நம் சமூகத்தில் திருமணங்கள் பல்வேறு விதங்களில் நடைபெறுவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இதே தொடரிலேயே உ.வே.சா அவர்களின் திருமணத்தின் போது நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி முன்னர் நான் விவரித்திருக்கின்றேன். என் சரித்திரம் நூலில் இரண்டாவதாக மற்றுமொரு திருமணம் பற்றிய செய்தியும் ஓரளவு விளக்கப்படுகின்றது. அது மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் புதல்வன் சிதம்பரம் பிள்ளையவர்களின் திருமணம் பற்றிய செய்திகளே. இத்தகவல்கள் அத்தியாயம் 51ல் கிடைக்கின்றன.
சிதம்பரம்பிள்ளைக்குத் திருமணம் மாயூரத்திலேயே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இவருக்கு சீகாழி நகரிலிருந்த குருசாமி பிள்ளை என்பவருடைய பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். திருமண வைபவம் ஒரு ஜமீந்தார் வீட்டுத் திருமணம் போல அவ்வளவு ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற தகவல்களை உ.வே.சாவின் குறிப்புக்களின் வழி அறிகின்றோம். மாணவர் கல்வி, திருமடத்தின் சார்பு என திருவாவடுதுறை மடத்திலேயும் மாணவர்களுடனும் தன் பெரும்பாலான வாழ்க்கையின் பகுதியை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கழித்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நாம் தம் குடும்பத்தார் நலனையும் சிறிதும் மறக்காது தனது தகுதிக்கேற்ற வகையில் குடும்பத்தார் மனமகிழ தேவையான விஷயங்களையும் நலமே செய்திருக்கின்றார் என்பதை இக்குறிப்புக்களின் வழியாகக் காணமுடிகின்றது.
இத்திருமணத்திற்குத் திருவாவடுதுறை மடத்தின் ஆதீன கர்த்தர், மடத்தின் தம்பிரான்கள், மற்றும் பிள்ளையவர்கள் மேல் மதிப்பு கொண்டிருந்த பொருள் படைத்தோர் சிலரும் பொருளுதவி செய்திருக்கின்றனர். உ.வே.சா, சாவேரிநாதப் பிள்ளையும் சேர்த்து மாணவர்கள் சிலரும் பிள்ளையவர்களுடன் உதவிக்காக இத்திருமணத்தின் போது மாயூரம் சென்று தங்கியிருந்து திருமணம் முடியும் வரை உடனிருந்து உதவி செய்து வந்திருக்கின்றனர். ஆசிரியரின் குடும்பத்தில் இந்த மாணவர்கள் எல்லோரும் தங்களைப் பிணைத்துக் கொண்டனர் என்பதை இதனால் அறிய முடிகின்றது.
இப்போதெல்லாம் விதம் விதமான வகைகளில் திருமணப் பத்திரிக்கைகளை அச்சகங்கள் தயாரிக்கின்றன. இம்முறை தமிழகம் சென்ற போது காரைக்குடியில் இருக்கும் ஒரு நண்பரது அச்சகத்தில் வரவேற்பு அறையில் இருக்கும் திருமண அழைப்பு பத்திரிக்கைகளின் வகைகளையும் விதங்களையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். பல வடிவங்கள். அளவில் சிறியவை பெரியவை எனவும் பூவேலைப்பாடுகளுடனும் பல வர்ணங்களில் பாரம்பரிய ஓவியங்களுடனும் சில மேல்நாட்டு ஒவியங்களுடனும் என வெவேறு வகைகளில் இவை தற்சமயம் மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைகின்றன. அக்காலத்திலும் திருமண அழைப்பிதழ்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்திருக்கின்றது. பிள்ளையவர்கள் வீட்டுத் திருமண பத்திரிக்கைக்கு ஒரு கூடுதல் விஷேஷமும் இருந்திருக்கின்றது.
அதாவது உள்ளூரில் உள்ளவர்களுக்கு வீடு தேடிச் சென்று அழைப்பு செய்வார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்குப் பத்திரிக்கையுடன் கடிதமும் சேர்த்து அனுப்பினாராம் பிள்ளையவர்கள். அதில் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படும் தனித்தனிக் கடிதத்திலும் ஒரு பாடலை இணைத்தே கடிதம் தயாராகுமாம். இந்தக் கடிதத்தை எழுதும் பணி உ.வே.சாவிற்கு அமைந்தது. பிள்ளையவர்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் குணத்தை மதிப்பிடும் வகையில் இக்கடிதங்களையும் பாடல்களையும் உருவாக்கிச் சொல்ல அவற்றை உ.வே.சா எழுதியிருக்கின்றார்.
சிறப்பு விருந்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் என்ற நிலையில் ஒருவருக்கு மட்டும் பிரத்தியேகமாகப் பிள்ளையவர்கள் ஐந்து பாடல்களைச் சொல்ல உ.வே.சா அந்தக் கடிதத்தையும் எழுதினாராம்.
இந்தச் சிறப்புக்குறியவர் கல்லிடைக்குறிச்சியில் இருந்த திருவாவடுதுறை மடத்தின் ஆதீனத்தில் சின்னப் பண்டார சன்னிதியாக இருந்த ஸ்ரீநமச்சிவாய தேசிகர் தான்.
பிள்ளையவர்களுக்கு இவர்பால் தனி அன்பும் மரியாதையும் இருந்திருக்கின்றது. இந்தத் தேசிகர் சிறந்த கல்வி ஞானம் உடையவர் என்றும் , தமிழ் வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் என்றும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொண்டு பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கின்றார் என்றும் மிகுந்த திறமை உள்ளவர் என்றும் பிள்ளையவர்கள் விவரித்துக் கூறுவதை இந்த அத்தியாயத்தில் காண்கின்றோம். இந்தத் தேசிகர் திருநெல்வேலி நகரில் ஆதீனத்திற்குச் சொந்தமாக இருந்த பல கிராமங்களையும் கல்லிடைக் குறிச்சி அதனைச் சுற்றி இருந்த ஆதீனத்திற்குச் சொந்தமான கிராமங்களையும் நன்கு பராமரித்து வந்தவர் என்பதனையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. கல்லிடைக் குறிச்சியில் ஆதீனத்திற்குச் சொந்தமான ஒரு மடமும் அதனை ஒட்டிய கோயில்களும் இருப்பதாகவும், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆதீன கர்த்தராகப் பட்டம் பெறுவதற்கு முன்னர் சில காலங்கள் அங்கே சிறிய பட்டமாக இருந்து நிர்வாகித்து வந்தவர் என்ற குறிப்பையும் கூட அறிந்து கொள்ள முடிகின்றது. இதே நிலையில் ஆதினத்திற்குச் சொந்தமான கிராமங்கள் இன்னமும் இப்பகுதிகளில் இருக்கின்றனவா என்பது தெளிவாகத்தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
திருவாவடுதுறை மடத்தின் அக்காலத்திய மதிப்பையும் ஆளுமையையும் பிள்ளையவர்கள் உ.வே.சாவிற்குக் கூறுவதாக அமையும் இப்பகுதியை வாசிப்பதே அதன் அக்காலத்து நிலையை சரியாக விளக்க உதவும்.
" ஸந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருஷங்கள் அங்கே எழுந்தருளி இருந்தது. இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத்திலுள்ளவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும் சொல்வதுண்டு.”
“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவது போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.
“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும் சிஷ்யர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம் இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான சிவஸ்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு” என்று ஆசிரியர் உரைத்தார்."
திருமணம் சிறப்பாக நடைபெற்று முகூர்த்த தினத்தின் அன்று கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகியிருந்திருக்கின்றன. பாட்டுக் கச்சேரி, பரதநாட்டியம், விகடக் கச்சேரி, வாத்தியக் கச்சேரிகளெல்லாம் நடந்திருக்கின்றன. பரதநாட்டியத்தை ஒரு பெண்மணி ஆடிக் கொண்டிருக்கும் போது இடையிடையே அப்பெண்ணிற்கு அங்கு வந்திருந்த பொருள் படைத்த கணவான்கள் பணம் கொடுத்தனராம். இதனை நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார். உ.வே.சா. ஆசிரியர் கண்களிலிருந்து இது தப்புமா? :-)
இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர் என்ன செய்தார் என்பதை உ.வே.சா அவர்களே சொல்கின்றார்.
" பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம் கொடுத்தனர். அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச் செய்து என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச் சொன்னார். எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது; ஆனாலும், ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன். அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை இதனாலும் அறிந்து கொண்டார்கள்."
உ.வே.சா இப்பகுதியில் பரதநாட்டியம் ஆடிய பெண்ணை பெண்பால் என விளிக்கின்றார். அக்காலத்து எழுத்து முறையில் பெண்களைப் பெண்பால் எனக் குறிப்பிடுவது தான் வழக்கமாக இருந்தது போலும்!
தொடரும்...
சுபா

No comments:
Post a Comment