Tuesday, February 23, 2016

கிராமப்பகுதி மக்களின் வாழ்க்கையில் தெய்வங்கள்

இலக்கியவேல் காலாண்டு சஞ்சிகையில் அக்ட் 2015ல் வெளிவந்த எனது கட்டுரை இணைத்துள்ளேன். விரும்பியோர் வாசிக்கலாம்.
இது கிராம தெய்வங்கள், குலதெய்வங்கள் பற்றிய ஒரு கட்டுரை.
தலைப்பு - கிராமப்பகுதி மக்களின் வாழ்க்கையில் தெய்வங்கள்












Sunday, February 21, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 89

கும்பகோணம் வந்து அங்கே ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உ.வெ.சா ஓரிரு வாரங்களில் தமது குடும்பத்தாரையும் கும்பகோணத்திற்கே அழைத்துக் கொண்டார். இது அவரது பணிகளுக்கிடையே குடும்ப நலனையும் பேணிக்காக்க உதவியிருக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்தக் காலகட்டத்தில், அதாவது கும்பகோணம் குடிபெயர்ந்த சில மாதங்களில் உ.வெ.சாவிற்கு முதல் குழந்தை ஆண் மகவு பிறந்தது. தனது பூர்வீகமான உத்தமதானபுரத்து சிவபெருமானின் பெயராகிய கலியாணசுந்தரம் என்ற பெயரையே தன் குழந்தைக்கும்  சூட்டினார். அக்காலகட்டத்தில் வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் தம் தந்தையே பார்த்துக் கொண்டார் என்பதையும், தான் முழுமையாக கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணியில் மட்டும்  இதனால் ஈடுபட முடிந்தது என்றும் குறிப்பிடுகின்றார். 

இதில் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயம் என்னவெனில், தனது திருமணத்தின் போது தனது மனைவியைப் பற்றி குறிப்பிடும் உ.வெ.சா அதற்குப் பிறகு நூலில் வேறெங்கும் அவரைப் பற்றி எவ்விதக் குறிப்பினையும் தன் சரிதத்தில் பதியவில்லை. அவரது குண நலன்களைப் பற்றியோ, அவர்களது இல்வாழ்க்கைப் பற்றியோ, அல்லது அவருடன் இணைந்திருந்த காலத்தின் நிகழ்வுகளைப் பற்றியோ நூலில் குறிப்புக்களே இல்லை. தனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வாழ்ந்த தன் மனைவியைப்பற்றியும் சில தகவல்களை நினைத்து பதிந்திருக்கலாம். ஏன் அக்குறிப்புக்கள் இடம்பெறவில்லை என்பது என்னுள்ளே கேள்வியாகவே நிற்கின்றது. பெண்களைப் பற்றியும் அவரது சிந்தனைகள் எண்ண ஓட்டங்கள், கருத்துக்கள், அவர்களால் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகியனவற்றை பதிவதில் பொருளில்லை என்ற எண்ணமும் அக்காலத்தில் இருந்திருக்கலாம். அல்லது என் சரித்திரம் என்னும் தன் சரித்திரக் குறிப்பில் முழுமையான தனது நோக்கமே தமிழ்க்கல்வி, அது தொடர்பான செயல்கள் தமது தமிழ்ப்பணி என்பது மட்டுமே என்ற வகையில் கருதியிருக்கலாம் என்றும் ஒரு வகையில் கருதலாம். என் சரித்திரம் உண்மையில் ஒரு முற்றுப்பெறாத நூல். உ.வெ.சா அதனை முழுமையாக முடிக்கும் முன்பே மறைந்தார் என்பதையும் குறிப்பிடுவது அவசியம் என்றும் கருதுகின்றேன்.

இக்கால கட்டத்தில் ஆசிரியர் பணி, குடும்பம் என்ற வகையில் உ.வெ.சாவின் வாழ்க்கை அமைந்திருந்தது. இந்த நிலையில் அவர் வாழ்க்கையில் ஒரு மிக முக்கிய மாற்றம்  கும்பகோணத்துக்கு அரியலூரிலிருந்து முனிசிபலாக மாற்றலாகி வந்த  சேலம் இராமசுவாமி முதலியார் என்பவரால் ஏற்பட்டது. இதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"காலேஜ் வேலையைப் பார்த்துக் கொண்டும் வீட்டுக்கு வரும் மாணாக்கர்களுக்கு ஒழிந்த நேரங்களில் பாடம் சொல்லிக் கொண்டும் பொழுது போக்கி வந்தேன். அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது, தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்புடைய தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது."

சேலம் இராமசாமி முதலியாருடனான உ.வெ.சாவின் முதல் சந்திப்பு முக்கியமான ஒரு நிகழ்வு. இருவருக்கும் அறிமுகம்  நிகழ்ந்தபோது உ.வெ.சாவின் பின்னனியைக் கேட்டு தெரிந்து கொண்டபின்னர் என்னென்ன நூல்களை வாசித்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். இவர் தான் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நூல்களான தலபுராணங்கள், அந்தாதி ஏனைய பிற நூல்களைச் சொல்ல அப்பட்டியலைக் கண்டு அவர் மலைத்து விடுவார் என எதிர்பார்த்தார். ஆனால் எந்தச் சலனமும் சேலம் இராமசாமி முதலியாருக்கு ஏற்படவில்லை. பின்னர் தான் படித்த நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞான சித்தியார், கம்பராமாயணம் எனப்பட்டியலைக் கூற அதுவும் அவரை அதிசயப்படுத்தவில்லை. 

அவ்வளவுதானா..? 
இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்? என்று கேட்க உ.வெ.சா மலைத்து விடுகின்றார். 

எவ்வளவோ நூல்களைச் சொல்கின்றோமே. இவர் அசையவில்லையே. இவையெல்லாம் பழமையான நூல்கள் தாமே என யோசித்து அதனைக் கூற, பழம் நூல்களையும் மூல நூல்களைப் படித்திருக்கின்றீர்களா? என அவர் உ.வெ.சாவைப் பார்த்து கேட்கின்றார்.

எந்த நூலைக் குறிப்பிடுகின்றார் என கேட்க சீவக சிந்தாமணி படித்திருக்கின்றீர்களா? எனக் கேட்கின்றார். மணிமேகலை படித்திருக்கின்றீர்களா? எனக் கேட்கின்றார் இராமசாமி முதலியார்.

இந்த நூல்களின் பெயரை உ.வெ.சா இதுவரைக் கேள்விப்பட்டதும் இல்லை. புத்தகம் கிடைக்கவில்லை. கிடைத்தால் படித்து விளக்கம் தருவேன் என கம்பீரத்தோடு சொல்கின்றார். அதற்கு இராமசாமி முதலியார் கூறிய பதிலும் அதனை உ.வெ.சா விளக்கும் பகுதியும் சுவையானவை. 

"அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், ‘இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல்லவந்து விட்டாரே!’ என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்து கொண்டது. “புஸ்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவைகளையும் படிக்கும் தைரியமுண்டு” என்று கம்பீரமாகச் சொன்னேன்.

சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலியார், நிமிர்ந்து என்னை நன்றாகப் பார்த்தார். “நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்வீர்களா?” என்று கேட்டார்.

“அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்” என்று தைரியமாகச் சொன்னேன். அறிவுப் பலத்தையும் கல்வி கேள்விப் பலத்தையும் கொண்டு எப்படியாவது படித்து அறிந்து கொள்ளலாம் என்ற துணிவு எனக்கு உண்டாகிவிட்டது.

“சரி, சிந்தாமணியை நான் எடுத்து வைக்கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள்” என்று அவர் சொன்னார். நான் விடை பெற்றுக்கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த நிலையையும் நான் விடைபெறும் போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்லரென்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவரென்றும் உணர்ந்தேன். "

இந்த சந்திப்பிற்குப் பின்னர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதலியாரைப் பார்க்க உ.வெ.சா சென்றார். அவரை அன்புடன் வரவேற்று தம்மிடம் இருந்த சீவகச்சிந்தாமணி கடிதப்பிரதியை உ.வெ.சாவிற்குக் காட்டி பாடம் ஆரம்பிப்போமா என கேட்க அப்படியே செய்யலாம் என ஆர்வத்தோடு பாடம் கேட்கத் தயாரானார்  உ.வெ.சா. முதலில் தனக்கு எப்படி சீவக சிந்தாமணி கிடைத்தது என்ற கதையிலிருந்து ஆரம்பித்தார் இராமசாமி முதலியார். 

இது உ.வெ.சாவின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையை உருவாக்கிய சம்பவம். இன்று நாம் அறியும் தமிழ்த்தாத்தா வடிவெடுக்க நிகழ்ந்த முக்கிய நிகழ்வு!

Sunday, February 14, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 88

சிலப்பதிகாரத்தை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வந்தவர்களில் உ.வெ.சாவும் ஒருவர்.  சிலப்பதிகாரத்தை சீரிய அச்சுப் பதிப்பாக்கி வெளியிட்டவர். இந்தப் பணிக்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பு குறிப்பிடத்தக்கது. 

கும்பகோணம் காலேஜில் அவர் பாடம் சொல்ல ஆரம்பித்து சில நாட்கள் கடந்திருந்தன. கோடைவிடுமுறைக்குப்பின் வருகின்ற செமஸ்டரில் 'கானல்வரி' பகுதியில் உள்ள நான்கு காதைகளுக்கு அவர் விளக்கப்பாடம் எடுக்க வேண்டிய பணி கொடுக்கப்பட்டிருந்தது. அன்றைய நிலையில் சிலப்பதிகாரத்தைப் பாடம் சொல்வது என்பது தமிழாசிரியர்களுக்கே மிகச் சவாலாக இருந்த ஒன்று என்பதை உ.வெ.சா வின் எழுத்துக்கள் வழியே அறிந்து கொள்ள முடிகின்றது.

அக்காலத்து கல்லூரி பாட முறை என்பது இன்றைய நிலையிலிருந்து மாறுபட்டதாக இருந்தமையை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இன்று கிடைப்பது போல ஆயிரக்கான நூல்களோ பழம் நூல்களின் அச்சுப் பதிப்புக்களோ இலக்கண நுல்களோ இலக்கியங்களோ பரவலாக அன்று கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல. அன்றைய காலகட்டத்தில் உயர்குலத்தைச் சார்ந்த தமிழ் மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பும் ஆசிரியர் தொழில் செய்யக் கூடிய வாய்ப்பும் ஏனைய சாதி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சமயம் அது. அக்கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிலர், அதிலும் கல்வி வாய்ப்பும் பொருளாதார மேண்மையும் கிட்டிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே நூல்கள், கல்வித்துறை என்ற வகையில் வாய்ப்புக்களைப் பெற்றிருந்தனர். ஆக, இந்த எண்ணிக்கைக்குள் ஒரு சிலரே தக்க ஓலைச்சுவடிகளைத்தேடி எடுத்து அவற்றை அச்சுப்பதிப்புக்களாகக் கொண்டு வரும் முயற்சிகளிலும் ஈட்படத்தொடங்கி இருந்த கால கட்டம் அது.

ஒரு நூல் பாட போதனைக்குப் பயன்படுத்தப்படுகின்றதென்றால் அந்த  முழுமையான நூலைப் பாடமாக வைப்பது என்பது கிடையாது. உ.வே.சா, தியாகராச செட்டியார் போன்றோர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்றபோது ஒரு நூலினை முழுமையாக வாசித்து அறிந்து பாடம் செய்து படித்து வந்தவர்கள். ஆனால் இங்கு கல்லூரியிலோ,  ஒரு நூலின் ஒரு சில பகுதிகள் மட்டுமே மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்படும் வகையில் இருந்தது.

எல்லோருக்கும் சிலப்பதிகாரமென்பது ஒரு பழம் நூல் என்பது தெரிந்திருந்தால் கல்லூரிகளின் தமிழ்க்கல்வி பாடத்திட்டத்தில் அப்போது சிலப்பதிகாரமும் இணைக்கப்பட்டிருந்தது.  தியாகராச செட்டியார் கும்பகோணம் காலேஜில் பணியில் இருந்த போது அவர் சிலப்பதிகாரத்திலுள்ள 'இந்திர விழவூரெடுத்த காதை' பாடமாகப்போதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது அவர் ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு அதனைப் புரிந்து கொள்ள முயற்சிகள் செய்திருக்கின்றார். புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் கொண்டு வந்து இருவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். மிகக் கடினமா ஒரு பணியாக அது இருந்திருக்கின்றது. அப்போது உ.வெ.சா பிள்ளையவர்களிடத்தில் மாணவராக இருந்த காலகட்டம். அப்போது தியாகராச செட்டியாருக்கு இந்தக்கடினமான நூலை வைத்து பாடம் சொல்லும் படி ஆயிற்றே என நினைத்து வருந்தியிருக்கின்றார். அதனை உ.வெ.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"அன்றியும் மிகப் பழங் காலத்து மரபுகளெல்லாம் சொல்லப் பட்டுள்ள அந்நூலிலிருக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேறு துணைக் கருவிகள் இல்லை. அதனால் அந்தப் பகுதி தெளிவாக விளங்கவில்லை. செட்டியாருக்குப் புஸ்தகத்தின் மேல் கோபம் மூண்டது. “என்ன புஸ்தகம் இது? இந்திர விழவூரெடுத்த காதையா? இந்திர இழவூரெடுத்த காதையா!” என்று கூறி, “இந்தச் சனியனை நான் பாடம் சொல்லப் போவதில்லை; எனக்கு உடம்பு வேறு அசௌக்கியமாக இருக்கிறது. நான் ஆறு மாசம் ‘லீவு’ வாங்கிக் கொள்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டார். அப்படியே ஆறு மாதம் விடுமுறை பெற்றுப் பிறகே காலேஜு க்கு வந்தார். அக்காலத்தில் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் தமிழாசிரியராக இருந்து பாடத்தை நடத்தினார்; கற்பித் தாரென்று சொல்லுவதற்கில்லை."

இப்படி கடினமான செய்யுள் நடைகொண்ட சிலப்பதிகாரத்தை உ.வே.சாவும் பாடம் நடத்த  வேண்டிய சூழல் எழுந்தது. அப்போது ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப்பதிப்பாக சிலப்பதிகாரத்தின் முதற்பகுதியை ஸ்ரீநிவாசராகவாசாரியார் ஏற்கனவே பதிப்பித்திருந்தார். அவருக்கு அடுத்ததாக  சென்னையிலிருந்த சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் ஒரு பதிப்பை பதிப்பித்திருந்தார்.  ஸ்ரீநிவாசராகவாசாரியார் பதிப்பில் சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தின் முதற்பகுதியின் மூலம் மட்டும் வைத்து பதிப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அச்சுப்பதிப்பிற்குச்  "சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்" என்ற பெயரும் சூட்டப்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது.

