Tuesday, September 30, 2003

Job search..!

நேற்று எனக்கு மலேசியாவிலிருந்து ஒரு தமிழ் பெண் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்துவிட்டதாகவும் அடுத்து பல்கலைக்கழகம் சேரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தாள். அவளுடைய கவலையும் சந்தேகமும் என்னெவென்றால் எந்த வகையான கல்வியைத் தேர்ந்தெடுப்பது எனபது தான். கடந்த முறை எழுதியிருந்த போது இந்தத் தகவலை எனக்கு எழுதி என்னுடைய ஆலோசனையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தாள். அவள் தேர்ந்தெடுக்கும் கல்வி அவளுக்குப் பிடித்தமான ஒரு வேலையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவளது விருப்பதையும்,. எப்படிப்பட்ட வேலையில் தன்னை அவள் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றாள் என்பன போன்ற சில கேள்விகளை அவளிடம் கேட்டிருந்தேன். அதற்கு பதில் தரும் வகையில் அமைந்திருந்தது இந்த இரண்டாவது கடிதம்.

அவளுக்கு அதிகமாகப் படித்துக் கொண்டேயிருக்கக் கூடிய வகையிலான வேலையில் கொஞ்சமும் நாட்டமில்லை என்று குறிப்பிட்டிருந்தாள். "வக்கீல், மருத்துவம் இப்படிப்பட்ட வேலைக்கெல்லாம் வாழ் நாள் முழுதும் படித்துக் கொண்டேயிருக்கவேண்டும். அதனால் அந்த மாதிரியான வேலையெல்லாம் வேண்டாம். கணிதம் அதிகமாக உள்ள வேலை எதுவும் வேண்டாம். ஆசிரியராகவும் விருப்பமில்லை. நல்ல வருமானம் வரக்கூடிய ஒரு வேலை வேண்டும். முடிந்தால் கணிணி சம்பந்தப்பட்ட துறையில் ஏதாவது ஒரு வேலையாக இருந்தால் பிடிக்கும். நான் ஒரு computer engineer ஆனால் சந்தோஷப்படுவேன். இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்" என்று கேட்டு எழுதியிருந்தாள்.



கடிதத்தைப் பார்த்த எனக்கு அவளது சிந்தனைப் போக்கையும் மடமையையும் நினைத்து சிரிப்பதைத் தவிர வேறொன்றும் எண்ணத்தோன்றவில்லை. ஒரு கணினி பொறியியலாளர் ஆகிவிட்டால் நிறைய சம்பாதிக்கலாம்; அதிகமாகப் படிக்கத் தேவையில்லை என்ற தப்பான சிந்தனைப் போக்கு எப்படி இவர்களுக்கு வந்தது? மலேசியாவில் சில நண்பர்களிடம் பேசும் போதும் இம்மாதிரியான சில பொய்யான கருத்துக்களை அவர்கள் கொண்டிருப்பதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். "என் மகள் அல்லது மகன் நன்றாகப்படிக்கவில்லை. உயர்நிலைப் பள்ளி சோதனையில் சுமாரான மதிப்பெண்கள் தான் பெற்றிருக்கின்றாள்(ன்). அதனால் computer engineering படிக்க வைக்கலாம் என்று நினைக்கின்றேன்" என்று கூறுபவர்களை நான் நிறையவே பார்த்திருக்கின்றேன்.



இது எவ்வளவு பெரிய மடமை. ஒரு கணினி பொறியியலாளர் என்பவர் ஒரு மருத்துவருக்குச் சமமானவர். எப்படி ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் அதற்கான அத்தனை சிகிச்சைகளையும் செய்கின்றோமோ, அதேபோலத்தான் ஒரு கணினிக்கும். அதுவும் மிகப்பெரிய நிறுவனங்களில், அதுவும் கோடிக்கான பணச்செலவில் தகவல் பாதுகாக்கப்படும் இடங்களிலெல்லாம் வேலை செய்வது என்பது சாதாரண ஒரு காரியமல்லவே. அதுவும் கணினி தொழில்நுட்பம் என்பது நிமிடத்திற்குள் எத்தனையோ வளர்ச்சியை நாளுக்கு நாள் கண்டுவருகின்றது. அப்படிப்பட்ட இந்தத் துறையில் வேலை கிடைத்து விட்டால் போதும்; அதற்குப் பிறகு படிக்க வேண்டியதே இல்லை என்று சொல்லும் மடமையை என்னவென்று சொல்வது? அறியாமை படித்தவர்களிடமும் இருக்கின்றதே என நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கின்றது.

