Saturday, February 28, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 78


சுப்பிரமணிய தேசிகர் மேற்கொண்ட பாண்டி நாட்டுப் பயணம் தேசிகரோடு உடன் சென்ற ஏனையோருக்கு எப்படி மகிழ்ச்சியைத் தந்ததோ அதைவிட பல மடங்கு மகிழ்ச்சியைத் தருவதாக உ.வே.சாவிற்கு அமைந்தது என்பதில் வியப்பில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தமது வாழ்க்கையை அதுவரை அனுபவித்திருந்த உ.வே.சாவிற்கு இந்தப் பயணம் தென் தமிழக்த்திலிருந்து மத்தியப் பகுதி வரை பல ஊர்களையும் சிற்றூர்களையும், கிராமங்களையும் அறிமுகப்படுத்துவதாக அமைந்தது.  இப்பயணத்தில் பல ஆலய தரிசனங்களும் இவருக்கு அமைந்தது. பல புலவர்களையும், செல்வந்தர்களையும், திருவாவடுதுறை மடத்தின் மீது பற்று கொண்டிருந்த வேறு பலரையும்  நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. புதிய நட்புக்களும் உருவாகின.

இந்தப் பயணத்தின் போது குற்றாலத்தில் சுப்பிரமணிய தேசிகர் சில நாட்கள் தங்கியிருந்தார். இப்பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான பல கிராமங்கள் அப்போது இருந்தன. இக்கால கட்டத்தில் இந்தக் கிராமங்கள் அனைத்தும் வேணுவன லிங்கத் தம்பிரான் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இருந்து வந்தன.  இந்தக் கிராமங்களே திருவாவடுதுறை மடத்தின் ஜீவாதாரமாக இருந்தன என உ.வே.சா. தன் சரிதத்தில் குறிப்பிடுகின்றார். அங்கே கம்பனேரி புதுக்குடி என்ற பெயர் கொண்ட ஒரு கிராமத்தை இந்தப் பயணத்தின் போது தேசிகர் வாங்கியமை பற்றிய குறிப்பும் வருகின்றது. இச்செய்திகள் இன்றைக்கு ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை நன்கு செல்வச் செழிப்போடு இருந்த நிலையை விளக்குவதாக அமைகின்றது.

தாம் வாங்கிய அந்த கிராமத்திற்கு தமது குருவின் நினைவாக அதன் பெயரை மாற்றி அம்பலவாணதேசிகபுரமென்று புதிய பெயரிட்டிருக்கின்றார் தேசிகர். இதே பெயரில் தான் இன்னமும் இந்தக் கிராமம் விளங்குகின்றதா எனத் தெரியவில்லை.

திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆதீனகர்த்தராக அவ்வேளையில் இருந்து வந்த  ஸ்ரீராமலிங்கத் தம்பிரான் சுப்பிரமணிய தேசிகரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இவர் தேசிகர் பயணம் செய்கின்றாரா என அறிந்து தாமும் இப்பயணத்தில் வந்து இணைந்து கொண்டாராம். இதற்காக தனிப்புகைவண்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் பயணித்து வந்து  திருநெல்வேலி வழியாக வந்து செவ்வந்திபுரம் அடைந்து தேசிகரோடு சில நாட்கள் இருந்திருக்கின்றார். புதிதாக வாங்கிய அம்பலவாணதேசிகபுரத்திலேயே இவர்கள் தங்கியிருக்கின்றனர்.  உ.வே.சா தரும் விளக்கங்கள் இது ஒரு விசாலமான பெரிய கிராமமாக இருந்தது என்பதைக் காட்டுகின்றது. தேசிகரும் தம்பிரானும் மடங்களைச் சேர்ந்த ஏனையோரும் இருந்த காரணத்தால் இந்தக் கிராமம் திருவிழா கோலம் பூண்டு அலங்கார சகிதம் பெரிய நகரம் போன்ற தோற்றத்தை அவ்வேளையில் காண்போருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

பாண்டிய நாட்டில் சிறப்பு பெற்ற கோயில்களில் சங்கர நயினார் கோயிலும் ஒன்று. இங்கு நடைபெறும் ஆடித் தவசு உத்சவம் மிகப் பெரிய சிறப்பு பெற்ற ஒரு வைபவம். இவர்கள் இருந்த வேளையில் இந்தத் திருநாளும் கூடிவர அனைவரும் உத்சவத்திலும் பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். சிவபெருமானும் பெருமாளும் பேதமின்றி இயைந்து நிற்கும் சங்கர நாராயண மூர்த்தியே இங்கு பிரதான தெய்வம். இங்கு உ.வே.சாவும் இறை தரிசனம் செய்து மகிழ்ந்திருக்கின்றார். அது மட்டுமல்லாது அந்த ஆலயத்தில் ஒரு விஷேஷம் ஒன்று இருந்ததைப் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

அந்த ஆலயத்தில் உள்ள புற்று மண்ணை மருந்தாக சாப்பிட்டு தங்கள் உடல் நோயைக் தீர்த்துக் கொள்ள வந்த பல பக்தர்களை உ.வே.சா பார்த்திருக்கின்றார். இந்த வழக்கம் இன்னமும் பொது மக்கள் மத்தியில் வழக்கில் உள்ளதா எனத் தெரியவில்லை.இக்குறிப்புக்களை உ.வே.சா என் சரித்திரம் அத்தியாயம் 76ல் வழங்குகின்றார்.

பொதுவாக சைவ ஆதீனங்கள் அக்காலகட்டத்தில் மிகுந்த செல்வச் செழிப்புடனும் மிகுந்த பீடுடனும் விளங்கின என்பதையும் ஆதீனகர்த்தர்கள் வெறுமனே ஆதீனங்களை மட்டும் அலங்கரித்துக் கொண்டிராமல்  பல ஊர்களுக்குப் பயணம் செய்து வந்தமை பற்றியும், சைவ ஆதினங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விரிவாக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியும் அறிந்து கொள்ள சிறந்த ஆவணமாகவும் என் சரித்திரம் விளங்குகின்றது. தேசிகர் போன்ற ஆதீனத் தலைமைப்பீடத்தை அலங்கரித்தோர், தமிழ் அறிவு, சைவ சிந்தனை என்று மட்டும் தம் ஆளுமையின் வட்டத்தைக் குறுக்கிக் கொள்ளாமல் தம் ஆளுமைக்குட்பட்ட ஆதீனத்தின் சொத்துக்களைப் பரமாரித்து வளர்க்கும் நிர்வாகத் திறமையும் பெற்று விளங்கினர் என்பதையும் இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது.


தொடரும்..

Saturday, February 21, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 3

வாசிப்பின் பதிவு -3


ப்ளேட்டோவின் அரசியல் நூலில் சாக்ரடீஸ் தன் நண்பர்களுடன் உரையாடும்  பகுதியில் இரண்டாம் பகுதியிலிருந்து இன்றும் சில வாசகங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

முதல் பகுதி நீதி-அநீதி ஆகியன என்ன என்பதை அலசுகின்றன. இரண்டாம் பகுதி கடவுள் பற்றிய எவ்வகையான கதைகள் இளம் சிறார்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும்? அறிவிற்குகந்த தூய சிந்தனை மட்டும் கொண்ட கடவுள் பார்வை எவ்விதமான நன்மை தரும்.. பொய்ஜாலம் நிறைந்த மாயவித்தை கலந்த கடவுளையே பொய் சொல்பவராக, தவறு இழைப்பவராக, தண்டனை பெறுபவராகக் காட்டும் கற்பனை கதைகள் எவ்வகையில் குழந்தைகளின் மனவளர்ச்சியில் கெட்ட தாக்கத்தை உருவாக்கும் என உரையாடும் பகுதி. இதில் சாக்ரடீஸ் மேலும் அடிமண்டீஸுடனும் ஏனையோருடனும் தனது கேள்விகளை முன் வைத்து சிந்தனையைத் தொடர்கின்றார்.

(மொழிபெயர்ப்பு: அறிஞர் சாமின்நாதசர்மா)

சாக்: கடவுள் நல்லவர்தானே?

அடீ: ஆம்.

சாக்: அப்படியானால் அவரை நல்லவரகத் தானே விவரிக்க வேண்டும்?
அடீ: வாஸ்தவம்

சாக்: நல்லவரான அவர் நல்லதைத்தானே செய்யமுடியும்” அவர் செல்வத்தைத்தானே கொடுப்பார்?
அடீ: ஆம்.

சாக்: அப்படியானால் பூலோகத்திலுள்ள நல்லவைகளுக்கெல்லாம் அவர் பொறுப்பாளி. தீமைகளுக்கெல்லாம் அல்ல.அப்படித்தானே?

அடீ.ஆமாம்

சாக்: தீமைகளுக்கெல்லாம் காரணமாக வேறு ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். கடவுள் நல்லவர், அவர் யாருக்கும் தீங்கு செய்யமாட்டார். அப்படி யாருக்கேனும் அவர் தண்டனை விதித்தால் அஃது அவர்களைத் திருத்துவதற்காகவே என்று இம்மாதிரியான நீதிகளைப் புகட்டக்கூடிய கதைகளையே நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது கடவுள் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கவில்லை. நல்லவற்றை மட்டுமே சிருஷ்டிக்கின்றார் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனத்தில் பதியவைக்க வேண்டும்.

அடீ: நீ சொல்வதை நான் பரிபூணமாக ஏற்றுக் கொள்கிறேன்.

சாக்: கடவுள் ஒரு ஜாலவித்தைக்காரரல்ல. அவர் இஷ்டப்பட்டபோது இஷ்டமான உருவத்தை எடுத்துக் கொள்ளமாட்டார். அவர் மாற்றமில்லாத சரளமான சுபாவமுடையவர். இதை நீ நம்புகிறாயா?

அடீ: இதற்குத் திடீரென்று நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

சாக்: சரி. உண்மையான எதுவும், அல்லது பூரணத்துவம் வாய்ந்த எதுவும் சுற்றுச் சார்புகளினால் மாறுபடாதென்பதை ஒப்புக்கொள்கிறாயா?

அடீ: ஒப்புக் கொள்கிறேன்.

சாக்: கடவுளும் கடவுட் தன்மையும் பூரணத்துவம் வாய்ந்தவை தானே?

அடீ: ஆம்.

சாக்.எனவே கடவுள் சுற்றுச் சார்புகளினால் பாதிக்கப்பட மாட்டார் அல்லவா?

அடீ:ஆம்.

சாக்: அப்படி பாதிக்கப்பட்டால் அவர் கடவுளல்லவே? அதாவது கடவுட் தன்மையினின்று அவர் இறங்கிவிடுகின்றாரல்லவா?

அடீ: உண்மை

...
சாக்: அப்படியானால் கடவுள் இழினிலைக்கு வந்துவிட்டார் என்றுள்ள கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தைகள் பெரியவர்களாகிறபோது இழிவான மார்க்கத்தைக் கடைபிடிக்க ஏதுவாகின்றது. புராதன கதைகளின் உண்மையைப்பற்றி நமக்கு நிச்சயமாக ஒன்றும்  தெரியாது. அதனால் உண்மையல்லாதனவற்றை உண்மை போல எடுத்துச் சொல்வது பொய்தானே?

சாக்ரடீஸ் சொல்வதாக ப்ளேட்டோ எழுதியிருக்கும் இந்த கடைசி பகுதியில்  சிந்தனைக்கு விருந்தாகும் உண்மை அடங்கி இருக்கின்றது.

​வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

Friday, February 20, 2015

தமிழக மதுபானக் கடைகள் ஏற்படுத்தும் சமூகச் சீர்கேடு



தமிழகத்தில் பல உள்ளூர் நாளிதழ்களில் இன்று வெளிவந்த புகைப்படம் இது. மதுபானக் கடைகள் தமிழகத்தில் அதிகரித்து விட்ட நிலையில் அதிகமாகக் குடித்து விட்டு ஒரு பெண் தன்னிலை மறந்து விழுந்து கிடக்கின்றார் சென்னை சாலையில். சில நாட்களுக்கு முன்னர் இளம் மாணவர் ஒருவர் இப்படி விழுந்து கிடந்தார் என புகைப்படத்தோடு செய்திகள் வந்தன. அம்மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் தொடர்ந்து செய்திகள். பள்ளியிலிருந்து நீக்கிவிடுவதால் மட்டும் அம்மாணவன் திருந்தி விடுவானா? இல்லை என்பதே பதிலாக அமையும்.

தமிழகத்தில் தற்சமயம் தமிழ்சமூகத்தில் ஒட்டு மொத்தமாக பல ஒழுக்கக் கேடுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மதுபானம்.. மதுபானக் கடைகள் ஆகியவையே. நான் ஜனவரியில் ஒரு வாரம் சென்னையில் இருந்த போது மயிலாப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கெல்லாம் சந்தைக் கடை பகுதியில் ஒரு கடையில் வரிசையாக ஆண்கள் மதுக்கடை வாசலில் நிற்கின்றார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை அது.

இளைஞர், நடுத்தர வயதினர், முதியோர் என பாரபட்ஷமின்றி வரிசையாக பலர்...
மது எவ்விதத்திலும் நம் உடலுக்கும், நம் குடும்பத்திற்கும், நம் சமூகத்திற்கும், நம் நாட்டிற்கும் நலனைத் தரப்போவதில்லை.

மதுவால் ஏற்படும் சீர்கேட்டினை நீண்ட பட்டியல் இடலாம். அது தேவையில்லை. எல்லோரும் அறிந்ததே!
சமூகத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள் அதிகரிக்கும் போது கடுமையான சட்டதிட்டங்கள் என்பது நடைமுறையில் அமல் படுத்தப்பட வேண்டிய நிலை தான் ஏற்படும். அது கட்டாயத் தேவையாகவும் ஆகின்றது..
தமிழக் சூழலில் வன்முறை என்பது பல்வகையாகப் பெறுகி விட்டது. சமூக சீர்க்கேடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த சூழலில் தானாகவே மனிதர் திருந்துவர் என்பது சாத்தியமன்று. இதற்கு அரசு முதலில் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும். இதுவே நிலமையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலில் வழிவகுக்கும்.
மதுபானத்தால் தான் அரசுக்கு வருமானம் வருகின்றது என நினைத்தால் அது சீர்க்கேட்டை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் ஒரு நிலையாக அமையும். இது ஆரோக்கியமான ஒரு சமூகம் அமைய வழி வகுக்காது என்பதோடு தார்மீகக் கடமையை செய்யாத ஒரு நிலையையே அரசுக்கு வழங்கும்.

பொருளாதார பலத்தை ஈட்ட எத்தனையோ வழிகள் இப்போது உள்ளன. அவற்றை கடைபிடிக்கலாம். அதிக மனிதவளம் உள்ள மானிலம் தமிழகம். ஒழுக்கக்கேடு இல்லாத மானிலம் இது என பெயர் பெற அரசு மட்டுமல்ல ஒவ்வொரு பிரஜைகளும் முனைய வேண்டியது அவசியம்.

Monday, February 16, 2015

வட்டெழுத்து எழுத்துருக்கள்

ஜெர்மனியின் ஹாம்புர்க் நகரைச் சார்ந்த Elmar Kniprath அவர்கள் தமிழின் பாண்டியர் கால வட்டெழுத்து எழுத்துருக்களை உருவாக்கியிருக்கின்றார். இரண்டு வெவ்வேறு வகையான எழுத்துருக்கள் இதில் அடங்குகின்றன. இச்செய்தியை நம் மின்தமிழ் குழுமத்தில் நண்பர் Jean-Luc Chevillard பகிர்ந்து கொண்டார்.

தமிழ் மரபு அறக்கட்டளை, என் பெயர் ஆகிய இரண்டையும் எழுதிப் பார்த்தேன். அதன் வடிவம் இங்கே.

எழுத்துருவை உருவாக்கிய Elmar Kniprath அவர்களுக்கு நம் நன்றி!!
முழு விபரங்கள் http://www.aai.uni-hamburg.de/indtib/vatteluttu.html


Sunday, February 1, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 21


9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 20

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சி.
1. மாநாட்டுத் தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு
2.மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் திரு.பரசுராமன்
3.மலேசிய கல்வி அமைச்சர் நிகழ்ச்சியை முடித்து வைக்கின்றார்
4.மேடையில் சிறப்பு பிரமுகர்கள்.








சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 19

9வது உலகத் தமிழார்ய்ச்சி மாநாட்டில் த.ம.அ , ஃபேஸ்புக் நண்பர்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பலரை முதன் முதலாகச் சந்திக்கின்றேன். ஆயினும் நெடுநாள் பழகிய நட்பும் உடனே தோன்றிவிடுகின்றது. 

