Tuesday, March 25, 2014

Robert Langdon is back..! - Cosimo I de' Medici. - 16

ஓவியப் பார்வையை தொடர்வோமா..?

டான் ப்ரவுன் ரெனைஸான்ஸ் காலத்து பின்னனியை, அக்காலத்தில் நடைபெற்ற சமுதாய மாற்றங்களை ஆங்காங்கே சற்றே முக்கியத்துவம் கொடுத்து விவரிக்க முனையும் போது சிலரது பெயர்களை இன்ஃபெர்னோ நாவலில் குறிப்பிடுகின்றார். அப்படி தாம் குறிப்பிட்டுக் கூறும் நபர்களில் ஒருவராகத் திகழ்பவர் மெடிஸி பிரபு அவர்கள்.  Cosimo I de' Medici, Grand Duke of Tuscany (1519-1574) - இவரைப் பற்றி பல தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவரது ஓவியங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் விக்கி பக்கத்திலிருந்து தொடங்கலாம். http://en.wikipedia.org/wiki/Cosimo_I_de'_Medici,_Grand_Duke_of_Tuscany


Inline image 1

கொஸிமோ டி மெடிஸி ப்ளோரன்ஸ் நகரின் பிரபுவாக பதவி எடுத்துக் கொண்ட பின்னர் டஸ்கனி பிராந்தியத்தை முழுமையாக போர் மற்றும் தமது அரசியல் ஆளுமையினாலும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார்.  டஸ்கனி மானிலத்தின் பரப்பை விரிவாக்கி பலம் பொருந்திய ஆட்சியை அமைத்தவர் இவர்.  ப்ளோரன்ஸ் நகரில் ஆர்னோ நதிக்கரையில் உள்ள பாலாஸியோ பிட்டியில் (இது இவரது மனைவி டொலேடோ வாங்கிய அரச மாளிகை) தனது அரச மாளிகையை அமைத்தவர். 

இன்ஃபெர்னோவில் குறிப்பிடப்படும் ஒரு பகுதியில்,  அதாவது காவல் துறையிடம் இருந்து தப்பித்து செல்லும் ரோபர்ட் சியன்னா இருவரும் மறைமுகமாக (Boboli Garden) பூங்காவிலிருந்து தப்பித்து அரண்மனைக்கு வருவதாக நாவலில் குறிப்பிடப்படும் அந்த ரகஸியப் பாதையை அமைக்க வைத்தவர் இவர்தான். இவர் காலத்தில் பல கலைஞர்ளைக் கொண்டு ஓவியங்களையும், கலைப்படைப்புக்களும் சிற்பங்களையும் ப்ளோரன்ஸ் நகரில் உருவாக்க காரணமாக இருந்தவர் இவர். இதற்காக கலைக்கூடங்களை உருவாக்கி அதில் திறமை மிக்க கலைஞர்களைக் கொண்டு மாணவர்களை உருவாக்கும் முயற்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  

கொஸிமோ டி மெடிஸியின் இங்கே காட்டப்படும் சித்திரம் மட்டுமின்றி இவரது மேலும் பல படங்களை வரைந்தவர் ப்ரோன்ஸினோ எனும் கலைஞர் ( Bronzino எனும் பெயர் கொண்ட Agnolo di Cosimo, 1503 –1572).

இந்தப் படம் ப்ளோரன்ஸ் நகரிலோ இத்தாலியிலோ இருக்கலாம் என நான் நினைத்திருந்தேன். இணையத்தில் தேடியதில் தற்சமயம் இது போலந்து நாட்டின் போஸ்னான் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருப்பதாக அறிய முடிகிறது.

மேலும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது இன்ஃபெர்னோ வழியாக ஓவியப் பார்வையைத் தொடர்கிறேன்!

சுபா

Sunday, March 16, 2014

குடியரசில் பெரியார் உடன்....!- 8

தொடர்ச்சி 8

இங்கிலாந்து ஜெர்மனி, போலந்து, எகிப்து, க்ரீஸ்,  ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகளுக்குத் தனது சுற்றுப்பயணத்தை முடித்து வந்த பின்னர் தாம் பார்த்து கேட்டு சந்திக்க நேர்ந்த விஷயங்களைப் பற்றி திரு.ஈ.வே.ரா குறிப்பிடும் வகையில் குடி அரசு இதழில் சில பதிவுகள் இடம் பெறுகின்றன. அதில் ஒன்று லண்டனில் விசியம் கிளப்பில் பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டுவிழாவில், சென்னை கிறிஸ்துவ பெண்கள் கலாசாலையின் தலைவர் திருமதி மெக்டாக்கல் பேசிய சொற்பொழிவின் அடிப்படையிலானது. இக்கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள நேர்ந்த போது  அச்சொற்பொழிவினைச் சார்ந்ததாக ஒரு கட்டுரை பெண்கள் அடிமை நீங்குமா? என்ற தலைப்பில் எழுதுகின்றார்.

அந்த உரையில் அப்பெண்மணி இப்படி குறிப்பிடுகின்றார்.
பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்பந்தமும், பற்றுதலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார்களானால் இந்திய சமூக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம்  ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்கு போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல் உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும்.

இதற்கு திரு. ஈ.வே.ரா இப்படி தனது கருத்தை எழுதுகின்றார்.
திருமதி.மெக்டாகல் அவர்கள் நாகரீகம் பெற்ற மேல் நாட்டுப் பெண்மணியாயிருந்தும் இவ்வாறு பேசியிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை. ஆனால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப் பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவுக் கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின்  உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே இது கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்றுதான் நாம் கூறுவோம்.
- குடி அரசு துணை தலையங்கம் 

திரு.ஈ.வே.ரா சுட்டிக் காட்டும் இப்பெண்மணியின் பேச்சு பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதாக என்பதை விடுத்து மத போதனைகளைக் கடைபிடிக்கும் வழியிலிருந்து பெண்கள் விலகாமலிருப்பதே அவர்களுக்குச் சிறந்தது என்ற வகையில் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

மேல் குறிப்பிடப்பட்ட பகுதியில் திருமதி மெக்டாக்கல் கூறும் 2 விஷயங்கள் கேள்விக்குறியாகின்றன.

1. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோ உறுதியிலும் சிறந்தவர்கள் - இது வந்திருந்த பார்வையாளர்கள் இந்திய தேசத்தினர் என்பதனால் அவர்களை இம்ப்ரஸ் செய்ய  சொல்லப்பட்டதேயன்றி வேறேதாக இருக்க முடியும்? இந்திய தேசத்தைக் கடந்து ஏனைய நாடுகளில் உள்ள பெண்கள் அவர்கள் பக்தியிலும் மனோ உறுதியிலும் சளைத்தவர்களா? இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கின்றதா? இப்படி புகழுரைக் கேட்டதும் இந்தியப் பெண்மணிகள் மயங்கி அவர் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு மகிழ்வர், என எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த வகை புகழுரை என்று தான் நினைக்க தோன்றுகிறது.

2. பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது - உயர்கல்வி பெண்மக்களுக்கு குற்றமற்ற பயனைத் தாராது என்பதை மறைமுகமாக குறிப்பிடுவதன் வழி பெண்களின் கல்விக்கே தடையை முன்வைக்கும் வகையில் இக்கூற்று அமைகின்றது. உயர் கல்வி கிடைப்பதனால் குடும்பத்தில் உள்ள பாசம் நீங்கும் என இவர் குறிப்பிடுவது அதனை விட மோசமான கருத்தாகவே படுகின்றது.

இந்தியப் பெண்கள் கல்வி முன்னேற்றத்தில் இப்படிக்கூட தடைகளை ஏற்படுத்தும் சிந்தனைகளும் அக்காலத்தில் தோன்றியிருக்கின்றன. இவற்றை நாம் அறிந்து கொள்வதும், எத்தனை தடைகளைத் தாண்டி பெண்களுக்கு கல்வி என்பது சமூகத்தில் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள அவசியமாகின்றது.

சுபா

Thursday, March 13, 2014

அகதி நிலை

செல்லும் பாதையில் தொடரும் அனுபவங்கள் என்ற தலைப்பில் சென்ற ஆண்டு அதீதம் இதழுக்கு எழுதி அதில் வெளிவந்த என் கட்டுரை. 
முனைவர்.க சுபாஷிணி 

ஜெர்மனிக்கு வந்த புதிதில் நான் அறிந்து கொண்ட தமிழ் நண்பர்களின் வழியாக இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகள் அதிலும் பிரத்தியேகமாக இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸர்லாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களின் கதைகளைக் கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நான் சந்தித்து நட்பு உருவாக்கிக் கொண்ட இலங்கைத் தமிழ் நண்பர்களில் சிலரது கதையைக் கேட்டு இப்படியும் வாழ்க்கை அமையக்கூடிய நிலை இருக்கின்றதா என அதிர்ந்து நின்றதுண்டு. இலங்கைத் தமிழர் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருபவர்களின் கதைகள் பல சோதனைகள் நிறைந்தவை. 

பொதுவாக அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கள் தாய்நாட்டில் தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள வழியின்றி புகலிடம் தேடி வருபவர்களாக அமைகின்றனர். தங்கள் தாய்மண்ணை விட்டு அங்கு நிலவும் பிரச்சனை மிகுந்த  சூழலிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் விடுவித்துக் கொண்டு உலகின் ஏதோ ஓர் மூலையில் தன் வாழ்நாளின் மிச்ச நாட்களைக் கழிக்க வருவோர் அதிகம். இப்படி தன் நாட்டை விட்டு வருவோரில் தனியாக வருவோரும் உண்டு. குடும்பத்தாரோடும் குழந்தைகளோடும் வருவோரும் உண்டு.  இவர்கள் கடல் வழியாகவும் நில வழியாகவும் பல இன்னல்களைத் தாண்டி ஐரோப்பாவில் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் நாடுகளுக்கு வருகின்றனர். இப்படி வரும் பொழுது தாங்கள் பயணித்து வரும் படகு கடலில் மூழ்கி உடைந்து உயிரிழப்போரும் உண்டு.  அண்மையில் அக்டோபர் மாதம் 3ம் தேதி   ஆப்பிரிக்க அகதிகள் 500 பேரை ஏற்றிக் கொண்டு பயணித்து இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்த படகு ஒன்று நெருப்புப் பிடித்து உடைந்து மூழ்கியதில் 130க்கும் மேலானோர் இறந்தனர் என்ற செய்தியை பலரும் கேல்விப்பட்டிருப்போம். 

Inline image 1

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குப் புலம்பெயர்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை தரத்தில் உயர்வைக் காணவும், பொருளாதார நிலையில் மேன்மை அடையவும் வருபவர்களாக அமைகின்றனர். அந்த வகையில் கிழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடுகளான ரோமானியா, பல்கேரியா ஆகிய நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளைச் சொல்லலாம். உள்ளூரில் நிலவும் வேலையில்லா நிலையும், வருமையும் குடும்பச் சூழலும் பலர் அகதி அந்தஸ்து வேண்டி ஜெர்மனிக்கு வரக் காரணமாக இருக்கின்றது. இப்படி வருவோரால் ஜெர்மனியில் ஏற்படும் பல சமூக மாற்றங்களை உள்ளூரில் மக்கள் பொதுவாக விரும்புவதில்லை என்ற போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில தேவைகளை மனதில் வைத்து ஜெர்மனி உள்ளூரில் இவர்களுக்கு வேலை, குழந்தைகளுக்கான செலவுப் பணம் என தொடர்ந்து வழங்கி வருவதும் குறைப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயமாகின்றது. ஒரு குழந்தைக்கு மாதம் 190 யூரோ செலவுத்தொகை என்பது ஜெர்மனியில் குறைந்த தொகை என்றாலும் ரோமானியா பல்கேரியா ஆகிய நாடுகளில் இது பெரியதொரு தொகையாக அமைவதால் வேலையில்லாமலும் ஜெர்மனிக்கு வந்தால் வாழலாம் என்ற மனப்போக்கை இவர்களுக்கு ஏற்படுத்தத் தவரவில்லை. இதனை உணர்ந்த அரசு இதனை சற்று மாற்றி இப்படி வேலை தேடி அகதி அந்தஸ்து கோருபவர்கள் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவரவர் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவர் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. 

இலங்கையில் நடந்த இனப்போர் நிமித்தம் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழரில் கணிசமான என்ணிக்கையினர் ஜெர்மனியில் இருக்கின்றனர்.  இவர்களில் ஒரு சிலரது பயணம் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத பயணமாக அமைந்து போவதை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். 

Inline image 2

எனது நல்ல நண்பர் ஒருவர். அவர் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்து அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு இப்போது ஜெர்மானியப் பெண்மனியை மணந்து நன்கு வாழ்கின்றார். அவரது பயணம் வித்தியாசமானது. இலங்கியிலிருந்து புறப்பட்டு கடல் வழியாக இந்தியா வந்து பின்னர் பஸ், ரயில் என பயணித்து, அங்கிருந்து பாக்கிஸ்தான் சென்று பின்னர் ஆப்கானிஸ்தான் சென்று அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து பின்னர் உஸ்பெக்கிஸ்தான் சென்றிருக்கின்றார். அங்கு சில காலம் பணிபுரிந்து விட்டு அங்கிருந்து கஸகிஸ்தான் வந்து பின்னர் ரஷ்யாவில சில மாதங்கள் ஒளிந்திருந்து பின்னர் உக்ரேயின் வழியாக போலந்து வந்து அங்கிருக்கும் போலந்து எல்லையின் வழியாக ஜெர்மனிக்குள் வந்து சேர்ந்தவர். போலந்திலிருந்து வருகின்ற ஒரு விற்பனை பொருள் ஏற்றிச் செல்லும் லாரியில் பயணித்து ஜெர்மனி எல்லைக் காவலர்களை ஏமாற்றி விட்டு ஜெர்ம்னியின் தலைநகர் பெர்லினுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார். இந்தப் பயணம் இரண்டாண்டுகள் எடுத்ததாம். கேட்பதற்கு மிக அட்வெஞ்சரஸாக இருந்தாலும் இந்த இரண்டாண்டு காலத்தில் உணவுக்காகவும், உடைக்காகவும், தங்கும் வசதிக்காவும் இவர் அனுபவித்த இன்னல்கள் சிறிதல்ல.

இதே போல ஒரு இலங்கைத் தமிழ் பெண்மணி. கொழும்பில் விமானமேறி வட இந்தியா  வந்து அங்கிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட அவரது பயணம் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் ஏஜெண்டுகள்.  ஆனால் வட இந்தியாவில் போலீஸாரிடம் கைதாகி சில காலங்கள் சிறையில் இருந்து பின்னர் மீண்டும் தன் பயணத்தை இவர் தொடங்கியிருக்கின்றார். இந்த இடைப்பட்ட பிரச்சனைகளினால் ஏற்பாட்டில் மாற்றம் ஏற்பட, விடுதலை ஆன பின்னர் ஜெர்மனிக்கு விமானத்தில் இல்லாமல் அவரை இத்தாலிக்கு கப்பலில் அனுப்ப ஏஜென்சி முடிவு செய்து அனுப்பியிருக்கின்றது. இடையில் இலங்கைத் தமிழ் ஏஜெண்சி ஆட்களினாலேயே பாலியல் வல்லுறவு கொடுமைகளை அனுபவித்து விட்டுத்தான் இத்தாலிக்கு கப்பல் ஏறியிருக்கின்றார். கப்பலில் திருட்டுத்தனமான பயணம் என்பதால் பயணம் முழுக்க குறைந்த உணவும் சிரமங்களும் அனுபவித்து இத்தாலி வந்து சேர்ந்திருக்கின்றார். இத்தாலியிலிருந்து ஏஜென்சியின் மூலமாக லாரியில் மறைத்து வைத்து பின்னர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டவர் இவர். இப்போது தனது உறவினருடன் திருமணமாகி குழந்தைகளுடன் நலமாக இருக்கின்றார். 


Inline image 3
இன்னொரு இலங்கைத் தமிழ் நண்பர் இப்படி இலங்கையிலிருந்து தப்பித்து பயணித்து வரும் வேளையில் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து பய்ணித்து வந்த லாரியில் இருந்த அமிலங்கள் உடைந்து கொட்டியதால் உடல் முழுக்க வெந்து புண்ணாகி இன்றும் அந்த வடுக்கள் மாறாத நிலையிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்கின்றார். 

அகதி அந்தஸ்து பெற்று தன் வாழ்க்கையை வேறோர் இடத்தில் தொடர தன் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்லும் மனிதர்களின் நிலைகளை பல வேலைகளில் நாம் கவனிப்பதில்லை. நமது இயந்திரத்தனம் வாய்ந்த அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இத்தகைய விஷயங்களை யோசித்துப் பார்ப்பதற்கும் கூட இடமும் இருப்பதில்லை. 

உலகில் பல்வேறு காரணங்களுக்காக அதிலும் சமயத்தின் பெயரால்,  சமூகத்தின் பெயரால் நடக்கின்ற செயல்களால் இன்னமும் பல நாடுகளில் மனிதர்கள் தங்கள் அடிப்படை வாழ்க்கையைக் கூட வாழ முடியாத நிலையில் வாழ்க்கை அமைந்திருக்கின்றது. இப்படி அமைந்துள்ள அரசியல் சூழல்களை நோக்கும் போது சுயநலமே பெரும்பாலான வேலைகளில் இத்தகைய சமூக இன்னல்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் உண்மையைக் மறுக்க முடியாது. 

இன்னொரு ஜீவனின் மகிழ்ச்சியும் நம் மனதில் மகிழ்ச்சி உருவாக்கக் காரணமானால் நம் மனதில் இறைமையை உணரலாம். சுயநலம் போக்கி பிற ஜீவனின் உள்ளத்திலும் மகிழ்ச்சியைக் கண்டு அந்த மகிழ்ச்சியில் மனம் மகிழும் பண்பும் நமக்கு தோன்ற வேண்டும் என்ற பிரார்த்தனையே இப்போது இச்சிந்தனையின் தொடர்ச்சியாக என் மனம் முழுதும் நிறைந்திருக்கின்றது. 

Sunday, March 9, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்..!

வசந்த காலம் வந்த குதூகலம் செடிகளுக்கு மட்டுமா? 

இல்லை எங்கள் தோட்டத்திற்கு நிரந்தரமாக வந்து செல்லும் ஆம்சல் பறவைகளுக்கும் தான். 

இன்று காலையில்... முதலில் ஒரு ஆம்சல் மட்டும் வந்தது.. சருகுகளை மேற்பார்வையிட்டு எதனை எடுத்துச் செல்லலாம் என கண்காணிப்பு பணியை தொடங்கியது...

Inline image 1

அடுத்து இன்னொன்று.. அதுவும் இதனோடு சேர்ந்து கொண்டு சருகுகள் தேர்வில் மேற்பார்வை செய்யத் தொடங்கியது..

Inline image 2

இரண்டும் பின்னர் தம் அலகு நிறைய சருகுகளை தூக்கிக் கொண்டு பறந்தன. பக்கத்து வீட்டில் இருக்கும் புதருக்குள் தமது கூட்டை உருவாக்கும் பணியை தொடங்கி விட்டன.

இவர்களின் குடும்ப திட்டமிடுதல் பணி தொடங்கி  விட்டது.. விரைவில் கோடை காலத்தில் சிறு ஆம்சல் குஞ்சுகளின் கீச் கீச் ஒலியை கேட்டு மகிழலாம் :-)

Saturday, March 8, 2014

மகளிர் தினத்தில்.. ஆஹா.. என்ன ஆளுமை?

Inline image 2
ஆஹா....

என்ன ஆளுமை..? 

      என நம்மை வியக்க வைக்கும் சிலரை நாம் வாழ்வில் எப்போதாவதோ சந்தித்திருப்போம். அல்லது அவர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அல்லது அவருடன் நெருங்கிப் பழகியிருப்போம்; அல்லது நமது நெருக்கமான உறவாகவே அவர்கள் அமைந்திரும் நிலை இருக்கலாம்.

அப்படி என்னை/நான் வியக்க வைத்தவர்களில்/வியப்பவர்களில்  அதிலும் குறிப்பாக பெண்களில் ஒரு சிலரை நினைத்துப் பார்க்க முனையும் போது உடனே என் மனதில் தோன்றும் சில நபர்களைப் பற்றிய ரு சிறு குறிப்புத் தான் இந்தப் பதிவு.


1. திருமதி மரியபுஷ்பம் வேலு - எனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவர். எனது 2ம், 3ம்வகுப்பு ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியை. ஆனால் அந்தப் பள்ளியில் படித்த வரை நானும் அவரது செல்ல மாணவர்களில் ஒருவர். என்னைப் போல ஏனைய மாணவ மாணவியரும் கூட அவரைச் சூழ்ந்திருப்போம். முன்னர் சிறு பெண்ணாக இருந்த சமயத்தில் மிக ஒல்லியாக இருப்பேன். அதற்காக என் பெற்றோர் என் ஆசிரியரிடம் வந்து என்னைப் பற்றி நான் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை எனச் சொல்லி கோள்மூட்டி விட்டு சென்றிருப்பர். அவர் என்னை பள்ளி உணவு இடைவேளையில் அவர் முன்னே அமர வைத்து நான் கொண்டு வந்திருக்கும் உணவை சாப்பிட்டு முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருப்பார். ஏதோ வேலையில் இருக்கின்றார் என நினைத்து உணவு டப்பாவை பாதியிலேயே மூடினால் ஒரு மிரட்டல் பார்வை பார்ப்பார். பயந்து சாப்பிட்டு முடித்து விடுவேன். சாப்பிட்டு முடித்ததுமே என்னை அணைத்து கட்டிக் கொள்வார். அது பயமா.. அன்பா என்றால்.. அன்பே  எனக்கு அவர் மேல் அதிகம் என்பதை சந்தேகமில்லாமல் என் மனம் சொல்லும். ஆரம்பப்பள்ளி காலம் முடிந்தும் பல ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறக்காமல் பலகாரங்கள் கொண்டு சென்று கொடுத்து வந்தேன் அவர் இறக்கும் வரை. அவர் முகம் மனதில் பசுமை குறையாமல் இருக்கின்றது. மாணவர்கள் மேல் இருந்த இவரது அன்பின் ஆளுமையை நினைத்து மலைத்துப் போகிறேன்.

2. ஜெர்மனியின் சான்ஸலர் - சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு முறை மூன்றாவது தவணையாக தந்தையர் நாடாகிய (ஜெர்மனியை தாய் நாடு எனச் சொல்லமாட்டார்கள். Vaterland - தந்தையர் நாடு என்றே குறிப்பிடப்படுவது) ஜெர்மனியின் சான்ஸலராக பதவி எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர் இவர். உலக நாடுகளின்  பெருந்தலைவர்களில் தனியிடம் பெறுபவர். இவரது பணிக்காலத்தில் அரசியல், தனி வாழ்க்கை, என எண்ணிக்கையில்ல விமர்சனங்களை எதிர்கொண்டவர். பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரமும் முழு அளவில் கடைபிடிக்கப்படும் ஜெர்மனியின் ஊடகங்களில் அவரை கேலி செய்யாத, குறை கூறாத, கிண்டலடிக்காத ஊடகங்களே  இல்லை எனலாம். ஆனால் அதே வேளை அந்த அனைத்து ஊடகங்களும் அவரது நிர்வாகத்திறமையை மெச்சத் தவறுவதில்லை. இவரை பார்க்கும் போதும், நாளிதழ்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்திகளில் காணும் போதும் இவர் தொடர்பான செய்திகளை அறியும் போதும் இவரது ஆளுமையை நினைத்து மலைத்துப் போகிறேன். 

3. என் தாயார் ஜனகா - 18 வயதில் தஞ்சையில் திருமணம் முடித்த அடுத்த 8ம் நாளே பெற்றோர் உற்றார் அனைவரையும் விட்டு மலேசியாவிற்குக் கப்பலில் என் தந்தையுடன் பயணித்தவர். புதிதாக வந்த ஊரில் யாரையும் அறியாத நிலையிலும், மலாய் மொழி அறியாத நிலையிலும் அவர் சோர்ந்து விடவில்லை. தன் கல்வியை உயர்த்திக் கொண்டார்; தனது வாழ்க்கையை குடும்பம் என்ற வரையறைக்குள் வைத்துக் கொள்ளாமல் பல சமூகப்பணிகளில் ஈடுபட்டார்; தனது இலக்கிய ஆர்வம் காரணமாக பல சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள் ஆகியவற்றோடு 7 நூல்களுக்கும் ஆசிரியர் என்ற புகழ் பெற்றவர். மலேசிய இந்தியர் காங்கிரஸ்,  மலேசிய இந்து சங்கம், பயணீட்டாளர் சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் என தனது ஈடுபாடுகளையும் செயல்பாடுகளையும் விரிவாக்கினார். இசை, நாட்டியம், மருத்துவம், இலக்கியம் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபராகவும் சில காலங்கள் பரிமளித்தார்.  அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது இனிய முகத்தின் புகைப்படத்தை பார்க்கும் போது அவர் திறமையை நினைத்து என்னால் வியக்காமல் இருக்க முடிவதில்லை.  

4. செம்பியன் மாதேவி - அரச குலத்துப் பெண்கள் பலரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவர்களில் சோழ குலத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்க வந்தவர்களின் தனிச்சிறப்பிடம் பெறுபவர் செம்பியன் மாதேவி. நீண்ட காலம் வாழ்ந்த இந்த மாதரசியார் இளம் பிராயத்திலேயே தனது  கணவர் கண்டராதித்தர் வடக்கி நோக்கி சென்று விட்ட நிலை ஏற்பட்டமையால் தனித்து வாழும் நிலைக்கு வாழ்நாளின் பெரும்பகுதி அமைந்தது. தனக்கு அமைந்த இந்த நிலையை சோழர் ராஜ்ஜியத்தின் பக்தி சிந்தனை மக்கள் மத்தியில் பெருகும் வகையில் சோழர்கள் ஊர்களில் இருந்த ஏறக்குறைய எல்லா செங்கற்றளி கோயில்களையும் கற்றளி கோயில்களாக மாற்றிய பெருமை இந்த மங்கையைச் சேரும். இது மட்டுமன்றி புதுக் கோயில்களையும் கட்டுவிக்கச் செய்தவர். கோனேரி ராஜபுரம் கோயில் இவர் பெயர் சொல்லி நிற்கும் கலைக்கூடத்தில் தனிச் சிறப்பு பெற்று விளங்கும் ஒன்று. நேரில் சோழ நாடு சென்று வந்த போதும்,  கோனேரி ராஜபுரம் கோயில் சென்று அதனை நேரில் பார்த்த போதும் இந்த அம்மையாரின் ஈடுபாட்டையும் செயல் திறத்தையும், ஆளுமையௌயும் கண்டு வியந்து நின்றேன்.

5. சந்தனமேரி -  இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியின் வழியாக இவரைப் பற்றி அறிந்து கொண்டேன்.  http://kalvi.vikatan.com/index.php?aid=1410 தமிழகத்தில் தான் வாழும் பகுதியில் சாதிக் கொடுமையை எதிர்த்து தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சமூக அநீதியை எதிர்க்க குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது இந்த தனது முற்சிகளினால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பல இழப்புக்களையும் சந்தித்த பெண்மனி. அவை அனைத்தையும் கண்டு அஞ்சாது தனது சேவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளர் இந்தப் பெண்மணி. தாழ்த்தப்பட்டோர் என சமூகத்தாரால் பெயரிடப்பட்டு சாதி கொடுமைகளுக்கு உள்ளாகும் கல்வி வாய்ப்புக்களை இழக்கும் குழந்தைகளுக்கு ஒரு கல்விச் சாலையை நடத்தி வருகின்றார். இவரைப் பற்றி அறிந்த போது நான் இவரது தைரியத்தையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருக்கும் உறுதியையும் பார்த்து மலைத்து நின்றேன். இது வியப்பையும் தாண்டிய ஒரு அனுபவம்.


இவர்கள் மட்டுமல்ல.. மேலும் பலர் என்னுள்ளே அவர்களின் செயல்களின் வழி ஏற்படுத்தியவர்களாக இருக்கின்றார்கள். 

மகளிர் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

சுபா

Friday, March 7, 2014

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு மின்னூல் வெளியீடு


திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்த திரட்டு நூலின் இறுதி நூலை இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலாக வெளியிட்டேன். அதன் தொடர்பான எனது அனுபவத்தின் ஒரு பகிர்வாக இப்பதிவு.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே வேளையில் தமிழகத்தில் இருந்தேன். ​ஓராண்டு கடந்து விட்டது.

மார்ச் மாதம் மூன்றாம் நாள் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் பிரபந்தம், அந்தாதி, பிள்ளைத்தமிழ் அடங்கிய  உ.வே.சா  அவர்கள் திருவாவடுதுறை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிகர் விருப்பத்தின்படி  1910ம் ஆண்டில் தொகுத்து முடித்து, பதிப்பித்த திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு நூலினை மின்னாக்கம் செய்தது இன்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம்

திருவிடைமருதூர் சிற்றூரில் ஒரு அழகிய தங்கும் விடுதியில் இருந்து இரவு நேரம் இதமான அந்த வேளையில் இந்த நூலை மின்னாக்கம் செய்தது மீண்டும் ஞாபகம் வருகின்றது.

தமிழகம் செல்லும் முன் மனதில் பிள்ளையவர்களின் தலபுராணங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், அந்தாதி நூல்கள் ஆகியனவற்றை தேடி அவற்றை மின்னூலாக்க வேண்டும் என்ற அளவிட முடியாத ஆவல் மனம் முழுதும் நிறைந்திருந்தது.

இறையருள் கருணை உதவும்.. செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

நண்பர்களிடம் பேசி ஆங்காங்கே சில தகவல் பெற்று முடிவில் திருவாவடுதுறை மடம் சென்றால் அங்கு பிள்ளையவர்களின் படைப்புக்களைக் காணலாம்.. மின்னாக்கம் செய்து முடிக்கலாம் என யோசனை கிடைக்க அங்கு செல்லும் முயற்சியிலும் ஏடுபட்டேன்.

ஆதீனத்தில் தொடர்புள்ள நண்பர் ஒருவர் (திரு.சரவணன் - சென்னையில் ஒரு கல்லூரி விரிவுரையாளர்) ஆதீன அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இன்ன தேதியில் அங்கு வருகின்றோம் என குறிப்பிட்டு ஏற்பாடு செய்தார்.

திருமடம்  செல்லும் போது எத்தகைய வழிமுறைகளைக் கையாள வேண்டுமோ.. என்ன சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளனவோ என எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

திருமடம் செல்லும் பாதையை அடையும் போதே மனதில் ஒரு குதூகலம் எழாமல் இல்லை.

என் சரித்திரம் வாசித்து முடித்திருந்தபடியால் திருவாவடுதுறை நகர், ஆதீனம் என ஓரளவு மனதில் ஒரு கற்பனை ஊர் நிழலாடியது.

வாசலில் காரை நிறுத்தி திருமடம் செல்லலாம் என நாங்கள் நெருங்க எங்களை வாசலில் வந்து வரவேற்றனர் இரண்டு தம்பிரான்கள். இருவரையும் பார்க்கும் போதே அவர்களின் சைவ நெறி ஒழுக்கம் நன்கு வெளிப்படும் வகையில் ஒரு தோற்றம். ஆனால் அதனையும் கடந்து மலர்ந்த முகத்தின் புன்னகை... அவர்களை புகைப்படம் ஏதும் நான் எடுக்கவில்லை எனினும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் கண் முன்னே அக்காட்சி தோன்றுகின்றது.

எங்களை வரவேற்று உபசரித்து திருநீறு வழங்கி வாசற்புற பகுதியில் அமர வைத்து அருந்த நீர் கொடுத்து உபசரித்தனர். என்ன அன்பு என வியந்து போனேன்!

அப்போதைக்கு சில தினங்களுக்கு முன்னரே ஆதீனகர்த்தர் மறைந்தமையினாலும் புதிய ஆதீனத்தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் சென்ற சமயம் அவர்கள் பயணத்தில் இருந்ததாகவும் ஆனால் வரும் எங்களை உபசரிக்க சொல்லியிருந்ததாகவும் கேள்விப்பட்ட போது மேலும் சந்தோஷமடைந்தேன்.

நிச்சயமாக நினைத்த காரியம் நலமே நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்தது.

அன்றைய தினமே பிள்ளையவர்களின் சில தல புராண நூல்களை மின்னாக்கம் செய்தேன். அவை இன்னமும் வெளியிடப்படவில்லை. இனி தொடர்ந்து வரும்.

மதியம் நூலகத்தில் தேடியதில் சில தலபுராணங்களை மட்டுமே காணும் நிலை ..இன்னும் பல நூல்கள் கிடைத்தால் அவற்றையும் பதிவு செய்து விடலாமே என மனதில் ஏக்கம் நிறைந்தது. நூலகத்தில் சொல்லி வைத்து விட்டு பின்னர் எங்கள் சோழ நாட்டு கோயில் பதிவுகளைச் செய்ய புறப்பட்டு விட்டோம்.

இறைவன் திருவருள்..
இரவு நாங்கள் தங்கியிருந்த  இடத்திற்கே எங்களைத் தேடிக் கொண்டு ஆதீனப் புலவர்கள் இருவர் இந்த பிரபந்த திரட்டு நூலோடு வந்து சேர்ந்தனர்.

ஆனால் அவர்கள் கட்டளை.. மறு நாள் இந்த நூலை மறவாமல் நூலகத்தில்  ஒப்படைத்து விட வேண்டும் என்பது. மறு நாள் காலை ஆறு மணிக்கு எங்கள் சோழனாட்டு கோயில் பதிவுக்கான பயணம் திட்ட மிட்டிருந்தோம். இருந்ததோ இரவு வேளை.

அன்றே சிவராத்திரி :-)

மின்னாக்கம் செய்து முடிக்க காலை 3 மணி.

சோர்வில் உடல் அலுத்துப் போனாலும் மனதில் குதூகலம் நிறைந்திருந்தது.

இப்போது ஒரு வருடமாகிவிட்டது.

இந்த 40 நூல்களையும் மின்னாக்கம் செய்து தனித்தனியாக மின்னூலாகவும் செய்து வெளியிட்டு விட்டோம். நமது தமிழ் மரபு அறக்கடளையின் சேகரத்தில் இது இடம்பெற்றுள்ளது என்பதோடு உ.வே.சாவின் முதல் பதிப்பு இது என்னும் பெருமையுடன் வரும் இந்த நூல் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சிறப்பு.

இந்தப் பணியில் முழுமையாக நான் ஈடுபட்டு செய்து முடித்தாலும் வெவ்வேறு வகைகளில் இப்பணிக்கு உதவிய சிலரை மறக்க முடியாது. அவர்களை நினைவு கூர்வது மிகத் தகும்.


  • திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்
  • திருவாவடுதுறை ஆதீன அலுவகத்தினர்
  • திருவாவடுதுறை ஆதீனப்புலவர்கள், குறிப்பாக திரு.குஞ்சிதபாதம்
  • திருவாவடுதுறை ஆதீன நூலகர்
  • திரு.சரவணன்,
  • டாக்டர்.மா.ராஜேந்திரன்
  • திரு.பரந்தாமன்

ஆகியோருக்கு என் நன்றி


தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இருக்கும் இன்னூல்களைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி தமிழாய்வில் ஈடுபட வேண்டும். பிள்ளையவர்களின் தமிழின் ஆழத்தை, சிறப்பை தொடர்ந்து ஆய்வுலகம் போற்றி வர வேண்டும் என்பதே என் தனிப்பட்ட அவா!

அன்புடன்
சுபா

Wednesday, March 5, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்..!

வசந்தம் வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன என் வீட்டு தோட்டத்துச் செடிகள்..

இப்படியே சீதோஷ்ணம் இருந்தால் நன்று.. 
இல்லையேல் மீண்டும் குளிர் ஏறினால் செடிகள் அனைத்தும் மண்ணுக்குள் தலையை சுறுக்கிக் கொண்டு ஒளிந்து கொள்ள வேண்டியதுதான்..

முதல் வசந்த கால வரவேற்பாக தோட்டத்து க்ரோக்குஸ் மலர்களின் காட்சி.. இவை நேற்று மதியம் பதிவாக்கப்பட்டவை. நேற்று மதியம் ஸ்டுட்கார்ட்டில் சீதோஷ்ணம் 8 டிகிரி செல்ஸியசாக இருந்தது.  சூரிய வெளிச்சம் நன்றாக இருந்தமையால்  நன்கு புகைப்படம் எடுக்க முடிந்தது.

என் தோட்டத்தில் இருக்கும் 4 வகை க்ரோக்குஸ் மலர்களின் காலை / மாலை / இரவு  வணக்கம்! :-)

Inline image 1


Inline image 2


Inline image 3


Inline image 4



சுபா