Sunday, August 30, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 84

வாழ்க்கையில் பிரிவு என்பது வரும் போதுதான் நாம் இதுவரை இருந்து கொண்டிருக்கும் நிலையும் அதில் நம்மோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தோரின் நல்ல பண்புகளும் அவர்கள் நமக்காகச் செய்த நல்ல விசயங்களும் மனதில் வந்து முதன்மை இடத்தை பிடித்துக் கொள்ளும். இத்தனை நாள் அந்தக் குற்றம், இந்தக் குறை, அவர் இதைச் செய்தார், இவர் இதைச் செய்தார் என்று குறைகளை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து நம் மனதை மயக்கிய பண்புகள் அந்த கணத்தில் ஓடி ஒளிந்து கொண்டு,  அன்று தான் ஏதோ ஒரு வகையில் புதிதாக வேறொரு கண்ணோட்டத்தில் இதுவரை நாம் இருந்த சூழலையே மீள்பார்வை செய்ய வைத்து விடும். இது தான்  நம் மனத்தின் இயல்பான பண்பு. பலர் இதனாலேயே மாற்றங்களை வாழ்க்கையில் வரவேற்பதில்லை. 

பழகிய இடம், பழகிய மனிதர்கள், பழகிய உறவுகள், பழகிய நிமிடங்கள்......
இவை அனைத்தும் பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ... ஏதோ ஒரு வகையான பாதுகாப்பை பழகிய இவைகள் தருவது போன்ற ஒரு பிரமை நம் எல்லோருக்கும் மனதில் இருப்பதுதான்!

ஆயினும், வாழ்க்கையில் சில கால கட்டங்களில் நம் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள், அவை வலிந்து ஏற்படுத்தும் பிரிவுகள்என்பன அடுத்த ஒரு புது உலகத்தின் கதவுகளை நம் பயணத்திற்காகத் திறந்து வைத்திருக்கின்றன என்பதை நாமே நமக்கு நினைவு படுத்திக் கொள்வது மட்டுமே நாம் மன தைரியத்தோடு,  இந்த மாற்றமும் பிரிவும் நமக்குத் தருகின்ற மன சஞ்சலத்தை கடக்க னமக்கு உதவும். மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அது சில வேளைகளில் இருக்கின்ற இருப்பிலிருந்து ஒரு பிரிவினை ஏற்படுத்தினால்ம் அதனையும் ஏற்றுக் கொள்வது என்பது வலியைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அவையும் கடந்து போகும். 

கடந்து போகும் போது மனம் இன்னமும் பக்குவபட்டிருக்கும். நமது தனித்துவத்துடன் கடமையாற்ற இந்த மனப்பக்குவம் நம்மை தயார்படுத்தியிருக்கும் என்ற நிலையை உணரும் போது நாம் கடந்து வந்த பாதையில் நாம் அனுபவித்த வலிகள் நம்மை நாமே பெருமை படக் கொள்ளச் செய்வனவாக இருக்கும் என்பதை நான் நம்புகின்றேன்.

உ.வே.சா அவர்கள் திருவாவடுதுறை திருமடத்திலிருந்து கும்பகோணம்  கல்லூரியில் தமிழ் ஆசான் பதவிக்கான பொறுப்பெடுத்துக் கொள்ள ஆதீன கர்த்தர் சுப்ரமணிய தேசிகரிடமிருந்து ஆசியும் சிபாரிசுக் கடிதமும் கிடைத்த நாளில் உ.வே.சா மட்டுமல்லாது மடத்தில் இருந்த அனைவருக்குமே இது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகவே இருந்தது. தேசிகரிடம் அணுக்கமாக இருந்த சிலர் அன்று இரவே இது மடத்திற்கு நல்லதல்ல என தேசிகரிடம் குறிப்பிட்டு இதனை தவிர்க்க எடுத்த முயற்சிகள் எவையும் வெற்றியடையவில்லை.

