Sunday, July 29, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 11


பதிவு 11

ஒரு இயற்கை விரும்பியாக, தாவரங்கள் மரங்கள், பயிர்கள் மேல் அதிக நாட்டம் கொண்டவராக உ.வே.சா இருந்தமை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டோம். உ.வே.சா என்றால் ஓலைச்சுவடி என்று மட்டுமே அறிந்த நிலையில் அவரது குணங்களின் பல்வேறு பரிணாமங்களையும், வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்களையும் பதிவாக்கிக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது என் சரித்திரம். அந்த வகையில் என் சரித்திரம் நூலில் இயற்கையின் பால், செடி, கொடி, மரம், தாவரங்கள் பால் இவருக்கிருந்த நேசத்தையும் விவரிப்பதாக உள்ளது இந்த நூல்.

பிற்காலத்தில் பிள்ளையவர்களிடம் மாணவராகச் சேர்ந்த போது பிள்ளையவர்களின் தாவரங்களின் பாலான அலாதி ப்ரியத்தை அறிந்து கொண்டு பிள்ளையவர்களின் கவனத்தைப் பெற உ.வே.சா செய்த சில விஷயங்கள் ரசிக்கத்தக்கவை. ஆனால் அவை செயற்கையானவை அல்ல என்பதும் இவருக்கும் தாவரங்களின் பால் நேசம் இருந்தமையும் நூலில் வாசித்து தெரிந்து கொள்ள முடிகின்றது. உதாரணமாக 17ம் அத்தியாயத்தில் இயற்கை தந்த இன்பம் என்னும் பகுதியில் இப்படிச் சொல்கின்றார்.


"பயிர்கள் வகை வகையாகக் கொல்லைகளில் விளைந்து கதிர் விட்டிருப்பதும், அங்கங்கே புன்செய் நிலங்களில் இடையிடையே மொச்சை, துவரை முதலியவை வளர்ந்திருப்பதும் என் கண்களைக் கவரும். எவருடைய பாதுகாப்பையும் வேண்டாமல் இயற்கையாகப் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிகளும் துளசியும், நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் வில்வம், வன்னி முதலிய மரங்களும், மலர்ந்திருக்கும் அலரியும் பிறவும் இயற்கைத் தேவியின் எழிலைப் புலப்படுத்திக் கொண்டு விளங்கும். கம்பு விளையும் நிலத்தருகே கரைகளில் துளசி படர்ந்திருக்கும். கணக்குப்பிள்ளை கம்புப் பயிரை மாத்திரம் கண்டு மகிழ்வார்; அதனால் உண்டாகும் வருவாய்க் கணக்கில் அவர் கருத்துச் செல்லும். நான் அவரோடு பழகியும் அத்தகைய கணக்கிலே என் மனம் செல்வதில்லை. கம்பங் கதிர் தலை வளைந்து நிற்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன்; துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் கதிர்விட்டிருக்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன். “கம்பிலே தான் காசு வரும்; துளசியிலே என்னவரும்?” என்ற வியவகார புத்தி எனக்கு இல்லை. இரண்டும் என் கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சியை அளித்தன. வில்வமரமும் வன்னி மரமும் எனக்கு இயற்கைத் தாயின் எழில் வடிவத்தின் ஒரு பகுதியாகவே தோற்றின. மனிதன் வேண்டுமென்று வளர்க்காமல் தாமே எழுந்த அவற்றில் இயற்கையின் அழகு அதிகமாகவே விளங்கியது."

என் சரித்திரம் நூல் பல புதிய விஷயங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது என்றே சொல்வேன். அதில் ஒன்று அருணாசலகவி ராமாயணம் பற்றியது. என் சரித்திரம் நூலில் உள்ள  17ம் அத்தியாயம் வாசிக்கும் வரை நான் அருணாசலகவி ராமாயணம் என்னும் நூல் பற்றி அறிந்ததில்லை.

உ.வே.சா அவர்களின் தந்தையார் அருணாசலகவி ராமாயணப் பிரசங்கம் செய்பவர் என்பதோடு தந்தையோடு இணைந்து பிரசங்கத்தில் ஈடுபட்ட விஷயங்களையும் நூலில் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவுக்கு இசைப் பயிற்சியும் ஓரளவிற்கு நன்கு அமைந்திருந்தமையால் பிரசங்கம் செய்வதில் தந்தையோடு சேர்ந்து பாடி  ஊர்மக்களின் அன்பை பெற்றிருக்கின்றார் இவர்.

குன்னத்தில் குடும்பத்தோடு குடிபெயர்ந்து சென்று இருந்த போது நாட்டாண்மைக்காரர்களும் இவர்கள் குடும்பத்தை ஆதரித்து வந்த சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து யோசித்து இவரது தந்தையாரைக் கொண்டு அருணாசலகவி ராமாயணத்தைப் சிதம்பரம் பிள்ள்ளையவர்களின் வீட்டுத் திண்ணையில் பிரசங்கம் செய்வித்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாள் இரவும் என இப்பிரசங்கம் நிகழ்ந்திருக்கின்றது. இந்தப் பிரசங்கம் ஆத்மசந்தோஷத்தைக் கொடுத்தது என்பதை விட இவர்கள் குடும்பத்திற்கு நல்ல பொருளாதார வருவாயையும் ஈட்டித் தந்தது என்று சொல்லி நினைவு கூறுகின்றார் உ.வே.சா. இரண்டு மாத காலங்கள் இந்தப் பிரசங்கம் தொடர்ந்து இரவு வேளையில் நடந்திருக்கின்றது. இப்படி நிகழ்வுகளை  ஏற்பாடு செய்து கற்றவர்களை ஆதரித்து மக்களுக்கும் கேட்போர் செவிக்கும் மனதிற்கும் இன்பம் தர வைத்த புண்ணிய ஆத்மாக்களையும் நாம் போற்றாமல் மறக்கலாமா?

தொடரும்...
சுபா

Saturday, July 21, 2012

தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்

நூல் விமர்சனம்

முனைவர்.க சுபாஷிணி 





தமிழர் நாகரிகம், தமிழர் வரலாறு, ஆவணப் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அத்துறையில் தொழில் ரீதியாக ஈடுபடாதவர்களும் கூட ஆர்வம் காட்டிவரும் நிலை சற்றே பெறுகி வருவதை தற்சமயம் காண முடிகின்றது. இவ்வகை ஆர்வத்தின் வழி தோன்றுகின்ற ஆய்வுகளின் வெளிப்பாடுகளாக புதிய கோணங்களில் வரலாற்று விஷயங்களைத் தருகின்ற நூல்களை வாசகர்கள் வாசிக்கும் வாய்ப்பும் பெறுகி வருகின்ற நிலை ஆரோக்கியமான இலக்கியப் போக்காகவே அமைகின்றது.

இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பல அரிய நூல்களுடன் புதிய வெளியீடுகளையும் வாங்கிக் கொள்ளும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் ஒன்று  மோ. நேவிஸ் விக்டோரியா எழுதி பாவை அச்சகத்தின் வெளியீடாக வந்திருக்கும் "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" என்ற நூல்.

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் ஒரு நூல் அச்சு வடிவம் பெற்ற பெருமையை தமிழ் மொழியே பெறுகின்றது. இப்பெருமைக்கு ஆதாரமாக விளங்கும் தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) 1578ம் ஆண்டில் கொல்லத்தில் வார்க்கப்பட்ட திருத்தமான தமிழ் அச்செழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 14 X 10 செ.மீ  அளவு  காகிதத்தில் பதினாறே பக்கங்கள் கொண்ட சிறிய நூல் இது. சீனாவிலிருந்து அச்சமயம் இறக்குமதி செய்யப்பட்ட காகிதத்தில் ஒரு பக்கம் சிவப்பு வர்ணத்திலும் மறு பக்கம் வர்ணமில்லாமலும் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க மறை நூல் இது. நூலின் மேல் புறமும்  கீழ்புறமும் ஐரோப்பிய வெள்ளை நிறக் காகிதங்கள் வைத்து தைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலின் ஒரு பிரதி மட்டுமே இதுவரை ஆய்வாளர்களின் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1951 முதல் இந்த நூலின் தற்போது கிடைக்கக்கூடிய ஒரே பிரதி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தின் தொன்மையான நூல் வகையைச் சார்ந்த கிளை நூலகமான ஹௌடன் நூலகத்தில் (Houghton Library) பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


மோ. நேவிஸ் விக்டோரியாவின் "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" நூல் 125 பக்கங்களைக் கொண்டது. எளிமையான முகப்புடன் தம்பிரான் வணக்கம் எனும் நூலின் முதல் பக்கத்தையே அட்டைப் படமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இந்த நூல். "தமிழ் அச்சுத் தந்தை அண்ட்ரிக் அடிகளார்" என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் முன்னுரையோடு இன்னூல் வந்திருக்கின்றது என்பதும் கூடுதல் சிறப்பாக அமைகின்றது.

ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களையும், ஆவணங்களையும், பல்வேறு செய்திகளையும் தேடியெடுத்து அவற்றை பதிப்பிக்கும் தமிழ்ப்பணியில் பல தமிழறிஞர்கள் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஈடுபட்டு பல அரும் பெரும் இலக்கியங்களைச் சாதாரண மக்களும் வாசித்து புரிந்து கொள்ளும் வகை செய்தனர். இப்பணி முற்றுப் பெற்றிடவில்லை என்பதை நாம் அறிவோம். நூல் பதிப்பாக்கத்திற்குப் பல்வேறு தொழில்நுட்ப வாய்ப்புக்கள் அமைந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில் தனியார் பலரும், பல்கலைக் கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஓலைச் சுடி பதிப்புக்களை அச்சுப் பதிப்பாகவும், புதிய தொழில் நுட்பத்தின் துணை கொண்டு நீண்ட காலம் பாதுகாக்கும் வகையினில் பல முயற்சிகளில் ஈடுபட்டும் பதிப்பித்தும் வருகின்றன. ஆரம்பத்தில் ஓலைச் சுவடி பதிப்பாக இருந்த நூல்கள், அச்சுப் பதிப்பாக எளிய வகையில் கையாள்வதற்கு ஏதுவாக வந்த பிறகு இவ்விலக்கியங்கள் பரவலாக வெளியீடு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தன.  தமிழறிஞர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் உயர் மட்ட சமூகத்தினருக்கும் மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி எளியோரும் சாதாரண மக்களும் கூட தமிழ் நூல்களை வாசிக்கவும் அவற்றின் பொருள் புரிந்து கொள்ளவும் முடியும் என்ற கல்விப் புரட்சி ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்தது அச்சுப் பதிப்பாக்க முயற்சிகள் என்பது மறுக்க முடியாத கருத்து.

அச்சுக்கலை தமிழகத்தில் எப்போது தோன்றியது? அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது? யார் இவ்வகை முயற்சிகளில் ஈடுபட்டோர்? எவ்வகை நூல்கள் தமிழ் மொழியில் முதன் முதலாக அச்சு பாதிப்பாக்கம் கண்டன போன்ற கேள்விகளுக்கான விடைகள் தமிழ் கற்ற பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது ஐயமே! இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு நூலாக "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்"  நூல் அமைகின்றது.

வணிகத்தைக் காரணமாகக் கொண்டு அத்துடன் கிறிஸ்துவ சமயம் பரப்பும் மதபோதகர்களாக தமிழகம் வந்த போர்த்துக்கீஸிய கத்தோலிக்க மத குருமார்களும், ஜெர்மனியிலிருந்து டேனீஷ் அரசரின் ஆதரவுடனும், பொருளாதர பலத்துடனும் தமிழகம் வந்த ப்ரோட்டெஸ்டண்ட் மத குருமார்களும் பல குறிப்பிடத்தக்க தமிழ்ப்பணிகளை ஆற்றியுள்ளனர் என்பதை நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு சரித்திர ஆவணங்கள், நூல்கள், குறிப்புக்களில் காண்கின்றோம். இம்மத குருமார்களின் அப்பணிகளிலேயே சிகரம் வைத்தது போல அமைந்தது அச்சுக் கலையை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தி வைத்தமையே எனலாம்.

கத்தோலிக்க, ப்ரோட்டெஸ்டண்ட் கிறிஸ்துவ சமயத்தைத் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்புவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்த இம்மத குருமார்களுக்கு மொழி எனும் அடிப்படைச் சாதனம் இருந்தால் ஒழிய இப்பணியை எவ்வகையிலும் செய்வது சாத்தியப்படாது என்பதை அறிந்ததன் விளைவாக தமிழ் மொழியைத் தாமே முதலில் கற்றல், பின்னர் அம்மொழியில் மக்களுடன் மக்களாகக் கலந்து உரையாடி, அவர்களுக்கு இப்புதிய மதமான கிறிஸ்துவ மறையில் ஈடுபடுத்துதல் என்ற வகையில் தங்கள் பணிகளைச் செய்தனர். அதில் அச்சுப் பதிப்பாக்கம் முக்கியப் பங்கு வகித்தது என்பது மறுக்க முடியாத ஒன்று. கிறிஸ்துவ மத போதனையைப் பறப்ப வந்த இந்த ஐரோப்பிய மதபோதகர்கள் உள்நாட்டில் தமிழ் சன்றோர்களின் வழக்கத்தில் இருந்த சுவடி படித்தலைக் கறுக் கொண்டதோடு எழுத்தாணி பிடித்து எழுதும் ஆற்றலையும் பழக்கிக் கொண்டனர் என்னும் செய்திகள் தீவிரத்துடனும் ஆர்வத்துடனும் அவர்கள் புதிய இடத்தில் தங்கள் பணிகளைச் செய்யத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டமையை நன்கு உணர்த்தும்.

தமிழ் மொழியின் முதல் நூலை பற்றி விளக்கும் சில கட்டுரைகளும் முன்னரே வெளிவந்திருக்கின்றன. 2001ம் ஆண்டு செட்டியார் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த சேலம் தமிழ்நாடனின் "தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம்" இவ்வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நூல் என்பதில் ஐயமில்லை. அச்சுக்கலை, அச்சுப் பதிப்பு முறைகள், காகிதத்தின்  வரலாறு, காகிதப் பயன்பாடு ஐரோப்பாவிற்கு அறிமுகமான தகவல்கள், அச்சுக்கட்டைகள் உருவாக்கம் எனப் பல விஷயங்களை விளக்கும் ஒரு கருவூலம் இந்தச் சிறிய நூல். இதில் தமிழ் மொழியின் முதல் எழுத்துப் பெயர்ப்பு வடிவ அச்சு நூல் கார்டிலா, தமிழ் மொழியில் வெளிவந்த முதல் அச்சுப் பதிப்பான தம்பிரான் வணக்கம், தமிழ் மொழியில் வெளிவந்த இரண்டாவது அச்சுப் பதிப்பான கிரிசித்யானி வணக்கம், தமிழ் மொழியில் வெளிவந்த மூன்றாவது அச்சுப் பதிப்பான கன்பெசனரியோ பற்றிய விளக்கங்களும் அறிமுக உரைகளும் உள்ளன. முதல் தமிழ் அச்சுப் புத்தகத்துக்கு மூலகாரணமாக இருந்த அன்டிறிக்கி அடிகளாரின் (Hendriq Henriquez) வரலாறும் மேலும் பல தகவல்களும் கூட இடம்பெறுகின்றன. அத்துடன் தம்பிரான் வணக்கம் நூல் முழுதாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தமிழாக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது கிரிசித்தியானி வணக்கம், கன்பெசனரியோ ஆகிய நூல்களின் பக்கங்களும் இணைக்கப் பட்டுள்ளன. அவ்வகையில் இதே கருத்தினை மையமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் மற்றுமொரு நூலாக மோ. நேவிஸ் விக்டோரியாவின் "தம்பிரான் வணக்கம்-தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" விளங்குகின்றது.

சரி நூலைப் பற்றி இனி காண்போம்.

இந்திய நாட்டில் ஐரோப்பியர் வருகையை விளக்கும் தகவல்களைக் கொண்டு இந்த நூல் தொடங்குகின்றது. நூல் ஆசிரியர் 16ம் நூற்றாண்டு ஐரோப்பியர் வருகையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த  கிரேக்க இந்திய வர்த்தக தொடர்புகள் தொடர்பான விஷயங்களிலிருந்து தனது பார்வையை செலுத்துகின்றார். இது நீண்ட கால தமிழர்-ஐரோப்பியர் வணிக தொடர்பினைச் சற்று விளக்கும் வகையில் அமைந்து விலக்க வரும் மையக் கருத்துக்குத் தேவையான  அறிமுகமாக விளங்குகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க-இந்திய வாணிகத் தொடர்புகளுக்குப் பின்னர் 15ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் கிறிஸ்டபர் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றோரின் கடல்வழிப் பயணங்கள், அதன் மையைக் குறிக்கோளாக அமைந்திருந்த இந்தியாவைக் கண்டுபிடிக்கும் நோக்கம் போன்றவை வரலாற்றுக் குறிப்புக்களுடன் இம்முதற் பகுதியில் விளக்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக வரும் பகுதியில் தமிழ் அச்சுப் புத்தகம் தோன்றிய வரலாறு விளக்கப்படுகின்றது. தூத்துக்குடி கடற்கரை வாழ்  பரதவர்கள் 30,000 பேர் ஒரே சமயத்தில் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவிய வரலாற்றுச் செய்தியும் அக்கால போர்த்துக்கீஸிய கத்தோலிக்க சமயத்தின் நிலைப்பாடு பற்றிய செய்திகளும் இங்கு சற்றே குறிப்பிடப்படுகின்றன.

தமிழகத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் வேறூன்ற முக்கிய காரணமாக அமைந்த முத்துக்குளித்துறை பரதவர்கள் சமூகத்தில் அக்கால கட்டத்தில் நிகழ்ந்த சில விஷயங்களை இன்னூலின் மூன்றாவது பகுதியில் நூலாசிரியர் விரிவாக விளக்குகின்றார். கடற்கரை பட்டினமாகிய தூத்துக்குடியில் அராபிய மூர் இன வணிகர்களின் வருகை, வணிக ஆக்கிரமிப்பு, இதனால் பரதவ மக்களிடையே ஏற்பட்ட சங்கடங்கள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக ஆசிரியர் இக்கருத்து கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

"கி.பி.1535ம் ஆண்டு, ஒரு நாள் தூத்துக்குடி கடற்கரையில் மாவுப்பணியாரம் விற்றுக் கொண்டிருந்த பரதவப் பெண்ணை மூர் அராபியன் அவமானப்படுத்தி விட்டான். இதனைக் கேள்வியுற்ற அவளது கணவன், அவனோடு சண்டையிட்டான். இந்தச் சண்டையின் போது அந்தப் பரதவன் காதில் அணிந்திருந்த தொங்கட்டான் என்று சொல்லப்படுகின்ற காதணியை அவனது காதோடு மூர் அராபியன் வெட்டி எறிந்து விட்டான்.  இந்தக் கொடுஞ்செயல் தங்கள் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரிய அவமானமாகக் கருதிய பரதவர்கள், அராபிய  மூர்களோடு சண்டயிட்டு, பலரைக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த மூர்கள் கீழக்கரையிலிருந்தும், காயல்பட்டினத்திலிருந்தும் ஏராளமான ஆயுதங்களுடன் திரண்டுவந்து, பரதர்களோடு போரிட்டு நிறையபேரைக் கொன்றனர். வெட்டி எடுத்துக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு பரதவனின் தலைக்கும் ஐந்து சிறிய பொற்காசுகள் தருவதாக மூர்கள் வாக்களித்தனர். அவ்வளவுதான்! ஏராளமான பரதவர்களின் தலைகள் வெட்டி எறியப்பட்டன. ஒரு தலைக்கு ஐந்து பொற்காசுகள் என்பது, ஒரு தலைக்கு ஒரு பொற்காசு என்று மலிவாகும் அளவிற்கு ஏராளமான தலைகள் உருண்டோடின".

மூர் அராபியர்களுடன் ஏற்பட்ட இப்பிரச்சனையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவி நாட வேண்டிய அவசியம் பரதவ மக்களுக்கு ஏற்பட்டமையை இன்னிலையில் கான்கின்றோம். இது மதமாற்றத்திற்கு நல்லதோர் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கேரளாவில் இருந்த டாம் ஜோகுருஸ் என்ற போர்த்துக்கீஸிய குதிரை வியாபாரி பரதவக் குலத் தலைவர்களான பட்டங்கட்டிகளிடம் பேசி அவர்களுக்குப் போர்த்துக்கீஸிய படைகளின் ஆதரவைப் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு பரதவர்கள் கிறிஸ்துவ மறையைத் தழுவ வேண்டும் என்று ஆலோசனை வழங்க கி.பி.1535ம் ஆண்டின் இறுதியில் பட்டங்கட்டிகள் கொச்சின் சென்று அங்கே முதன்மை கத்தோலிக்க குரு மிக்கேல் வாஸ் அடிகளாரிடம் திருமுழுக்கு பெற்று மதம் மாறுகின்றனர்.  வாக்களித்தபடி தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதிக்கு  ஒரு பெறும் கப்பற்படையை போர்த்துக்கீஸிய படைத் தளபதி அனுப்பிவைத்து மூர் அராபியர்களுடன் போரிட்டு அவர்களை அடக்கி படிப்படியாக அப்பகுதி முழுமையையும் தம் வசமாக்கிக் கொண்டமையை இப்பகுதியில் நூலாசிரியர் நன்கு விளக்குகின்றார். அதே ஆண்டிலும் 1536ம் ஆண்டிலும் தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதி இந்து சமய பரதவர்கள் 30,000 பேர் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக அமைகின்றது.

இத்தகவல்களோடு பரதவ மக்கள் கிறிஸ்துவ மதத்தினைத்  தழுவிய போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் மாற்றங்களைப் பற்றிய குறிப்புக்களையும் இப்பகுதியில் நூலாசிரியர் சில சான்றுகளோடு விளக்குகின்றார். இவை வாசகர்களுக்கு இச்சான்றுகளைக் காணவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.


அண்டிரிக்கி அடிகளாரைப் பற்றி விரிவான குறிப்புக்களுடன் ஒரு பகுதியை நூலாசிரியர் அமைத்திருக்கின்றார்.. தம்பிரான் வணக்கம் என்ற நூலை 1578ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்ட இவரைப் பற்றிய குறிப்புக்கள் இவரது சமய ஈடுபாடு, மத குருவாக போர்த்துக்கீஸிய கொம்பெய்ரோ நகரில் நிலைப்படுத்தப்பட்ட தகவல்கள், இவரது தமிழக வருகை, முதன்மைக்குருவாக தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஆகிய விஷயங்களை இப்பகுதியில் காண முடிகின்றது. முதலில் தமிழகம் வந்தபோது இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அறியாதிருந்த அண்டிரிக்கி  அடிகளார் பின்னர் தமிழ் இலக்கணத்தை தீவிரத்துடன் கற்று மிகக்குறுகிய காலத்தில் தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்ட விதம் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இப்பகுதியில் மிக விரிவாக தமிழ் அச்சுப் புத்தகம் தயாரிக்க ஏற்பட்ட தேவைகள், அச்சு எழுத்து தயாரிப்புப் பணிகள் பற்றிய விஷயங்களும் விளக்கப்படுகின்றன.

இதனை அடுத்து தம்பிரான் வணக்கம் நூல் உருவாக்கம், அதன் வடிவமைப்பு, அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள், காகிதங்கள், பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் பிரதி ரோமில் உள்ள இயேசு சபைக்கு அனுப்பப்பட்ட விஷயமும் பின்னர் ஒவ்வொரு இடமாக மாறி இப்போது கிடைக்கும் ஒரே ஒரு பிரதி பற்றியும் இப்பகுதியில் விரிவாக, வாசிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் விபரங்களைத் தருகின்றார். இதன் தொடர்ச்சியாக தம்பிரான் வணக்கம் முழு நூலும் இந்த நூலில் இணைக்கப்படிருப்பதும் ஒரு சிறப்பு. முதல் பக்கத்தை அலங்கரிக்கும் கொல்லம் தமிழ் எழுத்து அச்சுப் பதிப்புடன் கீழ்க்காணும் வாசகம் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றது.
"இயேசு சபையைச் சேர்ந்த அண்டிரிக்கி பாதிரியார் தமிழ்லே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்."

தம்பிரான் வணக்கம் நூலில் உள்ள தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, கூர்மையாக கவனித்து வாசிக்க முயற்சிக்கும் போது பல சொற்களை  வாசித்து புரிந்து கொள்ள முடிகின்றது. முழு நூலையும் மெத்த பிரயத்தனத்துடன் வாசகர்கள் புரிந்து கொள்ள முயற்சி எடுக்க தேவையிராதவாறு நூலாசிரியர் இப்பதினாறு பக்கங்களுக்கும் அதனை இக்காலத் தமிழில் வழங்கியுள்ளார். இது நூலை பிழையின்றி வாசித்து தெரிந்து கொள்ள பெரிதும் உதவுவதாக அமைந்துள்ளது எனலாம்.

இதே நூலில்,  தம்பிரான் வணக்கம் நூல், அதன் தற்கால தமிழ் வடிவம் ஆகிய பகுதிகளுக்குப் பிறகு அடுத்ததாக அமைவது தமிழின் முதல் ஒலி வடிவ நூல் என அழைக்கப்படும் கார்டிலா.

திரு.மோ.நேவிஸ் விக்டோரியா கார்டிலா நூலைப் பற்றிய விளக்கத்தையும் அதன் முழு பிரதியையும் இதே நூலில் வழங்கியுள்ளார். கி.பி. 1554ல் வெளிவந்த இந்த நூல் 40 பக்கங்கள் கொண்டது. தமிழ் எழுத்துக்கள் இல்லாமல், தமிழ் மொழி ரோமன்லிபியில் அச்சிடப்பட்ட வகையில் அமைந்த நூல் கார்டிலா.  கர்டிலாவின் ஒவ்வொரு வரியும் மூன்று முறை வருகின்றன. நடுவரியானது சற்று தடிமனான கருப்பு நிறத்திலிருக்கின்றது. இது தமிழ் வார்த்தைகள் ரோமன் லிபியில் வழக்கப்பட்டிருக்கும் பகுதி.  இந்த தடிமனான வரிக்கு மேலே உள்ள சிவப்பு நிறத்திலான முதல் வரி அதன் அர்த்தத்தை ரோமன் லிபியில் விளக்குகின்றது. மூன்றாவதாக கீழே உள்ள சிறிய கருப்பு  நிறத்தில் அமைந்த வரி போர்த்துக்கீசிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் முழு வடிவத்தையும் பார்க்கும் போது வாசிப்போரை வியக்க வைப்பதாக இவ்வமைப்பு உள்ளன.  இதன் தொடர்ச்சியாக கார்டிலாவின் முமு மொழி பெயர்ப்பையும் நூலாசிரியர் வழங்கியிருக்கின்றார். இது நூலை தமிழில் புரிந்து கொள்ள விழைவோருக்கு உதவுவதாக அமைந்துள்ளது.

தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கத்தையும், தமிழ் மொழி ஒலி வடிவத்தில் ரோமன் லிபியில் உருவாக்கப்பட்ட கார்டிலாவையும் சேர்த்து இந்த நூலில் ஆசிரியர் வழங்கியிருக்கின்றார். வெறும் நூல் அறிமுகம் என்றில்லாமல் இன்னூல்கள் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணங்கள், அதற்கான தேவை,  இதனை உருவாக்க நடைபெற்ற முயற்சிகள் அதில் அண்டிரிக்கி  அடிகளாரின் பங்கு, போர்த்துக்கீஸிய இயேசு சபையினரின் தமிழ் மற்றும் சமய நடவடிக்கைகள், தூத்துக்குடி முத்துக்குளித்துறை பரதவ மக்களின் 15ம் 16ம் நூற்றாண்டு வரலாற்றுச் செய்திகள் என  பலவகையில் விளக்கம் தருவதாக இந்த நூல் அமைந்திருக்கின்றது. நூலாசிரியர் இன்னூலில் கையாண்டுள்ள மொழி நடை மிக எளிதாக நூலின் சாரத்தைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. தமிழ் அச்சுப்பதிப்புகளில் ஆர்வம் உள்ளோர் மட்டுமன்றி கல்லூரி மாணவர்களும் வாங்கிப் படித்து பயன்பெற வேண்டிய ஒரு நூல் இது எனத் தயங்காமல் கூறலாம்.

குறிப்பு: இக்கட்டுரை ஜூன் 2012 கணையாழி இதழில் பிரசுரமானது.

வெளியீடு: பாவை அச்சகம்
முதற் பதிப்பு: நவம்பர் 2011
விலை ரூ:80.00

Tuesday, July 17, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 10


தமிழகத்திற்கான எனது ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் நான் தவறாது கோயில்களுக்குச் சென்று வருவதுண்டு. அதிலும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் கணிசமான எண்ணிக்கையில் பற்பல ஊர்களில் கோயில்களைப் பார்த்திருக்கின்றேன். ஓவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு விதம். எது எதனினும் சிறந்தது என்று சொல்ல முடியாது திகைத்துப் போய் பல முறை வியந்து வியந்து பார்த்திருக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் கோயில்களைப் பற்றி நான் அறிந்து கொள்ள விழையும் போது ஒரு புது விஷயம் காத்திருக்கும். எனக்கு இவ்வகைத் தேடலில் இன்றளவும் அலுப்பு தட்டவில்லை. இன்னமும் நிறைய கோயில்களை இதுவரை சென்றிராத ஊர்களுக்கெல்லாம் சென்று பார்த்து கண்டு மகிழ வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது.  

கோயில்களை வியந்து பார்த்து மகிழ்வுறும் அதே தருணம் கோயில்கள் பாதுகாப்பு, கோயில்களிலுள்ள சிற்பங்களின் பாதுகாப்பு, கோயில் சுற்றுப்புற பாதுகாப்பு, பராமரிப்பு, தூய்மை என்ற வகையிலும் தவறாமல் சென்று விடும் என் மனம். கோயிலுக்கு வருகின்ற மக்களின் சிந்தனையில் தங்களது வேண்டுதல், அது நிறைவேறுதல் வேண்டும், அதற்காக சில சடங்குகள் செய்தல் வேண்டும் என்ற எண்ணமே ஆழப்பதிந்து போய் விட்டமையினால் மக்கள் கோயிலைப் பற்றிய ஸ்தல புராணத்தை அறிந்து கொள்வது பற்றியோ, கோயில் வரலாற்றை அறிந்து கொள்வது பற்றியோ ஸ்தல விருட்சத்தைப் பற்றி அறிந்து கொண்டு சுவாமியைப் பற்றி பேசி மனம் மகிழும் நிலையிலில்லாத மாந்தர்களாக மாறிப்போய்விட்டனர் என்பது கண்கூடு. கோயில் கட்டிடக் கலையை ரசித்தல், கோயில் சிற்பங்களின் கவின் நயத்தை கண்டு களிப்பதில் ஈடுபடுதல் என்பதெல்லாம் இல்லாமல் சடங்குகள் சடங்குகள் என்று திளைத்துப் போய் இருப்பதையே பக்தி என்ற புரிதலோடு வாழ்க்கையில் கடைபிடிக்கும் நிலையில் பொதுவாகவே இக்கால மக்கள் இருக்கின்றனர்.

உ.வெ.சா. காலத்திற்குச் செல்வோம்.இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகள். அவ்வளவே!

அவர் சொல்கின்றார்.
"ஸ்தலங்களைப் பற்றிய வரலாறுகளைத் தெரிந்து கொள்வதில் அக்காலத்தினருக்கு அதிக விருப்பம் இருந்தது. ஸ்தலத்தின் விருஷம், மூர்த்திகளின் திருநாமம், வழிபட்டவர்கள் வரலாறு, தீர்த்த விஷேஷம் முதலிய விஷயங்களை அங்கங்கே உள்ளவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்குச் சொல்வார்கள். தங்கள் ஊர் சிறந்த ஸ்தலமென்றும் பலவகையான மகாத்மியங்களை உடையதென்றும் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. குன்னத்தின் ஸ்தல மகாத்மியங்களை என் தந்தையார் விசாரிக்கத் தொடங்கினார். நானும் அவற்றைத் தெரிந்து கொண்டேன். "

இந்த நிலை இன்று வந்தால் கோயில்கள் சிறப்புடன் வாழும்.

என் சரித்திம் வாசிக்கும் போது ஆலயங்கள் பற்றிய மேலும் ஒரு புதிய விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். அதாவது, சிறப்பான புகழ்பெற்ற ஒரு கோயில் இருந்தால் அதனைப் போலவே தங்கள் ஊரிலும் ஒரு அமைப்பினை அமைத்து மக்கள் வழிபடும் முறை இருந்திருக்கின்றது.  முன்னர் மலேசியாவில் பினாங்கில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில் கட்டியபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே அமைக்கின்றனரே என்ற எண்ணம் மனதில் எழுந்ததுண்டு. இது பொது வழக்குத்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன உ.வே.சாவின் வார்த்தைகள்.

" மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர்.


அன்றியும் கும்கோணத்துக்குக் கிழக்கே திருவிடைமருதூர் இருப்பது போலக் குன்றத்திற்குக் கிழக்கே வெண்மணி என்னும் ஊர் இருக்கிறது. திருவிடைமருதூருக்கு மத்தியார்ஜு னம் என்று பெயர். அதற்கு வெண்மையாகிய
இருதயாகாசத்தின் மத்தியென்று பொருள் செய்து, திருவிடைமருதூர் தகராகாசத்திற்குச் சமானமானதென்று தத்துவார்த்தம் கூறுவர் சிலர். (அர்ஜு னம்-வெள்ளை) வெண்மணி என்னும் பெயர் மத்தியார்ஜுனமென்னும் பெயரோடு ஒருவாறு ஒப்புமையுடையதாகவே, அவ்வூரில்  தோன்றிய கோயில் மூர்த்திக்கு ஆதி மகாலிங்கமென்ற திருநாமம் உண்டாயிற்று. மகாலிங்கமென்பது திருவிடை மருதூர் ஸ்வாமியின் திருநாமம். பிருகத் குச நாயகியென்பதே இரண்டிடங்களிலும் உள்ள அம்பிகையின் திருநாமம்."

ஆக புகழும் சிறப்பும் பெற்ற கோயில்களின் பிரதிகளாக புதிய கோயில்கள் எழுந்துள்ளமையும், மிக தூரப்பயணம் செய்யாமல் தங்கள் இருப்பிடத்திலேயே தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு கோயில் எழுப்பி வழிபட்டும் மகிழும் மக்களின் மன்ப்பாண்மையையும் இதன் வழி உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இதனை வாசித்து முடித்த போது இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர் செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில் அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். முயற்சித்துப் பார்ப்போமே. விஷயங்கள் அறிந்த நண்பர்கள் தகவல் கொடுக்கத் தொடங்கலாமே!

தொடரும்...

குறிப்பு: இப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புக்கள் 16ம் அத்தியாயத்தில் உள்ளன.


அன்புடன்
சுபா

Friday, July 13, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 9


உ.வெ.சா அவர்கள் வேங்கடராம சர்மன் என்ற பெயர் கொண்ட விஷயத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் இந்தப் பதிவில் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

உபநயனம் பற்றியும் அது தொடர்பில் நடந்த விஷயங்களைப் பற்றியும் கூறும் அத்தியாயத்தில் சில சம்பவங்களை உ.வே.சா அவர்கள் நினைவு கூறுகின்றார். உத்தமதானபுரத்தில் தான் உபநயனம் நடைபெற்றிருக்கின்றது. அரியலூரில் தங்கியிருந்த குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இவரது அப்பா உத்தமதானபுரத்துக்கு உபநயனத்திற்காகவே வந்து சேர்ந்திருக்கின்றார். இப்போதெல்லாம் உபநயனம் என்பது வீட்டுக்கு வீடு வித்தியாசமாக நடைபெறும் வழக்கம் இருக்கலாம். இந்த உபநயனம் என்னும் சடங்கைப் போன்றே ஜெர்மானிய கத்தோலிக்க, ப்ரோட்டெஸ்டண்ட் குடும்பங்களிலும் இளம் பருவத்தில் ஒரு வகை ஞானஸ்தானம் என்பது நடைபெறுவதைக் காண்கின்றேன். இதைப் பற்றியும் இதன் தொடர்பில் இச்சடங்கைப் பற்றியும் வாய்ப்பமைந்தால் வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன். இப்போது உ.வே.சாவுக்கு உபநயனம் நடந்த கதையைப் பார்ப்போம்.

உபநயன ஊர்வலம் வாகன ஊர்வலம் என்பது இல்லாமல் தான் நடைபெற்றிருக்கின்றது. பொதுவாகவே இச்சடங்கின் போது உபநயனம் பெறும் சிறுவனை அம்மான் தன் தோளில் ஏற்றிக் கோள்வாராம். மக்கள், பெண்களும் ஆண்களுமாக வாத்திய கோஷ்டியின் கோஷங்களுடன் ஊர்வலமாக்ச் செல்வார்களாம். இப்படிச் செல்லும் கோஷ்டி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்குமாம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படி வந்து நிற்கும் உபநயனப் பையனுக்கு ஆரத்தி எடுப்பார்களாம். இதே சடங்குதான் உ.வே.சா அவர்களின் இளம் ப்ராயத்திலும் இவருக்கு நடந்திருக்கின்றது.

இவர்களின் குடும்ப வழக்கத்தின் படி உபநயன காலத்தில் சிறப்பு பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது அந்த வகையில் இச்சடங்கை முன்னிட்டு இவருக்கு வேங்கடராம சர்மன் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டு இப்பெயர் இவரது தகப்பனாருக்கும் ஏனைய பெரியோர்களுக்கும் பிடித்துப் போகவே இப்பெயரே இவருக்கு சில காலங்கள் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது. உ.வே.சா வேங்கடராம சர்மனாக சில காலம் அடையாளங் கொள்ளப்பட்ட கதை இது தான்.

உபநயனம் மட்டுமன்று .. எந்த சடங்காகினும் அதற்கு பொருட்செலவு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. உ.வே.சா காலத்திற்கு மட்டும் இன்னிலையில் விதிவிலக்கு இருந்திருக்கவா முடியும்?

இவரது உபநயனத்தைப் பற்றியும் அதற்கு பொருளுதவி கிடைத்த விதத்தையும் உ.வே.சா இப்படிக் கூறுகின்றார். "அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவராகிய கொத்தவாசற் குமரப்பிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது என் தந்தையாருடைய ஷேம லாபங்களை விசாரித்தார். பேசி வருகையில் என் உபநயனத்தைப்பற்றி அவர் கவலையடைந்திருப்பதையறிந்து"  அது விஷயமான கவலை தங்களுக்கு வேண்டாம். உபநயனத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் தங்களுக்கு பணம் கிடைக்கும்" என்று வாக்களித்தார்..........

என் பிதா இன்ன தினத்தில் முகூர்த்தம் வைத்திருக்கின்றதென்று குறிப்பிட்டுக் கொத்தவாசற் குமர பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். முகூர்த்தத்திற்கு நான்கு தினங்கள் முன்னதாக அந்த உபகாரி இரண்டு வேளாளப் பிள்ளைகளை வேண்டிய தொகையுடன் அனுப்பினார். அவர்கள் வந்து பணத்தை என் தந்தையார் கையிலே கொடுத்தார்கள். அதை வாங்கும் போது என் தந்தையாரும் அருகிலிருந்த சிறிய தந்தையாரும் கண்ணீர்விட்டு உருகினார்கள்."

உ.வே.சாவின் உபநயனச் சடங்கு உற்றாரும் பெற்றோரும் மனம் நிறைவடையும் வகையில் நடைபெற்றிருக்கின்றது. உறவினர்கள் பலர் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்து கலந்து கொண்டு உபநயனச் சிறுவனாகிய வேங்கடராம சர்மன் என்ற புதுப் பெயர் பெற்றுக் கொண்ட உ.வே.சாவை வாழ்த்திச் சென்றிருக்கின்றனர்.


தொடரும்...

சுபா

Thursday, July 5, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 8


சடகோபையங்காரின் நிலையே பல தமிழ் புலவர்களுக்கும் அக்கால கட்டத்தில் பொதுவான நிலையாக இருந்தமை என் சரித்திரம் வாசிக்கும் போதே நன்கு உணர முடிகின்றது. புலமையும் வருமையும் இணைந்தே இருப்பவையோ என்ற கேள்வியும் மனதில் தோன்றி மறைகின்றது.

அனைவருக்கும் கல்வி என்ற நிலை அமைவது சுலபமான ஒன்றா என்றால் இல்லை என்பதே பதிலாக நிற்கின்றது. உ.வே.சா காலத்திலும் கூட கல்வியாகியது உயர்ந்த சாதி மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கக் கூடிய விஷயமாக அமைந்திருந்தது என்பதனை கண்கின்றோம். கீழ்ச்சாதி மக்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறுவது என்பது அச்சு இயந்திரங்கள் பரவலாக வந்து கல்வி பொது மக்களுக்கும் கிடைக்கும் நிலை அரசியல் ரீதியாக மாற்றம் கண்ட பின்னரே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்தது. இன்றளவும் அனைவருக்கும் கல்வி என்பது முழுமையாக நடைமுறைபடுத்தப்படுகின்றதா என்பது ஐயத்திற்குட்படுத்தப்பட வேண்டியதொரு விஷயமே. இந்த சூழலில் கல்வியை வணிகமாகவும் நோக்கும் நிலையும் பரவி விட்டது. அரசாங்க பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் பால் மக்களின் நாட்டம் மிக அதிகரித்து பணத்தைச் செலவழித்து குழந்தைகள் கல்வியை திட்டமிடும் நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். நிற்க!

தொடர்ந்து சடகோபையங்கார் நிலையைப் பார்ப்போம். கல்வி.. வாசிப்பு.. பாடம் சொல்லுதல் என்பதிலேயே மனதைச் செலுத்தி அதிலேயே வாழ்ந்தவர் இவர். அரியலூர் சமஸ்தானத்தின் ஆதரவில் வாழ்ந்தவர். ஆகினும் அக்காலச் சூழலில் அரியலூர் சமஸ்தானத்தின் நிலை படிப்படியாக பொருளாதார நிலையில் சரிய ஆரம்பித்ததால் சமஸ்தானத்திலிருந்து வந்து கொண்டிருந்த பொருளாதார ஆதரவும் குறைந்து போயிற்று. இந்த நிலையில் சடகோபையங்கார் தனது சிஷ்யர்களின் உதவியைக் கொண்டே வாழ்க்கையை ஜீவித்து வந்தார்.

ஒரு சூழலை உ.வே.சா இப்படி விளக்குகின்றார். "குளிருக்குப் போர்த்திக் கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார். "துப்பட்டி வாங்கித் தரவேண்டும் லிங்க துரைசிங்கமே" என்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார். "

வருமை புலவர்களை வாட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் பாடம் சொல்வது எப்படி? கவி எழுதுவது எப்படி? சிந்தனையில் ஆழ்ந்து போய் புதுமைகளைப் படைப்பது எப்படி. பொருளாதாரம் வாழ்க்கையின் அஸ்திவாரம் நிலைக்க தேவை என்றாகிவிட்ட காலகட்டத்தில் புலவர்களும் பொருளாதாரத்தைப் பார்க்கும் கண்களைப் பெற்றவர்களாக இருப்பது மிக மிக அவசியம் என்பதே உண்மை. முழுதாக பாடம் சொல்லிக் கொண்டும் ஆய்வில் இறங்கி நம்மை மறந்திருந்தால் நமது வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விடும் என்ற விஷயமே நிதர்சனம். ஆக புலவர்களும் ஆசிரியர்களும் ஆய்விலும் பொது நலத்தொண்டிலும் ஈடுபடுபவர்களும் அடிப்படை வருமானத்தை என்றென்றும் தற்காத்துக் கொண்டேதான் ஏனைய காரியங்களில் ஈடுபட வேண்டியது நடைமுறைக்குப் பொருந்துவதாக அமைகின்றது.

வருமை வாட்டி வதைக்கும் சக்தி படைத்தது; சில வேளைகளில் சிந்தனையை முடமாக்கும் சக்தியும் படைத்தது; வருமை நீங்கிய வாழ்வே புலவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தன்னை தன் சுய பிரச்சனைகளை மறந்து சிந்தனையில் மூழ்கி புதுமையைப் படைக்கவும், புத்தாக்கங்களை உருவாக்கவும் வல்லமையைத் தரக்கூடியது.

உ.வே.சா மேலும் இப்படிக் கூறுகின்றார். "மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக் கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும். அவர் செல்லும் போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது. இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை. வறுமையில்லை. இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார். "

இப்பகுதியை வாசித்து முடித்தபோது கனத்தமனத்துடன் இப்பக்கத்தில் குறிப்பெழுதி வைத்தேன். வருமை என்ற ஒன்றே ஆய்வாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக உண்மையாக நூல்களையும் ஆய்வையும் காதலிக்கும் நெஞ்சத்தினருக்கு வரக்கூடாது... ! வரக்கூடாது!

தொடரும்...

அன்புடன்
சுபா

Monday, July 2, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 7


கல்லூரி ஆசிரியர்களும் முனைவர் பட்டத்தைப் பெற்ற தமிழ் பேராசிரியர் பலரும் கூட தங்கள் வகுப்பு போதனைக்கு மட்டுமே தேவைப்படும் நூல்களை மட்டும் கற்கும் நிலையைத்தான் பெரும்பாலும் இப்போதெல்லாம் காண்கின்றோம். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கூட தேர்ந்தெடுத்த ஒரு சில நூல்களில் மட்டும் கவனம் செலுத்தி அது முடிந்து பட்டம் கிடைத்த பிறகு புதிய நூல்களைத் தேடி எடுத்து தொட்டுப் பார்க்கும் ஆர்வம் குறைந்தவர்கள் பலர் இருப்பதும் நம் அனுபவத்தில் சந்திக்கின்ற நிகழ்வுகளுள் அடங்குகின்றது. இது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நோயாகத்தான் என் மனதிற்குப் படுகின்றது.

கல்வி.. கல்வியை நோக்கிய தேடல்.. என்பவை ஆத்மார்த்தமானவை என்ற எண்ணம் மறைந்து வேலைக்கும் ஊதியத்துக்கும் மட்டும் தேவைப்படும் கருவியாக மட்டும் நினைக்குமொரு நிலையைப் பொதுவாகவேப் காண்கின்றோம். எத்தனை இல்லங்களில் புத்தக அலமாரி இருக்கின்றது? அதில் எத்தனை நூல்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தரமான சிந்தனையை வளர்க்கும் நூல்கள் இருக்கின்றன, குடும்பத்தில் எத்தனை பேர் அந்தப் புத்தகங்களை எடுத்து வாசிக்கின்றனர் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒரு சிலரே புத்தகங்களை விரும்பும் மனிதர்களாக இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.

இப்போதெல்லாம் கணினி, இணையமயம்..என்ற வசதிகள் வந்து விட்ட நிலையில் இணையத்திலேயே நிறைய வாசிக்கலாம்... மின்னூல்கள், மின்னிதழ்கள் பல வந்து விட்டன என்ற போதிலும் கணினிக்குச் சென்றாலும் அங்கும் நம் தமிழ் மக்களின் சிந்தனையைப் பெரிதும் ஆக்கிரமித்திருப்பதாக இருப்பது சினிமாவும் அது சம்பந்தமான விஷயங்களுமாகத்தான் அமைகின்றன என்னும் கூற்றை புறக்கணிக்க முடியாது. இந்த சிந்தனையோடு என் சரித்திரத்தை நோக்கும் போது, அதில் உ.வே.சா அவர்கள், அவர் வாழ்க்கையில் சந்தித்த சில மனிதர்களைப் பற்றி குறிப்பிடும் போது அவர்களின் செயல்கள் நம் மனதைத் தொட்டுச் சென்று, வாசித்து பல மணி நேரங்களுக்குப் பின்னும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்து விடுகின்றன. அந்த வகையில் சடகோபையங்காரின் குணங்கள் நம் மனதில் அசைவினை ஏற்படுத்துவதால் அவரைப் பற்றியும் ஒரு பதிவில் குறிப்பிட வேண்டும் என்று கருதியதால் இந்தப் பதிவு அவரை விளக்குவதாக அமைகின்றது.

சடகோபையங்கார் வித்துவான்கள் பரம்பரையில் பிறந்தவர். வழிவழியாக கல்வி என்பது ஆழப்பதிந்த சூழலில் வளர்ந்தவர். அவரது பரம்பரையினர் அனைவரும் சண்பக மன்னார் என்ற குடிப்பெயரைத் தாங்கியவர்கள். இந்தக் குடிப்பெயர் இன்றும் வழக்கில் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.அவர் பரம்பரையில் சிலர் பாலஸரஸ்வதி, பாலகவி என்ற பட்டங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்தவர்கள்.

