Saturday, January 19, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 41


மாணவர்கள் கல்வி மற்றும் பாடங்களில் தேர்ச்சி என்பனவற்றோடு மேலும் பல திறமைகளையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது. தனது மனதில் உள்ள கருத்தைத் தெளிவுற விளக்குவதற்கும், தான் சரியென நினைக்கும் விஷயங்களை காரண காரியங்களோடு விளக்கும் திறனும் மாணவர்கள் வெற்றியுடன் செயல்பட இன்றியமையாத தேவைகளில் ஒன்றாகின்றது.

பள்ளிக் கூடங்களில் மொழி, கணிதம், பூகோளம், அறிவியல் என்பதோடு மட்டுமல்லாது மனதை பண்படுத்தும், மனதிற்குப் பயற்சியளிக்கும் சில பாட முறைகளையும் பல நாட்டு கல்வித்துறைகளும் பாடத்திட்டத்தோடு இணைத்து வைத்திருப்பதை நாம் பார்க்கின்றோம். விளையாட்டு, குழுப் பயிற்சிகள், கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி இசை, நாடகம், நடனம் போன்றவற்றில் பயிற்சி போன்றவை மாணவர்களிடயே இயல்பாக அமைந்துள்ள கூச்ச சுபாவத்தையும் தயக்கம் தரும் போக்கினையும் போக்க வல்லவை. பல பெற்றோர்கள் இவ்வகை பயிற்சிகளால் என்ன நன்மையைத் தங்கள் குழந்தைகள் அடையப் போகின்றார்கள் என யோசித்து இவ்வகை பயிற்சிகளில் தங்கள் குழந்தைகள் ஈடுபடுவதை அவ்வளவாக ஊக்குவிப்பதில்லை. அதிலும் பெண் குழந்தைகள் என வரும் போது தமிழக சூழலில் விளையாட்டுப் பயிற்சிகளில் பெண் குழந்தைகள் ஈடுபடுவதை பெற்றோர் குறைத்தே ஊக்குவிக்கின்றனர்.

பல மாணவர்கள்  கல்லூரி படிப்பை முடித்து பணிக்குச் சென்ற பின்னரும் கூட தங்கள் மனதில் உள்ள கருத்தை முறையாகச் சொல்லத் தெரியாமல் தயங்கும் நிலை இருப்பதைக் காண முடிகின்றது. பேச்சுத் திறன், தெளிவாக விளக்கும் திறன், தலைமைத்துவம், முடிவெடுக்கும் திறன் ஆகியவை பலர் பெரியவர்களாகியும் கூட இயலாமல்  தவிப்பதைக் காண்கின்றோம். இவ்வகை நிலையை பயிற்சிகளின் வழி கொஞ்சம் கொஞ்சமாக போக்கி தைரியத்தை வளர்க்கும் கலையை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோர்கள் கடமை என்று மட்டுமில்லாது ஆசிரியர்களின் கடமையாகவும் ஆகின்றது.

என் நிலையை இவ்வேளையில் யோசித்துப் பார்க்கின்றேன். என் இளம் வயதிலேயே என் தாயார் தான் ஈடுபட்டிருந்த சமூக இயக்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் என்னையும் தவறாமல் அழைத்துச் செல்வார். அவ்வாறு செல்லும் போது நிகழ்ச்சி நடைபெற தேவைப்படும் உதவிகளில் ஏதேனும் சிலவற்றை நான் செய்து வருவேன். இவ்வகையில் எனக்கு பலரது அறிமுகம் இளம் வயதிலேயே ஏற்பட்டது. பேராசிரியர்.ரெ.கார்த்திகேசு போன்றோரையெல்லாம் இப்படித்தான்  அறிமுகம் செய்து கொண்டேன் என் இளம் வயதில். எனக்கு இருந்த கூச்ச சுபாவம் எல்லாம் படிப்படியாக மறைந்து பேச்சுத் திறன், திட்டமிடும் திறன், பலரோடு தயங்காமல் பேசும் திறன் என்பன போன்ற திறன்கள் எனக்கு இதனால் ஏற்பட்டன என தயங்காமல் கூறுவேன். அனுபவப் பயிற்சி பல வகைகளில் நாம் திறமையுடன் செயல்பட மிக மிக உதவக் கூடியவை. கல்விப் படிப்போடு பேச்சு, முடிவெடுக்கும்  திறன், தலைமைப் பொறுப்பு ஆகியன போன்ற திறன்களும் சேரும் போது மாணவர்கள் திறமையுடன் செயல்பட்டு தங்கள் வாழ்க்கையில் மேம்பாடு காண இலகுவாக முடியும்.

