மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மறைவுக்குப் பிறகு திருவாவடுதுறை மடத்திலேயே தங்கியிருந்து ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் பாடம் கேட்டு வந்ததோடு அங்கு பாடம் படித்து வந்த இளையோருக்குத் தமிழ்போதிக்கும் பணியையும் உ.வே.சா மேற்கொண்டிருந்தார். அவரது தந்தையார் வேங்கடசுப்பையரும் உடன் வந்து தங்கியிருந்தார். வேங்கடசுப்பையர் இக்காலகட்டத்தில் தேசிகருடன் சற்றே நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்தது என்றும் இசையில் மனம் லயிக்கும் தேசிகர் கர்நாடக இசைஞானத்தில் சிறந்தவரான வேங்கட சுப்பையரைப் பாடவைத்து கேட்டு மகிழ்வார் என்ற செய்திகளையும் என் சரிதத்தில் உ.வே.சா பதிகின்றார்.
பிள்ளையவர்களிடம் அவரது இறுதி காலகட்டங்களில் கம்பராமாயணத்தைப் பாடம் கேட்க ஆரம்பித்திருந்தனர் அவரது மாணாக்கர்கள். இதில் உ.வே.சாவும் ஒருவர். அயோத்தியா காண்டம் வரை பாடம் அப்போது சென்றிருந்தது. ஆனால் பாடம் முற்றுப் பெறா நிலையிலேயே பிள்ளையவர்களின் மறைவு நிகழ்ந்து விட்டது. அதனால் மாணாக்கர்களே இணைந்து பிள்ளையவர்களுடைய ஏட்டுப் பிரதியை வைத்துக் கொண்டு திருமடத்தில் இருந்த ஏனைய ஏட்டுப் படிகளையும் வைத்துக் கொண்டு பாட பேதங்கள் பார்த்து உரைகள் ஆகியனவற்றை வாசித்து தாமே இந்த நூல்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது மகாபாரதம், பாகவதம், திருக்குற்றாலப் புராணம், பலவகையான பிரபந்த நூல்கள் ஆகியனவற்றை படித்தும் விசாரணை செய்தும் தங்கள் கல்வி ஞானத்தை விரிவாக்கிக் கொண்டு வந்தனர். தம்மோடு சண்பகக் குற்றாலக் கவிராயரும் ஏனைய சிலரும் அப்போது இருந்தார்கள் என்றும் இவர்கள் யாவரும் பிள்ளையவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தங்கியிருந்தனர் என்ற குறிப்பையும் அறிய முடிகின்றது.
திருவாவடுதுறை ஆதீனப் புலவருடன் - திருவாவடுதுறை மடத்தில் பிள்ளையர்கள் தங்கியிருந்த இல்லத்தின் முன் பகுதியில்
சென்ற ஆண்டு மார்ச் மாதம் நான் திருவாவடுதுறை மடம் சென்றிருந்த போது இந்த இல்லத்தைப் பார்வையிட்டேன். புலவர்கள் குடியிருப்பில் முதலாவதாக அமைந்திருக்கும் பகுதி இது. திருவாவடுதுறை திருமடத்தின் வாசல் பகுதிக்கு எதிர் திசையில் இந்த வீடு அமைந்திருக்கின்றது. வரிசையான வீடுகள். இப்போது இவ்வீடுகள் மேம்படுத்தப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டு சிறப்பாக காட்சி அளிக்கின்றன. தற்சமயம் இங்கே தம்பிரான்கள் தங்கியிருக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.
உ.வே.சா ஒரு ஆசிரியரிடம் மட்டுமே பாடம் கற்க வேண்டும் என்ற நிலையில் மட்டுமல்லாது தனது சுய முயற்சியில் பல நூற்களைத் தொடர்ந்து வாசித்தும் புரிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டும் வந்தவர் என்பது நன்கு புலப்படுகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெற திருவாவடுதுறை மடம் அவருக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம். திருவாவடுதுறை சரசுவதி மகாலில் உள்ள சுவடிக் கட்டுக்கள் இதனை நிரூபிப்பவை. இங்கிருந்த நூல்கள் உ.வே.சா மட்டுமல்ல.. கல்வி ஞானத்தைத் தீவிரமாகக் கறற ஏனைய பல மாணவர்களுக்கும் இந்த நூலகம் கல்வி வழங்கிய அட்ஷய பாத்திரமாகவே பங்காற்றியுள்ளது. சரசுவதி மகால் நூலகத்தை நான் நேரில் பார்த்திருப்பதால் இந்த நூலகத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து இதனை நான் குறிப்பிட முடிகின்றது.
தேசிகரே தமக்குக் குருவாக அமைய தவம் செய்தவர் உ.வே.சா.
இலக்கண நூற்களையும் சைவ சித்தாந்த நூற்களையும் தேசிகரிடத்த்தில் பாடங் கேட்க ஆரம்பித்தனர் உ.வே.சாவும் ஏனைய மாணாக்கர்களும். இந்தப் பாடங்களைக் கற்று வரும் வேளையில் தேசிகர் கூறிய விளக்கங்கள் உ.வே.சா வின் மனதில் நீண்ட காலங்கள் பதிந்திருந்தன போலும். அதனை தெளிவாக வாசகர்களாகிய நாம் புரிந்து அதனை அவர் அனுபவித்தது போல நாமும் அனுபவிக்கும் வகையில் என் சரிதத்தில் குறிப்பிடுகின்றார். அதில் ஒரு பகுதியில் நன்னூல் விருத்தியுரைக்குத் தாம் விளக்கம் கேட்ட போது தேசிகர் குறிப்பிட்ட விஷயங்களையும் பின்னர் தாம் இந்த நூலை வாசிக்க ஆரம்பித்த விததையும் இப்படி குறிப்பிடுகின்றார்.
நன்னூல் விருத்தியுரையைப் பாடம் கேட்க விரும்பியபோது சுப்பிரமணியதேசிகர் அதன் சம்பந்தமாகச் சில விஷயங்களைச் சொல்லலானார்;
“நன்னூலுக்கு முதலில் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார். பிறகு சிவஞான முனிவர் அதைத் திருத்தியும் புதுக்கியும் விருத்தியுரையை அமைத்தார். அவர் தாம் எழுதிய சிவஞானபோத திராவிட மகாபாஷ்யத்தில் அமைத்துள்ள அரிய வடமொழி தென்மொழிப் பிரயோகங்களை எளிதிற் பிற்காலத்தவர்க்குப் புலப்படுத்த நினைந்து இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூல்களிலும் பிறவற்றிலும் உள்ள முக்கியமான சிலவற்றை அவ்வுரையில் அங்கங்கே சேர்த்தார். சில இடங்களில் சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றை மாற்றியும் எழுதி நிறைவேற்றினார். இலக்கணக் கொத்து முதலிய மூன்றையும் பாடம் கேட்ட பிறகுதான் விருத்தியுரை தெளிவாக விளங்கும்” என்று சொல்லிச் சிவஞான முனிவர் தம் கரத்தாலேயே திருத்திய ஏட்டுப் பிரதி ஒன்றை எடுத்துக் காட்டினார். அப்பிரதியில் அங்கங்கே அடித்தும் கூட்டியும் மாற்றியும் அம்முனிவர் எழுதியவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம்.
தேசிகர் கட்டளைப்படியே இலக்கணக் கொத்து முதலிய மூன்று நூல்களையும் பாடம் கேட்டுப் பிறகு நன்னூல் விருத்தியுரையைக் கேட்கத் தொடங்கினோம். சங்கர நமச்சிவாயர் உரைமாத்திரம் இருந்த ஏடொன்று மடத்தில் இருந்தது. அதையும் வைத்துக் கொண்டு எங்கெங்கே சிவஞான முனிவர் விருத்தியுரையில் திருத்தம் செய்திருக்கிறாரோ அங்கெல்லாம் ‘சி’ என்ற அடையாள மிட்டுக் குறித்துப் படித்தோம்.
நாம் அதிகம் கேள்விப்படாத நூல்களின் பெயர்களையும் இத்தகைய விளக்கங்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. அதே வேளை இப்படி மடங்களில் வழி வழியாக தேசிகர்களாலும் புலவர்களாலும் பாடம் சொல்லப்பட்டு எண்ணற்ற மாணாக்கர்களால் வாசிக்கப்பட்ட இந்த ஓலை நூல்கள் என்னவாயின..? எத்தகைய நிலையில் தற்சமயம் இந்த நூல்கள் உள்ளன..? இவை அனைத்தும் அச்சு வடிவம் பெற்று விட்டனவா..?
இவை இன்று கல்லூரிகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களிலும் பாட போதனையில் இடம் பெறுகின்றனவா..? என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.
தொடரும்..
சுபா
வணக்கம் சுபா !
ReplyDeleteஅருமையான பதிவு தொடரட்டும் பதிவுகள்
உதவட்டும் தமிழ் அன்னைக்கு என்றும் எப்போதும்
வாழ்க வளமுடன் !
'ஆடிப்பெருக்கு' அன்று ஆற்றிலே விட்ட ஓலைச் சுவடிகளைக் கைப்பற்றி, அதில் சிலப்பதிகார செய்யுள்கள் இருப்பதைக் கண்டு 'கண்ணீர்' விட்ட 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா பற்றிய பதிவுகளைக் காணும்போது மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது....
ReplyDelete