Wednesday, March 30, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 93

கடந்த பதிவில் அக்காலகட்டத்தில் மிக முக்கிய தமிழறிஞர் ஒருவரது தொடர்பு உ.வெ.சாவிற்கு ஏற்பட்டது என்று கூறி நிறுத்தியிருந்தேன். 

அப்போது உ.வெ.சா அவர்களுக்கு அறிமுகமானவர் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். தமிழ் உலகில் தமிழ் நூல்கள் அச்சுப்பணி முயற்சிகளில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்குப் பின்னர் மிக முக்கிய நபராக கருதப்படுபவர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள். யாழ்ப்பாணத்திலிருந்து பெயர்ந்து சென்னைக்கு வந்து அங்கிருந்தவாறே பல ஏட்டுச் சுவடி நூல்களைத் தேடி எடுத்து பாட பேதங்களை ஆராய்ந்து அவர் தமிழ் நூற்கள் அச்சுப் பதிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 

அடிப்படையில் சட்டக் கல்வி முடித்து நீதிபதியாகத் தொழில்புரிந்தவர் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். தமிழ் நூற்கள் அச்சுப்பதிப்புப் பணியை அவர் 1854 ஆம் ஆண்டில் ஈடுபடத் தொடங்கினார்.  யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்  அவர்கள் 1849-ஆம் ஆண்டில் அச்சுப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு வரும் போதே இவரும் அவருடன் இணைந்து தமிழ் நூற்கள் பதிப்பிக்கும் துறையில் செயல்பட்டார். ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளையின் முயற்சிகளின் பயனாக 
  •  வீரசோழியம்  
  • தொல்காப்பியச் சொல்லதிகாரம்,
  • தொல்காப்பியப் பொருளதிகாரம்,
  • இறையனார் அகப்பொருள்  
  • இலக்கண விளக்கம்,
  • கலித்தொகை
ஆகிய நூல்கள், நேரடியாக  மூலங்களைப் பல ஏட்டுச்சுவடிகளைக் கொண்டு பாடபேதங்களைப் பரிசோதித்து முதன்முதல் அச்சிற் பதிப்பித்து வெளியிடப்பட்டது என்ற சிறப்புக்கு உரியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். அதுமட்டுமன்றி
 
  • நீதிநெறிவிளக்கம் 
  • தொல்காப்பியச் சொல்லதிகாரம் – சேனாவரையர் உரையுடன் 
  • தணிகைப்புராணம் 
  • இறையனார் அகப்பொருள்,
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் – நச்சினார்க்கினியர், பேராசியர் உரையுடன் 
  • கலித்தொகை 
  • இலக்கண விளக்கம் 
  • சூளாமணி 
  • தொல்காப்பியம் – சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன் 
ஆகிய சுவடி நூற்களையும் இவர் அச்சு வடிவில் பதிப்பித்துள்ளார்.

தமிழ் நூற்களைச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிவிற்கு மாற்றிக் கொண்டு வந்து பாமரரும் நூற்களை வாசிக்க அடிப்படை வாய்ப்புக்கள் உருவாகக் காரணமாக பலர் இருந்திருக்கின்றனர். இன்றைக்குப் பரவலாக நாம் தமிழ்த்தாத்தா உ.வெ.சா அவர்களை மட்டுமே இது தொடர்பாக நினைவு கூர்கின்றோமே தவிர இப்பணியில் உழைத்த ஏனைய பல தமிழறிஞர்களைப் பற்றி அதிலும் குறிப்பாக உ.வெ.சா. அவர்களுக்கே கூட முன்னுதாரணமாகவும் முன்னோடிகளாகவும் இருந்தோர்களைப் பற்றியெல்லாம் அறிந்திராத தமிழ்ச்சமூகமாக நாம் இருப்பது தான் இன்றைய நிலை.

தமிழ் நூற்கள் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்வரை விரிவாக ஓலச்சுவடிகளில் புழக்கத்தில் இருந்தன என்பதை அறியாத இளம் தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுத்து கற்பிக்க வேண்டிய கல்லூரி ஆசிரியர்களுக்கும் கூட இவ்வகை விசயங்கள் அறியாத நிலை இருப்பது ஒரு அவலம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் அச்சுப் பதிப்புத் துறையில் பணியாற்றி மூலச்சுவடி நூலிலிருந்து அச்சுப்பதிப்பாக்கி கொணர்ந்தோரின் பெயர்களை அவர்கள் வெளியிட்ட நூல்களின் பெயர்களோடு இணைத்து பட்டியலாக வெளியிட்டிருக்கின்றேன். இப்பகுதிக்குச் சென்றால் அப்பகுதியைக் காணலாம்.

சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள், அச்சமயம் சென்னையிலிருந்து  தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய நூல்களை அச்சுப்பதிப்பாக்கி கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இறையனாரகப்பொருளுரையையும் திருத்தணிகைப்புராணத்தையும் அச்சுப்பதிப்பாக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.  அது சமயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் நூலகத்தில் இந்த நூல்களின் ஏட்டுப்பிரதிகள் இருக்கின்றன என்ற விசயம் அவருக்குக் கிடைத்தது. தனது அச்சுப்பணிக்கு உதவ அந்த ஏட்டுச்சுவடிகளைத் தனக்கு அனுப்பி வைக்க கடிதம் மூலமாக  விண்ணப்பம் வைத்தார் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள்.  சுப்பிரமணிய தேசிகர் இந்த விசயத்தை உ.வெ.சா வுக்குத் தெரிவித்து அந்த சுவடி நூற்களைத்தேடி எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இந்த வகையில் உ.வெ.சாவுக்கும் சி.வை.தாமோதரம் பிள்ளைக்கும் தொடர்பு உருவானது.

உ.வெ.சாவின் கடிதம் கிடைத்தவுடன் பதிl கடிதமாக ஒன்றினை சி.வை.தாமோதரம் பிள்ளை அனுப்பியிருக்கின்றார். 

இறையனாரகப்பொருளும் தணிகைப்புராணமும் அச்சுப்பதிப்புக்களாக வெளிவந்தவுடன் திருவாவடுதுறை மடத்துக்கும் உ.வெ.சாவிற்கு நூற் பிரதிகளை சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் அனுப்பியிருக்கின்றார். ஆயினும் கூடுதலாக அளித்த புராணக் குறிப்புக்கள் அச்சுப்பதிப்பில் வராதது கண்டு உ.வெ.சா மட்டுமன்றி ஆதீனகர்த்தருக்கும் திருப்தி ஏற்படவிலை.

அதற்கு சில தினங்களுக்குப் பிறகு மேலும் ஒரு செய்தி உ.வெ.சாவிற்கு வந்து சேர்ந்தது. அதாவது, சென்னையில் வாசம் செய்து கொண்டிருந்த சி.வை.தாமோதரம் பிள்ளை உ.வெ.சா குடியிருக்கும் கும்பகோணத்திற்கு மாற்றம் செய்து கொண்டு வரப்போகின்றார் என்ற செய்திதான் அது. 

ஏற்கனவே முக்கியமான நூற்களை அச்சுப்பதிப்பில் வெளிக்கொணர்ந்து தமிழறிஞர்கள் சமூகத்தில் புகழோடு இருப்பவர் என்பதோடு தமிழ் நூற்களிலும், அச்சுப்பதிப்புப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதால் உ,வெ.சாவிற்கு அவரது வருகை பற்றிய செய்தி தேன் போல இனித்தது.

தொடரும்..
சுபா

Wednesday, March 16, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 92

சிந்தாமணி ஆராய்ச்சி என்பது தொடர்ந்து கொண்டிருந்தது.  சென்னைக்கு மாற்றலாகிச் சென்ற இராமசாமி முதலியார் அடிக்கடி உ.வெ.சாவிற்குக் கடிதம் போட்டு சிந்தாமணிப் பதிப்பு காரியத்தை அவர் நிரைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தமை அவருக்கு இப்பணியை மேலும் ஈடுபாட்டுடன் தொடர உந்துசக்தியாக இருந்தது. அந்தச் சமயத்தில் கும்பகோணம் கல்லூரியில் தலைவராக இருந்த திரு.கோபால்ராவ் அவர்களுக்கு சென்னையில் பிரசிடன்ஸி கல்லூரியில் வேலை மாற்றம் கிடைக்க,  அவருக்கு மாற்றாக ஸ்டூவர்ட்துரை என்ற ஆங்கிலேயர் அப்பொருப்பை ஏற்றுக் கொண்டார் என்பதையும் காண்கின்றோம்.

சிந்தாமணி வாசிப்பில் உ.வெ.சாவிற்குத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மிகப்பல உதவிகளைச் செய்திருக்கின்றார்.  தேசிகர் திருநெல்வேலியிலிருந்து ஏட்டுப் பிரதிகள் சிலவற்றைத் தருவித்துக் கொடுத்து பாட பேதங்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கின்றார். சிந்தாமணி பாட பேதங்களை ஆராய தன்னிடம் வீட்டில் வந்து படிக்கும் மாணவர்கள்,  கல்லூரியில் உ.வெ.சாவிடம் படிக்கும் மாணவர்கள் சிலர் கலந்து கொள்வது என  ஆர்வத்துடன் இந்தப் பணி தொடர்ந்திருக்கின்றது. ஒரே சமயத்தில் நான்கைந்து பேராக ஒரு பிரதி சிந்தாமணி சுவடிக்கட்டை வைத்துக் கொண்டு மற்றொன்றோடு ஆராய்ந்திருக்கின்றனர். உ.வெ.சாவோடு இந்தப் பணியில் இந்த மாணவர்கள் சிலரும் இரவு பகலாக ஈடுபட்டனர் என்பதை  அவரது சரித்திரப் பதிவில்  அத்தியாயம் 90ல் காண்கின்றோம்.

இராமசாமிமுதலியார் இவ்வேளையில் தன்னிடமிருந்த பவர்துரை (ஒரு ஆங்கிலேயர்) என்பவர் பதிப்பித்த சிந்தாமணி அச்சுப்பிரதி நூல் ஒன்றை அஞ்சலில் அனுப்பி வைத்தார்.  அதன் பெயர் சிந்தாமணி நாமகளிலம்பகம். அதே போல தியாகராச செட்டியாரும் தன்னிடமிருந்த ஒரு சிந்தாமணிப்பிரதியை திரு.பட்டாபிராம பிள்ளை என்பவர் வழியாக உ.வெ.சாவிற்குக் கொடுத்தனுப்பினார். இந்தப் பிரதியானது மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால்  முதலில் எழுதப்பெற்ற சுவடிப்பிரதி.

இப்படி வேறு வேறு சிலரால் படியெடுக்கப்பட்ட, எழுதப்பட்ட, அச்சில் வெளியிடப்பட்ட சிந்தாமணியை தாமும் மாணவர்களுமாகப் பாட பேத ஆராய்ச்சியிலும் பொருள் காணும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தப்பணி நடந்து கோண்டிருக்கும் போதே இவருக்கு இன்னொரு பணியும் அமைந்தது. 

தியாகராசச்செட்டியார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் முக்கியமாணவர்களில் முக்கியமான ஒருவர். அவருக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் அச்சில் வெளியிடப்படாத நூல்களை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் இருந்து வந்தது. அந்த வகையில் திருக்குடந்தைப்புராணத்தை அச்சில் கொண்டுவரும் பணியைத் தொடக்கி அதற்கு உ.வெ.சாவின் உதவியை நாடினார்.  சென்னையில் இருந்த  சூளை சோமசுந்தர நாயகர் பதிப்பகத்தில் இந்த நூலை அச்சிடுவதாக ஏற்பாடாகி இருந்தது. அச்சகத்தார் சுவடி நூலை  அச்சிடும் பணியைத் தொடங்கிய பின்னர் எழுத்துப்பிழைகளைச் சோதிக்க தியாகராசசெட்டியாருக்குப்  புராண நூலின் அச்சு வடிவப் பிரதியை அனுப்பி வைத்தனர். ஆனால் அச்சமயம்  கண்பார்வை சற்று பாதிக்கப்பட்டிருந்தமையால் உ.வெ.சாவைப் இப்பணியில் தனக்கு உதவுமாறு தியாகராச செட்டியார் கேட்டுக் கொண்டார்.  அச்சுப்படியை சரிபார்த்து திருத்தி சென்னைக்கு அனுப்பும் பணி இந்த வகையில் உ.வெ.சாவிற்கு வந்து சேர்ந்தது. 

திருக்குடந்தைப் புராண அச்சுப்பணியில் ஈடுபட்டிருந்த போது அச்சுத்தாள்களைத் திருத்தும்  முறைய தாம் அறிந்து கொண்டதாக உ.வெ.சா குறிப்பிடுகின்றார். 1883ம் ஆண்டு ஜூன் மாதம் திருக்குடந்தைப் புராணம் ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவில் புது வடிவம் பெற்றது. அச்சகத்தாரான சோமசுந்தர நாயகரே இந்தப்பதிப்பிற்குச் சிறப்புப் பாயிரமும் அளித்திருக்கின்றார். உ.வெ.சாவும், தியாகராச செட்டியாரும் சேர்ந்து பதிப்பித்த நூல் என்ற செய்தியுடன் இந்த நூல் வெளிவந்தது. 

இது உ.வெ.சா நேரடியாக ஈடுபட்ட இரண்டாவது அச்சுப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமயத்தில் உ.வெ.சாவிற்கு மிக முக்கிய அன்பர் ஒருவருடைய தொடர்பு ஏற்படும் சுழல் நிகழ்ந்தது.

Tuesday, March 8, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 91

சீவகசிந்தாமணி உ.வெ.சாவின் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. 

கல்லூரியில் தனது பாட நேரம் போக ஏனைய நேரத்தைச் சிந்தாமணியை வாசிப்பதிலும் ஜைனராகிய சந்திரநாத செட்டியார் இல்லம் சென்று சிந்தாமணியை அவர் விளக்குவதைக் கேட்பதிலும் செலவிடுவதில் அவரது நாட்டம் இருந்தது. அப்படி சந்திரநாத செடியார் இல்லம் செல்லும் வேளைகளில் அங்கு வந்திருக்கும் சமண நெறியை ஒழுகுவோரைக் காண நேரிடும் வேளைகளில் அவர்களிடம் உரையாடி கர்ணபரம்பரைக் கதைகளைக் கேட்பதிலும் மிகுந்த இன்பம் கண்டார் உ.வெ.சா. அதுமட்டுமன்றி இராமசாமி முதலியாரோடு சேர்ந்து வாசித்து பாடம் சொல்வதையும் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சிந்தாமணி ஆராய்ச்சியின் போது நச்சினார்க்கினியார் உரையைப் பயன்படுத்துகையில்  இரண்டு வகை ஏட்டுப் பிரதிகள் ஜைனர்களின் பயன்பாட்டில் இருப்பதையும் அவர் கண்டார்.  இரண்டு வேறுபட்ட சுவடிகளை வைத்து அவர்கள் கற்கும் காரணத்தையும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அதாவது,  நச்சினார்க்கினியார் சிந்தாமணிக்கு முதலில் ஒரு உரையை எழுதியிருக்கின்றார். அதனை ஜைன சமயத்தைப் பேணுபவர்களிடம் வாசித்துக் காட்டி கருத்து கேட்டிருக்கின்றார். அதனை வாசித்த ஜைனர்கள் வழக்கத்தில் இருக்கும் சம்பிரதாயத்திலிருந்து விளக்கம் மாறுபட்டிருக்கும் இடங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இதனை நிவர்த்திக்க நச்சினார்க்கினியார் ஜைனராக சில காலம்  பயிற்சி மேற்கொள்ள சிற்றாம்பூர் என்னும் ஒரு ஊரில் இருக்கும் ஜைன மடம் வந்து அங்கேயே சில காலம் தங்கியிருந்து  ஜைன அடிப்படை நூல்களைக் கற்றும், ஜைன ஒழுக்கங்களை தாமே பயிற்சி செய்து கற்றும்  விடயங்களை அறிந்து கொண்டு மீண்டும் ஒருமுறை  புதிய உரையை எழுதினார் என்பதை அறிய முடிகின்றது.  இந்த வேளையில் சிந்தாமணியை எழுதிய ஆசிரியர் திருத்தக்க தேவர் என்பதையும் உ.வெ.சா அறிந்து கொண்டார்.

சிந்தாமணியைக் கற்கத் தொடங்கி மேலும் பல ஜைன நூற்களின் அறிமுகம் உ.வெ.சாவிற்கு அடுத்தடுத்து ஆரம்பமாகியது. அருகாமையில் இருக்கும் ஏனைய சில ஜைன அன்பர்களின் வீடுகளுக்குச் செல்வது, அங்கு சமணத்தைப் பற்றி உரையாடுவது என்றும் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் உ.வெ.சா.  அந்த வகையில் குணபால செட்டியார் என்பவர் அறிமுகம் கிட்டியது. அவரது துணைவியார் தரணி செட்டியார் என்னும் சிறந்த சமண அறிஞரின் சகோதரி. அவரது அறிமுகமும் இவருக்கு அமைந்தது. அதோடு தரணி செட்டியாரின் மருமகன் சமுத்திர விஜயம் செட்டியாரின் அறிமுகமும் உண்டாகியது. சமுத்திர விஜயம் செட்டியாரின் உதவியால் சில ஜைன நூல்களை அவரிடமிருந்து இரவலாகப் பெற்றுக் கொண்டு வந்து வாசிக்கத்தொடங்கினார் உ.வெ.சா.

இவ்வாறான புதுமையான அனுபவங்கள் தமக்குக் கிடைத்த அனுபவத்தை உ.வெ.சா தன் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"இவ்வாறு ஜைனர்களுடனும் ஜைன நூல்களுடனும் இடைவிடாது பழகியபோது சிந்தாமணியின் அருமை வர வர எனக்கு நன்கு
புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காவியங்களுக் கெல்லாம் அதுவே உரையாணி என்பதை அறிந்து கொண்டேன். அதனுடைய போக்கிலே உள்ள கம்பீரமும் சொல்லாட்சிச் சிறப்பும் என் மனத்தைக் கவர்ந்தன."

நச்சினார்க்கினியாரின் சிந்தாமணி உரையை வாசித்து தொடர்ந்து இன்புற்றிருந்த வேளைகளில் அடிக்கடி பொருள் புரியாது சுனக்கம் ஏற்படும் வேளைகளில் நச்சினார்க்கினியாரோடு மானசீகமாக சண்டையிடவும் அவர் தயங்கவில்லை. இப்படி தன் ஆதங்கத்தை எழுதுகிறார்.

"சிந்தாமணிப் பாட்டாக இருந்தால் சந்திரநாத செட்டியார் இருக்கிறார். வேறு நூலாக இருந்தால் என்ன செய்வது! அவர் மேற் கோளாகக் காட்டும் உதாரணங்களோ நான் படித்த நூல்களிலே இல்லாதன. அவர் உதாரணங்கள் காட்டு அந்த நூல்களின் தொகுதியே ஒரு தனி உலகமாக இருக்குமோ என்ற மலைப்பு எனக்குத் தோற்றியது. “நூற்பெயரையாவது இந்த மனிதர் சொல்லித் தொலைக்கக் கூடாதா?” என்று அடிக்கடி வருத்தம் உண்டாகும். ஆனாலும் அந்த மகோபகாரியின் அரிய உரைத் திறத்தின் பெருமையை நான் மறக்கவில்லை. சுருக்கமாக விஷயத்தை விளக்கி விட்டு எது நுணுக்கமான விஷயமோ அதற்கு அழகாகக் குறிப்பு எழுதுகிறார். அவர் எழுதும் பதசாரங்கள் மிக்க சுவையுடையன. அவர் அறிந்த நூல்களின் பரப்பு ஒரு பெருங்கடலென்றே சொல்ல வேண்டும்."

இப்படி ஆழமாகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டும் உரையாசிரியரோடு சண்டைப்போட்டுக் கொண்டும் என்றும் உ.வெ.சாவின் சிந்தாமணி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வேளையில்  இராமசாமி முதலியார் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்குச் செல்ல திட்டமிட்டார்.  அரசு அலுவல்களிலிருந்து தொல்லை வேண்டாம், கட்டுப்பாடற்ற வாழ்க்கையைத் தொடரவேண்டும் ஆக வக்கீல் தொழில் செய்து வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு தமிழ் ஆராய்ச்சி தேடலில் மூழ்கி விடவேண்டும் என்பது அவரது கணவாக இருந்தது. அந்த சிந்தனையில் குடும்பத்தோடு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு விட்டார் இராமசாமி முதலியார்.

புறப்பட்டுச் சென்றார். ஆனால் சும்மா செல்லவில்லை.

உ.வெ.சாவிடம் விடைபெறும் போது  "இப்போது சிந்தாமணியின் பெருமை உ.வெ.சாவிற்கு நன்கு புரிந்திருக்கின்றது என்றும், மேலும் பல தொடர்பு நூல்களையும் வாசித்து ஆராய்ச்சி செய்து சிந்தாமணியை உ.வெ.சா அச்சுப்பதிப்பாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து அப்படி ஒன்றைச் செய்தாலே போதும்.  தமக்கு  வேறு எந்த  உபகாரமும் செய்யத்தேவையில்லை",  எனக் கேட்டுக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.

ஊர் ஊராகத் தேடி தேடி தமிழ்ச்சுவடிகளை அச்சுப்பதிப்பாக்க உ.வெ.சா தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இந்த நிகழ்வு உந்துதலாக அமைந்தது.