உ.வே.சா அவர்களுக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த அக்காலகட்டத்தில் தமிழ்ப்பாடம் என்பது மட்டுமல்லாது அக்குருகுல வாசத்தில், பல பெரியோர்களுடனான சந்திப்பு, பலர் முன்னிலையில் செய்யுள் கூறி பொருள் சொல்லும் பயிற்சி, என இவ்வகையிலும் மனதில் அச்சத்தைத் போக்கி செயல்படும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது என்பதை 31ம் அத்தியாயத்தில் காண்கின்றோம். பிள்ளையவர்களைப் பார்க்க வருகின்ற பெரியோர்கள், கனவான்கள், பிரபுக்கள் முன்னிலையிலேயே உ.வே.சா மற்றும் ஏனைய மாணவர்களையும் செய்யுள்கள் சொல்லச் சொல்லி பொருளும் சொல்லச் சொல்லி ஊக்குவிப்பாராம் பிள்ளையவர்கள்.

அக்காலகட்டத்தில் பல பெரியவர்களுடனான சந்திப்பு உ.வே.சா விற்கு புது உலகினைக் காட்டியது. அவரது அறிவு ஞானப் பரப்பு விரிந்ததைப் போலவே அனுபவப் பரப்பும் நாளுக்கு நாள் விரிந்து வந்தது  பிள்ளைய்வர்களுடனான குருகுல வாசத்தில்!

தொடரும்...

சுபா

Friday, January 4, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 40


'எனக்கு ஏன் இந்தப் பெயர் வைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது' என்று என் அம்மாவிடம் ஒரு முறை நான் கேட்டதுண்டு. அவரது அப்பா, அதாவது எனது தாத்தா, தஞ்சையிலிருந்தவர் அவர் ஜாதகம் பார்த்து கணித்துக் கொடுத்து சு எனும் எழுத்தில் பெயரின் முதலெழுத்து வரவேண்டும் என்று வந்ததால் இந்தப் பெயரைத் தான் இடவேண்டும் என இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குத் தந்தி அனுப்ப, அப்படி அமைந்தது தான் என் பெயர் எனத் தெரிந்து கொண்டேன்.  எனக்கும் என் பெயர் பிடித்து விட்டதால் வளர்ந்த பின்னரும் நானும் அதில் எந்த மாற்றமும் செய்து கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தே சிலர் தங்கள் பெயரை வெவ்வேறு காரணங்களுக்காக மாற்றி வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கின்றேன். சில வேளைகளில் புதிய பெயரே அவர்களுக்கு நிலைத்து விடுகின்றது. அந்த விஷயம் உ.வே.சா அவர்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றது என்பதை அறிந்து கொண்ட அந்தச் செய்தியை இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உ.வே.சாவிற்கு அவர் பிறந்த சமயம் குடும்பத்தினரால் வைக்கப்பட்ட பெயர் வேங்கடராமன் என்பது. வேங்கடாசலபதி தெய்வத்தைக்குல தெய்வமாகக் கொண்டிருந்தமையால் அவருக்கு இந்தப் பெயர் அமைந்திருந்தது. ஆனாலும் அனைவருமே வீட்டில் சாமா (சாமிநாதன்) என்றே கூப்பிடுவது வழக்கம்.

இந்த வேங்கடராமன் என்ற பெயரை மாற்றி சாமிநாதனாக ஆக்கி உ.வே.சாவிற்கு இந்தப் பெயரே நிலைக்கும் படி செய்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் இவரது பெயர் பற்றி வினவுகின்றார். சாமா என்று வீட்டில் அழைப்பார்கள் என்று சொல்ல சாமிநாதன் என்ற பெயரே நன்றாக இருக்கின்றதே. நானும் இந்தப் பெயரிலேயே அழைக்க விரும்புகின்றேன் என்று சொல்ல இவருக்கு அப்பெயரே அமைந்து நிலைத்தது.

மாணவர் மேல் அளவற்ற அன்பு கொண்டவர்; அவர்களுக்காகவே வாழ்ந்தவர் பிள்ளையவர்கள் என்று முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அதனைச் சான்றுகளுடன் நமக்கு விளக்குவது என் சரித்திரம் நூல்.

உ.வே.சாவை தாயின் பரிவண்புடன் கவனித்துக் கொண்டு அவர் கல்வி வளர்ச்சியின் மேல் மட்டுமன்றி அவர் உடல் நிலையிலும் அக்கறை கொண்டு தம்மை வளர்த்து வந்த அப்பண்பைப் போற்றி இப்படிக் கூறுகின்றார் உ.வே.சா தனது நூலின் 31ம் அத்தியாயத்தில்.

" ஒவ்வொரு நாளும் நான் சாப்பிட்டு வந்தவுடன், “சாப்பிட்டாயிற்றா? ஆகாரம் சௌகரியமாக இருந்ததா?” என்று விசாரிப்பார். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்படி வற்புறுத்துவார். ஒரு நாள் பிள்ளையவர்கள் தாம் எண்ணெய் தேய்த்துக் கொள்ள எண்ணி எண்ணெயை வருவித்தார். அப்போது அருகிலிருந்த என்னைப் பார்த்தார். “உமது முகம் தெளிவாக இல்லையே; கண் சிவந்திருக்கிறதே. எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்” என்று எண்ணெயும் கொடுத்தார். உடனே நான் சென்று எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்து போஜனம் பண்ணிவிட்டு வந்தேன். பிள்ளையவர்கள் அப்போது என்னைப் பார்த்தவுடனே அருகிலிருந்த ஒருவரிடம் “இப்போது எப்படி இருக்கிறது இவர் முகம்? தெளிவாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டனர். என் முகத்தில் இருந்த தெளிவு என்னைக் காட்டிலும் அவருக்கு அதிகமான மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எனக்கு ஏதேனும் வேண்டுமென்று தெரிந்தால், உடனே அவர் வாங்கிக் கொடுப்பார். நான் சாப்பிட்டு வருவதற்கு நேரமானால், “இன்னும் வரவில்லையே?” என்று கவலையோடு இருப்பார். இராத்திரி வேளைகளில் அக்கவலை அதிகமாக இருக்கும்; தெருத் திண்ணையில் அமர்ந்தபடியே என் வரவை எதிர்பார்த்திருப்பார். “ஏன் இவ்வளவு நேரம்? கவலையாக இருந்தது” என்று உள்ளன்போடு விசாரிப்பார். இத்தகைய செயல்களால் நான் அவரது
அன்பை அறிந்து உருகினேன். அந்த அன்பிலே நனைந்து தமிழமுதத்தை உண்டு வந்தமையால் என் தாய் தந்தையரைப் பிரிந்திருப்பதனால் உண்டான துயரம் நீடிக்கவில்லை. பிள்ளையவர்களைப் பிரிந்திருக்க நேருமாயின் அதுவே கஷ்டமாக இருக்குமென்று தோன்றியது. "


தொடரும்..

சுபா

Tuesday, January 1, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 39


2013ம் ஆண்டின் முதல் நாள் இன்று. இந்த நன்னாளிலும் இந்தத் தொடரில் ஒரு பதிவினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆவல்!

திருக்குடந்தைத்  திருவந்தாதி நூலை உ.வே.சா படிக்க ஆரம்பித்த  போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவரகள் ஒரு வாரெழுத்தாணியையும் சுவடிக்கட்டையும் கொடுத்து நூலை முழுதாக பிரதி எடுத்துக் கொண்டு படித்து வரும்படி கூறிவிட்டார். இவ்வாறு அடிக்கடி சுவடியில் எழுதும் நிலை உருவானமையால் மிக விரைவாகவும் அதே சமயம் சிரமமின்றியும் தம்மால் சுவடியில் எழுத முடிந்தது என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா. அச்சுப்பதிப்புக்கள் பிரபலமாகிக் கொண்டிருந்த கால கட்டமது. ஆனாலும் பிள்ளையவர்கள் எழுத்தாணி கொண்டு தம் மாணாக்கர்கள் சுவடியில் பிரதி எடுத்துக் கொண்டு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது தெரிகின்றது.

இரண்டே நாட்களில் திருக்குடந்தைத் திரிபந்தாதி பாடம் சொல்லி முடிவடைந்தது.  பாடங் கேட்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள மாணவரும் பாடம் சொல்வதையே தம் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்த ஆசிரியரும் சேர்ந்தால் என்ன நிகழும்?   பல நூல்களின் பாடங்கள் ஒவ்வொன்றாகத் தொடங்கின உ.வே.சாவுக்கு.

பல வேளைகளில் உ.வே.சாவுடன் சவேரிநாதப் பிள்ளையும், கனகசபை ஐயர், சிவப்பிரகாச ஐயர் என்ற வீர சைவ நம்ப்க்கையினராகிய இரு சகோதரர்களும் இவருடன் சேர்ந்து பாடங்கேட்பதும் உண்டு.

குடந்தைத் திரிபந்தாதி பாடங் கேட்டு முடிந்ததும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய பழமலைத் திரிபந்தாதி தொடங்கியது. அது பாடங்கேட்டு முடிந்ததும் நெற்குன்றவாண முதலியாரெண்பவர் இயற்றிய திருப்புகலூர்த் திரிபந்தாதி தொடங்கியது. இந்த நூலை பாடம் சொல்லும் வேளைகளில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அடிக்கடி “என்ன வாக்கு! என்ன நயம்!” என்று மிக விரும்பிச் சொல்லிக் கொள்வாராம். அப்படி ரசித்துப் படிக்கும் வகையில் இந்த நூல் சொல்லிலும் பொருளிலும் மிகச் சிறந்து விளங்கியதாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

திருப்புகலூர்த் திரிபந்தாதி முடிவடைந்ததும் மறைசையந்தாதி என்னும் நூலை பிள்ளையவர்களிடம் ஒரே நாளில் பாடங் கேட்டு முடித்தனர் இந்த மாணாக்கர்கள். அதனையடுத்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே இயற்றிய மேலும் சில நூற்கள் பாடம் கேட்கத் தொடங்கினர்.  அதில் தில்லை யமக அந்தாதி, துறைசையமக அந்தாதி, திருவேரகத்து யமக அந்தாதி ஆகியன அமைந்தன.

இப்படி தினம் தினம் கல்வி எனும் தமிழ் ஞானக் குவியல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். உ.வே.சாவோ தனக்குக் கிடைக்கின்ற ஞானப் பொக்கிஷங்கள் ஒன்றையும் சிதற விடாமல் எல்லாவற்றையும் எடுத்துக் சேர்த்துக் கொள்பவராகவே இருந்தார்.

இதனை உ.வே.சா தாமே விவரிப்பதை வாசித்துப் பார்ப்பதும் இப்பகுதிக்குச் சுவை கூட்டும்.


“அந்தாதிகள் ஆன பிறகு பிள்ளைத்தமிழ் வரிசை தொடங்கப் பெற்றது. எனக்குக் கொண்டாட்டந்தான். கால் நூலும், அரை நூலும், ஒரு செய்யுளுமாகப் படித்த எனக்கு வரிசை வரிசையாகப் பிரபந்தத் தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அனாயாசமாகக் கிடைத்தன. சோர்வில்லாமற் பாடங் கேட்டு வந்தேன். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் என்பவற்றைக் கேட்டேன். திரிபந்தாதியா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. யமக அந்தாதியா? அதிலும் இரண்டு, மூன்று. பிள்ளைத் தமிழா? அதிலும் ஐந்துக்குக் குறைவில்லை. பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றிய அஷ்டப் பிரபந்தங்களில் ஐந்தாறு பிரபந்தங்கள் பாடங் கேட்டேன். அசுவதாட்டியில் நான் பாடங் கேட்டு வந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை. இப்படி நான்
பாடம் கேட்கும் காலம் ஒன்று வருமென்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. விருத்தாசல ரெட்டியார், “நாங்களெல்லாம் மேட்டு நிலத்துக் கிணற்றில் ஊறும் ஊற்றுக்கள். அவர் காவேரிப் பிரவாகம்” என்று
சொன்னது எவ்வளவு உண்மையானது? காவேரிப் பிரவாகமா? கங்காப் பிரவாகமென்று சொல்லலாம்; அதுகூடப் போதாது. “கடல் மடை திறந்தது போன்றது” என்று சொன்னாலும் தகும். ஒவ்வொரு பிரபந்தமும் கேட்டு முடிந்தவுடன் அதனைச் சிந்தித்து இன்புற்று அந்தத் திருப்தியிலே, “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று பெருமிதம் அடைந்தேன்.”

இந்தப் பகுதியில் உ.வே.சா பாடங் கேட்டதாகக் குறிப்பிடும் நூல் பட்டியலை பார்க்கும் போது இந்த நூற்களைத் தேடி மின்பதிப்பு செய்ய வேண்டும் என்ற ஆவல் மிகுகின்றது. இதற்காகத் தற்சமயம் சில முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம், இறையருள் கருணை துணை செய்யும் என்ற நம்பிக்கையில்!

தொடரும்....