Wednesday, July 26, 2023

கம்போடியா நினைவுகள் - நூல் விமர்சனம்

கம்போடியா நினைவுகள் - நூல் விமர்சனம்

 
இந்த நூல் திரு.நரசய்யா அவர்களது அண்மைய வெளியீடுகளில் ஒன்று. 2010ல் சென்னையில் திரு.நரசய்யா அவர்கள் இல்லத்தில் சந்தித்து உரையாடிவிட்டு வரும் போது எனக்கு அன்பளிப்பாக அவரால் கொடுக்கப்பட்ட நூல்களில் ஒன்று.  வாசிக்க வேண்டும் என பல நாட்கள் நினைத்து அது பல வேலைகளினால் தள்ளிப் போய்விட்டன.  வாசிக்கும் வாய்ப்பு அமைந்த போது இரண்டே நாள் மாலை நேரத்தில் இந்த 160 பக்க நூலை வாசித்து முடித்தேன். படித்து முடித்த போது இந்த நூலை நிச்சயம் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு இரண்டு காரணங்கள்.
 
வரலாற்று நூல்களை வாசிக்கும் பழக்கத்தைத்  தமிழ் வாசகர்களிடையே பரவலாகக் கொண்டு செல்லவேண்டும் என்பது முதல் காரணம்.  நூல்களை விரும்பி வாசிக்கும் போக்கு இப்போது தமிழ் மக்களிடையே வளர்ந்து வருகின்றது.  பல்வகை நூல்களும், நாவல்களும் வந்த வண்ணம் இருக்கையில் ஒரு நல்ல நூலுக்குச் விமர்சனபங்கள் வழியாக அறிமுகம் வழங்கப்படும் போது இக்குறிப்பிடத்தக்க நூல்கள் மக்களைச் சென்றடையும் நிலையை உருவாக்க முடியும்.
 
அடுத்ததாக இந்த நூலின் ஒரு தனி சிறப்பு. இது நாவலோ சிறுகதையோ அல்ல. ஆனாலும் படிக்கும் போது ஒரு கதையைப் படிக்கும் ஆர்வத்தை உணர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் இந்தப் பயண நூலின் கதாநாயகனும் கதாநாயகியும் கம்போடியா என்னும் ஒரு நாடு என்பதே. நூல் முழுமைக்கும் உணர்வுகள் மிகுதியாகத் தெரிகின்றன. நூல் ஆசிரியர் இந்த நூலிலுள்ள பகுதிகள் ஒவ்வொன்றையும் காதலித்து எழுதியிருப்பது போல அனபின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. ஆக பக்கத்திற்கு பக்கம் பயணத்தின் அனுபவம்  என்பது அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு படியாக வளர்ந்து ஒரு கதையைப் படித்து முடித்த அனுபவமாக வாசகர்களுக்கு அமைந்து விடுகின்றது.
 
இந்த நூலில் மூன்று விஷயங்கள் விளக்கப்படுகின்றன. ஒன்று - உலகவங்கியின் பிரத்தியேக அழைப்பின் பேரில் திரு.நரசய்யா கம்போடியா சென்று தனக்கிடப்பட்ட திட்டத்தை ஆரம்பித்து சரிபார்த்து, அதனை நிகழ்த்தி முடித்த நிகழ்வுகள். இதனையொட்டி உலக வங்கியின் பொறுப்பில் நிகழும் சில நிதர்சனங்களையும் பிரதிபலிப்பதான சில நிகழ்வுகள். அடுத்து விளக்கப்படுவது கம்போடியா என்னும் நாடு, அதன் பண்டைய சரித்திர வளம், தமிழர்களுக்கும், தமிழ் கலை கலாச்சார பண்புகளுக்கும் பண்டைய கம்பூச்சிய நாட்டின் சிறப்பிற்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விளக்கங்கள்.  இத்தகைய விளக்கங்கள் தக்க வரலாற்றுக் குறிப்புக்களோடு  விளக்கப்படுவதும் மன்னர்களின்  பெயர் பட்டியல் இணைக்கப்பட்டிருப்பதும் வாசிப்பைச் சுலபமாக்கி இந்திய கம்பூச்சிய நாடுகளின் வரலாற்று தொடர்புக்கான காரணங்களை அறிந்து கொள்ளச் செய்கின்றன.
 
அதோடு கடந்த சில நூற்றாண்டுகளில் எவ்வாறு இந்த நாடு அழிவினைச் சந்தித்தது, அரசியல் மாற்றங்கள், அரசாட்சி நிலை, மக்களின் துன்பமே வாழ்க்கையாகிப் போன உண்மை நிலை ஆகியன விளக்கப்படுகின்றன. மூன்றாவதாக அங்கோர் வாட் எனும் பிரமாண்டம் விவரிக்கப்படுகின்றது. இந்த நூலில் அங்கோர் வாட் பற்றிய செய்தி சிறிதளவே இருந்தாலும் இந்த ஆலயத்தின் பால் ஆசிரியர் காட்டும் வியப்பும் ஈடுபாடும்  இதனையொரு முக்கிய கருப்பொருளாகப் பார்க்கச் செய்கின்றது. ஆக இந்த மூன்று முக்கிய விஷயங்களை உள்ளடக்கி தனது பயண காலத்தில், தான் கம்போடிய நாட்டில் இருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த நூலினை அமைத்திருக்கின்றார் திரு.நரசய்யா.
 
 
உலகின் பல்வேறு நாடுகளில் மதவெறி, இனவெறியினால் மக்களை கொன்று குவித்து இன்னல் செய்த கதைகளை நாம் பார்த்திருக்கின்றோம். முதலாம் இரண்டாம் உலகப் போர்கள் மட்டுமின்றி யூத மக்களின் இனப்படுகொலை,  ஆர்மேனிய மக்களை துருக்கியர்கள் கொன்று குவித்த வரலாற்றுச் செய்திகள், செர்பிய நாட்டில் நிகழ்ந்த  பல்வேறு இனக்கலவரங்கள், இலங்கை தமிழர்களின் இன படுகொலை செய்திகள் என பல துரதிஷ்டவசமான நிகழ்வுகளைப் பற்றி பல செய்திகளை நாம் படித்தும் கேட்டும், தெரிந்திருக்கின்றோம்.
 
இவை கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை. உலகம் தோன்றிய நாளிலிருந்து வரலாறு காட்டுவதே போராட்டமும் இனக் குழுக்களின் சண்டை அதனால் ஏற்படும் வெற்றி தோல்விகள், இழப்புக்கள் போன்றவற்றைத்தான். இவை மனதிற்கு ஒரு வித அலுப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. இருப்பினும் இப்படி நடந்தவை தான் வரலாறு என இன்றைய சமுதாயத்திற்கு நிகழ்காலத்தை காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கம்போடியாவில் நிகழ்ந்த வரலாற்றை பலர் அறிந்திரா நிலை என்பது மிகப்பெரிய துரதிஷ்டம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
 
 
உலக வங்கியின் பிரத்தியேக அழைப்பின் காரணமாக நூலாசிரியர் 1995லிருந்து 1996 வரை மூன்று முறை கம்போடியா சென்று அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து தனக்கு வழங்கப்பட்ட திட்டத்தை ஆய்வு செய்து தூர்வாறும் கப்பலை சரிபார்த்து அதனை இயக்கும் வகை செய்து கொடுத்து வந்திருக்கின்றார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நமக்கு தெரிந்த ஒரு நண்பர் உதவியிருக்கின்றார் என்பதை நினைக்கும் போது மனதிற்குள் ஒரு பெறுமிதம் உண்டாகின்றது.  இதனை ஒரு வேலையாக அல்லாமல் தனது கடமையாக ஏற்று இப்பணியை நூலாசிரியர் முடித்திருக்கின்றார் என்பதனை நூலின் பல இடங்களிலிருந்து அவர் காட்டும் நிகழ்வுகளின் உதாரணங்கள் வெளிப்படுத்துகின்றன. 
 
 
கம்போடிய அரசின் அரசியல் செய்திகள் பலவற்றை புரிந்து கொள்ளவும் இந்த நூல் வழிவகுக்கின்றது. உதாரணமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த கம்பூச்சியாவின் வரலாறு, அதில் குறிப்பாக ஃபூனன் வல்லரசு, பிறகு இதனை ஆண்ட ஃபன் சேமன் என்ற அரசனது காலத்தில் இருந்த சிறந்த கடற்படை,  பல்லவ அரசர்களுக்கும் இந்த நாட்டை ஆண்ட அரசர்களுக்கும் தொடர்பிருக்கலாம்  என்ற வகையில் கூறப்படும் விளக்கங்கள்,  சீனாவுக்கும் கம்பூச்சியாவுக்கும் இடையில் இருந்த உறவு, கிபி 600ல்  ஜெயவர்மன் என்ற பெயர் கொண்ட மன்னர் தொடங்கி  அடுத்தடுத்து ஆண்டு வந்த மன்னர்கள் பற்றிய சில செய்திகள், அங்கோர் வாட் கட்டப்பட்ட செய்திள், கட்டப்பட்ட ஆண்டு போன்ற தகவல்கள்  போன்றவை   பழம் கம்பூச்சியாவை விவரிக்கின்றன.
 
1953ல் பிரஞ்சுக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்ற கம்போடியா, விடுதலைக்குப் பின்னர் அரசர் நோரோடம் சிஹோநக் அவர்களது ஆட்சி, அவரது அரசியல் நிலைப்பாடு, குழப்பங்கள் போன்றவை,  அவனால் இழைக்கப்பட்ட கொடுமைகள், வியட்நாம் போர் அதில் கம்போடியாவின் நிலை மற்றும் ஏற்பட்ட பாதிப்பு, கெம்ர் ர்ரூ குழுவினர், அவர்களின் புரட்சியினால் ஏற்பட்ட துன்பங்கள், பால் பாட் என்னும் சர்வாதிகாரி,  போன்றவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றன.
 
இந்த நூலை வாசித்து முடித்த போது மலேசியாவில் எனது பள்ளிப் பருவத்தின் போது கேள்விப்பட்ட ஒரு சில செய்திகள் நினைவில் தோன்றின. ஆசிரியர் குறிப்பிடுவது போல கம்போடியா என்னும் நாட்டிற்கும் அதன் எல்லையைத் தாண்டிய நாடுகளிலிருந்து எல்லா வகையிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டு அந்நாட்டில் நிகழும் எந்த செய்திகளும் வெளியில் தெரியாமல் சில காலம் இருந்து பின்னர் ஐக்கிய நாடுகளின் சபை தலையிட்ட செய்திகளை முன்னர் பள்ளி நாட்களில் வாசித்திருக்கின்றேன்; தொலைகாட்சி செய்திகளில் பார்த்திருக்கின்றேன். அவை இந்த நூலை வாசித்த போது ஞாபகத்திற்கு வந்தன.
 
 
நாட்டின் கதை சொல்லபப்டும் போது அதில் வாழும் மக்களின் பண்புகளும் கூட விளக்கப்படுகின்றன. கம்போடிய மக்களின் பண்பு நலன்களும் இந்த சிறிய நூலில் ஆங்காங்கே விளக்கப்படுகின்றன.
 
நான் வாசித்து முடித்த போது ஒரு வித மெல்லிய சோக உணர்வு மனதில் உருவானது உண்மை. அதிலும் இவை உண்மை  நிகழ்வுகளின் பதிவுகள் என்பது ஒரு முக்கிய விஷயம். சரித்திர நிகழ்வுகள் காலப் போக்கில் நமது ஞாபகப் படிமத்தில் கீழே கீழே சென்று ஞாபகத்திலிருந்து மறைந்தே கூட போய்விடுகின்றன. அந்த வகையில் கம்போடியா என்ற நாடு அந்த நாட்டில் இந்திய நாகரிக பண்பாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், அம்மக்களின் தற்கால நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த நூலும் ஒரு வகையில் துணை புரியும். நான் வாசித்து மகிழ்ந்த நூல். அந்த வகையில் இதனை விமர்சனம் செய்து அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.
 
ஒரு கதையில் பொதுவாக வாசகர்கள் எதிர்பார்ப்பது சுமுகமான ஒரு முடிவு இருக்க வேண்டும்.  பயண நூலில் இந்த வகையில் எதிர்பார்க்க முடியாது தான். ஆனாலும் கம்போடியாவை விட்டு ஆசிரியர் பிரிந்து வருவது ஒரு வித சோக உணர்வை, பிரிவின் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது. ஆசிரியர் மீண்டும் ஒர் முறை கம்போடியா சென்று தனது ஆத்மார்த்த வடிவமான அங்கோர்வாட் பிரமாண்டத்தை ரசிக்க வேண்டும்; அதன் வழி கிடைக்கும் தனது அனுபவங்களைப் பற்றி மேலும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே என மனம் விரும்புகின்றது.
 
நூல் விபரம்:
பெயர்: கடலோடியின் கம்போடியா நினைவுகள்
ஆசிரியர்: நரசய்யா
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை, தமிழ் நாடு.
 
 

No comments:

Post a Comment