Tuesday, March 25, 2014

Robert Langdon is back..! - Cosimo I de' Medici. - 16

ஓவியப் பார்வையை தொடர்வோமா..?

டான் ப்ரவுன் ரெனைஸான்ஸ் காலத்து பின்னனியை, அக்காலத்தில் நடைபெற்ற சமுதாய மாற்றங்களை ஆங்காங்கே சற்றே முக்கியத்துவம் கொடுத்து விவரிக்க முனையும் போது சிலரது பெயர்களை இன்ஃபெர்னோ நாவலில் குறிப்பிடுகின்றார். அப்படி தாம் குறிப்பிட்டுக் கூறும் நபர்களில் ஒருவராகத் திகழ்பவர் மெடிஸி பிரபு அவர்கள்.  Cosimo I de' Medici, Grand Duke of Tuscany (1519-1574) - இவரைப் பற்றி பல தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவரது ஓவியங்களும் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் விக்கி பக்கத்திலிருந்து தொடங்கலாம். http://en.wikipedia.org/wiki/Cosimo_I_de'_Medici,_Grand_Duke_of_Tuscany


Inline image 1

கொஸிமோ டி மெடிஸி ப்ளோரன்ஸ் நகரின் பிரபுவாக பதவி எடுத்துக் கொண்ட பின்னர் டஸ்கனி பிராந்தியத்தை முழுமையாக போர் மற்றும் தமது அரசியல் ஆளுமையினாலும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார்.  டஸ்கனி மானிலத்தின் பரப்பை விரிவாக்கி பலம் பொருந்திய ஆட்சியை அமைத்தவர் இவர்.  ப்ளோரன்ஸ் நகரில் ஆர்னோ நதிக்கரையில் உள்ள பாலாஸியோ பிட்டியில் (இது இவரது மனைவி டொலேடோ வாங்கிய அரச மாளிகை) தனது அரச மாளிகையை அமைத்தவர். 

இன்ஃபெர்னோவில் குறிப்பிடப்படும் ஒரு பகுதியில்,  அதாவது காவல் துறையிடம் இருந்து தப்பித்து செல்லும் ரோபர்ட் சியன்னா இருவரும் மறைமுகமாக (Boboli Garden) பூங்காவிலிருந்து தப்பித்து அரண்மனைக்கு வருவதாக நாவலில் குறிப்பிடப்படும் அந்த ரகஸியப் பாதையை அமைக்க வைத்தவர் இவர்தான். இவர் காலத்தில் பல கலைஞர்ளைக் கொண்டு ஓவியங்களையும், கலைப்படைப்புக்களும் சிற்பங்களையும் ப்ளோரன்ஸ் நகரில் உருவாக்க காரணமாக இருந்தவர் இவர். இதற்காக கலைக்கூடங்களை உருவாக்கி அதில் திறமை மிக்க கலைஞர்களைக் கொண்டு மாணவர்களை உருவாக்கும் முயற்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  

கொஸிமோ டி மெடிஸியின் இங்கே காட்டப்படும் சித்திரம் மட்டுமின்றி இவரது மேலும் பல படங்களை வரைந்தவர் ப்ரோன்ஸினோ எனும் கலைஞர் ( Bronzino எனும் பெயர் கொண்ட Agnolo di Cosimo, 1503 –1572).

இந்தப் படம் ப்ளோரன்ஸ் நகரிலோ இத்தாலியிலோ இருக்கலாம் என நான் நினைத்திருந்தேன். இணையத்தில் தேடியதில் தற்சமயம் இது போலந்து நாட்டின் போஸ்னான் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருப்பதாக அறிய முடிகிறது.

மேலும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது இன்ஃபெர்னோ வழியாக ஓவியப் பார்வையைத் தொடர்கிறேன்!

சுபா

1 comment:

  1. interesting.. ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஆங்கில நாவலைக் கையிலெடுக்கப் போகிறேன்.. இதுவரை வாசித்தது டான் ப்ரவுனின் நாவல்களை மட்டுமே :) இன்ஃபெர்னோவையும் வாசித்து விட வேண்டியது தான்

    ReplyDelete