ஆக இந்த நிலையில் சிலப்பதிகாரத்தைப் பாடம்  நடத்த என்ன செயலாம் என யோசிக்கையில் திருவாவடுதுறை மடம் சென்று ஆதீனகர்த்தர் தேசிகரிடத்தில் பேசினால் தீர்வு கிடைக்கும் என எண்ணி அங்கு சென்றார் உ.வெ.சா.  தேசிகர், அச்சுப்பதிப்பை விட மடத்தில் இருக்கும் ஏட்டுப் பிரதியை எடுத்து அதனை இருவருமே ஆராய்வோம் எனக் கூறியதோடு அங்கிருந்த சின்னப்பண்டாரமும் சேர்ந்து இம்முயற்சியைத் தொடரலாம் என திட்டத்தை ஆரம்பித்தனர். 

"பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புஸ்தகத்தில் நமசிவாய தேசிகர் தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல லாபம் உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம். ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து கொண்டோம்."
என்கின்றார் உ.வெ.சா.

முழுமையாக, விரிவுரைகளுடன் இன்று நமக்குக் கிடைக்ககூடிய இந்தக் காப்பியங்கள் அன்று மாணாக்கர்களுக்கு கிடைக்கவில்லை. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சுப்ரமணிய தேசிகர், தியாகராச செட்டியார், ஸ்ரீநிவாசராகவாசாரியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், உ.வெ.சா. இன்னும் இவர்களைப் போன்ற பலரது கடுமையான உழைப்பின் பலனாக இன்று நமக்கு இந்தக் காப்பியங்களின் மூலத்தை வாசிக்கவும் செய்யுட்களின் விளக்கங்களைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு அமைந்திருக்கின்றது.

ஆனால் அவற்றை வாசிக்கின்றோமா? அவற்றை தொடர்ச்சியாக ஆராய்கின்றோமா?  என்பது தான் நம்முன்னே நிற்கும் கேள்வி!!

தொடரும்

சுபா

Sunday, February 7, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 87

வார இறுதி நாள் முடிந்து திங்கட்கிழமை காலையில் ரயில்பிடித்து கும்பகோணம் சென்று சேர்ந்து விட்டார் உ.வெ.சா. இந்த வாரம் முழுமையாக கவனித்து அவருக்குப் பாடம் நடத்தும் தகுதி இருக்கின்றதா என திரு.கோபால் ராவ் நற்சான்றிதழ் வழங்கினால் தான் அந்தப் பதவி அவருக்கு நிலைக்கும் என்ற நிலை இருந்தது. உ.வெ.சாவிற்கு இந்தப் பணி நிரந்தரமாகி விடவேண்டுமென்று தியாகராச செட்டியாருக்கு இருந்த அதீத ஆர்வம் அவருக்குக் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது. ஏனைய ஆசிரியர்களும் நல்ல வார்த்தைகள் சொல்லி இப்பணி நிரந்தரமாக உ.வெ.சாவிற்கு அமைந்து விட வேண்டும் என்பதில் தியாகராச செட்டியாருக்குத்தான் அதிக ஆவல் இருந்தது.

அந்த வாரம் கோபால் ராவின் மனத்தைக் கவரும் வகையில் பாடம் நடைபெற்றிருக்கின்றது. மறுநாள் கல்லூரி திறக்கப்பட்டதும் காலையிலேயே ரைட்டரைச் சென்று சந்தித்து திரு.கோபால் ராவ் என்ன அபிப்ராயம் கொண்டு எத்தகைய பரிந்துரை கொடுத்திருக்கின்றார் எனக் கேட்டு அறிந்து கொண்டார் செட்டியார். எல்லாம் நல்ல செய்தியாகவே இருந்தது. தியாகராச செட்டியாருக்கு இது எல்லையில்லா மன நிறைவையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் தந்தது.

உ.வெ.சாவின் கும்பகோணம் கல்லூரியிலான ஆசிரியர் பணி என்பது தியாகராசச் செட்டியார் அவர்களின் முயற்சியின்றி அமைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாய்ப்பே உ.வெ.சாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவருக்கு அடுத்தடுத்த படிநிலைகளையும் அமைத்துக் கொடுத்தது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

நம் வாழ்க்கையில் நடக்கின்ற பல விடயங்களை ஆழ்ந்து  நோக்கும் போது நடக்க வேண்டிய  காரியங்கள்  திட்டமிடப்பட்டது போல நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன என்பதையும், நம் வாழ்வில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களோ அல்லது சம்பந்தப்படாதவர்களோ ஏதோ ஒரு வகையில் அக்காரியங்களைச் செய்கின்ற கருவிகளாக இயங்குகின்றனர் என்பதையும் கூர்ந்து கவனித்தால் உணர முடிகின்றது. உலகில் உள்ள மனிதர்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் அண்டி வாழும் தன்மை கொண்டதாகவே இயற்கையில் அமைந்திருக்கின்றது. மனிதர்கள் மட்டுமன்று. தாவரங்கள், விலங்கினங்கள் என்று உற்று கவனிக்கும் போது, இயற்கையைச் சார்ந்த வண்ணமாக, ஒன்றினை மற்றொன்று அண்டி வாழும் நிலையில் தான் உலக நியதி இருக்கின்றது. இந்த எளிய அடிப்படையான உண்மையைக் கூட உணராது சாதி, இன, மத பேதங்கள் எனச் சொல்லி அவற்றிற்கெல்லாம் வேண்டாத இலக்கணங்கள் உருவாக்கிக் கொண்டு பிரிவினையை வளர்க்கும் சிந்தனை கொண்டோரை நோக்கும் போது, இந்த இயல்பான உலக நியதிக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளாகத்தான் இத்தகையோரது சிந்தனையைக் காண வேண்டியிருக்கின்றது.

முதல் வார இறுதியில் உ.வெ.சா. திருவாவடுதுறை மடம் சென்றிருந்த போது தேசிகர் அவரிடத்தில், தியாகராச செட்டியாருக்குக் கல்லூரி வழங்கிய ரூ.50 கொடுத்தால் மட்டும் அங்கிருக்கவும். இல்லையென்றால் மடத்திற்கே திரும்பி வந்து விடவும் என்று குறிப்பிட்டுச் சொல்லியனுப்பியிருந்தார். 

மறுவாரமே பணி பற்றிய உறுதியான செய்தி கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மாதச் சம்பளம் ரூ.50 என்ற அடிப்படையில் செட்டியாருக்குக் கொடுத்த அதே சம்பளத்தைத் தர கல்லூரியில் ஒப்புதல் கிடைத்திருந்தது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை உ.வே.சா இப்படிப் பதிகின்றார்.

”  “உங்களை இரண்டு வருஷத்துக்குச் செட்டியாரவர்களுக்குக் கொடுத்த ஐம்பது ரூபாயையே சம்பளமாகக் கொடுத்து ஸப்ரோட்டமாக  நியமித்திருப்பதாக டைரக்டர் துரையவர்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். நான் என் சந்தோஷத்தை முகக் குறிப்பால் தெரிவித்தேன்.

இந்தச் செய்தி தெரிந்த ஆசிரியர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். தியாகராச செட்டியாரோ கரைகடந்த ஆனந்தத்தில் மூழ்கினார். என் மனநிலையைச் சொல்லுவதற்கு வார்த்தை ஏது?” 

தன்னை விட பிறர் எந்தவிதத்திலும் சிறப்பினைப் பெற்று விடக்கூடாது என மனப்போக்கு வளர்ந்து வரும் காலகட்டமிது. அன்பு, பெருந்தன்மை, பிறர் நலம் என்பதெல்லாம் வெறும் காகிதங்களில் எழுதி வாசிக்கும் சொற்களாகப் பல வேளைகளில் அமைந்து விடுகின்றன. அதிலும் தனக்குத் தெரிந்தோர் ஒரு நல்ல பணியில் அமர்ந்து விட்டாலோ அல்லது நல்ல சம்பளம் பெறும் நிலமை கிடைத்தாலோ மனதிற்குள் புழுங்கி சங்கடப்படும் மனம் படைத்தோர் பெருகி விட்ட  காலம் இது. ஆனால் தியாகராச செட்டியாரின் குண நலம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, தன் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் படித்த மாணவர் ஒருவர், அதிலும்  திறமை கொண்ட ஒரு மாணவர், தன் திறமைக்கேற்ற தக்க  தொழிலையும் சம்பளத்தையும் பெற வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் சிறப்பானது.  

படித்து முடித்து ஒரு பணியில் அமர்ந்து மாதச் சம்பளம் பெறுவது என்பது மிகவும் மகிழ்வான ஒரு விடயம். அதிலும் குடும்பஸ்தராக இருக்கும் உ.வெ.சாவிற்கு பெற்றோரையும் மனைவியையும் கவனித்து குடும்பம் நடத்த வேண்டிய பொறுப்பும் இருந்தது. வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை,  நாம் பெற்றுக் கொண்ட கல்வி நமக்கு உருவாக்கித் தருவது என்பது நம் திறமையின் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கையை உயர்த்தும்.  ஒவ்வொரு மனிதருக்கும், அவர் ஆணோ பெண்ணோ,  கல்வி கற்று தன் சுயகாலில் நிற்பது என்பதும் தன் குடும்பத்தைத் தனது வருவாயின் வழியாக சிறப்பாக நடத்திச் செல்வது என்பதும் பொருளாதார ரீதியாகவும் சரி, உளவியல் ரீதியாகவும் சரி மிக முக்கியமான அடிப்படை தேவை. 

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையில்லை. இந்த நிகழ்வின் வழி மீண்டும் ஒரு மாபெரும் மாற்றம் உ.வெ.சாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. திருவாவடுதுறையிலிருந்து உ.வெ.சாவின் வாழ்க்கை  வெறொரு இடத்திற்குப் பெயர்ந்தது.  

நிலையான வருமானம் அமைந்ததால் உ.வெ.சா தன் பெற்றோருடன் கும்பகோணத்திற்கு இடம் மாற்றம் செய்து கொண்டார்.

தொடரும்..

சுபா

தமிழகச் சிற்பிகள் வரலாறு

தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பயணிக்கும் போதும் என் மனதை வெகுவாகக் கவர்வது தமிழக கட்டுமானக் கலைகளும் சிற்பங்களும் கல்வெட்டுக்களும்  தான். 

ஒரு மண்டபத்தில் ஒரு சிறப்பென்றால் இன்னொரு மண்டபத்தில் மற்றொரு சிறப்பு. ஒரு கோயிலில் ஒரு பிரமாண்டம் என்றால் இன்னொரு கோயிலில் மற்றுமொரு பிரமாண்டம். ஒரு சிற்பம் ஒரு காரணத்திற்காக தனித்துவம் வாய்ந்ததாக விளங்குவது போல மற்றொரு சிற்பம் தனக்கேயுறிய மற்றொரு தனித்துவத்துவடன் விளங்குகின்றது. ஒரு சுவரோவியம் ஒரு தன்மையத்தது என வியக்கும் வேளை மற்றொன்று இன்னொரு வகையில் சிறப்பானதாக இருக்கின்றது.  ஒரு கல்வெட்டுப் பாறை இப்படியும் ஒரு வேலைப்பாடா என அதிசயிக்க வைக்கும் அதே வேளை இன்னொரு கல்வெட்டு வேறொரு வகையில் சிறப்புக்களோடு காட்சியளிக்கின்றது. இப்படி என் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கான வருகையின் தேடுதல்களின் போதும் என் தேடுதல்களுக்கு அலுப்பு கொடுக்கா அதே வேளை புதியனவற்றை நான் பார்த்து அறிந்து கொள்ளும் நிலைதான் ஏற்படுகின்றது. இது என் தேடுதலின் தன்மையை சுவாரசியமானதாகவும் ஆக்கியிருக்கின்றது. இப்படி காணக் காண அற்புதங்களாக இருக்கும் தமிழக நிலப்பரப்பின் சிற்பக்கலை, கட்டுமானக் கலையைப் பற்றி அதன் ஆரம்ப காலத் தோற்றம், படிப்படியான வளர்ச்சி, வரலாற்றுக்கு முக்கியமான சான்றுகளின் விபரங்கள் என்ற வகையில் விரிவான தகவல்களைத் தருகின்ற ஒரு நூலை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததுமே அதனைப் பெற்றுக் கொண்டு வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தருகின்ற நூல்.

வரலாற்று ஆய்வாளர் திரு. நடன காசிநாதன் எழுதி வாஸ்து வேத ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக  2006ம் ஆண்டு இதன் முதல் பதிப்பு   நூல் வெளிவந்திருக்கின்றது. இந்த நூல்  உருவாக ஊக்கம் தந்தவர் தமிழகத்தின் முக்கிய சிற்பியான டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் தான் என நூலாசிரியர் தனது முகவுரையில் அதன் காரணங்களோடு விளக்குகின்றார்.

நூலின் முன்னுரையோடு ஸ்தபதிகள் ,சிற்பிகள் பற்றிய நீண்ட அறிமுக விளக்கத்தையும் டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் இந்த நூலில் வழங்கியிருக்கின்றார்கள். தனது விளக்கத்தில் இக்காலத்தில் ஸ்தபதிகள் என்று குறிப்பிடப்படும் கட்டிடக் கலைஞர்களும் சிற்பக் கலைஞர்களும் பற்றிய மதிப்பு என்பது குறைந்து. கொத்தனாராகவும் கூலி வேலைசெய்பவராகவும் மதிக்கப்படும் நிலை இருக்கின்றது எறு குறிப்பிடுகின்றார். இதனை வாசிக்கும் போது, ஆங்கிலத்தில் ஆர்க்கிடெக்ட் என்று சொல்லும் போது ஏற்படும் தனி உயர் மதிப்பு தமிழில் கோயில் கட்டிடக் கலைஞர் என்றோ சிற்பி என்றோ ஏன் தமிழ் மக்கள் சிந்தனையில் தோன்றவில்லை என்பதை நாம் யோசிக்கவேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

நூலில் நூலாசிரியரின் நுண்ணுரை, டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்களின் முன்னுரை அகவுரைக்கு அடுத்தார் போல பதினெட்டு தலைப்புக்களில் தமிழகச் சிற்பிகளை பற்றி ஆராய்கின்றார் நூலாசிரியர். 
அவை
  1. குமரிக்கண்ட காலத்தில் சிற்பிகள்
  2. ஹரப்பன் நாகரிகக் காலத்தில் சிற்பிகள்
  3. வேத காலத்தில் சிற்பிகள்
  4. இதிகாச, புராணக் காலங்களில் சிற்பிகள்
  5. பண்டைத் தமிழ்க் கல்வெட்டுக் காலத்தில் சிற்பிகள்
  6. சங்க காலத்தில் சிற்பிகள்
  7. காப்பியக் காலத்தில் சிற்பிகள்
  8. பல்லவர் காலத்தில் சிற்பிகள்
  9. முதற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  10. சோழர் காலத்தில் சிற்பிகள்
  11. பிற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  12. சம்புவராயர் காலத்தில் சிற்பிகள்
  13. விசய நகர மன்னகள் காலத்தில் சிற்பிகள்
  14. நாயக்கர் காலத்தில் சிற்பிகள்
  15. மராத்தியர் காலத்தில் சிற்பிகள்
  16. பாளையக்காரர்கள் காலத்தில் சிற்பிகள்
  17. பிற்காலங்களில் சிற்பிகள்
  18. சிற்பங்களிலும் ஓவியங்களிலும் சிற்பிகள்
என்ற பதினெட்டு தலைப்புக்களாகத் தகவல்கள் விரிகின்றன.

இந்த நூலிற்குச் சிறப்பு சேர்க்கும் விசயங்களில் ஒன்றாக மயன் பற்றிய விளக்கங்களைக் காண்கின்றேன். 

கடல்கோளால் ஆட்கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் பிறந்து  மயன் என்னும் ஆதி சிற்பியே தொழிற் கருவிகள், மட்கலங்கள், ஓவியங்கள்,கட்டிடங்கள் ஆகியனபற்றிய ஆரம்ப நிலை தொழில்னுட்பக் கூறுகளை தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தியவராக இந்த நூலின் முதற் பகுதி விளக்குகின்றது. இதற்கு ஆதாரமாக வைசம்பாயனம் என்ற நூலை ஆதாரமாகச் சுட்டுவதுடன், இன்னூல் மயன் தான் அறிந்த தொழில் நுட்பங்களை நூல்களாக எழுதி குமரிக் கண்டத்தில் செயல்பட்ட முதல் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் அதில் மயன் சிற்பமாச் செந்நூல், ஓவியச் செந்நூல், மனநிலச் செந்நூல், நிலமனச் செந்நூல், விண்கலச் செந்நூல், நாட்டியச் செந்நூல், இசைக் கலைச் செந்நூல், மூலிகைச் செந்நூல், தமிழியற் செந்நூல், கணிதமாச் செந்நூல், கோட்டுருச் செந்நூல் என்ற பதினோரு நூல்களை இயற்றியது பற்றிய குறிப்பு உள்ளமையையும் சுட்டுகின்றார். இது இந்த வைசம்பாயணம் என்னும் இம்மூல நூலைத் தேடிப் பெற்று வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைகின்றது.

குமரிக்கண்ட மயனின் பெயரிலேயே பலர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களும் கட்டிடக் கலைகளில் தேர்ந்தவர்களாகவும் சிற்பக் கலை வல்லுனர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை இலக்கிய இதிகாசச் சான்றுகள் சுட்டுவதையும் இந்த நூலில் காண முடிகின்றது. உதாரணமாக இன்றைக்கு ஏறக்குறைய கி.மு1000 - 700 வரை எனக் கணக்கிடப்படும் இராமயண மயன் பற்றிய குறிப்புக்கள் இருப்பதும் இங்கு குறிப்பிடப்படுகின்றது. மயனின் மகள் மண்டோதரி என்ற ஒரு குறிப்பும் அர்ஜூனனுக்கு மயன் கட்டிய அவை மண்டபம் பற்றியும் வருகின்ற குறிப்புக்களை அறிய முடிகின்றது. காப்பியக் காலத்தில் மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலை ஒரு மலர்வனத்திற்குச் சென்றபோது அங்கே மயன் பண்டைய காலத்தில்  தனது நூற்குறிப்பில் உள்ள கட்டுமான மரபினை ஒத்து கட்டப்பெற்ற பளிங்கு மண்டபத்தில் உதயகுமாரனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டமையை இளங்கோவடிகள் சுட்டுவதையும் அறிய முடிகின்றது. இதே போல சிலப்பதிகாரத்திலும்  மனையறம்படுத்த காதையில் மயன் உருவாக்கிய நெறிமுறையில் தயாரிக்கப்பட்ட கட்டிலில் கண்ணகியும் கோவலனும் படுத்துறங்கினர் என்ற குறிப்பும் வருவது மயன் என்ற ஆதித் தமிழ் கட்டுமான ஆசானைப் பற்றி மேலும் வலியுறுத்திச் சொல்வதாக அமைகின்றது .

கல்வெட்டுக்கலை என்பது மிக உயர்ந்த மிக நுணுக்கமான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவைகளுடன் கூடிய ஒரு கலை. நமக்கு இன்று கிடைக்கின்ற நூல்களின் வழியாக சங்க கால கட்டுமானம் என்பது செங்கற்கட்டடங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிகின்றோம். இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே செங்கல் தயாரித்து அதனைக் கொண்டு கட்டிடங்களை எழுப்பிய தமிழர் தம் தொழில் நுட்பத் திறன் வியக்க வைக்கும் ஓன்றே என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கிடமேதுமில்லை.

நூலாசிரியர் இந்த நூலில் வழங்கியிருக்கும் மேலும் இரண்டு சிறப்பு விடயங்களாக அமைவது கல்வெட்டுக்கள் பற்றிய விளக்கங்களும் செப்பேட்டுகளைப் பற்றிய விரிவான தகவல்களும் என்று சொல்லலாம். பண்டைய தமிழ் எழுத்துக்களான பிராமி, வட்டெழுத்து அத்துடன் சமஸ்கிருத கிரந்த எழுத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் பல உதாரணங்களாக நூலில் கையாளப்பட்டுள்ளன.  இச்செப்பேடுகள் தற்சமயம் இருக்கின்ற அருங்காட்சியகங்களைப் பற்றிய தகவல்கள் இவற்றை நேரில் பார்த்து ஆராய விரும்புவோருக்கு ஆரம்ப நிலைக் குறிப்புக்கள வழங்கும் தன்மையும் சிறப்புக்குறியது என்றே கருதுகின்றேன். 

எப்படி ஓலைச்சுவடிகள் என்றால் அவை சோதிடம் சார்ந்தவை என்ற எண்ணம் பரவலாகப்பல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றதோ அதே போல கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்  என்றாலே அவை மன்னர்கள் வரலாற்று தகவல்களாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதுண்டு. கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழ் மக்களின் சமூகம் சார்ந்த விடயங்களை பதிவு செய்து வைத்த ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன என்பதை சில ஆதாரங்களின் வழி நூலாசிரியர் விவரிக்கின்றார். அதில் உதாரணமாக வரி பற்றிய விபரங்கள், ஒரு குடும்பத்தினர் தம்மை அடிமைகளாக விற்றுக் கொண்டதற்கான சான்று செப்பேடு, கொள்ளை நிகழ்வு ஒன்றைப் பற்றிய செய்தியைப் பதிந்த  செப்பேடு என்பன போன்றவற்றை குறிப்பிடலாம். இப்படி வித்தியாசமான செப்பேடுகள் விசய நகர மன்னர்கள் காலத்தில், நாயக்கர் காலத்தில், சம்புவராயர், மராத்தியர் காலங்களில் வெளியிடப்பட்ட குறிப்புக்கள் கல்வெட்டு செப்பேடு தயாரிப்பு பற்றிய தகவல் களஞ்சியமாக இந்த நூலின் தரத்தை உயர்த்துவதாக உள்ளது. 

இந்த நூலின் மிக முக்கிய அங்கமாக நான் காண்பது ஒவ்வொரு  அத்தியாயத்தின் பின்னும் கொடுக்கப்பட்டிருக்கும் துணை நூற் குறிப்புப் பட்டியல். இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் ஆய்வு மாணவர்களுக்கும் வரலாற்றுத்தேடல் உள்ளோருக்கும் மிக உதவும் தன்மை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 

​தச்சர்கள், பொற்கொல்லர்கள், சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் திறத்தால் விட்டுச் சென்றவையே இன்றைய  தமிழர் தம் வரலாற்றுச்​சான்றுகளாக நம் கண் முன்னே திகழ்கின்றன. அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இன்று சிற்பக்கலை தமிழகத்தில் சுட்டப்படுவது வேதனைக்குறிய ஒரு விடயம். பண்டைய தமிழர் கட்டுமானக் கலைகள் இக்கால சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப்படுத்தப்படுமேயானால் அது இக்கலை அதன் சிறப்புத்தன்மை கெடாது அறிவியற் கூறுகளின் பெருமையோடு மேலும் மிளிர வாய்ப்பு ஏற்படும்.

விலை ரூ.350
பிரசுரிப்பாளர்: வாஸ்து வேத ஆய்வு நிறுவனம்

Saturday, February 6, 2016

ஆப்பிள் பை

சுவையான ஆப்பிள் பை


தேவையான பொருட்கள்:

  • பரோட்டா செய்ய தேவைப்படும் அனைத்தும்
  • தேன்
  • 1 ஆப்பிள்
  • கொஞ்சமாக பட்டை தூள்
  • பீனட் பட்டர்


பரோட்டா செய்வது போல மாவை தயார் செய்து அதனைச் சப்பாத்தி  தயார் செய்வது போல சமமாக ஆக்கிவிடுங்கள்​. கீழுள்ள படத்தில் இருப்பது போல. (நான் கடையில் தயாராகக் கிடைப்பதை வாங்கி பயன்படுத்தினேன்)



ஒரு ஆப்பிளைக் கீழுள்ள படத்தில் உள்ளது போல வெட்டி அதை ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதனை கொதிக்க வைத்து அதற்குள் போட்டு 2 நிமிட விட்டு எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.


படத்தில் உள்ளது போல பிசைந்த மாவின் ரொட்டி போன்ற பகுதியை 10 செமீ நீளத்திற்கு வெட்டவும்.
அதன் மேல் வரிசை வரிசையாக மேல் பகுதியில் மட்டும் ஆப்பிளை அடுக்கவும்.  ஆப்பிளுக்கு கீழே பீனட் பட்டரை தடவவும்.
இடையில் சொட்டு சொட்டாக தேனை விடவும்.

இதனை மெலிதாக கீழே படத்தில் உள்ளது போல சுருட்டிக் கொள்ளவும்.




தயாரான ஆப்பிள் பைகளை அவனில் வைக்கும் தட்டில் வைத்து வரிசையாக அடுக்கவும். கொஞ்சம் இடைவெளி விட்டே வைக்கவும். ஏனென்றால் பை பெரிதாக விரியும். இப்போது பையின் மேல் கொஞ்சமாக பட்டை தூளைத் தூவி சில சொட்டுக்கள் தேனையும் அதன் மேல் விடவும்.




அவனில் 20 -30 நிமிடங்கள் வைத்து எடுத்தால் ஆப்பிள் பை ரெடி.




செய்து சாப்பிட்டு மகிழ்க!