Tuesday, April 24, 2018

ரைன் நதிக்கரையில்

மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்..!
நெடுநாட்கள் காணாத ஏக்கத்தில்
என்னை வரவேற்க
பூக்களை அருகில் வைத்து
காத்திருக்கின்றாள்
ரைன் நதி.. என் தோழி!
குளிர் மறைந்து விட்டது
வசந்தம் வந்து விட்டது
இருள் அகன்று
ஒளி படர்கின்றது
சிலர் நடக்கின்றார்கள்
கப்பல்கள் பயணிக்கின்றன
நாய்களுடனும் பியர் பாட்டிலுடனும் ஓரிரு வீடுகளற்றோர்
குழந்தைகளை அழைத்துக் கொண்டு நடைபயிலும் இளம் தாய்மார்கள்
இவர்களுடன்
நானும் சேர்ந்து நடக்கின்றேன்
ரைன் நதியின் இயல்பான சலனத்தை ரசித்தபடி..!
-சுபா


Monday, April 23, 2018

சென்னை

சென்னை என்ற ஒரு நகரின் நலன் பற்றி கவலைப்படும் சென்னைவாசிகள் மிகக் குறைவு என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஒரு பெரு நகரம் வளர்ந்து வரும் நாகரிகத்தை உள்ளடக்கியதாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் வகையில் சென்னை இல்லை என்பதே உண்மை. தமிழகத்தின் தலைநகரம் என்ற பெருமையுடன் இருக்க வேண்டிய குணாதிசியங்கள் ஏதும் சென்னைக்கு இல்லை. குறிப்பாக:
1. தூய்மை எங்குமே இல்லை. குப்பைகள் குடியிறுப்புப் பகுதி, அலுவலக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் என எல்லா பகுதிகளிலும் நிறைந்து கிடக்கின்றன.
2.தரமான சாலைகள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றன. குடியிறுப்புகள் உள்ள பகுதிகளில் குண்டும் குழியுமாய் சாலைகள் உள்ளன.
3 குறிப்பிட்ட நேரத்தில் வருகின்ற பேருந்துகளோ, ரயில்களோ இல்லை. பேருந்துகளுக்காக ஒரு தனி சாலையை அமைக்கலாம்.
4. சென்னையில் பசுமையைப் பாதுகாக்கவும் பறவைகளின் நலனைப் பேணவும் அதிகமாக சாலைகளில் மரங்கள் நடவேண்டும். இருக்கின்ற மரங்களைக் கூட சரியாகப் பேணவில்லை.
5. மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் விழுந்து கிடக்கின்றன.
6. சாலையோரத்தில் வாழும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வாழ அரசு உதவ வேண்டும். இவர்களை ஒரு பொருட்டாக யாரும் கவனிக்கின்றார்களா என்றே தெரியவில்லை.
7. சென்னையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சின்னங்களும் கட்டிடங்களும் சிதைந்து கிடக்கின்றன. அவற்றை பாதுகாக்கும் உடனடி நடவடிக்கை தேவை.
8. சென்னையில் மிகக் குறைந்த அளவில் தான் அருங்காட்சியகங்கள் உள்ளன. சென்னையில் மேலும் பல அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
9. சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் எங்கெங்கு உள்ளன என்ற குறியீட்டுப் பலகைகள் ஒன்றை கூட நான் சாலைகளில் காணவில்லை. தலைநகர் என்றால் இத்தகைய தகவல்கள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும்.
எனது அவதானிப்பில் சென்னையில் மிக அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் குடியேறிவிட்டனர். விரைவில் சென்னை தமிழ் மொழியை இழந்து இந்தி மொழி பேசும் நகரமாக மாறி விடுமோ என்ற ஐயம் எனக்குள்ளது. கடைகளுக்கும் உணவகங்களுக்கும் செல்வோர் அவர்களிடம் தமிழ் பேச வேண்டும். ஆனால் பலர் அவர்களுக்குப் புரிய வேண்டுமென்று இந்தி பேசுவதைக் காண்கின்றேன். இங்கு ஜெர்மனிக்கு உழைக்க வருவோர் ஜெர்மன் மொழி தான் பேசவேண்டும். உள்ளூரில் உள்ளவர்கள் நமக்காக நம் மொழியைக் கற்றுக் கொண்டு பேசுவதில்லை. அதனால் தான் இன்று வரை ஐரோப்பிய நாடுகள் தங்கள் தாய்மொழியை பலமாக வைத்திருக்க முடிகின்றது. நாமும் இதனை யோசிக்க வேண்டும் அல்லவா..?
-சுபா