தன் நலம்.. தான் சார்ந்திருக்கும் மடத்தின் நலன் என்று மட்டும் நினைப்பவரல்ல சுப்ரமணிய தேசிகர். 
பொதுவாக சில நல்ல விசயங்கள் நடக்க வேண்டும். அதனை சாத்தியப்படுத்த இதுவே சிறந்த முடிவு என்று அவர் மனம் உறுதியாக இருந்தது. மாலையில் மீண்டும் தேசிகரிடம் இது குறித்து நவசிவாய தேசிகர் பேசிப்பார்த்தார். ஆனால் தேசிகரின் இதற்கான பதில்என்னவாக இருந்தது என்பதை குறிக்கும் வகையில் அங்கு நடந்த  உரையாடலை இப்படிப் பதிகின்றார் உ.வே.சா.

"நமசிவாய தேசிகர் கூறியதைக் கேட்ட ஆதீனத் தலைவர் தம் கருத்தைத் தெளிவாக்கலானார். “நீர் சொல்வது சரியே; அவரால் மடத்துக்கு
எவ்வளவு உபயோகம் உண்டென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அவருடைய நிரந்தரமான நன்மையைக் கருதியே இதற்கு நாம் சம்மதித்தோம். இங்கே நாம் உள்ள வரைக்கும் அவருக்கு ஒரு குறைவும் நேராது. காலம் ஒரே மாதிரி இராது. நம் காலத்திற்குப் பிறகு அவரிடம் நம்மைப்போலவே அன்பு செலுத்திப் பாதுகாப்பார்களென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. யாரேனும் ஒருவர் இங்கே திடீரென்று தோன்றி, ‘இவர் சொல்லுகிற பாடத்தை நானே சொல்கிறேன். இவருக்குச் சம்பளம் கொடுப்பது அனாவசியம்’ என்று சொல்லக்கூடும். பிறகு அவர் என்ன செய்வார்! இந்தமாதிரி இடங்களில் பல பேருடைய தயை இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். தலைவர் முதல் உக்கிராணக்காரன் வரையில் எல்லோருடைய பிரியத்தையும் ஒருவர் பெற்று இருப்பதென்பது அருமையிலும் அருமை. நம்மால் ஆதரிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சௌக்கியமாக இருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதனால் சாமிநாதையர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் பிறகு அவருடைய விருத்திக்கு ஒரு குறைவும் நேராதென்று எண்ணியே அவரை அனுப்பலானோம். அவர் சௌக்கியமான நிலையில் இருப்பதை நாம் இருக்கும்பொழுதே கண்ணாற் பார்த்து விட வேண்டும்” என்றார். "

முதல் நாளே உ.வே.சா. தியாகராச செட்டியார் வந்துவிட்டுப் போனதையும் அவர் கொண்டு வந்து கொடுத்த புதிய செய்தியையும் தன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனால் குடும்பத்திலும் இந்த நிலை ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. மறு நாள் காலையில் உ.வே.சா திருமடத்தை விட்டு என்று புறப்படுவது சரியாக இருக்கும்?  என்ற கேள்வி எல்லோருக்குமே மனதில் இல்லாமலில்லை. கட்டளை என்றைக்கு அமையுமோ என்ற வருத்தம் கலந்த எண்ணமே அங்கிருந்தோர் அனைவர் உள்ளத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. அன்று காலை சோதிடம் பார்த்த தேசிகர் அன்றைக்கு மாலையே நல்ல நேரமாக இருப்பதை அறிந்து அன்று மாலை உ.வே.சா கும்பகோணம் புறப்படுவது தான் நல்ல சகுணமாக அமையும் என முடிவெடுத்தார். இவ்வளவு சீக்கிரம் திருமடத்திலிருந்து தான் வெளிவர வேண்டிய நிலை ஏற்படும் என்று உ.வே.சா மனதில் நினைக்காத வேளையில் இது அவருக்கு மிகுந்த வருத்ததை அளித்தது. ஆயினும் பின்னாளில் தேசிகர் எடுத்த இந்த முடிவு தான் அவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ்த்தாத்தா உருவாக அமைந்த முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

உடன் எடுக்கப்பட்ட முடிவு. 
அன்றே உ.வே.சா கும்பகோணம் புறப்படவேண்டும். 
ஆக அவரது புதுப் பணிக்குத் தேவையான ஆடை அணிகலன்களை   திருமடத்திலிருந்து கொண்டு செல்லும் வகையில் உடன் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார் தேசிகர். 

"மாலையில் சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து என்னை வரும்படி சொல்லியனுப்பினார். போனேன். “சரியான காலத்தில் நீர் புறப்பட வேண்டும்” என்று அவர் சொல்லி ஒரு மகமல் சட்டை, ஒரு தலைக்குட்டை, ஒரு சின்னச் சட்டை, சரிகை போட்ட பெரிய வெள்ளைத் துப்பட்டா, உயர்ந்த சால்வை ஒன்று ஆகியவற்றை அளித்து, “எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்ளும்” என்று அன்பு ததும்பச் சொன்னார். பிறகு, கருங்காலிப் பெரிய கைப்பெட்டி ஒன்று, கை மேஜை ஒன்று, ஒரு சிறிய கைப் பெட்டி, கொழும்பிலிருந்த அடியார் ஒருவர் கொண்டு வந்து கொடுத்திருந்ததும் நாற்பது ரூபா விலையுள்ளதுமாகிய தந்தப் பிடியமைந்த பட்டுக் குடை ஒன்று ஆகியவற்றையும் கொணரச் செய்து ஒவ்வொரு
பெட்டியிலும் ஒவ்வோர் அரைக்கால் ரூபாய் போட்டு எனக்கு வழக்கினார். மெய்க்காட்டு உத்தியோகத்தில் இருந்த ஷண்முகம் பிள்ளை என்பவரை அழைத்து, “நாளைத்தினம் நீர் கும்பகோணத்துக்குப் போய் இவர் காலுக்குப் பாப்பாஸ் ஜோடு வாங்கிக் கொடுத்து இந்தக் குடைக்கு உறையும் போட்டு இன்னும் இவருக்கு என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைச் செய்து விட்டு வாரும்” என்றார்.

என்னைப் பார்த்து, “சாமிநாதையர், நாம் மதுரை கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்த போது ஒரு மகா சபையில் மணி ஐயரவர்களுக்கு முன்பு வேதநாயம் பிள்ளை பாடலைச் சொல்லி விட்டு ‘இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை’ என்று சொன்னது நினைவில் இருக்கிறதா? அந்தக் குறை இரண்டும் இப்போது தீர்ந்து விட்டன” என்று சொன்னர். நான் வெகு நாளைக்கு முன் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து தேசிகர் அப்போது செய்ததையும் அவர் அன்பையும் நினைந்து உருகினேன். “இறுமாப்புடைய நடை என்றும் வராது” என்று சொன்னேன்.

“நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும்
மகாலிங்கையரும் விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தியடைந்து விளங்க வேண்டும்”என்று கூறித் தாம்பூலம் கொடுத்தார். ஒரு தாய் தன் பிள்ளைக்கு உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்க வேண்டுமென்று மனமார நினைந்து வாழ்த்துவதைப் போல இருந்தன அவர் வார்த்தைகள். அந்தப் பேரன்பிலே ஊறியிருந்த போது அதன் முழு அருமையும் எனக்குத் தெரியவில்லை. பிரியப் போகின்றோமென்ற நினைவு வந்ததுந்தான் அதன் அருமை பன்மடங்கு அதிகமாகத் தோற்றியது."

தன் சொந்தப் பிள்ளைகள் அயலகம் செல்வது போல பார்த்துப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்த சுப்ரமணிய தேசிகரின் அன்பில் உ.வே.சா மட்டும் உறுகினார் என்று சொல்ல முடியாது. இப்பகுதியை வாசிக்கும் வாசகர்களும் இந்த அன்பை கண்டு நெகிழ்ந்து போகாமல் இருக்க முடியாது. 
தான் பெற்றால் தான் பிள்ளையா?

Saturday, August 15, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 7

வாசிப்பின் பகுதி 7

சாக்ரடீஸின் உரையாடல்களின் வழி ப்ளேட்டோ இந்த நூலை வாசிக்கும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றார். இவருடைய சிந்தனை எந்த விஷயத்தையும் அவை சாதாரண விஷயங்கள் தாம் எனப் புறந்தள்ளி ஒதுக்கி விடாமல், ஒவ்வொன்றிற்கும் மதிப்பளித்து முக்கியத்துவமும் கொடுத்து அதனை அலசுவதாக அமிகின்றது.

அரசியல் தத்துவம் என்பதும், கோட்பாடு என்பனவும் பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டியது, ஒரு சாமானிய மனிதரின் நலன் என்ற ஒரு மிக எளிய விசயம்தான். ஒரு தனி மனிதரின் நலன் என்பது அவரது மன நலன் கொண்டிருக்கும் நிலை, அவரது சுற்றுச் சூழல் அமைந்திருக்கும் நிலை, அவர் வாழ்கின்ற நாட்டில் அமைந்திருக்கும் அரசியல் அமைப்பு அமைத்துக் கொடுத்திருக்கும் சமூக நிலை, ஆகியவற்றோடு உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்ததே.

நோய் என்பது உடலுக்கு வரக்கூடாதது. நமது கட்டுப்பாட்டை மீறி ஒரு நோய் அல்லது விபத்து என்பது ஏற்படுவது என்பது ஒரு விசயம். நமது பழக்க வழக்கங்களால் நாம் உருவாக்கிக் கொள்ளும் நோய் என்பது ஒரு விசயம்.

சிந்தனை சார்ந்த விசயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் சார்ந்த விசயங்களுக்கு நாம்  கொடுப்பதை பலர் தவிர்ப்பதுண்டு. உடலுக்குள் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்ற பிரக்ஞை இல்லாமல், உடலின் தேவையறியாமல் உணவு உட்கொள்ளும் பழக்கத்தைப் பலர் கொண்டிருக்கின்றோம்.  சிலர் உயிர்வாழ்வதற்கு உணவு.. எதை சாப்பிட்டால் என்ன? பசி ஏற்படாமல் வயிறு நிறைந்தால் போதும் என்ற நிலையைக் கொண்டிருப்பர். பல வேளைகளில் பசி என்ற உணர்வு எட்டிப்பார்த்தாலே உடல் நடுங்கிப் போகும் நபர்களும் உண்டு. பசித்து உண்ண வேண்டும் என்ற தன்மையில்லாமல் இயந்திரம் போல கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் போடுபவர்கள் தங்கள் உடலை மதிக்காதவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பழகிவிட்டேன்.. தவிர்க்க முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டு புகைப்பதும், மது அருந்துவதும்.. புதிய புதிய காரணங்களைக் கற்பித்து இப்பழக்கங்களைத் தொடர்வதும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகளே.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் போதே  மனம் சீராக பல காரியங்களைச் செய்ய இயலும். உடலில் ஏற்படும் பின்னடைவுகள் நமது நடவடிக்கைகள் சீர்பட நடைபெறுவதை நிச்சயம் பாதிப்புறச் செய்யும். நோயாளிகள் நிறைந்த நாடு என்பது எப்படி இருக்கும்..? அங்கே பேசப்படும் விசயங்கள் எத்தன்மையதானதாக இருக்கும் என்பது  யோசிக்க வேண்டிய ஒரு விசயம். 45 வயதுக்கு மேலாகி விட்டால் மூட்டு வலி, முதுகு வலி, கால்வலி இரத்த அழுத்தம், இனிப்பு நீர் என்பன மட்டுமே நண்பர்கள் அல்லது உறவினர் சந்திப்பில் பேசப்படும் பொருளாக இருந்தால் அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் உலகம் நோய்வாய்ப்பட்ட உலகமாக, வலுகுறைந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அமையும். .உடலுக்குப்பயிற்சியும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவும் அதை உட்கொள்ளும் அளவு முறையும் முக்கியமானவை.  சாக்ரடீஸ் தன் அரசியல் அமைப்பு சார்ந்த உரையாடலில் உணவு பற்றியும் கலந்துரையாடுகின்றார்.. அதனைப் பார்ப்போம்..

...
சாக்: அப்படியானால், ஆடம்பரமாக உண்பதையும் பலவகை உணவுகள் சாப்பிடுவதையும் நீ சிபார்சு செய்ய மாட்டாயல்லவா?

