செல்லும் பாதையில் தொடரும் அனுபவங்கள் என்ற தலைப்பில் சென்ற ஆண்டு அதீதம் இதழுக்கு எழுதி அதில் வெளிவந்த என் கட்டுரை.
முனைவர்.க சுபாஷிணி
ஜெர்மனிக்கு வந்த புதிதில் நான் அறிந்து கொண்ட தமிழ் நண்பர்களின் வழியாக இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகள் அதிலும் பிரத்தியேகமாக இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸர்லாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களின் கதைகளைக் கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நான் சந்தித்து நட்பு உருவாக்கிக் கொண்ட இலங்கைத் தமிழ் நண்பர்களில் சிலரது கதையைக் கேட்டு இப்படியும் வாழ்க்கை அமையக்கூடிய நிலை இருக்கின்றதா என அதிர்ந்து நின்றதுண்டு. இலங்கைத் தமிழர் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருபவர்களின் கதைகள் பல சோதனைகள் நிறைந்தவை.
பொதுவாக அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கள் தாய்நாட்டில் தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள வழியின்றி புகலிடம் தேடி வருபவர்களாக அமைகின்றனர். தங்கள் தாய்மண்ணை விட்டு அங்கு நிலவும் பிரச்சனை மிகுந்த சூழலிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் விடுவித்துக் கொண்டு உலகின் ஏதோ ஓர் மூலையில் தன் வாழ்நாளின் மிச்ச நாட்களைக் கழிக்க வருவோர் அதிகம். இப்படி தன் நாட்டை விட்டு வருவோரில் தனியாக வருவோரும் உண்டு. குடும்பத்தாரோடும் குழந்தைகளோடும் வருவோரும் உண்டு. இவர்கள் கடல் வழியாகவும் நில வழியாகவும் பல இன்னல்களைத் தாண்டி ஐரோப்பாவில் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் நாடுகளுக்கு வருகின்றனர். இப்படி வரும் பொழுது தாங்கள் பயணித்து வரும் படகு கடலில் மூழ்கி உடைந்து உயிரிழப்போரும் உண்டு. அண்மையில் அக்டோபர் மாதம் 3ம் தேதி ஆப்பிரிக்க அகதிகள் 500 பேரை ஏற்றிக் கொண்டு பயணித்து இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்த படகு ஒன்று நெருப்புப் பிடித்து உடைந்து மூழ்கியதில் 130க்கும் மேலானோர் இறந்தனர் என்ற செய்தியை பலரும் கேல்விப்பட்டிருப்போம்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குப் புலம்பெயர்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை தரத்தில் உயர்வைக் காணவும், பொருளாதார நிலையில் மேன்மை அடையவும் வருபவர்களாக அமைகின்றனர். அந்த வகையில் கிழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடுகளான ரோமானியா, பல்கேரியா ஆகிய நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளைச் சொல்லலாம். உள்ளூரில் நிலவும் வேலையில்லா நிலையும், வருமையும் குடும்பச் சூழலும் பலர் அகதி அந்தஸ்து வேண்டி ஜெர்மனிக்கு வரக் காரணமாக இருக்கின்றது. இப்படி வருவோரால் ஜெர்மனியில் ஏற்படும் பல சமூக மாற்றங்களை உள்ளூரில் மக்கள் பொதுவாக விரும்புவதில்லை என்ற போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில தேவைகளை மனதில் வைத்து ஜெர்மனி உள்ளூரில் இவர்களுக்கு வேலை, குழந்தைகளுக்கான செலவுப் பணம் என தொடர்ந்து வழங்கி வருவதும் குறைப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயமாகின்றது. ஒரு குழந்தைக்கு மாதம் 190 யூரோ செலவுத்தொகை என்பது ஜெர்மனியில் குறைந்த தொகை என்றாலும் ரோமானியா பல்கேரியா ஆகிய நாடுகளில் இது பெரியதொரு தொகையாக அமைவதால் வேலையில்லாமலும் ஜெர்மனிக்கு வந்தால் வாழலாம் என்ற மனப்போக்கை இவர்களுக்கு ஏற்படுத்தத் தவரவில்லை. இதனை உணர்ந்த அரசு இதனை சற்று மாற்றி இப்படி வேலை தேடி அகதி அந்தஸ்து கோருபவர்கள் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவரவர் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவர் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இலங்கையில் நடந்த இனப்போர் நிமித்தம் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழரில் கணிசமான என்ணிக்கையினர் ஜெர்மனியில் இருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரது பயணம் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத பயணமாக அமைந்து போவதை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
எனது நல்ல நண்பர் ஒருவர். அவர் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்து அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு இப்போது ஜெர்மானியப் பெண்மனியை மணந்து நன்கு வாழ்கின்றார். அவரது பயணம் வித்தியாசமானது. இலங்கியிலிருந்து புறப்பட்டு கடல் வழியாக இந்தியா வந்து பின்னர் பஸ், ரயில் என பயணித்து, அங்கிருந்து பாக்கிஸ்தான் சென்று பின்னர் ஆப்கானிஸ்தான் சென்று அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து பின்னர் உஸ்பெக்கிஸ்தான் சென்றிருக்கின்றார். அங்கு சில காலம் பணிபுரிந்து விட்டு அங்கிருந்து கஸகிஸ்தான் வந்து பின்னர் ரஷ்யாவில சில மாதங்கள் ஒளிந்திருந்து பின்னர் உக்ரேயின் வழியாக போலந்து வந்து அங்கிருக்கும் போலந்து எல்லையின் வழியாக ஜெர்மனிக்குள் வந்து சேர்ந்தவர். போலந்திலிருந்து வருகின்ற ஒரு விற்பனை பொருள் ஏற்றிச் செல்லும் லாரியில் பயணித்து ஜெர்மனி எல்லைக் காவலர்களை ஏமாற்றி விட்டு ஜெர்ம்னியின் தலைநகர் பெர்லினுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார். இந்தப் பயணம் இரண்டாண்டுகள் எடுத்ததாம். கேட்பதற்கு மிக அட்வெஞ்சரஸாக இருந்தாலும் இந்த இரண்டாண்டு காலத்தில் உணவுக்காகவும், உடைக்காகவும், தங்கும் வசதிக்காவும் இவர் அனுபவித்த இன்னல்கள் சிறிதல்ல.
இதே போல ஒரு இலங்கைத் தமிழ் பெண்மணி. கொழும்பில் விமானமேறி வட இந்தியா வந்து அங்கிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட அவரது பயணம் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் ஏஜெண்டுகள். ஆனால் வட இந்தியாவில் போலீஸாரிடம் கைதாகி சில காலங்கள் சிறையில் இருந்து பின்னர் மீண்டும் தன் பயணத்தை இவர் தொடங்கியிருக்கின்றார். இந்த இடைப்பட்ட பிரச்சனைகளினால் ஏற்பாட்டில் மாற்றம் ஏற்பட, விடுதலை ஆன பின்னர் ஜெர்மனிக்கு விமானத்தில் இல்லாமல் அவரை இத்தாலிக்கு கப்பலில் அனுப்ப ஏஜென்சி முடிவு செய்து அனுப்பியிருக்கின்றது. இடையில் இலங்கைத் தமிழ் ஏஜெண்சி ஆட்களினாலேயே பாலியல் வல்லுறவு கொடுமைகளை அனுபவித்து விட்டுத்தான் இத்தாலிக்கு கப்பல் ஏறியிருக்கின்றார். கப்பலில் திருட்டுத்தனமான பயணம் என்பதால் பயணம் முழுக்க குறைந்த உணவும் சிரமங்களும் அனுபவித்து இத்தாலி வந்து சேர்ந்திருக்கின்றார். இத்தாலியிலிருந்து ஏஜென்சியின் மூலமாக லாரியில் மறைத்து வைத்து பின்னர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டவர் இவர். இப்போது தனது உறவினருடன் திருமணமாகி குழந்தைகளுடன் நலமாக இருக்கின்றார்.
இன்னொரு இலங்கைத் தமிழ் நண்பர் இப்படி இலங்கையிலிருந்து தப்பித்து பயணித்து வரும் வேளையில் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து பய்ணித்து வந்த லாரியில் இருந்த அமிலங்கள் உடைந்து கொட்டியதால் உடல் முழுக்க வெந்து புண்ணாகி இன்றும் அந்த வடுக்கள் மாறாத நிலையிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்கின்றார்.
அகதி அந்தஸ்து பெற்று தன் வாழ்க்கையை வேறோர் இடத்தில் தொடர தன் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்லும் மனிதர்களின் நிலைகளை பல வேலைகளில் நாம் கவனிப்பதில்லை. நமது இயந்திரத்தனம் வாய்ந்த அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இத்தகைய விஷயங்களை யோசித்துப் பார்ப்பதற்கும் கூட இடமும் இருப்பதில்லை.
உலகில் பல்வேறு காரணங்களுக்காக அதிலும் சமயத்தின் பெயரால், சமூகத்தின் பெயரால் நடக்கின்ற செயல்களால் இன்னமும் பல நாடுகளில் மனிதர்கள் தங்கள் அடிப்படை வாழ்க்கையைக் கூட வாழ முடியாத நிலையில் வாழ்க்கை அமைந்திருக்கின்றது. இப்படி அமைந்துள்ள அரசியல் சூழல்களை நோக்கும் போது சுயநலமே பெரும்பாலான வேலைகளில் இத்தகைய சமூக இன்னல்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் உண்மையைக் மறுக்க முடியாது.
இன்னொரு ஜீவனின் மகிழ்ச்சியும் நம் மனதில் மகிழ்ச்சி உருவாக்கக் காரணமானால் நம் மனதில் இறைமையை உணரலாம். சுயநலம் போக்கி பிற ஜீவனின் உள்ளத்திலும் மகிழ்ச்சியைக் கண்டு அந்த மகிழ்ச்சியில் மனம் மகிழும் பண்பும் நமக்கு தோன்ற வேண்டும் என்ற பிரார்த்தனையே இப்போது இச்சிந்தனையின் தொடர்ச்சியாக என் மனம் முழுதும் நிறைந்திருக்கின்றது.
No comments:
Post a Comment