Sunday, September 28, 2003

TVU..!

லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 1:30 மணிக்கு ஒலிபரப்பாகும் 'அரங்கம் அந்தரங்கம்' நிகழ்ச்சி எனக்குப் பிடித்த சில நிகழ்ச்சிகளில் ஒன்று. தமிழக அரசியல் நிலவரத்தை மிகுந்த பச்சாதபத்தோடும் மன உருக்கத்துடனும் தேர்ந்த செய்தியாளர் அப்துல் ஜபார் அவர்கள் வழங்குவார். தமிழகத்தில் நடக்கின்ற, நடந்துகொண்டிருக்கின்ற செய்திகள், அவற்றினால் ஏற்படப்போகும் விளைவுகளை மிகுந்த கவலையோடும் ஆதங்கத்தோடும் அவர் ஐரோப்பிய தமிழர்களிடம் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாகவே மனதிற்குப் படும்.

இன்று மத்தியான உணவுக்குத் தயாரித்திருந்த ஒரு pizza-வோடு தொலைக்காட்சி முன் உட்கார்ந்து விட்டேன், தமிழக நிலவரம் கேட்க. மற்ற சில விஷயங்களுக்கூடாகவே, நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டைப் பற்றியும் அவரது பேச்சு அமைந்திருந்தது. தமிழ் இணையப் பல்கலைக் கழகம், முரசொலி மாறனின் மிகுந்த ஈடுபாட்டோடு உருவாக்கப்பட்ட ஒன்று என்று குறிப்பிட்ட அவர், அதன் நிர்வாக இயக்குனர் முனைவர் பொன்னவைக்கோ அரசியல் காரணங்களுக்காக இப்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார் என்ற தகவலையும் சேர்த்தே சொன்னார். இந்த மாநாடு நடந்த இடம் கலைஞரின் ஆளுமைக்கு உட்பட்ட இடம் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுத்தமைக்காக, முனைவர் பொன்னவைக்கோ பதவி நீக்கம் செய்யப்படிருப்பதாகவும் தெரிவித்தார்.

TI2003 முடிந்த சில நாட்களிலேயே இந்த பேச்சு பரவலாக ஆனால் கொஞ்சம் ரகசியமாகப் பேசப்பட்டது. ஆனால் இப்போது செய்தி தொலைக்காட்சியிலேயே அறிவிப்பு கண்டிருக்கின்றது!

Friday, September 26, 2003

Travel Diary - Tamil Nadu 1

எனது அன்மையகால தமிழகப் பயணம் மனதிற்கு இனியமான நினைவுகளை எனக்கு தந்திருந்தாலும் ஒரு சில கசப்பான அனுபவங்களும் இல்லாமல் இல்லை. அதில் ஒன்று தான் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

இதுதான் என்னுடைய திருச்சிக்கான முதல் பயணம். இதுவரை திருச்சிப் பக்கம் சென்றதே இல்லை. மலேசியாவில் இருக்கும் எனது பெற்றோருக்கும் உறவினர் இங்கு இருப்பதாக கூறக்கேட்டிருக்கின்றேன். மதியம் வரை பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் கருத்தரங்கத்தை முடித்து விட்டு மாலையில் ஸ்ரீரங்கத்திற்கு செல்லலாம் என டாக்டர்.ராதா செல்லப்பன் சொல்லியிருந்தார். அவரது முனைவர் பட்ட மாணவி சுமதி தான் எனக்கு வழிகாட்டி. நல்ல அறிவான அன்பான பெண் இவள்.

