Friday, December 30, 2011

ரெட் கரண்ட் (Red Currant)

2011ம் வருடம் முடியப் போகின்றது. கோடை காலம் முடிந்து இலையுதிர் காலமும் வந்து போய் இப்போது குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. இப்போது என் சிறு தோட்டத்தில் பெரும்பாலான செடிகள் இலைகள் உதிர்த்து நீண்ட உறக்கத்திற்குச் சென்று விட்டன. ஒரு சில குளிர் தாங்கும் குளிர்காலச் செடிகள் தங்கள் ஊசி இலைகளை வைத்துக் கொண்டு சற்று பசுமையைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இப்போது இல்லையென்றாலும் கோடைகாலத்தில் தோட்டத்தில் பதிவு செய்த சில புகைப்படங்கள் எனது தொகுப்பில் வைத்திருக்கின்றேன். அதில் ஒரு பழச்செடி பற்றிய தகவல் ஒன்றினை இன்று மின்தமிழ் வாசகர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




ஆசிய நாடுகளில் இதனைப் பார்ப்பது கடினம். ஆங்கிலத்தில் Red currant என்றும் ஜெர்மானிய டோய்ச் மொழியில் Johannesbeeren என்றும் இப்பழங்கள் அழைக்கப்படுகின்றன. பெர்ரி வகை பழக்கூட்டத்தைச் சார்ந்தது இப்பழம். ரெட் க்ரண்ட் போலவே கருப்பு அல்லது கரும் நீலத்தில் இருக்கும் வகையை Black Currant ( ப்ளாக் கரண்ட் ) என்று அழைக்கப்படுகின்றது.

என் தோட்டத்தில் இந்தச் செடி நட்டு வைத்து ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. செடி குட்டையாக இருக்கும். குளிர்காலத்தின் கடுமையைத் தாங்கக் கூடிய தன்மை வாய்ந்தது இந்தச் செடி. ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இதன் சிறு கிளைகளில் துளிர் வந்து மேத மாத ஆரம்பத்திலேயே செடி முழுதும் இலைகள் நிரம்பி விடும். சரம் சரமான குட்டி குட்டி பழங்களை மே மாத இறுதிக்குள் காணலாம். வெயில் அதிகம் உள்ள இடங்களில் ஜூன் மாத இறுதியிலேயே பழங்கள் நிறம் மாறி சிவப்பு முத்துக்களாக தோற்றமளிக்கும். என் தோட்டத்தில் உள்ள இந்த ஒரு செடியில் பொதுவாக ஜூலை மாத இறுதியில் நிறைய பழங்களைப் பார்க்கலாம்.

சுவை என்று சொல்லும் போது அதீத புளிப்பு சுவை கொண்டது இது. இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஐஸ் க்ரீம் தயாரித்து அதன் மேல் அலங்கரித்தும் சாப்பிடலாம். உணவை அலங்கரிக்கவும் கோடை காலத்தில் நான் இந்த பழங்களைப் பயன்படுத்துவதுண்டு. ஜெர்மனியில் இப்பழங்களைக் கொண்டு பலர் இல்லங்களிலேயே ஜேம் தயாரித்து விடுவர். சர்க்கரையுடன் கலந்து வரும் போது ஜேம் சுவை மிக இனிப்பாக சுவையாக இருக்கும்.




இந்தச் செடி Grossulariaceae என்ற செடி வகையைச் சார்ந்தது. நிறைந்த மருத்துவ பலனையும் கொண்டவை இப்பழங்கள். இச்செடி மற்றும் பழவகை தொடர்பான மேலும் பல தகவல்களுக்கு http://en.wikipedia.org/wiki/Redcurrant செல்க.




அன்புடன்
சுபா

Saturday, October 22, 2011

ஹோக்கைடோ பறங்கிக்காய்

என் வீட்டுத் தோட்டத்தின் இன்றைய ஸ்பெஷல்..

ஹோக்கைடோ வகை பறங்கிக்காய்.!!




ஏப்ரல் மாத வாக்கில் ஒரு சிறு கன்று வாங்கி நட்டு வைத்தேன். எப்போது பூ பூக்கும் பூக்கும் என காத்திருந்து முதல் பூ பூத்தபோது அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு.



அடுத்த சில வாரங்களில், ஜூன் மாத வாக்கில் சில குட்டிக் குட்டிக் காய்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை. காய்கள் பெரிதாவதற்குள் செடியிலிருந்து விழுந்து ஏமாற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன.




ஜூலை மாத வாக்கில் மேலும் சில காய்கள் தோன்றின. அவற்றில் தங்கியது இரண்டு பறங்கிக் காய்கள் தான். 2 வாரங்களுக்கு முன் என் தோட்டத்து பறங்கிக்காயை அறுவடை செய்து வைத்திருந்தேன். தக்க சமையத்திற்காக அவை காத்திருந்தன.





இன்று எனது மதிய உணவு சமையலுக்கு 2 பறங்கிக்காய்களும்.. சுவை பிரமாதம்.


அன்புடன்
சுபா

Sunday, October 2, 2011

ஜெயகாந்தனுடன் ஒரு காலைப் பொழுது


சீத்தாம்மா திட்டமிட்டு செயலாற்றக் கூடியவர் என்பது நாம் அறிந்ததே.. திடீரென்று இன்ப அதிர்ச்சியும் இவர் ஏற்படுத்துவார் என்பதை நேரில் தான் நான் உணர்ந்தேன்.

பெப் மாதம் 28ம் தேதி காலை. நாங்கள் திரு. இராமச்சந்திரனையும் திரு.கணேச நாடாரையும் சந்திக்கும் திட்டம் பட்டியலில். காலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து அங்கிருந்து கிளம்பிச் செல்வதாக ஏற்பாடு.

புதிதாக இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு விஷயமும் சேர்ந்து கொண்டது. ஜெயகாந்தனைச் சந்திக்கப் போகிறோம்.

தமிழ் இலக்கிய எழுத்துலகில் எல்லோரும் அறிந்திருக்கும் திரு.ஜெயகாந்தனுக்கு நான் அறிமுகம் தரத் தேவையில்லை அல்லவா?


நினைவுச் சின்னங்களும் பரிசுகளும்



அவர் குடியிருக்கும் இடத்திற்கே சென்றது எங்கள் வாகனம். முன் அறிவிப்பு கூட இல்லாமல் நேராகச் சென்று வாசலில் நின்றோம். எங்களை வரவேற்றவர் திருமதி. கௌசல்யா. பச்சை நிறச் சேலையில் பளிச்சென அன்பு பொலியும் ஒரு முகம்!

சீத்தாம்மாவும் கௌசல்யாவும் மிக நெறுங்கிய நண்பர்கள் என்பதை அதே நிமிடத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. வாசலில் திரு.ஜெயகாந்தன் அமர்ந்திருந்து பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தார்.

என்னுடன் எழுத்தாளர் மதுமிதாவும் வந்திருந்தார்கள். எங்களை அறிமுகம் செய்து வைத்து விட்டு சீத்தாம்மா தனது நண்பர் ஜெயகாந்தனுடன் பேச ஆரம்பித்து விட்டார்

இவர்களின் உரையாடல் கடந்த கால நிகழ்வுகளை அசை போடுவதாக இருந்தன. பல வேளைகளில் ஜெயகாந்தன் மௌனமாகச் சிரித்துக் கொள்வதை மட்டுமே பார்க்க முடிந்தது. இருவருக்கும் உள்ள மிக நெருக்கமான நட்பையும் அன்பையும் இவர்கள் கலந்துரையாடலின் வழி தெரிந்து கொள்ள முடிந்தது.


நல்ல காபி உபசரனையும் எங்களுக்குக் கிடைத்தது. காலையில் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என நினைத்து சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த என்னையும் அன்பான வார்த்தைகள் பேசி கௌசல்யா சகஜ நிலைக்கு கொண்டு வந்து விட்டார். கௌசல்யோவுடனே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் போலவும் மனதில் தோன்றியது. அவர் ஒரு கலைப் பொக்கிஷம் என்பதை அந்த குறுகிய நேரத்தில் என்னால் எடை போட முடிந்தது.

ஏறக்குறை 16 அல்லது 17 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற என் தாயாரின் ஒரு புத்தக வெளியீட்டு விழா (அது ஒரு சிறுகதை தொகுப்பு நூல் என நினைக்கின்றேன்)விற்கு திரு.ஜெயகாந்தன் தான் தலைமை தாங்கி இருந்தார் என்பதை நான் அறிவேன். நான் அந்த நிகழ்வில் நேரில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அந்தப் புகைப்படங்கள் என் சகோதரியிடம் இருக்கின்றன. சென்ற முறை மலேசியா சென்ற போது அந்தப் புகைப்படத்தை பார்த்த ஞாபகத்தில் இதனைப் பற்றி குறிப்பிட்டேன். அவருக்கு அந்த நிகழ்வே மறந்து விட்டிருந்தது. ஆனால் தான் மலேசியாவிற்கு வந்த கலந்து கொண்ட சில நிகழ்வுகள் பற்றி தெரிவித்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளுக்காக ஜெயகாந்தன் மலேசியா வந்திருந்தார் என்ற தகவல் எனக்கு மிக நன்றாகத் தெரியும். என் தாயார் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் மட்டுமன்றி மேலும் சில மலேசிய எழுத்தாளர்களும் எனக்கு தொடர்பில் இருந்ததால் இந்த செய்திகளை நான் அறிந்திருந்தேன். இதனையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

சீத்தாம்மா ஜெயகாந்தன் பற்றி எழுதிய பகுதிகள் மரபு விக்கியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்டுரையை இப்பதிவை வாசிப்பவர்கள் இதுவரை வாசித்திராவிட்டால் கட்டாயம் மீண்டும் வாசிக்க வேண்டும். தான் அறிந்த ஜெயகாந்தனை தனது பார்வையில் விமர்சனம் செய்திருக்கின்றார். நட்பையும் சம்கால சூழலையும் இவர்களின் செயல்பாடுகளையும் விளக்கும் இலக்கியம் அது. இங்கே சென்று வாசித்துப் பாருங்கள்.

இடையில் சீத்தாம்மாவை அடையாளம் கண்டு கொண்டு அவரை வந்து கட்டிக் கொண்டார் ஜெயகாந்தனின் முதல் மனைவியார். இருவரும் முகம் மலர பேசிக் கொண்டனர்.



நாங்கள் பேசிவிட்டு விடைபெறும் போது எனக்கு திரு.ஜெயகாந்தன் கையெழுத்திட்டு ஒரு நூலை வழங்கினார். நூலின் தலைப்பு ஒரு இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள். மனம் பூரித்து நின்றேன். மகிழ்ச்சியான ஒரு தருணம் இது.

அன்பான அந்த சூழலிலிருந்து விடை பெற யாருக்கும் மனம் வரவில்லை.

சீத்தாம்மா திரு.ஜெயகாந்தனைப் பார்த்து "மீண்டும் எப்போது நாம் சந்திக்கப்போகிறோமோ?" என்று சொன்ன போது அவர் கண்களிலிருந்து நீர் கசிவதைக் கண்டேன். கண்களைத் துடைத்துக் கொண்டே சீத்தாம்மா பேசிக் கொண்டிருந்தார். நட்பின் ஆழம்.. அதிலும் காலம் செல்லச் செல்ல மேலும் உறுதி படும் அன்பு. .எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பார்க்கும் அந்த ஒரு கணத்தில் மீண்டும் துளிர்த்து மலரும் அந்த பாசம் .. அனைத்தையும் நேரில் கண்டு இக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தேன்.

"ஏன் கவலைப் படுகிறீகள்? இரண்டு வருடம் கழித்து வாருங்கள். நாம் சந்திப்போம்" என்று அவர் நிதானமாக புன்னகைத்தவாறு கூறி ஆறுதல் வழங்கியது அவரது நம்பிக்கையையும் அதே நேரம் மீண்டும் தாம் சீத்தாம்மாவை சந்திப்போம் என்ற உறுதியையும் வலுப்படுத்தியது.

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

மனமில்லாமல் அந்த இடத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டோம்.

படங்களை மீண்டும் பார்க்கும் போது மனம் அந்த தருணத்திற்கு என்னை மீண்டும் அழைத்துச் சென்று விட்டது. இந்த இனிய நண்பர்களின் நட்பு வாழ்க!

படங்கள் சில.. !


மதுமிதாவும் இணைந்து கொள்கின்றார்


கௌசல்யா, சீத்தாம்மா, சுபா, ஜெயகாந்தன்



கௌசல்யா, சீத்தாம்மா, சுபா, ஜெயகாந்தன்



கௌசல்யா, சீத்தாம்மா, ஜெயகாந்தன், மதுமிதா

Sunday, September 25, 2011

ஞானியின் நாங்கள்

வேறு எங்கு செல்வதையும் விட தமிழகத்துக்குச் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். நண்பர்களைப் பார்ப்பது, த.ம.அ தொடர்பான செயல்பாடுகளில் இருப்பது என்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் மிக அபூர்வமான சில சந்தர்ப்பபங்களும் திடீர் என வாய்த்து விடுவதும் எனது இந்த சுவாரசியத்திற்குக் காரணம். அப்படி ஒரு வாய்ப்பு பெப்ரவரி 27ம் நாள் சீத்தாம்மாவின் வழி அமைந்தது.

நான் சென்னைக்கு வந்த மறுநாள்.. 27ம் தேதி அன்று சென்னையில் த.ம.அ நண்பர்களின் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். அது முடிந்து திடீரெனெ எற்பாடாகி என்னை காரில் அழைத்துக் கொண்டு பீச் இருக்கும் இடத்திற்கு சீத்தாம்மா கொண்டு சென்றார்கள். ஒரு நல்ல நிகழ்ச்சி இருக்கின்றது. கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் ஆவல் அதிகரித்து விட்டது.



பீச் சாலையிலே இந்த அழகான மண்டபம்.. இது நாட்டிய தாரகை சந்திரகலா பராமரித்த இடம் என்றும் அறிந்து கொண்டேன்.. அழகிய கலை நயத்துடன் கட்டபப்ட்ட கலை மண்டபங்கள். இங்கே தான் அன்றைக்கு ஏற்பாடாகியிருந்த ஞானியின் இரண்டு நாடகங்கள் நடத்தப்பட இருந்தன.







என்னுடன் திருமதி.மீராபாய் வந்திருந்தார்கள். இவர்கள் சீத்தாம்மாவின் தோழி. ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி.

உள்ளே சென்றதும் கேரளா ஆலயங்களின் சாயலில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களின் அழகில் என்னை மறந்தேன். மனதைக் கொள்ளைக் கொள்ளும் வடிவமைப்பு.

உள்ளே நுழைந்து சற்று நேரத்தில் அங்கு வந்த திரு.ஞானியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். பின்னர் திரு.அதியமான் வந்து சேர்த்தார். அவரை நான் அன்று தான் முதன் முறையாக நேரில் சந்திக்கிறேன். அறிமுகம் செய்து கொண்டு சற்று உரையாடினோம். பொதுவாக தொழில், த.ம.அ, ஞானியின் நாடகங்கள் என்று எங்கள் சிறிய கலந்துரையாடல் அமைந்தது.



சில நிமிடங்கள் ஒவ்வொருவராக வர மேடையின் கீழ் இருந்த தரையில் பார்வையாளர்களின் கூட்டம் நிறைய ஆரம்பித்தது. தமிழ் சினிமா புகழ் குணச்சித்திர நடிகை பாத்திமா பாபுவும் அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர்.

சற்று நேரத்தில் நண்பர் அண்ணா கண்ணனும் அங்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத சந்திப்பு.

இரண்டு நாடகங்கள் மேடையேற்றம் கண்டன:
1. பல்லக்கு தூக்கிகள்
2.நாங்கள்.






நாங்கள் எனும் நாடகம் சமூகத்தில் நாம் காண்கின்ற பல்வேறு விஷயங்களை அலசுவதாக அமைந்த படைப்பு. மிக அருமையான நடிப்பு. தெளிவான உச்சரிப்பு. நல்ல பாவனை. தங்களின் அபார திறமையினால் நம்மை அசத்தி விட்டனர் இந்த நாடகக் கலைஞர்கள்.

அதில் ஒரு விழியத்தை இங்கே காணலாம். (மேலும் இரண்டு பின்னர் இணைக்கப்படும்)



நாடகம் முடிந்த போது அந்தப் பாத்திரப்படைப்புக்கள் வழங்கிய தாக்கம் மனதை ஆக்கிரமித்திருந்தது. நண்பர்கள் அதியமான், அண்ணா கண்ணன் ஆகியோரிடம் விடைபெற்றுக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம்.

இது மறக்க முடியாத அனுபவமாக என் மனதில் நிறைந்து நிற்கின்றது.



அண்ணா கண்ணன், அதியமான், சீத்தாம்மா, சுபா, திருமதி.மீராபாய்




அண்ணா கண்ணன், சுபா, திருமதி.மீராபாய்

அன்புடன்
சுபா



Saturday, September 24, 2011

லம்பாடி ஆதிக் குடிகள்:திருவண்ணாமலை - 3

லம்பாடி இன மக்கள் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய படையெடுப்பின் போது இவர்களின் இந்து மன்னன் போரில் தோற்றவுடன் இம்மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். பின்னர் இப்போதைய ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு போன்ற மானிலங்களில் நாடோடிகளாக வந்து குடியேறினர். ஆரம்ப காலத்தில் உப்பு வியாபரத்தில் ஈடுபட்டு உழைத்தனர். கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்று அவற்றை விறபனை செய்து வருவதை தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் தொழில், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட சிலர் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தோ விவசாயம் செய்தோ வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில் இருப்பதையே காண முடிந்தது.


காலவோட்டத்தில் மாறுதல் ஏற்படுவது என்பது எல்லா சமூகத்திலும் நடக்கின்ற ஒன்றுதான். ஆனால் அவை படிப்படியாக வழக்கில் இல்லாது போவது மட்டுமின்றி அச்சமூக மக்களே அறியாத நிலை ஏற்படுவதையும் காண்கின்றோம். லம்பாடி இனமக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது.

முன்னர் திருமணம் என்று வரும் போது மானின் கொம்பை வெட்டி எடுத்து அதை பதம் செய்து அதனை யானைத் தந்தம் போன்ற வடிவில் ஒரு வளையல் செய்து அதனை பெண்ணுக்கு அணிவித்துத் தான் திருமண நிகழ்வு நடக்குமாம். இது இப்போது வழக்கில் இல்லை. அதேபோல பெண்கள் திருமணத்திற்கு அணியும் முழு ஆடையையும் அப்பெண்ணே முழுதாகத் தயாரிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒரு ஆடையை முழுமையாக்க ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் எடுக்குமாம். திருமணத்தில் தாலியை அணிந்து திருமணச் சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண்ணை காளைமாட்டின் மேல் அமர வைத்து ஊர்வலமாக வீட்டிற்கு கொண்டு வருவார்களாம்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் இவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது குழந்தைகள் பிறக்கும் போது எந்த நாளில் ஒரு குழந்தை பிறக்கின்றதோ அந்த நாளை பிரதிநிதிக்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்குச் சூட்டுவார்களாம். திங்கள் கிழமை பிறந்த குழந்தைக்கு சோமார் என்றும், செவ்வாய் என்பது மங்களவார் என அழைக்கப்படுவதால் இந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மங்கினி என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் மணி என்றும் அந்தக் கிழமையின் ஆரம்பச் சொல்லை எதிரொலிக்கும் வகையில் பெயர்கள் அமையுமாம். புதன்கிழமை பிறந்த ஆண் குழந்தை பத்தியா என்றும் பெண்குழந்தை பத்தி என்றும் பெயரிடுவதும், வழக்கமாக இருக்கின்றது. முக்கியமாக அந்தக் கிழமையின் முதல் எழுத்து குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இவர்கள் கடைபிடித்து வந்த வழக்கங்களில் ஒன்று.

ஆண் குழந்தைகள் இச்சமூகத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். ஒரு தாயாருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தால் அப்பெண்மணி தன் கழுத்தில் ஒரு சங்கிலியில் இரண்டு பொட்டு இருக்கும் வகையில் ஒரு அட்டிகை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 5 ஆண் குழந்தைகள் என்றால் ஐந்து பொட்டு, 6 ஆண் குழந்தைகள் என்றால் ஆறு பொட்டு என தனக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ள இவ்வகை அட்டிகையை கழுத்தில் அணியும் வழக்கமும் இவர்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் இளம் பெண்கள் இதனை அணிவதை தவிர்த்து விட்டனர் என்பதை நேரிலேயே காண முடிந்தது.

இச்சமூகத்தினர் தமிழ் நாட்டில் ஏறக்குறைய 40,000 மக்கள் இருக்கின்றனர். அரசாங்க சலுகைகள் இவர்களுக்கு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முகக் குறைவாக கிடைக்கின்ற காரணத்தால் அதிலும் கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் சலுகைகள் குறைவாக அமைவதால் இச்சமூகத்தின் இளைஞர் சமுதாயம் கல்வியில் நாட்டம் செலுத்துவதை விட கூலி வேலை சாக்கடை கழுவும் வேலை என தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணம் ஈட்டுவதற்காகக் கல்வியைப் புறக்கணித்து விட்டுச் சென்று விடுவதாக எங்களுடன் பேசிய மக்கள் தங்கள் மனக்குறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனை முழுமையாக ஒலிப்பதிவில் கேட்கலாம். இப்பகுதியும் இதற்குத் தொடர்பான படங்களும், 7 நிமிட மிகச் சுவாரசியமான ஒலிப்பதிவும் இன்று திருவண்ணாமலைப் பதிவுகள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கவும் கேட்கவும் இங்கே செல்க!


அன்புடன்
சுபா

Sunday, September 18, 2011

லம்பாடி ஆதிக் குடிகள்:திருவண்ணாமலை - 2

இவர்களின் திருமண முறை மிக எளிமையானது. வித்தியாசமானதும் கூட. இவர்கள் தமிழ் நாட்டுப் பெண்கள் கழுத்தில் அணிவது போன்று தாலி அணிவதில்லை. மாறாக கைகளின் மேல் புறத்தில் தகட்டால் ஆன ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கின்றனர். கணவனை இழந்த பெண்கள் இதனை அகற்றி விடுகின்றனர்.


லம்பாடி இனப் பெண்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய ஆடை சிவப்பு வர்ணத்தில் அமைந்தது. மங்கள நிறமாக சிவப்பு நிறம் அமைந்திருப்பதால் இந்த வர்ணத்தில் இவர்களது சிறப்பான பாரம்பரிய ஆடை அமைவதை இப்பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆடை பாவாடை, ஜாக்கெட் அத்துடன் முக்காடாகப் பயன்படுத்தும் ஒரு தாவணி அத்துடன் வயிற்றுப் பகுதியை மறைக்கும் வகையில் அமைந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு துணி என்று அமைந்துள்ளது.

இந்த ஆடையின் பெயர்களை விளக்குமாறு இந்த மூதாட்டிகளைக் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் உடைகளைப் பற்றி நமக்கு விளக்கமளித்தனர்.

குறிப்பாகச் சில பெயர்கள்:
குங்குட்டோ - முக்காடாக தலையில் சுற்றியிருக்கும் தாவணி. இந்தத் தாவணியில் சேர்க்கப்பட்டுள்ள மணிகளையும் ஜரிகைகளையும் இவர்கள் தாங்களே கைகளால் தைத்து தயாரிக்கின்றனர்.
சாட்டியா - இடுப்புப் பகுதியில் அணிந்துள்ள அலங்கரிக்கப்பட்ட துணியின் பெயர்.
காத்தொளி பேட்டியா - ஜாக்கெட்
லேப்போ - பாவாடை
பூரியா - மூக்குத்தி

நாங்கள் பேட்டி காணச் சென்ற கிராமத்தின் பெயர் பரிசல் பட்டு பி.எல்.தண்டா. இங்கு ஏறக்குறைய 450 குடும்பத்தினர் வாழ்கின்றனர். அனைவருமே லம்பாடி இன மக்கள் தான். இவர்கள் இங்கேயே குடியேறி திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று வாழ்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று சிலர் அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் பொதுவாக வீட்டில் இவர்கள் தாய்மொழியில்தான் உரையாடுகின்றனர். ஆனாலும் குடும்பத்தை விட்டு வெளியே வரும் போது தமிழ்மொழி முக்கியமாகிப் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தாய் மொழியை இளம் குழந்தைகள் மறக்கும் நிலையும் உருவாகி உள்ளது. இங்கேயே பிறந்து வளர்ந்து இங்குள்ள பள்ளியிலேயே கல்வி கற்று நன்கு தேறி திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றும் திருமதி. லதாமம்மா எங்களைக் காண வந்திருந்தார். லதாமம்மா இச்சமூக மக்களின் திருமணச் சடங்கை பற்றி விரிவாகக் கூறுவதையும் அதன் பின்னர் திரு.குபேரன் மீண்டும் திருமணச் சடங்கைப் பற்றி விவரிப்பதையும் ஒலிப்பதிவில் கேட்கலாம்.இங்கே!


திருமணம் தான் இவர்கள் வாழ்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. திருமணச் சடங்கைப் பற்றி விசாரித்த போது மிக ஆர்வத்துடன் தங்கள் வழக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

பொதுவாகவே இவர்கள் திருமணம் 4 நாட்கள் நடக்கின்றது. மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாள், அதன் பின்னர் பெண் வீட்டில் இரண்டு நாள். மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள் அவர் திருமணம் நடைபெறாமல் வரக்கூட்டாது.

பெண் பார்க்கும் சடங்கு என்பது தமிழர் சமூகத்தில் உள்ளது போன்று நிச்சயதார்த்தம் இல்லாமல் வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டார் 5 கிலோ வெல்லம் கொண்டு செல்வர். அத்தோடு சாராயமும் வெற்றிலை பாக்கும் கொண்டு செல்வர். சாராயம், வெல்லம், வெற்றிலை பாக்கை பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று முடிவாகின்றது. திருமணத்தில் மாப்பிளை பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் வழக்கமும் இவர்களுக்கு இல்லை. இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து 1 ரூபாய் (பரியா பணம்) கொடுத்து விட்டால் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என முடிவாகின்றது. பின்னர் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் ஒத்து வராமல் போய் பிரிய வேண்டும் என அவர்கள் நினைத்தால் அந்த ஒரு ரூபாய் பணத்தைத் திருப்பித் தந்து விடுவார்களாம். இப்படித் தந்தால் விவாகரத்து நடந்ததற்குச் சமம். அதற்காக திருமணத்திற்காகக் கொடுத்த அதே ஒரு ரூபாயை கணவன் மனைவி இருவரும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒரு 1 ரூபாயைக் கொடுத்தே மண வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதனைக் கணவன் மாத்திரம் தான் செய்வது வழக்கம். மனைவி செய்யும் வழக்கமில்லை. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களின் முன் கணவன் மனைவி வந்து 1 ரூபாயைக் கணவன் கொடுத்து மனவிலக்கு வேண்டும் என்று கேட்டால் மனைவியிடமிருந்து விலகிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவர்களின் திருமணச் சடங்கு மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. திருமண தினத்தின் முதல் நாள் இரவில் பெண் வீட்டில் உள்ள அனைவரும் அழ வேண்டுமாம். தங்கை எப்படி அழவேண்டும் அண்ணன் எப்படி அழ வேண்டும் என முறை வைத்திருக்கின்றனர். எப்படி ஒவ்வொருவரும் அழ வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் அனுபவசாலி பெரியவர்கள் கற்றுத் தருவார்களாம். அதனைக் கற்றுக் கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக அழ வேண்டும்.

திருமணத்திற்கு முதல் நாள் வீட்டின் மூலையில் ஒரு உலக்கையை வைத்து அதில் கங்கணம் கட்டு விடுவார்கள். பக்கத்தில் ஒரு பானையை வைத்து அதில் நீரை ஊற்றி நிறைத்து வைத்து விடுவார்கள். திருமண ஏற்பாட்டுச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை இந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும். இது கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு சடங்கு. பிறகு மறு நாள் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் தனித் தனியாக தயார் செய்து அலங்கரித்துக் கொண்டு வந்து திருமணச் சடங்கில் தாலி போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் பெண் வீட்டில் தான் நடக்குமாம். தமிழ் சமூகத் திருமணங்கள் போல கோயில்களில் இவர்கள் திருமணங்கள் நடப்பதில்லை. இக்கால லம்பாடி இனத் திருமணங்கள் தமிழர்கள் வழக்கம் போல கழுத்தில் தாலி கட்டி நடைபெறுகின்றது. கையில் அணியும் தாலி இப்போது வழக்கில் இல்லை. கணவன் உள்ள வயதான மூத்தாட்டிகள் மட்டுமே இந்த வகைத் தாலியை அணிந்திருக்கின்றனர்.

திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு மதிய வேளையில் ஆடு வெட்டி விருந்து தயாரித்து மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் திருப்திகராம விருந்தளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டாரை அழைத்துச் சென்று இதேபோல விருந்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதே போல 3 முறை மாற்றி மாற்றி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுமாம்.

கணவர் இறந்த பெண்கள் தங்கள் கையில் அணிந்துள்ள தாலியை எடுத்து விட வேண்டும். இந்தத் தாலி திருமணம் நடந்த நாள் முதல் கணவர் இறக்கும் வரையிலும் கையில் அணிந்திருக்க வேண்டும்.

கடவுள்
இவர்களின் கடவுள் மூடுபுக்கியா என அழைக்கப்படுகின்றது. ஆண் பெண் என உருவமில்லாத ஒரு கல் வடிவில் அமைந்த ஒரு வடிவமே இவர்கள் கடவுள்.


தொடரும்..

அன்புடன்
சுபா

லம்பாடி ஆதிக் குடிகள்:திருவண்ணாமலை - 1


லம்பாடி ஆதிக் குடிகள்





திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.)


லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர். இவர்கள் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) என்னும் ஒரு மொழியைப் பேசுகின்றனர். தற்சமயம இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விட தமிழை பேசுபவர்களாக உள்ளனர். இளைஞர்களோ குழந்தைகளோ இம்மொழியைப் பேச அவசியம் இல்லாத நிலை இருக்கின்ற காரணத்தால் இம்மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகி விட்ட நிலை இருப்பதை உணர முடிகின்றது. வயதான சில பெண்களும் ஆண்களும் மட்டும் தங்களுக்குள் இம்மொழியில் உரையாடிக் கொள்கின்றனர்.

விழியப் பதிவைக் காண:
(பதிவு செய்யபப்ட்ட நாள்: 07-மார்ச்-2011)

ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் பெயர்ந்து செல்லும் வகையில் தங்கள் கூடாரங்களையும் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் லம்பாடி இன மக்கள். இந்த போக்கும் தற்சமயம் மாற்றம் கண்டுள்ளது. நிலையாக ஒரே இடத்தில் இருந்து அங்கேயே விவசாயம், கைத்தொழில்கள், கூலி வேலை என சிறு சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் இம்மக்கள். இதனால் நிலையான் அகுடிசை, சிறு வீடுகள் என்று இவர்களின் அடிப்படை வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்து மக்களும் மிகக் குறைந்த் அளவில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்று சற்று மேம்பாடு அடைந்தும் வருகின்றனர் என்பதைக் காண முடிந்தது.


சிறப்பு பண்டிகைகள் எனும் போது இவர்களுக்கு ஹோலி பண்டிகை முக்கியமானதாக அமைகின்றது. ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பகக்த்தில் இந்தக் கட்டுரையை முழுமையாகக் காண இங்கே செல்லலாம்!





அன்புடன்
சுபா

Saturday, September 17, 2011

இத்தாலியன் பாஸ்டா - பறங்கிக்காய் டாக்லியடெல்ல

இன்று என் சமையலறையிலிருந்து மேலும் ஒரு பாஸ்டா சமையல் குறிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சுடச் சுட சூடான சமையல் குறிப்பு. சற்று முன்னர் தான் தயாரித்து அலங்கரித்து மேசையில் வைத்துச் சாப்பிட்டு ருசித்து விட்டு சமையல் குறிப்பை பகிர்ந்து கொள்கின்றேன்.

பறங்கிக்காய் டாக்லியடெல்ல (Tagliatelle)

தேவையான பொருட்கள்

- பாஸ்டா டாக்லியடெல்ல வகை (இது சுருளாக இருக்கும்) http://en.wikipedia.org/wiki/Tagliatelle இப்பக்கம் சென்றால் இந்த வகை நூடல் பற்றி விளக்கமாக விக்கியில் அறிந்து கொள்ளலாம்.
- பறங்கிக்காய் (ஹொக்கைடோ) - பாதி
- வெங்காயம் - 1 பெரியது
- கருப்பு ஆலீவ் கொட்டைகள் - 10
- பெஸ்டோ விழுது (இது காய்ந்த தக்காளி, மிளகாய் சேர்த்து அறைத்து ஆலிவ் எண்ணெயில் கலந்தது)
- ஆலிவ் எண்ணை - 1 சிறிய கரண்டி
- அவாகாடோ - 1 முழுதும்
- இத்தாலியன் துளசி
- ரோஸ்மேரி இலைகள்
- உப்பு - தேவையான அளவு
- கருப்பு மிளகுப் பொடி - தேவையான அளவு


படத்தில் டாக்லியடெல்ல பாஸ்டாவையும் ஹொக்கைடோ வகை பறங்கிக்காயையும் காணலாம்.

செய்முறை

1.ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 2 கரண்டி உப்பு சேர்த்து அதில் டாக்லியடெல்ல பாஸ்டாவை போட்டு கொதிக்க வைக்கவும். பாஸ்டா மெண்மையாக ஆகும் வரை.

2. ஒரு நோன்ஸ்டிக்கர் பேன் எடுத்து அதில் 1 கரண்டி ஆலிவ் எண்ணெ விட்டு சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் அதில் சிறு துண்டுகளாக வெட்டிய பறங்கிக்காயைச் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து மெதுவான சூட்டில் வேகவைக்கவும்.

4.இப்போது 3 கரண்டி பெஸ்டோவைப் பறங்கிக்காயுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்.

5. பாஸ்டா மெண்மையாக வெந்தவுடன் அதில் உள்ள நீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும்.

6.இப்போது பாஸ்டாவை பறங்கிக்காய் கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.

7.ரோஸ்மேரி இலைகளை காம்பிலிருந்து பிரித்து பாஸ்டாவில் கலந்து மேலும் கிளறவும். இப்போது ஆலிவ் கொட்டைகளைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி வைக்கவும்.

8.உப்பு சரிபார்த்து போதவில்லையென்றால் கொஞ்சம் சேர்க்கலாம். இப்போது மிளகுத் தூளை கொஞ்சமாகச் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

9.அவகாடோ பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிதாக விரும்பும் வண்ணம் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

இப்போது பாஸ்டா தயாராகி விட்டது. இதனை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து வைத்தால் சுவையை நிச்சயம் கூட்டும். ஆக தட்டில் பாஸ்டாவை வைத்து அதில் வெட்டிய அவகாடோ பழத்தின் கீற்றுகளை வைத்து விரும்பும் வகையில் அலங்கரித்து மேசையில் வைத்து பரிமாறி சாப்பிட்டு மகிழவும்.


அன்புடன்
சுபா

கூத்தனார் அப்பன் - திருவண்ணாமலை

கூத்தனார் அப்பன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனார் அப்பன் சிலை உள்ளது.


கூத்தனார் அப்பன் சிலை

கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதி கைகள் போன்ற இரண்டு பக்கத்திலும் பின்னர் கீழ்பகுதி என அமைந்துள்ளது இச்சிலை. சிலை ஏறக்குறைய 10 அடி உயரம் கொண்டது. இச்சிலையின் மேல் ஆங்காங்கே மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து பக்கத்தில் மணிகட்டி ஆலய வழிபாட்டு பொருட்களையும் வைத்து எளிமையான முறையில் கோயில் வழிபாட்டினை செய்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

இவ்வூர் மக்களுடன் பேசி அவர்களை இச்சிலை பற்றி விசாரித்த போது பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

இம்மக்கள் இச்சிலையை கூத்தாண்டவர் சாமி என அழைக்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறை ஆடிமாதத்தில் இங்கே சிறப்பாக திருவிழா எடுத்து விஷேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். முப்பூசை எனப்படும் ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றை பலி கொடுத்து அதனை சமைத்து படையல் செய்து இந்தச் சிலைக்கு வழிபாடு செய்கின்றனர்.

அபிஷேகத்திற்கு வீட்டிற்கு ஒன்றாக குடங்களில் நீர் எடுத்து வரப்படுகின்றது. இந்த நீரைக் கொண்டு இச்சிலையை அபிஷேகம் செய்து பின்னர் எண்ணெய் சீயக்காய் தேய்த்து சுத்தம் செய்து அலங்கரிக்கின்றனர். அபிஷேகம் செய்யும் போது 108 குடங்களை வரிசப்படுத்தி ஏணி வைத்து மேலே ஏறி அபிஷேகம் செய்கின்றனர்.

எண்ணெய் சீயக்காய் கொண்டு சுத்தம் செய்த பின்னர் இச்சிலையை முழுதாக மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து அலங்கரிக்கின்றனர்

இந்தக் கிராம மக்களை மேலும் விசாரித்த போது இச்சிலையின் மேல் பகுதியை சிலர் வெட்டி எடுத்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்று இன்றும் வழிபாட்டிற்கு வைத்திருக்கின்றனர் என்ற செய்தியும் கிடைத்தது.

