Monday, October 21, 2019

மின் தமிழ் மேடை அக்டோபர் - 2019 - தலையங்கம்

[நேற்று வெளியிடப்பட்ட மின் தமிழ் மேடை அக்டோபர் - 2019] காலாண்டிதழுக்கான எனது தலையங்கம்]

*தமிழர் பண்பாட்டின் வரலாற்றுத் தேடல்கள்*

தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் தேடலில் ஆதாரப்பூர்வமான சான்றுகள் எவ்வளவு முக்கியமோ அதே போல, வரலாற்றுத் தகவல்களைச் சரியாக வாசித்து அறிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வதும் அவசியம். தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக இவ்வாண்டு தொடக்கம் கல்வெட்டு பயிற்சிகளைத் தொடங்கியிருக்கின்றோம். தமிழி எழுத்துக்களை அறிதல், வாசித்தல், எழுதுதல் என மூன்று நிலைகளை மையப்படுத்தி இரு நாள் நிகழ்ச்சியாகக் கல்வெட்டு பயிற்சிப்பட்டறை தமிழகத்தின் சென்னையில் செப்டம்பர் மாதம் 28-29 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. நீண்ட கால களப்பணி அனுபவம் கொண்ட கல்வெட்டியல் அறிஞர்கள் டாக்டர்.பத்மாவதி, டாக்டர்.மார்க்சிய காந்தி ஆகிய இருவரது வழிகாட்டுதலில் 140 மாணவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது கனடா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் வந்து இப்பயிற்சியில் பதிந்து பயிற்சி பெற்றனர்.

கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட அகழாய்வின் இடைக்கால அறிக்கை நமக்கு மிக முக்கியமானதொரு வரலாற்றுத் திருப்பத்தை அளித்திருக்கின்றது. ஒரு பானை ஓட்டில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்து, தமிழ் எழுத்தின் பழமையை கிமு.6ம் நூற்றாண்டுக்கு நகர்த்திய செய்தியானது இதுகாறும் தமிழி எழுத்து அசோகன் பிராமி எழுத்துருவிலிருந்து தான் உருவாகியது என்ற கருதுகோளைத் தகர்த்திருக்கின்றது. இச்செய்தி மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற வேண்டியது அவசியம் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைகின்றது. இதன் தொடர்ச்சியாக நீண்டகாலம் வெளியிடப்படாமல் முடங்கிக்கிடக்கும் ஆதிச்சநல்லூர் 2004-2005ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியுடன் இணைந்த வகையில் ஒரு நாள் கருத்தரங்கம் அக்டோபர் மாதம் 4ம் தேதி நடைபெற்றது. தொல்லியல் அகழாய்வு பற்றிய நூறு கட்டுரைகள் அடங்கிய ஆய்வு மலர் இதனையொட்டி வெளியிடப்பட்டது.

தூத்துக்குடியும் நெல்லை மாநகரமும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரங்கள். நீண்ட கால கடல் வழி போக்குவரத்து உலகின் பல பகுதிகளில் உள்ள நாடுகளுடன் இப்பகுதி மக்கள் கொண்டிருந்த வணிகத்தொடர்பையும் அவை ஏற்படுத்திய சமூக மற்றும் மானுடவியல் பார்வையை அறிந்து கொள்ளும் வகையிலும் பாண்டியர் மற்றும் சேர சோழர்களின் கட்டுமான கலையை ஆராயும் வகையிலும் இரு நாள் மரபுப் பயணத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 5,6 ஆகிய நாட்களில் நிகழ்த்தியது. இதில் கொற்கை, ஆதிச்சநல்லூர், புன்னைக்காயல், சாயர்புரம், மன்னார்கோயில், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்குப் பயணத்தில் கலந்து கொண்டோர் சென்றிருந்தனர். இவர்களுக்கு வரலாற்றுக் குறிப்புகளை கல்வெட்டியலாளர் டாக்டர்.பத்மாவதி, டாக்டர்.சசிகலா ஆகியோர் வழங்கினர்.

தமிழ் நிலத்திலிருந்து இலங்கைத் தீவு புவியியல் அடிப்படையில் பிரிந்திருந்தாலும், சமூகவியல் அடிப்படையிலும் மொழியின் அடிப்படியிலும் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பினை நாம் பிரிக்க இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் குழுவினர் ஒரு வாரப் பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்தனர். இப்பயணத்தில் மன்னார் தீவு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மாத்தளை, ரத்னபுரி, கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் களப்பணிகள் நிகழ்ந்தன. இப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புகள், மக்களின் வாழ்வியல் நிலை, தற்கால சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வுப் பதிவுகள் செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் பொதுவாக ஈழத்தமிழர்கள் என்ற நில எல்லைக்குள்ளேயே நின்று விடுவதைக் காண்கின்றோம். சிங்கள மொழி கிபி.5ம் 6ம் நூற்றாண்டு வாக்கில் முழுமையாக உருவாக்கம் பெறுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்களின் தமிழ் மொழி சார்ந்த இலங்கைச் சுவடுகள் தமிழின் தொன்மையைச் சான்று பகர்கின்றன. அண்மைய யாழ் பல்கலைக்கழகத்தின் கட்டுக்கரை அகழாய்வுச் செய்திகள், மற்றும் அனுராதபுரத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துக்கள் ஆகியவை இலங்கையில் தமிழின் தொன்மையை வலியுறுத்தும் முக்கிய சான்றுகளாகின்றன.

இன்றைய நிலையில், இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களின் சமூக, வரலாற்று, மொழி, சமயம் சார்ந்த ஆய்வுகளை ஒரு பொதுமையான அடிப்படையை வைத்து ஆராய்வது பலனளிக்காது.

-ஈழத்தமிழர்கள்
-மலையகத் தமிழர்கள்
-நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் வாழும் தமிழை மறந்த சிங்களம் மட்டுமே பேசும் பூர்வகுடி இலங்கை தமிழ்மக்கள்
-மன்னார், புங்குடுதீவு போன்ற தீவுகளில் வாழும் தீவு தமிழ் மக்கள்
-இலங்கைக்கு நெடுந்தூரத்தில் இருக்கும் நெடுந்தீவு மக்கள்
-கிழக்கு மாகாண மக்கள்
-கொழும்பு தலைநகரில் வாழும் தமிழ மக்கள்

..என நில அடிப்படையில் வேறுபட்டிருக்கும் தமிழ் மக்களின் சமூக, வரலாற்று, தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளையும் செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியமாகின்றது. தமிழின் தொன்மையை, இலங்கையில் தமிழர் வரலாற்றின் பன்முகத்தன்மையைப் பதிந்து ஆவணப்படுத்தி , மக்களின் சூழலுக்கேற்ற தமிழ் மொழி வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் மேம்பாட்டினைக் கொண்டு வர வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்த வகையில் மிக அமைதியாக ஆனால் மிக உறுதியாகக் கடந்த 15 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து செயல்பட்டு வரும் நூலகம் அமைப்பு தொடர்ந்து மின்னாக்கப்பணி களைச் செய்து வருகின்றது. இதன் சேகரத்தில் உள்ள அரிய ஆவணங்கள் மிகச் சிறந்த களஞ்சியமாக உருவாகி வளர்ந்துள்ளன. இதே போல மலையக மக்களின் வாழ்வு, தீவுப்பகுதி மக்களின் வாழ்வு, இலங்கையில் டச்சு, போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர் கால வரலாறும் அவை ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான ஆய்வுகளும் பெருக வேண்டியதும் அவை பற்றிய கலந்துரையாடல்களும் அவசியமாகின்றது.

இச்சூழலில் உலகத்தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி ஒன்றினைப் பகிர்வதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். சிங்களவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையின் ஊவா மாகாணத்தில் தமிழ் வென்றுள்ளது.

மலையகத்தின் ஊவா மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகள் முந்தைய சிங்கள மொழிப் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழில் பெயர் சூட்டப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை நிகழ்ந்திருக்கின்றது. ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்களின் உறுதியான முயற்சியும், தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பும் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. திருவள்ளுவர், மலைமகள், கம்பன், பெரியார், பாரதிதாசன், பாரதியார், கலைவாணி, பாரி, புகழேந்தி, குறிஞ்சி எனப் புதிய அழகிய பெயர்கள் 140 பள்ளிகளுக்குச் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருந்தது முடிவுக்குக் கொண்டு வந்ததில் தமிழ் மரபு அறக்கட்டளை, மாகாணத்தின் தமிழ்க்கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான், மற்றும் இம்மாநில தமிழ் மக்களோடும் சேர்ந்து பெருமை கொள்கிறது.

உலகளாவிய அளவில் தமிழின் வளமையையும் தொன்மையையும் பறைசாற்றும் பல பணிகள் தொடர்ந்து செயலாக்கம் பெறவேண்டிய கால சூழலில் நாம் இருக்கின்றோம். எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் தமிழ் மரபு அறக்கட்டளை அவற்றை எதிர்கொண்டு தமிழுக்காற்றும் தொண்டினைத் தொடர்வோம். ஆக்ககரமான, தமிழுக்கான மேம்பாட்டுச் செயல்பாடுகளில் நம் கவனத்தைச் செலுத்துவோம். தமிழின் பெருமையை நிலைநாட்டும் நம் பணியைத் தொடர்வோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு

Wednesday, July 31, 2019

தமிழ்ப்பேராய்வு ஆய்விதழ்/ Journal of Tamil Peraivu Vol. 8 No. 1 (2019)

 பண்டைய ரோமானிய அரசுடனான தமிழக வணிகத் தொடர்புகள் பற்றிய ரோமானிய ஆவணங்கள் கூறும் செய்திகள் (Roman Trade Links with the Ancient Tamil Countries-Roman Documents) 


https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/19205

முழு கட்டுரையை வாசிக்க: 

https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/19205/10344

Thursday, July 18, 2019

மலேசிய டத்தோ குமரன்

மலேசியாவின் டத்தோ குமரன் அவர்கள் எனக்கு நீண்ட கால தொடர்பில் இருப்பவர். எனது அம்மா சமூக நல நடவடிக்கைகளில் மலேசியாவில் ஈடுபட்டிருந்த சமயம் அம்மாவுக்கு உதவும் வகையில் நான் செல்லும் போது அறிமுகமான VIPக்களில் இவரும் ஒருவர். தமிழாசிரியராக, பின்னர் தலைமை ஆசிரியராக அதன் பின்னர் அரசியல் ஈடுபாடு என வளர்ந்து மலேசிய அரசில் துணை அமைச்சராக தொடர்ச்சியாக சேவையில் இருந்தார். இன்று வரை தொடரும் அவரது தமிழ்ப்பணிகள் பாராட்டுதலுக்குறியவை. பலமுறை வீட்டிற்கு வந்திருக்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக நான் மலேசியா செல்லும் போது எனது உரை நிகழ்ச்சிக்களில் அவர் தலைமை ஏற்கும் பெருமை தரும் நிகழ்வுகள் நடக்கும் போது மனம் பெருமை அடைவதுண்டு. அண்மையில் 10ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்தவர் எனது ஆய்வுக் கட்டுரை படைப்பை முழுமையாக கேட்டு பின்னர் கைகளைப் பிடித்துக் கொண்டு பெருமிதத்துடன் பாராட்டினார். என் பெற்றோர் நேரில் இருந்து வாழ்த்துவது போல உணர்ந்தேன். மகிழ்ச்சியான தருணம்.