கிளா: மாட்டேன்

சாக்: ஒரே சமயத்தில் பலவகை சுருதிகளடங்கிய வாத்தியங்களில் சங்கீதம் பயின்றால் அது காதுக்கு எப்படிச் சங்கடமாயிருக்குமோ அது போல் பலவகையான உணவுகளை ஒரே சமயத்தில் தேகத்திற்குள் திணிப்பதும் சங்கடமாயிருக்குமல்லவா?

கிளா: வாஸ்தவம்

சாக்: எப்படி எளிய முறையில் பாடப்படுகிற சங்கீதம் ஆத்மாவுக்கு ஒரு நிதானத்தைக் கொடுக்கிறதோ அதைப் போல் எளிய ஆகாரம் தேகத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

கிளா: உண்மை

சாக்: ஒருவன், பலவகையான ஆகார வகைகளைச் சாப்பிடுகிறான் என்று சொன்னால் அவன், தன்னடக்கமில்லாதவன், தூர்த்தன் என்றுதானே அர்த்தம்? அப்படிப்பட்டவனிடத்தில் வியாதிகள் உற்பத்தியாவது சகஜந்தானே?

கிளா: ஆம்

சாக்: எந்த ராஜ்யத்து ஜனங்களிடத்தில் தன்னடக்கமின்மையும் வியாதிகளும் மலிந்து  கிடக்கின்றனவோ அந்த ராஜ்யத்தில் நீதி ஸ்தலங்களும், ஆஸ்பத்திரிகளும் எப்பொழுதுமே திறந்து கிடக்குமல்லவா? சுதந்திர புருஷர்களிர் பெரும்பாண்மையோர் சட்டத்திற்கும் வைத்தியத்திற்கும் தாசர்களாகி விடுகிறபோது, அந்தச் சட்டமும், வைத்தியமும் தங்களைப் பற்றிக் கொஞ்சம்  பெருமையாக நினைத்துக் கொள்ளும் தானே?

கிளா: ஆம்
..
...
சாக்: காயமடைந்தாலோ அல்லது தொத்து வியாதிகளுக்கோ வைத்திய சிகிச்சை செய்து கொள்வதில் அர்த்தமிருக்கின்றது. அதை விடுத்து, சோம்பேறித்தனமான வாழ்க்கையை நடத்தியதன் காரணமாகவும், சிற்றின்பங்களிலே அதிகமாக ஈடுபட்டிருந்ததன் காரணமாகவும் தேகமானது அழுக்கு நீர் நிறைந்த  ஒரு கேணி மாதிரியாகிவிட, அதற்குச் சிகிச்சை செய்து கொள்வதில் ஏதேனும் அர்த்தமிருக்கின்றதா? 

வாசிப்பு தொடரும்
சுபா

Sunday, August 9, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 83

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய நூல்கள் பல. இதன் பட்டியலை  நான் முன்னர் தமிழ் மரபு அறக்கட்டளை தலபுராண வெளியீட்டு செய்தியில் வழங்கியிருக்கின்றேன். அந்த வகையில் மகாவித்வான் படைத்த தியாகராசலீலை எனும் நூலை பிள்ளையவர்கள் சொல்லச் சொல்ல அதனை சுவடியில் எழுதியவர்  தியாகராச செட்டியார். இந்த ஓலை நூல் திருவாவடுதுறை மடத்தில் இருக்கின்றது. இந்த நூல் பிள்ளையவர்களால் ஆரம்பிக்கப்பட்டாலும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதனை தாமே தொடர்ந்து எழுதி பூர்த்தி செய்துவிடுவதாகக் குறிப்பிட்டு தியாகராச செட்டியார் மடத்திலிருக்கும் அந்த நூலை தமக்கு வழங்கும் படி கேட்டுக் கொள்ள அதனை எடுத்து வர தேசிகர் உ.வே.சாவை நூலகத்துக்கு அனுப்பிவிடுகின்றார்.  இந்த இடைப்பட்ட வேளையில் தியாகராச செட்டியார் தான் வந்த நோக்கத்தைத் தேசிகருக்கு மீண்டும் வலியுறுத்தி, உ.வே.சா கும்பகோணம் காலேஜிற்கு பணிக்குச் செல்வது மடத்திற்கு பெறும் சிறப்பை வழங்கும் என்று ஒரு வகையில் நம்பிக்கை ஊட்டி வெற்றியும் கண்டு விடுகின்றார்.

தியாகராச செட்டியார் கூறிய அனைத்து தகவல்களையும் உள்வாங்கி தூர நோக்குச் சிந்தனையுடன் தகுந்த முடிவு எடுப்பதே அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என உணர்ந்த தேசிகர்,  உ.வே.சா கும்பகோணம் காலேஜில் பணிக்குச் செல்ல சம்மதம் அளித்தார். தியாகராசச் செட்டியார் அவர்கள் மடத்தின் மேல் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் தேசிகர் அறியாததல்ல. மடத்தின் வளர்ச்சி அதன் நெடுநாளுக்கான புகழ் ஆகியன சிறக்க இவ்வகையான சிறந்த கல்விமான்களின் ஆலோசனைகளைக் கேட்டு இயங்குவதும் திருமடத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் தேசிகருக்கு நம்பிக்கை இருந்தது.

தியாகராச செட்டியாரின் ஆர்வம் மிகுந்த வேண்டுதலிக் கேட்டுக் கொண்டு, சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு "சரி என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார் தேசிகர். இந்த இனிய சந்தர்ப்பத்திற்க்காத்தானே தியாகராசச் செட்டியார் காத்திருந்தார். 

திருமடத்திலிருந்து கும்பகோணம் காலேஜ் முதல்வர் கோபால ராவ் அவர்களுக்கு உ.வே.சாவை பணியில் அமர்த்த  ஒரு கடிதமும்,   உ.வே.சா விற்கான ஒரு சிபாரிசு கடிதமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முக்கிய காரியங்களை உடனுக்குடன் செய்வது தானே சரியான முறை. தேசிகரும் தயங்காது மடத்தின் ராயசக்கரராகிய (இது எவ்வகை பொறுப்பு எனத் தெரியவில்லை)  பொன்னுசாமி செட்டியாரை அழைத்து தாம் சொல்ல சொல்ல இக்கடிதங்களை எழுதச்செய்தார்.

இக்கடிதம் வருமாறு. 

"இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷகாலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருஷகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர்.

பிரமாதி வருஷம் கும்பரவி 
3Œ திருவாவடுதுறை யாதீனம்
சுப்ரமணிய பண்டாரச் சன்னதி. "

இந்தக் கடிதம் எழுதி தேசிகர் சம்மதம் தெரிவித்த போது அனைவருக்குமே மனதில் மகிழ்ச்சி நிலவியது. சரியான முடிவைத்தான் எடுத்திருக்கின்றோம் என்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்பட்டது.     உ.வே.சா அவர்களே தனது சொற்களாலேயே இப்பகுதியை விளக்குவது சுவை கூட்டும் என்று கருதுகின்றேன்.

"இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில் சபாபதி பூஜையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார், ‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோஷத்துடன் எழுந்து கை கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விஷயத்தில் மன அமைதி பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூர்ண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம் இவரை அனுப்புவதற்குச் சம்மதம் இல்லாமலிருந்தாலும், தெய்வம் கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டாம்” என்று அவர்
சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார்."

இந்த இரண்டு நாள் நிகழ்வின் முக்கிய பாதிப்புக்கள் என்பன உ.வே.சா அவர்களைச் சார்ந்ததே  என்ற போதிலும் இதில் அவர் எந்த முடிவையும் எடுத்ததாகக் காணமுடியவில்லை. எல்லாம் ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல நடக்க வேண்டிய விசயங்கள், நடக்க வேண்டிய தருணங்களில், நடத்தப்பட வேண்டிய நபர்களால், செய்விக்கப்படும் என்ற விதிப்படி இந்த நிகழ்வு நடந்தேறியது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகின்றது. நமது வாழ்க்கையில் நடக்கின்ற சில திருப்பு முனைகளும் கூட இப்படித்தானே ஏனைய பலரால் செய்விக்கப்படுகின்றன. பல வேளைகளில், நமது வாழ்க்கை என்ற நாடக மேடையில் நிகழும் நிகழ்வுகளைக் காண்கின்ற பார்வையாளர்களாக மட்டுமே நமது நிலை இருப்பதை மறுக்க முடியாது, அல்லவா?

தொடரும்..