இது தாய் தெய்வத்தின் வடிவம் என்றும், பறவை கல் என்றும் கூட சொல்லப்படுகிறது. இந்த சிலையின் தலை பகுதி விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தான் இந்திய முழுக்க உள்ள அரவாணிகள் ஆண்டுதோறும் ஒன்று கூடி கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தங்களுக்குள் பிடித்த ஒருவரை தேர்ந்தெடுத்து முறைப்படி எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்து கொள்ளும் அரவாணிகள் இறுதி தினத்தில் கணவர்கள் இறந்து விட்டதாக தாலிகளை அறுத்து எறியும் சடங்கும் இதில் அடங்கும்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தொல்லியல் ஆய்வுக்காக வந்த ஆய்வாளர்கள் காடுகள் நிறைந்த இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தி இங்கு கிடைத்த சில பொருட்களை ஆய்வுக்காகவும் பாதுகாப்பதற்கும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வுப் பணிகள் முடிந்து அவர்கள் சென்ற பிறகு இந்தச் சிலை அங்கேயே இருந்ததால் ஊர் மக்கள் அதனை வழிபடும் இறைவனாகப் பாவித்து இன்று வரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தச் சிலைக்கு முன் புறத்தில் உள்ள பெரிய நிலத்தில் ஆங்காங்கே சிறிய மேடுகளைக் காண முடிகின்றது. இவை என்னவாக இருக்கும் என விவரம் கேட்டபோது இங்கு வாழ்கின்ற இம்மக்கள் அதற்கான விளக்கம் அளித்தனர். முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்களோ சிற்றரசர்களோ ஏதாவது ஒரு காரணத்திற்காக இப்பகுதியை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது தங்களுக்கு உடனடித் தேவைக்கு மட்டும் கொஞ்சம் பொருட்களை எடுத்துக் கொண்டு ஏனையவற்றை இவ்வகையான ஆழமான குழிகளைத் தோண்டி அவற்றிற்குள் பொருட்களைப் பத்திரமாக புதைத்து வைத்து விட்டுச் சென்று விடுவார்களாம். மீண்டும் தாங்கள் திரும்பி வரும் போது பொருட்களை எடுத்துக் கொள்வார்களாம். காடாக இருந்த இப்பகுதி எதிரிகளிடமிருந்து உடமைப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் இவ்வகையில் உதவி இருக்கின்றது.

மேடுகள்

இந்திய தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியினால் இந்த இடம் கண்டெடுக்கப்பட்டு இச்சிலை பொதுமக்களுக்குத் தெரிய வந்த பின்னரும் கூட இப்பகுதி முழுமையாக ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படாத நிலை இருப்பது தெரிகின்றது. கடந்த கால தொல்லியல் ஆய்வுகளின் போது இப்பகுதில் இவ்வகையில் காணப்படும் இச்சிறு மேடுகளை ஆய்வாளர்கள் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்த போது வழிபாட்டுப் பொருட்கள் சில கிடைத்தன என்று இம்மக்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. இப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியுள்ளதால் மாவட்ட ஆட்சியாளர் பொது மக்கள் இம்மேடுகளை தோண்டக்கூடாது என தெரிவித்து கட்டளையிட்டிருக்கின்றனர். அதோடு பொது மக்களுக்கும் இவற்றை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்தால் அது கடவுள் குற்றம் என நினைத்து நோய் ஏற்படுவதாக நினைப்பதால் இவற்றை ஏதும் செய்யாமல் ஆங்காங்கே செடிகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். மக்களின் இவ்வகை நம்பிக்கையே இப்பகுதியில் மறைந்து கிடக்கின்ற ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிகின்றது.

படங்கள், விழியம்(வீடியோ) பதிவுகளைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா

Saturday, July 16, 2011

தேன் உண்ணும் வண்டு

இயற்கை விரும்பிகளே,

நீங்கள் பார்த்து ரசிக்க என் தோட்டத்து மலர் மட்டுமன்றி இங்கு வந்து செல்லும் வண்டையும் படம் பிடித்து இங்கே இணைத்திருக்கின்றேன். உங்கள் ரசனைக்காக..!



தேன் அருந்துவதற்காக இந்த வண்டு செய்யும் ப்ரயத்தனத்தைப் பாருங்களேன்..!




இப்ப்படங்களுக்கு மின் தமிழ் நண்பர்கள் வழங்கிய கவிதைகள்..

பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்
-சூளாமணி:449
இன்னம்பூரான்
16 07 2011

மலரில் தேடும் வண்டே!
நீ தேடுவது தேனையென்பார்.
இல்லை இல்லை
ராஜத்தை யென்பேன் யான்.
-மோகனரங்கன்


வண்டே தேனைத் தேடுவது உன் இயல்பு
பண்டே சிந்தை புகுவது உன் தவிப்பு
சண்டே என்றாலும் சலிக்காமல் பறப்பு
உண்டே களைத்தாலும் சுற்றிவரும் ஈர்ப்பு!
-பவளசங்கரி


என் இனிய வண்டே ...

கவி செய்த மாயமென்னைக்
காற்றில் தாங்கிவந்து
மலைக்காட்சி மடியில் வைத்துக்
கலிக்கொல்லை காணச்செய்து
"ஜெட்-லாகில்" போட்டிருக்கு...

இணைய அன்பு ஈர்க்கிறது
கண்ணசத்தல் பறிக்கிறது
தாள் குவியல் தடுக்கிறது
வருவேன் ஒருநாள் இந்த
மாளிகையின் வாசலுக்கே.
அன்புக்கும் நட்புக்கும் மிக்க நன்றி!
--ராஜம்

Sunday, July 10, 2011

Tränendes Herz

ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல்.. இதோ.


இதுவும் ஒரு வசந்த கால மலர்ச்செடி வகை.

இந்தப் பூச்செடியின் பெயர் டோய்ச் மொழியில் Tränendes Herz. கண்ணீருடன் உள்ள இதயம் என்று மொழி பெயர்க்கலாம். இச்செடி வகையின் பூர்வீகம் சீனா என செடிகளுக்கான ப்ரத்தியேகமான விக்கி குறிப்பிடுகின்றது.

நீர் சொட்டுவது போலவும் இதயம் போன்ற அமைப்பிலும் இப்பூ உள்ளதைப் பாருங்கள்.


சரமாக இளம் சிவப்பில் இருதயம் போன்ற வடிவில் மலர்கள் இருக்கும். இந்தச் செடி குளிர் காலம் முடிந்ததும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மண்ணுக்குள்ளிருந்து முளைத்து வரும். மே மாதம் பூக்கத்தொடங்கி இம்மலர்கள் ஜூன் ஜூலை மாத ஆரம்பம் வரை பூத்துக் கொண்டிருக்கும். ஒரு சரம் ஏறக்குறைய இரண்டு மாதங்களும் அப்படியே காய்ந்து விழாமல் இருக்கும்.


இந்தச் செடி ஜூலை மாத ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலர்களை உதிர்த்து பின்னர் பழுப்பு நிற இலைகளுக்கு மாறும். ஜூலை மாதக் கடைசியில் முழுதும் வாடி விழுந்து விடும் பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்தச் செடி இருப்பதே தெரியாது. வசந்த கால பூ வகைகளில் இது வித்தியாசமான வடிவில் அமைந்த ஒன்று.

என்னிடம் உள்ள இந்தச் செடி கடந்த 5 ஆண்டுகளாக இருக்கின்றது. மீண்டும் வந்து மலர்ந்து இனிமை சேர்த்து மறைந்து கொள்ளும் செடி இது.

விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Lamprocapnos_spectabilis பகுதியில் மேலும் இத்தாவர வகை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுபா

Sunday, July 3, 2011

ஜம்போ மிளகாய் பாஸ்டா

இன்று ஜம்போ மிளகாய் பயன்படுத்தி இத்தாலிய உணவான பாஸ்டா தயாரித்தேன். ஜம்போ மிளகாய் கொஞ்சம் காரம் தான். ஆனால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பச்சை மிளகாய் காரத்தை விட சற்று குறைவான காரம்.

இந்த வகை பாஸ்டா தயாரிக்க உங்களுக்கு 30 நிமிடங்கள் போதும்.

2 பேருக்கு தயாரிக்கும் அளவு:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்டா - 2 பேருக்கு சமைக்க 350 கி பாஸ்டா. இதில் குறிப்பாக மக்கரொனி, ஸ்பெகட்டி போன்று இல்லாமல் சிறிதாக இருக்கும் எந்த வகை பாஸ்டாவையும் இந்த ரெஸிப்பிக்கு பயன்படுத்தலாம்.

இந்தப் படத்தை பாருங்கள்.

இதில் உள்ள சிறிய வகைகள் பல தமிழகத்திலும் கிடைக்கின்றன. குறிப்பாக பென்ன, ஸ்பிராலி வகைகள் பயன்படுத்தலாம். நான் இன்று பயன்படுத்தியது பென்ன வகை பாஸ்டா.

மற்ற தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (பெரியது)
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
ப்ரொகோலி - 50கிராம்.
குடை மிளகாய் - (சிவப்பு, மஞ்சள், பச்சை - மூன்றையும் பயன்படுத்தலாம்)
கேரட் - 1
ஆலிவ் எண்ணெய்
பெஸ்டோ - அரைத்த விழுது (4 கரண்டி) (இது சூப்பர் மார்க்கெட்டில் இத்தாலிய உணவு வகை பகுதியில் கிடைக்கும். இது அடிப்படையில் இத்தாலிய துளசி + மல்லி + பூண்டு அறைத்து ஆலிவ் எண்ணெயில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் விழுது)
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி

காய்கறிகளை உங்களுக்கு பிடித்த வகையில் வெட்டிக் கொள்ளுங்கள்.

என் தோட்டத்தில் காய்த்த மிளகாய் இன்றைய சமையலில்..! ஜம்போ மிளகாய் பக்கத்தில் டொஸ்கானா மிளகாய்.

ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதித்ததும் அதில் உப்பு 2 சிறிய கரண்டி சேர்த்து ஆலிவ் எண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து 350 கி பாஸ்டாவையும் அதில் போட்டு கொதிக்க விடுங்கள். 10 நிமிடங்கள் நன்கு வெந்து மெண்மையானதும் நீரை வடிகட்டி விடுங்கள்.

பாஸ்டா வெந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு நோன்-ஸ்டிக் பேனில் ஆலிவ் எண்ணெய் விட்டு அதிகம் சூடாகும் முன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் வதக்கிய பின்னர் குடை மிளகாய், காரட்களை சேர்த்து வதக்கவும். இப்போது பெஸ்டோ விழுதை சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்குப் பின்னர் ப்ரோக்கோலி சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் ப்ரோக்கோலி வதங்கியதும் அதில் இப்போது வடித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளரவும். உப்பு மேலும் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.

காரம் மேலும் தேவையென்றால் கொஞ்சம் கருப்பு மிளகு தூளாக்கி சேர்க்கவும்.

5 நிமிடங்கள் பாஸ்டா நன்றாக காய்கறிகளுடன் கலந்தவுடன் சுடாகப் பரிமாறவும்.

அன்புடன்
சுபா

Sunday, June 26, 2011

காரம் சாப்பிட்டு நாட்களாகிவிட்டதா..?

இதோ என் வீட்டுத் தோட்டத்திலிருந்து இரண்டு வகை மிளகாய்கள்.

1.ஜம்போ பப்ரிக்கா.. இதில் ஒன்றிற்கு இப்போதே நீளம் ~10செமீ. தாண்டி விட்டது.



2.டொஸ்கானா பப்ரிகா (இத்தாலிய வகை)
காரம் எப்படின்னு தெரியலை. சமைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.



அன்புடன்
சுபா

Saturday, May 7, 2011

ஆம்சல்

இயற்கை விரும்பிகளின் கண்களுக்கு விருந்தாக இன்று சில படங்கள்..






இரண்டு ஜோடி கருப்புப் பறவைகள் (ஆங்கிலத்தில் blackbird , டோய்ச் மொழியில் Amsel) எப்போதும் வசந்த காலம் தொடங்கும் போது... இவை அழையா விருந்தினராக என் தோட்டத்திற்கு வந்து விடும்.





பனிக்காலத்தில் என்றாவது ஒரு நாள் என் தோட்டத்திற்கு வருகை தரும் இவை வசந்த காலம் முழுவதும் கோடை காலம் முழுவதும் தோட்டத்தில் அங்கும் இங்கு பறந்து கொண்டிருக்கும். இந்த ஆம்செல் எப்போதும் ஜோடியாகத் தான் வரும். தனியாக நான் ஒரு நாளும் பார்த்ததில்லை.





வசந்த கால தொடக்கத்தில் மண்ணைக் கிளறி புதிய செடிகளை நட்டு வைக்கும் போது வெளிப்படும் புழுக்கள் இவற்றின் விருந்து. அப்போது படு சுறுசுறுப்பாக இவை குதித்து குதித்துச் சென்று புழுக்களை அலகால் கொத்திச் விழுங்குவதைப் பார்த்து ரசிக்கலாம்.





இப்போது தினம் தோட்டத்திலேயே இருக்கின்றன. அங்குள்ள சிறிய பழங்களை அவை விரும்பிச் சாப்பிடுகின்றன. சாப்பிட்டு விட்டு தோட்டத்திலுள்ள சிறிய மீன் குளத்திலும் குளிக்கத் தவறுவதில்லை. இந்த 26 டிகிரி வெயில் கூட அவற்றிற்கு களைப்பை ஏற்படுத்துகின்றன போலும்..!



ஆம்செல் என்றோர் உயிரழகு ஊட்டி
டாம்செல் என்னும் துணையொடு கூட்டி
நாம்செல் நாள்வரை நயந்திடும் இன்பம்
ஆம்செலக் கூடும் அழகிது போதும். !!
:-)

-மோகனரங்கன்

அன்புடன்
சுபா