Thursday, January 30, 2014

Robert Langdon is back..! - Mappa dell' Inferno. - 15

இன்பெஃர்னோவின் அலை இங்கு இன்னமும் ஓயவில்லை. இங்கு புத்தகக் கடைகளில் ஒரு பகுதியில் சின்ன குன்று போல இன்பெஃர்னோ அடுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வளவு வரவேற்பு இன்னமும் இந்த நூலுக்கு இருக்கின்றது.


இன்று மேலும் ஒரு சித்திரத்தை அறிமுகப்படுத்துகின்றேன்.  இது ஒரு வரைபடம். பெயரே அச்சமூட்டும் வகையில் இருக்கும் ஒரு வரை படம்.:-)

Mappa dell' Inferno (இத்தாலி) -  ஆங்கிலத்தில் Map of Hell, அதாவது தமிழில் நரகத்தின் வரைபடம்.

Inline image 1
முழு படம்


கீழே இருப்பது அம்முழு படத்தின் பெரிதாக்கப்பட்ட ஒரு சிறு பகுதி.
Inline image 2


டாண்டேயின் டிவைன் கோமெடியின் ஒரு அத்தியாயத்தை விளக்கும் வகையில் போத்திசெல்லி (Sandro Botticelli) என்ற சித்திரக் கலைஞர் 1480-1490 கால வாக்கில் தீட்டிய சித்திரம் இது. 

போத்திசெல்லி டாண்டேயின் காவியத்தில் முழுமையாக தன்னை இழந்து இந்த ஓவியத்தை வரைந்ததாக வஸாரி தனது பையோக்ராபியில் குறிப்பிடுகின்றார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை முடித்து ப்ளோரன்ஸ் திரும்பியவுடன் பல காலங்களை இந்த ஓவியம் வரைவதிலேயே போத்திசெல்லி செல்வழித்தார் என்பது போல இக்குறிப்பு வருகின்றது. (The lives of the Artist - Vasari 1550)

இன்பெஃர்னோவில் 58ம் அத்தியாயத்தில்  ஸோப்ரிஸ்ட் இந்த வரைபடத்தை மாற்றி அந்த பெரிய அறிஞர்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டமையை ரோபர்ட் குறிப்பிடுவது போல டான் ப்ரவ்ன் குறிப்பிடுகின்றார். இது சியென்னாவுக்கு சொல்வது போல வருகின்றது. ரோபர்ட்டை விட சியன்னாவுக்கு ஸோப்ரிஸ்டை நன்கு தெரியும் என்பது அப்போது ரோபர்ட்டிற்குத் தெரியாது. :-)

இந்த கலைப்படைப்பு மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஒன்று. இப்போது பார்க்கக் கிடைப்பவை 92 பகுதிகளாக இருக்கின்றன. அதில் 7 பகுதிகள் வாட்டிக்கனின் வாட்டிக்கன் நூலகத்தில் உள்ளன. ஏனைய 85 பகுதிகள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள Kupferstichkabinett (Museum of Prints and Drawings) கலை ஓவிய அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.

ஏனைய சில கலைஞர்கள் டாண்டேயின் இந்த நரகத்தின் வரைபடத்தை ஓவியமாக வரைந்திருந்தாலும் போத்திசெல்லியின் இந்த கலைப்படைப்பே மிக நுணுக்கமான முறையில் இதனை விளக்குவது. ஒன்பது படி நிலைகளில் வெவ்வேறு விதமான பாவங்களைச் செய்தவர்களுக்கு ஒரு தளம் என்ற வகையில் படிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படிநிலையும் விளக்கப்படுகின்றது.  இந்த பட்டியலைப் பார்த்தால் யாருக்கு எந்தப் படி நிலை நரகத்தில் கிடைக்கும் என அறிந்து தம்மை தாமே ன்ப்-ஆம் நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம் :-)

நான் வாட்டிக்கன் சென்ற போதும் இதனைக் காணவில்லை. பெர்லினின் இந்த அருங்காட்சியகத்திற்கும் இன்னமும் செல்லவில்லை. வாய்ப்பு கிடைத்தால் பார்த்து புகைப்படமெடுத்து பகிர்ந்து கொள்கிறேன்.
 
சுபா

Tuesday, January 28, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 5

திரு.ஈ.வே.ராவின் மலாயாவுக்கான பயணம் 1929 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்திருக்கின்றது. இந்தப் பயணத்தின் போது பினாங்கு மானிலத்திலும் ஈப்போ மானிலத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பேசியவற்றின் குறிப்புக்கள் 1930ம் ஆண்டு பெப்ரவரி மாத குடியரசு இதழில் பதிவாகியிருக்கின்றன.

திரு.ஈ.வே.ரா பினாங்கில் அவருக்குக் கிடைத்த வரவேற்பை நினைத்து திருப்தியடையவில்லை என அறிய முடிகின்றது. குடியரசு குறிப்பு கீழ்க்காணும் வகையில் இருக்கின்றது.

தனக்கும் தனது நண்பர்களுக்கு இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும் உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றிப் பேசிய புகழ் வார்த்தைகளும் தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்து தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்தமற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலாய் நாட்டுப் பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு ...

என்பதாக இக்குறிப்பு குடியரசில் இடம்பெறுகின்றது. திரு.ஈ.வே.ராவின் கொள்கைக்கு எதிரான அதிகப்படியான புகழ் வார்த்தைகள், சடங்கு சம்பிரதாயங்கள் கூடிய வரவேற்பு என பினாங்கு தமிழ் மக்கள் செய்திருப்பார்கள் போலும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

20-12-1929 அன்று ஜனாப் முகமது ராவுத்தர் அவர்களின் மாளிகையில் பேசுகையில் ..

நாங்கள் இங்கு எந்த கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ ஆதரவையோ உண்டாக்க வரவில்லையென்றும் மற்றவர்களைப் போல் பணம் வசூல் செய்து மூட்டைக் கட்டிப் போக வரவில்லையென்றும் உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோமென்றும் அதற்கு தக்க உதாரணங்கள் காட்டி பேசினோம்.

என்றும் பதிவாகியுள்ளது.

20, 21ம் தேதிகளில் பினாங்கில் அங்கு ஏற்பாடாகியிருந்த சில நிகழ்ச்சிகளில் திரு.ஈ.வே.ரா. பங்கெடுத்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

பினாங்கில் அடுத்து 21ம் தேதி நிகழ்ந்த இன்னொரு சந்திப்பில் கப்பல் பயணிகள் குறை நிவாரண சங்கத்தில் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சியில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் 20,21.12.1929 அன்று இப்படிக் கூறியதாக 1930ம் ஆண்டு பெப்ரவரி குடி அரசு குறிப்பிடுகின்றது.

கடவுளைப் பற்றியோ, சமயங்களைப் பற்றியோ பிரச்சாரம் செய்வது தனது வேலை அல்லவென்றும்  தான் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களுக்கு அதன் எதிரிகள் தக்க சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாமல் பயங்காளித் தனமாயும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியும் கடவுள்கள், மதங்கள், வேதங்கள், புராணங்கள் என்பவைகளைக் கொண்டு வந்து மூட்டுக் கட்டையாய்ப் போடுவதால் அவைகளை எடுத்து எறிந்து விட்டு முன் செல்ல வேண்டிய நிர்பந்தம் தனக்கு ஏற்படுகின்றதென்றும் ஆனாலும் கடவுளும், உண்மையான மதமும் உண்மையான வேதமும் கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டிய தில்லை என்றும் சொன்னார்.

குடி அரசு - சொற்பொழிவு - 02.02.1930


மலாயாவில் எந்தெந்த இடங்களுக்கு திரு.ஈ.வே.ரா சென்றார் என முழுமையான விவரம் கிடைக்கவில்லை. ஆனால் திரு.ஈ.வே.ரா இருந்த காலத்தில் நிகழ்ச்சிகள் பல நடந்தமையும் தொடர்ச்சியாக அவர் மக்களை சந்தித்து சமூக சீர்திருத்தங்களின் அவசியம் பற்றி உரையாற்றினார் என்பதும் அறிய முடிகின்றது.

டிசம்பர் 1929ம் ஆண்டு தனது மனைவி நாகம்மாளுடன் நாகப்பட்டிணத்திலிருந்து கப்பல் எடுத்து மலாயா புறப்பட்டு பினாங்கு வந்து சேர்ந்திருக்கின்றார்கள். அங்கு அவரை 50,000 பினாங்கு தமிழர்கள் வரவேற்றிருக்கின்றனர். அதே மாதத்தில் ஈப்போவில் தமிழர் முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தமிழர் கருத்தரங்கத்தை தலைமை தாங்கி திறந்து வைத்து உரையாற்றியிருக்கின்றார். பின்னர் அங்கிருந்து இவர்கள் சிங்கப்பூர் சென்றிருக்கின்றனர்.(http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy)

மலாயாவில் அக்காலத்தில் இருந்த தென்னிந்திய மக்களில் பலர் தோட்டத் தொழிலாளர்களாகவும் வணிகர்களாகவும் தொழில் செய்ய தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். 

கூலிகளாக வந்த பலர் தோட்டக்காடுகளை அழித்து பால்மரத்தோட்டமும் செம்பனைத் தோட்டமும் வளர உழைத்தவர்கள். ஆங்கில காலணித்துவ அரசில் இவர்கள் அனைவரும் ஒரு வகையில் உழைக்கும் இயந்திரங்களாகவே பார்க்கப்பட்டனர் என்பதை எனது பொங்கல் தின சிறப்பு வெளியீடான மலேசிய தமிழ் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களின் பேட்டியின் வழியாகவும் கேட்டு அறியலாம். இந்த காலகட்டங்களில் மலாயாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்த தமிழர்களின் நிலை பல்வேறு வகைகளில் சிரமங்கள் நிறைந்ததாகவே இருந்தது. குடும்பங்களாக வந்தவர்கள் உறவுகளை தமிழகத்தில் விட்டு புது வாழ்க்கையை கடல் கடந்த சூழலில் உருவாக்க முனைந்தவர்கள். ஏற்கனவே தென்னிந்திய சூழலில் சாதிப் பிரிவினையின் தாக்கத்தை அறிந்தவர்கள். மலாயா வந்து சேர்ந்த சிலர் குழுக்களாக தங்கள் தங்கள் சாதி மக்கள் என்ற வகையில் வாழ நினைத்தவர்கள் என்ற போதிலும் புதிய இடத்தின் சூழல் அதற்கு முழுதாக வழி வகுக்கவில்லை. தமிழக நிலையில் இருந்த சாதி கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையாக, பல சமூக மக்களும் கலந்து பழகும் வாழ்க்கை நிலை விரும்பியோ விரும்பாமலோ அமைந்த காலம் அது. 

பெரியாரின் முயற்சிகளின் வழியாக சில தமிழ் மொழி-இனம் சார்ந்த கழகங்கள் தொடர்ந்து மலாயாவில் செயல்படத் தொடங்கியமையும் பின்னர் படிப்படியாக சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாகவும் நடைபெற்றன. 1980களில் பினாங்கு எழுத்தாளர் சங்கமும் ஓரிரு நிகழ்ச்சிகளைப் பெரியார் சுயமரியாதை சீர்திருத்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்த்தியதாக நினைவு.

சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 62

தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது.

ஏனைய பாடங்களை முடித்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தம் மாணாக்கர்களுக்குக் கம்பராமாயணப் பாடத்தை அப்போது தான் தொடங்கியிருந்தார். பாடல்கள் அனைத்திற்கும் பொருள் விளக்கம் தனித்தனியாக எனக் குறிப்பிடாமல் இடையிடையே நயமாக வருகின்ற செய்யுட்களுக்கு மட்டும் பொருள் சொல்வாராம் ஆசிரியர். கம்பராமாயணப் பாடம் நடத்தும் போது பூரணமாக அதனை ரசித்து நடத்தினார் பிள்ளையவர்கள் என உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

சில குறிப்பிட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் சொல்லி அதனை மனதார ரசிப்பாராம். கம்பரின் செய்யுட் திறனை பாராட்டி மகிழ்வாராம். இப்படி கம்பராமாயணப் பாடம் நடந்து கொண்டிருந்த வேளையில் பிள்ளையவர்களுக்கு பித்தப்பாண்டு என்னும் ஒரு வகை நோய் வந்திருக்கின்றது. இந்த நோய் பாதத்தை தாக்கி வயிற்றை வீங்க வைக்கும் தன்மையுடையதாம். (இந்த நோய்க்கு இப்போது வழக்கில் என்ன பெயர் எனத் தெரியவில்லை.) இந்த நோயினால் பிள்ளையவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருந்த நேரம். ஆனாலும் இந்த நோய் வந்தமையினால் பாடம் நடத்துதல் தடைபடவில்லை.  பாடம் சொல்லுதலே அவரது உடல் நோயை மறக்கச் செய்யும் மாமருந்தாக அவருக்கு அப்போது இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அந்த சூழலில் கம்பராமாயணத்தை ஆசிரியர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் சமயத்திலேயே கேட்கும் வாய்ப்பு அமையாமல் போனதே என வருந்திக் கொண்டிருந்தார் உ.வே.சா.

தனது மனக்கிலேசத்தை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

கம்பரை ஆசிரியர் பாராட்டும்போதெல்லாம் நான் கம்பரைக் காட்டிலும் ஆசிரியரைப் பற்றியே அதிகமாக நினைப்பேன். “இப்பெரிய நூலை முன்பே கேளாமற் போனோமே!” என்ற வருத்தம் உண்டாகும். “இவர்களுக்கு இவ்வியாதி வந்திருக்கிறதே; எப்படி முடியுமோ!” என்ற பயமும் என் மனத்தை அலைத்து வந்தது.

நோயால் வருந்திக் கொண்டிருந்த பிள்ளையவர்களைத் திருவிடைமருதூரிலிருக்கும் கட்டளை மடத்தில் இருந்து வர சகல வசதிகளும் செய்து கொடுத்து அனுப்பி வைத்தார் ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர். திருவிடைமருதூர் திருவாவடுதுறையிலிருந்து ஏறக்குறைய ஒன்றரை கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர். திருவாவடுதுறையில் ஆதீனத்தில் அதிகமானோர் வந்து செல்வது தவிர்க்க முடியாதது. ஆதீனகர்த்தரை வந்து பார்த்து மரியாதை செய்ய வருவோர் பிள்ளையவர்களையும் தேடிக் கொண்டு வந்து பேசுவதால் அதுவும் சிரமத்தைக் கொடுப்பதால் ஓய்வு தேவையென்ற எண்ணத்தில் இந்த ஏற்பாடு நிகழ்ந்திருக்கலாம்.

