Sunday, April 28, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 48


சைவத் திருமடங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது குருபூஜை. மடத்தை ஸ்தாபித்த குருவின் சிறப்புக்களை மடத்திலுள்ளோர் மட்டுமன்றி பொதுமக்களும் அறிந்து அந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் இப்பூஜை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது.

திருவாவடுதுறை மடத்தின் குருபூஜைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உ.வே.சாவிற்குக் கிடைத்தமையால் அந்த விஷேஷ தினத்தின் சிறப்புக்களை என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார். இது அக்காலத்தில் குருபூஜை எவ்வகையில் நடத்தப்பட்டது என்பதைப் பதியும் ஆவணமாக இன்று நமக்கு அமைந்திருக்கின்றது. அத்தியாயம் 44ல் வருகின்ற குருபூஜை பற்றிய விரிவான விளக்கங்களிலிருந்து இப்பூஜை எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை வாசிப்போர் அறிந்து கொள்ள முடிகின்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தை ஸ்தாபித்து வைத்த குருவானவர் ஸ்ரீநமசிவாய மூர்த்திகளாவார். இவரது நினைவாக தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் மடத்தின்  குருபூஜை நடைபெறுகின்றது. அக்காலத்தில் இவ்விழாவின் போது உள்ளூர் வாசிகள் மட்டுமன்றி அயலூர் மக்களும் இந்த விழாவில் கலந்து பங்கு கொள்ளும் நிமித்தம் திருவாவடுதுறை வந்து தங்கியிருந்துச் செல்வது வழக்கமாக இருந்திருக்கின்றது. மக்களில் ஜாதி பேதமின்றி அனைவரும் வந்து கலந்து கொள்ளும் வகையிலும் தூரத்திலிருந்தும் மக்கள் வந்திருந்து கலந்து கொண்டனர் என்றும் எங்கு நோக்கினாலும் மக்கள் பெருங்கூட்டமாக இருந்ததைக் தாம் கண்டதையும் உ.வே.சா.குறிப்பிடுகின்றார்.

பூஜை மட்டுமல்லாது இசைக்கச்சேரிகளும் இத்திருவிழாவின் போது தொடர்ந்து நிகழுமாம். நூற்றுக்கணக்கான சங்கீத வித்வான்களும் வந்து கலந்து சிறப்புச் செய்வார்களாம். அவர்களில் கதை சொல்பவர்கள், வாய்ப்பாட்டு கச்சேரி செய்பவர்கள், வீணை, புல்லாங்குழல், கோட்டு வாத்தியம், பிடில் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர் என்றும் சமஸ்கிருத வித்துவான்கள், வேத பாராயணம் செய்யும் வித்திவான்களும் தேவார திருப்பாடல்களை இன்னிசையுடன் பாடும் ஓதுவார்களும் தங்கள் தங்கள் கலைத்திறமைகளைக் காட்டி மகிழ்விப்பர் என்றும் குறிப்பிடுகின்றார்.

திருவாடுதுறை மடத்தைச் சார்ந்த கோயில்களிலிருந்தும் மடங்களிலிருந்தும் தம்பிரான்களும் இந்தக் குருபூஜையில் கலந்து கொள்ள வந்து விடுவார்கள். அதோடு இம்மடத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் கனவான்களும் இந்த நாளில் குடும்பத்தினருடன்  வந்திருந்து செல்வார்களாம்.

கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிப்பது போலவே வயிற்றுப் பசிக்கும் விருந்தளிக்கும் நிகழ்வும் தவறாமல் நடைபெறுமாம். அக்காலத்தில் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருபவர் யாராகினும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவு தயாரக உள்ளது என்பதை குறிப்பிட மடத்தில் அன்னக்கொடி ஏற்றப்படுமாம். இக்கொடி ஏற்றப்படும் போது திருவிழாவில் கலந்து  கொள்ள வந்த மக்களோடு, ஏழை எளியோர், வருமையில் வாடுபவர்கள், பரதேசிகள் அனைவருக்கும் பாரபட்ஷமின்றி உணவு வழங்க திருமடம் ஏற்பாடு செய்திருந்ததையும் இக்குறிப்புக்களால் அறிகின்றோம்.

அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் நடைபெறும் இக்குருபூஜையை மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் ஒரு பெரிய விஷேஷமாக நினைத்துக் கொண்டாடினார்கள். தங்கள் இல்லங்களையும் தெருக்களையும் மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து  அச்சமயத்தில் வருகின்ற விருந்தினர்களை உபசரித்து விருந்தளித்து மகிழ்வித்தனர் என்பதையும் வாசிக்கும் போது இது அவ்வூர் மக்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததொரு திருவிழாவாக அமைந்திருந்தது என்பதனையும் உணர முடிகின்றது.

திருவாவடுதுறை மடத்தில் மட்டும் நிகழும் ஒரு நிகழ்வு என்பது அல்லாமல் திருவாவடுதுறை நகருக்கே சொந்தமான ஒரு பெருநாளாக இத்தினம் கொண்டாடப்பட்டிருக்கின்றது. "இத்திருவிழா ஒரு வகையில் தமிழ்நாட்டுக்கே உரியதென்றும் சொல்லலாம்.தமிழ் நாட்டிலுள்ள பலரும் அத்திருநாளில் அங்கே ஒன்று கூடி ஆனந்தமுற்றார்கள்" என்று உ.வே.சா குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.

இத்தகு நிலையில் விஷேஷம் என்ற அளவில் குருபூஜை விழா தற்சமயம் இல்லையென்றாலும் இன்றளவும் திருவாவடுதுறை நகருக்கான சிறப்பான ஒரு  திருநாளாகக் குருபூஜை அமைந்திருக்கின்றது. கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் கூட திருவாவடுதுறை திருமடம் இன்றளவும் அதன் முக்கியத்துவமும் சிறப்புக்களும் மறைந்தும் அழிந்தும் விடாமல் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதில் பெரும் கடமை ஆற்றுகின்றது என்பதோடு தங்கள் சேவையைத் தங்கள் சொந்த ஊரில் மட்டுமன்றி கடல் கடந்தும் பிற நாடுகளில் சைவ நெறியைத் தொடர்பவர்கள்  பயனுறும் பொருட்டு தொடர்ந்து தத்துவ வகுப்புக்கள் நடத்துவதன் வழியும் நூல்கள் பிரசுரிப்பதன் வழியும் செய்து வருகின்றனர் என்பதை பதிய வேண்டியதும் அவசியமாகின்றது.

சுபா

Saturday, April 20, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 47


இன்று மேலும் தொடரலாமா  என நினைத்து என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 40க்குப் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மீண்டும் வாசிக்கலானேன். மெதுவாக இந்தப் பதிவு செல்கின்றதோ ? சில பகுதிகளை விடுத்து அடுத்தப் பகுதிகளுக்குச் செல்லாலாமா?  என யோசித்தால் ஆங்காங்கே சுவாரசியமான விபரங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை விட்டு விட்டு செல்ல மனம் வராததால்  இன்று அத்தியாயம் 41ஐ ஒட்டிய என் சிந்தனைகள்.

மனிதர்களில் பல்வேறு வகையினர். ஒருவரை இன்னொருவரின் செயல் பாதிக்காத வரை ஒருவரால்  மற்றொருவருக்குத் துன்பமில்லை. ஒரு சிலர் பிறரைக் குறை கூறியே இன்பம் காண்பவர்களாக இயல்பாக இருக்கின்றனர். தம்மை நல்லவர்களாக, தம் சிந்தனைகள் நல்லெண்ணங்களாக மனதில் ஆழமாக பதிய வைத்து தாம் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் காரணம் இருப்பதாகவும் மற்றவர்கள் செய்யும் காரியங்கள் திருத்தப்பட வேண்டியவை என்ற எண்ணமும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிலும் பொருளாதார  பலமும் இந்தச் சிந்தனையோடு சேர்ந்து விட்டால்  கேட்கவேவேண்டியதில்லை. தம்மை விட உலக நடப்பும் நல்லதும் கெட்டதும் அறிந்தார் உலகில் வேறொருவரும் இல்லை என்று ஆழப்பதிந்த சிந்தனையோடு உலா வருபவர்களாக இருக்கின்றனர்.

பட்டீச்சுர வாசத்தில் பிள்ளையவர்கள் மாணாக்கர் சகிதம் தங்கியிருந்த கண்வான் ஆறுமுகத்தா பிள்ளையென்பவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பால் ஆழமான அன்பும் மரியாதையும் கொண்டவர். அவரை இன்முகத்துடன் வரவேற்று பல வாரங்கள் உபசரித்தவர். ஆனால் அவர் ஏனைய மாணவர்களிடத்து அவர்களைக் குறை கண்டு கடுஞ்சொற்களால் புண்படுத்தி மகிழ்வராக இருந்தவர். உ.வே.சாவுக்கு இந்த அனுபவம் மிகுந்த வேதனையைக் கொடுத்த விஷயத்தை இந்த அத்தியாயத்தில் பதிகின்றார்.

சிலர் உபகாரம் செய்கின்றோம் என நினக்கும் போது அதற்காக உபகாரம் பெறுபவர்கள்  தம்மை விட அறிவாளிகளாக இருந்து விட முடியாது என நினைத்து விடுகின்றனர். ஆறுமுகத்தா பிள்ளை இதற்கு எடுத்துக் காட்டாக நடந்து கொண்டமையை இங்கே பார்க்கின்றோம்.

பிள்ளையவர்களின் திருநாகைக் காரோணப் புராணம் முடித்து மாயூரப் புராணத்தை ஆரம்பித்த வேளையில் கசப்பான ஒரு சம்பவம் நிகழ்கின்றது. ஒரு முறை முதல் நாள் வைத்த பாடச் சுவடியை மறு நாள் வந்து பார்க்கும் போது உ.வே.சாவிற்கு அது காணக் கிடைக்கவில்லை. அது மாயமாய் போய் மறு நாள் கிடைப்பது ஒரு நாடகம்.  ஏற்கனவே சில முறை ஆறுமுகத்தா பிள்ளை உ.வே.சா மீது சில காரணங்களுக்காக சினத்துடன் இருக்கும் சமயம் அது. அந்தச் சினத்தைக் காட்ட தருணம் காத்துக் கோண்டிருக்கின்றார்.  அது  இந்தச் சுவடியின் வடிவில் வந்து அமைய இதனையும் ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஏளனம் செய்து இலக்கியத்திலும் சோதிக்கின்றார். சோதித்து குறை கூறி மேலும் உ.வேசா மன வருத்தம் அடைவதை பார்த்து மகிழ அவருக்கு விருப்பம்.

இப்போதும் கூட பார்க்கின்றோமே. இயல்பான வாழ்க்கையிலும் சரி, இணைய உலகத்திலும் சரி. ஏதாவது ஒரு காரணத்திற்காக யாராவது ஒருவர் மேல் ஒருவருக்கு ஒருவித அபிப்ராயம் ஏற்பட்டு விட்டால் அவர்கள் நின்றாலும் குற்றம்; நடந்தாலும் குற்றம்.

குற்றம் எங்கே இருக்கின்றது? பார்ப்பவர் மனத்திலல்லவா இருக்கின்றது அது..! நல்லதையே நினைப்பவர்களுக்கு பார்ப்பனவற்றில் நன்மையே தெரியும். பிரச்சனையும்,  மனக்குறையும்,  இயலாமையும் பார்ப்பவர்களுக்கு இவை தானே தெரியும்.

இப்படித்தான் ஆறுமுகத்தா பிள்ளை.
"நன்றாக இவர்கள் எல்லாம் எங்கே படிக்கின்றார்கள்?  எங்கே நான் வருவதற்குள் ஒரு செய்யுள் தயாரித்து வைக்கவும்"  என்று உ.வே.சாவுக்குக் கட்டளையிட்டு அவர் செய்யுள் உருவாக்குகின்றாரா என கண்காணிக்க ஒருவரையும் விட்டுச் செல்கின்றார். ஆனால் பிள்ளையவர்களோ அந்தக் கண்காணிப்பாளரை ஒரு வழியாக அனுப்பிவிட்டு உ.வே.சாவுக்கு ஆறுமுகத்தா பிள்ளையின் மனதை இலேசாக்கும்  வகையில் உருவாக்கப்பட்ட ஒரு செய்யுளை கற்றுத் தந்து அதனை தனது செய்யுளாக அவர் வரும் போது சொல்லச் சொல்கின்றார். இருதலைக் கொள்ளி எரும்பு நிலை என்றாலும் மாணவர் மனம் வருந்தி அது புண்பட்டு விடக்கூடாதே என்று நினைத்து அவர் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து தன் மாணாக்கரைக் காப்பாற்ற தனது செய்யுளை உ.வே.சாவின் செய்யுளாகச் சொல்லச் செய்து அவரைக் காப்பாற்றி மகிழவைக்கும் பிள்ளையவர்களின்  பண்பினை எப்படிப் போற்றுவது?

“ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார்-கூறுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயை செய் நீ”

என்ற அந்த இளம் வயதில் தாம் மனனம் செய்த அந்தச் செய்யுளை மறக்காது என் சரித்திரம் நூலில் பதிகின்றார் உ.வே.சா. இந்த செய்யுள் ஆறுமுகத்தா பிள்ளையின் மனதை கொஞ்சம் கரைய வைத்ததோடு அடுத்த சில நாட்கள் பட்டிச்சுரத்தில் உ.வே.சாவும் பிற மாணவர்களும் தொடர்ந்து மனக்கிலேசம் இல்லாமல் இருக்கவும் உதவியது.

இந்த ஆறுமுகத்தா பிள்ளையிடம் ஒரு பழக்கம் இருந்ததாம். அதாவது காலையில் தனது மகன் முகத்தில் தான் எழுந்ததும் கண் விழிப்பாராம். இப்படி செய்வது அன்றைய நாளை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் என்பது அவர் நம்பிக்கை. இதனை ஏளனமாக உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.
....
"தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும்  சந்தோஷமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ் நாளில் சந்தோஷம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில் எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே! "

வாசித்து முடித்தபோது மனம் இந்த மனிதரின் குணத்தை நினைத்து வருந்தியது. இப்படிப்பட்ட சிலர் அப்போது மட்டுமா இருந்தனர்? இப்போதும்தான்!

தொடரும்..

சுபா

Sunday, April 14, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 46



இந்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் நான் மேற்கொண்டிருந்த தமிழகப் பயணத்தின் போது வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்  தொடர்பான ஆவணப் பதிவுகளில் நான் ஈடுபட்டிருந்தேன். தக்க ஏற்பாடுகளை முன்னரே செய்திருந்தாலும் கூட இறையருள் இவ்வகைப் பணிகளுக்குத்  துணையிருக்கும் என்ற ஆழமான எண்ணம் இருப்பதனால் காரியங்கள் நலமே வெற்றிகரமாக அமைந்ததில்  எனக்கு ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது.

திருவாவடுதுறை மடத்தில் இரண்டு நாட்கள் செலவிடும் வாய்ப்பு அமைந்தது. முதல் நாள் காலையிலும் மறு நாள் மதியத்திலும் என நான் திருமடத்தின் புலவர்களுடனும் நிர்வாகத்தினருடனும், நூலகத்தினருடனும் கழித்தேன். நான் சென்றிருந்த சமயத்தில் புதிதாக ஆதீனகர்த்தராக நியமணம் பெற்ற சுவாமிகள் கன்னியாகுமரி பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தமையால் அவரை தரிசிக்க இயலவில்லை. எனினும் மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்கள் நூல்கள் மின்னாக்கம் தொடர்பாகவும் அவரைப் பற்றிய  மடத்தின் தொடர்புடைய விஷயங்களைப் பதிவாக்கவும் நான் வந்திருக்கும் விஷயத்தை சுவாமிகளுக்கு நிர்வாகத்தினர் தெரிவித்து அனுமதி பெற்றிருந்தனர். என்னைத் திருவாவடுதுறை மடத்தின் கோயில், நந்தவனம்,  திருமூலர் சன்னிதி, தியான மண்டபம், திருமடத்தின் அலுவலகப் பகுதி, பொதுமக்கள் சந்நிதி இருக்கும் பகுதி, நூலகம், கல்லூரி, பள்ளி என எல்லா பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று தகவல்களை விளக்கமாக வழங்கியதோடு நூலகத்தில் நான் தேடிய தலபுராணங்களைச் சிரமத்திற்கிடையே தேடியும் அளித்தனர்.மடத்தின் நூலகத்தின் பின் புறத்தில் அமர்ந்து அவற்றை உடன் வந்திருந்த நண்பர்களோடு மின்னாக்கம் செய்தேன்

இந்தத் திருமடத்தில் தான் உ.வே.சா அவர்கள் செய்யுள் வாசித்து ஆதீன கர்த்தர் சுப்ரமணிய தேசிகர் அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றார் என நினைத்த போது  சுப்ரமணிய தேசிகரின் நிழல் படத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட அதுபற்றி நான் வினவியபோது முதல் குரு முதல் சில மாதங்களுக்கு முன்னர் சிவபதம் பெற்ற ஆதீன கர்த்தர் வரை உள்ள ஓவியங்கள், நிழல்படங்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று எனக்கு அவற்றைக் ஆதீனப் புலவர்கள் காட்டினர் . இவர்களின் நிழற்படங்களையும் த.ம.அ சேகரத்திற்காக என் கேமராவில் பதிவு செய்து கொண்டேன்.

இந்தப் பயணத்தின் போது,  என் சரித்திரம் நூலைப் படித்த போது உ.வே.சா முக்கியமாகக் குறிப்பிடும் பட்டீச்சுரம் சென்று வர வேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகுந்திருந்தது. சோழர் கால ஆலயங்கள் சிலவற்றைப்  பதிவாக்கவும் என எனது பயணம் அமைந்திருந்ததால் 1.3.2013 அன்று மதியம்  திருவாவடுதுறை மடத்தில் மின்னாக்கப் பணிகளை முடித்துக் கொண்டு  கோனேரி ராஜபுரம்  கோயிலுக்குச் சென்று அதன் பின்னர் பட்டீச்சுரம் கோயிலுக்கும் சென்று வந்தேன்.

உ.வே.சா அவர்கள் அத்தியாயம் 40க்குப் "பட்டிச்சுரத்தில் கேட்ட பாடம்" என்ப் பெயரிட்டிருக்கின்றார். அதில் விலகிய நந்தி என தலைப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு விஷயம் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தமையால் பட்டீச்சுரம் சென்று இக்கோயில் தரிசனம் செய்து வர உறுதியாக நினைத்திருந்தேன். அங்கு சென்று ஆலய தரிசனம் முடித்து வந்த போது மீண்டும் இந்தப்பகுதி நினைவில் வந்தது.
...
"பட்டீச்சுரம் சென்ற முதல் நாள் மாலையில் பிள்ளையவர்கள் வெளியே உலாத்திவரப் புறப்பட்டார். நான் உடன் சென்றேன். அவ்வூருக்கு அருகிலுள்ள  திருமலைராயனாற்றிற்கு அழைத்துச் சென்றார். போகும்போது பட்டீச்சுர ஆலயத்தின் வழியே சென்றோம். அவ்வாலயத்தில் நந்திதேவர் சந்நிதியைவிட்டு மிக விலகியிருப்பதைக் கண்டேன். நந்தனார் சரித்திரத்தைப் படித்து ஊறிய எனக்கு அவர் சிவபெருமானைத் தரிசிக்கும் பொருட்டுத் திருப்புன்கூரில் நந்தி விலகினாரென்ற செய்தி நினைவுக்கு வந்தது. “இங்கே எந்த அன்பருக்காக விலகினாரோ!” என்று எண்ணியபோது என் சந்தேகத்தை என் முகக் குறிப்பினால் உணர்ந்த ஆசிரியர்’ “திருச்சத்தி முற்றத்திலிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமான் அருளிய முத்துப் பந்தரின் கீழே இவ்வழியாகத் தரிசனத்துக்கு எழுந்தருளினார். அவர் முத்துப் பந்தரின் கீழே வரும் கோலத்தைத் தாம் பார்த்து மகிழ்வதற்காக இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனுபுரீசுவரர் நந்தியை விலகும்படி கட்டளையிட்டனராம். அதனால்தான் விலகியிருக்கிறார்” என்றார்."

இந்தப் பட்டீச்சுரத்தில் திரு.ஆறுமுகத்தாபிள்ளை என்ற ஒரு கணவான் வீட்டில் தான் பிள்ளையவர்களும் மாணவர்கள் சிலரும் உ.வே.சா அவர்களும் இப்பயணத்தின் போது தங்கியிருந்தார்கள். இங்கு தாம் திருநாகைக் காரோணப் புராணம் படித்ததாகக் குறுப்பிடுகின்றார் உ.வே.சா. இதுவே பிள்ளையவர்கள் எழுதிய புராணங்களில் உ.வே.சா  கற்ற  முதல் தலபுராணம் என்ற செய்தியும் இந்த அத்தியாயத்தில் காணக் கிடைக்கின்றது. இந்தத் தலபுராண நூலை நான் திருவாவடுதுறை மடத்து நூலகத்திலிருந்து பெற்று மின்னாக்கம் செய்துள்ளேன். 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட ஒரு பெரிய நூல் இது.

தொடரும்..

அன்புடன்
சுபா