எனக்கு காய்ச்சலில் உடல் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற உறுதியோடு கிளம்பி விட்டோம். எங்கே நுழைந்தோம் எப்படி வெளியே வருவது எனத்தெரியாதவகையில் அவ்வளவு பெரிய கோயில் அது. கோயிலை சுற்றி சுற்றி ரசித்து விட்டு சுவாமி கும்பிட்டுக் கொண்டே வரும் போது ஒரு பட்டாச்சாரியார் வந்தார். கூட்டம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு நானே அர்ச்சனை தட்டு வாங்கித் தருகிறேன் என்று வலிய வந்து உதவினார். பூஜை எல்லாம் முடிந்த பின்னர் எங்களையே வால் பிடித்துக் கொண்டு வந்தார். சொர்ணக் கலசம், ஆஞ்சனேயர் என்று சில இடங்களைக் காட்டினார். தாயார் சன்னிதி எங்கே இருக்கின்றது என்று நான் கேட்க நான் உங்களை அழைத்துச் சென்று முழுசும் காட்டுவேன் என சத்தியம் செய்யாத குறையாகக் கூறி பணம் கொடுக்குமாறு கேட்டார். 50 ரூபாய் கொடுத்தேன். ஏன் இவ்வளவு கொடுக்கின்றீர்கள் என்று சுமதியும் கொஞ்சம் கடிந்து கொண்டாள். "பரவாயில்லை, நமக்கு கோயிலைச் சுற்றிக் காட்டப்போகின்றார்.அதனால் கொடுக்கலாம்" என்று அவளை சமாதானம் செய்து வரும் போது மேலே 9 குடம் இருக்கின்றது. அதை சுற்றி விட்டு வாருங்கள்" என்று கூற நாங்களும் குடங்களை (ஏன் சுற்ற வேண்டும் என்ற காரணத்தைப் பிறகு கூறுவதாகச் சொன்னார்) சுற்றி விட்டு அவர் கூறியபடியே கும்பிட்டு விட்டு கீழே வந்து பார்த்தால் ஆளையே காணவில்லை. சுற்றிலும் தேடிய எங்களுக்கு ஆளை கண்டு பிடிக்கவே முடியவில்லை. மனிதர் escape ஆகிவிட்டார். பிறகு நாங்களே முட்டி மோதி தேடி மற்ற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டு திரும்பினோம்.

நாராயணன் இருக்கும் இடத்திலேயே நமக்கு (பக்தர்களுக்கு) நாமம் போடும் இவரைப் போன்றவர்களை என்ன செய்வது..??வருத்தப்படத்தானே முடியும்..?

Thursday, September 25, 2003

செடிகள்..!



எனக்குக் காரணம் புரியாமலேயே செடிகளை பிடிக்கும். எவ்வளவு நேரமானாலும் செடிகளை அதுவும் விதம் விதமான அழகிய செடிகளைப், பூச்செடிகளை மரங்களை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும். நல்ல பூங்காக்கள் எனது மனதை ஈர்த்து விடும். எவ்வளவு அலுப்பாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் கூட செடிகளைப் பார்த்து அவற்றோடு உறவாடும் போது அந்த அலுப்பெல்லாம் பறந்து விடும்.




முன்பு பினாங்கில் (மலேசியாவில்) ஒருக்கும் போது எனது இல்லத்தில் பெரிய தோட்டம் இருந்ததால் அது முழுதும் நிறைய செடிகளை நட்டு வைத்திருந்தேன். பூச்செடிகள் அழகிய மரங்கள் மட்டுமன்றி காய்கறிச் செடிகளும் எனக்குப் பிடிக்கும். வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய் பாகற்காய் கீறை வகைகள், மற்றும் முருங்கை மரம் கறிவேப்பிலை மரம் இப்படி விதம் விதமான செடிகளை வைத்திருந்தேன். பச்சை மிளகாய் செடியில் பூவாகி பின்னர் பெரிதாக வளரும் போது பார்க்க கொள்ளை அழகாக எனக்குத் தோன்றும். அதே போலத்தான் பாகற்காயைப் பார்க்கும் போதும் தோன்றும். இயற்கையில் எத்தனை அழகு மறைந்து இருக்கின்றது.


ஒவ்வொரு நாளும் மாலையில் வேலை முடிந்து வந்தது குறைந்தது 1 மணி நேரம் எனது தோட்டத்தில் முன்பெல்லாம் செலவிடுவேன். புற்களை நீக்குவது, மற்றும் உரம் சேர்ப்பது, சுத்தம் செய்வது நீர் விடுவது என்று செடிகளுடன் நேரத்தைச் செலவிடும் போது அன்றைய களைப்பு முற்றிலும் நீங்கி மனமெல்லம் உற்சாகம் வந்து விடும். இது ஏன் என்று தெரிவதில்லை. எனது நண்பர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஜெர்மனிக்கு வந்து அடுக்கு மாடி வீட்டில் இப்போது இருக்கும் போது அப்படி செய்ய முடிவதில்லை. வருத்தமாகத்தான் இருக்கின்றது.

ஆனாலும் சில பூச்செடிகளை வீட்டில் வைத்திருக்கிறேன். எனது அலுவலக மேசையிலும் பூச்செடிகளை அதுவும் இங்கே கிடைக்கக்கூடிய வகைச் செடிகளை வைத்திருக்கின்றேன். காலையில் வேலையத் தொடங்கும் முன் அவை சிரித்துக் கொண்டுப்பதைப் பார்க்க மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது.

Wednesday, September 24, 2003

J.K's diary - 1

ஜே.கே அவர்களின் நாட்குறிப்பினை படித்துக் கொண்டிருந்தேன். "Imagination and illusion distort clear observation.Illusion will always exist..." என்று குறிப்பிட்டிருந்தார். மனம் எப்போது எந்த கற்பனைகளும் சிந்தனைகளும் இல்லாமல் இருக்கின்றதோ அப்போதுதான் அமைதியும் தெளிவும் கிடைக்கும் என்கின்றார்.

மனது எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கின்றது. பல வேளைகளில் கற்பனைகள் தொடங்கிவிடுகின்றன. இந்த கற்பனைகளுக்கு எல்லையே இல்லாதவாறு பரந்து வளர்ந்து கொண்டே போகின்றன. நிஜத்தில் நடக்காததையெல்லாம் மனது கற்பனை செய்கின்றது. இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே எனக் கற்பனை செய்து மனம் மகிழ்கின்றது. இது சரியா தப்பா என்பது கேள்வியல்ல.. இதனால் மனம் அமைதி அடைகின்றதா இல்லையா என்பதே எனக்கு முக்கியமான கேள்வியாகப் படுகின்றது.

ஒரு வேலையில் மாட்டிக் கொண்டு அந்தப் பிரச்சனையில் மூழ்கிக் கிடக்கும் போது கற்பனைகளுக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. செய்வதற்கு வேலை இல்லாமல் தனியாக ஓய்வாக இருக்கும் போதுதான் நாம் மனத்தோடு அதன் ஓட்டத்தோடு கலந்து சம்பாஷித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. எனது சிந்தனைகளை சில நேரம் கவனித்துக் கொண்டே வந்தேன். பல விஷயங்களை அதுவும் நான் விரும்பும் பல விஷயங்களைப் பற்றி மனம் சிந்தித்துக் கொண்டே செல்வதைக் காண முடிகின்றது. மனதில் ஒரு கலந்துரையாடல் நடக்கின்றது. முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மனதின் இந்த சிந்தனை ஓட்டம் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டும் இருக்கின்றது. மனதின் சிந்தனைகளைப் பொருத்து எனது உணர்வுகளும் கவலை, மகிழ்ச்சி, வேதனை எனப் பலவாராக மாற்றம் கான்பதை உணர முடிகின்றது. ஒரு சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும் போது மூச்சு முழுதாக ஓடுவதில்லை. அறை குறையாக மூச்சு இயங்குகின்றது. அந்த சிந்தனையை நிறுத்தி விட்டுப் பார்த்தால் நல்ல ஆழமான deepth breath என்பது கிடைக்கின்றது. மனதை அமைத்டிப் படுத்துவது என்பது அசாதாரண ஒரு விஷயம்தான்..!

Monday, September 22, 2003

Punishment..!

இப்போது ஜெர்மனியில் இலவசமாகவே 4 தமிழ் டிவி தமிழ் சானல்கள். இன்று சன் டிவில் ஒரு செய்தி. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு ஏதோ குற்றத்திற்கு நீதிமன்றத்தில் ஆச்சரியம் தரும் வகையிலான ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மதிக்காததால் அவருக்கு சட்டம் நீதி நியாயம் ஆகியவைப்பற்றி புரிய வைக்க வேண்டும் என்பதற்கு மாறுபட்ட ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின் படி அவர் ஒவ்வொரு நாளும் நூலகத்திற்குச் சென்று காந்தியடிகளின் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பதுதான்.

அந்தத் தீர்ப்பின் படி இந்த அரசியல்வாதி தனது தொண்டர்கள் சிலரோடு நூலகத்திற்குச் செல்லும் காட்சி செய்திப்பகுதியில் காட்டப்பட்டது. காந்தியின் நூற்களை, அவரைப்பற்றிய விஷயங்கள் அடங்கிய நூற்களைப் படிக்க ஆரம்பித்திருக்கின்றாராம். அவரது தொண்டர்கள் சூழ்ந்திருக்க, தான் இதுவரைக்கும் வாங்கியிருக்கும் நூற்களையும் காட்டினார். வித்தியாசமான தீர்ப்பாக இருக்கின்றது அல்லவா..?

Sunday, September 21, 2003

பெண்ணாசை

மனிதன் ஆன்ம வளர்ச்சி பெற்று ஞானமும் இறையருளும் பெற வேண்டுமானால் மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசையைத் துறக்க வேண்டும் என்பது மிக மிக வழக்கில் இருந்து வருகின்ற ஒரு கூற்று. பல வேளைகளில் நான் என்னைக் கேட்டுக் கொள்வதுண்டு. இந்த ஆன்ம வளர்ச்சி, மற்றும் இறைவனை நெருங்குதல் போன்றவை
ஆணுக்கு மட்டும் தானா..? ஏன் பெண்களுக்கும் இந்த வளர்ச்சிகள் உண்டு என்பதை நினைத்து இந்த வார்த்தைகளை மாற்றி ஒரு பொதுவாக்கியமாகக் கொடுக்காமல் விட்டுருக்கின்றார்களே என்று. இதில் என்ன வேடிக்கையென்றால் பெண்கள் சிலர் சமயச் சொற்பொழிவு ஆற்றுகின்ற பொழுதும் கூட இந்த உதாரண வாக்கியத்தைக் குறிப்பிட்டு பேசுவதுதான். சிலர் கேட்கலாம் "ஏன், மண்ணாசை, பொண்ணாசை, ஆணாசை" என்று சொல்ல வேண்டுமா..?" என்று.

ஏன் இப்படி ஆண், பெண் என்று பிரிக்க வேண்டும்..? மண் எப்படிப் பொதுப் பெயராக இருக்கின்றதோ, பொண் என்பது எப்படி பொதுப் பெயராக இருக்கின்றதோ அதே போல ஒரு பொதுப் பெயரைக் குறிப்பிடலாமே..! "உடல் கூறு" அல்லது "காமம்" இப்ப்டிப் பட்ட வார்த்தைகளை பயன்படுத்தலாமே..!

திரு.வி.க. தனது பெண்ணின் பெருமை என்ற நூலில் "துறவைப் பற்றிய ஐயம்" என்ற தலைப்பில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பெண்ணைத் துறக்குமாறு பெரியோர் நூல்களிற் சில வலியுறுத்திக் கூறுவதன் பெருளென்னை என்று சிலர் கேட்கலாம். பெண்ணைத் துறக்குமாறு பெரியோர் எவரும் கூறினாரில்லை. ..... பெண்ணாசை எவரிடத்திருப்பது? அது பெண்ணைக் காமுறும் ஒருவன் உள்ளத்திருப்பது. அவ்வாசையைத் துறவாது, பெண்ணை நீத்துக் காட்டுக்கோடி, மூக்கைப் பிடித்தல் எங்கனந் துறவாகும்? என்கின்றார்.

