2011ம் வருடம் முடியப் போகின்றது. கோடை காலம் முடிந்து இலையுதிர் காலமும் வந்து போய் இப்போது குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. இப்போது என் சிறு தோட்டத்தில் பெரும்பாலான செடிகள் இலைகள் உதிர்த்து நீண்ட உறக்கத்திற்குச் சென்று விட்டன. ஒரு சில குளிர் தாங்கும் குளிர்காலச் செடிகள் தங்கள் ஊசி இலைகளை வைத்துக் கொண்டு சற்று பசுமையைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
இப்போது இல்லையென்றாலும் கோடைகாலத்தில் தோட்டத்தில் பதிவு செய்த சில புகைப்படங்கள் எனது தொகுப்பில் வைத்திருக்கின்றேன். அதில் ஒரு பழச்செடி பற்றிய தகவல் ஒன்றினை இன்று மின்தமிழ் வாசகர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆசிய நாடுகளில் இதனைப் பார்ப்பது கடினம். ஆங்கிலத்தில் Red currant என்றும் ஜெர்மானிய டோய்ச் மொழியில் Johannesbeeren என்றும் இப்பழங்கள் அழைக்கப்படுகின்றன. பெர்ரி வகை பழக்கூட்டத்தைச் சார்ந்தது இப்பழம். ரெட் க்ரண்ட் போலவே கருப்பு அல்லது கரும் நீலத்தில் இருக்கும் வகையை Black Currant ( ப்ளாக் கரண்ட் ) என்று அழைக்கப்படுகின்றது.
என் தோட்டத்தில் இந்தச் செடி நட்டு வைத்து ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. செடி குட்டையாக இருக்கும். குளிர்காலத்தின் கடுமையைத் தாங்கக் கூடிய தன்மை வாய்ந்தது இந்தச் செடி. ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இதன் சிறு கிளைகளில் துளிர் வந்து மேத மாத ஆரம்பத்திலேயே செடி முழுதும் இலைகள் நிரம்பி விடும். சரம் சரமான குட்டி குட்டி பழங்களை மே மாத இறுதிக்குள் காணலாம். வெயில் அதிகம் உள்ள இடங்களில் ஜூன் மாத இறுதியிலேயே பழங்கள் நிறம் மாறி சிவப்பு முத்துக்களாக தோற்றமளிக்கும். என் தோட்டத்தில் உள்ள இந்த ஒரு செடியில் பொதுவாக ஜூலை மாத இறுதியில் நிறைய பழங்களைப் பார்க்கலாம்.
சுவை என்று சொல்லும் போது அதீத புளிப்பு சுவை கொண்டது இது. இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஐஸ் க்ரீம் தயாரித்து அதன் மேல் அலங்கரித்தும் சாப்பிடலாம். உணவை அலங்கரிக்கவும் கோடை காலத்தில் நான் இந்த பழங்களைப் பயன்படுத்துவதுண்டு. ஜெர்மனியில் இப்பழங்களைக் கொண்டு பலர் இல்லங்களிலேயே ஜேம் தயாரித்து விடுவர். சர்க்கரையுடன் கலந்து வரும் போது ஜேம் சுவை மிக இனிப்பாக சுவையாக இருக்கும்.
இந்தச் செடி Grossulariaceae என்ற செடி வகையைச் சார்ந்தது. நிறைந்த மருத்துவ பலனையும் கொண்டவை இப்பழங்கள். இச்செடி மற்றும் பழவகை தொடர்பான மேலும் பல தகவல்களுக்கு http://en.wikipedia.org/wiki/Redcurrant செல்க.
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment