Tuesday, July 17, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 10


தமிழகத்திற்கான எனது ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் நான் தவறாது கோயில்களுக்குச் சென்று வருவதுண்டு. அதிலும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் கணிசமான எண்ணிக்கையில் பற்பல ஊர்களில் கோயில்களைப் பார்த்திருக்கின்றேன். ஓவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு விதம். எது எதனினும் சிறந்தது என்று சொல்ல முடியாது திகைத்துப் போய் பல முறை வியந்து வியந்து பார்த்திருக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் கோயில்களைப் பற்றி நான் அறிந்து கொள்ள விழையும் போது ஒரு புது விஷயம் காத்திருக்கும். எனக்கு இவ்வகைத் தேடலில் இன்றளவும் அலுப்பு தட்டவில்லை. இன்னமும் நிறைய கோயில்களை இதுவரை சென்றிராத ஊர்களுக்கெல்லாம் சென்று பார்த்து கண்டு மகிழ வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது.  

கோயில்களை வியந்து பார்த்து மகிழ்வுறும் அதே தருணம் கோயில்கள் பாதுகாப்பு, கோயில்களிலுள்ள சிற்பங்களின் பாதுகாப்பு, கோயில் சுற்றுப்புற பாதுகாப்பு, பராமரிப்பு, தூய்மை என்ற வகையிலும் தவறாமல் சென்று விடும் என் மனம். கோயிலுக்கு வருகின்ற மக்களின் சிந்தனையில் தங்களது வேண்டுதல், அது நிறைவேறுதல் வேண்டும், அதற்காக சில சடங்குகள் செய்தல் வேண்டும் என்ற எண்ணமே ஆழப்பதிந்து போய் விட்டமையினால் மக்கள் கோயிலைப் பற்றிய ஸ்தல புராணத்தை அறிந்து கொள்வது பற்றியோ, கோயில் வரலாற்றை அறிந்து கொள்வது பற்றியோ ஸ்தல விருட்சத்தைப் பற்றி அறிந்து கொண்டு சுவாமியைப் பற்றி பேசி மனம் மகிழும் நிலையிலில்லாத மாந்தர்களாக மாறிப்போய்விட்டனர் என்பது கண்கூடு. கோயில் கட்டிடக் கலையை ரசித்தல், கோயில் சிற்பங்களின் கவின் நயத்தை கண்டு களிப்பதில் ஈடுபடுதல் என்பதெல்லாம் இல்லாமல் சடங்குகள் சடங்குகள் என்று திளைத்துப் போய் இருப்பதையே பக்தி என்ற புரிதலோடு வாழ்க்கையில் கடைபிடிக்கும் நிலையில் பொதுவாகவே இக்கால மக்கள் இருக்கின்றனர்.

உ.வெ.சா. காலத்திற்குச் செல்வோம்.இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகள். அவ்வளவே!

அவர் சொல்கின்றார்.
"ஸ்தலங்களைப் பற்றிய வரலாறுகளைத் தெரிந்து கொள்வதில் அக்காலத்தினருக்கு அதிக விருப்பம் இருந்தது. ஸ்தலத்தின் விருஷம், மூர்த்திகளின் திருநாமம், வழிபட்டவர்கள் வரலாறு, தீர்த்த விஷேஷம் முதலிய விஷயங்களை அங்கங்கே உள்ளவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்குச் சொல்வார்கள். தங்கள் ஊர் சிறந்த ஸ்தலமென்றும் பலவகையான மகாத்மியங்களை உடையதென்றும் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. குன்னத்தின் ஸ்தல மகாத்மியங்களை என் தந்தையார் விசாரிக்கத் தொடங்கினார். நானும் அவற்றைத் தெரிந்து கொண்டேன். "

இந்த நிலை இன்று வந்தால் கோயில்கள் சிறப்புடன் வாழும்.

என் சரித்திம் வாசிக்கும் போது ஆலயங்கள் பற்றிய மேலும் ஒரு புதிய விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். அதாவது, சிறப்பான புகழ்பெற்ற ஒரு கோயில் இருந்தால் அதனைப் போலவே தங்கள் ஊரிலும் ஒரு அமைப்பினை அமைத்து மக்கள் வழிபடும் முறை இருந்திருக்கின்றது.  முன்னர் மலேசியாவில் பினாங்கில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில் கட்டியபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே அமைக்கின்றனரே என்ற எண்ணம் மனதில் எழுந்ததுண்டு. இது பொது வழக்குத்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன உ.வே.சாவின் வார்த்தைகள்.

" மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர்.


அன்றியும் கும்கோணத்துக்குக் கிழக்கே திருவிடைமருதூர் இருப்பது போலக் குன்றத்திற்குக் கிழக்கே வெண்மணி என்னும் ஊர் இருக்கிறது. திருவிடைமருதூருக்கு மத்தியார்ஜு னம் என்று பெயர். அதற்கு வெண்மையாகிய
இருதயாகாசத்தின் மத்தியென்று பொருள் செய்து, திருவிடைமருதூர் தகராகாசத்திற்குச் சமானமானதென்று தத்துவார்த்தம் கூறுவர் சிலர். (அர்ஜு னம்-வெள்ளை) வெண்மணி என்னும் பெயர் மத்தியார்ஜுனமென்னும் பெயரோடு ஒருவாறு ஒப்புமையுடையதாகவே, அவ்வூரில்  தோன்றிய கோயில் மூர்த்திக்கு ஆதி மகாலிங்கமென்ற திருநாமம் உண்டாயிற்று. மகாலிங்கமென்பது திருவிடை மருதூர் ஸ்வாமியின் திருநாமம். பிருகத் குச நாயகியென்பதே இரண்டிடங்களிலும் உள்ள அம்பிகையின் திருநாமம்."

ஆக புகழும் சிறப்பும் பெற்ற கோயில்களின் பிரதிகளாக புதிய கோயில்கள் எழுந்துள்ளமையும், மிக தூரப்பயணம் செய்யாமல் தங்கள் இருப்பிடத்திலேயே தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு கோயில் எழுப்பி வழிபட்டும் மகிழும் மக்களின் மன்ப்பாண்மையையும் இதன் வழி உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இதனை வாசித்து முடித்த போது இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர் செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில் அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். முயற்சித்துப் பார்ப்போமே. விஷயங்கள் அறிந்த நண்பர்கள் தகவல் கொடுக்கத் தொடங்கலாமே!

தொடரும்...

குறிப்பு: இப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புக்கள் 16ம் அத்தியாயத்தில் உள்ளன.


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment