Saturday, October 27, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 28


மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாறு நூலில் முடிந்த அளவு கிடைத்த அனைத்து தகவல்களையும் இணைத்து வெளியிட வேண்டும் என்ற உ.வே.சா அவர்களின் எண்ணம் நன்கு வெளிப்படுகின்றது. பல குறிப்புக்கள், சமகாலத்து நண்பர்களிடமிருந்தும் மற்ற இதர மாணாக்கர்களிடமிருந்தும் பெற்ற சிறு சிறு தகவல்கள், சிறு செய்யுள் குறிப்புக்கள் என கிடைத்த அனைத்து தகவல்களையும் பொக்கிஷமாக நினைத்து இந்த நூலில் வடித்திருப்பது தனிச்சிறப்பு. இதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் ஜாதகக் குறிப்பையும் உ.வே.சா விட்டு வைக்கவில்லை. இந்த நூலில் இணைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் ஜாதகக் குறிப்பின் பிரதியை இங்கே இணைத்திருக்கின்றேன்.



ஜாதகம் வாசிக்கத் தெரிந்தவர்கள் பார்த்து இந்த ஜாதகம் தொடர்பான உங்கள் குறிப்புக்களையும் இங்கே வழங்கலாமே.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த சில மாதங்களுக்குப் பின்னர் அதவத்தூர் என்ற ஊருக்கு அருகேயுள்ள சோமரசம்பேட்டை என்னும் ஊரில் உள்ளவர்கள் சிதம்பரம் பிள்ளையை தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல எண்ணி மிகவும் வேண்டி அவரை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர் விரும்புவோருக்குத் தமிழ் பாடம் சொல்லி வந்ததுடன் அங்கே ஒரு பாடசாலையை அமைத்து குழந்தைகளுக்குக் கல்விச்சேவை செய்திருக்கின்றார் என்ற விஷயத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.  அக்கால கட்டத்தில் அவருக்கு மேலும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஐந்து வயதானதும் தன் தகப்பனார் நடத்தி வந்த அதே பள்ளியில் கல்வி கற்றிருக்கின்றார். பள்ளிப் பிராயத்திலேயே பலரும் புகழும் படி சிறந்த ஞாபகச் சக்தி பெற்றிருந்ததோடு செய்யுட்களைப் பொருளறிந்து ஆராயும் திறனையும் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார்.

தந்தையிடமே கல்வி கற்றமையால், தனியாக மேலும் பல பாடங்களை வீட்டில்தந்தையாரிடம் கற்று வந்ததோடு  நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் இளம் வயதிலேயே கற்று வந்திருக்கின்றார். மீண்டும் மீண்டும் எழுதி வைத்துப் பழகும் போது பாடங்கள் மனதில் நிலைத்துப் போவதை நம்மில் பலர் நமது அனுபவத்தில் உணர்ந்திருப்போம். அக்காலத்தில் அச்சு நூல்கள் பயன்பாடு இல்லாத நிலையில் இவர் தந்தையாரிடமே முறையாக ஏட்டில் எழுதப் பழகினார்.  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குத் தன் தந்தையாரிடம் பாடம் கேட்கும் அனைத்து நூல்களையும் தானே தனியாக ஏட்டில் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கின்றது.

செய்யுள் இயற்றும் திறமை இவருக்கு இருந்தமையால் இளம் வயதிலேயே பாடல்கள் இயற்றி வாசித்துக் காட்டுவாராம். பள்ளியில் படித்த  ஏனைய மாணக்கர்களை விடவும் இவரது கல்விக் கேள்வியும் ஞானமும் விரிவாக வளர்வதைக் கண்டு பலர் வியக்க,  இந்தச் செய்தி அயலூர்களுக்கும் எட்ட ஆரம்பித்திருக்கின்றது.  ஓய்வு நாட்களில் சிதம்பரம் பிள்ளை செல்கின்ற இடங்களுக்கு இவரையும் கூட்டிச் செல்வாராம். அங்கே தமிழ் பாடம் கேட்க விழையும் செல்வர்களுக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையே செய்யுள் கூறி அதற்குப் பொருளும் கூறுவாறாம். இப்படி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கல்வி ஞானம் என்பது இளம் வயதிலேயே மிக உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றிருந்தமையும் அவரது கேள்வி ஞானம் பற்றி அருகாமையில் இருந்த ஊர்களில் இருந்தவர்கள் கூட அறிந்து வியந்து போற்றினர் என்ற தகவல்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூலில் உ.வே.சா அவர்கள் படிப்படியாக விளக்கிச் செல்கின்றார்.


தொடரும்....
சுபா

Friday, October 26, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 27


வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை வாசித்த போது இந்த தமிழறிஞர் இயற்றிய அனைத்து நூல்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் தொகுப்பில் இணைத்து வைக்க முயற்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உறுதியானது. ஆக இந்தத் தொடரை எழுதும் பொதுதே அந்தப் பணியையும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதனை வேறொரு தனி இழையில் தொடங்கலாம் என நினைத்திருக்கின்றேன். எத்தனை நூல்கள் நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளனவோ தெரியாது. சில நூல்கள அழிந்தும் இருக்கலாம். முயற்சி செய்தால் முதலில் ஒரு பட்டியலைத் தயாரித்து நூல்களைத் தேடும் பணியை நாம் தொடங்கலாம்.

சரி.. உ.வெ.சா மாணாக்கராக பிள்ளையவர்களிடம் சேர வந்த அந்த தினத்தையும் மாணாக்கராக தன்னை அவர் ஏற்றுக் கொண்ட நிகழ்வுகளையும் முந்தைய பதிவில் விவரித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி சில விஷயங்களை அறிமுகப் படுத்தும் நோக்கில் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தந்தையார் சிதம்பரம்பிள்ளை தமிழ்க்கல்வி கற்றவர். இவர்களது குடும்பத்தினர் சைவ வேளாளர் சமூகத்தின் நெய்தல் வாயிலுடையான் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒரு கோத்திரமும் அதனைச் சார்ந்த சமூகத்தினரும் பற்றி பிள்ளையவர்கள் சரித்திரத்தை வாசிக்கும் போது தான் அறிந்து கொள்ள முடிந்தது.இவர்கள் குடும்பத்தினர் மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் கோயிலுக்குரிய முத்திரைக் கணக்கர்களுள் மீன முத்திரைப் பணிக்குரியவர்களாக இருந்தவர்கள் என்ற ஒரு செய்தியும் நமக்கு இந்த நூலில் கிடைக்கின்றது.

சிதம்பரம்பிள்ளையவர்கள் தேவார திருவாசகம், பெரிய புராணம், கம்பராமாயணம், கந்த புராணம், மேலும் பலவகையான பிரபந்தக்கள், இலக்கண நூல்கள், உரை நூல்கள் ஆகியவற்றில் சிறந்த பயிற்சியுடையவராக அக்காலத்தில் திகழ்ந்தவர்.  தன்னிடம் கற்கின்ற மாணவர்களுக்கு அன்புடன் பாடம் நடத்தும் ஆசிரியராக அறியப்பட்டவர்.அத்துடன் சிறந்த சிவபக்தியும்  கொண்டவர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் கோயில் அதிகாரிகளுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் தோன்றவே கோயில் கணக்கர் பணியை விட்டு விட்டு தம் மனைவியுடன் மதுரையை விட்டுப் பிரிந்து வடக்கு நோக்கிச் சென்று திரிசிரபுரத்திற்கு மேற்கே காவிரி நதியின் தென்திசையிலுள்ள எண்ணெய்க் கிராமம் எனும் ஒரு கிராமத்தில் குடி பெயர்ந்தார்.

கல்வி கற்றோருக்குத் தான் செல்லும் இடமெல்லாம் சிறப்பாயிற்றே. எண்ணெய்க் கிராமத்து மக்கள் சிதம்பரம் பிள்ளையின் கல்வி ஞானத்தை அறிந்து அவருக்கு தங்குமிடம் தந்து உணவிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து ஆதரித்தனர். அப்படி அவ்வூரில் இருக்கையிலே சிதம்பரம் பிள்ளையவர்கள் அவரிடம் வந்து சென்று பாடம் கேட்டுச் செல்பவர்களுக்குப் பிரபந்தங்களையும் தமிழ் நூல்களையும் பாடம் சொல்லி வந்தார்.

அவரது கல்விச் சிறப்பும் அவரது அன்பான குணமும் மக்களைக் கவரவே பலர் வந்து அவரிடம் பாடம் கேட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் இவரது புகழ் பக்கத்திலுள்ள ஊர்களுக்கும் பரவியது. அருகாமையில் இருந்த அதவத்தூரென்னும் ஊரிலிருந்த பெரியோர் சிலர் அவ்வூரில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சிலகாலம் இருந்து தமிழ்ப்பாடங்கள் நடத்த வேண்டும் என்று கேட்க,  எண்ணெய்க் கிராமத்து மக்களிடம் உடன்பாடு பெற்றுக் கொண்டு அங்கு சென்று தமிழ்ப் பாடங்கள் சொல்லி வந்தார். பாடம் சொல்லி வருவது மட்டுமன்றி அவ்வூர் குழந்தைகளுக்கும் கணக்காயராக இருந்து  வர வேண்டும் என்று அவ்வூர் மக்கள் அன்புடன் கோரிக்கை விடுக்க அதனை ஏற்று அவ்வூரிலேயே கணக்காயராக இருந்து வந்தார். கணக்காயர் என்பது ஆசிரியர் என்பதன் ஒரு பழஞ்சொல் என்றே கருதுகின்றேன்.

இப்படி சிதம்பரம் பிள்ளையவர்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகையிலே அவருக்கு 6-4-1815ம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தம் குலதெய்வமாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுரரின் நினைவாக அப்பெயரையே சூட்டி மகிழ்ந்தனர் கணக்காயர் சிதம்பரம் பிள்ளையும் அவரது மனைவியும். உ.வே.சா இப்பகுதியை எழுதும் போது இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“.. தமிழ்நாடு செய்த பெருந்தவத்தால்.. ஒரு புண்ணிய குமாரன் அவதரித்தார். இக்குழந்தை பிறந்த வேளையிலிருந்த கிரக நிலைகளை அறிந்து இந்தக் குமாரன் சிறந்த கல்விமானாக விளங்குவான் என்றும் இவனால் தமிழ் நாட்டிற்குப் பெரும்பயன்  விளையும் என்றும் சோதிட நூல் வல்லவர்கள் உணர்த்தவே சிதம்பரம்பிள்ளை மகிழ்ந்து ”நம் குலதெய்வமாகிய  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசருடைய திருவருளினாலேயே இந்தச் செல்வப்புதல்வனை நாம் பெற்றோம்” என்றெண்ணி அக்கடவுளின் திருநாமத்தையே இவருக்கு இட்டனர்.

தொடரும்...


அன்புடன்
சுபா

Saturday, October 13, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 26


தான் யார் யாரிடம் பாடம் கற்றோம் என்ற விபரங்களையெல்லாம் உ.வே.சா சொல்லி விவரிக்க அவரிடம் நைடதத்திலிருந்து அவருக்குத் தெரிந்த ஒரு பாடலைக் கூறி விளக்கச் சொல்கின்றார் பிள்ளையவர்கள். இந்த மகாவித்துவான் முன்னிலையில் நடுங்கிக் கொண்டே கூறும் உ.வே.சா அவர்களை உற்சாகமும் தைரியமும் படுத்தி மீண்டும் ஒரு செய்யுளைக் கூறச் செய்து கேட்கின்றார் பிள்ளையவர்கள். மாணவர் தகுதியாணவர்தாம் என்ற நம்பிக்கை மனதில் ஏற்பட்டிருக்கும் போல. நிகண்டை மனனம் செய்வது உ.வே.சாவுக்கு பயனளிக்கும் என்று ஆலோசனையும் கூறுகின்றார்.

பிறகு இவரை மாணவராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று உ.வே.சாவின் தந்தையார் வினவும் போது சிறிது தயக்கம் காட்டுகின்ரார். சில மாணவர்கள் முதலில் மிகுந்த ஆர்வத்துடன் வருவதும் பின்னர் சில நாட்கள் சென்று வருவதாகக் கூறிச் சென்று விடுவதும் மீண்டும் வந்து பாடங்களைத் தொடராமல் போவதுமாக தனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களை வித்துவான் மீனாட்ட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்~ கூறுகின்றார்கள். இது உ.வே.சாவிற்குத் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாரோ என்ற மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அந்த நிமிடத்து தனது மனப்போக்கினையும் நிகழ்வையும் என் சரித்திரம் நூலில் இப்படிப் பதிகின்றார் உ.வே.சா.

"அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கி விட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விஷயங்களையெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை என் பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம்  இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான்
உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது
சொன்னேன்; வேண்டிக் கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது."

இதனை வாசித்த போது என் மனதில் இப்படியொரு தந்தை அமைய உ.வே.சா பெரும் தவப்பயன் செய்திருக்கின்றார் என்றே உடன் தோன்றியது. இந்த நிகழ்வு மாத்திரமல்ல. அவரது சிறு பிராயத்திலிருந்து இறுதி வரை பற்பல சூழல்களில் உ.வே.சாவின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கின்றார் வெங்கடசுப்பையர். உ.வே.சாவின் தெளிந்த சிந்தனை அவரது வாழ்க்கைப் பாதையை அமைத்தது என்றால் அந்தப் பாதையை அமைக்க உறுதுணையாக இருந்தது வெங்கடசுப்பையரின் அர்ப்பணிப்பு என்பதில் சந்தேகமில்லை.

இவர்களின் தீவிரத்தைப் பார்த்த பிள்ளையவர்களின் முகத்திலே மலர்ச்சி. இப்படி ஒரு மாணவர் நிச்சயமாக கவனம் சிதறாமல் தமிழ்க்கல்வியில் நிறைந்த ஈடுபாட்டுடன் நிச்சயம் நல்ல நிலையை அடைவார் என்ற நம்பிக்கை மனதில் வந்திருக்க வேண்டும். அவரை மாணவராக ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்து தங்குவதற்கும் உணவிற்கும் எப்படி ஏற்பாடு என்று வினவுகின்றார்.

உ.வே.சாவின் தந்தையார் பிள்ளையவர்களையே இவரை முழுதுமாக கவனித்துக் கொள்ள வேண்டிக் கேட்க திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் இருக்கும் காலத்தில் முழுதுமாக உ.வே.சாவைப் பராமரித்துக் கொள்வதாக உறுதியளிக்கின்றார் பிள்ளையவர்கள். ஏனைய காலங்களில் அவர் சொந்தங்களின் துணையில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்வது ஏற்புடையதாக இருக்கும் என்று கூறி தனது நிலையை விளக்குகின்றார் பிள்ளையவர்கள். பின்னர்,

"பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்.” 

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அஸ்தமன சமயமாகி விட்டமையால் நாங்கள் மறு நாட்காலையில் வருவதாக விடை பெற்றுக் கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்."

உ.வே.சாவின் விளக்கக் குறிப்புக்களின் வழியாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை அறிந்து கொள்கின்றேன். அவரைப் பற்றிய பரவலான தகவல்கள் கிடைப்பது அறிதாகவே இருக்கின்றது.  என் சரித்திரம் மட்டுமன்றி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு பாகம் 1ல் இவரைப் பற்றி ஆழமான பல விவரங்களை நான் அறிந்து வருகின்றேன். அதனை இங்கு தேவைப்படும் பதிவுகளில் பகிர்ந்து கொள்வதும் நலம் பயக்கும் என்று நான் கருதுவதால் அவற்றை அவ்வப்போது குறிப்பிடவும் நினைத்திருக்கின்றேன்.

மாணாக்கர்களிடம் பிள்ளையவர்கள் எவ்விதம் அன்பு காட்டுவார் என்பதை  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு பாகம் 1ல் உ.வே.சா ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின் யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவரகளை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்து வந்தது. அதனால், பாடங்கேட்கவரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு  அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னிலையிலும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவி செய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர் பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது. பக். 106-107."

இதனை வாசித்து என் மனம் நெகிழ்ந்தது.  இப்படி ஒரு புலவர் பெருமானைப் பற்றி அறிந்து கொள்ளும் போது நமக்கு வழியாட்டியாகவும் அமையத்தக்கவர் இவர் என்றே என் மனம் உணர்த்துகின்றது.


தொடரும்..

சுபா

Thursday, October 11, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 25


தற்காலத்தில் கல்லூரிகளில் இணைவதற்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் கல்வி கற்று பட்டம் பெறவும் அடிப்படைத் தகுதிகளை நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றனர். இதற்கு நேர்மாறான நிலைதான் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கின்றது

ஒரு ஆசிரியரிடம் மாணவராக இணைவதற்கு அம்மாணவர் தன்னை தகுதி படைத்தவராக தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அவரது ஒழுக்க நெறி அமைந்திருக்க வேண்டும். கல்வி ஞானம் இருப்பதுவும் கல்வியின் பால் ஆழ்ந்த வேட்கை இருப்பதையும் ஆசிரியருக்கு இம்மாணவர் நிரூபித்துக் காட்டவும் வேண்டும்.  இந்த மாணவர் உண்மையான நாட்டம் கொண்டிருக்கின்றார் என்று அறிந்த பின்னர் மட்டுமே மாணவராக ஒருவரை ஏற்றுக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாக இருந்திருக்கின்றது என்பதை என் சரித்திரம் நூலின் வழி தெரிந்து கொள்கின்றோம்.

முதன் முதலாகப் பார்க்கும் பொழுது, நெடுநாளாகக் காத்திருந்த உபாஸகன் போல இருந்த தனக்கு காட்சியளித்த ஆசிரியர் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முகத்திலேயே உ.வெ.சா அவர்களின் முழு கவனமும் ஒன்றித்துப் போயிருந்தது என்பதை முந்தைய பதிவில் விவரித்திருந்தேன். ஆசிரியரைப் பார்த்த பின்னர் அவர் தம்மை தனது மாணாக்கர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வாரா என்ற ஐயம் உ.வே.சாவுக்கு இல்லாமலில்லை.

தன்னைப் பார்க்க சில புதியவர்கள் வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டதும் இவர்களைப் பார்க்க வருகின்றார் பிள்ளையவர்கள். வந்திருந்த இருவரையும் அவர்கள் பெயர்களைக் கேட்டறிந்து அவர்கள் வந்ததன் நோக்கம் கண்டறிந்த பின்னர்  உ.வே.சா அவர்களிடம் விசாரிக்கின்றார்.  அதனை உ.வே.இப்படிக் குறிப்பிடுகின்றார்.

”பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடம் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். ”

இதுவே பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் பேசிய முதல் பேச்சு. அது அவருக்கு மனதில் நன்கு நிலைத்திருந்தமையால் அப்படியே என் சரித்திரம் நூலில் பதிந்திருக்கின்றார்.

தன்னை விட வயதில் சிறியவாராகினும் தன்னிடம் பாடம் கேட்க வந்திருக்கின்றார் என்று தெரிந்த பின்னரும் கூட ”நீர்” என்று குறிப்பிட்டு மரியாதையாக ஒருவரை அழைக்கும் இந்தப் பண்பு என் மனதை மகிழ்விக்கின்றது. பல ஆசிரியர்கள் தங்களிடம் கல்வி கற்கின்ற மாணவர்களை இவ்விதம் மரியாதை அளித்து மதித்து கூப்பிடும் வழக்கம் இல்லமல் இருப்பதை வழக்கத்தில் காண்கின்றோம். ஆரம்ப நிலைப்பள்ளிகள் மட்டுமில்லாது கல்லூரிகளில் கூட இந்த நிலை இருக்கின்றது.  இதனைத் தவிர்த்து மாணாக்கர்களிடம் அன்பும் நம்பிக்கையும் மரியாதையும் காட்டும் போது மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பால் ஏற்படும் அன்பு அளவிட முடியாதது என்பது உண்மை. முன்னர் எனது ஓராண்டு கால ஆசிரியர் பணியிலும் இந்த அன்பினை நான் அநுபவித்திருக்கின்றேன்.

தொடரும்....

சுபா

Tuesday, October 2, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 24


பதிவு 24

என் சரித்திரம் நூலில் ஒரு சில பதிவுகளை வாசிக்கும் போது நான் என்னை மறந்து விடுவதுண்டு. ஒரு நூலை வாசிக்கின்றேன் என்பதை விட அந்த நூலில் உள்ள கதாபாத்திரமாக நானே மாறி அந்த உணர்வுகளை உ.வே.சாவின் மன நிலை போலவே உணர்ந்து அந்த நிலையில் அது துக்கமோ, கவலையோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ, அல்லது நடுக்கமோ.. எல்லா வித உணர்வுகளையும் லயித்து உணார்ந்து போகின்றேன். என்னைப் போலத்தான் வாசித்த பிறருக்கும் கூட அனுபவம் அமைந்திருக்கலாம். இது உ.வே.சாவின் எழுத்து நடைக்கு அமைந்துள்ள தனிப் பெரும் சிறப்பு என்று மட்டுமே சொல்லத் தோன்றுகின்றது.

இன்னூலில் சில குறிப்பிட்ட பதிவுகள் அவற்றை வாசித்த பின்னர் அடுத்த சில நிமிடங்கள் என்னை அடுத்த பக்கங்களை வாசிக்க விடாமல் அவ்விவரணையின் பின்புலமாக அமைந்திருக்கின்ற நிகழ்வுகளிலேயே அழுந்திப் போய்   இருக்கச் செய்திருக்கின்றன. அத்தியாயம் 27ல் அத்தகைய ஒரு அனுபவம் அமைந்தது எனக்கு.

நாம் நெடுநாள் காத்திருந்து காத்திருந்து அவரைப் பார்போமா, பார்க்க வாய்ப்பு அமையுமா, அம்மனிதருடன் நமக்குள்ள உறவு தொடருமா, அவரை நெருங்கி அவரது ஆதரவில் இருக்கும் நிலை அமையப் பெருவோமா, அவரது கவனம் நம் மேல் விழுமா, அவருக்கு அன்னியோன்னியமானவர்களில் ஒருவராக நான் ஆவோமா என பல சந்தேகங்களும் தீவிர ஆர்வமும் சிந்தனையை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேளையில் அம்மனிதரை நாம் சந்திக்க நேர்ந்தால்.. அது ஒருவர் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொன்னான நாளாகத்தானே அமையும்? இப்படி ஒரு சந்தர்ப்பம் நம்மில் பலருக்கும் நமது வாழ்க்கையில் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சேர்ந்து பாடம் கேட்டால் மட்டுமே தனக்கு தமிழ்க்கல்வியில் தான் தேடிக் கொண்டிருக்கும் நிலையை அடைய முடியும் என்பதை மனதில் மிக மிக ஆழமாக பதிந்து கொண்டு விட்டார் உ.வே.சா என்பதனை முந்தைய பதிவுகளில் விவரித்திருந்தேன். அவரைப் பார்க்கச் சென்ற அந்த நாள் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒரு நாள் தான் என்பதை அத்தியாயம் 27 அழகாகக் காட்டுகின்றது. அந்த ஒவ்வொரு கணமும் அதன் இயல்புகளும், காத்திருந்த வேளையில் உள்ள மன நிலையும், இவர் தானா அவர் என வேறொருவரை நினைத்து மயங்கிய நிலை, பின்னர் அவரைப் பார்த்ததும் அவரை கண்களால் முழுதாகப் பார்த்து அவரை மனதிற்குள் பதிந்து வைத்து கொண்ட தருணங்கள் அனைத்துமே மிகச் சுவையான பகுதிகள். இவற்றை ஒரு முறைக்கு இரண்டு முறை வாசித்து நானும் மகிழ்ந்தேன்.

முதற்காட்சி என்று தலைப்பிட்டு இப்பகுதியை விவரிக்கின்றார் உ.வே.சா. அவரது அத்தருணத்து உணர்வின் வெளிப்பாடாக அமைந்த எழுத்தாக்கத்தை நான் விளக்குவதை விட அவர் எழுத்திலேயே வாசிப்பது தானே தகும்.

"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி யடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின் புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர் பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கி விட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்து விட்டன."

தொடரும்...
சுபா