மனிதர்களாகிய நமக்கு ஏனைய மனிதர்களே காட்சிப் பொருளாக இருப்பது என்பது அன்றாட நிகழ்வில் நடப்பது தான்.
ஆயினும் மிருகக்காட்சி சாலைகளில் இன்று நாம் மிருகங்களையும் பறவைகளையும் காண்பது போல ஒரு கால கட்டத்தில் மனிதர்களையும் காட்சிப் பொருளாக வைத்து பொது மக்களுக்குக் காட்டும் வழக்கம் பற்றி சிலர் அறிந்திருக்க மாட்டோம்.
ஐரோப்பாவில் மனிதர்கள் காட்சிப் பொருளாக இருந்தமை பற்றி சில தகவல்கள் http://en.wikipedia.org/wiki/ Human_zoo
கடந்த நூற்றாண்டில் இத்தகைய Human Zoo பல பெரிய ஐரோப்பிய நகரங்களில் அமைந்திருந்தன. முக்கியமாக ஆப்பிரிக்க கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்கள் இந்த Human Zoo வில் காட்சிப் பொருளாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு காட்டப்பட்ட நிகழ்வும் நடந்தன.
1914 நார்வே தலைநகரான ஓஸ்லோவில் நடைபெற்ற ஓஸ்லோ உலகத் திருவிழாவில் கோங்கோ கிராமம் (The Congo Village) என்ற தலைப்பிலான ஒரு அம்சம் பலரது கவனத்தை கவர்ந்த ஒன்றாக இருந்தது. கோங்கோ நாட்டிலிருந்து வந்த ஆண் பெண்கள் கலாச்சார உடையுடன் அவர்கள் காங்கோ நாட்டில் வாழும் வகையில் அமைக்கப்பட்ட குடிசைகளில் இருப்பது போல ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்தக் கண்காட்சியின் முக்கிய அட்ராக்ஷனாக அமைத்திருந்தனர். இதனைக் காணவே 1.4 மில்லியன் மக்கள் இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தனராம்.
ஜெர்மனி இதற்கும் முன்னராகவே இத்தகைய மனித கண்காட்சிகளைச் செய்திருக்கின்றது. கார்ல் ஹாகென்பெர்க் என்பவர் purely natural என்ற தலைப்புடன் ஒரு கண்காட்சியை 1876ம் ஆண்டில் செய்திருக்கின்றார். இதற்காக சிலரை ஆப்பிரிக்காவின் சூடான் நாட்ட்டிற்கு அனுப்பி அங்கிருந்து சிலரை இக்கண்காட்சிக்காக அழைத்து வந்து மோபைல் கண்காட்சியை சில ஐரோப்பிய நாடுகளில் செய்திருக்கின்றார். இவர் கொண்டு வந்த இந்த சூடானிய நூபிய மக்களை லண்டன் பாரிஸ், பெர்லின் ஆகிய பெரிய நகரங்களில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்து காட்சிப் பொருளாக்கி அதில் நல்ல லாபமும் சம்பாதித்திருக்கின்றார்.
ஜெர்மனியில் 1889ம் ஆண்டில் நடந்த உலக கண்காட்சியில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 400 மக்கள் இவ்வகை காட்சிப் பொருளாக இக்கண்காட்சியில் இருந்தனர். இதனைக் கான 28 மில்லியன் மக்கள் இக்கண்காட்சிக்கு வந்திருந்தனராம். இதன் தொடர்ச்சியாக ப்ரான்ஸில் மார்ஸெயல், பாரிஸ் ஆகிய நகரங்களில் 1906, 1907, 1922,1931 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் கூண்டுக்குள் வைக்கப்பட்ட மனிதர்களைக் காட்சிப் பொருளாக வைத்து கண்காட்சி நடத்தியிருக்கின்றனர். இதனைக் காண குறிப்பாக பாரிஸில் நடந்த கண்காட்சியக் காண 34 மில்லியன் பார்வையாளர்கள் வந்திருந்தனராம்.
வேறொரு மனிதரை காட்சிப் பொருளாக்கி பார்த்து ரசிக்க நம் மனம் தயாராக இருக்கின்றது. அதே வேளை நாமும் பிறருக்குக் காட்சிப் பொருளாகத்தான் இருக்கின்றோம் என்பதை அடிக்கடி மறந்து விடுகின்றோம், இல்லையா ? :-)
சுபா
குறிப்புக்கள்
http://politicalblindspot.com/through-the-1950s-africans-and-native-americans-were-kept-in-zoos-as-exhibits/
No comments:
Post a Comment