Saturday, July 16, 2011

தேன் உண்ணும் வண்டு

இயற்கை விரும்பிகளே,

நீங்கள் பார்த்து ரசிக்க என் தோட்டத்து மலர் மட்டுமன்றி இங்கு வந்து செல்லும் வண்டையும் படம் பிடித்து இங்கே இணைத்திருக்கின்றேன். உங்கள் ரசனைக்காக..!



தேன் அருந்துவதற்காக இந்த வண்டு செய்யும் ப்ரயத்தனத்தைப் பாருங்களேன்..!




இப்ப்படங்களுக்கு மின் தமிழ் நண்பர்கள் வழங்கிய கவிதைகள்..

பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்
-சூளாமணி:449
இன்னம்பூரான்
16 07 2011

மலரில் தேடும் வண்டே!
நீ தேடுவது தேனையென்பார்.
இல்லை இல்லை
ராஜத்தை யென்பேன் யான்.
-மோகனரங்கன்


வண்டே தேனைத் தேடுவது உன் இயல்பு
பண்டே சிந்தை புகுவது உன் தவிப்பு
சண்டே என்றாலும் சலிக்காமல் பறப்பு
உண்டே களைத்தாலும் சுற்றிவரும் ஈர்ப்பு!
-பவளசங்கரி


என் இனிய வண்டே ...

கவி செய்த மாயமென்னைக்
காற்றில் தாங்கிவந்து
மலைக்காட்சி மடியில் வைத்துக்
கலிக்கொல்லை காணச்செய்து
"ஜெட்-லாகில்" போட்டிருக்கு...

இணைய அன்பு ஈர்க்கிறது
கண்ணசத்தல் பறிக்கிறது
தாள் குவியல் தடுக்கிறது
வருவேன் ஒருநாள் இந்த
மாளிகையின் வாசலுக்கே.
அன்புக்கும் நட்புக்கும் மிக்க நன்றி!
--ராஜம்

Sunday, July 10, 2011

Tränendes Herz

ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல்.. இதோ.


இதுவும் ஒரு வசந்த கால மலர்ச்செடி வகை.

இந்தப் பூச்செடியின் பெயர் டோய்ச் மொழியில் Tränendes Herz. கண்ணீருடன் உள்ள இதயம் என்று மொழி பெயர்க்கலாம். இச்செடி வகையின் பூர்வீகம் சீனா என செடிகளுக்கான ப்ரத்தியேகமான விக்கி குறிப்பிடுகின்றது.

நீர் சொட்டுவது போலவும் இதயம் போன்ற அமைப்பிலும் இப்பூ உள்ளதைப் பாருங்கள்.


சரமாக இளம் சிவப்பில் இருதயம் போன்ற வடிவில் மலர்கள் இருக்கும். இந்தச் செடி குளிர் காலம் முடிந்ததும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மண்ணுக்குள்ளிருந்து முளைத்து வரும். மே மாதம் பூக்கத்தொடங்கி இம்மலர்கள் ஜூன் ஜூலை மாத ஆரம்பம் வரை பூத்துக் கொண்டிருக்கும். ஒரு சரம் ஏறக்குறைய இரண்டு மாதங்களும் அப்படியே காய்ந்து விழாமல் இருக்கும்.


இந்தச் செடி ஜூலை மாத ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலர்களை உதிர்த்து பின்னர் பழுப்பு நிற இலைகளுக்கு மாறும். ஜூலை மாதக் கடைசியில் முழுதும் வாடி விழுந்து விடும் பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்தச் செடி இருப்பதே தெரியாது. வசந்த கால பூ வகைகளில் இது வித்தியாசமான வடிவில் அமைந்த ஒன்று.

என்னிடம் உள்ள இந்தச் செடி கடந்த 5 ஆண்டுகளாக இருக்கின்றது. மீண்டும் வந்து மலர்ந்து இனிமை சேர்த்து மறைந்து கொள்ளும் செடி இது.

விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Lamprocapnos_spectabilis பகுதியில் மேலும் இத்தாவர வகை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுபா

Sunday, July 3, 2011

ஜம்போ மிளகாய் பாஸ்டா

இன்று ஜம்போ மிளகாய் பயன்படுத்தி இத்தாலிய உணவான பாஸ்டா தயாரித்தேன். ஜம்போ மிளகாய் கொஞ்சம் காரம் தான். ஆனால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பச்சை மிளகாய் காரத்தை விட சற்று குறைவான காரம்.

இந்த வகை பாஸ்டா தயாரிக்க உங்களுக்கு 30 நிமிடங்கள் போதும்.

2 பேருக்கு தயாரிக்கும் அளவு:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்டா - 2 பேருக்கு சமைக்க 350 கி பாஸ்டா. இதில் குறிப்பாக மக்கரொனி, ஸ்பெகட்டி போன்று இல்லாமல் சிறிதாக இருக்கும் எந்த வகை பாஸ்டாவையும் இந்த ரெஸிப்பிக்கு பயன்படுத்தலாம்.

இந்தப் படத்தை பாருங்கள்.

இதில் உள்ள சிறிய வகைகள் பல தமிழகத்திலும் கிடைக்கின்றன. குறிப்பாக பென்ன, ஸ்பிராலி வகைகள் பயன்படுத்தலாம். நான் இன்று பயன்படுத்தியது பென்ன வகை பாஸ்டா.

மற்ற தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (பெரியது)
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
ப்ரொகோலி - 50கிராம்.
குடை மிளகாய் - (சிவப்பு, மஞ்சள், பச்சை - மூன்றையும் பயன்படுத்தலாம்)
கேரட் - 1
ஆலிவ் எண்ணெய்
பெஸ்டோ - அரைத்த விழுது (4 கரண்டி) (இது சூப்பர் மார்க்கெட்டில் இத்தாலிய உணவு வகை பகுதியில் கிடைக்கும். இது அடிப்படையில் இத்தாலிய துளசி + மல்லி + பூண்டு அறைத்து ஆலிவ் எண்ணெயில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் விழுது)
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி

காய்கறிகளை உங்களுக்கு பிடித்த வகையில் வெட்டிக் கொள்ளுங்கள்.

என் தோட்டத்தில் காய்த்த மிளகாய் இன்றைய சமையலில்..! ஜம்போ மிளகாய் பக்கத்தில் டொஸ்கானா மிளகாய்.

ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதித்ததும் அதில் உப்பு 2 சிறிய கரண்டி சேர்த்து ஆலிவ் எண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து 350 கி பாஸ்டாவையும் அதில் போட்டு கொதிக்க விடுங்கள். 10 நிமிடங்கள் நன்கு வெந்து மெண்மையானதும் நீரை வடிகட்டி விடுங்கள்.

பாஸ்டா வெந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு நோன்-ஸ்டிக் பேனில் ஆலிவ் எண்ணெய் விட்டு அதிகம் சூடாகும் முன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் வதக்கிய பின்னர் குடை மிளகாய், காரட்களை சேர்த்து வதக்கவும். இப்போது பெஸ்டோ விழுதை சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்குப் பின்னர் ப்ரோக்கோலி சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் ப்ரோக்கோலி வதங்கியதும் அதில் இப்போது வடித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளரவும். உப்பு மேலும் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.

காரம் மேலும் தேவையென்றால் கொஞ்சம் கருப்பு மிளகு தூளாக்கி சேர்க்கவும்.

5 நிமிடங்கள் பாஸ்டா நன்றாக காய்கறிகளுடன் கலந்தவுடன் சுடாகப் பரிமாறவும்.

அன்புடன்
சுபா