உ.வெ.சாவின் கவனத்தையும் ஈடுபாட்டையும் சிந்தாமணி முழுமையாக ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. அப்போதைய தன் நிலையை உ.வெ.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். 

"காலேஜிலும் வீட்டிலும் பாடம் சொல்லும் நேரம் போகச் சிந்தாமணியைப் படிப்பதிலே ஆழ்ந்திருந்தேன். அனபாய சோழ மகாராஜா
சீவகசிந்தாமணியைப் படித்து அதன் நயத்திலே ஈடுபட்டிருந்தாரென்றும், அப்போது சேக்கிழார் ஜைனர்கள் கட்டிய கதை அந்நூல் என்று சொன்னாரென்றும், நான் வாசித்திருந்தேன். அந்தச் சோழ சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பிணிக்கும் காவியரஸம் அந்த அரிய நூலில் இருப்பது உண்மை யென்றே நான் உணர்ந்தேன். அது ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ யானால் நமக்கென்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே; அவை நிரம்பக் கிடைக்கும் காவியமாக இருக்கும்போது அதைப் படித்து இன்புறுவதில் என்ன தடை?"

சமய நிபந்தனைகளுக்குள் தன்னை முடக்கிக் கொள்ளாத ஒரு ஆராய்ச்சி மாணவராகவே உ.வெ.சா திகழ்ந்திருக்கின்றார். தான் சார்ந்திருக்கும் சமயம், தனது பின்னனி இதற்குள்ளேயே மனதையும் கவனத்தையும் வைத்து ஆராய்ச்சி செய்வது என்பது முழுமையான ஆய்வாக ஆகாது. அது சாமானியர் செய்யும் வேலை. அறிவும் தெளிவும், ஞானமும் எங்கெல்லாம் தெளிவாக்கப்பட்டிருக்கின்றதோ அந்த நூல்கலையெல்லாம் சமய பேதம் கடந்து படித்து இன்புறும் மனப்பக்குவமும் தைரியமும் எத்தனை பேருக்கு வரும்? அப்படி உள்ளவர்களில் ஒருவராக உ.வெ.சா திகழ்ந்திருக்கின்றார். இந்த குணமே அவரை தமிழ் மாணவர்களுக்கு இன்றைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக நம் முன்னே நிறுத்தியுள்ளது!

தொடரும்.

சுபா

Wednesday, March 2, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 90

சீவக சிந்தாமணியைத் தாம் பெற்ற கதையை இராமசாமி முதலியார் உ.வெ.சாவிற்கு விவரிக்க ஆரம்பித்தார்.  

தமிழ் நூல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் பல நூல்களை வாசித்திருக்கின்றார். அந்தாதி, புராணம், பிள்ளைத்தமிழ் என்ற நூல்களை விடவும் வேறு வகை நூல்கள் இருக்குமா என்ற ஆர்வம் அவருக்கு. சிந்தாமணி பற்றி அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தான் அறிந்திருக்கின்றார்.  கல்லூரியில்  சிந்தாமணியின் முதல் பகுதி மாத்திரம் பாடமாக இருந்திருக்கின்றது. அந்த முதற்பகுதியை ஒரு ஆங்கிலேயர் நூலாக அச்சிட்டு பாடமாக வைத்திருந்திருக்கின்றார். அதில் தமிழ் மொழியை விட ஆங்கிலமே அதிகமாக இருந்திருக்கின்றது. ஆக, தமிழில் சிந்தாமணியை முழுதும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இராமசாமி முதலியாருக்குத் தனது கல்லூரி காலத்தில் தோன்றியிருக்கின்றது. 

இங்கு இன்னொரு விடயமும் நம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றது. சிந்தாமணியின் முதல் பகுதி ஒரு ஆங்கிலேயரால் அச்சிடப்பட்டு ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பை காண்கின்றோம். ஆயினும் யார் அந்த ஆங்கிலேயர் என்ற தகவல் கிடைக்கவில்லை. தமிழில் ஆர்வம் கொண்ட ஐரோப்பிய மதபோதகர்கள் பல தமிழ்  நூல்களைக் கற்று அவற்றை மொழி மாற்றம் செய்தும் தங்கள் மொழிகளில் அவை பற்றியும் எழுதிய காலம் அது. ஆக ஐரோப்பிய கத்தோலிக்க அல்லது லூத்தரேனிய மதபோதகர்கள் யாராகினும் இப்பனியைச் செய்திருப்பரோ என்ற எண்ணம் இப்பகுதியை வாசிக்கும் போது எழாமல் இல்லை.

ஆக, இந்த பின்புலத்தோடு இராமசாமி முதலியாரின் நூல் தேடல் தொடங்கியிருக்கின்றது.  பல இடங்களுக்குத் தான் பணி நிமித்தம் செல்லும் போதெல்லாம் சிந்தாமணி முழு நூலை தேடியிருக்கின்றார்.  ஒரு முறை ஒரு வழக்கை விசாரிக்கையில் ஒரு கவிராயர் குடும்பத்தினரின் வழக்கு வந்திருக்கின்றது. கவிராயர் என்றால் வீட்டில் நூல்கள் இருக்குமே என எண்ணி அவரை அது பற்றி கேட்க, அவரும் இவரது பதவியை மனதில் கொண்டு,  தனது வீட்டில் இருந்த சிந்தாமணியின் ஒரு படியை தர சம்மதித்திருக்கின்றார். அந்த நூலுக்கு 35 ரூபாய் அப்போது அவர் அதனை பெற்றிருக்கின்றார். அன்றைய நிலையில் யோசித்துப் பார்ப்போம். உ.வெ.சாவின் மாத சம்பளமே 50 ரூபாய்தான். ஆனால் இராமசாமி முதலியாரோ சிந்தாமணியின் ஒரு படியை 35 ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றார் என்ரால் அந்த நூலின் பால் அவருக்கு இருந்த ஆர்வம் நமக்கு நன்கு புலப்படுகின்றது.

இப்படி இந்த நூலைத் தான் பெற்ற கதையைச் சொல்லி,  இந்த நூலை வாசித்து தனக்கு பாடம் நடத்தும் படி உ.வெ.சா. விடம் கூறுகின்றார்  இராமசாமி முதலியார். அப்படிச் சொல்லும் போது சிந்தாமணியின் காவியத்தன்மையை புகழ்ந்து இப்படிக் கூறுகின்றார்.

“புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம். கம்ப ராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.”

அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அந்தப்படியை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகின்றார் உ.வெ.சா.  அந்த நூல் சிந்தாமணியின் நச்சினார்க்கினியர் உரையும் சேர்ந்த ஒரு நூல் . வாசித்த போது சீவகன் என்ற ஒருவனைப்பற்றிய கதை எனப்புரிந்து கொள்கின்றார். ஆனால் அதற்குமேல் நூல் அவருக்குப் புரியவில்லை. இந்த நிலையைக் கண்டு அவர் திகைத்துப் போகின்றார்.  அப்போதைய தன் மன நிலையை இப்படிக்  குறிப்பிடுகின்றார்.

"தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்துவிட்டதாக ஒரு நினைப்பு. அதற்குமுன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற் பரப்புக்குப் புறம்பேயிருந்த
சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது."

சிந்தாமணியின் முதற்பாடலைப் பார்க்கின்றார். இது தான் இதுவரை தான் வாசித்த எல்லா நூல்களிலிமிருந்து மாறுபட்டதாக இருக்கின்றது. வினாயக வணக்கமோ, சடகோபர் காப்போ இல்லை.  முதலில் பொதுவான கடவுள் வாழ்த்தோ என நினைத்து வாசிக்கும் அவருக்கு அது மாறுபட்ட ஒரு பொருளைச் சொல்கின்றது என்ற சிந்தனை உதிக்க ஆரம்பிக்கின்றது. அந்த முதற்பாடல்,

“மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத்
தாவாத வின்பந்தலையாயது தன்னி னெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே”

செய்யுளின் உட்பொருள் புரியாத நிலையில் உரையை வாசிக்கத்தொடங்குகின்றார். ஆயினும் தெளிவு உண்டாகவில்லை. 

அவ்வார இறுதியில் திருவாவடுதுறை சென்று ஆதீன கர்த்தர் தேசிகரைச் சந்தித்து நடந்த விடயங்களைத் தெரிவிக்கின்றார்.  தேசிகரும் மகிழ்ந்து  பிள்ளையவர்கள் கைப்பட எழுதிவைத்த சிந்தாமணி படி ஒன்று நூலகத்தில் இருக்கின்றது என்று சொல்லி அதனைத் தரிவித்துக் கொடுக்கின்றார்.

இந்த நூலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பி தன்னிடம் இருக்கும் 2 நூல்களையும் வாசித்துப் பார்க்கின்றார் உ.வெ.சா.

மறு வாரம் இராமசாமி முதலியார் இல்லம் சென்று பாடம் தொடங்குகின்றார். தெளிவில்லாத நிலையே ஏற்படுகின்றது. இராமசாமி  முதலியார்  தான் அறிந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.  இருவரும் தினறித்தினறியே இந்த முயற்சியைத் தொடர்கின்றனர். 

இந்த நிலையில் சிந்தாமணி சமண நூல் என்பதால் சமணர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட அருகாமையில் சமண சமயத்தவர்கள் யாரேனும் இருக்கின்றார்களா எனத் தேட ஆரம்பிக்க்ன்றார் உ.வெ.சா. 

பலரை விசாரிக்க நல்ல பலன் கிட்டுகின்றது. அருகாமையிலேயே சமணர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு உ.வெ.சாவை அழைத்துச் செல்கின்றார் ராமலிங்க பண்டாரம் என்னும் ஒருவர்.  

அவர் பெயர் சந்திரநாத செட்டியார். 

அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது வாசலில் மாக்கோலம் இடப்பட்டு மாவிலைத்தோரணங்களெல்லாம் வீட்டில் கட்டப்பட்டு விழாக்கோலம் கொண்டது போல காட்சியளிக்கின்றது. இன்று ஏதும் விஷேஷமா என்று வினவுகின்றார் உ.வெ.சா. அதற்கு சந்திரநாத செட்டியார், இன்று சிந்தாமணி பூர்த்தியாயிற்று. அதனால் தான் இன்று சிறப்பாகக் கொண்டாடுவதாகச் சொல்ல உ.வெசாவிற்கு ஆச்சரியம் மேலிடுகின்றது. அதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"எனக்கு மிக்க ஆச்சரியமுண்டாயிற்று. ‘நாம் சிந்தாமணியைப் பற்றித்தான் கேட்க வந்திருக்கிறோம். சிந்தாமணி பூர்த்தியாயிற்றென்று இவர் சொல்லுகிறார்; சிந்தாமணியைப் பாராயணம் செய்வது இவர்கள் சம்பிரதாயம் போலிருக்கிறது’ என்றெண்ணி, “சிந்தாமணியைப் படித்து வந்தீர்களா?” என்று கேட்டேன்.

“ஆமாம். நான் சிரவணம் செய்து வந்தேன். இவர்கள் பாடம் செய்து வந்தார்கள்” என்று சொல்லி எதிரே அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, “திண்டிவனம் தாலூகாவிலுள்ள வீடூர் என்பது இவர்கள் கிராமம். தமிழிலும், வட மொழியிலும், பிராகிருதத்திலும் உள்ள ஜைன கிரந்தங்களிலும் உரைகளிலும் மிகுதியான பழக்கமுள்ளவர்கள். இவர்களைப் போன்றவர்கள் யாருமில்லை. இவர்கள் திரு நாமம் அப்பாசாமி நயினா ரென்பது” என்று தெரிவித்தார். எனக்காகவே அவர் அங்கே வந்திருப்பதாகத் தோற்றியது. ‘நாம் எந்த விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த விஷயத்தில் தேர்ச்சியுள்ளவர்களை எதிர்பாராமலே பார்க்கிறோம். அதே
விஷய சம்பந்தமான உத்ஸவம் வேறு நடக்கிறது. இது தெய்வச் செயலே’ என்று எண்ணிப் பூரிப்பை அடைந்தேன்.

“எவ்வளவு காலமாக இவர்கள் இங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“ஆறு மாதமாக இந்தப் பாடம் நடந்து வருகிறது”

‘இந்த ஆறு மாதங்களை நாம் வீண்போக்கி விட்டோமே!’ என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று. "

ஒரு நூலை வாசித்தோம் முடித்தோம் என்றில்லாமல் அதனை மேலும் மேலும் ஆராய்ந்து பொருளுணர்ந்து கொள்ள வேண்டும் என இராமசாமி முதலியாரும், உவெ.சாவும் மேற்கொண்ட முயற்சிகள் நமக்கு நல்ல உதாரணங்களாக அமைகின்றன. இப்படி ஆழமாக வாசிக்கும் ஆர்வம் நமக்கு இல்லையென்றால் அந்த ஆர்வத்தை  உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது தமிழ் மாணவர்களாகிய நாம் எல்லோருடைய கடமையுமே ஆகும்!