Sunday, August 31, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 71

என் சரித்திரம் நூலின் வழியாக உ.வே.சா தனது சொந்த வாழ்க்கைக் குறிப்பை மட்டும் பதிந்தார் என்று நாம் இதன் பரப்பை சுருக்கி காண முயற்சித்தல் இன்னூலைப் பற்றிய சரியான புரிதலைத் தராது. பல சமகாலத்து செய்திகளையும் நடைபெற்ற விஷயங்களையும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் இவர் இன்னூலில் பதிவதையே பெரும் ஆர்வத்தோடு செய்திருக்கின்றார்.

அந்த ஆண்டு தமிழகத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. 

பஞ்சம் மக்களின் வாழ்க்கையை நிலை குலையச் செய்யும் இயற்கை பேரிடர் தானே. வாழும் இடத்தில் உணவுக்கு வழியில்லை என்றால் பிழைக்க புதிய இடம் தேடிச் செல்வது தானே வாழ்க்கையைத் தொடர வழிகொடுக்கும். பஞ்சத்தால் இருந்த இடத்திலேயே இருந்து மடிவதை விட பிழைக்க புதிய வழி தேடி மக்கள் புதிய பகுதிகளுக்குச் செல்வது மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகவியல் நிகழ்வு. 

அந்த ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் அல்லலுற்ற பலர் தாம் வசிக்கும் இடங்களிலிருந்து பெயர்ந்து திருவாவடுதுறை பகுதிக்கும் பயணித்திருக்கின்றனர் என்பதை என் சரித்திரக் குறிப்புக்களில் காண்கின்றோம். அப்படி பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் உணவிண்றி வாடும் நிலை ஏற்படாமல் இருக்க அவர்களுக்குத் தொழிலை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது திருவாவடுதுறை மடம். 

மடாதிபதி சுப்ரமணிய தேசிகரின் செயல்பாட்டை வாசித்து அறியும் போது ஆச்சரியப்படுகின்றேன். ஏழைகள் வருகின்றார்களே என்பதற்காக தொடர்ந்து இலவசமாக உணவு கொடுப்பது என்ற போக்கை விடுத்து அவர்களுக்குத் தொழில் செய்து முன்னேற வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார் தேசிகர். அம்மக்களுக்குக்  கஞ்சித் தொட்டிகளை வைத்து மக்களுக்கு கஞ்சி கொடுத்து பசியைப் போக்கியதோடு சுற்று வட்டாரத்தில் இருந்த புன்செய் நிலங்களை அதன் தன்மை மாற்றி நன்செய் நிலங்களாக ஆக்க வைத்து அதில் விவசாயத்தைச் செய்து மக்கள் ஜீவனத்துக்குப் புதிய வழியைக் காண உதவியிருக்கின்றார். 

உண்மையான ஒரு உதவி என்பது தொடர்ந்து மனிதர்கள் ஏதாவது ஒரு வகையில் தம் பிழைப்பை தாமே பார்த்துக் கொள்ளும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான். இலவச உணவு, இலவச வாழ்க்கை நிலை என இருக்கும் சூழலை உருவாக்குவது சமூகத்தில் கொடிய   பின்விளைவுகளைத் தான் உருவாக்கும். காரணம் இலவசத்துக்குப் பழகிப் போன மக்களின் மனம் உழைப்பை நாடாது. உண்ணும் ஒரு பிடி உணவும் தன் சொந்த உழைப்பில் வந்ததுதான் என்ற எண்ணம் கொண்டவருக்கே தொடர்ந்து தன் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறும் அறிவும் திறனும் ஆர்வமும் இருக்கும். 

அந்த வகையில் மடத்தில் நிகழ்ந்த இந்தச் செயல்பாட்டை நான் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகவே கருதுகின்றேன். 

