Thursday, November 12, 2015

JK's Letters to the Schools - 13


" Our consciousness is a complexity but its very substance is movement. This must be clearly understood - that we are not dealing with theories, hypotheses, ideals, but with our own actual daily existence......" - by J.K. 

J.K.  அவர்கள் 15 October 1982 அன்று எழுதிய ஒரு கடிதம் இது.  'Letter to the Schools"  நூலில் அடங்கும் கடிதத்தின் இரு வரிகள். அதனை வாசித்த போது எழுந்த  எனது சிந்தனைகள் தமிழில் தொடர்கின்றன.


பிம்பங்களை விட்டு விலக முடியாத பிரச்சனை என்பது தான் நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் அனுபவிக்கும் பல உளப் பிரச்சனைகளுக்கு அடித்தளம் அமைப்பதாக அமைகின்றது. இளம் வயது தொடங்கி தொடர்ச்சியாக பிம்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதனை பத்திரப்படுத்தி வைத்து, அவற்றை ஆராதனை செய்து வளர்க்கும் மனம் மிக எளிமையாக பிம்பங்களுக்குள்ளேயே சுகமாக தன்னை புதைத்து வைத்துக் கொள்ளவே விரும்புகின்றது. 

பிம்பங்கள் அகன்ற ஒரு நிலையில் ஒன்றைக் காண்பது என்று ஒன்று இருக்கின்றது. இன்னிலை என்பது, ஒவ்வொன்றையும், அதாவது ஒவ்வொரு பொருளையும் அதனை அதன் தன்மை கெடாதவாறு, அதன் இயற்கைப்படியே அவ்வாறே காண்பது. அதாவதுஉள்ளதை உள்ளவாறு காண்பது. 

நம் உணர்வுகள் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது.  இந்த இயங்கு தன்மையில் சிந்தனை செய்தல், முடிவெடுத்தல்,  கருத்தினை எதிர்கொள்தல், கருத்தினை உள்வாங்குதல், கருத்தினைப் பிரசவித்தல் என்பன அடிப்படையாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கருத்துக்களின் ஒப்பீடுகள் என்று வரும் போது ஒரு கருத்தை ஏற்று, அதனைச் சீர்தூக்கிப் பார்த்து, அலசி, காரண காரியங்களை உட்புகுத்தி ஒரு தொடர்ச்சியான சுழற்சியை நம் மனம்  நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. இந்த  அனுபவம் என்பது மனித உள்ளத்தில் விழிப்பு நிலையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயல்பாடாகவே இருக்கின்றது. நான் சும்மா இருக்கின்றேன் எனச் சொன்னாலும் கூட, அந்நிலையில் நம் உடல் அசைவுகளைக் குறைத்த நிலையில்  இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் சிந்தனைகளின் தொடர்ச்சி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

நம் சிந்தனை நமக்கு தெளிவைத் தரும் வகையில் அமைய வேண்டுமென்றால் அடிப்படையில் பிம்பங்களை நாம் கையாளும் முறையில்  சில உத்திகளைச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. நம் சிந்தனையில் நாம் பதிந்து வைக்கும் பிம்பங்கள் பற்றி அவ்வப்போது மீள்பார்வை செய்வது நமது சிந்தனை தெளிவிற்கு நல்ல பயிற்சியாக அமையும். 

இவ்வுலக இயற்கை நமக்குக் காட்டுவது மாற்றம் என்ற ஒன்றைத்தான். 
மாற்றம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் கணம் கணம் நிகழ்ந்து கொண்டேயிருப்பது.  இப்படி புறத்தே நிகழ்கின்ற மாற்றங்களைச் சரியாக உள்வாங்கி  நம் உள்ளத்தில் பதிந்துள்ள பிம்பங்களையும் தொடர்ச்சியாக அப்க்ரேட் செய்து கொள்வது தான்  சிந்தனையின் ஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும். இந்த பிம்பங்களை அணுகும் போது தியரிகளை மட்டும் வைத்துக் கொண்டோ, நாம் சிறந்தது என நினைக்கும் சித்தாந்தங்களை  மட்டும் அடிப்படையாக அமைத்துக் கொண்டோ செயல்படுவது என்பதை விட உலகில் நம் கண்முன்னே நிகழும் மாற்றங்களை அதனதன் தன்மைக்கேற்ப உள்வாங்கி அதனை சீர்தூக்கி அலசுவது தெளிவினை நோக்கிய சிந்தனையின் பயணத்திற்கு வழி ஏற்படுத்தும்.

எந்த மாற்றங்களையும் செய்து கொள்ளாது என்றோ ஆழ்மனதில் பதிந்து வைத்த பிம்பங்களையும் சித்தாந்தங்களையும்  நமது சிந்தனைகளின் அடித்தளமாக அமைத்துக் கொண்டு மட்டும் இயங்கி கொண்டிருந்தால், நிகழ்காலத்தில் வாழாத நிலையை அடைவதும், அதனால் உளச்சிக்கல்கள் ஏற்படுவதும்,  அது நம் மனதிற்குத் தேவையற்ற கலக்கங்களையும், விரக்தியையும், அதிருப்தியையும்  வழங்குவதாகவே அமையும். 

தடைகளை நாமே திணித்துக் கொள்ளாமல், பிம்பங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டிராமல், சிந்தனையைச் சுதந்திரமாக செயல்பட விட்டு அதில் கிடைக்கின்ற தெளிவினை அனுபவிப்பது மனதிற்கு சுகமான அனுபவம். நம் சிந்தனை சுகமான அனுபவமாக அமையட்டுமே!.

-suba

Wednesday, September 23, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 8

வாசிப்பின் பகுதி 8


ஒரு சிறந்த ராஜ்ஜியத்தில் மன்னர் எப்படியிருக்க வேண்டும்? கலைஞர் எப்படி இருக்க வேண்டும்? மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? விவசாயி எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையில் சாக்ரடீஸ் நடத்தும் உரையாடல் தொடர்கின்றது.

ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் ஏனோ தானோவென்று அவரவர் வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு சென்று விடக் கூடாது. நாடு என்னும் இயந்திரம் சீராக இயங்க ஒவ்வொருவரும் தமது கடமையைச் சீராகச் செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் தமது திறனுக்கேற்ற பொறுப்பை எடுத்துக் கொண்டு, அதில் தகுந்த பயிற்சியைப் பெற்று, அந்தப் பொறுப்பை சிரத்தையுடன் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் மனதை சீராக வைத்திருக்க வேண்டும். மனதை சீராக வைத்திருப்பது போலவே உடல் பயிற்சிகளைச் செய்து செய்து உடலையும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும்.

சீரில்லாது தீய உணவு பழக்கத்தால் உடல் நலனைக்  கெடுத்துக் கொண்டு நோயில் வீழ்ந்து அந்த நோயைப் பற்றியே தினமும் நொடிப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பது நாட்டிற்குக் கேடு. ஆதலால் உடலையும் மனத்தையும் மிகச் சீராக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை..

இப்படி தொடர்கின்றது சாக்ரடீஸின் கருத்துக்கள்.

ஒரு ராஜ்ஜியத்தைக் காவல் செய்கின்ற மன்னரும் அவரது அதிகாரிகளும் தனித்திறமையுடன் பிறப்பவர்கள். இத்தகையோர் அவரவர் திறமைக்கேற்ப கண்டெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசியலில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இப்படி அளிக்கப்படும் பயிற்சியானது அவர்களுக்கு பலவகைப்பட்ட சோதனைகளை அளிப்பதாகவும், அவர்களைக் கடமையில் கண்ணும் கருத்துமாக கவனமாக இருக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் என்பது தனிமனித சுயனலத்தையோ அல்லது தான் சார்ந்திருக்கும் குமுகத்தையோ முற்றிலும் ஒரு நோக்கமாகக் கருதாத ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட வகையில் அமைந்ததாக இருக்க வேண்டும் என்ற  கருத்தை முன் வைக்கின்றது மூன்றாம் நூல்.

நாட்டு மக்களிடம் சென்று  நேராக சில கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொண்டு உடனே  ஒப்புக் கொள்ள மாடார்கள். ஆகையால் மக்களை அணுக சில கதைகளைச் சொல்ல வேண்டும். எளிமையான அக்கதைகளைக் கேட்பதன் வழி  அவர்கள்  ஒரு நாட்டினை செம்மையாக ஆட்சி செய்ய வேண்டிய அரசு இயலின் தத்துவங்களைப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க உதவும் என்ற கருத்தை மனதில் கொண்டு  இப்பகுதியில் உரையாடல் வளர்கின்றது. அதில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

ஸாக்ரடீஸ்: "இந்த ராஜ்யத்திலே வசிக்கிற நீங்களெல்லோரும் சகோதரர்கள். ஆனால் கடவுள் உங்களைச் சிருஷ்டிக்கிற போது, யாரிடத்தில் ஆளும் யோக்கியதை இருக்கிறதோ அவர்களிடத்தில் தங்கத்தை நிரப்பி வைத்திருக்கின்றார். அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் மரியாதை செலுத்த வேண்டும். அப்படியே போர் வீரர்களிடத்தில் வெள்ளியையும், விவசாயிகள் - தொழிலாளர்கள் முதலியோர்களிடத்தில் இரும்பையும் செம்பையும் முறையே நிரப்பி வைக்கின்றார். உங்களைப் போல் உங்களுடைய குழந்தைகளும் இருப்பது சகஜமே. அரசர்கள் போர் வீரர்கள், விவசாயிகள் - தொழிலாளிகள் முதலியோர், ஒரே மண்ணிலிருந்து உற்பத்தியானவர்களாதலினால், அதாவது சகோதரர்களாதலினால், தங்கத்திடமிருந்து வெள்ளியும் அல்லது வெள்ளியிடமிருந்து தங்கமும் முறையே  பல வகையாக மாறி மாறித் தோன்றுவது இயற்கைதான். இதனால் கடவுள் அவர்களுக்கு விதித்திருக்கிற கண்டிப்பான கட்டளையென்னவென்றால், ராஜ்யத்திலே பிறக்கிற எல்லாக் குழந்தைகளின் விஷயத்திலும் நீங்கள் அதிகமான கவனஞ்செலுத்த வேண்டும்.

யாருடைய ஆத்மாவில் என்னென்ன உலோகம் கலந்திருக்கிறதென்பதை நீங்கள் நிதானித்துப் பார்க்க வேண்டும். உங்களுடைய சொந்த குழந்தைகளிடத்திலேயே இரும்பும் செம்பும் கலந்திருக்குமானால், அதாவது, விவசாயியாக இருக்கவோ அல்லது  தொழிலாளியாக இருக்கவோ கூடிய யோக்கியதைகளுடன் அவர்கள் பிறப்பார்களானால், கொஞ்சம் கூடத் தயை தாட்சண்யமின்றி அவர்களை விவசாயிகளின் கூட்டத்தில் சேர்த்து விட வேண்டும். அப்படியே விவசாயிகள் - தொழிலாளிகள் குடும்பங்களில் அரச தன்மைகளுடனோ குழந்தைகள் பிறப்பார்களானால் அவர்களை, அந்தப் பிரிவுகளில் முறையே சேர்த்துவிட வேண்டும். அதாவது அவர்களை அரசர்களாகவும், போர் வீரர்களாகவும் முறையே நியமிக்க வேண்டும்.

ஒரு ராஜ்யத்தை இரும்போ செம்போ காவல் செய்யுமானால், அதாவது விவசாயிகளோ அல்லது தொழிலாளர்களோ ஆட்சி புரிவார்களானால், அந்த ராஜ்யம் விரைவிலேயே அழிந்து போகும்"  என மக்களுக்கு உபதேசித்து மக்களை நம்பச் செய்ய வேண்டும்.

தொடரும்.
சுபா

Monday, September 21, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 85

உ.வே.சாவிற்குத் திருவாவடுதுறை மடத்திலிருந்து புறப்பட்ட நாள் மனதில் மறக்க முடியாத கவலையை உண்டாக்கியதை மறுத்து விட முடியாது, என் சரிதத்தில் அவர் இந்த நிகழ்வை குறிப்பிடும் காட்சியை வாசிக்கும் போது வாசகர்களாகிய நமக்கே அவர் திருமடத்தை விட்டுப் போகாமல் இருந்து விடக் கூடிய வகையில் ஏதும் நிகழாதா என்று எண்ணும் அளவிற்கு மனம் செல்கின்றது. மடத்தின் ஒவ்வொரு இடமும்  மனதில் ஒரு புள்ளியைத் தொட்டு அவை ஒவ்வொன்றும் அவருக்கு அளித்த அனுபவங்களை நினைக்க வைத்து, அவரை சோகக் கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வே அங்கு நடந்து கொண்டிருந்தது. 

சக மாணவர்களுடன் படித்த இடங்கள், புத்தகக் கட்டுக்கள், மடத்தின் சில மூலைகள் என ஒவ்வொன்றும் அவருக்கு இனிய நினைவுகளை மட்டும் நிழல் படம் போல மணக் கண்ணில் கொண்டு வந்து காட்டி சித்திரவதை செய்யத் தொடங்கி விட்டன. அவரது மனம் வாடியதை இப்பகுதியை வாசிக்கும் போதே வாசகர் ஒவ்வொருவரும் உணர்வோம். ஓரிரு வரியில் அவர் தன்னிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

" “அவை ஜடப் பொருள்களல்லவா? அவற்றின் மேல் அவ்வளவு பற்றிருப்பது பைத்தியகாரத் தனமல்லவா?” என்று பிறருக்குத் தோற்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்திலே இருந்தது. அங்குள்ள பொருள்களைப் பிரியும்போது உலகத்தையே பிரிவது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது. "

பிரிய மனமில்லாமல் திருவாவடுதுறை மடத்தைப் பிரிந்து அவ்வூரில் இருக்கும் புகை வண்டி நிலையம் வந்து  அங்கிருந்து தனது உறவினர் கணபதி ஐயரென்பவருடன் புறப்பட்டு கும்பகோணம் போய்ச் சேர்ந்தார்.

கும்பகோணத்தில் தியாகராச செட்டியார் இல்லத்தை வந்தடைந்தார். இவ்வளவு சீக்கிரம் தேசிகர் அனுப்பி வைத்து விட்டாரே என்று தியாகராச செட்டியாருக்குப் பெரும் அதிசயம். அவரை வரவேற்று உபசரித்து தன் வீட்டிலேயே தங்க வைத்தார். மறு நாள் காலை தனது வீ​ட்டிலிருந்த ​ 100 புத்தகங்களை எடுத்துக் கொண்டு உ.வே.சாவையும் அழைத்துக் கொண்டு அவரது கல்லூரி பேராசியர்களுகு அறிமுகம் செய்து வைக்க அழைத்துச் சென்றார். கல்லூரி முதல்வருக்கு அடுத்த நிலையிலிருந்த ஸ்ரீநிவாசய்யர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்குத் தனது தேர்வு எத்தகையது என்று சொல்லி சரியான அறிமுகத்தை உ.வே.சாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற தீராத ஆவல் தியாகராச செட்டியாருக்கின் இருந்தது.

100 நூல்களுடன் சென்ற இவர்கள் இருவரையும் பார்த்த ஏனைய ஆசிரியர்களுக்கு முதலில் ஆச்சரியம்.  இந்த நிகழ்வை உ.வே.சா இப்படி விவரிக்கின்றார். 

" புறத்தே சென்றிருந்த சேஷையரும் வந்து விட்டார். வந்தவுடன் தமது மேஜையின்மேல் உள்ள மூட்டைகளைக் கவனித்து, “இவை என்ன?” என்று கேட்டார்.
“எல்லாம் தமிழ்ப் புஸ்தகங்கள்” என்றார் செட்டியார். பிறகு என்னையும் அறிமுகம் செய்வித்தார்.
வந்த ஆசிரியர்களுள் ஒருவர் “தமிழ்ப் புஸ்தகங்கள் இவ்வளவு உள்ளனவா?” என்று கேட்டார்.
செட்டியார், “இன்னும் எவ்வளவோ உண்டு. அச்சில் வாராத ஏட்டுப் புஸ்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன” என்று கூறி அவருடைய
வியப்பைப் பின்னும் அதிகமாக்கினார்.

வேறொருவர், “இவை என்ன என்ன புஸ்தகங்கள்? எதற்காக இவ்வளவு?” என்று கேட்டார். "

இந்த உரையாடல் அக்காலத்தில் படித்த ஆசிரியப் பெருமக்கள் மத்தியிலும் கூட விரிவான புத்தக வாசிப்பு, அறிமுகம் ஆகியன இல்லாத குறை இருந்தமையைக் காட்டும் உதாரணமாக அமைகின்றது. இக்காலத்தில் தான் பல ஆசிரியர்கள் பொது நூல்கள் வாசிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று புலம்புகின்றோம் என்னும் நிலை என்றில்லாமல் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட ஏறக்குறைய இதே நிலைதான் இருந்திருக்கின்றது என்பது கண்கூடு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா, தியாகராச செட்டியார், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோரெல்லாம் நூல் வாசிப்பிலும், வாசித்ததைச் சிந்திப்பதிலும், புதிய இலக்கியம் படைத்தலையும், மாணாக்கர்களுக்குத் தமிழ்க்கல்வியை மிகுந்த  அக்கறையோடு   அறிமுகப்படுத்தியவர்கள் என்ற பெருமையைப் பெறுபவர்கள். அதனால்தான் இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் கூட நாம் இவர்களை மதிக்கின்றோம். இவர்கள் காலடிச் சுவற்றில் ஏனைய ஆசிரியர்களும் வரவேண்டும் என விரும்புகின்றோம்.

மறுநாள் கல்லூரி முதல்வர் கோபால்ராவ் அவர்களுக்கு உ.வே.சாவை அறிமுகம் செய்து வைத்தார் தியாகராச செட்டியார். சிறிய உரையாடலுக்குப் பிறகு தியாகராச செட்டியார் வகித்து வந்தப் பதவியை உ.வே.சாவிற்கு வழங்க சம்மதித்து அடுத்த திங்கட்கிழமை முதலே பணி தொடங்கலாம் என்ற உத்தரவையும் வழங்கினார் கல்லூரி முதல்வர். 

சிலர் சில வேளைகளில் நம்மை நோக்கிச் சொல்லும் வாசகங்கள் நம் மனதிலிருந்து மறையாது. அச்சொற்கள் நம் உணர்வுகளை ஏதாகினும் வகையில் பாதிக்கும் வகையில் அமைந்திருந்தால் இவ்வகை நிலை  ஏற்படுவது வழக்கம். ஆழ்ந்த மகிழ்ச்சி, ஆழ்ந்த கவலை, திகில், போன்ற உணர்வுகளோடு கலந்து வரும் சில சொற்கள் நம் மனதில் நீண்ட நாள் மறையாமல் இருக்கும் சக்தி கொண்டவை. உ.வே.சாவின் மனதில் தனது முதிய வயதிலும் சில சொற்கள் ஒலித்துக் கொண்டிருந்தனவாம். அதனை இப்படி விவரிக்கின்றார் உ.வே.சா.

"வருகிற திங்கட்கிழமை முதல் இவர் காலேஜில் வேலை பார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப் போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல வருஷங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது."

கும்பகோணம் காலேஜில் பணியில் இணைய ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் தேசிகர் சம்மதம் தெரிவித்த வேளையிலிருந்து தனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் அமைகின்றது என்ற எண்ணம் உ.வே.சா அவர்கள் மனதில் எழுந்திருக்க வேண்டும். கல்லூரியின் ஏனைய ஆசிரியர்களின் தொடர்ந்த பாராட்டு, தியாகராச செட்டியாரின் ஆர்வம் ஆகியவை அவர் மன நிலையை அச்சம் கலந்த  நிலையிலிருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த வேளையில்  கல்லூரி முதல்வர் கோபால் ராவ் அவர்களில் பணி உத்தரவு அம்மகிழ்ச்சியை நிலையான மகிழ்ச்சியாக உறுதி செய்தது. தனிப்பட்ட வகையில் தனது திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் அது என உ.வே.சா மனதில் தோன்றிய அக்கணங்கள் நினைத்துப் பார்த்தாலே உயிர் பெற்று நிலவும் வகையில் அவரது இறுதி காலம் வரை மனதை விட்டு அகலவில்லை.

தொடரும்..

சுபா

Thursday, September 17, 2015

குடியரசில் பெரியார் உடன்....! - 12


20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால தமிழகத்தின் நிலமை என்பது பல திருப்புமுனைகளைக் கொண்டது. மக்கள் வாழ்க்கையில் பன்முக மாற்றங்களை எதிர்கொண்ட காலகட்டம் அது. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்ற வேட்கை ஒரு புறம். சமதர்மம் பேனப்பட வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம். எல்லோருக்கும் சாதி வேறு பாடு இன்றி கல்வி தேவை என்ற சிந்தனை ஒரு புறம். பெண்களுக்குக் கல்வி என்ற முழக்கம் ஒரு புறம்,.... என  பலவகை சமுதாய மாற்றங்களை தமிழகம் இந்த 20ம் நூற்றாண்டில் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தமிழகத்தின் சமூக, சமய, அரசியல்  நிலைத்தன்மைகள் அமைந்திருக்கின்றன.

ஒரு சில விடயங்களை உற்று நோக்கும் போது படிப்படியான வளர்ச்சியைக் காணமுடிகின்றது. உதாரணமாக பெருமளவில் பெண்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்வதும் பலதரப்பட்ட தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதையும் நல்லதொரு வளர்ச்சியாகக் காண்கின்றோம். சாதி வேறுபாடு எனும் விடயத்தை எடுத்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டோர் என்றும் தாழ்த்தப்பட்டோராகவே இருக்க வேண்டும் என்ற எழுதா சட்டத்தை வலியுறுத்தும் எண்ணம் பரவலாக மாறவில்லை என்பதைக் காண்கின்றோம்.

நாட்டின் சுதந்திரத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய பெரியோரை வாழ்த்திப் பாடிய இளைஞர்கள் குறைந்து சினிமா பிரபலங்களுக்காக விழா எடுத்து பார்ட்டி கொடுத்து அவர்கள் பெருமையை தன் பெருமையாக நினைத்து வாழும் இளைஞர்கள் பெருகி இருப்பதைக் காண்கின்றோம். மது ஏழை பணக்காரன், ஆண் பெண்,வயதானோர், இளையோர், குழந்தைகள் என ஒரு அளவில்லாத வகையில் எல்லா தரப்பினரையும் பாதிக்கின்ற ஒரு விடயமாகிப் போய்விட்ட  அவலத்தையும் காண்கின்றோம்

பொதுவாகக் கல்வி வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு என எடுத்துக் கொண்டால் பல அடுக்கு ஊழல்களால் மக்கள் நலன் என்பது ஓரம் தள்ளப்பட்டு தரம் குறைந்த வகையிலேயே கல்விக்கூடங்கள் இயங்குவதையும், கிராம நல மேம்பாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் இருப்பதையும்  காண்கின்றோம்.

பேச்சுரிமை என்பது எந்த அளவிற்கு நடப்பில் உள்ளது என்பதும் கேள்விக்குறி. நியாயமற்ற செயல்பாடுகளை கேள்வி கேட்டு நியாயத்திற்காகப் போராடும் உயர் அதிகாரிகளும் சரி பொது மக்களும் சரி எண்ணிக்கையில் குறைந்து தான் இருக்கின்றனர். திரு.சகாயம் IAS  போன்றோர் என்ணிக்கையில் குறைந்து தான் உள்ளனர். சூழலுக்கு ஏற்றவாறு ஊழலையும் ஏற்றுக் கொண்டு, அநீதிகளையும் ஏற்றுக் கொண்டு, பொய்மையையும் ஏற்றுக் கொண்டு அந்தச் சிக்கலுக்கு இடையே தன் நலன், தன் குடும்ப நலன் என்ற ஒன்றினை மட்டுமே முன்னிலைப் படுத்தி இயங்கும் நபர்களே திறமையானவர்கள் என அடையாளம் காணப்படும் நிலைமை இருக்கும் கால கட்டம் இது. பலருக்கு மனதில் நியாயம் என்று தோன்றியதைச் சொல்வதில் அச்சம். பிறர் தன்னைப் பற்றி என்ன நினைத்து விடுவார்களோ என்ற கலக்கம். 

திரு.ஈ.வே.ரா அவர்கள் தன் மனதில் பட்ட விசயத்தை வெளிப்படையாகக் கூறுவதில் தயங்கியவரில்லை என்பதை அவரது எழுத்துக்களை வாசிப்பவர்கள் அறிவார்கள். உதாரணமாக 1932ம் ஆண்டு வெளி வந்த குடியரசு இதழில் அவரது இலங்கையில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவத்தைக் குறிப்பிடலாம்.

​கொழும்பில் ஈ.வெ.இராமசாமி

...விஷயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். பார்த்து அதற்கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.

நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்டகாலம் மலையேறிவிட்டது. சுய அறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது.

நாம் எண்ண வேண்டியது, ஆராய வேண்டியதெல்லாம் முன்னேயே எமது ஆன்றோரால் ஆய்விட்டது என்று நீங்கள்  கொள்ள வேண்டாம். நான் சொல்லுவது முற்றும் சரியென்றும் நீங்கள் கொள்ள வேண்டாம். எதையும் ஆராய்ந்து உண்மை தேறிக்கொள்லுங்கள்.

எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்ம கர்த்தாவாகவிருந்து, அக்கோயிலின் கிரமங்களை யெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்கு தேசாபிமானம் இல்லையென்றும் நீங்கள் சொல்ல வேண்டாம். ஒரு தடவைக்கு மூன்று நான்கு தடவை தேசிய விஷயமாக ஜெயிலுக்கு சென்றேன். ஆனால் இந்த அபிமானமெல்லாம் நம் ஏழைச் சகோதரருக்கு விமோசனம் கொண்டுவராது. ஆதலால் தான் அபிமானமொன்றும் நமக்கு வேண்டாம். மனுஷாபிமானமே வேண்டுமென்று ஜனங்களுக்கு நான் எனக்கு தோன்றிய வரை போதிக்கத் தலைப்பட்டேன். சோம்பேறி ஞானமும், மதாபிமானமும் பசி கொண்ட மகனுக்கு அவன் பசியைத் தீர்க்குமா? எண்ணத்துக்குச் சுதந்திரம் கொடுங்கள். மனுஷாபிமானத்தையும், சுயமாரியாதையையும் காப்பாற்றுங்கள் ஏழைகளின் கஷ்டத்திற்கு நிவாரணந் தேடுங்கள்.

-குடி அரசு சொற்பொழிவு - 30.10.1932

அன்புடன்
சுபா

Sunday, August 30, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 84

வாழ்க்கையில் பிரிவு என்பது வரும் போதுதான் நாம் இதுவரை இருந்து கொண்டிருக்கும் நிலையும் அதில் நம்மோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தோரின் நல்ல பண்புகளும் அவர்கள் நமக்காகச் செய்த நல்ல விசயங்களும் மனதில் வந்து முதன்மை இடத்தை பிடித்துக் கொள்ளும். இத்தனை நாள் அந்தக் குற்றம், இந்தக் குறை, அவர் இதைச் செய்தார், இவர் இதைச் செய்தார் என்று குறைகளை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து நம் மனதை மயக்கிய பண்புகள் அந்த கணத்தில் ஓடி ஒளிந்து கொண்டு,  அன்று தான் ஏதோ ஒரு வகையில் புதிதாக வேறொரு கண்ணோட்டத்தில் இதுவரை நாம் இருந்த சூழலையே மீள்பார்வை செய்ய வைத்து விடும். இது தான்  நம் மனத்தின் இயல்பான பண்பு. பலர் இதனாலேயே மாற்றங்களை வாழ்க்கையில் வரவேற்பதில்லை. 

பழகிய இடம், பழகிய மனிதர்கள், பழகிய உறவுகள், பழகிய நிமிடங்கள்......
இவை அனைத்தும் பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ... ஏதோ ஒரு வகையான பாதுகாப்பை பழகிய இவைகள் தருவது போன்ற ஒரு பிரமை நம் எல்லோருக்கும் மனதில் இருப்பதுதான்!

ஆயினும், வாழ்க்கையில் சில கால கட்டங்களில் நம் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள், அவை வலிந்து ஏற்படுத்தும் பிரிவுகள்என்பன அடுத்த ஒரு புது உலகத்தின் கதவுகளை நம் பயணத்திற்காகத் திறந்து வைத்திருக்கின்றன என்பதை நாமே நமக்கு நினைவு படுத்திக் கொள்வது மட்டுமே நாம் மன தைரியத்தோடு,  இந்த மாற்றமும் பிரிவும் நமக்குத் தருகின்ற மன சஞ்சலத்தை கடக்க னமக்கு உதவும். மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அது சில வேளைகளில் இருக்கின்ற இருப்பிலிருந்து ஒரு பிரிவினை ஏற்படுத்தினால்ம் அதனையும் ஏற்றுக் கொள்வது என்பது வலியைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அவையும் கடந்து போகும். 

கடந்து போகும் போது மனம் இன்னமும் பக்குவபட்டிருக்கும். நமது தனித்துவத்துடன் கடமையாற்ற இந்த மனப்பக்குவம் நம்மை தயார்படுத்தியிருக்கும் என்ற நிலையை உணரும் போது நாம் கடந்து வந்த பாதையில் நாம் அனுபவித்த வலிகள் நம்மை நாமே பெருமை படக் கொள்ளச் செய்வனவாக இருக்கும் என்பதை நான் நம்புகின்றேன்.

உ.வே.சா அவர்கள் திருவாவடுதுறை திருமடத்திலிருந்து கும்பகோணம்  கல்லூரியில் தமிழ் ஆசான் பதவிக்கான பொறுப்பெடுத்துக் கொள்ள ஆதீன கர்த்தர் சுப்ரமணிய தேசிகரிடமிருந்து ஆசியும் சிபாரிசுக் கடிதமும் கிடைத்த நாளில் உ.வே.சா மட்டுமல்லாது மடத்தில் இருந்த அனைவருக்குமே இது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகவே இருந்தது. தேசிகரிடம் அணுக்கமாக இருந்த சிலர் அன்று இரவே இது மடத்திற்கு நல்லதல்ல என தேசிகரிடம் குறிப்பிட்டு இதனை தவிர்க்க எடுத்த முயற்சிகள் எவையும் வெற்றியடையவில்லை.

தன் நலம்.. தான் சார்ந்திருக்கும் மடத்தின் நலன் என்று மட்டும் நினைப்பவரல்ல சுப்ரமணிய தேசிகர். 
பொதுவாக சில நல்ல விசயங்கள் நடக்க வேண்டும். அதனை சாத்தியப்படுத்த இதுவே சிறந்த முடிவு என்று அவர் மனம் உறுதியாக இருந்தது. மாலையில் மீண்டும் தேசிகரிடம் இது குறித்து நவசிவாய தேசிகர் பேசிப்பார்த்தார். ஆனால் தேசிகரின் இதற்கான பதில்என்னவாக இருந்தது என்பதை குறிக்கும் வகையில் அங்கு நடந்த  உரையாடலை இப்படிப் பதிகின்றார் உ.வே.சா.

"நமசிவாய தேசிகர் கூறியதைக் கேட்ட ஆதீனத் தலைவர் தம் கருத்தைத் தெளிவாக்கலானார். “நீர் சொல்வது சரியே; அவரால் மடத்துக்கு
எவ்வளவு உபயோகம் உண்டென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அவருடைய நிரந்தரமான நன்மையைக் கருதியே இதற்கு நாம் சம்மதித்தோம். இங்கே நாம் உள்ள வரைக்கும் அவருக்கு ஒரு குறைவும் நேராது. காலம் ஒரே மாதிரி இராது. நம் காலத்திற்குப் பிறகு அவரிடம் நம்மைப்போலவே அன்பு செலுத்திப் பாதுகாப்பார்களென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. யாரேனும் ஒருவர் இங்கே திடீரென்று தோன்றி, ‘இவர் சொல்லுகிற பாடத்தை நானே சொல்கிறேன். இவருக்குச் சம்பளம் கொடுப்பது அனாவசியம்’ என்று சொல்லக்கூடும். பிறகு அவர் என்ன செய்வார்! இந்தமாதிரி இடங்களில் பல பேருடைய தயை இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். தலைவர் முதல் உக்கிராணக்காரன் வரையில் எல்லோருடைய பிரியத்தையும் ஒருவர் பெற்று இருப்பதென்பது அருமையிலும் அருமை. நம்மால் ஆதரிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சௌக்கியமாக இருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதனால் சாமிநாதையர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் பிறகு அவருடைய விருத்திக்கு ஒரு குறைவும் நேராதென்று எண்ணியே அவரை அனுப்பலானோம். அவர் சௌக்கியமான நிலையில் இருப்பதை நாம் இருக்கும்பொழுதே கண்ணாற் பார்த்து விட வேண்டும்” என்றார். "

முதல் நாளே உ.வே.சா. தியாகராச செட்டியார் வந்துவிட்டுப் போனதையும் அவர் கொண்டு வந்து கொடுத்த புதிய செய்தியையும் தன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனால் குடும்பத்திலும் இந்த நிலை ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. மறு நாள் காலையில் உ.வே.சா திருமடத்தை விட்டு என்று புறப்படுவது சரியாக இருக்கும்?  என்ற கேள்வி எல்லோருக்குமே மனதில் இல்லாமலில்லை. கட்டளை என்றைக்கு அமையுமோ என்ற வருத்தம் கலந்த எண்ணமே அங்கிருந்தோர் அனைவர் உள்ளத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. அன்று காலை சோதிடம் பார்த்த தேசிகர் அன்றைக்கு மாலையே நல்ல நேரமாக இருப்பதை அறிந்து அன்று மாலை உ.வே.சா கும்பகோணம் புறப்படுவது தான் நல்ல சகுணமாக அமையும் என முடிவெடுத்தார். இவ்வளவு சீக்கிரம் திருமடத்திலிருந்து தான் வெளிவர வேண்டிய நிலை ஏற்படும் என்று உ.வே.சா மனதில் நினைக்காத வேளையில் இது அவருக்கு மிகுந்த வருத்ததை அளித்தது. ஆயினும் பின்னாளில் தேசிகர் எடுத்த இந்த முடிவு தான் அவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ்த்தாத்தா உருவாக அமைந்த முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

உடன் எடுக்கப்பட்ட முடிவு. 
அன்றே உ.வே.சா கும்பகோணம் புறப்படவேண்டும். 
ஆக அவரது புதுப் பணிக்குத் தேவையான ஆடை அணிகலன்களை   திருமடத்திலிருந்து கொண்டு செல்லும் வகையில் உடன் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார் தேசிகர். 

"மாலையில் சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து என்னை வரும்படி சொல்லியனுப்பினார். போனேன். “சரியான காலத்தில் நீர் புறப்பட வேண்டும்” என்று அவர் சொல்லி ஒரு மகமல் சட்டை, ஒரு தலைக்குட்டை, ஒரு சின்னச் சட்டை, சரிகை போட்ட பெரிய வெள்ளைத் துப்பட்டா, உயர்ந்த சால்வை ஒன்று ஆகியவற்றை அளித்து, “எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்ளும்” என்று அன்பு ததும்பச் சொன்னார். பிறகு, கருங்காலிப் பெரிய கைப்பெட்டி ஒன்று, கை மேஜை ஒன்று, ஒரு சிறிய கைப் பெட்டி, கொழும்பிலிருந்த அடியார் ஒருவர் கொண்டு வந்து கொடுத்திருந்ததும் நாற்பது ரூபா விலையுள்ளதுமாகிய தந்தப் பிடியமைந்த பட்டுக் குடை ஒன்று ஆகியவற்றையும் கொணரச் செய்து ஒவ்வொரு
பெட்டியிலும் ஒவ்வோர் அரைக்கால் ரூபாய் போட்டு எனக்கு வழக்கினார். மெய்க்காட்டு உத்தியோகத்தில் இருந்த ஷண்முகம் பிள்ளை என்பவரை அழைத்து, “நாளைத்தினம் நீர் கும்பகோணத்துக்குப் போய் இவர் காலுக்குப் பாப்பாஸ் ஜோடு வாங்கிக் கொடுத்து இந்தக் குடைக்கு உறையும் போட்டு இன்னும் இவருக்கு என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைச் செய்து விட்டு வாரும்” என்றார்.

என்னைப் பார்த்து, “சாமிநாதையர், நாம் மதுரை கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்த போது ஒரு மகா சபையில் மணி ஐயரவர்களுக்கு முன்பு வேதநாயம் பிள்ளை பாடலைச் சொல்லி விட்டு ‘இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை’ என்று சொன்னது நினைவில் இருக்கிறதா? அந்தக் குறை இரண்டும் இப்போது தீர்ந்து விட்டன” என்று சொன்னர். நான் வெகு நாளைக்கு முன் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து தேசிகர் அப்போது செய்ததையும் அவர் அன்பையும் நினைந்து உருகினேன். “இறுமாப்புடைய நடை என்றும் வராது” என்று சொன்னேன்.

“நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும்
மகாலிங்கையரும் விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தியடைந்து விளங்க வேண்டும்”என்று கூறித் தாம்பூலம் கொடுத்தார். ஒரு தாய் தன் பிள்ளைக்கு உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்க வேண்டுமென்று மனமார நினைந்து வாழ்த்துவதைப் போல இருந்தன அவர் வார்த்தைகள். அந்தப் பேரன்பிலே ஊறியிருந்த போது அதன் முழு அருமையும் எனக்குத் தெரியவில்லை. பிரியப் போகின்றோமென்ற நினைவு வந்ததுந்தான் அதன் அருமை பன்மடங்கு அதிகமாகத் தோற்றியது."

தன் சொந்தப் பிள்ளைகள் அயலகம் செல்வது போல பார்த்துப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்த சுப்ரமணிய தேசிகரின் அன்பில் உ.வே.சா மட்டும் உறுகினார் என்று சொல்ல முடியாது. இப்பகுதியை வாசிக்கும் வாசகர்களும் இந்த அன்பை கண்டு நெகிழ்ந்து போகாமல் இருக்க முடியாது. 
தான் பெற்றால் தான் பிள்ளையா?

Saturday, August 15, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 7

வாசிப்பின் பகுதி 7

சாக்ரடீஸின் உரையாடல்களின் வழி ப்ளேட்டோ இந்த நூலை வாசிக்கும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றார். இவருடைய சிந்தனை எந்த விஷயத்தையும் அவை சாதாரண விஷயங்கள் தாம் எனப் புறந்தள்ளி ஒதுக்கி விடாமல், ஒவ்வொன்றிற்கும் மதிப்பளித்து முக்கியத்துவமும் கொடுத்து அதனை அலசுவதாக அமிகின்றது.

அரசியல் தத்துவம் என்பதும், கோட்பாடு என்பனவும் பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டியது, ஒரு சாமானிய மனிதரின் நலன் என்ற ஒரு மிக எளிய விசயம்தான். ஒரு தனி மனிதரின் நலன் என்பது அவரது மன நலன் கொண்டிருக்கும் நிலை, அவரது சுற்றுச் சூழல் அமைந்திருக்கும் நிலை, அவர் வாழ்கின்ற நாட்டில் அமைந்திருக்கும் அரசியல் அமைப்பு அமைத்துக் கொடுத்திருக்கும் சமூக நிலை, ஆகியவற்றோடு உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்ததே.

நோய் என்பது உடலுக்கு வரக்கூடாதது. நமது கட்டுப்பாட்டை மீறி ஒரு நோய் அல்லது விபத்து என்பது ஏற்படுவது என்பது ஒரு விசயம். நமது பழக்க வழக்கங்களால் நாம் உருவாக்கிக் கொள்ளும் நோய் என்பது ஒரு விசயம்.

சிந்தனை சார்ந்த விசயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் சார்ந்த விசயங்களுக்கு நாம்  கொடுப்பதை பலர் தவிர்ப்பதுண்டு. உடலுக்குள் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்ற பிரக்ஞை இல்லாமல், உடலின் தேவையறியாமல் உணவு உட்கொள்ளும் பழக்கத்தைப் பலர் கொண்டிருக்கின்றோம்.  சிலர் உயிர்வாழ்வதற்கு உணவு.. எதை சாப்பிட்டால் என்ன? பசி ஏற்படாமல் வயிறு நிறைந்தால் போதும் என்ற நிலையைக் கொண்டிருப்பர். பல வேளைகளில் பசி என்ற உணர்வு எட்டிப்பார்த்தாலே உடல் நடுங்கிப் போகும் நபர்களும் உண்டு. பசித்து உண்ண வேண்டும் என்ற தன்மையில்லாமல் இயந்திரம் போல கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் போடுபவர்கள் தங்கள் உடலை மதிக்காதவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பழகிவிட்டேன்.. தவிர்க்க முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டு புகைப்பதும், மது அருந்துவதும்.. புதிய புதிய காரணங்களைக் கற்பித்து இப்பழக்கங்களைத் தொடர்வதும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகளே.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் போதே  மனம் சீராக பல காரியங்களைச் செய்ய இயலும். உடலில் ஏற்படும் பின்னடைவுகள் நமது நடவடிக்கைகள் சீர்பட நடைபெறுவதை நிச்சயம் பாதிப்புறச் செய்யும். நோயாளிகள் நிறைந்த நாடு என்பது எப்படி இருக்கும்..? அங்கே பேசப்படும் விசயங்கள் எத்தன்மையதானதாக இருக்கும் என்பது  யோசிக்க வேண்டிய ஒரு விசயம். 45 வயதுக்கு மேலாகி விட்டால் மூட்டு வலி, முதுகு வலி, கால்வலி இரத்த அழுத்தம், இனிப்பு நீர் என்பன மட்டுமே நண்பர்கள் அல்லது உறவினர் சந்திப்பில் பேசப்படும் பொருளாக இருந்தால் அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் உலகம் நோய்வாய்ப்பட்ட உலகமாக, வலுகுறைந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அமையும். .உடலுக்குப்பயிற்சியும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவும் அதை உட்கொள்ளும் அளவு முறையும் முக்கியமானவை.  சாக்ரடீஸ் தன் அரசியல் அமைப்பு சார்ந்த உரையாடலில் உணவு பற்றியும் கலந்துரையாடுகின்றார்.. அதனைப் பார்ப்போம்..

...
சாக்: அப்படியானால், ஆடம்பரமாக உண்பதையும் பலவகை உணவுகள் சாப்பிடுவதையும் நீ சிபார்சு செய்ய மாட்டாயல்லவா?

கிளா: மாட்டேன்

சாக்: ஒரே சமயத்தில் பலவகை சுருதிகளடங்கிய வாத்தியங்களில் சங்கீதம் பயின்றால் அது காதுக்கு எப்படிச் சங்கடமாயிருக்குமோ அது போல் பலவகையான உணவுகளை ஒரே சமயத்தில் தேகத்திற்குள் திணிப்பதும் சங்கடமாயிருக்குமல்லவா?

கிளா: வாஸ்தவம்

சாக்: எப்படி எளிய முறையில் பாடப்படுகிற சங்கீதம் ஆத்மாவுக்கு ஒரு நிதானத்தைக் கொடுக்கிறதோ அதைப் போல் எளிய ஆகாரம் தேகத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

கிளா: உண்மை

சாக்: ஒருவன், பலவகையான ஆகார வகைகளைச் சாப்பிடுகிறான் என்று சொன்னால் அவன், தன்னடக்கமில்லாதவன், தூர்த்தன் என்றுதானே அர்த்தம்? அப்படிப்பட்டவனிடத்தில் வியாதிகள் உற்பத்தியாவது சகஜந்தானே?

கிளா: ஆம்

சாக்: எந்த ராஜ்யத்து ஜனங்களிடத்தில் தன்னடக்கமின்மையும் வியாதிகளும் மலிந்து  கிடக்கின்றனவோ அந்த ராஜ்யத்தில் நீதி ஸ்தலங்களும், ஆஸ்பத்திரிகளும் எப்பொழுதுமே திறந்து கிடக்குமல்லவா? சுதந்திர புருஷர்களிர் பெரும்பாண்மையோர் சட்டத்திற்கும் வைத்தியத்திற்கும் தாசர்களாகி விடுகிறபோது, அந்தச் சட்டமும், வைத்தியமும் தங்களைப் பற்றிக் கொஞ்சம்  பெருமையாக நினைத்துக் கொள்ளும் தானே?

கிளா: ஆம்
..
...
சாக்: காயமடைந்தாலோ அல்லது தொத்து வியாதிகளுக்கோ வைத்திய சிகிச்சை செய்து கொள்வதில் அர்த்தமிருக்கின்றது. அதை விடுத்து, சோம்பேறித்தனமான வாழ்க்கையை நடத்தியதன் காரணமாகவும், சிற்றின்பங்களிலே அதிகமாக ஈடுபட்டிருந்ததன் காரணமாகவும் தேகமானது அழுக்கு நீர் நிறைந்த  ஒரு கேணி மாதிரியாகிவிட, அதற்குச் சிகிச்சை செய்து கொள்வதில் ஏதேனும் அர்த்தமிருக்கின்றதா? 

வாசிப்பு தொடரும்
சுபா

Sunday, August 9, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 83

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய நூல்கள் பல. இதன் பட்டியலை  நான் முன்னர் தமிழ் மரபு அறக்கட்டளை தலபுராண வெளியீட்டு செய்தியில் வழங்கியிருக்கின்றேன். அந்த வகையில் மகாவித்வான் படைத்த தியாகராசலீலை எனும் நூலை பிள்ளையவர்கள் சொல்லச் சொல்ல அதனை சுவடியில் எழுதியவர்  தியாகராச செட்டியார். இந்த ஓலை நூல் திருவாவடுதுறை மடத்தில் இருக்கின்றது. இந்த நூல் பிள்ளையவர்களால் ஆரம்பிக்கப்பட்டாலும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதனை தாமே தொடர்ந்து எழுதி பூர்த்தி செய்துவிடுவதாகக் குறிப்பிட்டு தியாகராச செட்டியார் மடத்திலிருக்கும் அந்த நூலை தமக்கு வழங்கும் படி கேட்டுக் கொள்ள அதனை எடுத்து வர தேசிகர் உ.வே.சாவை நூலகத்துக்கு அனுப்பிவிடுகின்றார்.  இந்த இடைப்பட்ட வேளையில் தியாகராச செட்டியார் தான் வந்த நோக்கத்தைத் தேசிகருக்கு மீண்டும் வலியுறுத்தி, உ.வே.சா கும்பகோணம் காலேஜிற்கு பணிக்குச் செல்வது மடத்திற்கு பெறும் சிறப்பை வழங்கும் என்று ஒரு வகையில் நம்பிக்கை ஊட்டி வெற்றியும் கண்டு விடுகின்றார்.

தியாகராச செட்டியார் கூறிய அனைத்து தகவல்களையும் உள்வாங்கி தூர நோக்குச் சிந்தனையுடன் தகுந்த முடிவு எடுப்பதே அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என உணர்ந்த தேசிகர்,  உ.வே.சா கும்பகோணம் காலேஜில் பணிக்குச் செல்ல சம்மதம் அளித்தார். தியாகராசச் செட்டியார் அவர்கள் மடத்தின் மேல் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் தேசிகர் அறியாததல்ல. மடத்தின் வளர்ச்சி அதன் நெடுநாளுக்கான புகழ் ஆகியன சிறக்க இவ்வகையான சிறந்த கல்விமான்களின் ஆலோசனைகளைக் கேட்டு இயங்குவதும் திருமடத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் தேசிகருக்கு நம்பிக்கை இருந்தது.

தியாகராச செட்டியாரின் ஆர்வம் மிகுந்த வேண்டுதலிக் கேட்டுக் கொண்டு, சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு "சரி என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார் தேசிகர். இந்த இனிய சந்தர்ப்பத்திற்க்காத்தானே தியாகராசச் செட்டியார் காத்திருந்தார். 

திருமடத்திலிருந்து கும்பகோணம் காலேஜ் முதல்வர் கோபால ராவ் அவர்களுக்கு உ.வே.சாவை பணியில் அமர்த்த  ஒரு கடிதமும்,   உ.வே.சா விற்கான ஒரு சிபாரிசு கடிதமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முக்கிய காரியங்களை உடனுக்குடன் செய்வது தானே சரியான முறை. தேசிகரும் தயங்காது மடத்தின் ராயசக்கரராகிய (இது எவ்வகை பொறுப்பு எனத் தெரியவில்லை)  பொன்னுசாமி செட்டியாரை அழைத்து தாம் சொல்ல சொல்ல இக்கடிதங்களை எழுதச்செய்தார்.

இக்கடிதம் வருமாறு. 

"இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷகாலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருஷகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர்.

பிரமாதி வருஷம் கும்பரவி 
3Œ திருவாவடுதுறை யாதீனம்
சுப்ரமணிய பண்டாரச் சன்னதி. "

இந்தக் கடிதம் எழுதி தேசிகர் சம்மதம் தெரிவித்த போது அனைவருக்குமே மனதில் மகிழ்ச்சி நிலவியது. சரியான முடிவைத்தான் எடுத்திருக்கின்றோம் என்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்பட்டது.     உ.வே.சா அவர்களே தனது சொற்களாலேயே இப்பகுதியை விளக்குவது சுவை கூட்டும் என்று கருதுகின்றேன்.

"இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில் சபாபதி பூஜையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார், ‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோஷத்துடன் எழுந்து கை கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விஷயத்தில் மன அமைதி பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூர்ண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம் இவரை அனுப்புவதற்குச் சம்மதம் இல்லாமலிருந்தாலும், தெய்வம் கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டாம்” என்று அவர்
சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார்."

இந்த இரண்டு நாள் நிகழ்வின் முக்கிய பாதிப்புக்கள் என்பன உ.வே.சா அவர்களைச் சார்ந்ததே  என்ற போதிலும் இதில் அவர் எந்த முடிவையும் எடுத்ததாகக் காணமுடியவில்லை. எல்லாம் ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல நடக்க வேண்டிய விசயங்கள், நடக்க வேண்டிய தருணங்களில், நடத்தப்பட வேண்டிய நபர்களால், செய்விக்கப்படும் என்ற விதிப்படி இந்த நிகழ்வு நடந்தேறியது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகின்றது. நமது வாழ்க்கையில் நடக்கின்ற சில திருப்பு முனைகளும் கூட இப்படித்தானே ஏனைய பலரால் செய்விக்கப்படுகின்றன. பல வேளைகளில், நமது வாழ்க்கை என்ற நாடக மேடையில் நிகழும் நிகழ்வுகளைக் காண்கின்ற பார்வையாளர்களாக மட்டுமே நமது நிலை இருப்பதை மறுக்க முடியாது, அல்லவா?

தொடரும்..

Sunday, July 5, 2015

குடியரசில் பெரியார் உடன்....! - 11

எல்லா உயிர்களிடத்தும் அன்பு,  கருணை, நற்பண்பு, உண்மை, வாய்மை, நேர்மை, ஒற்றுமை என்பவை நாளுக்கு நாள் ஒரு தனி மனிதரின் குணத்தின் வளர்ச்சியில் பெருகிக் கொண்டே வரவேண்டும். இதற்கு எதிர்மாறான குணங்களான, பொய்மை, வெறுப்பு, ஏமாற்றுத்தனம், குறுக்குவழி, போலித்தனம், ஊழல், பிரிவினை, என்பவை முற்றிலுமாக மனதிலிருந்தும் சுற்றுச் சூழலிலிருந்து ஒழிந்த நிலை ஏற்பட வேண்டும். ஆயினும் தற்கால நிலமை நமக்கு காட்டுவது என்ன?

மனிதர்கள் சாதிப்பிரிவினையை உயரத்தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் குலப்பெருமையைக் காக்கின்றோம் என்பதற்காக வன்கொடுமைகளில் ஈடுபடுவதை செய்திகளில் காண்கின்றோம். சமூகத்தில் பிளவுகள் என்று மட்டுமில்லாமல் சுற்றத்தாருடன், உறவினர்களுடன் பிளவு என்று பிரிவினையை தன் சுய நலத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் வளர்ப்பதைக் காண்கின்றோம். ஊழல் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அம்சமாகவும், வரதட்சணை என்பது குடும்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அங்கமாகவும் ஆகிவிட்ட சூழலை மறுக்கமுடியாதது.

கல்வி என்பதே ஒரு தொழிலைத் தேடி அதன் மூலம் அவசரம் அவசரமாக பொருளீட்டி செல்வந்தராவதற்குத்தான் என்ற நிலையை ஏறக்குறைய எல்லோருமே ஏற்றுக் கொண்டு விட்ட நிலை கண்கூடு. இதில் ஆங்காங்கே சில விதி விலக்குகள் கண்களில் தென்பட்டாலும் அவர்கள் சமூகத்தால் ஏளனப்படுத்தப்படுவதும், உலக நிலமை தெரியாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டு கேலிக்குள்ளாக்கப்படுவதுமே நிகழ்கின்றது.

மக்களை நல் நெறிப்படுத்தும் தரமான கல்வியை வழங்குவதில் அரசும், பள்ளிகளும் ஆசிரியர்களும் பெரும்பங்காற்றுகின்றனர். ஒரு தனி மனிதரை நல்ல சிந்தனை கொண்ட, சமுதாய பிரக்ஞை கொண்ட, ஏனைய பிர சமூகத்தோடும் இனத்தாரோடும் இணைந்து வாழக்கூடிய உலகத்தன்மையைப் புரிந்து கொண்ட ஒரு தனி மனிதராக உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பு இது.

பெரியாரின் குடி அரசு வாசித்துக் கொண்டிருந்த போது அதில் தனி மனிதரை உருவாக்கும் அம்சத்தில் ஆசிரியரின் தன்மையைப் பற்றி ஒரு சொற்பொழிவில் குறிப்பிடுகின்றார். அதனை காண்போம்.


..கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல.  அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால் மக்கள் சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும், அன்பு, பரோபகாரம் முதலியவகைகளோடு கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாகத் தகுந்ததாகவும் இருக்க வேண்டும். இவைகளையறிந்தே வள்ளுவரும் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லாதார் அறிவில்லாதார்' என்றும், 'தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' என்றும் 'ஓத்தறிவான்  உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்' என்றும் சொல்லி இருக்கின்றார்.

இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள். நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு, கண்ணில்லாதன் குருடன், திருடாதே, அடிக்காதே, என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டு விடக்கூடும்? இவைகள் எல்லாம் குழந்தைகள் தானாகவே  படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திருப்பி அடித்து விடுவான். ஒருவனை வைதால் அவன் திருப்பி வைது விடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும்,  நாயும் பூனையும் கண்ணில் பார்க்கும் போதே கால் எவ்வளவென்பதுவும் வாலுண்டென்பதுவும் தெரிந்து கொள்வான். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச் செலவும்மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதுவே நமது அபிப்ராயம்.

நீங்கள்  முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  மானம் ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகின்றதா என்பதை உங்கள் மனதையே கைவைத்து கேட்டுப் பாருங்கள்.

...
படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதம் உயர்ந்திருக்கின்றார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில் நம்பிக்கையில் படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருகீன்றார்கள்?

...
தற்காலம் எத்தனை மேஜிஸ்ட்ரேட் கச்சேரி, எத்தனை முனிசீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை போலீஸ் கச்சேரி ஏற்பட்டிருக்கின்றது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா? படிப்பு என்னும் தற்காக் கல்வி முறையல்லவா நாட்டையும் சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.
-குடி அரசு - சொற்பொழிவு 01.05.1927

தொடரும்..
சுபா

Saturday, June 20, 2015

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

தமிழ் வாசகர், படைப்பாளர்கள் சிந்தனைகளில் அச்சம் மிக வேறூன்றிவிட்டிருக்கின்றதோ என அய்யப்படுகின்றேன்.

இயல்பான விசயங்களைப் பற்றி பேசி அதனை இலக்கியமாக்கும் தன்மை என்பதனை ஏற்று பெருமை படுத்தத் தயங்கும் மனம், பக்தி.. இறைமை, தமிழ் மொழி பற்றிய சிந்தனை என்பதை மட்டுமே மிகப் போற்றுகின்றது. பக்தியைப் பற்றியும் .. சமயத்தில் தோய்ந்து போன தன் எண்ணங்களைப் பற்றியும்.. சில மகான்களைப் பற்றியும்.. தான் பிடித்துக் கொண்டுள்ள சமயங்களின் நல்ல பண்புகளைப் பற்றியும், மொழி பாதுகாப்பு  பற்றியும் எழுதுவதை தமிழ் சமூகத்து வாசகர்கள் மிக விரும்புவதாக பலர் நம்புகின்றோம்.

இயல்பாக நோக்கினால் ஒவ்வொருவரும் தான் தினம் தினம் அனுபவிக்கும் அனுபங்கள்... அவை  நமக்குச் சொல்லிச் செல்லும் பல்தரப்பட்ட விசயங்கள் ஆகியவற்றை மனம் அலசுவது என்பவை  வாழ்க்கையில் புதுக் கோணங்களைக் காட்டக் கூடியவை. அதனையெல்லாம் ஒதுக்கி விட்டு பக்தி மொழி என்ற இரண்டு விசயங்களுக்குள் மட்டுமே நம் எழுத்துப் படைப்புக்களுக்கான சிந்தனையைச் சுருக்குவதை 'படைப்பில் வறுமையாகவே' கருதுகின்றேன். பக்தியில் தான் தோய்ந்த அனுபவத்தை, தன் மனம் எவ்வாறு இறை நம்பிக்கையில் உழன்று கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில், வாசிப்போருக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் படைப்புக்களைப் படைப்பதை பலர் செய்வதை நோக்கும் போது அதன் பின்னனியில் இத்தகையோருக்கு ஆழமான அச்ச உணர்வு இருக்கின்றது என்றே கருதத் தோன்றுகின்றது.

பொதுவாகவே பக்தி, யோகம், விரதம், பக்தி இலக்கிய விமர்சனங்கள், வியாக்கியானங்கள் எனச் செய்வோரின் படைப்புக்களைப் பார்த்த உடன் பல சாமானியர்கள் அவர்களை பெரியோர், உயர்ந்தோர், கற்றோர், நாலும் தெரிந்தோர், உயர்ந்த சிந்தனை கொண்டோர் என உடன் இமேஜ் பில்டிங் செய்வதை ஆரம்பித்து விடுகின்றோம். அதே வேளை நிலத்தை பற்றியோ, நீரைப்பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ, உலக விசயத்தைப் பற்றியோ, அரசியல் பற்றியோ ஆய்வு செய்து எழுதும் ஒருவர், அவரது ஆய்வு மிகத் தீவிரமான பல உண்மைகளை வெளிக்காட்டும் வகையிலான ஒன்றாக இருந்தாலும் கூட முன்னவரை விட தரத்தில் கீழே வைத்துப் பார்க்கப்படும் அளவிலேயே பொதுவான தமிழ் வாசகர் சிந்தனை அமைந்திருப்பதை நான் காண்கின்றேன்.

இதற்கு எது காரணம் என்று யோசிக்கையில், மனித மனதின் உள்ளிருக்கும் அச்ச உணர்வையே இதற்கு முக்கியமாக  நான் கருதுகிறேன். தான் சரியென நினைக்கும் ஒரு விசயத்தை வெளிப்படையாக சொல்ல அச்சப்படும் பலர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள எடுக்கும் சாதனமாக பக்தி சார்ந்த சிந்தனைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதருக்கும் தன்னை ஏதாவது ஒருவகையில் பிற மனிதர்கள் மத்தியில் வெளிப்படுத்திக்கொள்ளும் ஆர்வம் தொடர்ந்து இருக்கின்றது. எவ்வகையில் தன்னை பிறர் நோக்க வேண்டும் என்பதும், தான் இதைத்தான் சிந்திக்கின்றோம் என்பதை பிறர் அறிந்து கொள்ள வேண்டும் என்று சிந்திப்பதின் விளைவாகவும் ஒரு வகையில் எழுத்து படைப்புக்கள் உருவாகின்றன என்று கொள்ளலாம். அந்த எழுத்துப் படைப்புக்களில் ஒரு தனி மனிதரின் உள்ள உணர்வுகளை முழுமையாக வாசித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்  பொதுவான தமிழ் வாசகர் மத்தியில் மிக மிக அரிது. ஆனால் எல்லோரும் அறிந்த பக்தி ஞான விசயத்தை தன் படைப்பாக முன் வைக்கும் போது அதனை ஏற்றுக் கொள்வோர் அதிகம்.  இதன் வழி கிடைக்கப்பெறும் தனி மனித அங்கீகாரமும் மிக விரைவு, மிக எளிது.

எதிர் நீச்சலை விட சரளமாக ஓடும் நீரோடையில் அல்லது இன்னும் சொல்லப்போனால் பலர் புகழ்ந்து போற்றும் உறுதியான ஒரு பாதுகாப்பு அரனுக்குள் இருந்து கொண்டு எழுத்தாக்கங்களை படைப்பது எளிது.   மிக விரைவான  வகையில் வாசிப்போரின் அங்கீகாரத்தை, மதிப்பை, போற்றுதலைப் பெற இது  உதவுகின்றது.

தயக்கமின்றி நாம் அன்றாட வாழ்வில் காணும் விசயங்களை, நம் மனதில் எழும் எண்ணங்களை, கருத்துக்களை, உலக நடப்புக்களை எழுத்துப் படைப்புக்களாக  உருவாக்க வேண்டும்.  பிறரின் அங்கீகாரத்திற்காகத்தான் எழுதுகின்றோமா என்பதை விட எத்தகைய மாறுபட்ட விசயங்களைப் பற்றி எழுதுகின்றோம்.. நாம் எவ்வளவு தூரம் இந்த உலகை கற்றுக்கொண்டிருக்கின்றோம் என்பதை அச்சமின்றி வெளிப்படுத்த முனைவது தமிழில் இக்கால நடைமுறைக்கு ஏற்ற படைப்புக்கள் உருவாக்கம் பெற அத்தியாவசியமான ஒன்றாகின்றது.

Sunday, June 7, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 82

புதிய வாழ்வு எனும் அத்தியாயத்தில் உ.வே.சா தானே தன் வாழ்க்கை மாற்றத்தை பதிகின்றார், இப்படி.

"1880-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12 உ வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம்போலவே உத்ஸாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் பார்த்தேன்.

ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின் தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும், தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு தொடங்கிற்று."

திருவாவடுதுறை திருமடத்தை விட்டு கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக தன் புது வாழ்க்கையை உ.வே.சா தொடங்கும் காலம் வந்த நிகழ்வு இது. இதுவே அவரது வாழ்க்கையின் திசையை மாற்றி அமைத்த நிகழ்வு. இன்று நாம் அறியும் உ.வே.சா  உருவாக அடிப்படையை அமைத்துக் கொடுத்த நிகழ்வு இது. 

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்று கும்பகோணம் காலேஜில் பணியாற்றியவர் தியாகராஜ செட்டியார்.  இவருக்கும் மடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. தான் பணியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்து தியாகராஜ செட்டியாரவர்கள் தான் வகித்து வந்த பதவிக்குப் பொறுத்தமானவராக உ.வே.சா இருப்பார் என நினைத்து  சுப்பிரமணிய தேசிகரின் சம்மதத்தைப் பெற திருமடத்திற்கு அன்று வந்திருந்தார். தேசிகரிடம் தன் விண்ணப்பத்தை வைத்து, தான் பதவி விலகிச் செல்லும் இந்த வேளையில் தான் வகிந்து வந்த   பொறுப்பான அந்த ஆசிரியர் பதவிக்கு உ.வே.சா வை நியமிப்பது பொறுத்தமாக இருக்கும் என விளக்கினார். 

இது மடத்தில் தேசிகர் உட்பட அனைவருக்குமே முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் வியப்பேதுமில்லை. தன் வாழ்நாள் முழுக்க மடத்திலேயே ஆசிரியராக பணியாற்றி அந்தச் சைவ தமிழ் உலகிலேயே தன் வாழ்க்கை நிலைத்து நிற்கும் என கணவு கண்டு கொண்டிருந்தார் உ.வே.சா. ஆதலால் அவரது வாழ்க்கை பயணம் அமைக்கப்பட்ட விதம் அவரது செயல்பாடுகள் திருமடத்தின் எல்லைக்கு அப்பாலும் விரியக்கூடிய மற்றொரு உலகம் ஒன்று அவருக்காகக் காத்திருக்கின்றது என்பதை அக்கணத்தில் அவர் உணர வில்லை.

முதல் நாள் தேசிகரிடமிருந்து மட்டுமல்ல, உ.வே.சாவிடமிருந்தும் இந்த விண்ணப்பத்திற்குச் சம்மதம் கிடைக்கவில்லை. ஆயினும் தன் நம்பிக்கையை இழக்க வில்லை தியாகராஜ செட்டியார். மறுநாள் பூசைக்குப் பின்னர் மீண்டும் அவையில் வந்து தன் விண்ணப்பத்தை வைத்து  தனது கோரிக்கைக்கான காரணத்தையும் விளக்கினார்.

கும்பகோணம் காலேஜ் என்பது அப்பகுதியில் மிக முக்கிய கல்விக்கூடம் என்பதும் பிள்ளையவர்களிடம் கல்வி கற்ற ஒரு மாணவர், அதிலும் திருமடத்தோடு நல்ல தொடர்பு கொண்ட ஒருவர் அங்கு பதவியில் இருப்பது, அங்கு உருவாகும் மாணவர்களும் நல்ல தகுதியுடனும் தரத்துடனும் உருவாக்கம் பெற நல்ல வாய்ப்பைத் தரும் என்பதோடு மடத்திற்கும் காலேஜிற்கு ஒரு உறவு தொடர்வதற்கு இது துணை புரியும் என்பதையும் விளக்கினார். ஆசிரியர் அல்லவா..? அதிலும் மிகத்தேர்ந்த ஆசிரியர் தியாகராஜ செட்டியார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கொப்ப, இந்த விளக்கங்களைக் கேட்ட தேசிகருக்கு இது ஒரு வகையில் நல்ல யோசனையாகவே அமையும் என்ற நம்பிக்கை ஏற்படலாயிற்று 

முதல் நாள் மாலை உவே.சா தன் மனதில் "திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார்  நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை". என மனதில் சொல்லிக் கொண்டிருந்தவர்  மறு நாள் இந்த விளக்கங்களைத் தொடர்ந்து கேட்கவும் அவர் மனம் புதிய கோணத்தில் இந்த நிகழ்வைப் பார்க்கத் தொடங்கியது. 

தனக்காக வேறொரு புதிய உலகம் காத்திருகின்றது என்பதை தன் மனத்திரையில் மெலிதாக உணர ஆரம்பித்தார் உ.வே.சா!

தொடரும்

சுபா.

Saturday, May 30, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 81

திருவாவடுதுறை திருமடத்தில் இருந்த காலங்களில் உ.வே.சாவின் வாழ்க்கை தமிழ்ப்பாடம் கற்றல், ஏனைய மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் பயிற்றுவித்தல், செய்யுள் இயற்றுதல் என்ற வகையிலேயே அமைந்திருந்தது. ராகத்தோடு பாடலும் பாடக்கூடிய திறமையைக் கொண்டிருந்த உ.வே.சா, வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யும் திறனையும் பெற்றிருந்தார் என்பதையும் என் சரித்திரம் நூல் வழி அறிகின்றோம்.

யாரேனும் வடமொழி வித்துவான்கள் மடத்திற்கு வந்தால் அவர்கள் தாம் அறிந்த பழைய சுலோகங்கள் ஏதாகினும் சொல்வர் என்றும் அதனை தாமே தேசிகருக்கு மொழி பெயர்ப்பு செய்து தமிழில் சொல்வார் என்றும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். அவைக்கு வரும் வடமொழி அறிஞர்களும் தனது இருமொழிப் புலமையை அறிந்து 'மடத்தின் பெருமை இது'  என நினைத்து பாராட்டிச் செல்வர் என்றும் கூறி மகிழ்கின்றார். சுப்பிரமணிய தேசிகரும் வடமொழியும் தமிழும் அறிந்த இருமொழிப் புலமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

பிள்ளையவர்களிடம் மாணாக்கராக இருந்த காலத்தில் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க தமக்கு மிகுந்த ஆவல் இருந்த போதிலும் அதற்கு காலம் இடம் கொடுக்கவில்லை என்ற வருத்தம் உ.வே.சாவின் மனதில் இருந்தது. மடத்திற்கு அறிஞர்களும் கணவான்களும் வரும் சமயத்தில் தேசிகர் உ.வே.சா அவர்களை அழைத்து சில சமயங்களில் சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்துக்களை வாசித்துக் காட்டச் சொல்வதுண்டு. பாஷ்யத்தைத் தேசிகர் தாமே சொல்வதைக் கேட்டு, எப்போது நாமும் முறையாக சைவ சித்தாந்த சஸ்திரம் கற்கப் போகின்றோம் என்று ஏக்கத்துடன் இருந்த உ.வே.சாவிற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தேசிகரே இவரது மனக்குறிப்பை அறிந்து கொண்டார். 'நானே சைவ சித்தாந்த உரைகளை உமக்கு கற்றுத்தருகின்றேன். ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு கற்றுத்தருவதே ஒரு ஆசிரியருக்கு இன்பம்' எனக் கூறி பாடம் நடத்தியவர் தேசிகர் என்பதையும் இக்குறிப்புக்களால் அறிகின்றோம்.

கல்வியில் தீராத தாகம் மாணாக்கர்களுக்கு இருக்க வேண்டும். தேடுதல் என்பதும் புதிய கற்றல் என்பதும் பறந்த விரிவான விஷயங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த வேட்கையும் ஈடுபாடும் மாணக்கர்களுக்கு இருக்க வேண்டும். கல்வி கற்றல் என்பது வெறும் வேலைக்கு ஒரு அடிப்படை தகுதியைப் பெறும் நடவடிக்கை என்ற சிந்தனையில்லாது தன்னைச் செம்மைப்படுத்தவும் அறிவின் விசாலத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டு தனக்கும் தாம் வாழ்கின்ற சமூகத்திற்கும் நல்லதொரு கடமையைச் செய்யக்கூடியவகையில் தம்மை தகுதியானவராக ஆக்கிக்கொள்வதற்கும் கல்வி அமைந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு எவ்வகையில் கல்வியில் தீவிர நாட்டம் இருக்கின்றதோ அதே போல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு வகையான தகவல்களைத் தரக்கூடிய வகையில் அவர்களுக்குச் சிந்தனை சுதந்திரத்தைத் தரக்கூடிய வகையில் கல்வியை வழங்கும் வகையில்  போதனையையும் அமைப்பதும் அவசியம்.

கல்வி என்பது மனனம் செய்து ஒப்புவித்து அதனை அப்படியே சோதனையில் வெளிக்காட்டி விட்டு மட்டும் செல்வதல்ல என்பதும் தம்மை சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கின்ற வகையில் கல்வி அடித்தளத்தை அமைக்கும் கருவியாகச் செயல்படவும் வேண்டும் என்பதுவும் முக்கியம். அப்படியல்லாத போதனை ஒரு இயந்திரத்தனமான ஒன்று மட்டுமே என்பதில் அய்யமில்லை.

வேதநாயகம் பிள்ளையவர்கள் ஒருமுறை தாம் இயற்றிய செய்யுட்களைத் தேசிகர்க்கு வாசித்துக்காட்டும் படி குறிப்பிட்டு உ.வே.சாவிற்கு கடிதம் அனுப்ப, அதனை வாசித்துக் காட்டிவிட்டு பதில் கடிதமாக ஒரு செய்யுளை எழுதி அனுப்பியிருக்கின்றார். அதனையும் தேசிகருக்கு வாசித்துக் காட்டுகையில் இச்செய்யுட்களைக் கேட்கும் போது வித்வான் மீனாட்சி சுந்தரம் நினைவுகள் தாம் வருகின்றன எனக் குறிப்பிட்டமையை நினைவு கூறுகின்றார்.

சுப்பிரமணிய தேசிகர், “பிள்ளையவர்களுடைய போக்கை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறீர். உம்முடைய செய்யுட்கள் அவர்களுடைய ஞாபகத்தை உண்டாக்குகின்றன” என்று அடிக்கடி சொல்வார். பிள்ளையவர்கள் இட்ட பிச்சையே எனது  தமிழறிவு என்ற நினைவிலேயே வாழ்ந்து வந்த எனது உள்ளத்தை அவ்வார்த்தைகள் மிகவும் குளிர்விக்கும்.

இப்படி நாளும் பொழுதும் தமிழ்க்கல்வி என்ற நிலையில் தன் வாழ்க்கையை மன நிறைவுடன் செலுத்திக் கொண்டிருந்த உ.வே.சாவின் வாழ்க்கைப்பாதை வேறு திசையில் பயணிக்கத் தொடங்கும் தருணமும் உண்டாயிற்று. 

வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மாற்றங்கள் வரத்தான் செய்யும். மாற்றங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொளளத் தெரிந்தோரே தம் வாழ்க்கை லட்சியத்தில்  வெற்றி பெற்றவர்களாக உயர்ந்து நிற்கின்றனர். உ.வே.சா வைப் போல!


தொடரும்..

சுபா 

Friday, May 15, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 80

திருப்பனந்தாள் மடத்தின் முதல் குருவாக அமைந்தவர் குமரகுருபர சுவாமிகள். அவர் தாம் பிறந்த நாள் முதல் தமது ஐந்து வயது வரை வாய்பேசமுடியாத நிலையில் இருந்து பின்னர் பேசும் திறனைப் பெற்றவர் என்ற குறிப்புண்டு. அவர் முதன் முதலாக இயற்றிய நூல் கந்தர் கலிவெண்பா எனும் பெயர்கொண்ட நூல்.இந்தக் கந்தர் கலிவெண்பா நூலின் இறுதி வரியில்,  தமக்கு ஆசு கவி முதல் நாற்கவியும் பாடும் வன்மை வேண்டும் என்று குமரகுருபரர் சுவாமிகள் தாம் விரும்பிக் கேட்பதை பாடல் வரிகளில் இணைத்திருக்கின்றார். இதனை வாசிப்போரும் இப்பகுதியைப் பாராயணம் செய்து வழிபாடு செய்யும் போது, இவ்வகை கவித்துவம் தமக்குக் கிட்டும் என நினைப்பது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்டு, தாமும் தினமும் இச்செய்யுட்களைப் பாராயணம் செய்வதைத் தொடங்கியதை உ.வெ.சா குறிப்பிடுகின்றார். தமிழ் பற்று அதிகம் கொண்டவர் உ.வெ.சா. தமக்கு நிறைந்த தமிழ் ஞானமும் கவித்துவமும் புலமையும் வேண்டும் என்று தாம் செந்திலாண்டவரை துதித்து தன் மனதில் இருந்த ஆசையை வேண்டுதலாக்கி, தமக்கு நல்ல செய்யுள் இயற்றும் திறன் வேண்டி,  தினம் கந்தர் கலிவெண்பா படித்தமை பற்றி அறிகின்றோம். இன்று நம்மில் பலர் இது வேண்டும் அது வேண்டும் என பொருளியல் விருப்பங்களையே மனம் முழுக்க நினைத்து வைத்துக் கொண்டு இறைவனை ஒரு விற்பனைத் தரகர் போல பார்க்கப் பழகி விட்டோம். இதனைச் செய்கிறேன், என் வேண்டுதலை நிறைவேற்றி  விடு, என இறையருளை வியாபாரத்தன்மையுடன் நோக்கும் சிந்தனை மிக விரிவாகப் பரவிவிட்டது என்பது நிதர்சனம். 

தேசிகரின் பாண்டி நாட்டிற்கான பயணம் முற்றுப்பெறாத நிலையிலேயே, தேசிகர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மகாவைத்தியநாதய்யரையும் அழைத்துக் கொண்டு உ.வெ.சா திருவாவடுதுறை சென்று இருந்து விட்டு சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் திருப்பெருந்துறைக்கு வரும் வகையில் திருவாவடுதுறைக்குச் திரும்புகின்றார். அங்கு அதற்குள் அப்போது மடத்தின் சின்ன காறுபாறாக (மேலாளர்) இருந்த  குமாரசாமித் தம்பிரான் மடத்தையும் அதன் சுற்றுப் புறத்தையும் மேம்படுத்தி புதுப்பொலிவுடன் திருமடத்தை புதுப்பித்து முடித்திருந்தார். அக்கால கட்டங்களில்,  தான் கந்தர் கலிவெண்பா படித்து, மனத்தில் நினைத்து முடிவெடுத்தது போலவே தினம் ஒரு செய்யுள் இயற்ற வேண்டும் என முடிவு செய்துகொண்டு ஸ்ரீகோமுத்தீசுவரர் பெயரில் தினமும் ஒரு செய்யுளை இயற்றிக் கொண்டு வந்தார் உ.வெ.சா. ஸ்ரீகோமுத்தீசுவரர் ஆலயமே திருவாவடுதுறை மடத்தின் பிரதான ஆலயம். ( குறிப்பு: எனது 2013ம் ஆண்டு பயணத்தின் போது இங்கு ஆலயத்தின் முழு பகுதியையும் பார்த்து புகைப்படம் எடுத்து தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக வெளியிட்டுள்ளேன்)

மனதில் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பின்னர் அதனைச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். நம்மில் சிலர் இதனைச் செய்வோம், பின்னர் அதனைச் செய்வோம் என திட்டமிடுகின்றோம். அதில் நம்மில் ஒரு சிலரே செய்ய நினைத்ததை ஒரு ஒழுங்குடன் செய்து படிப்படியாக முழுமையாக செய்ய நினைத்து அடைய விரும்பிய நிலையை அல்லது அடையவேண்டிய இலக்கை அடைகின்றோம். நம்மில் பலர் வேறு சில, பல காரணங்களைக் காட்டி மனதில் நினைத்ததோடு  அக்கனவுகளுக்கு மூடுவிழா செய்து விட்டு அன்றாட விசயங்களில் மூழ்கி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றோம். மனதில் சாதிக்க நினைத்ததைச் செய்யமுடியாமல் தவிப்பதற்கு பெரும்பாலோர் வெளியில் நடக்கும் விசயங்களைக் காரணமாகக் காட்டுவதையே விரும்புகின்றோமே தவிர மனத்தின் ஒழுங்கீனத்தை அதனை ஒரு குறைபாடாக பார்க்கும் சிந்தனை போக்கு அற்றவர்களாக இருக்கின்றோம். 

எவர் ஒருவர் தமது இயலாமை என்ன என்பதை அறிகின்றாரோ, அவரால் மட்டுமே அந்த இயலாமையைச் சரி செய்து சீராக்கி நேர்படுத்தி கட்டுக்கோப்புடன்  தனது இலக்கை நோக்கிப் பயணம் செல்ல வழியமைக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் புறத்தே காரணத்தைத்தேடிக் கொண்டு இலக்குகளை பின்தள்ளிபோடுவதிலேயே கவனமாக இருப்பர். இதனால் வாழ்க்கையில் மேம்பாடு காணமுடியாத நிலையே அமைந்து சராசரி வாழ்க்கையே தொடர்வது அமையும்.

மாணவப் பருவத்தில் இருப்போருக்கு படிப்படியான நல்ல இலக்குகள் தேவை. அந்த இலக்கை அடைய கடமை உணர்வும், அக்கடமை உணர்வை செயலாற்ற ஒழுங்கும் மிகத் தேவை. ஒழுங்கு என்பது சாதிக்க நினைத்த ஒரு காரியத்தை சாதிக்க, நாம் மனதிற்குள்போடும் திட்டங்களை அதன் ஆரம்ப நிலையில் நமக்கிருந்த சிந்தை மாறாமல் அதே ஒழுங்குடன் செயல்படுத்திக் காட்டி இலக்கை அடையும் ஒரு தன்மையாகும். மனதில் நினைத்ததை முடிப்பது என்பது சாதாரண ஒரு விசயமல்ல. பலர், நான் இதனைச் செய்கின்றேன், அதனைச் செய்கின்றேன், எனச் சொல்வார்கள். ஆனால் பேச்சளவிலேயே இந்தச் சாதனை முற்றுப் புள்ளியை எட்டியிருக்கும். கனவு காண்பது மட்டும் போதாது. அக்கனவுகளைச் சாதித்துக் காட்டும் ஒழுங்கும் கடமை உணர்வும் வைராக்கியமும் ஒவ்வொருவருக்கும் அவசியம். செயல்படுத்தாத கனவுகள் காகிதக் கப்பலுக்குச் சமம்!

உ.வெ.சாவின் குறிப்புக்களிலிருந்து தினம் தினம் ஒரு செய்யுள் இயற்ற வேண்டும் என தாம் எடுத்துக் கொண்ட முடிவை மனதில் கொண்டு அவர் அதனை ஒரு ஒழுங்குடன் தொடர்ந்து செய்து வந்தார் என்பதை அறிய முடிகின்றது. இப்படித் தாம் இயற்றும் செய்யுட்களை தாம் குமாரசாமித் தம்பிரானுக்குப் படித்துக் காட்ட, இருவரும் அதன் பொருளை ஆய்ந்து பேசி மகிழ்வார்களாம். வார இறுதி நாட்களில் அங்கு கும்பகோணத்திலிருந்து வரும் தியாகராச செட்டியாரும் இவர்களுடன் இணைந்து கொள்ளும் போது அவர்களுக்குள்ளே தமிழைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்  என்றும் அறிய முடிகின்ரது. இந்த தியாகராச செட்டியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களது தலைமை மாணாக்கர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடரும்..
சுபா

Sunday, May 3, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 6

வாசிப்பின் பதிவு 6

மூன்றாம் நூலிலே சாக்ரடீஸ் தனது நண்பர்களுடன் உரையாடுவதாக வரும் பகுதிகளில் அலசும் விஷயங்களைப்  பார்க்கும் போது நுணுக்கமாக ஒரு ராஜ்ஜியத்தில் யார் யார் எப்படி எப்படியான வாழ்க்கை முறை நியமங்களைக் கையாள வேண்டும் என அவர் கருத்தை முன்வைப்பதை ப்ளேட்டோவின் இந்த நூல் வழி தெரிந்து கொள்ள முடிகின்றது.  மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய மன்னர் மற்றும் அவரது படையினர் ஆகியோர் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உறுதியாகச் சொல்வதாகவும் இப்பகுதி அமைகின்றது.

மது மனிதரை மயக்கத்தில் ஆழ்த்தும் திறன் கொண்டது. மது அருந்துதல் ஒரு மனிதரை அவர்தம் இயல்பான சிந்தனையிலிருந்து தள்ளி, மயக்க நிலையில் வைக்கும் தன்மை கொண்டது.  இதனால் மது அருந்துவோருக்கு தெளிவற்ற நிலையே ஏற்படும். ஒரு சாதாரண மனிதர் மதுவினால் அடையும் நன்மை என ஒன்றும் கிடையாது. அது தேக ஆரோக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைப்பதில் எவ்வகையில் பங்கு வகிக்கின்றதோ அதே வகையில் மனத்தின் ஆரோக்கியத்தைத் தெளிவற்றதாக்குவதிலும் பங்கு வகிக்கும் தன்மை கொண்டது.

மது அருந்துவதைத் தடுக்க பல உத்திகள் கையாளப்படுகின்ற வேளையில், ஒரு தனி மனிதர் தானே மதுவினால் உண்டாகின்ற வினையை அறிந்தால் ஒழிய அதிலிருந்து வெளிவருவது என்பது சாத்தியமல்ல. மதுவினால் சீர்கெட்ட குடும்பங்கள் பற்றி தினம் தினம் அறிந்தாலும் கூட, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மனிதர்கள் இறக்கின்றார்கள் என செய்தியை அறிந்தாலும் கூட மதுவிற்குத் தன்னை பழக்கிக் கொண்ட பலர் அதிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக பல பாசாங்குத் தனமான காரணங்களாகவே அமைகின்றன.

சோகத்தை மறக்க மது  அருந்துவதாகச் சிலரும்..
துன்பத்திலிருந்து மீள அருந்துவதாகச் சிலரும்..
வீரத்தைக் காட்ட அருந்துவதாகச் சிலரும்..
பண பலத்தைக் காட்ட அருந்துவதாகச் சிலரும்..
என மதுவிற்கு அடிமையானோர் காரணம் கற்பிக்கத் தவருவதில்லை.

மதுவினால் அழிவது பிறரல்ல.. தானும் தன் குடும்பமும் தான் என ஒருவர் உணர்ந்தால் வேறு எந்த சட்டமும் தேவையில்லை .. மதுவை அறவே ஒழிக்க.
ஆனால் அந்தத் தெளிவு வராத காரணத்தினால் தான் புறத்தே சில காரணங்களைக் கற்பித்துக் கொண்டு  மது அருந்தும் பழக்கத்தை காரணங்களை உருவாக்கிக் கொண்டு தொடர்கின்றனர்.

இதில் தமிழ் சினிமா ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது என்பதை ஒதுக்கித் தள்ள முடியாது.

ஒரு  இளைஞன் என்றால் அவன் நண்பர்களைச் சந்திக்கும் போது மது அருந்துவான். அது நாகரிகம் என்ற வகையிலோ.. ஹீரோயிசத்தைக் காட்டும் ஒரு வழியாகவோ மது அருந்துவது தமிழ் நாடகங்களிலும் சினிமாக்களிலும் காட்டப்படுகின்றது. சுயமாகச் சிந்திக்கும் தன்மையையே இழந்து நிற்கும் பலருக்கு இவ்வகை விஷயங்கள் தவறான பாதையக் காட்டுவனவாக அமைந்துவிடுகின்றன. ஆக இவ்வகை தவறான வழிகாட்டுதல்களைத் தரும் போக்கு தடுக்கப்பட வேண்டியது மிக அவசியமாகின்றது. வழிகாட்ட வேண்டியவர்களே தவறான பாதையை அமைத்துக் கொடுக்கும் போது ராஜ்ஜியத்தில் எப்படி உடல்ஆரோக்கியமும், உள ஆரோக்கியமும் கொண்ட மக்கள் இருப்பார்கள்.

சாக்ரடீஸ் தம் சகாக்களுடன் உரையாடுவதைக் காண்போம்.

சாக்: தேகப் பாதுகாப்பு சம்பந்தமாக, சில பொதுவான விதிகளை மட்டும்  நாம் இங்கு சொல்லிக் கொண்டு போவோம். ஏற்கனவே நாம் குடிப்பழக்கம் கூடாதென்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். ஒரு தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றவன், குடித்துவிட்டு இந்த  உலகத்திலே நாம் எங்கே இருக்கின்றொமென்று தெரியாத நிலையில்  கிடந்தால் அதனை நாம் அனுமதிக்கலாமா?

கிளா: கூடவே கூடாது. அவன் மற்றவர்களைப் பாதுகாப்பது போய், மற்றவர்கள் அவனைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது மகா கேவலமல்லவா?

தொடரும்..

Thursday, April 23, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 5

வாசிப்பின் பதிவு 5

தெய்வங்கள் பொய் சொல்வார்கள்,  அழுவார்கள், ஏமாற்று வேலை செய்வார்கள்,  அதீத கோபப்படுவார்கள் ஏமாந்து போவார்கள், தண்டனைக்கு உட்படுவார்கள்... இப்படி சில சம்பவங்கள் வழி வழியாக நாம் கேட்கின்ற சில கதைகளிலும் புராணங்களிலும் இடம்பெறுபவை தாம். இப்படி தெய்வங்களின் தெய்வீகத்தன்மையை கீழிறக்கி அவர்களை மனிதர்கள் போல உலவ விடுவதனால் ஏதாகினும் நன்மை இருக்கின்றதா என்று யோசிப்பது மிகத் தேவையான ஒன்று. இல்லை என்பதே என் முடிவு!

இறை உணர்வு,  ஆன்மீகம்,  என்பன ஒரு தனி மனிதரின் ஆன்மாவிற்கும் அந்த ஆன்மா உணரும் தெய்வீக சக்திக்கும் இடையிலான ஒரு விசயம். அவை தத்துவ விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு தனி மனித தேடலுடன் இணைக்கப்பட வேண்டியன. தெய்வீக உணர்வு, தெய்வீக சக்தி, இறை சக்தி, கடவுள் என்பன  ஒரு ஆன்மாவை செம்மைப் படுத்தி சீராக்கி நல்வழியில் மட்டுமே அழைத்துச் செல்லும் பண்பினை அடிப்படையாகக் கொண்டது. பற்பல சித்தாந்தங்களை வாசித்து அவை கூறும் தத்துவங்களை உள்வாங்கி அலசி ஆராய்ந்து தெளிவு கண்டு பின்னர் அதனினின்றும் விலகி மீண்டும் மீண்டும் எழும் புதுப் புது கேள்விகளுக்கு தமக்குள்ளேயே விடையளித்து  படிப்படியாக ஆன்ம ரீதியாக பக்குவத்தில் உயர்வு காண இட்டுச் செல்வது இறை சக்தி.

அந்த இறை சக்தியை தத்துவ விசாரனையின் வழி காணாது மேம்போக்காகவும் தங்கள் சுய விருப்பத்திற்காகவும் அறிவிற்கு பொருந்தாத வகையில் கதைகளை  உருவாக்கி தெயவங்களைத் தங்கள் விருப்பப்படி ஆட்டிப்படைக்கும் புராணக் கதை எழுத்தாளர்கள் சமூக நலனில் அக்கறை இல்லாதோர் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

தெய்வீக குணங்கள் அன்பும், கருணையும், அருளும் இனிமையும் நிறைந்தவை.

கடவுட் தன்மையும் இத்தகையதாகவே இருக்க வேண்டும்.

நற்சிந்தனையும்  அழகியல் உணர்வுகளும் தெய்வீகத் தன்மையை மெருகூட்டுவன. மேலும் மேலும் இந்த உயர்ந்த குணங்களை வளர்க்கும் தன்மை படைத்தவை. இப்படி நற்சிந்தனையும், வீரமும் , அழகியலும் கொண்ட கதைகளை இளம் மனதில் விதைப்பதே ஆரோக்கியமான சிந்தனையுடன் இளையோர் வளர உதவும்.

சாக்ரடீஸின் மூன்றாம் புத்தகத்தில் சில பகுதிகள் அழகியலின், அதிலும் குறிப்பாக இசையால் ஏற்படும் அழகியலைச் சுட்டிக் காட்டுகின்றன. இனிய இசையில் லயிக்கும் என் மனதிற்கு இந்த விளக்கங்கள் ஏற்புடையனவாக இருந்தன. ஒரே கோட்டில் சாக்ரடீஸுடன் பயனிப்பதாக இப்பகுதியை வாசித்த போது உணர்ந்தேன்..அப்பகுதியிலிருந்து சில வரிகள்...