பெண்ணாசை என்பது அதாவது காமம் அல்லது அதீதக் காமம் என்பது ஆணுக்கு மட்டும் தான் உண்டு என்று சொல்கின்றவர்களும் இருக்கின்றனர். பெண்களுக்கும் இம்மாதிரியான உணர்வுகள் உண்டு என்பதை உணர மறுப்பவர்கள் இவர்கள். பெண்களிலும் அதீத காமத்தால் வாழ்க்கையில் அடிபட்டு துன்பத்தில் விழுந்து வாடுபவர்களும் உண்டு. தமிழ் பாரம்பரியத்தில் பெண்ணை எப்பொழுதும் தூய நிலையிலேயே வைத்துப் பார்ப்பதையே உலகம் (பொதுவாக ஆண் உலகம்) விரும்புகின்றது. நிதர்சனம் அப்படியில்லையே.. உண்மையை எழுதும் பலர் உண்மையைக் காண விரும்பாதவர்களால் தாக்கப்படுகின்றார்கள் [சொற்களால் பெரும்பாலும்..:( ] ஏன் இந்த நிலை..?

Saturday, September 20, 2003

Art of Listening

பேச்சுக் கலை என்பது சாதாரணமான ஒன்றல்ல. எல்லோராலும் மனதில் நினைப்பதைச் சரியாக சொல்லி விட முடியாது. பல வேளைகளில் நான் தடுமாறித் தவிப்பதுண்டு. மனதில் தோன்றுகின்ற சிந்தனைகளை, எண்ணங்களை முழுதாகச் சொல்ல முடிவதில்லை. நாம் நினைப்பது ஒன்று ஆனால் சொல்ல முயற்சிக்கும் போது வார்த்தைகள் மாறி
வேறொன்றாக வந்து விழுந்துவிடும். உரையாடலின் முடிவில் சொல்ல வந்ததை முழுசாகச் சொல்லவில்லையே என்ற விரக்தி தோன்றும். இந்தப் பேச்சுக் கலையை விடை மிகக் கடினமானது கேட்கும் கலை.

ஒருவர் பேசுவதைக் கேட்பதில் என்ன சிரமம் இருக்கப்போகின்றது என்று சாதாரணமாக நினைத்து விட முடியாது.பிறர் பேசுவதை நாம் கேட்கும் போது நாம் நமது மனதின் எண்ணங்களோடு சேர்த்தே தான் கேட்கிறோம்.

பேசுபவரின் சொற்களோடு நமது மனதின் தன்மைகள் கலந்து பல விதமான வியாக்கியானங்களை அந்த பேச்சுக்குக் கொடுத்துக் கொண்டே தான் கேட்கிறோம். பல வேளைகளில் பேசுபவர் பேசிக் கொண்டேயிருப்பார். நமது முகம் மட்டும் கேட்பது போல பாவனை செய்து கொண்டிருக்கும்; ஆனால் மனம் அந்த பேச்சில் லயித்து இருக்காது. பல
வேளைகளில் சொல்பவர் சொல்வதை நமது மனதிற்குப் பிடித்த வகையில் மாற்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்து கொள்வோம்.

ஆக கேட்பது என்பது சுலபமான ஒன்றல்ல என்பது நாம் நமது மனதின் ஓட்டத்தை உற்று நோக்கினால் தெரிய வரும். கேட்பது என்பது ஒரு கலை. அந்தக் கலையை முறையாகப் பழகத்தானே வேண்டும்!

Wednesday, September 17, 2003

திரு.வி.க

இன்று திரு.வி.க. அவர்களின் நினைவு நாள். திரு.வி.க என்று செல்லமாக அழைக்கப்படும் திரு கலியாணசுந்தரனார் மு.வா அவர்களின் குருவாகத்தான் எனக்கு முதலில் அறிமுகமானார். திரு.வி.காவின் உள்ளொளி என்ற நூல் தான நான் வாசித்த அவரது முதல் நூல். இதற்குப் பின்னர் அவரது பல நூல்களை வாசித்திருக்கின்றேன். அவரது கருத்துக்கள் என்னை முழுதாக ஈர்த்தவை.


அவர் காலத்திலேயே சமுதாய வளர்ச்சியை மனதில் நினைத்து அவர் எழுதிய நூல்களின் வழி அவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. உரிமை வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, சன்மார்க்கமும் வள்ளலாரும் என்பவை என்னைக் கவர்ந்தவற்றில் சில. அவரது புத்தகங்களைப் பினாங்கில் இருந்த சமயத்திலேயே 'வெற்றிவேல்' புத்தகக்கடையில் வாங்கி எனது நூலகத்தில் வைத்திருந்தேன். அவரது அனைத்து நூல்களிலும் மிகச் சிறந்ததாக என்க்குப் பட்டது உள்ளொளி தான்.


ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் இது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஆன்ம ஒளி இருக்கின்றது; இந்த ஆன்ம ஒளியின் பிரகாசத்தைப் பொருத்தே அவரது தன்மைகள் அமைகின்றன என்பதை எனக்கு விளக்கி அறிமுகப்படுத்திய முதல் தமிழ் நூல் இது. இதற்குப் பின்னர் தான் சித்தர்களின் பாடல்களின் மேல் காதலும் அதில் குறிப்பிடப்படும் ஆன்ம தரிசனத்தில் ஆர்வமும் எனக்கு படிப்படியாக வளர்ந்தன. இன்றளவும் எனது மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது இந்நூல்.

Tuesday, September 16, 2003

Special weblog for Malaysian Tamil Writers

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை மின் பதிப்பாக்கம் செய்யும் வகையில் பிரத்தியேகமாக ஒரு வலைப்பூவினை உருவாக்கியிருக்கின்றேன். அதன் முகவரி http://subaraagam.log.ag மலேசிய நாளிதழ்கள் இந்த முயற்சிக்கு உதவ முடியும். இந்த வலைப்பூவில் தொடர்ந்து இந்த முயற்சிகள் விவாதிக்கப்படும்.

Monday, September 15, 2003

வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள் - மாலன்

பல நாட்களுக்குப் பின்னர் நெடுங்கதை ஒன்றினைப் படிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது. இந்த முறை தமிழகம் சென்றிருந்த போது மாலன் அவர்கள் கொடுத்த அவரின் 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்' என்ற நூல் கையிலிருந்தது. மலேசியாவிலிருந்து ஜெர்மனி வரும் வழியில் படிக்க தேவைப்படும் என எடுத்து வைத்திருந்தேன்.

ஏறக்குறைய 12 மணி நேரம் நீடித்த அந்த பயணத்தில் இந்த நூலிலிருந்த நாவலின் தலைப்பினைக் கொண்ட அந்தக் கதையினை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.

பொதுவாகவே கதையின் சில பக்கங்களைப் படித்து பாத்திரங்களை பற்றி அறிந்து கொண்ட பின்னர் கதையின் முடிவைப் புரட்டி பார்த்து விடுவேன்; சோக முடிவா அல்லது சந்தோஷமான முடிவா என்பதைத் தெரிந்து கொள்ள.

ஆனால் இந்த நாவலில் நான் இதனைச் செய்வதற்கு முன்னர் இந்த நாவலுக்கு அறிமுக உரை வழங்கியிருக்கும் தி.ஜா அவர்களின் எழுத்துக்களே கதையின் தன்மையை, இதன் முடிவை ஓரளவு காட்டி விடும் வகையில் அமைந்துள்ளது. சமர்ப்பணம் என்ற பகுதியில் மாலனின் 4 வரிகளும் அபாரம். மாலனின் தனித்துவத்தை இந்த 4 சின்ன வரிகளிலே தெரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த நெடுங்கதையில் ஒவ்வொரு தனிப் பகுதி ஆரம்பிக்கும் போதும் 'அப்பாவின் டைரி' என்ற ஒரு அறிமுகப் பகுதி. இந்த எழுத்து நடை மனதிற்கு மிக மிக அன்னியோன்னியமாக வருகின்றது. கதை முழுக்க அழகு அழகான பல சொற்கள். பல நாட்களாக பயன்படுத்தாத பல நல்ல தமிழ் சொற்களை இந்த கதை படிக்கும் போது படித்து மகிழ்ந்தேன். சில எழுத்தாளர்களின் திறமையைக் கண்டு நான் வியப்பதுண்டு. மாலனின் எழுத்தும் அப்படித்தான் இருக்கின்றது. கதை ஒரு விதத்தில் சோகமான ஒரு முடிவைத்தான் வைக்கின்றது. ஆனாலும் அந்த சோகத்தையும் காரணத்தோடு விளக்கி நிதர்சனத்தை விளக்கும் வகையில் முடித்திருப்பது சிறப்பு.

