Sunday, June 28, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-8

இந்த வாரம் 25 ஆம் தேதி ஜூன் மாதம்  ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் யென்ஸ் ஸ்பான் அவர்கள்    உலக சுகாதார நிறுவனத்தின்  (WHO) தலைமையகத்திற்குச் சென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெர்மனியின் பங்களிப்பு இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் இவரது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. (https://www.who.int/dg/speeches/detail/who-director-general-s-opening-remarks-at-the-media-briefing-following-trilateral-meeting-between-who-france-and-germany---25-june-2020) கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக ஜெர்மனியில் கொரோனா கொள்ளை நோய் பாதிப்பு என்பது படிப்படியாகக் குறைந்து வருவதை அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான விமான சேவையும் ஜெர்மனியில் தொடங்கப்பட இருக்கின்றது. எனது அண்டை வீட்டுக்காரரான  ரூமேனிய நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்,  தனது தாயாரைப் பார்ப்பதற்காகக் குடும்பத்துடன் பயணம் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்துவிட்டதை இரு தினங்களுக்கு முன்னர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இபோலா வைரஸ் கிருமி ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டில் பரவத் தொடங்கியுள்ளது என்ற செய்தி உலக சுகாதார நிறுவனத்தினால் இந்த வாரம் வெளியிடப்பட்டது (https://www.who.int/news-room/detail/25-06-2020-10th-ebola-outbreak-in-the-democratic-republic-of-the-congo-declared-over-vigilance-against-flare-ups-and-support-for-survivors-must-continue) . இதனால் covid-19 எதிர்ப்பு நடவடிக்கைகளோடு கோங்கோவில் இபோலா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இணைத்தே செய்ய வேண்டியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத்  தேவை  இப்போது எழுந்துள்ளது.

இந்தக் கொரோனா கொள்ளைநோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் போலந்து அதிபர் டூடா அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்தித்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரைக் காரணம்காட்டி ஜெர்மனியில் பல்வேறு இடங்களில் அமெரிக்கா தனது ராணுவத்தைப் பல ஆண்டுகளாக நிறுத்திவைத்திருக்கின்றது. அதில் கடந்த சில ஆண்டுகளாகச் சில ராணுவ முகாம்கள் மூடப்பட்டு ராணுவ அதிகாரிகள் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹைடல்பார்க் நகரிலிருந்த அமெரிக்க இராணுவ முகாம் மூடப்பட்டதை இத்தகைய உதாரணமாகக் கொள்ளலாம். 

அந்த வகையில் இப்பொழுது 10,000 ராணுவ அதிகாரிகளை ஜெர்மனியில் இருந்து வெளியேற்றி போலந்து நாட்டில் பாதுகாப்பிற்காக வைப்பதற்கு ஒப்பந்தம் செய்தல் பற்றி அமெரிக்காவும் போலந்தும் பேசியிருக்கின்றன.

ஜெர்மனியின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்க்குக் கோபம் பல காரணங்களினால் இருக்கிறது. ஏதோ தங்கள் ராணுவம் இருப்பதால்தான் ஜெர்மனி பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒரு போலியான கனவிலும்  ட்ரம்ப் இருக்கின்றார். அல்லது அப்படி ஒரு பார்வையை உலக நாடுகளுக்குக் கொடுக்க முயற்சிக்கிறார்.

இப்படி அமெரிக்கா சிந்திப்பதற்கு ஒரு வரலார்றுப் பின்னனி இருக்கின்றது தான். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  நாட்டோ (NATO) நட்பு நாடுகள் மேற்கு ஜெர்மனியில் அதன் பலத்தையும் ஆளுமையையும் தக்க வைக்கும் நோக்கத்துடன் செயல்படத்தொடங்கின. அதன் எதிரொலியாக அமெரிக்க ராணுவத் தளங்களை ஜெர்மனியின் பல பகுதிகளில் அமெரிக்கா உருவாக்கி  ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இந்த முகாம்களில் வைத்திருந்தது.  1990ம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி இரண்டும் ஒன்றிணைந்த  பின்னர் பல்வேறு செயல்பாடுகளின் காரணத்தினால் மேற்கு ஜெர்மனியில் இருந்த 224 அமெரிக்க ராணுவ முகாம்கள் மூடப்பட்டன.  இன்றைய நிலவரப்படி 41 அமெரிக்க இராணுவ முகாம்களே ஜெர்மனியில் செயல்பாட்டில் இருக்கின்றன.  கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜெர்மனி, அமெரிக்க ராணுவத்தை மீட்டு எடுத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா கொள்ளை நோய் பரவலான காலகட்டத்தில் மிக மோசமான வகையில் தனது செயல்பாடுகளைக் காட்டி தனது பெயரைக் கெடுத்துக்கொண்ட உலக நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் அதிபர் ட்ரம்ப் என்பதும் அதற்கு நேர்மாறாக பிரச்சனையை முறையாகக் கையாண்டு இன்றுவரை வெளிப்படையாக எல்லா நடவடிக்கைகளையும் சீராக செய்துவரும் நாடாக ஜெர்மனி இருக்கின்றது என்பதும் எல்லோரும் அறிந்தது தானே.

ஐரோப்பாவில் கொரோனா நிலவரம்  இப்படி இருக்க, அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃப்ளாய்ட் (Georg Floyd) கொலையின் எதிரொலியாக கடந்த இரண்டு வாரங்களாக ஜெர்மனியில் நிறவாதம் மற்றும் இனவாதத்திற்கு எதிரான குரல்கள் செயல்வடிவம் பெறும் வகையில் கடந்த நூற்றாண்டுகளில் அடிமை வியாபாரத்தை மேற்கொண்ட சில முக்கியஸ்தரிகளின் சிலைகள் இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரிலும் பெல்ஜியத்தின் பல பகுதிகளிலும் நீக்கப்பட்டன. அமெரிக்காவிலோ எதிர்ப்புக் குரல்கள் மேலும் வலுபெற்றிருப்பதையே இந்த வாரம் அமெரிக்காவின் பல பகுதிகளில் தொடரும் இனவாதத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்களும் நமக்கு வெளிப்படுத்துகின்றன. 

கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் இனவாதத்திற்கு எதிராக அரசு கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.
கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகையின் முன்பகுதியில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையைத் தகர்க்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டார்கள் என்பதை பலரும் ஊடகத்தில் பார்த்திருக்கலாம்.

ஆண்ட்ரூ ஜாக்சன் ராணுவ உடை அணிந்து குதிரையில் செல்வது போல அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிற்பம் அது. வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் இருக்கின்ற இந்தச் சிற்பம் அமெரிக்காவின் புகழுக்குச் சான்றாக   இதுவரை காணப்பட்டது. ஆனால் மக்கள் இன்று இந்த சிற்பத்தை நீக்க வேண்டிய சிற்பமாகக் கருதத் தொடங்கியிருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடுதான் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் பகுதியில் நடந்த இந்தப் போராட்டம்.

இந்த ஆண்ட்ரூ ஜாக்சன் கிபி 19ஆம் நூற்றாண்டில் பூர்வகுடிகளான அமெரிக்க இந்திய மக்களைக் கருணையின்றி அடிமைப்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். அமெரிக்காவின் ஏழாவது அதிபராக இருந்தவர். இனவாதத்தைத் தூக்கிப் பிடித்து அமெரிக்க இந்தியர்களை ஒதுக்கியவர் என்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சனின் பிரம்மாண்டமான சிலையின் மேல் கயிற்றை கட்டி அதனை எல்லா திசைகளிலும் போராட்டக்காரர்கள் நின்றுகொண்டு அதனை இழுத்து சிதைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். காவல் அதிகாரிகள் செயல்பட்டு போராட்டக்காரர்களை விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் அன்று பலரும் பார்த்திருப்போம்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரை தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பேட்டி எடுத்தன. அதில் ஒருவர் கூறிய வாசகம் நம்மை யோசிக்க வைக்கின்றது.
'Why you want to celebrate history of hatred instead of building a future of love? Our plan is to put a round table for the discussion for the community.'

மக்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து வெளிப்படையாக இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல்களை நிகழ்த்துவதற்கு தயாராகிறார்கள் என்பதே இத்தகைய மக்களின் குரல் எதிரொலிக்கிறது.

ஆனால், நமது தமிழ்ச்சூழலிலோ இன்னமும் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதிப் பிரிவினை என்ற ஒன்றுக்கும் உதவாக, மனித நேயத்திற்கு எதிரான ஒரு கருதுகோளை முன் வைத்து. மனித பண்பாட்டின் நாகரிக வளர்ச்சியில் நாம் கடக்க வேண்டிய தூரம் மிக நீளம் என்பதையே இது காட்டுகிறது !

அமெரிக்காவில் கொரோனா கொள்ளை நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வேளையிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரலை வெளிப்படுத்துவதில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை என்பது அவர்களது உறுதியை வெளிப்படுத்துகிறது.

இது இப்படியிருக்க ஐரோப்பாவில் ஐரோப்பாவில் இந்த வாரம் மேலும் ஒரு செய்தி பலரது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. 

அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு குடும்பம் என்பது பெரும்பாலுமே இரண்டாம் பட்சமாகவே அமைந்து விடுவது இயல்புதான். டென்மார்க் பிரதமரின் நிலை இப்போது அப்படித்தான் நம்மை சிந்திக்க வைக்கிறது. டென்மார்க் நாட்டின் பிரதமர் Mette Frederiksen (42) தனது திருமணத்தை மூன்றாவது முறையாக நாட்டின் அரசியல் தேவைகளுக்காகத் தள்ளி வைத்திருக்கின்றார். இவரது திருமணம் வருகின்ற ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் சந்திக்க வேண்டிய முக்கிய கூட்டமொன்று அதே நாளில் நடைபெறுவதால் இவர் திருமணம்  தள்ளி வைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் இதனை அவரது வருங்கால கணவர் புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொண்டதையும் வெள்ளிக்கிழமை 26ம் தேதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ’விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம். எனது வருங்கால கணவர் போ அதிர்ஷ்டவசமாகப் பொறுமை சாலியாக இருக்கிறார். வெகுவிரைவில் அவருக்கு ’யெஸ்’ சொல்வதற்குக் காத்திருக்கின்றேன்’ என்று தங்கள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதைப் பற்றிய செய்தியை இவர் வெளியிட்டிருந்தார்.  

அரசியல் அதிகாரத்தில் இருக்கின்ற இவரைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே  கொரோனா அவசர கால நிலை நமது தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் திட்டமிட்டிருந்த  பல  திட்டங்களையும் தள்ளிவைத்து விட்டது தான். பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும்  இப்போதைய முக்கியப் பாடம்!









தொடரும்..

No comments:

Post a Comment