இச்செய்தியை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி ஒரு சிந்தனை  தோன்றுகின்றது என்பது ஒரு புறமிருக்க, இச்செய்தி அறிந்த வேதநாயகம் பிள்ளையவர்கள் தேசிகரை இச்செயலுக்காகப் பாராட்டி ஒரு செய்யுளும் எழுதியிருக்கின்றார். இதனை உ.வே.சா தன் சரிதத்தில் குறித்து வைக்கின்றார்.

“எரியொத்த பஞ்ச மிடங்கரை யொத்த திடங்கர்பற்றும் 
கரியொத் தனபல் லுயிர்களப் பஞ்சக் கராமடிக்க 
அரியொத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரம் 
சரியொத் தனவவ னீந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே.” 

[இடங்கர் - முதலை. கரா - முதலை. அரி - திருமால். பொன் சக்கரம்
- பவுன். வெள்ளிச் சக்கரம் - ரூபாய்.] 

வேதநாயகம் பிள்ளையின் இறுதி காலம் வரை உ.வே.சாவிற்கு அவருடன் மிக நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது. மடத்தின் பல முக்கிய எழுத்துப் பணிகள், அரசாங்கப் பணிகள், ஆங்கிலத்தில் எழுத வேண்டிய  கடிதங்கள், சட்ட விஷயங்கள் ஆகியற்றில் வேதநாயகம் பிள்ளையவர்கள் துணையிருந்து உதவியிருக்கின்றார் என்பதையும் அறிய முடிகின்றது.

தொடரும்...

Saturday, August 23, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 70

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவராக இருந்தவர் அச்சமயத்தில் மாயூரத்தில் முன்சீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளை அவர்கள். இவர் தமிழில் நிறைந்த புலமை மிக்கவராகத் திகழ்ந்தவர் என்றும் நிறைய செய்யுட்களையும் பாடல்களையும் இயற்றியவர் என்றும் பலரும் அறிந்திருப்போம். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரது தமிழின் மேலான ஆர்வமும் சைவ சமய நூற்களின் மேலான பற்றும், திருவாவடுதுறை மடத்தின் மீதும்  அதன் ஆதீனகர்த்தர் சுப்ரமணிய தேசிகர் மீது அவர் கொண்டிருந்த பற்றும் ஆர்வமும் அளப்பறியதாகவே இருந்தது.

சுப்பிரமணிய தேசிகரின் மேல் பல செய்யுட்களை இவர் இயற்றியிருக்கின்றார். ஒரு கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர், அதிலும் பெரிய அரசாங்க உத்யோகத்தில் இருந்தவர், இந்த அளவு தீவிரமாக சைவ மடத்தோடு தனது உறவை பினைத்துக் கொண்டிருக்கின்றாரே என உ.வே.சா வியந்து போகின்றார். தனது வியப்பை அவர் தனது சரிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

ஒரு கிறிஸ்தவ கனவான் சைவ மடாதிபதியைப் புகழ்வதென்றால் அது மிகவும் அரிய செய்தி யன்றோ? அன்றியும் பொறுப்புள்ள அரசாங்க உத்தியோகம் ஒன்றை வகித்து வந்தவரும், பிறரை அதிகமாக லக்ஷியம் செய்யாதவருமான வேதநாயகம் பிள்ளை பாடினாரென்பது யாவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை அப்புலவர் மூலமாகத் திருவாவடுதுறை மடத்தின் பெருமையையும், அதன் தலைவருடைய கல்வியறிவு ஒழுக்கச் சிறப்புக்களையும் உணர்ந்திருந்தார். தாமே நேரில் பார்த்தபோது அம்மடம் தமிழ் வளர்க்கும் நிலயமாக இருப்பதை அறிந்தார். இவற்றால் சுப்பிரமணிய தேசிகரிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டாயிற்று.