இங்கு வந்த பின்னர் உ.வே.சாவும் ஏனைய பிற மாணவர்களும் ஒரு நாள் விட்டு மறு நாளென ஆசிரியரை திருவிடைமருதூர் வந்து பார்த்து பாடம் கேட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த திருவிடைமருதூரில் இருக்கும் ஆதீனத்தின் பராமரிப்பின் கீழ் இருக்கும் சிவாலயம் மிகப் பழமை வாய்ந்தது. விஜயாலயச் சோழன் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் உத்தம சோழன் காலத்தில் விரிவாக்கப்பட்டு பின்னர் மேலும் அடுத்தடுத்து வந்த சோழ மன்னர்களால் மேலும் விரிவாக்கப்பட்ட அருமையானதொரு கலை நுட்பம் பொருந்திய ஒரு சிவாலயம் இது.

இந்த சிவாலயத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிவலிங்கம் என்ற வகையில் இரண்டு வரிசைகளில் வெவ்வேறு வடிவிலான லிங்கங்கள் ஓரிடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நான் வேறெங்கும் பார்த்திராத ஒரு அமைப்பு இது. இப்பகுதிக்குச் செல்வதற்கு முன் மண்டபத்தின் இடது புறத்தில் பாவை விளக்கு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. பல சன்னிதிகள் கொண்ட மிகப் பெரிய கோயில். கலை நயத்துடன் கட்டப்பட்ட ஒன்று என்றும் தயங்காது சொல்லலாம்.

திருவிடைமரூதூர் வந்து அங்கு கட்டளை மடத்தில் தங்கியிருந்த வேளையில் பிள்ளையவர்கள் ஓய்வாக இல்லை.  திருவிடைமருதூர் ஆலயத்தைப் பற்றி ஒரு திரிபு அந்தாதி ஒன்றினை அப்போது எழுதத் தொடங்கியிருந்தார் அவர். அது இக்காலகட்டத்திலேயே எழுதி முடிக்கப்பட்டு ஆதீனத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அத்தோடு அச்சமயத்திலேயே ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரத்தையும் எழுதத் தொடங்கினார் பிள்ளையவர்கள்.  ஸ்ரீ சிவஞான யோகிகள் மேல் ஆதீன கர்த்த்ர் சுப்பிரமணிய தேசிகருக்கு  மிகுந்த அன்பு இருந்ததாம். இதனால் இந்தச் சரித்திரத்தை மிக விரிவாக சிறப்பாக எழுத வேண்டும் என்பது பிள்ளையவர்களுக்கு ஒரு கனவாக இருந்திருக்கின்றது. ஆனால் அது நிறைவேறாத கனவாகவே முடிந்தது என்பது வருத்தம் தரும் ஒரு நிகழ்வு.

அந்த நிலையில் தன் குமாரன் சிதம்பரம் பிள்ளையின் திருமணத்திற்காக வாங்கிய கடன் முழுதும் தீர்ந்த பாடில்லை. அவ்வப்போது கிடைக்கும் வருமானத்தையும் ஏனைய மாணக்கர்கள் நலனுக்காகவே செலவிடும் குணமும் கொண்டவர் பிள்ளையவர்கள். இதனால் தனது சொந்த குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் இக்கட்டான நிலையில் இருப்பதை நினைத்து தீராத மனக்கவலை பிள்ளையவர்களுக்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். உடல் நோயுடன் மனக் கலக்கமும் அதிகரித்துக் கொண்டே வந்த காலச் சூழல் அது.

தொடரும்....

சுபா

Wednesday, January 22, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 4

தொடர்ச்சி - 4

பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை விவரிப்பது என்பது எளிமையானதன்று. ஒரு பெண்ணில் உளவியல் கூறுகளையும், வாழ்வியல் நிலைப்பாடுகளையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் நிகழ்வுகளை பால்ய விவாகம் செய்து விடுகின்றது.

பால்ய விவாகத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்..? சட்டதிட்டங்கள் தாம் அவற்றை நீக்கி விட்டனவே எனக் குறிப்பிட்டால் அதில் உண்மையில்லை என்பது சமகால சமூக சூழலை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். 

நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமன்றி, இந்தியாவில் பால்ய விவாகம் என்பது இன்றளவும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற மானிலங்களில் நடைபெறுவதை அறிய முடிகிறது. பால்ய திருமணம் என்ற விஷயம் மட்டுமல்ல... திருமணம் என்ற நிகழ்வில், அதிலும் தமிழ்ச் சமூக சூழலில் பெண் எத்தகைய வகையில் பார்க்கப்படுகின்றாள் என சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. 

கடமைக்காக திருமணம், சமூகத்துக்காகத் திருமணம், உறவை நிலைநாட்ட திருமணம், பொருளாதார நிலைப்பாட்டிற்காகத் திருமணம், அச்சத்தின் அடிப்படையில் திருமணம்...இப்படி பல திருமணங்கள்! 
இந்தப் பிறருக்காக நடைபெறுகின்ற திருமண நிகழ்வில் அந்த மணமகள்-மணமகனுக்காகத் திருமணம் நடைபெறுவது எந்த அளவு சாத்தியமாகின்றது? 

வரதட்சணை சட்டத்தால் தடை செய்யப்பட்டது எனத் தெரிந்தும் அது நடைமுறையில் ஏற்றுக் கொண்ட சமூகத்தில் தான் வாழ்கின்றோம், அதெற்கென்று நியாயங்களை தொடர்ந்து கூறிக்கொண்டு. 

கல்வி கற்று பொருளீட்டும் திறமையான பெண்ணாக இருந்தாலும் ஆணுக்கு அடங்கி நடக்கும் பெண்ணாகத் தான் திருமண சந்தை பெண்களைத் தேடுகின்றது. புரிதல், மனம் இயைந்த வாழ்க்கை, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்பன இரண்டாம் பட்ச விஷயங்களாகி விடுகின்றன. ஆண் சமூகம் மட்டுமல்ல; பெண்களே இப்படி பெண்களைச் சொல்லி நல்ல பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனப் போடப்படும் பட்டியலில்..
  • பெண் நன்கு சிந்திக்கக்கூடியவளா?
  • பொறுப்பாக ஒரு விஷயத்தை நடத்தக்கூடியவளா?
  • தைரியசாலியா?
  • பிரச்சனையை சமாளிக்ககூடியவளா?
  • நேர்மையான குணம் உள்ளதா?
  • இன்னன்ன திறமைகள் கொண்டவளா?
... என்பன போன்ற கேள்விகள் இடம் பெறுவதற்கு பதில் கேட்கப்படும் கேள்விகளும் நடத்தப்படும் தேர்வுகளும் வேறு விதமாகத் தான் அமைந்திருக்கின்றன.

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல சமமாக கல்வி கொடுத்து உலகம் வழங்கியிருக்கும் பல்வேறு வாய்ப்புக்களை அவர்களும் நுகர அனுமதி கொடுக்கும் பெற்றோர் இன்று பெருகி வருகின்றனர் என்பது உண்மையென்றாலும் சமூக கட்டுப்பாடுகள் எனச் சொல்லி சொல்லாலும், செயலாலும், உளவியல் தண்டனைகளாலும், பெண்களை அடிமைப் படுத்தும் போக்கு இன்னமும் மறையவில்லை என்பதுவும் உண்மை.  பெண்களின் வளர்ச்சியைத் தடைபடுத்த பல்வேறு காரணங்களை தேடிக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். 

திரு.ஈ.வே.ரா, 1925ல் நிகழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து குடி அரசில் ஒரு தலையங்கம் எழுதுகின்றார். அந்த நிகழ்வு கல்கத்தாவில் ஒரு இளைஞன் 10 வயதான தனது மனைவியை பாலியல் உறவுக்கு ஈடுபடுத்த அதில் நிகழ்ந்த ஏமாற்றத்தால் ஒரு குழவியால் அக்குழந்தை பெண்ணை தலையில் அடித்து உடைத்து கொன்ற நிகழ்வு.  இதன் தொடர்பாக அவரது எழுத்திலிருந்து ஒரு பகுதி.

இக்கோரமான கொலைச் செயல்களுக்குக் காரணமாக இருப்பது பால் மணம் மாறாச் சிறுமிகளை காமவிகாரத்தாற் கட்டுண்டு விலங்குகளைப் போல் திமிர் கொண்டலையும் இளம்  வாலிபர்களுக்கு வதுவை செய்து  பால் ஒப்புவிக்கும் கொடிய குற்றமான  வழக்கமென்று நாம் திண்ணமாகக் கூறுவோம். இத்தகைய கொடிய, அக்கிரமமான வழக்கம் இந்து சமயத்தின் பேரால் நடைபெறுவது நமக்குப் பேரவமானம். நமது சமயத்தின் நற்பெயரை நாசமாக்கி, நாமும் அழிவென்னும் பெருங்குழியில் வீழ்ந்து இறப்போம். உண்பதும், உறங்குவதும், பூண்டதும், மனவினைசெய்வதும், மக்கள் பெறுதலும் சமயக் கோட்பாடுகள் எனக் கூறின் இதனினும் அறியாமை வேறுளதோ? 

ஆண்டவனிடத்து மக்களைக் கொண்டு உய்விக்கும் அறிவு வழியே, ஆன்ம நெறியே சமயமல்லாது, சமூகக் கட்டுப்பாடு குலையாமல், சமூகம் என்றும் அழிவுறாமல் நின்று நிலவுதற்கான முறைகளில் சேர்க்கப்படுவனவாகிய  இவையெல்லாம் சமய நெறி எனக்கூறுதல் மடமையேயாகும்.....

......காலத்திற்குத் தக்கவாறும் இடத்திற்குகேற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளுதல் கூடாதென்று நியதி இல்லை. `பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானேன்` என ஆன்றோர் கூறியுள்ளார்.  மக்கள் செய்யும் மணவினை சமூக வாழ்க்கையைச் சார்ந்தே நடைபெறுவதாகும். குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்றப் பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்து குடும்பம் என்னும் குழுயில் வீழ்த்தி கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும் எந்த தர்ம சாஸ்திரமும் போதிக்கவில்லை என்பதை மக்கள் உணரல் வேண்டும். 

...அந்தோ! இந்திய மக்களே..... . சமய உண்மையை உணரார்கள்; சமூகவாழ்க்கை நிலையை அறியார்கள். மூடக் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளும் தான் இவர்கள் கண்ட உண்மைகள். விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போல் எல்லாமறிந்திருந்தும் இளம் சிறுமியர்களுக்கு மணஞ்செய்து பின்னர் அவர்களுக்கு நேரும் கதியைக் கண்டு ஏன் அழுகிறீர்கள்?...... இளம் வயதில்மண முடிப்பதனால் நேரும் துன்பங்களை நேரில் தாமாகவே அனுபவித்திருந்தும் தாய்மார்கள் இக்கொடிய வழக்கத்தை அறவே ஒழிக்க முன்வராதிருப்பது பெருங் குற்றமாகும். வேலியே பயிரை மேய்ந்தால் வேறு யார் துணை பயிருக்கு! பத்து மாதம் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி பொன்னேபோல் போற்றி வளர்த்த பெண் செல்வங்களுக்குத் தாய்மார்களே எமனாக ஏற்பட்டு விட்டால் அவரைக் காப்பாற்றுபவர் யார்? 

ஆண்மக்கள்தான் உயர்ந்தவர்கள், பெண்மக்கள் தாழ்ந்தவர்கள் ஆண்மக்கள் தான் அறிவு நிறைந்தவர்; பெண்மக்கள் அறிவில்லாதவர் என்ற கீழான எண்ணமும் இக்கொடுஞ் செயல்களுக்குக் காரணமாகும்.  இந்தத் தாழ்ந்த எண்ணம் நம்மவர்களை விட்டு அகல வேண்டும். ஆண்மக்களும் பெண்மக்களும் சரி நிகர் ஸமானம் என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். ஆண்மக்களை விடப் பெண்மக்கள் எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர்; சமூக வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் ஆண்மக்களுக்கு உள்ள உரிமைகள், பொறுப்புக்கள் பெண்மக்களுக்கும் உண்டு என்ற உயரிய, பரந்த விரிந்த நோக்கம் உதயமாதல் வேண்டும். 
-குடி அரசு தல்லையங்கம் - 07.06.1025


சுபா

Thursday, January 16, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 3

தொடர்ச்சி - 3

அண்ணல் காந்தியின் தேச நலக் கொள்கைகளின் தாக்கதை  திரு.ஈ.வேரா அவர்களின் குறிப்புகளில் குடியரசில் காண முடிகின்றது. உதாரணமாக முதல் குடியரசு பத்திரிக்கையில் வந்த இயந்திரமும் கை ராட்டினமும் என்ற ஒரு கட்டுரை.

இதில் எதற்காக கை ராட்டினம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்பட வேண்டும், இதனால் ஏழைக் கூலிகள் எவ்வகையான பொருளாதார நன்மை அடைய முடியும் என்ற வகையிலான விவரங்களைக் காண்கின்றோம்.

ஈ.வே.ரா  அவர்களின் கட்டுரையிலிருந்து..

இவ்வளவு நூலையும் ஓர் ஆலை நூற்றுவிடுவதினால் வேலை செய்யக் கூடிய 46,000 பேருக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. இவ்வளவு பேருக்கும் கிடைக்க வேண்டிய கூலியில் சிறுபகுதி ஒரு சில வேலைக்காரர்களுக்கும், பெரும்பகுதி முதலாளிகள், அன்னிய நாட்டு இயந்திர வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கும் போய்விடுகின்றது. மகாத்மாவினுடைய சுயராஜ்யத்திற்குப் பொருள் ஏழைகள் பிழைக்க வேண்டுமென்பதே. முதலாளிகளும், அன்னியனாட்டு இயந்திர வியாபாரிகளும் பொருள் சேர்க்க வேண்டுமென்பது மகாத்மாவினுடைய  சுயராஜ்ஜியத்தின் கருத்தன்று. சிலருக்கு உத்தியோகமும் அதிகாரமும் கிடைக்க வேண்டுமென்பதும் அன்று. இந்த அம்சத்தை மனதில் நாம் மனதில் இருத்திக் கொண்டால் இராட்டை இயக்கத்தின் கருத்தைச் சரியாக அறிந்து கொள்ளலாம். ஏழைகளிடத்தும் கூலிக்காரர்களிடத்திலும் அன்பில்லாதவர்களுக்கு மகாத்மா கூறும் சுயராஜ்ஜியத்தின் பொருள் நன்கு விளங்காது.
-குடி அரசு - கட்டுரை 2.5.1925


