Saturday, June 29, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 53

நம் சமூகத்தில் திருமணங்கள் பல்வேறு விதங்களில் நடைபெறுவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இதே தொடரிலேயே உ.வே.சா அவர்களின் திருமணத்தின் போது நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி முன்னர் நான் விவரித்திருக்கின்றேன். என் சரித்திரம் நூலில் இரண்டாவதாக மற்றுமொரு திருமணம் பற்றிய செய்தியும் ஓரளவு விளக்கப்படுகின்றது. அது மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் புதல்வன் சிதம்பரம் பிள்ளையவர்களின் திருமணம் பற்றிய செய்திகளே. இத்தகவல்கள் அத்தியாயம் 51ல் கிடைக்கின்றன.

சிதம்பரம்பிள்ளைக்குத் திருமணம் மாயூரத்திலேயே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இவருக்கு சீகாழி நகரிலிருந்த  குருசாமி பிள்ளை என்பவருடைய பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். திருமண வைபவம் ஒரு ஜமீந்தார் வீட்டுத் திருமணம் போல அவ்வளவு ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற தகவல்களை உ.வே.சாவின் குறிப்புக்களின் வழி அறிகின்றோம். மாணவர் கல்வி, திருமடத்தின் சார்பு என திருவாவடுதுறை மடத்திலேயும் மாணவர்களுடனும் தன் பெரும்பாலான வாழ்க்கையின் பகுதியை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கழித்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நாம் தம் குடும்பத்தார் நலனையும் சிறிதும் மறக்காது தனது தகுதிக்கேற்ற வகையில் குடும்பத்தார் மனமகிழ தேவையான விஷயங்களையும் நலமே செய்திருக்கின்றார் என்பதை இக்குறிப்புக்களின் வழியாகக் காணமுடிகின்றது.

இத்திருமணத்திற்குத் திருவாவடுதுறை மடத்தின் ஆதீன கர்த்தர், மடத்தின் தம்பிரான்கள், மற்றும் பிள்ளையவர்கள் மேல் மதிப்பு கொண்டிருந்த பொருள் படைத்தோர் சிலரும் பொருளுதவி செய்திருக்கின்றனர். உ.வே.சா, சாவேரிநாதப் பிள்ளையும்  சேர்த்து மாணவர்கள் சிலரும் பிள்ளையவர்களுடன் உதவிக்காக இத்திருமணத்தின் போது மாயூரம் சென்று தங்கியிருந்து திருமணம் முடியும் வரை உடனிருந்து உதவி செய்து வந்திருக்கின்றனர். ஆசிரியரின் குடும்பத்தில் இந்த மாணவர்கள் எல்லோரும் தங்களைப் பிணைத்துக் கொண்டனர் என்பதை இதனால் அறிய முடிகின்றது.

இப்போதெல்லாம் விதம் விதமான வகைகளில் திருமணப் பத்திரிக்கைகளை அச்சகங்கள் தயாரிக்கின்றன. இம்முறை தமிழகம் சென்ற போது காரைக்குடியில் இருக்கும் ஒரு நண்பரது அச்சகத்தில் வரவேற்பு அறையில் இருக்கும் திருமண அழைப்பு பத்திரிக்கைகளின் வகைகளையும் விதங்களையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். பல வடிவங்கள். அளவில் சிறியவை பெரியவை எனவும் பூவேலைப்பாடுகளுடனும் பல வர்ணங்களில் பாரம்பரிய ஓவியங்களுடனும் சில மேல்நாட்டு ஒவியங்களுடனும் என வெவேறு வகைகளில் இவை தற்சமயம் மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைகின்றன. அக்காலத்திலும் திருமண அழைப்பிதழ்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்திருக்கின்றது. பிள்ளையவர்கள் வீட்டுத் திருமண பத்திரிக்கைக்கு ஒரு கூடுதல் விஷேஷமும் இருந்திருக்கின்றது.

அதாவது உள்ளூரில் உள்ளவர்களுக்கு வீடு தேடிச் சென்று அழைப்பு செய்வார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்குப் பத்திரிக்கையுடன் கடிதமும் சேர்த்து அனுப்பினாராம் பிள்ளையவர்கள். அதில் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படும் தனித்தனிக் கடிதத்திலும் ஒரு பாடலை இணைத்தே கடிதம் தயாராகுமாம். இந்தக் கடிதத்தை எழுதும் பணி உ.வே.சாவிற்கு அமைந்தது. பிள்ளையவர்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் குணத்தை மதிப்பிடும் வகையில் இக்கடிதங்களையும் பாடல்களையும் உருவாக்கிச் சொல்ல அவற்றை உ.வே.சா எழுதியிருக்கின்றார்.
சிறப்பு விருந்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் என்ற நிலையில் ஒருவருக்கு மட்டும் பிரத்தியேகமாகப் பிள்ளையவர்கள் ஐந்து பாடல்களைச் சொல்ல உ.வே.சா அந்தக் கடிதத்தையும் எழுதினாராம்.

இந்தச் சிறப்புக்குறியவர் கல்லிடைக்குறிச்சியில் இருந்த திருவாவடுதுறை மடத்தின் ஆதீனத்தில் சின்னப் பண்டார சன்னிதியாக இருந்த ஸ்ரீநமச்சிவாய தேசிகர் தான்.

பிள்ளையவர்களுக்கு இவர்பால் தனி அன்பும் மரியாதையும் இருந்திருக்கின்றது. இந்தத் தேசிகர் சிறந்த கல்வி ஞானம் உடையவர் என்றும் , தமிழ் வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் என்றும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொண்டு பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கின்றார் என்றும் மிகுந்த திறமை உள்ளவர் என்றும் பிள்ளையவர்கள் விவரித்துக் கூறுவதை இந்த அத்தியாயத்தில் காண்கின்றோம். இந்தத் தேசிகர் திருநெல்வேலி நகரில் ஆதீனத்திற்குச் சொந்தமாக இருந்த பல கிராமங்களையும் கல்லிடைக் குறிச்சி அதனைச் சுற்றி இருந்த ஆதீனத்திற்குச் சொந்தமான கிராமங்களையும் நன்கு பராமரித்து வந்தவர் என்பதனையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. கல்லிடைக் குறிச்சியில் ஆதீனத்திற்குச் சொந்தமான ஒரு மடமும் அதனை ஒட்டிய கோயில்களும் இருப்பதாகவும், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆதீன கர்த்தராகப் பட்டம் பெறுவதற்கு முன்னர் சில காலங்கள் அங்கே சிறிய பட்டமாக இருந்து நிர்வாகித்து வந்தவர் என்ற குறிப்பையும் கூட அறிந்து கொள்ள முடிகின்றது. இதே நிலையில் ஆதினத்திற்குச் சொந்தமான கிராமங்கள் இன்னமும் இப்பகுதிகளில் இருக்கின்றனவா என்பது தெளிவாகத்தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

திருவாவடுதுறை மடத்தின் அக்காலத்திய மதிப்பையும் ஆளுமையையும் பிள்ளையவர்கள் உ.வே.சாவிற்குக் கூறுவதாக அமையும் இப்பகுதியை வாசிப்பதே அதன் அக்காலத்து நிலையை சரியாக விளக்க உதவும்.

" ஸந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருஷங்கள் அங்கே எழுந்தருளி இருந்தது. இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது  கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத்திலுள்ளவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும் சொல்வதுண்டு.”

“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவது போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.

“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும் சிஷ்யர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம் இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான சிவஸ்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு” என்று ஆசிரியர் உரைத்தார்."

திருமணம் சிறப்பாக நடைபெற்று முகூர்த்த தினத்தின் அன்று கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகியிருந்திருக்கின்றன. பாட்டுக் கச்சேரி, பரதநாட்டியம், விகடக் கச்சேரி, வாத்தியக் கச்சேரிகளெல்லாம் நடந்திருக்கின்றன. பரதநாட்டியத்தை ஒரு பெண்மணி ஆடிக் கொண்டிருக்கும் போது இடையிடையே அப்பெண்ணிற்கு அங்கு வந்திருந்த பொருள் படைத்த கணவான்கள் பணம் கொடுத்தனராம். இதனை நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார். உ.வே.சா. ஆசிரியர் கண்களிலிருந்து இது தப்புமா? :-)

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர் என்ன செய்தார் என்பதை உ.வே.சா அவர்களே சொல்கின்றார்.

" பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம் கொடுத்தனர். அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச் செய்து என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச் சொன்னார். எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது; ஆனாலும், ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன். அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை இதனாலும் அறிந்து கொண்டார்கள்."

உ.வே.சா இப்பகுதியில் பரதநாட்டியம் ஆடிய பெண்ணை பெண்பால் என விளிக்கின்றார். அக்காலத்து எழுத்து முறையில் பெண்களைப் பெண்பால் எனக் குறிப்பிடுவது தான் வழக்கமாக இருந்தது போலும்!

தொடரும்...
சுபா

Friday, June 21, 2013

Robert Langdon is back..The Gates of Paradise! - 4

வாசித்து முடித்து 2 வாரங்களாகி விட்ட பின்னரும் கூட இன்பெர்னோவின் ரோபர்ட் லாங்டனும் சியன்னாவும்என் மனதிலேயே சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்கள். 

இன்பெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு பிரமாண்டமான ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி  பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.  இந்தக் கதவு  இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் தற்சமயம்  ஓப்பரா டி சந்தா மரியா டெல் பியோரே அருங்காட்சியகத்தில் (Museo dell'Opera di Santa Maria del Fiore) பாதுகாக்கபடுகின்றது.



27 ஆண்டுகள் கிபெர்ட்டி  (Lorenzo Ghiberti) எனப் பெயர்கொண்ட இத்தாலிய கலைஞன் உருவாக்கிய ஒரு மாபெரும் கலைப்படைப்பு. பழைய  ஏற்பாட்டில் (Old Testament) குறிப்பிடப்படும் 10 கதைகளுக்கு உருவம் கொடுக்க எடுத்த முயற்சியில் உருவான ஒரு கலைப்படைப்பு. இதைப்பார்த்து  மைக்கல் ஆஞ்சலோ இதுதான் சுவர்க்கத்துக்கான வாசலோ (The Gates of Paradise ) எனக் குறிப்பிட்டதால் அதுவே பெயராக அமைந்ததது. 

இந்தக் கதவு ப்ளோரன்ஸ் நகரத்தில் உள்ள பாப்டிஸ்டிரியின் ஒரு வாசல் கதவாக அமைக்கப்பட்டது. பாப்டிஸ்டிரியின் ஒரு வாசலில் இதனைப் பார்த்து இதுதான் அந்த உண்மையான சுவர்க்க வாசலோ என நினைத்து ஏமாந்து போய் விடக் கூடாது. ஏனென்றால் அங்கே தற்சமயம் இருப்பது  அசல் அல்ல. சீதோஷ்ண மாறுதல்களால் சேதப்படுவதிலிருந்து தடுப்பதற்காக உண்மையில் பாப்டிஸ்டிரியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கதவை பெயர்த்து எடுத்து தற்சமயம் ஓப்பரா டி சந்தா மரியா டெல் பியோரே அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றனர். பாடிஸ்டிரியின் வாசலில் இருப்பது அசலைப் போல செய்யப்பட்ட ஒரு வடிவமே.

http://www.youtube.com/watch?v=C6AbLI4QBAU

இன்பெர்னோவில் இந்த சுவர்க்க வாசலைச் சுற்றியும் ப்ரவுன் கதையை அமைத்திருக்கின்றார். 

பாப்டிஸ்டிரி ப்ளோரன்ஸ் நகருக்கு மட்டுமல்ல - இத்தாலி முழுமைக்குமே சிறப்பு சேர்க்கும் கலைப்பாடு நிறைந்த  கட்டிடங்களில் இடம் பிடிக்கும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இதன் அழகை வர்ணிப்பது எனக்கு இயலாத  ஒரு காரியம். இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு மூலையிலும் நின்று பார்த்து புகைப்படங்கள் பல எடுத்தேன். 

http://www.youtube.com/watch?v=HzWu4tJoG5A

இக்கலைஞன் லோரென்ஸோ கிபெர்ட்டி பற்றி அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Lorenzo_Ghiberti

சுபா

Thursday, June 13, 2013

Robert Langdon is back..Hagia Sophia! - 3

இன்பெர்னோ வாசித்து முடித்ததும் மனதை முழுமையாக ஆக்ரமித்திருப்பது இந்த நூலில் வழங்கப்பட்டிருக்கும் உலகின் பிரமாண்டமான சில கட்டிட அமைப்புக்கள் (grand architecture) பற்றிய விவரணைகள் தான். இதனை பற்றியும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கின்றேன்.

முதலில் இப்படி கட்டிடங்களை நேசித்து அதன் ஒவ்வொரு பகுதியையும் சரித்திர விவரங்களோடு வழங்கியிருப்பதற்காகவே டான் ப்ரவ்னின் எழுத்து நம்மைக் கவர்கின்றது. நானும் ஒரு கட்டிடங்களின் பிரியை என்பதால்:-))

வரலாற்று விஷயங்களைச் சேகரிப்பதற்காக நேரில் சென்றும் ஒவ்வொரு பகுதியையும் உன்னிப்பாக கவனித்தும் அதற்கான சான்றுகளை இண்டெர்னெட்டிலும் கிறிஸ்துவ மத பழம் நூல்களிலும் டாண்டேவின் டிவைன் கோமெடியிலும் தேடி எடுத்து தொடர்பு படுத்தி மிக அழகாக நூலை எடுத்துச் சென்றிருக்கின்றார்  ப்ரவுன்.   முன்பு சொன்னது போல நூல் விமர்சனம் இப்போது இல்லை. :-)

ஆனால் இந்த நூலில் குறிப்பிடப்படுகின்ற சில அரிய பிரமாண்ட கட்டிடங்களைப் பற்றி தகவல் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. வாசித்து முடித்ததும் ஓடிப் போய் யூடியூபில் தேடிப் பார்த்து ரசித்தசில விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இதில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

முதலில் மனதில் உடன் தோன்றுவது டான் ப்ரவுன் குறிப்புக்களில் இருக்கும் இஸ்தான்பூல் நகரின் வரலாற்றுப் பெருமை மிக்க ஹாஃகியா சோபியா.



5ம் நூற்றாண்டு ஆர்த்தடொக்ஸ் சமயக் கோயிலாக இருந்து பின்னர் 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயமாக மாறி பின்னர் 15ம் நூற்றாண்டின் மத்தியில் இஸ்லாமிய தொழுகைக்காகப் பயன்படுத்தப்பட்டு சென்ற நூற்றாண்டின் மத்தியில் அருங்காட்சியமாக உருவம் கொண்ட ஒரு மாபெரும் கட்டிடம் இது. பொன்னால் இழைக்கப்பட்ட வடிவங்கள், பிரமாண்ட வடிவங்கள், மதங்களின் சங்கமங்கள் என இதற்கு மாபெரும் சிறப்பு இருக்கின்றது.

யூடியூப் வழங்கியிருப்பும் வாய்ப்புக்கள் நமக்கு இருந்த இடத்திலேயே இத்தகைய பிரமாண்டங்களைக் கண்டு ரசிக்கும் படி உதவுகின்றன.

http://www.youtube.com/watch?v=-QD-sQAOv8E - பகுதி 1

http://www.youtube.com/watch?v=YRPvK2Ihuc8 - பகுதி 2

http://www.youtube.com/watch?v=GEicxpfXI_Q - பகுதி 3

http://www.youtube.com/watch?v=AvlHE8znRIM - பகுதி 4

ஒவ்வொன்றும் 14-15 நிமிட வீடியோக்கள் தாம். ரசித்துப் பார்க்கலாம்.

சுபா

Saturday, June 8, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

இன்று மேலும் ஒரு புது வகை மலர்.

இது ரோடடெண்ட்ரோன் (Rhododendron) என அழைக்கப்படுவது. இப்பெயர் பழங்கால க்ரேக்க மொழிச் சொல்.


இந்த வகைச் செடியில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உண்டென்று விக்கியில் தகவல் உள்ளது. பல வர்ணங்களில் இவை ஐரோப்பாவின் பல நகரங்களில் காணக்கிடைக்கும் ஒரு செடி. வெயில் அதிகம் இருக்கும் கிழக்கு தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கெனரி தீவுகளிலும் இதனை 2 அடி உயரத்திற்கும் மேற்பட்ட வடிவில் காணலாம். என் வீட்டில் இருக்கும் வகை 1 அடி உயரம் மட்டுமே உள்ளது.


மொட்டும் மலர்ந்த பூங்கொத்துமாக

இந்தச் செடி ஏறக்குறைய 6 வருடங்களாக என் தோட்டத்தில் உள்ளது. வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும். ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் பூக்கின்ற மலர்கள் ஜூன் மாதம் பாதி வரை இருக்கும் பின்னர் செடி மட்டும் இலைகளுடன் காட்சியளிக்கும். செடி முழுதும் மலர் வணம் போல காட்சி தரும்.


பூத்திருப்பவை அனைத்துமே ஒரே செடியில் பூத்தவை தாம்

சுபா

Sunday, June 2, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 52

பொதுவாகவே சமய நிறுவனங்களில் காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடியும் நிகழ்வுகளின் வரிசையில் ஒழுங்கு குறையாமலும் நடைபெறும் . ஹிந்து சமயம் சார்ந்த நிறுவனங்களில் மட்டும் நடைபெறுகின்ற ஒரு விஷயம் அல்ல இது. வாட்டிக்கனில் நடைபெறும் சடங்குகளாகட்டும், ஆர்த்தடோக்ஸ் மடாலயமாகட்டும் அல்லது எந்த சமய குருமார்கள் இருந்து சமயம் வளர்க்கும்  இடமாக இருக்கட்டும்.. அங்கே ஒரு நாள் முழுதும் நடைபெறும் விஷயங்கள் என்பவை எப்போதும் நேரத்திற்கு ஏற்ப ஒரு ஒழுங்குடன் நடைபெற்றுக் கொடிருப்பதைக் காண முடியும்.

எனது அனுபவத்தில் சில நாட்கள் பேரூர் சைவ மடத்தில் தங்கியிருந்திருக்கின்றேன். அதிகாலை தொடங்கி இரவு வரை மடாதிபதியும் அவரைச் சார்ந்தவர்களும்  கலந்து கொள்ளும் விஷயங்கள் அதிகாலை பூஜை அதற்குத் தொடர்பான சடங்குகள், பிற அன்றாட நடவடிக்கைகள் என பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  எனது தமிழக பயணங்களின் அனுபவத்தில்  தருமபுர ஆதீனம், கோவிலூர் மடம், குன்றக்குடி சைவ மடம், திருவாவடுதுறை சைவ மடம் என இவ்வகையான சில இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரம் மடாதிபதிகள் பார்வையாளர்களுக்கு ஒதுக்குவது என்பதையும் அறிந்திருக்கின்றேன். இப்படி ஒவ்வொரு விஷயங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து  அதற்கேற்றார்போல் அன்றாட விஷயங்களைக் கவனிப்பது இச்சமய நிறுவனத்தை ஒழுங்குடன் நடத்திச் செல்ல உதவுகின்றது.

திருவாவடுதுறை மடத்தின் சிறப்புக்கள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாக ஒரு விஷயத்தைக் கூறலாம். அதாவது, சைவ மடங்கள் ஒழுக வேண்டிய அன்றாட நடைமுறை கடமைகள் பற்றிய விஷயங்களை வரையறுத்து அதனை மடங்களுக்குள்ளே பயன்படுத்த வேண்டிய சட்டமாக்கி அறிமுகப்படுத்திய சிறப்பு இந்த மடத்திற்கு உரியதாகின்றது. இதனைப் பற்றி பின்னர் ஒருமுறை இதே தொடரில் விளக்க முயற்சிக்கின்றேன்.

குருபூஜை நிகழ்வு மட்டுமல்ல. திருவாவடுதுறை மடத்தின் சம்பிரதாயங்கள், ஆதீனகர்த்தரின் அன்றாட நடவடிக்கைகள் என பல முக்கிய விஷயங்களைப் பதிந்து வைத்துள்ள ஒரு ஆவணமாகவும் கூட  என் சரித்திரம் நூல் விளங்குகின்றது. மடத்தின் அன்றாட நிகழ்வுகளின் தன்மையில் தற்காலத்தில் சில மாற்றங்கள் காலத்தின் தேவைக்கேற்ப நடந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு 180 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை மடத்தில் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த  அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடித்தார் போலக் காட்டும்  சில பகுதிகள்  வழி திருமடத்தின் அன்றாட விஷயங்களை அறிந்து கொள்ள வாசகர்களுக்கு இந்த நூல் உதவுகின்றது என்பதில் சந்தேகமில்லை.

அச்சமயத்தில் ஆதீனகர்த்தராக இருந்தவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள். இவரது பொழுது போக்கு என்பதே நூல்களை வைத்துக் கொண்டு பாடம் சொல்வது தானாம். காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை  பெரும்பாலும் தம்பிரான்களுக்கும் பாடம் கேட்க வருவோருக்கும் பாடம் சொல்வதிலேயே இவரது பொழுதுகள் செல்லுமாம்.

சுப்பிரமணிய தேசிகரது  அன்றாட செயல்பாடுகள் என்பவை ஒரு வழக்கமான சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கின்றது. அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே  எழுந்து விடுவாராம். மடத்திலிருந்து ஏறக்குறைய அரை மைல் தூரத்திலிருக்கும் காவிரிக்கரைக்கு நடந்தேதான் செல்வாராம். இவர் செல்லும் போது இவருடன் தவசிப் பிள்ளைகள் உதவியாக ஆசனப் பலகை, மடி வஸ்திரப் பெட்டி, மற்றும் தேவையான பொருட்களுடன் செல்வார்களாம். காவிரிக்கரைக்குச் சென்று வரும் வழிப்பாதயில் மருத மரங்கள் இரு பகுதிகளிலும் நிறைந்திருக்குமாம். அச்சாலையில் தேசிகர் ஸ்நானம் செய்து முடித்து வரும் போது அவர் உடன் பேசிக் கொண்டு வருவதற்காகவே சிலர் சாலைகளில் காத்திருப்பராம்.

வரும் வழியிலேயே சமாதித் தோப்பு உள்ளது. இங்கு மடத்தின் முன்னாளையை தலைவர்களாக இருந்தவர்களின் சமாதிக் கோயில்கள் உள்ளன. இவற்றை நான் திருவாவடுதுறை மடம் சென்ற போது நேரில் சென்று பார்த்தேன். சமாதிக் கோயில்களில் வழிபட்டு விட்டு மாசிலாமணீஸ்வரர்  ஆலயம் வந்து சுவாமி தரிசனம் முடித்து பின்னர் மடத்திற்குச் செல்வாராம். இப்படிச் செல்கையில் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள துணைவந்த விநாயகருக் குசம்பிரதாயமாக சிதர் தேங்காய் உடைப்பார்களாம். இக்காட்சியை  இக்குறிப்புக்களைக் கொண்டு உருவகம் செய்து பார்க்கும் போது இதுவே ஒரு சிறிய விழா போலத் தோன்றுகின்றது. காலை  வேளையிலேயே உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் நடைப்பழக்கமும் தேசிகருக்கு அமைந்திருந்தது என்பதையும்  இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது.

இந்தச் சடங்குகள் முடிந்து மடத்திற்கு வந்ததும் முதலில் திருமாளிகைத்தேவர் தரிசனம், பின்னர் ஓதுவார்கள் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் அருளிய ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகர் மாலையிலிருந்து பத்துப் பாடல்களை ஓத ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் சன்னிதியில் தரிசனமும்  நடைபெறுமாம். ஒவ்வொரு பாடல்கள் சொல்லி முடிந்ததும் தேசிகர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவாராம், இப்படி பத்து பாடல்களுக்கும் 10 முறை என இச்சடங்கு நடைபெறுமாம். இதன் பின்னர் மடத்திலிருப்போர் அனைவருக்கும் தேசிகரே விபூதி வழங்கிவிட்டு தனது ஆசனமான ஒடுக்கத்திற்கு வந்து அமர்வாராம். இப்படி அவர் வந்து அமரும் போது காலை மணி எட்டாகிவிடும் என்ற குறிப்பையும் காண முடிகின்றது.

ஒடுக்கத்தில் வந்து அமர்ந்ததும் வந்திருக்கும் யாசகர்களுக்கு சன்மானம் அளித்து அனுப்பி வைப்பதும் தேசிகருக்கு ஒரு கடமையாக இருந்திருக்கின்றது. அன்றைய பொழுதில் யாரேனும் யாசித்து வரவில்லையென்றால் சற்று வருத்தமும் அவருக்கு ஏற்படுமாம். இவர் காலையில் உணவு உட்கொள்வதுமில்லை. யாசகர்களை அனுப்பி விட்ட பிறகு பாடம் சொல்லுதலை ஆரம்பித்து விடுவார்களாம்.

இடையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே யாரேனும் வித்துவான்கள் தேசிகரைப் பார்க்க வந்திருந்தால் அவர்களைத் தேசிகரைச் சந்திக்க அனுமதித்து வந்திருந்தவர் எந்த  விஷயத்தில் வல்லமை உள்ளவரோ அந்த விஷயத்தைப்பற்றி பேசச்சொல்லியோ, பாடச் சொல்லியோ கேட்டு தானும் சம்பாஷித்து மகிழ்வாராம் தேசிகர்.அப்படி வருபவர்கள் கலை ஞானமோ கல்வி ஞானமோ உள்ளவர்களாக இருந்தால் மடத்திலேயே  சில காலங்கள் தங்கியிருந்து செல்ல வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் மனமாரச் சொல்வாரம். இப்படிப் பல வித்துவான்களைப் பாராட்டி ஆதரித்து கலையும், இலக்கியமும், சைவமும், தமிழும் வளர சுப்பிரமணிய தேசிகர் ஆதரவளித்திருக்கின்றார் என்ற விஷயங்களை என் சரித்திரம் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய புரவலர்கள் பலரது ஆதரவினால் பல கல்வி மான்கள் உருவாகும் நிலையும், கல்வியும் ஞானமும் நிலைத்து செழித்தும் வளரும் நிலையும் அமைந்திருந்தது என்பதையும் கூட நன்கு உணர முடிகின்றது.


ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்

தொடரும்...

சுபா

என் வீட்டுத் தோட்டத்தில்

டூலிப் சீஸன் இங்கே முடிந்து விட்டது. இந்த முறை சில வித்தியாசமான வகைகளையும் நட்டு வைத்து பரிசோதித்தேன் என்று முன்னர் குறிப்பிட்ட்டிருந்தேன். அதில் ஒரு வகையை இன்று  படத்தில் காணலாம்.



டூலிப் ம லர்கள் எப்போதும் காணும் வடிவத்திலிருந்து மாறுபடும் ஒரு வடிவம் இதற்கு. சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என நான்கு வர்ணங்கள் கலந்து கண்களுக்கு மாறுபட்ட அழகை காட்டும் மலர் வகை இது.

சுபா

Robert Langdon is back..! -2

Inferno நூலை சிலர் வாங்கி வாசிக்க ஆரம்பித்திருக்கலாம். நூல் விமர்சனம் செய்ய இப்போது நான் விரும்பவில்லை. ஆனால் சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதும் வாசிப்பவர்களுக்கும் வாசிக்க நினைத்திருப்பவர்களுக்கும் உதவலாம்.

Dante Aligheri ஐ எப்படி இவரது துப்பறியும் பணிக்கு பயன்படுத்திக் கொண்டார் என ஆர்வம் தொடக்கம் முதல் இருந்தது. ஆரம்பத்திலேயே தொடர்பினை விளக்க ஆரம்பித்து விடுகின்றார். Dante Aligheriயின்   Divine Comedy நூலை இந்த நூல வாசிப்பதற்கு முன்னர் வாசித்திருப்பது அதிகம் சுவை கூட்டலாம். நான் வாசிக்க வில்லை. இனி தான் தேடவேண்டும். ஆனாலும் பிரச்சனையில்லை. தேவையான விஷயங்களை டான் ப்ரவுன் இந்த நூலிலும் கொடுத்து  விடுகின்றார்.



நூல் முழுக்க ரெனைசான்ஸ் கலைஞர்கள், அவர்தம் கலைப்படைப்புக்கள் பேசப்படுகின்றன. இதனைப்  படித்து விட்டு மீண்டும் ப்ளோரன்ஸ் போக வேண்டியது அவசியம். தனித்தனியாக போர்ட்டிசெல்லி, மைக்கல் ஆஞ்செலோ, வசாரி கலைப்படைப்புக்களை நுணுக்கமாக பார்த்து வாசிக்க வேண்டும்.

அவ்வப்போது என் தேடுதலுக்காக இன்னூலில் குறிப்பிடப்படும் கலைப்படைப்புக்களை ஓவியங்களை தேடிப்பார்க்கும் போது இங்கே அவற்றை பகிர்ந்து கொள்கின்றேன். என் காமெராவில் நான் நேராகச் சென்றிருந்த போது பதிந்தவையும் இருக்கின்றன. அப்போது அழகுக்காகவும் ப்ரமாண்டத்திற்காகவும் புகைப்படமாக பதிந்து வைத்தேன். இப்போது Inferno  படிக்கும் போது அதன் உள்ளே பதிந்திருக்கும் விஷயங்களையும் ஓரளவு அறிந்து கொள்ளும் போது புதிய பார்வை கிட்டுகின்றது.

சுவர்க்கத்திற்கு செல்வதற்கு முன்னர் நரகத்தின் பல படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்... :-)

சரி.. நூலை வாசித்ததில்... Divine Comedy  நூலில் உள்ள ஒரு பகுதி வருகின்றது.. எனக்குப் பிடித்திருந்தது. படித்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
The darkest places in hell
are reserved for those
who maintain their neutrality
in times of moral crisis.

:-))))

சுபா

எனக்கு ப் பொதுவாகவே கவிதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டு திரு.இன்னம்பூரான். ஆனாலும் இந்த நூலைத் தேட வேண்டும் என்று நினைத்திருந்தேன். காலையில் தேடியதில்  நூலின்  ஆங்கில வடிவம் pdf வடிவத்தில் கிடைத்தது.    http://www2.hn.psu.edu/faculty/jmanis/dante/dante-longfellow.pdf
தேவைப்படுபவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.

சுபா

The Divine Comedy  http://justcheckingonall.wordpress.com/2008/02/28/complete-dante-alighieris-divine-comedy-in-pdf-3-books/ இங்கே மூன்று தனி பிடிஎப் நூல்களாக படங்களுடன் இருக்கின்றது. 

சுபா