இன்று தமிழ்மொழியைப் பாதுகாக்கும், முறையாகப் பயன்படுத்தும் நிலை குறைந்து வருவதைப் பற்றி நாம் அடிக்கடி பேசிக் கொள்கின்றோம், உரையாடுகின்றோம். தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்களின் கலப்பு என்பது நிகழ்ந்து தமிழின் செம்மையைக் குலைப்பதை நினைத்து வருந்துகின்றோம்.  சிலர் ந்ன்கு தமிழறிந்தோராக இருந்தாலும் கூட ஆங்கில மோகத்தால் தமிழை பிறர் முன்னிலையில் பேசாது ஆங்கில மொழியில் உரையாட விரும்புவதைக் கண்டு வருந்துகின்றோம். 

மொழி என்பது ஒரு கருவி. எத்தனை மொழிகளைக் கற்கின்றோமே அத்தனையும் நாம் நமது அறிவை விரித்தி செய்து கொள்வதற்கும், அந்தந்த மொழி நூல்களையும் இலக்கியங்களையும் அறிவுக் கருவூலங்களையும் வாசித்து அறிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவும் தன்மையன. வேறொரு மொழி நல்ல வேலை வாய்ப்பையும் பொருளாதார பலத்தையும் தரும் என்பதற்காக மட்டுமே நமது தாய்மொழியை விட்டு விட்டு, மறந்து விட்டு வேறொரு மொழியைக் கற்க நினைப்பது நாமே நமது அடிப்படையை அழிப்பதற்கு காரணமாகிவிடும். ஆக இக்கால நிலையில் அதிலும் கணினி யுகத்தில் பல மொழிகள் கற்பது என்பது எவ்வகையில் சாத்தியமாகின்றதோ, அதே வகையில் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சிறியவர்களோ பெரியவர்களோ, தமிழை  கணினி, இணையம் வழி கற்று தம் தாய்மொழி மறக்காத தமிழர்களாக வாழலாம். 

இளம் பிராயத்தில் மொழிகள் கற்பது என்பது கற்றலை சுலபமாக்கும். ஆக தமிழ் மொழியோடு ஆங்கிலம், அதோடு தாம் வாழும் நாட்டில் உள்ள அரசாங்க மொழி, வேறு ஏதேனும் விருப்பப்படும் மொழி என பலமொழிகளைச் சிறு பிராயத்திலேயே குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆரம்பகாலத்தில் அமைக்கப்படும் அடிப்படையானது பலமாக இருக்கும் போது தொடர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது வெகு விரைவாக மொழிகளைக் கற்று தங்கள் வாழ்க்கை தேவையையும் திறம்பட அமைத்துக் கொள்ள வழி ஏற்படும்.

ஆங்கிலேய அரசின் கீழ் ஆங்கிலக்கல்வி விரிவாகி வந்த காலகட்டமது. இன்று எப்படி நாம் தமிழ் மொழியை மக்கள் மறந்து போகின்றனர் என்று சொல்லி வருந்துகின்றோமோ, அதே போலவே  உ.வே.சாவின் காலகட்டத்தில் திருவாவடுதுறை மடத்துடன் தொடர்பில் இருந்து அடிக்கடி வந்து செல்லும் வேதநாயகம் பிள்ளையவர்கள் மடத்தில் தொடர்ச்சியாக மிக நல்ல முறையில் தமிழ் வகுப்புக்கள் நடைபெறுவதை நினைத்து மனம் மகிழ்வாராம். இப்படி தமிழ் வளர்க்கும் சேவை செய்யும் தேசிகரைப் புகழ்ந்து பாடல்களும் இயற்றியிருக்கின்றார் வேதநாயகம் பிள்ளை. 66ம் அத்தியாயத்தில் உள்ள ஒரு செய்யுள் உதாரணமாக.

“வானென் றுதவ வருஞ்சுப்ர மண்ய வரோதயனே
தானென்று வெண்ணரன் பாஷையிந் நாட்டிற் றலையெடுக்க
ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை இனிதளிக்க
நானென்று கங்கணங் கட்டிக்கொண் டாயிந்த நானிலத்தே.” 