சடகோபையங்கார் தமிழும் சங்கீதமும் ஒரே தரத்தில் வாய்க்கப் பெற்றவர். ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கே எழுந்து தனது காலைக்கடன்களை முடித்து பின்னர் தன் வீட்டின் திண்ணையின் மேல் கோடியில் புத்தகங்களோடு சென்று அமர்ந்து கொள்வாராம். எந்த நூலையாவது படித்து மகிழ்ந்தவாறே இருப்பாராம். சாலையில் செல்பவர்கள் அவர் திண்ணையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவருக்கு வணக்கம் சொல்லிச் செல்வார்களாம். சிலர் அவரோடு வந்து அமர்ந்து கொள்வார்களாம். உடனே சடகோபையங்கார் அவர்களுக்கு ஏதாகினும் ஒரு தமிழ்ப்பாடலைச் சொல்ல ஆரம்பித்து விடுவாராம். பாடம் சொல்வது என்பதில் அவருக்கு அவ்வளவு பிரியமாம். பாடலைச் சொல்லி அதற்கு நயமாகப் பொருளையும் சொல்லி, வந்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவாராம்.

இவரிடம் பாடம் கேட்கவென்றே பலர் இவரை வந்து பார்த்து கேட்டு இன்புற்றுச் செல்வார்களாம். செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாஸ்திரத்திலும் கம்பராமாயணத்திலும் அவருக்கு ஆராய்ச்சியும் ஞானமும் அதிகம் என்று உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார். அந்த நூல்களிலுள்ள செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காக வியாக்கியாணம் சொல்லிக் கொண்டேயிருப்பாராம். இவரது பாடங்களைக் கேட்பவர்கள் நேரம் போகாமல் ஏதோ இனிய சங்கீத கச்சேரியைக் கேட்பது போல மயங்கி கேட்டு இன்புற்றிருப்பார்களாம்.

அவ்வப்போது வந்து பாடம் கேட்டுச் செல்வது மட்டுமல்லாலம் ஒரு சில மாணவர்களுக்கு முறையாகவும் சடகோபையங்கார் பாடம் சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரைப் பற்றிச் சொல்கையில் உ.வே.சா அவர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றார்.."தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்கு சலிப்பே உண்டாவதில்லை. "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்" என்பார்.

ஒரு நாள் அவர் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாருக்கோ நெடு நேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் குடியிருந்தது எதிர் வீடு. வழக்கமான குரலில் அவர் பாடஞ் சொல்லாமல் சற்று இரைந்து சொல்லிக் கொண்டிருந்தார். இடையே சிறிதும் தடையில்லாமல் அவர் சொல்லி வந்த போது எங்கள் வீட்டுக்குள் இருந்த எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இவர் யாருக்குப் பாடஞ் சொல்கின்றார்? கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்கமாட்டாரா? என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது. அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விஷயம் தெரியும். அப்போது "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்" என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன? செவிடராயிருந்தாலென்ன?"

பிறர் தெரிந்து கொள்ள பாடம் சொல்கின்றோம் என்பதில் சொல்கின்ற நாமும் தெரிந்து கொள்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து அதனை செயல்படுத்தி பாடம் சொல்லி இன்பங் கண்டவர் சடகோபையங்கார். எழுதும் போது பல விஷயங்களைச் சிந்திக்கின்றோம். வாசிக்கின்றோம் என்பதால் வாசிக்கின்றவர்கள் மட்டும் பலன் அடைகின்றார்கள் என்றில்லாது சொல்லும் அல்லது எழுதும் நாமும் கற்கின்றோம் என்பதில் பலனடைந்தவர்களாக நாமும் ஆகின்றோம் என்பதும் மகிழ்ச்சியான ஒரு விஷயமல்லவா?

குறிப்பு: இத்தகவல்களை 14ம் அத்தியாயத்தில் காணலாம்.


தொடரும்..

அன்புடன்
சுபா

Sunday, July 1, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 6


உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் சங்கீதமும் தமிழும் சேர்ந்தே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தமிழ் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் ஆரம்ப கால வாழ்க்கையில் தமிழையும் சங்கீதத்தையும் இரண்டு முக்கிய அங்கங்களாகவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் அமைந்திருந்தன. ஆகினும் தமிழையும் சங்கீதத்தையும் ஒரே நிலையில் வைப்பது என்பதை விட ஒன்று மற்றொன்றிற்குத் துணை செய்வதாக அமைந்தது என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும்

தமிழும் சங்கீதமும் கற்று மகன் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற மாபெரும் சிந்தனையுடனேயே இவரது அப்பா பல ஆசிரியர்களிடம் இவரை அழைத்துச் சென்று கல்வி அமைத்துத் தந்தார் என்பதை என் சரித்திரத்திரம் நூலின் முதற் பகுதிகள் அனைத்திலும் காண முடிகின்றது. அளப்பறிய முயற்சி அது. அந்த முயற்சிகளில் ஒன்றே சடகோபையங்காரிடம் இவரை அழைத்துச் சென்றதும் அவரது மாணவராக இவரைச் சேர்ப்பித்ததும் ஆகும். இதனை ஒட்டி உ.வே.சா அவர்கள் தனது இளமை பருவத்து சிந்தனையை நூலின் 13ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார்.

"என் பிதா சடகோபையங்காரிடம் என்னை ஒப்பித்ததற்கு முக்கியமான காரணம் சங்கீதத்தில் எனக்கு நல்ல பழக்கம் உண்டாக வேண்டுமென்றும், அதற்கு உதவியாகத் தமிழறிவு பயன்படுமென்றும் எண்ணியதே. ஆனால் என் விஷயத்தில் அந்த முறை மாறி நின்றது. தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக் காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே. "

தற்கால கல்வி முறையைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நம்மிடையே உலவுகின்றன. கல்வி முறை என்பது எப்படிப்பட்டதாகினும் படிக்கின்ற மாணாக்கர் உள்ளத்திலே முதலில் கல்வியின் பால் தீராத காதல் வரவேண்டும். இந்த அதிதீவிர பற்றும் மோகமும் மாணாக்கரை மேலும் மேலும் ஆய்வுப் பாதையில் சென்று அவர்களை அறிவினைத் தேடிச் சென்று அதன் வழி கல்வியைப் பெற்றவர்களாக உருவாக்கும். தற்கால சூழலில் பெற்றோரும் சமூகமும் ஒன்றாக இணைந்து பரீட்சையில் தேர்ச்சி பெறுதல் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து மனனம் செய்து ஒப்புவிக்கும் கருவிகளைப் படைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைப் பரவலாக காண்கின்றோம். உண்மையிலேயே அது மாணவரின் கல்வித் தேடலுக்குப் பாதையை அமைத்துத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே என் கருத்தாக அமைகின்றது.

உ.வே.சா ஒரு நல்ல மாணவர். மற்ற மாணவர்கள் உதாரணமாக எற்றுக் கொண்டு கல்வியில் முன்னேற இவர் ஒரு நல்லதொரு வழிகாட்டி.

கல்வி.. கல்வி.. தமிழ்க் கல்வி என்று தேடியவர். ஆன்மாவின் தேடலாக அது அவருக்கு அமைந்தது. சடகோபயைங்கார் உ.வே.சா.அவர்களின் உள்ளத்தில் தமிழ் விதையை விதைத்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களோ அத்தேடலை செம்மைப் படுத்தி உ.வே.சாவின் தமிழ்கல்வியின் அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்.

தொடரும்...
சுபா