Thursday, July 11, 2019

தோழர் முகிலன்

தோழர் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார் என்ற செய்தி ஆறுதல் அளிக்கின்றது. ஆயினும் அதனைத் தொடர்ந்து வருகின்ற பல்வேறு செய்திகள், குறிப்பாக அவர் காவல் வாகனத்தில் ஏற்றப்படும் காட்சியும் அவர்மேல் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வைத்துள்ள செய்தி ஆகியவை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

தோழர் முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர். சூழலியல் மாசு அடைவதைத் தடுக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன. அதுமட்டுமன்றி அநியாயமாக சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களுக்காக அவர் குரல் எழுப்பினார். இது இப்படி இருக்க திடீரென்று அவர் மேல் பாலியல் குற்றச்சாட்டு என்பது ஏன் எழுகின்றது என்பது கேள்வி எழுப்புகின்றது.

பொது சமூகவெளியில் சேவையாற்றும் பலருக்கும் ஆண்- பெண் உறவு பற்றிய புரிதல் நிச்சயம் இருக்கும். பொதுவாகவே ஒரு பாலியல் குற்றச்சாட்டு என வரும் போது சமூகம் பெண்ணையே குறை சொல்லும் போக்கு அதிகம் இருக்கின்றது. ஆயினும் இன்றைய சூழலில் ஆண்களும் பெருமளவில் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுவதைக் காண்கின்றோம்.

திருமணமான ஆண்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளும் பெண்களும் இருக்கின்றனர் என்பதை நாம் மறுத்து விடமுடியாது. நெருக்கமான தொடர்பினால் ஏற்படும் மன உளைச்சளோ ஏமாற்றமோ.. அதற்கு இருவருமே தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆணிடம் மட்டுமே பொறுப்பை தள்ளி விட்டு தப்பிப்பது என்பது போலித்தனம்; ஏமாற்றுத்தனம். ஆயினும் வலியச் சென்று பொய் வார்த்தைகள் கூறி பெண்களின் இளகிய மணதை ஏமாற்றி வஞ்சிக்கும் ஆண்களும் அதிகம் இருக்கவே செய்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

தோழர் முகிலன் விசயத்தை எடுத்துக் கொண்டால், அவர் சமூக நலனிற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர் என்பதில் மாற்றம் ஏதும் கிடையாது. ஆக அவரது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும் கொலைக்கு எதிரான குரலுமே அதிகம் பேசப்பட வேண்டும். அவர் மேல் சாட்டப்பட்டுள்ள பாலியல் பிரச்சனையல்ல.

அப்படியே தோழர் முகிலனே குற்றம்சாட்டும் பெண்ணை ஏமாற்றியிருந்தாலும் அது தோழர் முகிலன், அந்தப் பெண் மற்றும் முகிலனின் மனைவி ஆகிய மூவருக்கும் இடையிலான ஒரு விசயம். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேடுமென்றால் அதன் படி அதனை செய்ய வேண்டுமே தவிர இந்தப் பாலியல் விவகாரத்தை வைத்துக் கொண்டு தோழர் முகிலனின் அளப்பறிய சமூக நலன் சார்ந்த பணியை ஒதுக்கி விட்டு அவரை குறை கூறிக்கொண்டிருப்பது சமூக நீதியன்று.

மக்களுக்காகப் பணியாற்றுவோர் மிகச் சிலரே. அத்தகையோருடன் ஆதரவாக இருந்து சமூக நலனுக்காக ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுமே தவிர குறை கூறி அவர்களை புண்படுத்த வேண்டாம் !

இப்படிச் செய்தாராமே .. அப்படி பட்டவரா இவர்...... என்றெல்லாம் விரலை நீட்டி பிறரை குறை சொல்லும் முன் நாம் எப்படி இருக்கின்றோம் என குறை கூறும் ஒவ்வொருவரும் யோசித்து நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் நன்று!

-சுபா

Saturday, May 18, 2019

மே 18

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட உலகத் துயர நாள் மே 18. ஆண்டுகள் சில கடந்து விட்டன. ஆனாலும் இந்த நாள் உலகத் தமிழ் மக்களுக்கு அளித்திருக்கும் வலி மறக்க முடியாத ஒன்று.

கடந்த ஆண்டு நான் இலங்கை பயணம் சென்றிருந்தபோது யாழ்பாணத்தின் சில பகுதிகளில் பயணித்து பார்வையிட்டேன். மிகப் பெரிய அளவில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு வாழ்க்கை மேம்பாடு - அடிப்படை கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைத்தன்மை ஆகியவை இன்று தேவைப்படுவது கண்கூடு.

பலருக்கு இது காலண்டரில் ஒரு நாள். பலருக்கு இது தன் சொந்தங்களை இழந்து பரிதவித்து நின்ற நாள். அரசியல் செய்வோருக்கோ ஒரு கருத்தியல் அளவில் ஒரு சம்பவம். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் நம் சொந்தங்கள் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது வரலாற்றில் ஒரு சோக தினம்.

இலங்கை தமிழ் மக்கள் நலனுக்காகப் போராடுகின்றோம் என்ற பெயரில் தன் சுயநலத்தை மட்டும் பார்த்துக் கொண்டு தன் சொந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்ட பல தமிழர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்றும் கூட தமிழ்ச்சொந்தங்களை ஏனைய இனத்தவர்களைவிட தமிழர்களே பலிகடாவாக்கும் செய்திகளும் அடிக்கடி பார்க்கின்றோம்.

மே 18 - இலங்கையில் போரில் மாண்டவர்களை நினைத்து இன்றைய நாளில் மலர் தூவி விளக்கேற்றிச் செல்வது மட்டுமன்றி, இன்று உயிருடன் வாழ்கின்ற, இலங்கைத் தமிழ் மண்ணில் துன்பப்பட்டு வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நலனை ஏற்படுத்தும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எழவேண்டிய நாள். அந்த வகையில் போரினால் பாதிக்கப்பட்ட எம் தமிழ்ச்சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துகளும்!
-சுபா

Friday, May 17, 2019

விதவை திருமண் சட்டம்

நண்பர் மணி மணிவண்ணன் அனுப்பியிருந்த ஒரு கட்டுரையின் தொடர்பில் இந்தப் பதிவு. https://www.livehistoryindia.com/snapshort-histories/2017/07/26/marking-a-milestone---the-hindu-remarriage-act

26.ஜூலை1856 - இந்து விதவை மறுமண சட்டம் (Hindu Widows Remarriage Act) கொண்டுவரப்பட்ட நாள். இதற்கு பின்னனியில் இருந்து இச்சட்டம் வரக் காரணமாயிருந்து செயல்படுத்தியவர் கல்வியாளர் ஈஷ்வர் சந்த்ர பாண்டியோபத்யாய (வித்யாசாகர்). 19ம் நூற்றாண்டு கால பெண்களின் நிலை, அதிலும் விதவைப் பெண்களின் நிலை துயரமானது. சொத்துரிமை இல்லாத, சமூகத்திலும் ஒதுக்கப்பட்ட நிலையில் பெண்களின் முழு உலகமும் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடைந்த நிலை. அதிலும் கணவனை இழந்து விட்டால் அது நரக வாழ்க்கை தான்.

கல்வியாளர் வித்யாசாகர் தனது வாழ்க்கைச் சூழலில் கண்ட பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு விதவையானவர்களும் மறுமணம் செய்து கொண்டு வாழ சட்டம் வழிவகுக்க வேண்டும் எனப் போராடினார்.

1855ம் ஆண்டு அரசுக்கு விதவைப் பெண்களின் மறுமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கச்செய்யும் சட்டத்தை உருவாக்கக் கோரிக்கை வைத்தார். அப்போதைய மன்னர் மாத்தாப்ஜான் பகதூரும் (1832-1879) இக்கோரிக்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.

ஆனால் இதனை எதிர்த்து 30,000 கையெழுத்துக்களுடன் எதிர் பெட்டிஷன் அனுப்பியிருக்கின்றார்கள். விதவையானவர்கள் அப்படியே வீட்டுக்குள் முடங்கி இருந்து சாகவேண்டும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் எல்லா எதிர்ப்புக்களையும் கடந்து இந்த கோரிக்கை சட்டமாகியது.

விதவைத் திருமணத்தைச் சட்டமாக்கினாலும் கூட சமூகத்தில் கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது ஒரு பாவச் செயலாகவே கருதப்பட்டது. பல ஆண்டுகள் பல போராட்டங்களுக்குப் பின்னர் இன்று சமூகத்தில் பெண்கள் மறுமணம் என்பது சற்றே இயல்பான ஒன்றாக இன்று மாற்றம் கண்டுள்ளது.

தமிழ்ச்சூழலில் பெரியாரின் முயற்சிகள் சமூகத்தில் பெண்களின் சுயமரியாதை, வாழ்க்கை மேம்பாடு, விதவைப் பெண் திருமணம் ஆகியவற்றில் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் அறிவோம்.

இந்தியச் சூழலில் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை நினைவு கூர்வதும் அதனை அறிந்திருப்பதும் தேவையே.
-சுபா

Tuesday, May 7, 2019

அட்சய திருதியை

சென்ற ஆண்டு ஏப்ரல் 18 நான் வெளியிட்ட பதிவு -

அட்சய திருதியை என்பதன் பொருள் அறியாமல் நகைக்கடைகளைத் தேடி ஓடும் நண்பர்கள் கொஞ்சம் வாசித்துப் பார்க்க இக்கட்டுரையைப் பகிர்கிறேன். நகை வாங்க விரும்புபவர்கள் .. ஆசைப்பட்டோம், தேவை இருக்கின்றது,.. என்றால் வாங்குங்கள்.

எதற்காக இல்லாத ஒரு பொய்யான கதையை வணிக உத்திக்காக வளர்த்து, ஒரு பொய்யை உண்மையாக்கும் முயற்சி ??

நம் மக்களும் எதையும் வாசிப்பதுமில்லை.. காரணம் கேட்பதுமில்லை..
தங்க வைர நகைகள், காசு.. என்று சொன்னால் ஆசைப்பட மட்டும் அறிந்திருக்கின்றனர். காரணம் கேட்க விரும்புவதில்லை. பண்டிகைகள், சடங்குகளின் பொருளறிந்து ஒவ்வொரு செயலையும் செய்வோமே!!
-சுபா

//அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து “அட்சயதிருதியை” கொண்டாடுங்கள்.//

Saturday, May 4, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 7

*பகுதி 7 - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்



இராஜசிங்கனின் ஆட்சிக்காலத்தில் சூரிய வம்சத்தைச் சார்ந்த ஒரு இளவரசன் கொழும்புக்கு வந்தான் என சூளவம்சம் குறிப்பிடுகிறது. அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்ற குறிப்பு ஏதுமில்லை. அவன் சூரியவம்சத்தைச் சார்ந்தவன் என்பது மாத்திரம் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அவன் கொழும்பில் தங்காமல் இந்தியாவின் கோவாவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து விட்டு பின் மீண்டும் இலங்கைக்கு வந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது. இராஜசிங்கன் இறந்ததும் இந்த இளவரசன் ஸ்ரீ வர்த்தனா நகரத்தில் விமலதர்மசூரியன் என்ற அரச பெயருடன் அரியணை ஏறினான். கண்டி நகரைச் சுற்றி பெரிய உயரமான மதில்களை அமைத்து 18 கோபுரங்களையும் அமைத்து பெரிய அரண்மனை அமைத்து அதில் அவன் வசித்து வந்தான். அதுமட்டுமன்றி லபுஜகம (டெலிகம) என்ற கிராமத்தில் இருந்த புனித தந்ததாதுவைத் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்து தனது அரண்மனைக்குப்பக்கத்தில் ஒரு கோயிலை அமைத்து அங்கே புனித தந்ததாதுவை வைத்து பாதுகாத்தான் என சூளவம்சம் சொல்கிறது..

அவனுக்கு பின்னர் செனரத்ன என்பவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்த சமயத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர். சூளவம்சம் சரியாக எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. போர்த்துக்கீசியர்கள் பற்றி சொல்லும்போது சக்தி வாய்ந்த சில வர்த்தகர்கள் என்று குறிப்பிடுகின்றது. இந்த பரங்கியர்கள் குரூரமான மனம் கொண்டவர்கள் என்றும், சிங்கள மக்களுக்குத் தொல்லை தருபவர்கள் என்றும், பெண்களின் கற்பை சூறையாடுபவர்கள் என்றும், சிங்கள மக்களின் வீடுகளைக் கொள்ளையிடுபவர்களாகவும், கிராமங்களை அழிப்பவர்களாகவும் விளங்கியதாக சூளவம்சம் கூறுகின்றது. இவர்கள் சில பாதுகாப்பான கோட்டைகளை ஆங்காங்கு அமைத்துக் கொண்டனர் என்ற செய்தியும் இடம் பெறுகின்றது.

செனரத்ன பரங்கியர் நாசமாக்கிவிடாதவாறு புனித தந்ததாதுவைக் காடுகளில் மிக பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவன் தனக்கும் தனது தமையனின் மகன்களுக்கும் இலங்கை ராஜ்யத்தை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று மூன்று பனை ஓலைகளில் எழுதி தந்த பேழைக்குள் வைத்தான். மலைநாட்டின் பொறுப்பை தன் மகனுக்கு அளித்து இலங்கையின் அரசனாக முடி சூட்டி விட்டு இறந்தான்.

அவனுக்குப் பின்னர் மூன்று இளவரசர்களும் பரங்கியர்களுக்கு எதிராக போரிட்டனர். மூன்றாவது இளவரசனான ராஜசிங்கன் இலங்கை முழுவதற்கும் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இராஜசிங்கனை கொல்வதற்குப் பல முயற்சிகள் நடைபெற்றன. போர்த்துகீசியர்களை எதிர்த்து தொடர்ச்சியாக ராஜசிங்கன் போர் நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அந்தச் சமயத்தில் கரையோரத்தில் டச்சுக்காரர்கள் வந்து தங்கி இருப்பதை அவன் கேள்விப்பட்டான். தனது மந்திரிகள் இருவரை டச்சுக்காரர்களிடம் தூது அனுப்பி ஏராளமான கப்பலுடன் தன் நாட்டிற்கு வந்து தன்னைப் பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டான். போர்த்துகீசியர்களை டச்சுக்காரர்கள் எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். இலங்கையை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை ஒல்லாந்தரிடம், அதாவது டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தான். பின்னர் மதுரையில் இருந்து இளவரசி ஒருத்தியை வரவழைத்து அவளை பட்டத்து ராணியாக ஆக்கிக் கொண்டான். அதன் பின்னர் 52 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

அவனுக்குப் பின்னர் ராஜசிங்கனின் மகனான விமலதர்மசூரியன் ஆட்சியைக் கையில் எடுத்தான். அவனும் மதுரையில் இருந்து ஒரு அரசகுமாரியை வரவழைத்து திருமணம் செய்து கொண்டு பட்டத்துராணி ஆக்கிக் கொண்டான். இவன் மூன்று அடுக்கில் ஒரு கோயிலைக் கட்டி (தலதா மாளிகை) அதில் தந்த தாதுவைப் பிரதிஷ்டை செய்தான். ஆண்டுதோறும் புனித தந்த தாதுவிற்கு விழா எடுத்தான். பிக்குகளைப் பராமரித்தான். இவன் 22 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் தலதா மாளிகையே இன்று கண்டியில் நாம் காணும் புனித மாளிகை. இங்குதான் கௌதம புத்தரின் பல் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஆக, இது கட்டப்பட்ட காலத்தை நோக்கும் போது அனேகமாக இந்த மன்னனின் ஆட்சி கி.பி 16ம் நூற்றாண்டு என உறுதியாகக் கூறலாம்.

அதற்குப் பின்னர் அவனது மகனான வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் ஆட்சிபீடம் ஏறினான். அவனும் மதுரையிலிருந்து இளவரசிகளை வரவேற்று மணந்து கொண்டான். இவனும் பௌத்த நெறிகளைப் போற்றி பாதுகாத்தான். தங்க தாது இருந்த மாளிகையின் சுவர்களில் 32 ஜாதக கதைகளையும் ஓவியமாக வரைய வைத்தான்.

விமலதர்ம சூரியனுக்குப் பின்னர் அவனது இளைய சகோதரன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் அரசனானான். அவனும் மதுரையிலிருந்து அரச குலப் பெண் ஒருத்தியை அழைத்து வந்து தனது பட்டத்து ராணியாக ஆக்கிக்கொண்டான். இவனும் பௌத்த சமயத்தைச் சிறப்புடன் பேணிவந்தான். இவன் மனைவியைப் பற்றி சொல்லும்போது ”பிறப்பிலிருந்து பொய்யான சமயத்தை பின்பற்றி வந்த மகாராணியும் நேர்மையான சமயத்திற்கு மாறினார்” என்று குறிப்பிடுகிறது. அதாவது, அனேகமாக சைவ சமயத்தில் மகாராணி இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து பௌத்த சமயத்திற்கு மாறினார் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

அந்தச் சமயத்தில் பரங்கியர்கள், அதாவது போர்த்துக்கீசியர்கள், இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி அவர்கள் பணத்தாசைக் காட்டி பொதுமக்களைத் தங்களது சமயத்திற்கு மாற்றினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதாவது, போர்த்துகீசியர்கள் கத்தோலிக்க கிறித்தவ சமயத்திற்கு இலங்கை மக்களை மாற்றினார்கள் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறந்த பிறகு அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் அரசனானான்.. அந்தக் காலகட்டத்தில் டச்சுக்காரர்களும் தங்களது கிருத்துவ மதத்தை இலங்கை மக்களிடையே பரப்பும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிகின்றது. அதனால் டச்சுக்காரர்களை அடக்கி வைக்க வேண்டுமென்று அவன் முயற்சி மேற்கொண்டான். அவனது படையினர் டச்சுக்காரர்களின் கோட்டைகளையும் வீடுகளையும் கைப்பற்றி அழித்தனர். ஆனால் டச்சுக்காரர்கள் இதற்கு சளைக்காமல் தமது போர் வீரர்களுடன் மலாய்க்காரர்களைச் சேர்த்துக்கொண்டு மன்னனின் படைகளைத் தாக்கினர். மன்னன் தன் மனைவி, இளவரசர்கள், ஏராளமான சொத்துக்கள் ஆகியவற்றுடன் காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்தான். பிறகு டச்சுக்காரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு மீண்டும் ஆட்சியை நடத்தினான். தந்த தாதுவைக் கோயிலில் வைத்து பௌத்த சமயத்தை பாதுகாத்தான். ஒல்லாந்தர் மன்னனுடன் அவன் சமாதானம் செய்து கொண்டான்.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் மரணத்திற்குப் பிறகு அவனது இளைய சகோதரனான ராஜாதி ராஜ சிங்கன் அரசனானான். அவன் காலத்தில் தாய்லாந்திலிருந்து உபாலி என்ற தேரரின் தலைமையில் இலங்கைக்கு பிக்குகள் சிறிவர்த்தன நகருக்கு அருகில் வந்து தங்கி இருந்ததாக சூளவம்சம் கூறுகின்றது. இந்த மன்னனுக்குப் பிறகு அவனது சகோதரியின் மகனான ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கன் என்பவன் அரசன் ஆனான்..அவனே சூளவம்சத்தின் வரலாறு கூறும் மன்னர்கள் பட்டியலில் இறுதியானவன். அவன் கெட்ட சிந்தனைகள் கொண்டவர்களோடு நட்புறவு பாராட்டினான் என்றும், அமைச்சர்கள் பலரையும் சிரச்சேதம் செய்தான் என்றும், இரக்கமில்லாத கொள்ளையனாக இவன் இயங்கினான் என்றும், மக்கள் இதனால் பாடுபட்டனர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக கொழும்பு மக்களால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்றும், அதன் பின்னர் இலங்கை ராஜ்யம் ஆங்கிலேயர்களால் அபகரித்துக் கொள்ளப்பட்டது என்றும் சூளவம்சம் கூறி நிறைவு செய்கிறது.

சூளவம்சம் கூறும் செய்திகள் வரலாற்று ரீதியாக பல தகவல்களை விவரிப்பதாக இருந்தாலும், ஆங்காங்கே செய்திகள் திரிக்கப்பட்டும், தகவல்களை மிகைப்படுத்தி சார்புத்தன்மையுடன் எழுதப்பட்டும் இருப்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது. உதாரணமாக, இறுதியில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் டச்சுக்காரர்களால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்ற செய்தி சூளவம்சத்தில் இல்லை. மாறாக மக்கள் நாடு கடத்தினர் என்று செய்தி குறிப்பிடப்படுகிறது. ஆக சூளவம்சம் கூறும் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை ஆராயும்போது, சமகாலத்து ஆவணங்கள் பலவற்றையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்து காலங்களை நிர்ணயிப்பதோடு மட்டுமல்லாது, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையையும் சோதிக்க வேண்டியது அவசியமாகின்றது. எதுவாகினும், இன்று நமக்கு கிடைக்கின்ற முக்கிய இலங்கை பற்றிய ஆவணங்களில் சூளவம்சம் மிகமுக்கியமானதொரு வரலாற்றுக் களஞ்சியம் என்பதில் மறுப்பு ஏதும் இல்லை..

உலகெங்கிலும் நிகழ்ந்த பண்டைய அரசுகளின் வரலாற்றை வாசிக்கும் போது இரத்தக் கறை படிந்த அரச வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே மன்னர்களின் வரலாறு அமைந்திருப்பதை காண்கின்றோம். துரோகம், கடும் தண்டனைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள், மக்கள் அரசுகளால் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்ட சூழல் என்றே வரலாறு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இவை அனைத்தும் பெரும்பாலும் மதங்களின் பெயர்களாலேயே மன்னர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதையும் நாம் ஒதுக்கி விடமுடியாது. இலங்கையின் வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல.

இலங்கையின் பௌத்தம் வைதீக சாத்திரத்தின் ஒன்றாகிய மனு நீதியை உள்வாங்கிக் கொண்ட பௌத்தமாகவே அரசர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதை சூளவம்சம் தெளிவுடன் வெளிப்படுத்துகின்றது.

இலங்கை இனக்குழுக்களிடையே தொடர்ச்சியான சண்டைகளையும், போர்களையும், கொடூரமான வாழ்க்கை நிலையையும் சந்தித்து வந்த நாடு. துரதிஷ்டவசமாக அது இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்றது!

(புகைப்படக் குறிப்பு - ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவி. (கி.பி. 1798 - 1815) - வேங்கட ரங்கஜம்மாள் தேவி பாண்டிய மன்னர் பரம்பரை சார்ந்த தெலுங்கு இளவரசி, கடந்த அக்ட் நான் யாழ்ப்பாணத்தில் யாழ் அருங்காட்சியகத்தில் பதிந்த புகைப்படம்)

முற்றும்
சுபா  

Thursday, May 2, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 6

*பகுதி 6  - தொடர்கின்றது.* 
 

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்



இலங்கையின் மன்னர்கள் வரலாற்றில் மகா பராக்கிரமபாகுவின் காலம் பொற்காலமாகும். நாட்டின் இயற்கை வளம் மேம்பட்டதுடன் விவசாயம் அபரிதமான வளர்ச்சியை இம்மன்னனின் காலத்தில் கண்டது. இலங்கையின் செல்வச்செழிப்பும் கலை வளர்ச்சியும் இம்மன்னனின் காலத்தில்தான் விரிவாக்கம் கண்டது அத்துடன் இலங்கையிலிருந்து கிழக்காசிய நாடுகள் பலவற்றிற்கும் பௌத்த பிக்குகள் பலர் சென்று பௌத்தம் வளர்த்தனர்.   கிழக்காசிய நாடுகளில் இலங்கையைச் சார்ந்த பௌத்த பிக்குகளின் தாக்கம் என்பது இன்றளவும் மிகத் தெளிவாக நாம் உணரக் கூடியதாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

மகா பராக்கிரமபாகுவின் மறைவுக்குப் பின்னர் ப அரசர்கள்  இலங்கையின் ஆட்சியைத் தொடர்ந்தனர். நிலையான ஆட்சி என்பது தொடரவில்லை. அந்தக் காலகட்டத்தில், கலிங்க தேசத்தை, அதாவது இன்றைய ஒடிசா மாநிலத்திலிருந்து  கொடூர மனம் கொண்ட இளவரசன் மாகன் என்பவன் 20,000  போர் வீரர்களுடன் இலங்கைக்கு வந்து போரிட்டு இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் புத்தவிகாரைகளை சேதப்படுத்தினான் என்றும் இந்த கலிங்க மன்னன் தமிழன் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

இந்தக் கலிங்க தமிழ் அரசனான மாகன்,  அந்த சமயம் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனைக் கைது செய்து, அவனது கண்களைப் பிடுங்கி,  சொத்துக்களை அபகரித்து கொள்ளையிட்டான் என்றும் ,அதன் பின்னர் அவன் புலத்தி நகரில் முடி சூடிக் கொண்டு 21 வருடங்கள் கொடுங்கோலாட்சி நடத்தினான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

அவனது ஆட்சியின்போது சிங்கள அரசர்கள் சிலர் ஆங்காங்கே சிறிய சிற்றரசுகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் ஸ்ரீ சங்கபோதி, அதற்குப் பின்னர் பராக்கிரமபாகு, என ஆட்சி  தொடர்ந்தது. 

அதற்குப் பின்னர் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும் சூவம்சம் குறிப்பிடுகின்றது எல்லாளன் பற்றி சூளவம்சம் விரிவாக வேறு எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை. துட்டகாமினி என்ற   பெயர் கொண்ட மன்னன்  எல்லாளனுடன் போரிட்டு இலங்கையைக் கைப்பற்றினான். அதற்குப் பிறகு வட்டகாமினி என்பவன் நாட்டை கைப்பற்றி ஆண்டான். ஆனால் பின்னர் ஐந்து தமிழ் ஆக்கிரமிப்பாளர்களிடம் அவன் நாட்டை பறிகொடுத்தான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் தாதுசேனன் என்பவன் நாட்டைக் கைப்பற்றி சில காலம் ஆண்டுவந்தான். அந்தச் சமயம் ஆறு தமிழ் மன்னர்கள் போரிட்டு நாட்டை மீண்டும் பிடித்துக் கொண்டார்கள். அதன் பின்னர் அவர்களை விரட்டிவிட்டு விஜயபாகு என்பவன் நாட்டை ஆட்சி செய்தான்.

அதன்பின்னர் மாகன், ஜயவாகு என்ற இரண்டு தமிழ் மன்னர்களின் தலைமையில் 40 ஆயிரம் தமிழ் வீரர்களும் கேரள வீரர்களும் இருந்து மன்னர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது. இந்த மன்னர்கள் ஆட்சியில்   நாட்டின் பல இடங்களில் மேம்பாடுகளை உருவாக்கினர் என்றும் சூளவம்சம் செல்கிறது
 
ஆச்சரியமாக இன்னொரு செய்தியையும் சூளவம்சம் பதிவு செய்கிறது. 

இக்காலகட்டத்தில்  இரண்டாம் பராக்கிரமபாகு என்பவன் போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இந்தபராக்கிரமபாகுவின் 11வது ஆண்டு காலத்தில் மலாயா நாட்டைச் சார்ந்த சந்திரபானு என்ற ஒரு இளவரசன் இலங்கை மீது படையெடுத்தான் என்றும் நாங்களும் பௌத்தர்கள் என அறிவித்து பேரிட்டான் என்றும், ஆனால் அவன் பராக்கிரமபாகுவின் வீரர்களால் துரத்தி அடிக்கப்பட்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இது ஏறக்குறைய கிபி 12ஆம் நூற்றாண்டு கால கட்டமாக இருக்கலாம். தோற்று ஓடிப்போன சந்திரபானு சும்மா இருக்கவில்லை.  சந்திரபானு மலாய் வீரர்களையும் பாண்டிய சோழ தமிழ் போர் வீரர்களையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் இலங்கை மீது போர் தொடுத்தான். ஆனால் வெற்றி பெற முடியாமல் அவன் துரத்தி அடிக்கப்பட்டான். பராக்கிரமபாகுவின் ஆட்சி தொடர்ந்தது. இவன் 35 வருடங்கள் ஆட்சி நடத்தினான். அதன்பிறகு அவது மூத்த மகன் விஜயபாகு அரியணை ஏறினான்.

விஜயபாகுவின் காலத்தில் இந்தியாவில் இருந்து பாண்டிய மன்னன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் தனது மந்திரியையும்   தளபதிகளையும் அனுப்பி இலங்கையின் மீது போர் தொடுத்தான். பாண்டியனின் படைகள் இலங்கையின் பல பகுதிகளைப் பாழாக்கி   புனித தந்ததாதுவையும் ஏராளமான சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு தமிழ் நாடு திரும்பியது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜயபாகுவின் மகன் பராக்கிரமபாகு பாண்டிய நாடு சென்று மன்னனிடம் பேசி புனித சின்னங்களை இலங்கைக்கு மீட்டு வந்தான். அவற்றைப் பொலநருவ நகரில் புனித தந்ததாது கோயிலில் பிரதிஷ்டை செய்தான். சில ஆண்டுகள் ஆட்சி செய்து பின் இறந்தான். அதன் பின்னர் மீண்டும் அடுத்தடுத்து சில மன்னர்கள் ஆட்சியில் இருந்தனர்.

இலங்கையை ஆண்ட மன்னர்களில் பெரும்பாலோர் பௌத்த மதத்தை சார்ந்தவர்களே. ஒரு சில சிங்கள மன்னர்கள் மட்டுமே சைவ நெறியையும் ஆதரித்திருக்கின்றார்கள். அதற்கு உதாரணமாக ராஜசிங்கன் என்பவனைப் பற்றி குறிப்பிடலாம். இவன் மாயாதுன்னை என்பவனின் மகன். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றஎண்ணத்துடன் தனது தந்தையைக் கொன்று ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் தன் தந்தையைக் கொலை செய்து விட்டோமே என்று பயந்து, அந்த பாவத்தை எப்படி போக்குவது என்று பௌத்த முனிவர்களிடம் கேட்க, அவர்கள் கூறிய எந்த பரிகாரமும் அவனுக்குத் திருப்தி அளிக்காத நிலையில், சிவனை வழிபடுகின்ற சைவர்களிடம் பரிகாரம் கேட்க, அவர்கள் சொன்ன பரிகாரம் அவனுக்கு மனதிற்குப் பிடிக்கவே,   அவன் சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டான். உடல் முழுவதும் திருநீறு பூசி சைவனாகி சிவ வழிபாடு செய்யத் தொடங்கினான்.  அதன் பின்னர் பிக்குகள் சிலரைக் கொன்றான். புனிதமான பௌத்த நூல்கள் பலவற்றை எரியூட்டினான்; பௌத்த விகாரைகளை இடித்துத் தள்ளினான்;  பௌத்த பிக்குகள் பலர் பயத்தினால் தங்கள் சின்னங்களைக்  கலைத்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் சென்றனர் பழி பாவத்துக்கு அஞ்சாத ராஜசிங்கன் பௌத்த மதத்தை இவ்வாறு சீறழித்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது.


தொடரும்..
சுபா

Tuesday, April 30, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 5

*பகுதி 5  - தொடர்கின்றது.* 
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்



சிற்றரசனான மானவர்மனுக்கு மகனாக பராக்கிரமபாகு பிறந்தான். தனக்கு மகன் பிறந்த   செய்தியை இலங்கை மன்னன் விக்கிரமபாகுவிற்குத் தூதுவர் மூலம் அறிவித்தான் மானவர்மன். விக்கிரமபாகுவின் தங்கைதான் மானவர்மனின் மனைவி. தன் தங்கையைப் போல நல்ல குணங்களுடன் பராக்கிரமபாகு வளரவேண்டும் என்று எண்ணி விக்ரமபாகு, தன் மருமகனைத் தன்னிடம் கொடுத்து வளர்க்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டான்.  ஆனால் மானவர்மன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. பராக்கிரமபாகு ஒரு அரசனுக்குத் தேவையான எல்லா கலைகளையும் கற்று வளர்ந்து வந்தான்.

சூளவம்சத்தின் இந்தப் பகுதியில் ஒரு உரையாடலின் போது "கலிங்க மரபில் வந்த விஜய மன்னன் இத்தீவில் வசித்த இயக்ர்களை அழைத்து இத்தீவை மக்கள் வாழ கந்ததாக ஆக்கினான். அன்றிலிருந்து கலிங்க மரபு மன்னர் வழி வருகின்றது" என்று ஒரு அரசி கூறும் ஒரு செய்தியும் இடம் பெறுகின்றது. இதனை நோக்கும்போது சூளவம்ம் கூறும் செய்திகளின் அடிப்படையில், இலங்கை மன்னர்கள் பரம்பரை என்பது கலிங்க நாட்டு மன்னர் பரம்பரையினரின் தொடர்ச்சி என்பதாகவே அறியக்கூடியதாக இருக்கின்றது.

பராக்கிரமபாகு ஏனைய அரசர்களை விட மாறுபட்ட வகையில் சிந்திக்கும் திறன் உடையவனாக இருந்தான். தானே பல ஊர்களுக்குப் பயணம் செய்து கிராமங்களை நேரில் கண்டு சில இடங்களில் போரிட்டு, அங்கு தனது வீரத்தைவெளிப்படுத்தி, தனது புகழை வளர்த்துக் கொண்டு வந்தான். அவனுக்கு இலங்கையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்கள் தனித்தனியாக ஆட்சி செய்வது மனதிற்கு ஒவ்வாததாக இருந்தது இலங்கையின் முழு பகுதியையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும். அந்த ஆட்சிக்கு தானே தலைமை தாங்க வேண்டும், என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல. இலங்கைத்தீவு சிறியதான ஒரு தீவாக இருந்தாலும் கூட, பௌத்த நெறிக்கு மிக முக்கியமான ஒரு நாடாக இருப்பதை அவன் மிக முக்கிய காரணமாகக் கருதினான். "புத்தரின் கேசம், தோள் எலும்பு, கழுத்து எலும்பு, பல், பிச்சைப்பாத்திரம் பாத அடையாளம் போதி மரத்தின் கிளை ஆகியவை இலங்கையில் தான் இருக்கின்றது" என்று அவன் கூறுவதாக ஒரு வாக்கியம் சூளவம்சத்தில் இடம்பெறுகின்றது.

இளவரசனாக சுகங்களை மட்டும் அனுபவித்து கொண்டிராமல் இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்து, சீர்குலைந்து கிடந்த கிராமங்களை தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்து எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். சில ஆண்டுகளில் தக்ஷிணதேசத்தில் அரசனாக அரியணை ஏறினான் பராக்கிரமபாகு.  அது மட்டும் போதாது. இலங்கை முழுவதையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டான். "பொழியும் மழை நீரில் ஒரு துளி கூட சமுத்திரத்தில் கலக்கக்கூடாது. அவை அனைத்தும் விவசாயத்திற்குப் பயன்படவேண்டும்" என்று நீர்ப்பாசனத் திட்டங்களை இலங்கை முழுவதும் திட்டமிட்டான்,  செயல்படுத்தினான். நெல் வயல்களின் பரப்பினை அதிகரித்தான். நாட்டை நெற்களஞ்சியமாக்கினான். முந்தைய அரசர்கள் தங்கள் பெரும்பகுதி நேரத்தை யுத்தங்களில் செலவிட்டு நாட்டை பாழ்படுத்தினர். யுத்தத்தை விட்டு நாட்டினையும் சமயத்தையும் அவர்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில்லைஆகவே பௌத்த தர்மத்தை முன்னெடுக்கவும், இளைஞர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு போர் பயிற்சி பெறவும் எல்லா மாவட்டங்களிலும் சிறந்த நிர்வாகம் செயல்படவும், நாடு முழுவதும் திட்டங்களை வகுத்து செயல்படத் தொடங்கினான் பராக்கிரமபாகு.

இவனது ஆட்சியின் கீழ் தமிழ்ப்படை ஒன்று இருந்தமையும், அதற்குத் தளபதியாக மலைராஜா என்ற ஒருவனை நியமித்மையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. பலம் பொருந்திய படையினை  உருவாக்கி இலங்கை முழுவதும் இருந்த அனைத்து சிற்றரசர்களையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் பராக்கிரமபாகு.

இலங்கை முழுமைக்கும்  மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். மகா பராக்கிரமபாகு என்று அழைக்கப்பட்டான். முந்தைய ஆட்சியாளர்கள் விதித்திருந்த வரிச் சுமைகளை குறைத்தான் பௌத்தத்தில் இருந்த மூன்று மதப் பிரிவுகளையும் சேர்ந்த பிக்குகளை அழைத்து அவர்களிடம் சமரசத்தை உருவாக்க முயற்சித்தான்.  பௌத்த பிக்குகளுக்கு நிறைய சலுகைகளை வழங்கினான்.  வழிப்போக்கர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அன்னசத்திரங்கள் அமைத்தான். தானியங்கள் சேகரித்து வைக்க களஞ்சியங்களை அமைப்பித்தான். நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளை நிறுவினான். திறன் வாய்ந்த வைத்தியர்களை ஒருங்கிணைத்து சிறந்த வைத்தியசாலைகளை உருவாக்கினான்.  மாதத்தில் நான்கு நாட்களை  பௌத்த உபதேச நாட்களாக அறிவித்தான். பிராமணர்கள் தமது சடங்கு, கிரியைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஒரு தங்கமாளிகை உருவாக்கித் தந்தான். பிராமணர்கள் மந்திரச் சடங்குகள் ஆற்றுவதற்கு விஷ்ணுவுக்கு ஒரு கோயில் அமைத்தான்.  புனித நூல்கள் வழங்குவதற்குரிய மாளிகைகளையும் அமைத்தான்

பராக்கிரமபாகுவின் பட்டத்து ராணியாக ரூபவதி என்பவள் இருந்தாள்.  அவளைத் தவிர நூற்றுக்கணக்கான மகளிர் அரண்மனையில் இருந்தார்கள். ரூபவதி பௌத்த மத நம்பிக்கை கொண்டவள். அவள் பௌத்த சமயத் தொண்டினைத் தொடர்ந்து ஆற்றி வந்தாள்.  பராக்கிரமபாகு மூன்று தேவாலயங்களைக்  கட்டுவித்தான் என்ற செய்தியையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

மகா பராக்கிரமபாகு சோழர்களால் சேதமாக்கப்பட்ட புராதன அரச நகரான அனுராதபுரத்தைப் புனரமைக்கவும்,  போதி மரத்தையும், புனித சின்னங்களையும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்தான்.  இவன் காலத்திலேயே பௌத்தப் புனித சின்னங்கள் மீட்கப்பட்டன. அவை பொலநருவ நகருக்குக் கொண்டுவரப்பட்டன. மகா பராக்கிரமபாகுஅந்தப் புனித சின்னங்களைத் தனது தலையில் தாங்கி ஊர்வலம் வந்து விழா எடுத்துக் கொண்டாடி ஆலயத்தில் வைத்தான்.

சூம்சத்தில் மற்றொரு செய்தியும் இடம் பெறுகிறது. அதாவது, பராக்கிரமபாகு கம்போஜ மன்னனுக்கு  நட்புறவு நிமித்தமாக இலங்கை இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்விக்க அனுப்பியதாகவும், அவள் சென்ற அந்தக் கப்பலை பர்மிய மன்னன் இடையில் தாக்கி கைப்பற்றி அவளை கொண்டு சென்றதாகவும், இதனால் கோபமடைந்த மகா பராக்கிரமபாகு தமிழ்த் தளபதி ஒருவரை அழைத்து பர்மா மீது போர் தொடுக்க கட்டளையிட்டான் என்றும்,  பர்மா வந்து இறங்கிய தமிழ் தளபதி  ஆதித்தன் அவர்களுடன் சண்டையிட்டு பர்மிய மன்னனைச் சிறைபிடித்து  இளவரசியை மீட்டான் என்றும் இச்செய்தி குறிப்பிடுகிறது.  அதோடு மட்டுமன்றி, பர்மாவின் மன்னன் இலங்கைக்குத் திறை செலுத்தும் மன்னனாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டு திறை செலுத்தினான் என்ற செய்தியும் கிடைக்கின்றது.

அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாண்டிய மன்னன் பராக்கிரமனைத் தாக்கி மற்றொரு இளவரசனான குலசேகரன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். குலசேகர பாண்டியனைத் தாக்கி தனது ஆட்சியை மீட்டுக் கொடுக்கும்படி பராக்கிரம பாண்டியன், மகா பராக்கிரமபாகுவின் உதவி கேட்டு தூது அனுப்பினான். தனது படைத் தளபதியை அழைத்து குலசேகரனைத் தாக்கி கைப்பற்றி மீண்டும்   பராக்கிரம பாண்டியனுக்கே அரசை ஒப்படைக்கும்படி கட்டளையிட்டான் மகா பராக்கிரமபாகு.  தளபதி தண்டநாயக்கன் முதலில் ராமேஸ்வரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அப்பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர்களைத் தாக்கிச் சிறைப்பிடித்துஇலங்கைக்கு அனுப்பினான் அவர்களைக் கொண்டு முன்னர் இலங்கையில் தமிழ் படைகள் ஏற்படுத்திய சேதங்களைத் திருத்தவும், பழுதடைந்த கோவில்களைப்  புதுப்பிக்கும் பணிக்கும் அவர்களை அனுப்பினான். இந்த தண்டநாயக்கன் தென்னிந்தியாவில் குண்டுக்ல் என்ற இடத்தில் தனக்கு ஒரு கோட்டை நிறுவி அதற்கு பராக்கிரமபும் என்றும் பெயரிட்டான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. குலசேகரனுக்கும் பாண்டியன் பராக்கிரமனுக்கும் நடைபெற்ற சண்டையின்போது பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டான்.  ஆயினும் தண்டநாயக்னின் படைகள்  பராக்கிரம பாண்டியனின் குடும்பத்தாருக்கு உதவும் பொருட்டு தொடர்ச்சியாகப் போர் செய்து வந்தது. தமிழகத்தின் பொன்னமராவதியில் நடந்த புரட்சியை முற்றுமாக அடக்கி, அங்கிருந்த பாண்டியனின் மூன்று அடுக்கு மாளிகையைத் தீக்கிரையாக்கியது இலங்கை படை. பாண்டியன் பராக்கிரமன் மகனான் வீரபாண்டியனுக்கு முடிசூடி விட்டு பின்னர் நாடு திரும்பியது இலங்கை படை. இலங்கை படையோடு போர் தொடுக்கும் வகையில் குலசேகரன் சோழமன்னர்களின் உதவியை நாடினான். தமிழகத்தில் பெரும் போர் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். குலசேகரன் அனைத்தையும் இழந்து ஓடினான். இலங்கை மன்னனின் தளபதி நாட்டை வீரபாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு, "இந்த ராஜ்ஜியத்தில் பராக்கிரமபாகுவின் தலைச் சின்னம் பொறித்த காசு பணம் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கட்டளை பிறப்பித்து, பாண்டிய சோழ கைதிகளோடு இலங்கைக்குக் திரும்பினான். இந்த வெற்றியைக் கொண்டாடி பராக்கிரமபாகு இலங்கையில் "பாண்டி விஜயம்" என்ற பெயரில் ஒரு கிராமத்தை உருவாக்கினான். அக்கிராமத்தில் பிராமணர்கள் வளமாக வாழ நிலங்களை நன்கொடையாக வழங்கினான் மகா பராக்கிரமபாகு என்று சொல்கிறது சூளவம்சம்.

மகா பராக்கிரமபாகுவின் ஆட்சி 33 ஆண்டுகள் நீடித்தன. இவனது ஆட்சி இலங்கை வரலாற்றில் இலங்கைக்குப் பெரும் வளத்தையும் புகழையும் தேடித் தந்த ஆட்சி   என்று ஐயமின்றி  குறிப்பிடலாம். பராக்கிரமபாகுவின் மறைவிற்கு பிறகு அவனது சகோதரியின் மகனான விஜயபாகு என்பவன் அரியணை ஏறினான். அவன் கவிஞன் அதோடு மனுநீதியை உயர்வாகக் கருதி அவன் மக்களை மனு நீதியின் கட்டளைப்படி நான்கு ஒழுக்கங்களை பின்பற்றி நடக்குமாறு பணித்தான் என்றும், அவன் ஆட்சி ஒரு ஆண்டு காலம் மட்டுமே நீடித்தது என்றும், அவனுக்குப் பின் மகிந்தன் என்பவன் ஆட்சியை எடுத்துக்கொண்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

மீண்டும் பல குழப்பங்கள் இலங்கை அரச குடும்பத்தில் ஏற்பட்டன. மகா பராக்கிரமபாகுவின் மனைவியருள் ஒருத்தியான லீலாவதியை இடைக்காலத்தில் அரியணையில் ஏற்றினார்கள். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பராக்கிரம பாண்டியன் என்பவன் பெரும்படையுடன் வந்து லீலாவதியையும் அவள் தளபதியையும் கொன்று இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனைக் குறிப்பிடும் போது சூளவம்சம் இக்காலகட்டத்தில் மனு நீதி தவறிய ஆட்சி மூன்று ஆண்டுகள் புலத்தி நகரில்  நிலவியது, அதாவது பொலநறுவ நகரில் நிலவியது என்று குறிப்பிடுகிறது. 

சூளவம்சத்தின் அடிப்படையில் மனுநீதியே உயர்ந்த தர்மமாக கொள்ளப்பட்டது என்பதை அறிகின்றோம். ஆக, பௌத்த சமயத்தை அரச சமயமாக ஏற்ற இலங்கை சிங்கள மன்னர்கள், பௌத்த தத்துவங்களின் அடிப்படைகளுக்கு நேர்மாறான மனு நீதியை எவ்வாறு  ஏற்றுக் கொண்டனர் என்பதுவும், மனு நீதி சிங்கள ஆட்சியில் எப்போது உட்புகுந்தது என்பதும், அது எவ்வாறு ஆட்சியில் உள்ளோருக்கு துணை புரிந்தது என்பதும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் யாவை என்பதுவும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவையே!

தொடரும்..
சுபா

Monday, April 29, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 4



*பகுதி 4 - தொடர்கின்றது.*
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா
பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்
சேனன் இலங்கை மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருந்த போது, சோழ மன்னன் வல்லபன் இலங்கையின் நாக தீபத்திற்கு, அதாவது வட பகுதியில் உத்தர தேசம் என்ற பெயர் கொண்ட ஒரு பகுதி, அதனை வல்லபன் போரிட்டு கைப்பற்றிக்கொண்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனன் மீண்டும் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து சோழன் வல்லபன் மீண்டும் போர் செய்து வாகை சூடியதாகவும், பின் மீண்டும் நடந்த போரில் தோல்வி கண்டு வல்லபன் நட்புறவுக்கு வந்ததாகவும், இதனால் இலங்கை மன்னனின் புகழ் இந்தியாவிலும் பரவியது என்றும் மேலும் குறிப்பிடுகிறது. சூளவம்சம் குறிப்பிடும் சோழன் வல்லபன் யார் என்பது ஆய்விற்குறியது.
இதற்கு அடுத்த 16 வருடங்கள் சேனன் மன்னனாக ஆட்சியைத் தொடர்ந்தான். அதற்குப்பின் மகிந்தன். அவனுக்குப் பின்னர் அவனது கலிங்க ராணியின் மகன் சேனன் கி.பி 972 லிருந்து 982 வரை ஆட்சி செய்து கொண்டிருந்தான். இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் சிற்றரசர்களிடையே குழப்பம் அதிகரித்து விட்டது. இந்தச் சூழலில் இளம் வயது மன்னனான சேனன் தனது சேனாதிபதியாக சேனன் என்ற இன்னொருவனை அழைத்து பதவியை ஒப்படைத்துவிட்டு பொலநருவ நகருக்குச் சென்று தங்கிவிட்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனாதிபதி முறையாக ஆட்சியைப் பாதுகாக்காமையினால் தமிழர்கள் பெரும் பலம் கொண்டு செயல்பட்டதாகவும், ராட்சதர்கள் போல நாட்டை நாசமாக்கினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் சேனனின் மரணம் நிகழ்கின்றது. அவனது இளைய சகோதரன் மஹிந்தன் கிபி 982 லிருந்து அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்தக் காலகட்டத்தில் அரசாட்சி சரியாக அமையாமல் உள்ளூரில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வந்தன.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குதிரைகள் விற்க வந்த ஒரு வியாபாரி, இலங்கையில் உள்ள நிலையற்ற ஆட்சித்தன்மை அப்போதைய சோழ மன்னன் ராஜராஜனுக்குக் குறிப்பிடவே, மாமன்னன் ராஜராஜ சோழன் (கி.பி 985 முதல் கி.பி 1014) இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியதாகவும், சோழர் படைகள் இலங்கை வந்து அங்கு பல கிராமங்களைத் தாக்கி இலங்கையின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும்,. இலங்கை மகாராணி மற்றும் அவளது அனைத்து தங்க ஆபரணங்கள், மகுடம், விலை மதிப்பில்லா வைரங்கள், முறியாத வாள், பதக்கங்கள் ஆகிய அனைத்தையும் சோழப் படைகள் கவர்ந்து இந்தியாவிற்குக் கொண்டு வந்தன என்றும், இலங்கையின் பௌத்த சின்னமாகிய தந்ததாது இருந்த கோயிலையும் சோழர் படைகள் அழித்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. விகாரைகளில் இருந்த தங்க வைர ஆபரணங்களையும் சூறையாடி அனுராதபுரத்து செல்வங்களையும் கொள்ளையிட்டு அங்கிருந்த விலைமதிப்பில்லா பொருட்களைத் தமிழகம் கொண்டு வந்ததாக சூளவம்சம் மேலும் குறிப்பிடுகிறது. இலங்கையின் பெரும்பகுதியை கைப்பற்றிக்கொண்ட ராஜராஜனின் படைகள் அனுராதபுரத்தை விட்டு பொலநருவ நகரை தனது தலைநகராக்கிக் கொண்டன. அந்த வேளை இளவரசனாக இருந்த இலங்கை மன்னனின் மகன் காசியப்பன், சோழ மன்னன் ராஜராஜனின் படைகளின் கண்களில் படாமல் மறைந்திருந்தான். அவன் விக்கிரமபாகு என்ற சிம்மாசனப் பெயரோடு ஒரு பகுதியில் முடி சூடிக் கொண்டு தனியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். இடைக்கிடையே விக்கிரமபாகுவின் படைகளை வெல்வதற்குத் தமிழர்கள் படை முயற்சி செய்து கொண்டே இருந்தது. அதற்குப் பின்னர் மற்றொரு விக்கிரமபாகு என்பவன் ஆட்சியைத் தொடர்ந்ததாகவும், அதற்குப் பின்னர் லோகேஸ்வரன் என்ற சிங்கள ராணுவத் தலைவன் சோழர்களை எதிர்க்கும் பொருட்டு ஒரு படையை ஏற்பாடு செய்ததாகவும், கதிர்காமத்தில் தனது தலைமையகத்தை நிறுவியதாகவும் அறிகிறோம். ஆனாலும் சோழர் படைகளை அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இலங்கையின் பெரும்பகுதியைச் சோழர் படை ஆட்சி செய்ய, ஒரு சில பகுதிகளை இலங்கை மன்னர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டு வந்தனர். அந்த வரிசையில் மகிந்தன் அவனுக்கு பின்னர் புத்த ராஜா பின்னர் காசியப்பன் என்ற இலங்கை மன்னர்களின் பெயர்களைக் காண்கின்றோம்.
சோழ மன்னன் ராஜேந்திர சோழனைப் பற்றி இந்த சூளவம்சம் ஏதும் குறிப்பிடவில்லை. ராஜராஜனின் பெயரருக்குப் பின்னர் அடுத்து வருவது வீரராஜேந்திரனின் பெயர். இந்தியாவில் சோழநாட்டில் வீரராஜேந்திரன் பதவியேற்ற பின்னர் அக்காலகட்டத்தில் மீண்டும் இலங்கையில் இலங்கை மன்னர்களின் ஆட்சி மீண்டது என்பதை சூளவம்சம் வழி அறியமுடிகின்றது. ஆக, ராஜராஜனுக்குப் பிறகு இராஜேந்திர சோழனின் கலாத்தில் இலங்கை முழுமையும் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தமையும் அதன் பின்னர் இலங்கை சிற்றரசர்கள் படிப்படியாக பலம் பெற்றார்கள் என்பதையும் அறிய முடிகிறது. சோழர்கள் ஆட்சி காலத்தில் இலங்கையில் எழுப்பப்பட்ட கோயில்களின் சிதைந்த பகுதிகளை இன்றும் பொலநருவ நகரத்தில் காணலாம். சோழநாட்டில் வீரராஜேந்திரனின் ஆட்சி காலத்தில் விஜயபாகு என்ற மன்னன் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை எடுக்கிறான்.
இலங்கையில் இருந்த சோழர் படையை தோற்கடித்து இலங்கை மன்னனாக முடி சூட்டிக் கொள்கின்றான் இந்த விஜயபாகு. இவன் ஸ்ரீ சங்கபோதி என்ற அரச பெயரை ஏற்றுக்கொண்டான். முன்னர் போரில் சோழ மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னன் ஜெகதீசனின் மனைவியான பட்டமகிஷியின் மகள் லீலாவதி சோழ நாட்டிலிருந்து தப்பி இலங்கை வந்து வீரபாகுவுக்கு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். வீரபாகு லீலாவதியை தன் பட்டத்து ராணியாக ஏற்றுக் கொண்டான்.
விஜயபாகுவிற்கு மித்ரா என்ற ஒரு இளைய சகோதரி இருந்ததாகவும், அப்போதைய சோழ மன்னன் அதாவது வீரராஜேந்திரன் அவளை மணந்து கொள்ள விழைந்த போது விஜயபாகு அதனை மறுத்து விட்டு பாண்டிய வம்சத்தில் வந்த இளவரசன் ஒருவருக்கு அவளை திருமணம் செய்து வைத்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.
இலங்கை மன்னன் விஜயபாகு பல சமூக பணிகளைச் செய்ததாகவும், பல பௌத்த விகாரைகளைச் சீரமைத்ததாகவும், தடைகளை மிக நேர்த்தியாக விரிவாக்கி நாட்டினைத் திறம்பட ஆட்சி செய்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. வீரபாகு 55 ஆண்டுகள் இலங்கை மன்னனாக ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பின்னர் அரச வம்சத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் மானவர்மன் என்ற மன்னன் ஆட்சியில் இருந்ததாகவும் அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அந்த இளவரசனே இலங்கையின் புகழ்மிக்க மன்னன் பராக்கிரமபாகு என்பதையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.
பராக்கிரமபாகுவைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
தொடரும்..
சுபா

Sunday, April 28, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 3


சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா



பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

மானவர்மனுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னன் நரசிம்மனுக்கும் நல்ல நட்புறவு இருந்தது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  முதலாம் நரசிம்மவர்மன் முதலாம் மகேந்திரவர்மனின் மகன். இவனது ஆட்சிக்காலம் கிபி.630லிருந்து 668 வரையாகும். தனது தந்தை மகேந்திரவர்மப் பல்லவன் போலவே சிறப்புமிக்க கோயில்களைத் தமிழகத்தில் அமைத்தவன் என்பதோடு வாதாபியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியரோடு போரிட்டு வென்றவன் என்ற சிறப்பும் பெற்றவன்  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன்.

இந்த மானவர்மன் என்பவன் முன்னர் நான் குறிப்பிட்ட இலங்கை மன்னன்காசியப்பனின் மகன். அடைக்கலம் வேண்டி இந்தியாவிற்குத் தப்பி ஓடிவந்த மானவர்மன், பல்லவமன்னன் நரசிம்மனிடம் தஞ்சம் புகுந்தான். பல்லவ மன்னன் நரசிம்மன் மாவர்மனைத் தனது படை பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக நியமித்திருந்தான். மானவர்மன் திருமணம் முடித்து அவனுக்கு நான்கு புதல்வர்களும் இருந்தார்கள். பல்லவ மன்னன் நரசிம்மன்  மானவர்மனுடன் மிகுந்த நட்புறவில் இருந்தான். நரசிம்மனின் படையில் தலைமையேற்று ஒரு போரில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தான் மானவர்மன்.   வெற்றியை மானவர்மன் ஈட்டித் தந்ததமைக்குப் பரிசாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நரசிம்மன், ஒரு படையினை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். மானவர்மனும் உடன் சென்றான். கடுமையான போர் நடந்தது.  ஆனால் வெற்றி பெற முடியாது தப்பியோடி மீண்டும் தமிழகம் வந்து சேர்ந்தான் மானவர்மன்.  நீண்ட காலம் கழித்து மீண்டும் பல்லவன் நரசிம்மன் மற்றொரு படையை ஏற்பாடு செய்து மானவர்மனை உடன் அனுப்பி   இலங்கையைக் கைப்பற்ற முயற்சி செய்தான் பல்லவ மன்னனின் கப்பற்படை இலங்கை நோக்கி சென்றது. மானவர்மனும் அப்படையில் இணைந்து சென்றான். பயங்கரமான போர் நடைபெற்றது. அதன் இறுதியில் மானவர்மனின் படை வெற்றி கண்டது. மானவர்மன் அனுராதபுரத்தின் மணிமுடியை அணிந்து கொண்டான். அதன் பின்னர் ஏறக்குறைய 35 ஆண்டுகள் மானவர்மன் தொடர்ந்து இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் ஆட்சி காலத்தில் இலங்கையின் பல பௌத்த விகாரைகளைத் திருத்தி அமைத்ததோடு விவசாயத்திற்கு நீர்பாசன குளங்களையும் ஏரிகளையும் வெட்டி விவசாயத்தை வளர்ச்சியுறச் செய்தான்.

மானவர்மனின் மறைவிற்குப்  பிறகு அவனுடைய மகன் காசியப்பன்,   அவனுக்குப் பிறகு மகிந்தன் ஆகியோர் ஆட்சி செய்ததை சூளவம்சம் குறிப்பிடுகிறது.

மகிந்தன் மரணமடைந்தபோது அவனது மகன்  ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் மாறி மாறி பல மன்னர்கள் தொடர்ச்சியாக இலங்கையின் ஆட்சி பீடத்தில் இருந்தார்கள். சேனன், உதயன், மகிந்தன்,  அக்கபோதி என தொடர்ச்சியாக வெவ்வேறு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது இலங்கை.

அடுத்து சேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த போது தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்  (கி.பி. 815-862) பெரும்படையுடன் இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தான். இலங்கையின் வடபகுதி அனைத்தையும் வெற்றி கண்டு தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான்  பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்.  இலங்கையின் வடபகுதியில் மகாதாலிதகமத்தில் பாசறை அமைத்தான். தமிழ் மக்கள் பலர் அவனது ஆட்சியின் கீழ் அரசியலில் இடம் பெற்றனர். அதனால் பாண்டிய மன்னனின் படை பலம் பொருந்தியதாக ஆகியது அதே வேளை இலங்கையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இலங்கை மன்னர்களின் ஆட்சி தொடர்ந்தது. சேனன் அப்போது நடந்த போரில் தோல்வி கண்டு மலையகத்திற்குத் தப்பி ஓடினான்.

பாண்டிய மன்னனின் படை படிப்படியாக அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. பாண்டிய மன்னனின் படை அரண்மனையில் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடியதோடு, விகாரைகளில் இருந்த தங்கத்தினாலான புத்தரின் சிலைகளையும், செல்வங்களையும் சூறையாடி எடுத்துக்கொண்டது. தங்க நகைகள், வைரங்கள் தூபராமசேத்தியத்தின் பொன் கூரை, பௌத்த சமய சின்னங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு தமிழகம் திரும்பியது பாண்டியனின் படைகள். இதனால் மனம் வருந்திய சேனன்,  தான் பாண்டிய மன்னனுக்குக் கீழ் திறைதரும் மன்னனாக இருக்க சம்மதித்துஇரண்டு யானை அம்பாரிகளில் பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தான். பாண்டிய மன்னனும் இதனை ஏற்றுக்கொண்டு  சேனனை இலங்கையின்  திறை செலுத்தும் மன்னனாக  இருக்கச் சம்மதித்து,  ஆட்சியையும் கொடுக்கச்  சம்மதித்தான். சேனனின் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.

சேனன் மரணமடைந்ததும் அடுத்ததா, சேனன் என்ற மற்றொருவன் கிபி 853 லிருந்து 887 வரை இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் காலத்தில் பாண்டிய மன்னர்களை பழி வாங்குவதற்காக திட்டமிட்டான். அப்போது தமிழகத்தில்  ஆட்சியில் இருந்த ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் பாண்டியனுக்கு எதிராக செயல்பட்ட அவனது மகனான வரகுணபாண்டியன் தந்தைக்கு எதிராக கலகம் செய்து புகலிடம் தேடி இலங்கைக்கு சேனனிடம் வந்து அடைக்கலம் புகுந்தான். அதுவே நல்ல சமயம் என திட்டமிட்ட சேனன், தனது சேனாதிபதியை அழைத்து பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்று வரகுனை சிம்மாசனத்தில் அமர்த்துமாறு தனது படையினருக்குக் கட்டளையிட்டான்.

கடும் யுத்தம் நடந்தது. பாண்டியமன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் போரில் கொல்லப்பட்டான். வரகுணனை பாண்டிய மன்னனாக முடிசூட்டி விட்டு இலங்கைக்கு படை திரும்பியது. ஆனாலும் படையைச் சார்ந்த தளபதிகள்  சிலர் தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து தங்கியிருந்தார்கள் என்றும் தெரிகிறது.  பாண்டியர்கள் இலங்கையிலிருந்து சூறையாடிச் சென்ற தங்க புத்தர் சிலைகளை மீண்டும் தமிழகத்தில் இருந்து கொண்டு வந்து ஆலயங்களில் நிறுவினான் மன்னன் சேனன். இவன் தொடர்ந்து  மன்னனாக இலங்கையில் ஆட்சியில் இருந்தான். அதன் பின்னர் உதயன் என்பவன், காசியப்பன் என்பவன் என இலங்கை ஆட்சி தொடர்ந்தது.

அடுத்து தப்புலன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவனது காலம் கிபி 924 லிருந்து 935 வரை. அதே சமயத்தில் தமிழகத்தில் பாண்டிய மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் சோழர்களால் விரட்டப்பட்டு இலங்கைக்கு வந்து சரண் அடைந்தான். தப்புலன் பாண்டியனுக்கு   உதவி செய்ய நினைத்தாலும் அவனது அரசின் அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை. ஆகையால் பாண்டிய மன்னன் தனது  சிம்மாசனம் மற்றும் சில அரச முத்திரை சின்னங்களையும் மன்னனிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு சேர நாட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தான்.

சேனனுக்குப் பிறகு உதயன் என்பவன் மன்னனானான். அவனுக்குப் பின் மேலும் சேனன் என்னும் மற்றொருவன் மன்னனானான். இவனது காலம் கிபி 956 லிருந்து 972 வரை. இவன் கலிங்கத்து  இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.

சூளவம்சம் குறிப்பிடும் செய்திகளைக் காணும், போது பாண்டிய மன்னர்களின் அரச சின்னங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் இலங்கையில் இருந்ததை உறுதி செய்வதாகவே அமைகின்றது. அதுமட்டுமின்றி, சோழ மன்னர்கள் தமிழகத்தில் பலம் பெற்ற போது அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. இதனைப் பற்றி அடுத்து காண்போம்.!

தொடரும்.
-சுபா

Saturday, April 27, 2019

சூளவம்சம் - நூல் வாசிப்பு - 2

*பகுதி 2  - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்


சூவம்சம்  கூறும் மன்னர்கள் பரம்பரை பற்றிய செய்தியில் மீண்டும் மீண்டும் சில பெயர்கள் வருவதைக் காணலாம். உதாரணமாக, காசியப்பன் அக்கபோதி, சேனன் போன்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அதேபோல பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற பெயர்களும் ஒரு முறைக்கு மேல் இடம்பெறுகின்றன.  இப்பெயர்களைக் கவனிக்கும் போது இவை சிங்கள பெயர்களா அல்லது தமிழ் பெயர்களா என்ற மயக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆயினும் சூளவம்சம் பொதுவாகவே சிங்கள மன்னர்களை மட்டுமே இலங்கை மன்னர்களாக எடுத்துக்கொண்டு இந்த நூலில் கையாள்கிறது. எப்போதெல்லாம் தமிழர்கள்இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றினாலும் அல்லது சிங்கள படையில் பதவி வகித்தாலும், அல்லது தமிழகம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தாலும் அதனை தெளிவாக குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆக சூவம்சம் முதன்மைப்படுத்துவது இலங்கை சிங்கள மன்னர் பரம்பரையையே என்பது உறுதிப்படுகிறது.

மகாவம்சத்தில் இறுதியாக இடம் பெறும் மகாசேனனின் 27 ஆண்டு ஆட்சி, அதாவது கி.பி 361ல் அவன் ஆட்சி முடிய, அவனது மகன் ஸ்ரீ மேகவண்ணன் ஆட்சியைக் கையில் எடுக்கின்றான். அவன் முடிசூடிக்கொண்ட செய்தியிலிருந்து சூளவம்சத்தின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அந்த காலகட்டத்தில் அனுராதபுரம் இலங்கை அரசின் தலைநகராக விளங்கியது. அப்போது தேரவாத பௌத்த சிந்தனைகளைக் கடைப்பிடிக்கும் மகாவிகாரை பிக்குகளும், மகாயான பௌத்த சிந்தனைகளைத் தொடரும் அபயகிரி விகாரை பிக்குகளும் இக்காலகட்டத்தில் சமநிலையில் இருந்திருக்கின்றன. பௌத்தத்தின் இந்த இரண்டு உட்பிரிவுகளும் பெருத்த வேறுபாடுகளுடனே அப்போது கடைப்பிடிக்கப்பட்ட நிலையும் தெரியவருகின்றது. இதில் மகாசேனன் மகாயான தத்துவத்தைக் கடைபிடித்தவன்.

மகாசேனுக்குப் பிறகு அவரது மகன் ஸ்ரீ மேகவண்ணன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் தனது தந்தை புறக்கணித்த தேரவாத பௌத்தத்தை முன்னெடுத்தான். அவனுக்கு அடுத்து ஜெட்டதீசன் கிபி 331 லிருந்து 339 வரை ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீ மேகவண்ணனின் சகோதரனின் கடைசி மகன். ஒன்பது ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு தனது மகன் புத்ததாசனிடம் ஆட்சியை ஒப்படைத்து அவன் மரணமடைந்தான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் உபதேசன் ஆட்சியை எடுத்துக் கொண்டான். நல்ல குணங்கள் கொண்ட மன்னனாக இவன் விவரிக்கப்படுகின்றான்.

புத்ததாசனுக்குப் பின்னர் அவன் மகன் உபதேசன் அரியனை ஏறினான். உபதேசனின்  மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த அவனது தம்பி மகாநாமன் மன்னனைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவனுக்கு இரண்டு மனைவியர்- ஒருவர் சிங்களப் பெண். மற்றொருவர் தமிழ் பெண். தமிழ் பெண்ணுக்குப் பிறந்த சொத்திசேனன் என்பவன் மகாநாமனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டான். ஆனால் அன்று இரவே தனது தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த சிங்கள வம்சாவளிப் பெண் சம்ஹாவின்  காதலனால் கொல்லப்பட்டான். அவளது காதலன் அரசனானான். பின் அவனும் இறந்து போனான். பின் தாதுசேனன் என்பவன் ஆட்சிபீடத்தை ஏற்றான்.

அந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து படையுடன் வந்த பாண்டு என்ற தமிழ் மன்னன் இலங்கையில் போர் தொடுத்து  அனுராதபுரத்தை கைப்பற்றிக்கொண்டான். ஐந்து ஆண்டுகள் இந்த தமிழ் மன்னன் பாண்டுவின் கீழ் இலங்கை ஆட்சி இருந்தது. பாண்டு என்பது ஒரு பாண்டிய சிற்றரசனாக  இருக்க வேண்டும். அவன் ஐந்தாண்டுகளில் மரணமடைய அவனது மகன் பாரிந்தன் முடிசூடிக் கொண்டான். மூன்றாண்டுகளில் அவனும் மரணமடைந்தான்.  இந்தக் காலகட்டத்தில் தாதுசேனன்  பாண்டிய ஆட்சிக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு வந்து தாக்கினான். அதில் வெற்றியும் பெற்றான். இலங்கை முழுவதையும் கைப்பற்றி கொண்டு கிபி 459 லிருந்து 477 வரை மன்னனாக ஆட்சி செய்தான். இக்காலகட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து இலங்கையில் விவசாயத்தைச் செழிக்க வைத்தான்.

அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதலில் மகன் மொகல்லானன் பட்டத்துக்கு வந்தான். குடும்ப சண்டையினால் அவன் தப்பி ஓடவே இரண்டாவது மகன் காசியப்பன் மன்னனாக அரியணை ஏறினான். காசியப்பன் கி.பி 477 இலிருந்து கி.பி 495 வரை ஆட்சி செய்தான்.

முன்னர் தப்பி ஓடிய  மொகல்லானன்  பதினெட்டு வருடம் கழித்து இந்தியாவில் இருந்து ஒரு படையையும் சேர்த்துக் கொண்டு இலங்கை திரும்பினான். போர் நடைபெற்றது. அதில் காசியப்பன் கொல்லப்பட்டு மொகல்லானன்  அரியணை ஏறினான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் குமாரதத்துசேனன் என்பவன் மன்னனானான். அதன் பிறகு அவனது மகன் கீர்த்திசேனன் அரியணை அமர்ந்தான். அவன் ஒன்பது மாதத்தில் அவனது மாமன் சிவா என்பவனால் கொலை செய்யப்பட்டான். சிவாவின் ஆட்சியும் குறுகிய காலமே இருந்தது. இப்படியே செல்கிறது இலங்கை மன்னர்களின் அடுத்த இருநூறு ஆண்டு கால வரலாறு.

ஹத்ததாடன் என்பவன் கி.பி 659 இலிருந்து 667 வரை அரசனாக இருந்தான். அதன் பின்னர் மீண்டும் சில ஆண்டுகளில்  கலவரம்  ஏற்படவே, அதன் பின்னர் ஸ்ரீ சங்கபோதி கி.பி.667 லிருந்து 683 வரை ஆட்சி செய்தான். அப்போது இலங்கை முழுவதும் பௌத்த சமயம் பரவியிருந்தது. தமிழ் சேனாதிபதி ஒருவன் பௌத்த விகாரைக்கு மண்டபங்களை அமைத்து கொடுத்தமையையும் சூளவம்சம் குறிப்பிடுகிறதுஸ்ரீ சங்கபோதி ஆட்சிக்காலத்தில் புலத்தி (பொலநறுவை) தலைநகரமாக விளங்கியதுஸ்ரீ சங்கபோதியின் மறைவுக்குப் பிறகு பிரதம அமைச்சராக இருந்த பொத்தகுட்டன் என்ற தமிழ் அதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின் அவனும் கொல்லப்பட்டான். அதன் பின்னர் மானவர்மன் அரியணை ஏறினான். மானவர்மன் சமகாலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த நரசிம்ம பல்லவ மன்னனுடன்  நெருக்கமான உறவு கொண்டவன். அது தொடர்பான செய்திகளை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்...