Sunday, June 28, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-8

இந்த வாரம் 25 ஆம் தேதி ஜூன் மாதம்  ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் யென்ஸ் ஸ்பான் அவர்கள்    உலக சுகாதார நிறுவனத்தின்  (WHO) தலைமையகத்திற்குச் சென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெர்மனியின் பங்களிப்பு இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் இவரது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. (https://www.who.int/dg/speeches/detail/who-director-general-s-opening-remarks-at-the-media-briefing-following-trilateral-meeting-between-who-france-and-germany---25-june-2020) கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக ஜெர்மனியில் கொரோனா கொள்ளை நோய் பாதிப்பு என்பது படிப்படியாகக் குறைந்து வருவதை அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான விமான சேவையும் ஜெர்மனியில் தொடங்கப்பட இருக்கின்றது. எனது அண்டை வீட்டுக்காரரான  ரூமேனிய நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்,  தனது தாயாரைப் பார்ப்பதற்காகக் குடும்பத்துடன் பயணம் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்துவிட்டதை இரு தினங்களுக்கு முன்னர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இபோலா வைரஸ் கிருமி ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டில் பரவத் தொடங்கியுள்ளது என்ற செய்தி உலக சுகாதார நிறுவனத்தினால் இந்த வாரம் வெளியிடப்பட்டது (https://www.who.int/news-room/detail/25-06-2020-10th-ebola-outbreak-in-the-democratic-republic-of-the-congo-declared-over-vigilance-against-flare-ups-and-support-for-survivors-must-continue) . இதனால் covid-19 எதிர்ப்பு நடவடிக்கைகளோடு கோங்கோவில் இபோலா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இணைத்தே செய்ய வேண்டியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத்  தேவை  இப்போது எழுந்துள்ளது.

இந்தக் கொரோனா கொள்ளைநோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் போலந்து அதிபர் டூடா அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்தித்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரைக் காரணம்காட்டி ஜெர்மனியில் பல்வேறு இடங்களில் அமெரிக்கா தனது ராணுவத்தைப் பல ஆண்டுகளாக நிறுத்திவைத்திருக்கின்றது. அதில் கடந்த சில ஆண்டுகளாகச் சில ராணுவ முகாம்கள் மூடப்பட்டு ராணுவ அதிகாரிகள் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹைடல்பார்க் நகரிலிருந்த அமெரிக்க இராணுவ முகாம் மூடப்பட்டதை இத்தகைய உதாரணமாகக் கொள்ளலாம். 

அந்த வகையில் இப்பொழுது 10,000 ராணுவ அதிகாரிகளை ஜெர்மனியில் இருந்து வெளியேற்றி போலந்து நாட்டில் பாதுகாப்பிற்காக வைப்பதற்கு ஒப்பந்தம் செய்தல் பற்றி அமெரிக்காவும் போலந்தும் பேசியிருக்கின்றன.

ஜெர்மனியின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்க்குக் கோபம் பல காரணங்களினால் இருக்கிறது. ஏதோ தங்கள் ராணுவம் இருப்பதால்தான் ஜெர்மனி பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒரு போலியான கனவிலும்  ட்ரம்ப் இருக்கின்றார். அல்லது அப்படி ஒரு பார்வையை உலக நாடுகளுக்குக் கொடுக்க முயற்சிக்கிறார்.

இப்படி அமெரிக்கா சிந்திப்பதற்கு ஒரு வரலார்றுப் பின்னனி இருக்கின்றது தான். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  நாட்டோ (NATO) நட்பு நாடுகள் மேற்கு ஜெர்மனியில் அதன் பலத்தையும் ஆளுமையையும் தக்க வைக்கும் நோக்கத்துடன் செயல்படத்தொடங்கின. அதன் எதிரொலியாக அமெரிக்க ராணுவத் தளங்களை ஜெர்மனியின் பல பகுதிகளில் அமெரிக்கா உருவாக்கி  ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இந்த முகாம்களில் வைத்திருந்தது.  1990ம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி இரண்டும் ஒன்றிணைந்த  பின்னர் பல்வேறு செயல்பாடுகளின் காரணத்தினால் மேற்கு ஜெர்மனியில் இருந்த 224 அமெரிக்க ராணுவ முகாம்கள் மூடப்பட்டன.  இன்றைய நிலவரப்படி 41 அமெரிக்க இராணுவ முகாம்களே ஜெர்மனியில் செயல்பாட்டில் இருக்கின்றன.  கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜெர்மனி, அமெரிக்க ராணுவத்தை மீட்டு எடுத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா கொள்ளை நோய் பரவலான காலகட்டத்தில் மிக மோசமான வகையில் தனது செயல்பாடுகளைக் காட்டி தனது பெயரைக் கெடுத்துக்கொண்ட உலக நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் அதிபர் ட்ரம்ப் என்பதும் அதற்கு நேர்மாறாக பிரச்சனையை முறையாகக் கையாண்டு இன்றுவரை வெளிப்படையாக எல்லா நடவடிக்கைகளையும் சீராக செய்துவரும் நாடாக ஜெர்மனி இருக்கின்றது என்பதும் எல்லோரும் அறிந்தது தானே.

ஐரோப்பாவில் கொரோனா நிலவரம்  இப்படி இருக்க, அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃப்ளாய்ட் (Georg Floyd) கொலையின் எதிரொலியாக கடந்த இரண்டு வாரங்களாக ஜெர்மனியில் நிறவாதம் மற்றும் இனவாதத்திற்கு எதிரான குரல்கள் செயல்வடிவம் பெறும் வகையில் கடந்த நூற்றாண்டுகளில் அடிமை வியாபாரத்தை மேற்கொண்ட சில முக்கியஸ்தரிகளின் சிலைகள் இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரிலும் பெல்ஜியத்தின் பல பகுதிகளிலும் நீக்கப்பட்டன. அமெரிக்காவிலோ எதிர்ப்புக் குரல்கள் மேலும் வலுபெற்றிருப்பதையே இந்த வாரம் அமெரிக்காவின் பல பகுதிகளில் தொடரும் இனவாதத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்களும் நமக்கு வெளிப்படுத்துகின்றன. 

கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் இனவாதத்திற்கு எதிராக அரசு கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.
கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகையின் முன்பகுதியில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையைத் தகர்க்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டார்கள் என்பதை பலரும் ஊடகத்தில் பார்த்திருக்கலாம்.

ஆண்ட்ரூ ஜாக்சன் ராணுவ உடை அணிந்து குதிரையில் செல்வது போல அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிற்பம் அது. வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் இருக்கின்ற இந்தச் சிற்பம் அமெரிக்காவின் புகழுக்குச் சான்றாக   இதுவரை காணப்பட்டது. ஆனால் மக்கள் இன்று இந்த சிற்பத்தை நீக்க வேண்டிய சிற்பமாகக் கருதத் தொடங்கியிருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடுதான் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் பகுதியில் நடந்த இந்தப் போராட்டம்.

இந்த ஆண்ட்ரூ ஜாக்சன் கிபி 19ஆம் நூற்றாண்டில் பூர்வகுடிகளான அமெரிக்க இந்திய மக்களைக் கருணையின்றி அடிமைப்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். அமெரிக்காவின் ஏழாவது அதிபராக இருந்தவர். இனவாதத்தைத் தூக்கிப் பிடித்து அமெரிக்க இந்தியர்களை ஒதுக்கியவர் என்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சனின் பிரம்மாண்டமான சிலையின் மேல் கயிற்றை கட்டி அதனை எல்லா திசைகளிலும் போராட்டக்காரர்கள் நின்றுகொண்டு அதனை இழுத்து சிதைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். காவல் அதிகாரிகள் செயல்பட்டு போராட்டக்காரர்களை விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் அன்று பலரும் பார்த்திருப்போம்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரை தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பேட்டி எடுத்தன. அதில் ஒருவர் கூறிய வாசகம் நம்மை யோசிக்க வைக்கின்றது.
'Why you want to celebrate history of hatred instead of building a future of love? Our plan is to put a round table for the discussion for the community.'

மக்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து வெளிப்படையாக இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல்களை நிகழ்த்துவதற்கு தயாராகிறார்கள் என்பதே இத்தகைய மக்களின் குரல் எதிரொலிக்கிறது.

ஆனால், நமது தமிழ்ச்சூழலிலோ இன்னமும் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதிப் பிரிவினை என்ற ஒன்றுக்கும் உதவாக, மனித நேயத்திற்கு எதிரான ஒரு கருதுகோளை முன் வைத்து. மனித பண்பாட்டின் நாகரிக வளர்ச்சியில் நாம் கடக்க வேண்டிய தூரம் மிக நீளம் என்பதையே இது காட்டுகிறது !

அமெரிக்காவில் கொரோனா கொள்ளை நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வேளையிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரலை வெளிப்படுத்துவதில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை என்பது அவர்களது உறுதியை வெளிப்படுத்துகிறது.

இது இப்படியிருக்க ஐரோப்பாவில் ஐரோப்பாவில் இந்த வாரம் மேலும் ஒரு செய்தி பலரது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. 

அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு குடும்பம் என்பது பெரும்பாலுமே இரண்டாம் பட்சமாகவே அமைந்து விடுவது இயல்புதான். டென்மார்க் பிரதமரின் நிலை இப்போது அப்படித்தான் நம்மை சிந்திக்க வைக்கிறது. டென்மார்க் நாட்டின் பிரதமர் Mette Frederiksen (42) தனது திருமணத்தை மூன்றாவது முறையாக நாட்டின் அரசியல் தேவைகளுக்காகத் தள்ளி வைத்திருக்கின்றார். இவரது திருமணம் வருகின்ற ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் சந்திக்க வேண்டிய முக்கிய கூட்டமொன்று அதே நாளில் நடைபெறுவதால் இவர் திருமணம்  தள்ளி வைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் இதனை அவரது வருங்கால கணவர் புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொண்டதையும் வெள்ளிக்கிழமை 26ம் தேதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ’விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம். எனது வருங்கால கணவர் போ அதிர்ஷ்டவசமாகப் பொறுமை சாலியாக இருக்கிறார். வெகுவிரைவில் அவருக்கு ’யெஸ்’ சொல்வதற்குக் காத்திருக்கின்றேன்’ என்று தங்கள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதைப் பற்றிய செய்தியை இவர் வெளியிட்டிருந்தார்.  

அரசியல் அதிகாரத்தில் இருக்கின்ற இவரைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே  கொரோனா அவசர கால நிலை நமது தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் திட்டமிட்டிருந்த  பல  திட்டங்களையும் தள்ளிவைத்து விட்டது தான். பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும்  இப்போதைய முக்கியப் பாடம்!









தொடரும்..

Thursday, June 25, 2020

கொரோனா தொற்று - தற்கொலைகள்

நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் அதிபர் கொரோனா தொற்று உறுதியானதால் தற்கொலை என்ற செய்தியை வாசித்து அதிர்ச்சியடைகிறேன்.

கொரோனா தொற்று வந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே இதுதான் உண்மை நிலை.

கொரோனா என்பது உடல் எதிர்ப்புச்சக்தியை பலமிழக்க வைக்கும் ஒரு நோய். தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடல் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போது மரணம் ஏற்படுகின்றதே தவிர சரியான நேரத்தில் தக்க நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் குணமடைந்து சென்றிருக்கின்றார்கள் என்ற செய்தி பொது மக்களை சென்றடையவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகின்றது.

இதனை உறுதி செய்யும் வகையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் உடலை புதைக்கச் சிலர் செய்கின்ற நாடகங்களும் உடலை குழிகளுக்குள் தள்ளி விட்டு போவது போன்ற செயல்களும் மக்கள் பீதியில் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதையும் அறிவியலையும் ஆராய்ச்சிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நம்பவில்லை என்பதையுமே காட்டுகிறது.