இது தமிழர்களுக்கே உரிய ஒரு சிறப்பு பண்பு என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. 


1. மலேசியாவின் திரு.ராஜா பிள்ளை. என் மேல் மிகுந்த பிரியம் கொண்டு த.ம.அ நடவடிக்கைகளாலும் ஈர்க்கபட்டு தன்னை இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள இணைந்திருக்கின்றார். எனக்கு நூல்களை பரிசாக வழங்கினார்.



2. நம் த.ம.அ நண்பர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த அன்பு ஜெயா. மலேசிய பெண்ணை மணந்ததால் மலேசியர் தானே இவரும். முதன் முதல் சந்திப்பு.. ஆனால் பேசிச் சிரித்து மகிழ்ந்தோம்.



3.குமாரபாளையம், டாக்டர். மதிவாணன் அவர்கள்.. த.ம.அ செயலவை குழு உறுப்பினர்



4. 
அட்வகேட் ​சந்திரிகா சுப்பிரமணியன்  - ஆஸ்திரேலியா.. அன்பு ஜெயா அறிமுகப்படுத்தியவுடனேயே என்னை நெடுநாள் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததாகச் சொல்லி எனக்கு அவரது ஒரு தமிழ் நூலையும் வழங்கினார். மிக அன்பான தோழி இவர். புதிய நட்பு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 18

மலேசிய நண்பர் ராஜாபிள்ளை அவர்கள் என்னை மியன்மார் தமிழ்ச்சங்கத்து பிரதினிதிகளாக வந்திருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி கட்டாயம் இவ்வாண்டு நான் மியன்மார் சென்று அங்கு தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இனிய சந்திப்பாக அமைந்தது. இந்த ஆண்டு மேலும் பல பயணங்கள் இருப்பதால் சாத்தியப்படாது. ஆனால் 2016ல் வருகிறேன் எனச் சொல்லியிருக்கின்றேன். மியன்மார் சென்று அங்கு தமிழர் தம் வரலாறு பற்றிய பதிவுகளைச் செய்வதற்கான் அவசியம் இருக்கின்றது. ஆர்வத்துடன் உள்ளேன்.



​சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 17

பல்வேறு அலுவல்களுக்கிடையேயும் இந்த 9வது உலகத் தமிழார்ய்ச்சி மாநாட்டின் தலைவர் பேரா.டாக்டர். மாரிமுத்துவுடன் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. தமிழ் மரபு அற்க்கட்டளைப் பணிகள் பற்றிப் பேசி அதன் தொடர்பில் மலேசியாவில் சில முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு அமையுமா என கலந்துரையாடினோம்.

புகப்படத்தில் சென்னை தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர். இளங்கோவன், பேரா.டாக்டர். மாரிமுத்து , தமிழ்ப் பல்கலைக்கழக ரெஜிஸ்ட்ரார், நான், பேரா.டாக்டர். கண்ணன் காலை உணவின் போது.


​சுபா

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 16

9வது உலகத் தமிழார்ய்ச்சி மாநாட்டில் மலேசிய நாட்டில் திருக்குறளை 4 மொழிகளில் அதாவது, தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் மனனமாக சொல்லும் ஒரு சிறுமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. திருக்குறளை இந்த நான்கு மொழிகளிலும் சொல்லி பார்வையாள்ர்களின் மனதை இவள் கவர்ந்தாள்.


9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 15

இளமையில் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஏற்படும் நட்பு பலருக்கு கால ஓட்டத்தில் மறந்து மறைந்து போய்விடுவதுண்டு. எனக்கு எத்தனையோ பள்ளிக் கால தோழர்கள் இருந்தாலும் 1ம் வகுப்பு முதல் என்னுடன் படித்த சீதாலட்சுமியும் சரஸ்வதியும் இன்னும் தொடர்பில் இருப்பவர்கள்.

படத்தில் சீதாலட்சுமி - மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிந்து செல்லும் போது வளாகத்தில் நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம். நாளை இருவரும் இணைந்து பினாங்கு புறப்படுகின்றோம்.


சுபா