இப்படி வேதநாயகம் பில்ளையவர்கள் மடத்தைப் பற்றியும் தேசிகரைப் பற்றியும் பாடிய பாடல்கள் பல உண்டு. இவை திருமடத்தில் சுவடி நூல்களாக இப்போதும் இருக்க வேண்டும். மடத்திற்கு அவ்வப்போது வருபவர்கள் வேதநாயகம் பிள்ளையவர்கள் தேசிகர் மேல் இயற்றிய பாடல்களை கேட்க விரும்பினால் உடனே தேசிகர் உ.வே.சாவை அழைத்து இப்பாடல்களைப் பாடிக் காட்டச் சொல்வாராம். இசை ஞானமும் கைவரப்பெற்றிருந்த உ.வே.சா இசையுடன் பாடி பொருளும் உரைப்பாராம்.

விருந்தினர்களுக்கும் வருகையாளர்க்கும் இது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்திருக்கும் அனுபவமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தொடரும்...

Monday, August 11, 2014

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மனம் அதிகமாகவே தயக்கம் காட்டுகின்றது; மாற்றங்களை ஒதுக்கித் தள்ளி, பழகிய விஷயங்களிலும் தோய்ந்து போன பழக்கங்களிலும் தொடரவே மனம் விரும்புகின்றது. 

..ஆயினும்... 
...மாற்றங்களே புதிய சிந்தனைகளுக்கும் புத்துணர்ச்சி தரும் புதுமைகளுக்கும் சாதனைகளுக்கும் வாய்ப்பினை தரும் அட்ஷய பாத்திரங்களாக அமைகின்றன. 

இன்று வாசித்ததில் மனதை தொட்ட வரிகள் கீழே.. பலமுறை வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போது புதிய ஒளியை சிந்தனையில் தரும் வரிகள் இவை.

It is not the strongest of the species that survives, 
nor the most intelligent, but rather the one
most responsive to change.
-Charles Darwin

Wednesday, August 6, 2014

Tamil cultural connections across the world - Archeological Evidenve from Outside Tamil Nadu - Dr.V.Selvakumar

விமானப்பயணத்தின் போது இம்முறை Tamil Cultural Connections Across the World (Up to 1600CE) : Archaeological Evidence from Outside Tamil Nadu   என்ற நூலை வாசித்துக் கொண்டே வந்தேன்.  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல்துறை ஆய்வாளர் டாக்டர்.வி.செல்வகுமார் அவர்கள் எழுதிய நூல் இது.

நூலில் 6 பாகங்கள் உள்ளன.

  • DNA studies and Prehistoric Human Migrations  in South Asia
  • The Indus Valley Civilization
  • Cultures Contemporary to and Post-Dating the Harappans
  • The early Historic period
  • The Early medieval period
  • The Late Medieval Period

என்று படிப்படியாக ஆய்வுத்தகவல்களை வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். இத்துறை தொடர்பான முந்தைய தகவல்களோடு தற்கால ஆய்வு வெளியீடுகளையும் வழங்கி ஒரு தொடர்ச்சியை இன்னூலில் ஆசிரியர் நன்கு காட்டுகின்றார்.

4 பாகங்களை விமானப்பயணத்தின் போதே படித்து முடித்தேன். விரிவான ஆய்வு.. தரமான ஆய்வுத்தரவுகள்
... கோர்வையாக விஷயத்தை வழங்கும் விதம் என நூல் வாசிப்போரை ஆர்வம் குறையாமல் வாசிக்க வைக்கின்றது.

முதல்பாகத்தில் கடந்த 80,000 ஆண்டுகளில் இன்றைய இந்திய, குறிப்பாக தமிழக நிலப்பரப்பு உள்ள பகுதியில் நிகழ்ந்த மக்கள் குடியேற்றம் பற்றிய சில குறைப்பிடத்தக்க தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.


Pre Historic Period என்ற வகையில் Epi Palaeolithic, Lower Palaeolithic, Middle Palaelithic, Mesolithic, Neolithic, Chalcolithic, Iron Age  என்ற கலாச்சார கால மாற்ற வகைகளின் ஆண்டு, மக்கள் நாகரிக வளர்ச்சி, இக்காலகட்டத்தின் முக்கியக் கூறுகளை இப்பகுதி விளக்குகின்றது.

DNA அடிப்படையில் தொடர்ச்சியாக பல ஆய்வுத்தகவல்களை வழங்கி இறுதியாக இக்காலத்தில் தமிழ் பேசப்படும் நிலப்பகுதியில் அறியப்படுகின்ற மக்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியேறியவர்களாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் உள்ளன என முதல்பாகம் நிறைவடைகின்றது.

இரண்டாம் பாகம் முழுமையாக சிந்து வெளி நாகரிக ஆய்வுத்தளங்கள், அடிப்படை தகவல்கள் ஆகியன விரிவாக விளக்கப்படுகின்றன.

அதற்கடுத்த 3ம் 4ம் பாகங்களில் கிமு 5000த்திலிருந்து கிபி 500 வரை தமிழ் நிலப்பரப்பில் இருந்த சமூகங்களின் தன்மைகளாகக் கருதப்படும் கூறுகளும் வரலாற்று காலத்தின் ஆரம்ப கால கட்டமாகிய கிமு 500லிருந்து கிபி 500 வரையிலான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இறுதி 2 பாகங்களை நான் இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. ஆயினும் நூல் சிறந்த ஆய்வுத்திறனுடன் எழுதப்படுள்ளது என்பதை மறுக்க இயலாது. ஒரே ஒரு குறையாக நான் கருதுவது... நூலில் வழங்கப்பட்டுள்ள வரைடங்களின் தெளிவு குறைவு.இதன் தரத்தை மறுபதிப்பில் செம்மை படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

கல்லூரி மாணவர்களுக்கும், anthropology, archeology, sociology ஆகிய துறைகளில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கும் பயன் தரும் நூல் என்பதில் மறுப்பில்லை.

சுபா​

Tuesday, August 5, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 69

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மறைவுக்குப் பிறகு திருவாவடுதுறை மடத்திலேயே தங்கியிருந்து ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் பாடம் கேட்டு வந்ததோடு அங்கு பாடம் ​படித்து வந்த இளையோருக்குத் தமிழ்போதிக்கும் பணியையும் உ.வே.சா  மேற்கொண்டிருந்தார். அவரது தந்தையார் வேங்கடசுப்பையரும் உடன் வந்து தங்கியிருந்தார். வேங்கடசுப்பையர் இக்காலகட்டத்தில் தேசிகருடன் சற்றே நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்தது என்றும் இசையில் மனம் லயிக்கும் தேசிகர் கர்நாடக இசைஞானத்தில் சிறந்தவரான வேங்கட சுப்பையரைப் பாடவைத்து கேட்டு மகிழ்வார் என்ற செய்திகளையும் என் சரிதத்தில் உ.வே.சா பதிகின்றார். 

பிள்ளையவர்களிடம் அவரது இறுதி காலகட்டங்களில் கம்பராமாயணத்தைப் பாடம் கேட்க ஆரம்பித்திருந்தனர் அவரது மாணாக்கர்கள். இதில் உ.வே.சாவும் ஒருவர். அயோத்தியா காண்டம் வரை பாடம் அப்போது சென்றிருந்தது.  ஆனால் பாடம் முற்றுப் பெறா நிலையிலேயே பிள்ளையவர்களின் மறைவு நிகழ்ந்து விட்டது. அதனால் மாணாக்கர்களே இணைந்து பிள்ளையவர்களுடைய ஏட்டுப் பிரதியை வைத்துக் கொண்டு திருமடத்தில் இருந்த ஏனைய ஏட்டுப் படிகளையும் வைத்துக் கொண்டு பாட பேதங்கள் பார்த்து உரைகள் ஆகியனவற்றை வாசித்து தாமே இந்த நூல்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது மகாபாரதம், பாகவதம், திருக்குற்றாலப் புராணம், பலவகையான பிரபந்த நூல்கள் ஆகியனவற்றை படித்தும் விசாரணை செய்தும் தங்கள் கல்வி ஞானத்தை  விரிவாக்கிக் கொண்டு வந்தனர். தம்மோடு சண்பகக் குற்றாலக் கவிராயரும் ஏனைய சிலரும் அப்போது இருந்தார்கள் என்றும்  இவர்கள் யாவரும் பிள்ளையவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தங்கியிருந்தனர் என்ற குறிப்பையும் அறிய முடிகின்றது.

திருவாவடுதுறை ஆதீனப் புலவருடன் - திருவாவடுதுறை மடத்தில் பிள்ளையர்கள் தங்கியிருந்த இல்லத்தின் முன் பகுதியில்

சென்ற ஆண்டு மார்ச் மாதம் நான் திருவாவடுதுறை மடம் சென்றிருந்த போது இந்த இல்லத்தைப் பார்வையிட்டேன். புலவர்கள் குடியிருப்பில் முதலாவதாக அமைந்திருக்கும் பகுதி இது. திருவாவடுதுறை திருமடத்தின் வாசல் பகுதிக்கு எதிர் திசையில் இந்த வீடு அமைந்திருக்கின்றது.  வரிசையான வீடுகள். இப்போது இவ்வீடுகள் மேம்படுத்தப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டு சிறப்பாக காட்சி அளிக்கின்றன. தற்சமயம் இங்கே தம்பிரான்கள் தங்கியிருக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

உ.வே.சா ஒரு ஆசிரியரிடம் மட்டுமே பாடம் கற்க வேண்டும் என்ற நிலையில் மட்டுமல்லாது தனது சுய முயற்சியில் பல நூற்களைத் தொடர்ந்து வாசித்தும் புரிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டும் வந்தவர் என்பது நன்கு புலப்படுகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெற திருவாவடுதுறை மடம் அவருக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம். திருவாவடுதுறை சரசுவதி மகாலில் உள்ள சுவடிக் கட்டுக்கள் இதனை நிரூபிப்பவை. இங்கிருந்த நூல்கள் உ.வே.சா மட்டுமல்ல.. கல்வி ஞானத்தைத் தீவிரமாகக் கறற ஏனைய பல மாணவர்களுக்கும் இந்த நூலகம் கல்வி வழங்கிய அட்ஷய பாத்திரமாகவே பங்காற்றியுள்ளது.  சரசுவதி மகால் நூலகத்தை  நான் நேரில்  பார்த்திருப்பதால் இந்த நூலகத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து இதனை நான் குறிப்பிட முடிகின்றது. 

தேசிகரே தமக்குக் குருவாக அமைய தவம் செய்தவர் உ.வே.சா. 

இலக்கண நூற்களையும் சைவ சித்தாந்த நூற்களையும் தேசிகரிடத்த்தில் பாடங் கேட்க ஆரம்பித்தனர் உ.வே.சாவும் ஏனைய மாணாக்கர்களும். இந்தப் பாடங்களைக் கற்று வரும் வேளையில் தேசிகர் கூறிய விளக்கங்கள் உ.வே.சா வின்  மனதில் நீண்ட காலங்கள் பதிந்திருந்தன போலும். அதனை தெளிவாக வாசகர்களாகிய நாம் புரிந்து அதனை அவர் அனுபவித்தது போல நாமும் அனுபவிக்கும் வகையில்  என் சரிதத்தில் குறிப்பிடுகின்றார். அதில் ஒரு பகுதியில் நன்னூல் விருத்தியுரைக்குத் தாம் விளக்கம் கேட்ட போது தேசிகர் குறிப்பிட்ட விஷயங்களையும் பின்னர் தாம் இந்த நூலை வாசிக்க ஆரம்பித்த விததையும் இப்படி குறிப்பிடுகின்றார்.

நன்னூல் விருத்தியுரையைப் பாடம் கேட்க விரும்பியபோது சுப்பிரமணியதேசிகர் அதன் சம்பந்தமாகச் சில விஷயங்களைச் சொல்லலானார்;

“நன்னூலுக்கு முதலில் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார். பிறகு சிவஞான முனிவர் அதைத் திருத்தியும் புதுக்கியும் விருத்தியுரையை அமைத்தார். அவர் தாம் எழுதிய சிவஞானபோத திராவிட மகாபாஷ்யத்தில் அமைத்துள்ள அரிய வடமொழி தென்மொழிப் பிரயோகங்களை எளிதிற் பிற்காலத்தவர்க்குப் புலப்படுத்த நினைந்து இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூல்களிலும் பிறவற்றிலும் உள்ள முக்கியமான சிலவற்றை அவ்வுரையில் அங்கங்கே சேர்த்தார். சில இடங்களில் சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றை மாற்றியும் எழுதி நிறைவேற்றினார். இலக்கணக் கொத்து முதலிய மூன்றையும் பாடம் கேட்ட பிறகுதான் விருத்தியுரை தெளிவாக விளங்கும்” என்று சொல்லிச் சிவஞான முனிவர் தம் கரத்தாலேயே திருத்திய ஏட்டுப் பிரதி ஒன்றை எடுத்துக் காட்டினார். அப்பிரதியில் அங்கங்கே அடித்தும் கூட்டியும் மாற்றியும் அம்முனிவர் எழுதியவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம்.

தேசிகர் கட்டளைப்படியே இலக்கணக் கொத்து முதலிய மூன்று நூல்களையும் பாடம் கேட்டுப் பிறகு நன்னூல் விருத்தியுரையைக் கேட்கத் தொடங்கினோம். சங்கர நமச்சிவாயர் உரைமாத்திரம் இருந்த ஏடொன்று மடத்தில் இருந்தது. அதையும் வைத்துக் கொண்டு எங்கெங்கே சிவஞான முனிவர் விருத்தியுரையில் திருத்தம் செய்திருக்கிறாரோ அங்கெல்லாம் ‘சி’ என்ற அடையாள மிட்டுக் குறித்துப் படித்தோம்.

நாம் அதிகம் கேள்விப்படாத நூல்களின் பெயர்களையும் இத்தகைய விளக்கங்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. அதே வேளை இப்படி மடங்களில் வழி வழியாக தேசிகர்களாலும் புலவர்களாலும் பாடம் சொல்லப்பட்டு எண்ணற்ற மாணாக்கர்களால்  வாசிக்கப்பட்ட இந்த  ஓலை நூல்கள் என்னவாயின..?  எத்தகைய நிலையில் தற்சமயம் இந்த நூல்கள் உள்ளன..? இவை அனைத்தும் அச்சு வடிவம் பெற்று விட்டனவா..?
இவை இன்று கல்லூரிகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களிலும் பாட போதனையில் இடம் பெறுகின்றனவா..? என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.

தொடரும்..

சுபா

Saturday, August 2, 2014

என் டைரியிலிருந்து ..!

மனிதர்களாகிய நமக்கு ஏனைய மனிதர்களே காட்சிப் பொருளாக இருப்பது என்பது அன்றாட நிகழ்வில் நடப்பது தான். 

ஆயினும் மிருகக்காட்சி சாலைகளில் இன்று நாம் மிருகங்களையும் பறவைகளையும் காண்பது போல ஒரு கால கட்டத்தில் மனிதர்களையும் காட்சிப் பொருளாக வைத்து பொது மக்களுக்குக் காட்டும் வழக்கம் பற்றி சிலர் அறிந்திருக்க மாட்டோம்.