உலக நடப்புக்களையும் அறிவியல் செய்திகளையும் நம்பிக்கை தரும் செய்திகளையும் ஊடகங்கள் பொது மக்களுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது இப்போதைய அவசர தேவை !

-சுபா

Sunday, June 21, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-7


covid-19 உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு வகையான அதிர்வுகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது பொருளாதாரம் மற்றும் அது சார்ந்த எல்லாமும். ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஏறக்குறைய எல்லா நாடுகளும் பாதிப்பிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டு ஓரளவு இயல்பு நிலைக்கு வரத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்து, ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இப்பொழுது மிகத்தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிபப்டையில். 

இன்று உலகம் முழுவதும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பயணம் செய்வது என்பது  கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறியிருப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை தான். தனிப்பட்ட வகையில் இந்த நான்கு மாதங்களுக்குள் ஏறக்குறைய 10 விமான பயணங்களாவது நான் சென்றிருப்பேன், அலுவலக பயணம் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக. அவை எதுவுமே சாத்தியப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. கண்களை மூடி நான் அறிந்த வானத்தைக் கற்பனை செய்து பார்த்தால் நீலவானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறந்து செல்லும் விமானங்கள் போட்ட வெள்ளைக் கோடுகள் நிறைந்திருக்கும் வானத்தில் இன்று மேகங்கள் மட்டுமே தெரிகின்றன; பறவைகள் மட்டுமே பறக்கின்றன. விமானங்கள் இல்லாத வானத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமது காலத்திலேயே நமக்கு அமைந்திருக்கின்றது என்று நான் வியந்து தான் பார்க்கிறேன். அந்த அளவிற்கு நமக்கு மிகப் பழகிப்போன வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட வாழ்க்கை முறையை இந்த கொரோனா கொள்ளைநோய் காலம் நமக்கு வழங்கி இருக்கின்றது.

ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடுகளும் விமானச் சேவையை ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன. மூன்று மாத காலம் செயல் இழந்து கிடந்த விமானச் சேவைகள். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நஷ்டத்தை ஈடு கட்டுவது என்பது விமான சேவை நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய சவால் தான்.

ஐரோப்பாவில் மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது ரைன் ஏர் (Ryanair) விமான சேவையகம். அயர்லாந்தின் டப்ளினைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இது Lauda, Buzz, Malta Air என்ற மேலும் 3 துணை நிறுவனங்களையும் இணைத்துக்கொண்ட வகையில் இயக்கும் மலிவு விமானச் சேவை நிறுவனம். ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு இந்த விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த விமானச் சேவை நிறுவனத்தில் சேவை அதிகாரிகளாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளமாக 1200 லிருந்து 2200 யூரோ அமைகிறது. பயண முடக்கம் ஏற்பட்ட பின்னர் எந்த பயணங்களும் அனுமதிக்கப்படாத நிலையில் மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருக்கின்ற இந்த ஊழியர்களுக்குக் குறைந்த நேரப் பணி’ என்ற அடிப்படையில் மாதச்சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. 500 லிருந்து 750 யூரோ மாதச் சம்பளம், அத்துடன் கூடுதலாக 250 யூரோ சலுகை என்ற வகையில் இந்த நேரத்தில் ஊழியர்களைச் சமாளிக்கிறது இந்த நிறுவனம். சம்பளம் குறைக்கப்படுவது நிகழ்ந்தாலும் வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சமும் இந்த ஊழியர்களுக்கு இருப்பது அண்மையில் இது தொடர்பில் நிகழ்த்தப்பட்ட ஒரு கள ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வெளியே செல்வது அல்லது அதனால் ஏற்படும் செலவுகள் என்பது குறைந்து போன நிலையில், குறைவான சம்பளமாக இருந்தாலும் கூட பரவாயில்லை.. வேலை பறி போய் விடக் கூடாது என்ற சிந்தனையே பெரும்பாலான மக்களின்  முடிவாகவும் அமைகின்றது. 

ஜெர்மனியைப் பொறுத்தவரை சுற்றுலா என்பது ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்துவிட்டது. பொதுவாகவே மார்ச் மாதம் தொடங்கி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் அல்லது நீண்ட விடுமுறை என்ற வகையில் செல்வது மிக இயல்பு. இதற்காக ஜெர்மானியர்கள் முன்னதாகவே பயண ஏற்பாடுகளைச் செய்து ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் விமான சேவைகளை முன்பதிவு செய்து வைத்திருப்பார்கள். இப்படிப் பட்டோர் எந்த வகையில் தாங்கள் முன்பதிவு செய்து செலுத்திய கட்டணத்தை மீண்டும் பெறுவது என்று விமான சேவை நிறுவனங்களை அணுகுகின்றனர்.  சில விமான சேவை நிறுவனங்கள் பயணிகள் கட்டிய பணத்தை திரும்பப் பெறுவதில் பொதுமக்களுக்கு உதவும் நோக்குடன் செயல்பட்டாலும் முழுமையான தொகையை அவர்களால் தர முடியாது போவதையே விமானச் சேவை நிறுவனங்கள் வழங்குகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சில சேவை நிறுவனங்கள் ஏற்கனவே பயணங்களைப் பதிந்து கொண்டு ஆனால் பயணம் தடைபட்ட நிலையில் பயணிகளுக்கு வவுச்சர் வழங்குகின்றார்கள். இதன்வழி அவர்கள் மற்றுமொரு புதிய பதிவு செய்துகொண்டு  தங்கள் பயணத்தை கொரோனா கொள்ளைநோய் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்த பின்னர் பயணம் மேற்கொள்ள உதவும் வகையில் அமைய ஒரு வாய்ப்பாக அமையும்.

ஐரோப்பா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு விமானச் சேவை வழங்கி இயங்கிவரும்  நிறுவனங்களுள் ஒன்று லுப்தான்சா.  ஜெர்மனியின் தேசிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சாவை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் வகையில் 9 பில்லியன் யூரோ உதவித்தொகையை சான்சலர் ஏஞ்சலா மெர்கல் அவர்கள் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதை அவர் மே மாதமே அறிவித்திருந்தார். உள்நாட்டிலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார உதவி இந்தச் சேவை நிறுவனத்திற்குக் கிடைக்கும் வகையில் ஜெர்மனி அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

ஜெர்மனியைப் பொறுத்தவரை தற்சமயம் விமான நிலையத்திலிருந்து உள்ளூரில் விமான சேவையும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்குமான விமான சேவையும் தொடங்கப்பட்டு விட்டன. ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து துருக்கி, நெதர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் சில விமான நிலையங்களுக்கு ஜெர்மனியிலிருந்து விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்டன. 

எப்போதும் கூட்டமும், நெரிசலும் நீண்ட வரிசையம் மட்டுமே இயல்பு என  நமது மனதில் பதிந்த காட்சிகளைக் கூட பொய்யாக்கி விட்டன கொரோனா கால நிகழ்வுகள். ஒவ்வொரு வாரமும் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து அலுவலகப் பணிகளுக்காகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கும் இடங்கள் இன்றோ வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஒரு காட்சி இது. 

தன் உயிரைப் பற்றி அச்ச உணர்வு தான் ஒரு மனிதருக்கு இருக்கின்ற உணர்விலேயே மிகவும் வலிமையானது. உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்வோம்.. வேலையோ அல்லது அது தொடர்பான பயணமோ எதுவானாலும் சரி எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.. அல்லது அவை முக்கியமல்ல என்ற சிந்தனையை மனிதருக்கு இந்த கொரோனா காலம் மிக அழுத்தமாக தெளிவுபடுத்தி இருக்கிறது. 

பொருளாதாரத் தேடலிலும்உலகம் நம்மை இழுத்துக்கொண்டு சென்ற பாதையிலும் நம்மை மறந்து ஓடிக்கொண்டிருந்த நாம் ஒவ்வொருவரும் நின்று நிதானித்து ன்று நம்மைப் பற்றி சிந்திக்கின்றோம்; நமது தேவைகள் பற்றி யோசிக்கிறோம்நம் உடல்நலனில் அக்கறையும் கவனமும் வைக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் இருப்பதையே ஒரு அனாகரிக செயலாக நினைத்துக் கொண்டு வெளியில் ஓடிக்கொண்டிருந்த நம்மில் பலர் என்று வீட்டுக்குள் இருந்தே உலகத்தைப் பார்க்கும் வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இந்த சூழ்நிலையிலும் புதியபுதிய கற்றல்கள் நமக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வெளியில் ஓடி ஓடிச் சென்று அனுபவத்தை தேடிக்கொண்டிருந்த நாம் என்று வீட்டுக்குள் இருந்தவாரே கணினி வழியாகவும் இணையச் சேவையின் வழியாகவும் உலக நடப்புக்களை அறிந்து கொள்கின்றோம்.

வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது சுய வளர்ச்சியை முடக்கி விடாது. இந்த ஊரடங்கு காலத்திலும் இணைய தொழில்நுட்பம் வழங்கி இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு புதிய புதிய இணையவழி சேவை நிறுவனங்கள் இப்போது காளான்கள் போல முளைத்துவிட்டன. தடைகளையும் வரமாக நினைத்து செயல்படுபவர்கள் இந்தக் காலகட்டத்தில் தங்கள் அறிவுத்திறனைப் பயன்படுத்தி புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். Zoom, WebEx, GoogleMeeting, GotoMeeting, StreamYard போன்ற மென்பொருட்கள் இன்று பாமர மக்களையும் சென்றடையத் தொடங்கிவிட்டன.

2020 ஒட்டு மொத்த மனித குல செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு ஆண்டாக அமைந்து விட்டது. இந்த மாற்றங்களை ஆரோக்கியமாக ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செயல்படுத்துவதே சிறப்பு.








தொடரும்...

Sunday, June 14, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் - 6

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-6

இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளின் மொத்த கவனமும் கடும் வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை விரைவாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் இருக்கின்றது என்பதைத்தான் அண்மைய கடந்த சில நாட்களின் செய்திகள் வலியுறுத்துகின்றன.  கொரோனா கொள்ளை நோய்த் தொற்று பரவல் என்பது கட்டுப்பாட்டிற்குள் வந்து, குறைந்து வருவதை கடந்த சில தினங்களின்  அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பெரும் உயிரிழப்பை ஏப்ரல் மாதம் அனுபவித்த ஸ்பெயினில் இப்போது தினசரி இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகி இருக்கிறது. ஜெர்மனியில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒரு நாளில் இறந்தனர் என்ற நிலை மாறி கடந்த சில நாட்களாக எண்ணிக்கை சராசரி ஆறு என்ற வகையில் இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் திட்டங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன.

ஜூன் 3ம் தேதி இத்தாலி சுற்றுலாத்துறையை ஆதரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்துச் சேவைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இங்கிலாந்தும் இதே போல நடவடிக்கை மேற்கொண்டது என்றாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் வீட்டுப் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. இதனை ரெயின் ஏர், ஈசிஜெட், பிரிட்டிஷ் ஏர் ஆகிய விமானச் சேவை நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வகை கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தங்களின் சேவைக்கு உதவாது என்றும் இங்கிலாந்து அரசு இந்தக் கட்டுப்பாட்டை உடன் நீக்க வேண்டும் என்றும் இவை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜூலை 1ம் தேதி  முதல் உலக நாடுகளுக்கானப் போக்கு வரத்து எல்லையை ஐரோப்பிய ஒன்றியம் திறக்க முடிவெடுத்துள்ளது. இது படிப்படியான நடவடிக்கையாகவே இருக்கும் என்றும், கொரொனா தொற்று பரவல் நிலையைப் பார்த்து ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை முடிவெடுக்கும் என்றும் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில்  மே மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் மினியாப்போலிஸ் மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் கொடுஞ்செயலினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ப்ளோயிட் (George Perry Floyd Jr.) இன்று உலகம் முழுவதும் இனவாத சிந்தனைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணமாகியிருக்கின்றார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்  ஜோர்ஜ் ப்ளோயிட்.  மினியாப்போலிஸ் நகரில் கறுப்பர் என்ற இனவாத அடிப்படையில் அவரது கொலைக்கு ஒரு காவல்துறை அதிகாரி காரணமாகியிருப்பது அமெரிக்கா முழுவதும் காவல்துறையின் செயல்பாடுகளை அவசரமாக அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மிக அழுத்தமாக முன்வைக்கக் காரணமாகியிருக்கின்றது.

உலகின் வேறொரு பகுதியில் அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்குக் குரல் கொடுப்போம் என்று ஜெர்மனியிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரல்களைக் கடந்த சில நாட்களாக மிகப்பெரும் அளவில் உள்நாட்டில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெரு நகரங்களான பெர்லின், ஸ்டுட்கார்ட், மியூனிக், ஹாம்பர்க், லைப்சிக் போன்ற பல்வேறு நகரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு  எனக் கடந்த மூன்று நாட்களும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அளவில் இனவாதத்திற்கு எதிரான பொதுமக்கள் பேரணி நடைபெற்றது.

கொரோனா பேரிடர் கால முடக்கம் இருக்கின்ற சூழலிலும் இந்தப் பேரணி  இனவாத சிந்தனைகளுக்கு  எதிரா மக்களின் சிந்தனையில் எழுந்துள்ள கடும் கோபத்தை வெளிப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.

ஜார்ஜ் ப்ளோய்டின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் சலனம் ஐரோப்பாவில், குறிப்பாக, ஜெர்மனியிலும் இனவாத சிந்தனை தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையில் ஊடுருவி இருப்பதை மக்கள் வெளிப்படையாக இப்போது பேச வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்தப் பேரணிகள் ஒட்டுமொத்த  ஐரோப்பாவிலும் வெள்ளையரது நிற அடிப்படையிலான சிந்தனைப் போக்கு பற்றிய கருத்துக்களுக்கு மீளாய்வு செய்ய ஒரு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.

ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியம் நாட்டில் கி.பி. 19ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் ( King Leopold II) சிலையைப் பொது மக்கள் அவமானப் படுத்தி நீக்கியுள்ளனர். பெல்ஜியம் வரலாற்றில் நீண்ட காலம், அதாவது 1865லிருந்து 1909 வரை ஆட்சி செய்த மாமன்னர் இவர். அண்ட்வெர்ப் நகரிலும் கெண்ட் நகரிலும் உள்ள இவரது பிரமாண்டமான சிலைகளைப் பொது மக்கள் அவமானப்படுத்தி தகர்த்து நீக்கியுள்ளனர்.

இது எனில்..?

தனது ஆட்சி காலத்தில் ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டைக் கைப்பற்றி அதன் முழு வளத்தையும் சுரண்டியதோடு கோங்கோ மக்களை அடிமைகளாக்கிக் கசக்கிப்பிழிந்து துன்புறுத்திய ஒருவன் என்று `புகழ்பெற்றவர்` இந்த மாமன்னர். இத்தனைக்கும் இந்த மன்னன் கோங்கோ நாட்டிற்கு ஒருமுறையும் நேரில் சென்றதில்லை. பெல்ஜியம் அரண்மனையில் அமர்ந்து சொகுசு வாழ்க்கையை ரசித்துக் கொண்டே ஆப்பிரிக்க நாட்டின் மக்களை வாட்டி வேலை வாங்கி அதில் பெற்ற செல்வத்தை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்து தன் நாட்டை வளமாக்கிய மன்னர் இவர்.

பெல்ஜியம் நாட்டு மக்கள் இனவாதத்துக்கு எதிராக கோங்கோவில் அடக்குமுறையை வெற்றிகரபப்படுத்திய நிகழ்வுகளின் குறியீடான மன்னர்  இரண்டாம்  லியோபர்ட்டின் சிலையைத் தகர்த்ததன் வழி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்கின்ற அதே வேளை உலகிற்குத் தங்கள் இனவாத சிந்தனைக்கு எதிரான கருத்தியலைப் பதிய வைத்துள்ளனர். இதனைச் செய்தவர்கள் கோங்கோ நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. மாறாகா பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களே தான்.
இதே போல இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரில் அந்த நகருக்கு கடந்த சில தினங்கள் வரை முக்கியஸ்தராகக் கருதப்பட்ட (Edward Colston) சிலை தகர்த்தெரிந்து ஆற்றில் வீசப்பட்டது.

யார் இவர்?

1680ல் Royal African Company (RAC) என்ற நிறுவனத்தை உறுவாக்கி ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லும் அடிமைத்தொழிலை மிகத் தீவிரமாகச் செய்தவர். ஏறக்குறைய 100,000 மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இவரால் கரீபியத் தீவுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வாழ்க்கையின் கொடூரம் வார்த்தைகளால் எழுத முடியாதது. இன்று இந்த மனிதரின் உருவச் சிலை ப்ரிஸ்டல் நகருக்கு பெருமையல்ல என பொதுமக்களே நினைத்து உடைத்து எரிந்து விட்டார்கள். உடைத்ததும், வீசியதும் சரியா தவறா என்பது இன்று ஒரு முக்கியக் கேள்வியல்ல. மாறாக மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை வித்திட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்பது இனவாதம் பேசுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்பதையே இச்செயல் வெளிப்படுத்துகிறது.   
கொரோனா கொள்ளை நோய் பரவலின் தாக்கம் ஐரோப்பாவில் குறைந்து வரும் வேளையில் தங்கள் நலனையும் ஒதுக்கி வைத்து ஒட்டுமொத்த உலக மக்களின் நீதிக்காக, இனவாதம் ஒழியவேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடன் ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக எழுந்துள்ள இந்த எழுச்சி வியக்க வைக்கின்றது!

Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை அடையாளப்படுத்தி `இந்த இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய மற்றும் தமிழ்ச்சிந்தனையுடன் சாதி உயர்வு தாழ்வு பார்த்து இனவாதம் செய்யும் நபர்கள் இதனை தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாகக் காணவேண்டியது அவசியம் .இந்தியச்சிந்தனையில் சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் சூழலிலும் கூட இந்த வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண்டு வருவதை நான் என் நேரடி அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில் சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த   ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரணியை நிகழ்த்தினர்.

பொதுமக்களில்   65,000 பேர் பெல்ஜியம் முழுதும் உள்ள மாமன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றனர். மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை மட்டுமன்றி அவரது பெயரில் அமைந்திருக்கின்ற சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

காலனித்துவ பழமையில் (Colonial Legacy) அடிமைத்தனத்தைக் கொடூரமாக நிலைநாட்டிய வரலாற்றுச்சின்னங்களைப் பெருமைக்குரிய சின்னங்களாகப் பார்க்கக் கூடாது என்றும், இனவாதத்தை ஆதரிக்கின்ற இவ்வகையான சின்னங்கள் நீக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

பெல்ஜியத்தில் எழுந்துள்ள எழுச்சி போலவே இங்கிலாந்திலும் வெவ்வேறு பகுதிகளில் இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்து நினைவுச் சின்னங்கள் சில இத்தகைய வகையில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கலாம். லண்டனில் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையிலான `அடிமைகள் அருங்காட்சியகம்` (Slavery Museum) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி லண்டன் நகரில் இனவாதத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குச் சிலைகளும் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மற்றும் அடிமைகளாக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், இனி வருங்காலங்களில் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் இத்தகைய மனமாற்றமும் எதிர்ப்புக் குரல்களும் காலத்தின் தேவையே!

ஐரோப்பாவில் இனவாத சிந்தனைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எழுச்சி நிச்சயமாக காலனித்துவ ஆட்சி செய்த இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்சு, போர்த்துகல் போன்ற நாடுகள் மட்டுமன்றி, ஏனைய மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.   இந்த நூற்றாண்டில் கொரோனா கொள்ளை நோய் ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல் மாற்றத்தைப் போன்றதொரு சிந்தனை மாற்றத்திற்கு இது வழிவகுக்கும்!






தொடரும்..

Monday, June 8, 2020

சாதி எப்படி, எப்போது ஒழியும்?

நேற்று Kirthika Tharan ஏற்பாடு செய்திருந்த பேஸ்புக் நேரலை பேட்டி நிகழ்ச்சியின் போது தோழர் Chola Nagarajan எழுப்பிய கேள்விகள்.. பதிலளிக்க அவகாசம் கிடைக்கவில்லை. இங்கே இப்பதிவில் என் பதிகள்.

கேள்விகள்:
1. உலகில் எங்குமே இல்லாத சாதி பற்றியும் பேசவேண்டாமா?
2. மனித சமூகம் எல்லா இடங்களிலும் ஒன்று என்றால் இந்தியாவில்மட்டும் ஏன் சாதி இருக்கிறது?
3. தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி, எப்போது ஒழியும்?

என் பதில்கள்:
1. கண்டிப்பாகப் பேச வேண்டும். அப்போதுதான் இந்தியாவிற்கு வெளியே வாழ்கின்ற ஏனைய இன மக்கள் சாதியென்ற மனித பாகுபாடின்றி நாகரிகத்துடன் இருக்கின்றாகள் என்பதை இந்திய மக்கள் அறிந்து கொள்ள முடியும். மனிதருக்குள் சாதியை வைத்து இனம் பிரித்து கொடூரம் செய்வது அநாகரிகம் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

2. மனித சமூகம் எல்லா இடங்களிலும் ஒன்று தான். பசி, ஏக்கம், அன்பு, நேர்மை, கோபம், அறிவுத் தேடல் என அனைத்திலும் மனித இனத்தின் அடிப்படை ஒன்றுதான். இந்தியாவில் ஏன் சாதி இருக்கிறது என்றால்... வைதீக சமயத்தின் தாக்கம் இயல்பான தொழில் அடிப்படையிலான குழு நிலையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டதால் எனலாம். மனுதர்மம் சொல்லும் 4 வர்ண பாகுபாட்டை உயர் சாதி என அடையாளம் செய்து கொள்வோர் தொடர்ந்து தக்க வைக்க முயற்சி செய்வதால் சாதியை ஒழிக்க அவர்கள் விரும்புவதில்லை. எந்த வித முயற்சியும் இல்லாமல் உயர் சாதி என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொள்வதாலேயே பெருமை விரைவாகக் கிடைத்து விடுகின்றது என்பதால் இந்தச் சலுகையை இழக்கவும் பெருவாரியாக `உயர் சாதியினர்` எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அதனை விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.

3. தன் சுயகாலில் நிற்பதே பெருமை என தனது சுய அறிவையும் திறனையும் நம்புவோர் அதிகம் வெளிப்படையாக சாதி அற்ற முறையில் எல்லா நிலையிலும் செயல்படுவது ஒன்று மட்டுமே இதற்கு தீர்வாகும்.


நாங்க எங்க வீட்டில் எல்லா சாதிக்காரரையும் அனுமதிப்போம். நான் சாதியெல்லாம் பார்க்க மாட்டேங்க.. ஆனால் ......

இப்படி `ஆனால்` என ஒரு காரணத்தை உருவாக்காமல் ஒவ்வொருவரும் செயல்பட்டால் சாதி காணாமல் ஓடி ஒழிந்து விடும்.

-சுபா

Sunday, June 7, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-5

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-6

கடந்த வாரப் பதிவில் சீனாவிற்கு அருகிலிருந்தாலும் பெருமளவில் பாதிப்பை அடையாமல் கொரோனா தொற்று நோய் பரவத்தொடங்கிய காலகட்டத்தில் ஹோங்கோங் மேற்கொண்ட நடவடிக்கைகளும்,  அதனால் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தமையும்,  உலக சுகாதார நிறுவனமும் கூட இதற்குக் கவனம் வழங்கி இது பற்றி வெளிப்படையாகப் பேசாமல்  தவறியது பற்றிய செய்தியைக் குறிப்பிட்டிருந்தேன். 