சாக்: நம்மால் போற்றப்படுகின்ற தேவர்களும் வீரர்கள் முதலான மகாபுருஷர்களும் கெட்ட காரியங்களைச் செய்தார்களென்று  நமது இளைஞர்களுக்குப் போதனை செய்வோமானால், அந்த தேவர்களும் வீரர்களும் சாதாரண மனிதர்களை விட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்லர் என்ற எண்ணம் இளைஞர்களின் மனத்தில் உண்டாகிவிடுகின்றது. இந்த எதிரியான எண்ணத்தை உண்டு பண்ணலாமா?  தவிர இத்தகைய எண்ணங்களை நமது இளைஞர்களின் மனத்தில் பதிய வைப்போமாயின், தேவர்களும் வீரர்களுமே இப்படிச் செய்வார்களேயானால் நாம் ஏன் இப்படிச் செய்யக்கூடாது என்று கருதிக் கொண்டு விடுகிறார்கள். இதனால் தீமை செய்யலாமென்ற புத்தி இவர்களுக்கு உண்டாகின்றது.

...

சாக்: நல்லவர்களுடைய பிரதி பிம்பங்களைத்தான் தங்கள் கவிதைகளில் கொண்டு புகுத்தவேண்டுமென்று நமது ராஜ்ஜியத்திலுள்ள கவிஞர்களுக்கு நாம் வற்புறுத்திச் சொல்ல வேண்டும்.  அப்படித் தங்களால் முடியாது என்று அவர்கள் சொல்வார்களானால், நமது ராஜ்யத்திலிருந்து கொண்டு  கவிதைகள் செய்யக்கூடாதென்று அவர்களுக்கு உத்தரவு போட்டுவிட வேண்டும். இங்கணமே கெட்ட சுபாவத்தைக் கிளப்பி விடக்கூடியதும்  கீழான என்ணங்களைத் தூண்டிவிடக்கூடியதுமான சித்திரங்களை நாம் அனுமதிக்கக்கூடாது. இதற்கு கீழ்படிந்து நடக்க மறுக்கின்றவர்கள் நமது ராஜ்ஜியத்திற்குள் இருந்து கொண்டு தங்கள் தொழிலை நடத்த இடம் பெறுதல் கூடாது. அழகு இன்பம் முதலியன எங்கெங்கு இருக்கின்றனவோ அங்கெல்லாம் அவைகளைத் தேடிக்கண்டுபிடித்து தங்கள் தொழில்களில் கொண்டு புகுத்தக்கூடிய ஆற்றல்பெற்ற தொழில் நிபுணர்களே நமக்குத் தேவை. இவர்களுடைய கலை சிருஷ்டிகளின்  மத்தியில் வளர்கிர இளைஞர்கள் நாளாவட்டத்தில்  தங்களை அறியாமலேயே இயற்கையின் நண்பர்களாகி அழகிலே ஈடுபடுவார்கள். சுத்தமான காற்றோட்டமுள்ள இடத்திலே வசிக்கிற ஒருவன் எப்படி தன்னையறியாமலேயே தேக சுகத்தைப் பெறுகிறானோ அப்படியே அழகான கலைப்பொருள்களின் மத்தியில் வாழ்கிறவன் உயர்ந்த மனோனிலையை அடைகிறான். இந்த மாதிரியான கல்விப்பயிற்சியைத்தான் நமது இளைஞர்களுக்குப் புகட்ட வேண்டும்.

கிளா: இதைவிடச் சிறந்த கல்வி முறை வேறொன்று இருக்க முடியுமா?

சாக்: மேலே சொன்ன காரணங்களுக்காக, அதாவது அழகான கலைப்பொருள்கள் நிறைந்த சூழலின் மத்தியிலே நமது இளைஞர்கள் வளரவேண்டுமென்பதற்காக அவர்களுக்கு சங்கீதப்பயிற்சி அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று உனக்குப் படுகின்றது அல்லவா? ஏனென்றால், சங்கீதத்தின் சிறப்பான அம்சங்களாக்கிய சந்த ஓசை , இசை பொருத்தம் முதலியன, அழகையும் சேர்த்துக் கொண்டு மனிதருடைய அந்தராத்மாவுக்குள் நுழைந்து அங்கே ஆழமான ஒரு முத்திரையை இட்டு விடுகின்றன. இதனால் சங்கீதத்தை ஒழுங்காக அப்பியாசிக்கின்றவன் அழகு புருஷனாகின்றான். அப்படி ஒழுங்காக அப்பியாசிக்காதவன் விகார புருஷனாகின்றான். எவனொருவன், ஒழுங்கான முறையில் சங்கீதப் பயிற்சி பெறுகின்றானோ அவன், எந்தெந்த கலை சிருஷ்டிகளில் குறைபாடுகள் நிரம்பியிருக்கின்றனவென்பதையும், எந்தெந்த இயற்கை பொருள்களில் அழகில்லையென்பதையும் சுலபமாகக் கண்டு பிடித்துவிடுவான். அவைகளை கண்டமாத்திரத்திலேயே அவனுக்கு ஒரு வித வெறுப்பு உண்டாகும். ஆனால் அழகான பொருள்களைப் பார்த்தவுடனேயே அவன் அவைகளைப் போற்றத் தொடங்குவான். அவைகளை தன் ஆத்மாவுக்குள் சந்தோஷத்தொடு வரவேற்றுப் போற்றுவான். அவற்றை இன் சுவை அமுதமெனச் சுவைப்பான். அவைகளினால் அவன் உயர்ந்தவனாகவும் நல்லவனாகவும் ஆவான்.


​​​வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

Sunday, April 19, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 4

வாசிப்பின் பதிவு 4

குழந்தைகளுக்கு எவ்வகை கதைகளைச் சொல்லிகொடுத்தால் அவர்களது மன வளர்ச்சிகு அது உதவும் எனக் குறிப்பிடும் சாக்ரடீஸ், இளைஞர்களைப் பற்றியும் சிந்திப்பதை விட்டு வைக்கவில்லை. இளைஞர்களைப் பற்றி பேசும் போது கதைகளைச் சொல்லுதல் என்பதை விட வரலாற்றைச் சொல்லுதல் இளைஞர்களின் சிந்தனை அமைப்பு நேர்பட அமைதலுக்குச் சரியானதாக அமையும் எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில் முதலில் அவர் தொட்டுப் பேசும் விசயம் தைரியமாயிருத்தல் என்பது பற்றியது. அடிப்படையில் மரணத்தைப் பற்றிய பயமே ஏனைய எல்லா வகை பயங்களையும் விட ஆழமானது அழுத்தமானது என்பதால் இந்த மரணபயத்தை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். இறந்து போனோர் இப்படி இருப்பர் அப்படி இருப்பர் .. நரகத்தில் இப்படி வாழ்வர், சுவர்க்கத்தில் இப்படி வாழ்வர் என்பன போன்ற சிந்தனைகள் தேவையற்றன.

பயத்தை எப்படி விலக்கித் தள்ள வேண்டுமோ அதே போல எப்போதும் அழுது கொண்டே இருக்கும் வகையிலான கதைகளையும் இளைஞர்களுக்குச் சொல்லக்கூடாது என்றும் குறிப்பிடுகின்றார். சோகத்தைச் சொல்லி அழவைக்கும் கதைகள் மனத்தின் தைரியத்தை அழிக்கச் செய்வன. இவற்றினால் வாழ்க்கையினை தைரியமாக நேர்கொள்ளும் மன அமைப்பு இளைஞர்களுக்கு இல்லாமல் போய்விடும். எப்போதும் அழுகை தன்மை நிறைந்த கதைகள் கெட்ட பெண்களுக்கும் கோழைகளுக்கும் மட்டுமே பொருந்தும். நல்ல பெண்மணிகளும் நல்ல ஆடவரும் தைரியமான கதைகளை அதிலும் வரலாற்றுக் கதைகளைக் கேட்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.

தமிழ் நாட்டு தொலைகாட்சி சீரியல்களைப் பார்த்தால் அவர்கள் தயாரிக்கும் எந்த நாடகமும் இந்த வரையரைக்குள் வராது என்று தைரியமாகச் சொல்லிவிடலாம். அழவைத்து அதில் பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் தான் தமிழ்ச்சமூகத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கின்றன. மெண்மையான உணர்வுகளைத் தொட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுவதும், பச்சாதாபத்தை எதிர்பார்ப்பதுவும், நேரடியாக பிரச்சனைகளை எதிர்நோக்கும் பண்பினை இழக்கச் செய்பவை.

உடலிலோ உள்ளத்திலோ பலவீனமாக தன்னைக் காட்டிக் கொண்டு பச்சாதாபத்தை எதிர்பார்க்கும் சமூகமாக நமது சமூகத்தில் பலர் உருவாகிவிட்டனர் என்பதைக் காண்கின்றேன். தைரியமாக இருக்க உண்மையான உலக நிலவரத்தைக் கண்கொண்டு காண வேண்டும்.  அப்படிக் காணும் பார்வையில் எவ்வித திரையும் இன்றி நேரடியாக ஒரு பிரச்சனையை,   உள்ளவற்றை உள்ளனவாக காணும் மனப்பக்குவத்தைப் பெண்களும் ஆண்களும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இத்தகைய கருத்துக்களோடு வருகின்ற உரையாடலின் ஒரு பகுதி - ப்ளேட்டோவின் அரசியல் - சாக்ரடீஸின் மூன்றாவது பகுதி.

ஸாக்: நமது இளைஞர்கள் தைரியமாயிருக்க வேண்டுமானால்  அவர்களுக்கு மரண பயம் இருக்கக் கூடாது.  அந்தப் பயம் உண்டாகாதிருக்கக்கூடிய கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். எவனொருவனுக்கு மரணபயம் இருக்கின்றதோ அவன் தைரியமுடையவனாயிருக்க முடியுமென்று நீ கருதுகிறாயா?

அடீ: முடியாதுதான்
..
சாக்: எனவே நமது நூலாசிரியர்கள் பிதிருலோகத்தை நித்தியாமல் அதனைப் பாராட்டுகின்ற விதமாகவே வரலாறுகளை எழுத வேண்டும். அப்படித்தான் எழுதவேண்டுமென்று அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். சாதாரணமாக அவர்கள் இப்பொழுது எழுதி வருகிற வரலாறுகள் அல்லது கதைகள், உண்மையானவையுமல்ல, வீரத்தையும் உண்டு பண்ணா.

அடீ: நிரம்ப சரி

சாக்: இதே பிரகாரம், நமது கதைகளிலே சகதுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற, சதா அழுது கொண்டிருக்கின்ற பெரிய மனிதர்களைக் கொண்டு நுழைக்கக்கூடாது.
..

அடீ: சரி

சாக்: உண்மைகளுக்கு அதிகமான மதிப்பு வைக்கிற மாதிரியாக நமது இளைஞர்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். கடவுளர்களுக்குப் பொய் யென்றால் பிடிக்காது. அஃது அவர்களுக்குப் பிரயோஜனமும் இல்லை. 

​​வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

Wednesday, March 25, 2015

ஜொஅன்னா ஆகிய போப்பாண்டவர் ஜோன்

ஏசு கிறிஸ்து சிலுவையில் ஏற்றப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் அவரது பூத உடலை சடங்குகளுடன் மண்ணில் புதைத்தனர்.   ஆனால் அவரது சிந்தனைகளும் எழுப்பிய கேள்விகளும் அவரது சீடர்கள் வழியாகவும் அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அக்கொள்கைகளைப் பறப்ப  செயல்பட்டோர்  பலர்.  படிப்படியாக இக்குழு ஐரோப்பா எங்கும் தம் கருத்துக்களை விரிவாக்க முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது. அதில் ஒரு குழுவே பைபிளை அடிப்படையாக்கி ஏசு கிறிஸ்துவின் பெயரில் ஒரு மதத்தை நிறுவியது. 2ம் நூற்றாண்டு வாக்கில் இது மதம் என்ற நிலையிலில்லை. கருத்துக்களின் குவியல் என்பதாக மட்டுமே இருந்தது. இக்கருத்துக்களைப் பரவலாக்க நிறுவனப்படுத்துதல் அவசியம் என நினைத்த பலர் அர்ப்பணிப்புத் தன்மையோடு  தனது ஏனைய பொருளியல் அபிலாஷைகளை விடுத்து கிறிஸ்து தத்துவத்தைப் பரப்புவது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் எனக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. அப்போதைய ரோமானியப் பேரரசு இந்த எண்ணத்திற்கு அடிப்படை அமைத்து தனது ராஜியத்தின் ஒரு முக்கிய நோக்கமாக இக்கொள்கைகளைப் பரப்புவதை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்டிருந்த எல்லா இடங்களிலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும்  வழிவகைகளை மேற்கொண்டது. அதில் மிக முக்கிய அங்கமாக தனது அரசின் ஒரு பகுதியாகிய வாட்டிக்கன் நகரை கிறிஸ்து மத்திற்கே விட்டுக் கொடுத்தது.

வாட்டிக்கன் சிட்டி ரோமானியப் பேரரசின், அதாவது இப்போதைய இத்தாலி நாட்டின்  மையத்தில் வீற்றிருக்கும் சிறு நகர். நடந்தால் ஒரு 4 மணி நேரத்திற்குள் சுற்றி வந்து விடலாம்.   1929ம் ஆண்டு முதல் தனி நாடு எனும் அங்கீகாரம் பெற்று இயங்கும் சிறப்புடையது இந்த நாடு. 44 ஏக்கர் நிலப்பரப்பும் ஏறக்குறைய 800 மக்களும் இந்த நாட்டிற்கு சொந்தம். வாட்டிக்கனின் மதத் தலைவர் என்ற பொறுப்புடன் நாட்டுத்தலைவர் என்ற பொறுப்பும் போப்பாண்டவருக்கு உண்டு.  வாட்டிகன் சிட்டிக்குத்  தனிக்கொடியும் உண்டு.

வாட்டிகன் கொடி


வாட்டிக்கன் ரோமன் கத்தோலிக்க மதத்தின் மையம்; ரோமன் கத்தோலிக்க மதம் பரவியிருக்கும் எல்லா நாடுகளுக்கும் சமயத் தலைநகரமாக விளங்குவது;  , இம்மதத்தைப் பின்பற்றும் அனைவருக்கும் சமயத் தலைவராக விளங்கும் போப் வீற்றிருக்கும் பீடமாகவும் வாட்டிகன் அமைந்துள்ளது.

வாட்டிக்கனின் உள் விவகாரங்களை விமர்சித்து சில நூல்கள் வந்தாலும் டான் ப்ரவுனின் டாவின்சி கோட் (DaVinci Code) நாவல் ஏற்படுத்திய தாக்கமும் அவரது அதனைத் தொடர்ந்த நாவலான ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் (Angels and Deamons) நாவல் ஏற்படுத்திய தாக்கமும் போல வேறெதுவும் ஏற்படுத்தியது எனச் சொல்ல முடியாது. டாவின்சி கோட்  நாவல் உண்மையுடன் கற்பனை கலந்த ஒன்று என்றாலும் அது ஏசு கிறிஸ்துவை வேறொரு பரிமாணத்தில் மக்களைப் பார்க்க வைத்தது.  இதுவரை மக்களுக்காக, மக்கள் சேவைக்காக தன் உயிர் நீத்தவர் என மட்டுமே கொண்டிருந்த பார்வையுடன் அவரும் ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டதாகவும், காதலித்ததாகவும், இவர்களுக்கு வாரிசு இருந்தததாகவும் ஏசு கிறிஸ்துவின் பிம்பத்தை மாற்றும் கருத்துக்கு இடம் கொடுக்கும் அச்சந்ததியை  ரோமன் கத்தோலிக்க மத வெறியினர் கொன்று விடாமல் இருக்க நிகழ்ந்த விஷயங்களைத் தொட்டுச் செல்வதாகவும் துணிவாக தனது நாவல்களை டேன் ப்ரவுன் படைத்திருந்தார். இவரது நாவலைத் தொடர்ந்து மேலும் சில நூல்கள் இக்கருத்தை ஆராயும் பின்னனியில் வெளிவந்தன.

 இவ்வகை முயற்சிகள் வாட்டிக்கனின் புகழுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவே செய்தன. இதுவரை கேள்வியாக்கப்படாத சில சிந்தனைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டன;  தொடர்ந்து கேள்விகள் பல்வேறு வகையில் வெளிவருவதும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதும் சகஜமாகியிருப்பதையும் கடந்த் ஆண்டுகளில்  ஐரோப்பிய சூழலில் காண்கின்றேன்.

உதாரணமாக ஆப்பிரிக்காவின் பல ஏழை நாடுகளில் கத்தோலிக்க மதம் பரப்பும் செயல்பாட்டில் இறங்கியிருக்கும் பாதிரிமார்கள் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபடுவதற்காக உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் கருத்தடைச் சாதனங்களை எதிர்ப்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டது.  தொடர்ந்து ஜெர்மனி, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளில் தொலைகாட்சி செய்திகளில் இவை பேசப்பட்டன.

பெண் புனித அன்னையருக்கான இடம் எப்போதும் இரண்டாம் பட்ஷம் என்பதுவும் இம்மதத்தில் ஒரு பெண் தலைமைத்துவத்தை பெற முடியாது என்பது சட்டமாகவும் இருப்பது. இதுவும் கேள்விக்குறியாக்கப்பட்டு ஐரோப்பாவின் பல நாடுகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகவே இன்றும் இருக்கின்றது.  இந்தப்  பிரச்சனைகளுக்கு எரியும் தீயில் எண்ணை ஊற்றுவது போல மேலும் ஒரு விஷயம் அமைந்தது. அதாவது போப்பாண்டவர் பட்டியலில் ஒரு பென்ணும் தலைமைப் பீடம் வகித்து சிலகாலங்கள் இருந்தார் என்பதுவும் இது மறைமுகமாக நடந்த ஒன்று என்றும் குழந்தை பிறக்கையில் அவர் இறந்தார் என்ற வகையில் அமைந்த Pope Joan என்ற திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஆதாரமாக இருந்த கதை பல நூற்றாண்டுகளாக கதைகளாக உலா வந்தாலும், 13ம் நூற்றாண்டிலேயே குறிப்புக்களில் அமைந்தாலும், இந்தத் திரைப்படம் வந்த பிறகு இது உண்மையோ எனும் கேள்வி அதிகரித்திருக்கின்ற நிலையை மறுக்க முடியாது.

அமெரிக்க நாவலாசிரியர்  Donna Woolfolk Cross எழுதிய நாவலின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட படம் இது. முழு விபரங்களையும் விக்கியில் இப்பகுதியில் காணலாம். http://en.wikipedia.org/wiki/Pope_Joan
நானும் இந்தப் படத்தைக் காணும் வாய்ப்பைப் பெறறபோது கதையின் தன்மை, திரைப்படம் என அனைத்தாலும் ஈர்க்கப்பட்டு ஒன்றிப்போய் பார்த்தேன். படம் பார்த்த  பிறகும்  பல நாட்கள் இக்கதை மனதை ஆக்கிரமித்துக் கொண்டுதானிருந்தது.

இக்கதையில் குறிப்பிடப்படும் ஜொஅன்னா பெண் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு  போப்பாண்டவர் வடிவத்தில் ஆட்சி செலுத்தவில்லை; மாறாக தன்னை ஒரு ஆணாகவே கத்தோலிக்க பள்ளியில் காட்டிக் கொண்டு கல்வி கற்று பல்வேறு காரணங்களினாலும் வாய்ப்புக்களாலும் அவரது அசையா இறை நம்பிக்கையாலும், அர்ப்பணிப்புத் தன்மையாலும் வாட்டிக்கன் நிர்வாகத்தில் இடம் பெற்று பின்னர் போப்பாண்டவர் பதவிக்கு வருவதாக கதை அமைந்திருக்கின்றது.

இந்த நாவல் மட்டுமன்றி இந்தச்செய்தியைச் சொல்லும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக Catholic Encyclopedia, Pope Joan
The Female Pope: The Mystery of Pope Joan by Rosemary and Darroll Pardoe ஆகியவற்றில் இவரைப் பற்றிய குறிப்புக்களை காணமுடியும்.




இன்றைய ஜெர்மனி, அன்றைய ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சமயத்தில் நிகழ்ந்த சம்பவமாகக் கூறப்படுவது இச்சம்பவம். ஜெர்மனியின்  ஒரு சிற்றூரில் பிறந்து வளரும் ஜொஅன்னா எனும் பெண் தன் வயது இளம் பெண்களைப் போலல்லாது கல்வியில் நாட்டம் கொண்டு அதற்காக ஏங்கி தவிக்கின்றாள். அவளது தந்தையோ தீவிர பழமைவாதி. தனது மகன் மட்டும் கல்வி கற்கவேண்டும்; மகள் படிக்கக்கூடாது எனக் கடுமையாகச் சட்டம் போட்டு வைத்திருக்கின்றான்.  ஆனால் ஜொஅன்னா தனது தமையன் குருவிடம் பாடம் கற்கும் சமயத்தில் ஒளிந்திருந்து கேட்டு பாடம் படித்து தன் அறிவின் பரப்பை நாளுக்கு நாள் விரிவாக்கிக் கொண்டே வருகின்றாள்.  ஒரு நாள் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்து விட கடுமையாக அடித்து தண்டனை கொடுக்கும் போது குரு ஜொஅன்னாவின் தீவிரத்தைக் கண்டு தந்தையை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தி ஜொஅன்னாவை குருகுல வாசத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இங்கிருந்து இவரது மறுபிறவி தொடங்குகின்றது.

நூல்கள் மட்டுமன்றி இணையத்திலேயே பல பக்கங்களில் போப்பாண்டவர் ஜொஅன்னா பற்றிய தகவல்களை வாசிக்க முடிகின்றது. இப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் கிடைக்கின்றது. இதனை  http://www.youtube.com/watch?v=AKF4Lmt3NsM என்ற பக்கத்தில் காணலாம்.

ஜொஅன்னா ஆகிய போப்பாண்டவர் ஜோன்  ஒரு உண்மை நிகழ்வா என நான் கூற முடியாவிட்டாலும் வாசிக்கக் கிடைக்கின்ற தகவல்கள் இல்லை என்று மறுக்க முடியாத, கேள்விக்கு விடைகாணும் முயற்சிகளுக்கு மேலும் கதவுகளைத் திறப்பதாகவே அமைந்திருக்கின்றது. மதமும் மதம் சார்ந்த விஷயங்களும் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டியவை என்ற வகையில் மட்டுமே எனது தனிப்பட்ட சிந்தனைகளைக் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரையில் தந்திருக்கின்றேன். ஆய்வுலகம் பறந்தது. மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். அல்லது இவை போன்ற விஷயஙகள் கதைகள் தாம் என முடிவாக்கப்பட்டு  வரலாற்று நூல்களில் இடம் பெறாமலும் போகலாம்.

சுபா​

Sunday, March 15, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 79

நூல்களில் செய்திகளை வாசித்து அறிவது என்பது ஒரு அனுபவம். இது சிந்தனைக்கு அதிக உழைப்பைக் கொடுக்கும் ஒரு வேலை. உருவகங்கள் நிறைந்த செய்திகள் என்றால் நமது கற்பனை திறனும் அதில் கலந்து துணை புரிய வேண்டும். இல்லையேல் ஒரு குறிப்பிட்ட விசயம் பற்றிய தெளிவு என்பது நமக்கு கிட்டாது. எவ்வளவு கற்பனை திறனும் ஒப்பீட்டுத் திறனும் வாய்க்கப்பெற்றிருந்தாலும் கூட சில விஷயங்களை நேரடி அனுபவத்தின் வாயிலாகப் பெறுவது தான் அவ்விஷயத்தைப் பற்றிய நல்ல தெளிவினை வாசிப்போருக்குத் தர இயலும். இல்லையென்றால் ஒரு யானையை மூன்று வெவ்வேறு இடங்களில் தொட்டுப்பார்த்து யானை என்றால் இது தான் என முடிவினை எட்டும் கண்புலன் இல்லாதோர் நிலைக்கொப்பத்தான் நமது நிலையும் அமையும்.

பாண்டி நாட்டில் சங்கரநயினார் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு திருவாவடுதுறை ஆதீனகர்த்தரும் அவர் தம் குழுவும் திருச்செந்தூர் நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்த போது ஒரு நாள் கரிவலம் வந்த நல்லூர்  அல்லது கருவை என்றழைக்கப்படும் ஊரில் தங்கியிருக்கின்றனர். இந்த ஊரில் இருக்கும் ஆலயத்தைப் பற்றி தாம் முன்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் வாசித்து தெரிந்து கொண்ட  நூல்கள் பற்றியும் அப்போது செய்யுள் தமக்குப் புரிந்தாலும் காட்சி புரியாத நிலை இருந்ததனையும் இப்போது நேரில் ஆலய தரிசனம் செய்யும் போது கிட்டிய தெளிவான அனுபவத்தைப் பற்றியும் விவரிக்கின்றார்.

தமிழ்ப்புலவர் பாண்டிய மன்னர் வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி ஆகிய மூன்றையும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் உ.வே.சாவும் ஏனைய மாணவர்களும் பாடம் கேட்டிருக்கின்றனர் என்ற செய்தியும் அக்காலகட்டத்தில் தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் மாணாக்கர்கள் இந்த ஆலயத்தைப் பற்றி குறிப்பிடும் இந்த நூற்களை படித்திருப்பர், இந்த ஆலயத்தைப் பற்றி நன்கு தெரிந்திருப்பர் என்றும் உ.வே.சா அத்தியாயம் 76ல் குறிப்பிடுகின்றார். பாடல்களைப் படித்த போது தமக்குக் கிட்டிய அனுபவம் வேறு நேரில் ஆலயத்தைக் காணும் போது கிட்டிய அனுபவமே வேறு என்றும் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

" ....ஸ்தல சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைக் கொண்டு அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத விஷயங்கள் விளங்கின. பாடல்களின் அர்த்தத்தைக் காதாற் கேட்டபோது அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. ஸ்வாமிக்கு நிழல் அளித்து நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன்."

இக்காலத்திலும் மாணர்களுக்குக் கல்வி என்பது புத்தகப் படிப்பு என்பது மட்டுமல்லாது அனுபவப் படிப்பாகவும் அமைய வேண்டியது முக்கியமான அம்சம். இதனைக் கருத்தில் கொண்டு வரலாற்று சுற்றுலாக்களைப் பள்ளியில் ஏற்பாடு செய்து மாணவர்களைப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டி வரவேண்டும். இது மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு தெளிவினை வழங்குவதோடு மேலும் தொடர்ந்து வாசித்து தெளிவில்லா விஷயங்களுக்குத் தெளிவினைக் காணும் முயற்சியில் நன்கு உதவும். 

பாண்டிய மன்னர் வரதுங்க ராம பாண்டியர் சிறந்த ஆட்சி செய்த மன்னர் என்றும் நல்ல இலக்கிய ஞானம் பெற்ற புலவர் என்ற தகவலும் இப்பகுதியை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.
 
இந்த ஊருக்கு வந்த சமயம் தன்னிடம் திருவாவடுதுறையில் பாடம் கேட்ட தம்பிரான் ஒருவரை வழியில் உ.வே.சா சந்திக்கின்றார். உ.வே.சாவிற்கு அவரை அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில் அவர் தோற்றம் அவரை அடையாளம் காண முடியாத நிலைக்கு ஆக்கியிருந்தது. முன்னர் தம்பிரானாக  நீண்ட சடாமுடியுடன் ருத்திராட்சத்துடன் இருந்தவர் இப்போது சாதாரண உடையில் குடும்பஸ்தர் தோற்றத்தில் உலவியது தான் இதற்கு காரணம். ஆனால் அந்த மனிதர் இவரை வணங்கி தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். கொக்கலிங்கத் தம்பிரான்  சொக்கலிங்கம் பிள்ளையாகி விட்டமையைக் குறிப்பிடுகின்றார். ஊர் திரும்பியதும் குடும்ப வாழ்க்கையில் நாட்டம் ஏற்பட்டமையால் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாகவும் அங்கே ஊரிலேயே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பாடம் சொல்வதாகவும் ஊரார் தம்மை நன்கு ஆதரித்து வருவதாகவும் கூறுகின்றார்.

இந்தச் செய்தியை  சுப்பிரமணியத் தம்பிரானிடம் சென்று உ.வே.சாவும் ஏனையோரும் குறிப்பிடுகின்றனர். இதற்கு தம்பிரான் சொல்லும் பதில் சுவையானது. பொருள் பொதிந்தது.

"பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம் பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார்."

காவி உடை தரித்து தன்னைத்  துறவி என வெளியே காட்டிக் கொண்டு ஆனால் மறைமுகமாக குடும்ப வாழ்க்கை நடத்தும் சிலரது நடவடிக்கைகளை இன்றும் கூட அவ்வப்போது கேள்விப்படுகின்றோம்.  இத்தகைய சிலரது போக்குகளால் உண்மையான துறவிகளின் நற்பெயர் கூட களங்கம் பெற்று விடுகின்றது. யார் தூய்மையானோர் யார் ஏமாற்று வாதி எனப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்யாத மக்கள் பலர் இருக்கும் இக்காலகட்டத்தில் சில ஏமாற்றுவாதிகளால் நல்லோர் நற்பெயரும் பாதிப்படைவது நடக்கின்றது.

பல ஏமாற்றுவாதிகளுக்கு காவி உடை தரித்தால் அதிகம் பணம் பார்க்கலாம் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது, இப்படி இருப்பதை விட காவி உடையைக் களைந்து விட்டு நேர்மையான வகையில் தன் பணியைச் செய்யலாம். பணம் சம்பாதிப்பது தான் தன் நோக்கம் என்றால் அதற்கு நேர்மையான பல வழிகள் உள்ளன. இதனை இந்த ஏமாற்று வாதிகள் சிந்திப்பார்களா என்பது தான் கேள்வி.

இன்னொரு செய்தியும் இதில் சிந்திக்கத்தக்கது. தம்பிரானாக   இருந்த போது விலகியிருந்த சாதிப் பெயர் தம்பிரான் கோலம் விட்டு நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பிய வேளை வந்து ஒட்டிக் கொண்டு விட்டது. சொக்கலிங்கத் தம்பிரான்,  சொக்கலிங்கம் பிள்ளையாக ஊரார் முன் வலம் வர வேண்டிய சமூகச் சூழல். 

சாதி அன்றைய காலகட்டத்தில் ஆழமாக வேர் ஊன்றி இருந்த நிலையினை இப்பகுதி படம் பிடித்துக் காட்டுவதனையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தொடரும்

சுபா