ஐரோப்பாவில் மனிதர்கள் காட்சிப் பொருளாக இருந்தமை பற்றி சில தகவல்கள் http://en.wikipedia.org/wiki/Human_zoo  
கடந்த நூற்றாண்டில் இத்தகைய Human Zoo  பல பெரிய ஐரோப்பிய நகரங்களில் அமைந்திருந்தன. முக்கியமாக ஆப்பிரிக்க கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்கள் இந்த Human Zoo வில் காட்சிப் பொருளாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு காட்டப்பட்ட நிகழ்வும் நடந்தன.



1914 நார்வே தலைநகரான ஓஸ்லோவில் நடைபெற்ற ஓஸ்லோ உலகத் திருவிழாவில் கோங்கோ கிராமம் (The Congo Village)  என்ற தலைப்பிலான ஒரு அம்சம் பலரது கவனத்தை கவர்ந்த ஒன்றாக இருந்தது. கோங்கோ நாட்டிலிருந்து வந்த ஆண் பெண்கள் கலாச்சார உடையுடன் அவர்கள் காங்கோ நாட்டில் வாழும் வகையில் அமைக்கப்பட்ட குடிசைகளில் இருப்பது போல ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்தக் கண்காட்சியின் முக்கிய அட்ராக்‌ஷனாக அமைத்திருந்தனர். இதனைக் காணவே 1.4 மில்லியன் மக்கள் இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தனராம்.

http://izismile.com/2011/02/11/human_zoos_or_negro_villages_13_pics-9.html

ஜெர்மனி இதற்கும் முன்னராகவே இத்தகைய மனித கண்காட்சிகளைச் செய்திருக்கின்றது. கார்ல் ஹாகென்பெர்க் என்பவர் purely natural  என்ற தலைப்புடன் ஒரு கண்காட்சியை 1876ம் ஆண்டில் செய்திருக்கின்றார். இதற்காக சிலரை ஆப்பிரிக்காவின் சூடான் நாட்ட்டிற்கு அனுப்பி அங்கிருந்து சிலரை இக்கண்காட்சிக்காக அழைத்து வந்து மோபைல் கண்காட்சியை சில ஐரோப்பிய நாடுகளில் செய்திருக்கின்றார். இவர் கொண்டு வந்த இந்த சூடானிய நூபிய மக்களை லண்டன் பாரிஸ், பெர்லின் ஆகிய பெரிய நகரங்களில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்து காட்சிப் பொருளாக்கி அதில் நல்ல லாபமும் சம்பாதித்திருக்கின்றார்.

ஜெர்மனியில் 1889ம் ஆண்டில் நடந்த உலக கண்காட்சியில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 400 மக்கள் இவ்வகை காட்சிப் பொருளாக இக்கண்காட்சியில் இருந்தனர். இதனைக் கான 28 மில்லியன் மக்கள் இக்கண்காட்சிக்கு வந்திருந்தனராம். இதன் தொடர்ச்சியாக ப்ரான்ஸில் மார்ஸெயல், பாரிஸ் ஆகிய நகரங்களில் 1906, 1907, 1922,1931 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் கூண்டுக்குள் வைக்கப்பட்ட மனிதர்களைக் காட்சிப் பொருளாக வைத்து கண்காட்சி நடத்தியிருக்கின்றனர். இதனைக் காண குறிப்பாக பாரிஸில் நடந்த கண்காட்சியக் காண 34 மில்லியன் பார்வையாளர்கள் வந்திருந்தனராம்.

வேறொரு மனிதரை காட்சிப் பொருளாக்கி பார்த்து ரசிக்க நம் மனம் தயாராக இருக்கின்றது. அதே வேளை நாமும் பிறருக்குக் காட்சிப் பொருளாகத்தான் இருக்கின்றோம் என்பதை அடிக்கடி மறந்து விடுகின்றோம், இல்லையா ? :-)

சுபா

குறிப்புக்கள்
http://politicalblindspot.com/through-the-1950s-africans-and-native-americans-were-kept-in-zoos-as-exhibits/