இவ்வாண்டு மார்ச் 31 நிலவரப்படி, இப்பகுதியில் COVID-19  உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் 715 பேருக்கு மட்டுமே அன்றைய தேதிப்படி தொற்று ஏற்பட்டிருப்பது அறியப்பட்டது.    7.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஹோங் கோங்கில் இன்றுவரை நான்கு இறப்புகள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன.  பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை மிகத் துரிதமாக உடன் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தொற்றுநோய் அதிகரிப்பதை விட கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நோய் தொற்று ஏற்பட்ட 1103 பேரில் 1045 பேர் குணமடைந்துவிட்ட நிலையில், நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை ஹாங்காங்கின் நிபுணர்கள் கண்டறிந்தனர்.  இதனால் ஹோங் கோங் முழுமைக்கும் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் முழுமையான ஊரடங்கைச்  செயல்படுத்தாமல் தொடர முடிந்தது.

கொரோனா வைரஸ் கொள்ளை நோய் இன்று பெரும் பொருளாதாரப் பாதிப்பை உலகெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியும் இதில் விதிவிலக்கல்ல!

இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தனது கூட்டணி அரசுடன் கலந்தாலோசித்து ஒரு முக்கியமான செயலறிக்கையைச்  சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். இது பயனீட்டாளர் செலவினங்களை அதிகரிக்கும், புதிய திட்டங்களில் முதலீடு செய்யும் முயற்சிகள், மற்றும் பொதுமக்கள் மீதான நிதி நெருக்கடியை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையாக காணப்படுகின்றது.

ஏறக்குறைய ஒரு மாத ஊரடங்கிற்குப் பிறகு ஏப்ரல் 20 ஆம் தேதி ஜெர்மனி கொரோனா வைரஸ் நடவடிக்கைகளைத் தளர்த்தத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் விரைவான தளர்வு அறிவிப்பாகவே இருந்தது.  ஆனாலும் கூட  நாட்டின் பொருளாதாரம் 2020 முதல் காலாண்டில்  மந்தநிலைக்குச் சென்றது. நடப்பு காலாண்டில் பொருளாதார சரிவு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் மே மாதத்தில், வேலையின்மை 5.8% இலிருந்து 6.3% ஆக உயர்ந்தது.  இம்மாதம் இந்த எண்ணிக்கை மேலும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு மாதங்களில்  ஜெர்மனியில் இயங்கும் நிறுவனங்களில் 7 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது மற்றும் சம்பளத்தைக்  குறைப்பது ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தப் பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ளச் சரியான நடைமுறை செயல்பாடு தேவை என்பது அவசியம் என்பதால் மெர்க்கெல் தலைமையிலான அரசு  பொது மக்களின்  தொழில்  பாதுகாப்பு,  மந்தமாகிச் சரிந்து  வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தை இயங்க வைப்பது அல்லது மீண்டும் தொடரச் செய்வது என்ற வகையில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க உதவும் வகையில் ஜெர்மனியின் ஆளும் கூட்டணி அரசு 3.6.2020 அன்று 130 பில்லியன் டாலர் ஊக்க நிதியைப்  பயன்படுத்த அங்கீகரித்து ஒதுக்கியது.

இது இப்படியிருக்க, பொதுவாகவே கோடைக் கால தொடக்கத்தில் ஐரோப்பாவெங்கும் திருமணங்கள் களைக் கட்டத் தொடங்குகிவிடுவது இயல்பான ஒன்றுதான். இந்தியர்கள் அல்லது துருக்கியர்கள் போல ஐந்நூறு அல்லது ஆயிரம் விருந்தினர்கள் என்றில்லாமல் பொதுவாகவே ஐரோப்பியத் திருமணங்கள், (துருக்கியர், தமிழர் குடும்பங்கள் தவிர்த்து)  மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் விருந்தினர்களை அழைப்பர்.  பொதுவாக மண்டபங்களில் நெருங்கிய உறவினரும் நெருங்கிய நட்புகளுமாக நூறு பேருக்குக் குறையாத எண்ணிக்கையில் சூழ்ந்திருப்பர். ஆனால் கொரோனா கொள்ளை நோய் தாக்கியுள்ள இக்காலகட்டத்தில்  திருமணங்கள் நடைபெறுவது தடைப்பட்டிருந்தது.  பெல்ஜியத்தில் இவ்வாரம் ஒரு திருமணம் விருந்தினர்கள் சூழ நடந்திருக்கின்றது.   பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் இடையே உள்ள ஒரு சிற்றூரில் கடந்த சனிக்கிழமை ஒரு தம்பதியர்  திருமணம் செய்து கொண்டனர்.

மார்ச் மாதத்தில் ஐரோப்பா முழுமைக்கும் ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்னர்   அழைக்கப்பட்ட விருந்தினர்களின்  முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஐரோப்பாவின் முதல் ஜோடிகளில் இவர்களும் அடங்குவர்.   இங்குத் தற்சமயம் அதிகபட்சம் 25 விருந்தினர்களுடன் திருமணங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் அதிகாரப்பூர்வ கையெழுத்துக்கள் இடப்படும் அலுவலக அறைக்குள் விருந்தினர்கள் அனுமதிக்கப்படாமல்  வெளியே இருந்து வாழ்த்தி அதன் பின்னர் தம்பதியர் வெளி வந்ததும் அவர்களுக்குத் தனித்தனியாக ஒவ்வொருவராக வந்து வாழ்த்துச் சொல்லிச் செல்லும் வகையில் சற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்தும் வழங்கவில்லை என்றும் குறுகிய நேரத்து நிகழ்ச்சியாகவே தம்பதியர் திருமணச் சடங்கை முடித்துக் கொள்கின்றனர். 

இவ்வகை திருமணங்கள் ஆசியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் பல நடந்து விட்டன. எனது நண்பர்கள் சூழலிலேயே இவ்வாரம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமெரிக்கா, மலேசியா, தமிழகம் எனப் பல இடங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. மிகக் குறைந்த அளவில் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ  தமிழ் மக்களும் தங்கள் இல்லங்களிலேயே திருமணத்தை முடித்துக் கொள்கின்றனர். 

கொரோனா வைரஸ் நுண்கிருமி நமது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்தின் சிந்தனைப் போக்கில் செய்திருக்கும் பல வகையான நன்மைகளில் இதனையும் மிக  முக்கியமானதாகவே நான் காண்கின்றேன். வெளி உலகத்தார் தம்மைப்  புகழவேண்டும் என்பதற்காகவே கடன் வாங்கி திருமணங்களையும் திருமண விருந்து நிகழ்ச்சிகளையும் செய்து கடன்காரர்களாகி விடும் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் இப்போது கச்சிதமாக தங்கள் வருமானத்திற்கு ஏற்ற வகையில் அன்றைய  நாளில் மகிழ்வுடன் திருமணம் செய்து கொண்டு, தங்கள் பணத்தை மிச்சப்படுத்தி விட முடிகிறது. இதனால் புதிதாக குடும்பத்தைத்  தொடங்கும் தம்பதியர் தங்கள் தேவைகளுக்கு அப்பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள இது ஒரு நல்வாய்ப்பாகத்தான் நாம் கருத வேண்டும்.

இது இப்படியிருக்க, ஐரோப்பா முழுவதும், சில முக்கிய அரசியல் தலைவர்கள் கொரோனா கொள்ளை நோய் காலத்து ஊரடங்கு விதிகளை மீறியதற்காகக் குறைசொல்லப்படும் நிகழ்வுகளும்  கடந்த சில நாட்களில் நடந்திருக்கின்றது.

ஐரிஷ் பிரதமர் லியோ வரட்கார் மேலாடை இல்லாமல் தனது துணைவியாருடன்  ஒரு பூங்காவில் மேலும் இரண்டு நண்பர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கையில்  வெளிவந்தன,  ஊரடங்கின் போது  பொது மக்களுக்கு ஒரு மோசமான உதாரணமாக இதனைச் சிலர் விமர்சித்திருந்தனர். இதனையடுத்து அவரது அதிகாரப்பூர்வ செய்தித்  தொடர்பாளர்,    லியோ வரட்கார்  COVID-19 விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாகவே செய்தித் தொடர்பாளர்களிடம் விளக்கியிருந்தார்.

ஆஸ்திரியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் ஞாயிற்றுக்கிழமை தனது ஒரு செயலுக்காக மன்னிப்பு கேட்ட நிகழ்வும் நடந்தது. இருவரும் ஒரு உணவகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் அங்கு வந்த காவல் அதிகாரிகள் இதனைக் கண்டித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.   "மகிழ்ச்சியாக உணவருந்திப் பேசிக் கொண்டிருந்த போது  நாங்கள் நேரம் செல்வதை மறந்து விட்டோம்.  நான் உண்மையிலேயே இதற்காக வருந்துகிறேன். இது தவறு தான். உணவக உரிமையாளருக்கு எனது செயலால்  ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கானப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன்." என்று ஆஸ்திரிய ஜனாதிபதி வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.   ஆஸ்திரியாவில் யாராக இருந்தாலும் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது இயல்புதான் என்றாலும், நமது சிந்தனைச் சூழலில் ஒரு ஜனாதிபதி இப்படி தனது தவற்றை உணர்ந்து  மன்னிப்புக் கேட்டு வெளிப்படையாக ஒப்புக் கொள்வதை நாம் அதிசயமாகத்தான் பார்ப்போம், இல்லையா?  ஆஸ்திரியாவில் ஜனாதிபதியைப் போல ஆஸ்திரியாவின் அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மன்னிப்பு கேட்கும் ஒரு சூழலும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரிய-ஜேர்மானிய எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பொது மக்கள் சந்திப்பில் முகக்கவசம் அணியாததற்காக ஆஸ்திரியாவின் அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜெர்மனியிலும் ஒரு அரசியல் ஆளுமை இப்படி மாட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அண்மையில் நடந்தது.    எஃப்.டி.பி கட்சித் தலைவர் கிறிஸ்டியன் லிண்ட்னர் ஒரு உணவகத்தில் தன்னை மறந்து தனது நண்பர் ஒருவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தபோது கண்டிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மாலை, அதிலும் விருந்து முடிந்து விடைகொடுக்கும் போது மிக இயல்பாகப்   பிரியாவிடை அரவணைப்பு  நிகழ்ந்து விட்டது என்றாலும் அது  தவறு தான், என அவர் ஒப்புக்கொண்டார்.   ”இது திட்டமிட்ட, வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் அல்ல என்றும்,   நாம் அனைவருமே தவறிழைக்கக்கூடிய மனிதர்கள் தான் என்பதால் வருந்துகிறேன்,  என்னை மன்னிக்கவும்!" என அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதும் பத்திரிக்கை செய்தியாகியது.

மே மாதம் போலந்தின் பிரதமர் மேட்டூஸ் மொராவிஸ்கி , 2010ம் ஆண்டு நிகழ்ந்த  விமான பேரிடரில் பலியானவர்களை நினைவுகூரும் ஒரு துயர  விழாவில் பங்கெடுத்துக் கொண்ட போது  அந்தப்  பொதுக்கூட்ட நிகழ்வு போலந்து நாட்டின் ஊரடங்கு விதிகளை மீறுவதாகக் காணப்பட்டது.    பிரதமர் அன்று நிகழ்வின் போது  முகக்கவசம் அணியவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.  (https://www.euronews.com/2020/05/28/analysis-european-politicians-who-ve-bent-or-broken-lockdown-rules) இப்படி ஐரோப்பாவின் பல அரசியல் தலைமைகள் பொதுவெளியில் தங்களை மறந்து சில நேரங்கள் நடந்து கொண்டதும் அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டதும் கொரோனா காலத்து நிகழ்வுகளின் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவை தான்.






தொடரும்..