Sunday, September 14, 2003

Kannathaasan Poem

ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கு முன்னர் தமிழை நான் தீவிரமாக கற்க ஆரம்பித்த காலத்தில் நான் வாசித்த கண்ணதாசனின் ஒரு கவிதை. கவிதயின் வரிகள் அழகாக இருந்ததாலும் மனதைத் தொடும் வகையில் அமைந்திருந்ததாலும் அதனை எனது டைரியில் குறித்து வைத்திருந்தேன். நீளமான அந்த கவிதையில் எனக்குப் பிடித்த சில வரிகள்.

காலமகள் கோலம்


காலமெனும் தேவமகள் கையிலுள்ள
துலாக்கோலில்
எந்த எடை எப்பொழுது எவ்வளவெண்
றாரறிவார்..?

.....

கடல் அருகே வீற்றிருந்தும் கடுந்தாகம்
வரும்போதே
கடவுளெனும் ஒருவரது கைச்சரக்கு
நினைவு வரும்.!

காக்கை குருவியைப் போல் கவலையின்றி
நீ இருந்தால்
யாக்கை கொடுத்தவனை யார் நினைப்பார்
இவ்வுலகில்

ஓடுகின்ற வண்டியெல்லாம் ஊர்சென்று
சேர்ந்து விட்டால்
தேடுகின்ற கோவிலை நீ தேடாமற்
போய்விடுவாய்!

'எல்லாம் அவன் செயலே' என்பதற்கு
என்ன பொருள்?
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவு
என்று பொருள்..!
- கண்ணதான்

Saturday, September 13, 2003

Malaysian Tamil literature - 1

மலேசியாவில் 300க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும் இவர்களது படைப்புக்கள் மற்றும் இவர்களைப் பற்றிய தகவல்கள் எந்த அளவுக்கு உலகத் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கின்றது என்பது கேள்விக்குறி! புத்தகங்களைப் பதிப்பிக்கும் பழைய முறையை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் எப்போது இவர்களது எழுத்துக்கள் உலக மக்களுக்கு அறிமுகமாக முடியும்?

மலேசிய தமிழ் எழுத்தாளர்களில் ஏறக்குறைய அனைவருமே கணினியின் பக்கமே தலைகாட்டாதவர்களாகவே இருக்கின்றனர். கனினி வழி தங்கள் எழுத்துக்களை அச்சுப்பதிப்பாக்கம் செய்தல் என்ற விஷயத்தை அறியாதவர்களாகவே இவர்கள் இருப்பது வேதனைக்குறிய ஒரு விஷயம்.

மலேசிய நாட்டிற்கென ஒரு தனி கலாச்சாரம் உண்டு; ஒரு தனித்துவம் உண்டு, ஒரு பாரம்பரியம் உண்டு. ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளும் இவர்களது வாழ்க்கை முறைகளும் மலேசிய எழுத்தாளர்களின் வழி தானே உலக மக்களுக்கு அறிமுகமாக வேண்டும். எத்தனை நாட்கள் இன்னமும் இந்த முயற்சியை இவர்கள் தள்ளி வைப்பது?

31 ஆகஸ்டு (மலேசிய சுதந்திர தினம்) அன்று மலேசியாவில் இருக்க நேர்ந்ததால் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சிறப்புறையாற்றும் வாய்ப்பு கிடைத்த போது இந்த தகவலைக் கூறினேன். வலைப்பதிவு, உயிர்ப்பூ போன்ற பல வசதிகள் இணையத்தில் வந்து விட்ட பின்னர் அதனைப் பயன்படுத்தி மலேசிய எழுத்துக்களை மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டும்; மற்றும் மதுரைத் திட்டத்தில் இந்த நூல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களைக் கூறிய போது ஆர்வம் துளிர்வதைக் காண முடிந்தது. கணினி பயிற்சி பெற்ற சிலர் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவ வேண்டும். இந்த வகையில் படிப்படியாக தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கும் கணினியைப் பற்றிய அச்ச உணர்வுகள் தொலைந்து ஆர்வம் பிறக்க வழி உண்டு.

Friday, September 12, 2003

தொடக்கம்..

நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ..?
சொல்லடி சிவ சக்தி!-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!
வல்லமை தாராயோ? இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
பாரதி!