Saturday, October 27, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 28


மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாறு நூலில் முடிந்த அளவு கிடைத்த அனைத்து தகவல்களையும் இணைத்து வெளியிட வேண்டும் என்ற உ.வே.சா அவர்களின் எண்ணம் நன்கு வெளிப்படுகின்றது. பல குறிப்புக்கள், சமகாலத்து நண்பர்களிடமிருந்தும் மற்ற இதர மாணாக்கர்களிடமிருந்தும் பெற்ற சிறு சிறு தகவல்கள், சிறு செய்யுள் குறிப்புக்கள் என கிடைத்த அனைத்து தகவல்களையும் பொக்கிஷமாக நினைத்து இந்த நூலில் வடித்திருப்பது தனிச்சிறப்பு. இதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் ஜாதகக் குறிப்பையும் உ.வே.சா விட்டு வைக்கவில்லை. இந்த நூலில் இணைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் ஜாதகக் குறிப்பின் பிரதியை இங்கே இணைத்திருக்கின்றேன்.



ஜாதகம் வாசிக்கத் தெரிந்தவர்கள் பார்த்து இந்த ஜாதகம் தொடர்பான உங்கள் குறிப்புக்களையும் இங்கே வழங்கலாமே.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த சில மாதங்களுக்குப் பின்னர் அதவத்தூர் என்ற ஊருக்கு அருகேயுள்ள சோமரசம்பேட்டை என்னும் ஊரில் உள்ளவர்கள் சிதம்பரம் பிள்ளையை தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல எண்ணி மிகவும் வேண்டி அவரை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர் விரும்புவோருக்குத் தமிழ் பாடம் சொல்லி வந்ததுடன் அங்கே ஒரு பாடசாலையை அமைத்து குழந்தைகளுக்குக் கல்விச்சேவை செய்திருக்கின்றார் என்ற விஷயத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.  அக்கால கட்டத்தில் அவருக்கு மேலும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஐந்து வயதானதும் தன் தகப்பனார் நடத்தி வந்த அதே பள்ளியில் கல்வி கற்றிருக்கின்றார். பள்ளிப் பிராயத்திலேயே பலரும் புகழும் படி சிறந்த ஞாபகச் சக்தி பெற்றிருந்ததோடு செய்யுட்களைப் பொருளறிந்து ஆராயும் திறனையும் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார்.

தந்தையிடமே கல்வி கற்றமையால், தனியாக மேலும் பல பாடங்களை வீட்டில்தந்தையாரிடம் கற்று வந்ததோடு  நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் இளம் வயதிலேயே கற்று வந்திருக்கின்றார். மீண்டும் மீண்டும் எழுதி வைத்துப் பழகும் போது பாடங்கள் மனதில் நிலைத்துப் போவதை நம்மில் பலர் நமது அனுபவத்தில் உணர்ந்திருப்போம். அக்காலத்தில் அச்சு நூல்கள் பயன்பாடு இல்லாத நிலையில் இவர் தந்தையாரிடமே முறையாக ஏட்டில் எழுதப் பழகினார்.  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குத் தன் தந்தையாரிடம் பாடம் கேட்கும் அனைத்து நூல்களையும் தானே தனியாக ஏட்டில் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கின்றது.

செய்யுள் இயற்றும் திறமை இவருக்கு இருந்தமையால் இளம் வயதிலேயே பாடல்கள் இயற்றி வாசித்துக் காட்டுவாராம். பள்ளியில் படித்த  ஏனைய மாணக்கர்களை விடவும் இவரது கல்விக் கேள்வியும் ஞானமும் விரிவாக வளர்வதைக் கண்டு பலர் வியக்க,  இந்தச் செய்தி அயலூர்களுக்கும் எட்ட ஆரம்பித்திருக்கின்றது.  ஓய்வு நாட்களில் சிதம்பரம் பிள்ளை செல்கின்ற இடங்களுக்கு இவரையும் கூட்டிச் செல்வாராம். அங்கே தமிழ் பாடம் கேட்க விழையும் செல்வர்களுக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையே செய்யுள் கூறி அதற்குப் பொருளும் கூறுவாறாம். இப்படி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கல்வி ஞானம் என்பது இளம் வயதிலேயே மிக உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றிருந்தமையும் அவரது கேள்வி ஞானம் பற்றி அருகாமையில் இருந்த ஊர்களில் இருந்தவர்கள் கூட அறிந்து வியந்து போற்றினர் என்ற தகவல்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூலில் உ.வே.சா அவர்கள் படிப்படியாக விளக்கிச் செல்கின்றார்.


தொடரும்....
சுபா

1 comment: