொடங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்பது தொடங்கி இருக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் ஆய்வுலகில் இன்றைக்கு நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பழமையான தாய் வடிவம் என்பது ஜெர்மனி நாட்டில் உள்ள சுவாபியன் யூரா குகை பகுதியில் உள்ள ஹோலஃபெல்ஸ் குகைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இது என்றைக்கு 39,000 ஆண்டுகள் பழமையானது என்பது தொல்லியல் ஆய்வறிஞர்களின் கண்டுபிடிப்பு.
ப்லவ்பேரன் தொல்மாந்தர்கள் அருங்காட்சியகத்தில் இந்த தொல் வடிவ தாய் வடிவம் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இது முன்பு வாழ்ந்து அழிந்ததாகக் கருதப்படும் மாமுத் என்று அழைக்கப்படுகின்ற மிகப் பெரிய விலங்கின் கொம்புகளினால் உருவாக்கப்பட்ட வடிவமாகும்.
உலக வரலாற்றில் மிக முக்கிய அரிய பொருட்களாக பாதுகாக்கப்படுகின்றவற்றில் இந்த வடிவம் சிறப்பிடம் பெறுகின்றது.
ஜெர்மனிக்கு வருபவர்கள் இந்த அருங்காட்சியகம் வந்து கட்டாயமாக இந்த தாய் வடிவத்தைப் பார்வையிடுவது தொல்பழங்கால மனிதர்களின் ஆரம்ப கால கடவுள் வழிபாட்டின் தொடக்கத்தை அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.





-சுபா
19.7.2023

Tuesday, July 18, 2023

38,000 ஆண்டுகள் பழமையான நீர் பறவை சிற்பம்

 ஜெர்மனி ப்லவ்பேரன் தொல்மாந்தர்கள் அருங்காட்சியகம்




நீர் பறவை சிற்பம்- இன்று உலகின் அழிந்து போன விலங்குகளில் ஒன்றான மாமூத்தின் கொம்புகளிலிருந்து தொல்மாந்தர்கள் உருவாக்கிய பல பொருட்கள் ஜெர்மனி ஹோலெஃபெல்ஸ் குகைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு படத்தில் இருப்பது 38,000 ஆண்டுகள் பழமையான ஒரு நீற்பற்வையின் நுணுக்கமான சிற்பம்.
இதுவரை கிடைக்கப்பட்ட மிகப்பழமையான பறவையின் சிற்பம் என இது தொல்லியல் அறிஞர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. உடலோடு நெருக்கமாக ஒட்டியபடி இந்தப் பறவையின் சிறகுகள் இருப்பது போல இதனை தொல்மாந்த கலைஞன் வடிவமைத்திருக்கின்றார்.
உலகின் தொன்மையான பண்பாடுகள் சிலவற்றுள் பறவைகள் மனிதர்கள் வாழ்கின்ற உலகுக்கும் இறந்து போனோர் வாழ்கின்ற உலகுக்குமிடையே தொடர்பினை ஏற்படுத்தும் பாலமாகக் கருதப்படுகின்றன.





-சுபா