சுபா

Wednesday, January 15, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 2

தொடர்ச்சி - 2

1925 மே மாதம் குடியரசு தொடங்கப்படுகின்றது. அந்த முதல் பத்திரிகையின் தலையங்கத்தில் ஈவே.ரா அவர்கள் எழுதும் விஷயங்கள் குடியரசு பத்திரிகை எதனை மையமாக வைத்து செயல்பட வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிடுவதாக அமைகின்றது. 

அத்தலையங்கத்திலிருந்து  ஒரு பகுதி...

ஆயிரக்கணக்கான பொருள் செலவிட்டு கட்டிய...  அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனித, குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாகிய கிராமம் ஆகியன இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒரு நாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் உதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும்தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு தனிக்குடும்பமும் நன்னிலையடைய வேண்டும். ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும். ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை என்னாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்திதனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும்.அடிப்படைகளான இவைகளை விடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கம் அன்று.
-குடியரசு தலையங்கம் 2.5.1925

தேசம் என்பது பல சமூகங்களை உள்ளடக்கியது. சமூகம் பல தனி மனிதர்களை உள்ளடக்கியது. தனி மனித முன்னேற்றம் என்பது ஆண் பெண் என்ற வரையறையைக் கடந்து, ஜாதி வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து நிகழ்வதாக இருக்க வேண்டும். தேசத்தின் முன்னேற்றம் தனி நபரின் முன்னேற்றத்தை ஒதுக்கி விட்டு அமைத்தல் என்பதற்கு அப்பாற்பட்டது. தனி மனிதனின் வாழ்வியல் ஆதாரங்கள் நிலைபெறும் போதே தேசத்தின் நிலைப்பாடும் உறுதியடைகின்றது.  தேசத்தின் சமபிரஜைகளாக எல்லோரும் கருதப்படாத சூழலில், தனி மனிதர் நலன்கள் கவனிக்கப்படாது ஒரு குறிப்பிட்ட சுயனலப் போக்கு தோன்றி விரிந்து ஆழ வேரூன்றி நிற்குமானால் அது சமுதாய வளர்ச்சிக்கு உதவாது. இத்தகைய சூழலைத்தான் இப்போது தமிழக சூழலில் காண்கின்றோம். 

தனி மனிதர்கள் தம் அறிவையும் ஆற்றலையும்  பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை தமிழகம் போன்ற பெரிய சூழலில் பல்வேறு சமூக நல முயற்சிகளின் வழியாகவும், பல மக்கள் நலன் கருதி உழைக்கும் தேச அபிமானிகளின் வழிகாட்டுதலினாலும் தான் பாமர மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும். 1925ல் இந்த தலையங்கம் எழுதும் போது திரு.ஈ.வே.ரா அவர்கள் ஒவ்வொரு தனிமனிதரும் தன் அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். இந்த எதிர்பார்ப்பு எந்த அளவிற்குச் சாத்தியமாகி இருக்கின்றது இந்த 90 ஆண்டு இடைவெளியில்?  

சுபா

Tuesday, January 14, 2014

குடியரசில் பெரியார் உடன்....!

2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்தில் பெரியாரின் எழுத்தும் பேச்சும்என்ற தலைப்பிலான 24 மின்னூல்கள் வெளியிடப்பட்டன (THF Announcement: ebooks update - 14/06/2010). 

பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த திரு.தமிழ்நாடன், கொளத்தூர் மணி, திரு.அரசு எழிலன்  போன்றோர் எனக்கு மின்னஞ்சலில் இந்த நூல்களை அனுப்பி வைத்து இதனை நம் சேகரத்தில் இலவசமாக இணைத்து மக்கள் வாசிப்பிற்காக வழங்கக் கொடுத்து உதவினர். மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இவற்றை வாசிக்க அவகாசம் எனக்கு அமையவில்லை. ஆயினும் அண்மைய எனது விடுமுறையில் இந்த மின்னூல்களில் சிலவற்றை வாசித்து மகிழ்ந்தேன் என்பதை விட பிரமித்தேன் என்று சொல்வது சரியாக இருக்கும்.

மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு தமிழக சூழலின் அரசியல் பின்னனி, கடந்த நூற்றாண்டில், அதிலும் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் இறுதி காலகட்டங்கள் பற்றிய அடிப்படை விஷயங்கள் போன்றவை எப்போதுமே தூரமான விஷயங்களாக அமைந்து விட்டன. அவற்றை அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் எனக்கிருந்த போதிலும் கிடைக்கின்ற நேரத்தில் செய்ய வேண்டிய அவசர காரியங்களின் பட்டியல் நீளமாக என் கண் முன்னே தோன்றிக் கொண்டிருப்பதால் படிக்க வேண்டும் என நினைத்திருந்த இந்த நூல்களை வாசிக்க அவகாசமே தோன்றாத நிலையில்,  பல நேரங்களில் இப்போது படிப்போம்.. அப்போது படிப்போம் என நினைத்தாலும் தள்ளிக் கொண்டே செல்வது குறைபாடாகவே எனக்கு இருந்தது. அந்தக் குறை தீர இந்த முழு தொகுப்பில் முதல் மூன்று வெளியீடுகளில் சில கட்டுரைகளை அண்மையில் வாசிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

இக்கட்டுரைகளை வாசித்த போது நான் அறியாத அரசியல் முக்கியஸ்தர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடிந்தது. நான் அறிந்த, கேள்விப்பட்ட சிலரது பெயர்களை இப்பதிவுகளில் மீண்டும் காண முடிந்தது. 

பெரியாரின் காலத்தில் எதற்காக இப்படி ஒரு பத்திரிக்கைக்கு அவசியம் ஏற்பட்டது? எத்தகைய முயற்சிகளாக அவை இருந்தன? திரு.ஈ.வே ரா அவர்களின் சிந்தனைப் போக்கு... அவரது எழுத்து நடை... அவர் சில விஷயங்களை அணுகும் முறை என்பன அவரது சொல்லிலும் எழுத்திலும்.. என நேரடி அறிமுகமாக இந்த குடியரசு பத்திரிக்கையின் வழி நமக்குக் கிடைக்கின்றது. 

இந்தத் தொகுப்பை பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் அவசியமே. 

இந்த நூல்களின் தொகுப்பு 1925 முதல் 1938 வரை வெளிவந்த பெரியாரின் குடியரசு நாளிதல் மற்றும் அவரது பேச்சுக்களை உள்ளடக்கிய தொகுப்பு. இந்த தொகுப்பின் அறிமுகப் பகுதியை நாம் வாசிக்கும் போது பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கள் சிலரது முயற்சிகளை அறிந்து மிக வியந்தேன். ஏறக்குறைய 10 ஆண்டு விடா முயற்சிகளின் கடின உழைப்பினால் இந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.

அறிமுகப் பகுதியில் பெரியார் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஏனைய சில அமைப்புக்களின் வழியாக இந்த முயற்சிக்கு எழுந்த பிரச்சனைகளைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்தச் சிரமங்களையெல்லாம் எதிர்கொண்டு இந்த முழு தொகுப்பையும் வெளியிட்டிருக்கும் இந்த அபாரச் செயலை பாராட்டுதல் மிகத்தகும். 

பழம் நூல்கள் வெளியீடுகள் என்பதை மையமாகக் கொண்டு இயங்கும் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கும் எனக்கு இது எத்தகைய சிரமமான பணி என்பது நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. குடியரசு நாளிதளின் பல முழுமையாகக் கிடைக்காத சூழ்நிலையில் பலரையும் நாடி நாளிதழ்களைப் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் இந்த முயற்சிக்கு தனது சேகரிப்பிலிருந்து ஆவணங்களை வழங்கி உதவிய திரு.சாலமன் பாப்பையா, நாடார் குல மித்திரன் ஆசிரியர் முத்து நாடார் அவர்களின் மகன் திரு.முத்து முருகன், திரு.மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், ஆத்தூர்  திரு.மவுலானா சாகிப்ஜீ, திரு.ஞாலன் சுப்பிரமணியம்  இன்னும் தங்கள் பெயர்ரை வெளியிட விரும்பாத பலரும் முக்கியமானவர்கள்.

உடைந்தும் கிழிந்தும் முழுமையாக இல்லாமலும் போன ஆவணங்களையும் சரிபார்த்து அவற்றை தொகுத்து அவற்றை கணினி வழி வாசிக்கும் வகையில் தட்டச்சும் செய்து மின்னூலாக்கித் தந்திருக்கின்றனர் இந்தக் குழுவினர். எத்தனை பெரிய உழைப்பு இதன் பின்னனியில்! இந்த மின்னூல்கள் நமக்கு இலவசமாக இன்று கிடைக்கின்றன என்பது நல்லதொரு செய்தி அல்லவா?

இந்தக் குடியரசு தொகுப்பில் வெளிவந்த பெரியாரின் சில கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்களையும் அதன் அடிப்படையிலான எனது கருத்துக்களையும் இந்தத் தொடரில் பகிர்ந்து கொள்வதே எண்ணம். இத்தொடருக்கு, இங்கு பெரியார் மற்றும் தமிழக அரசியல் ஞானம் உள்ள அனைவருமே இணைந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் தரமான வரலாற்று விஷயங்களை இதன் வழி நம்மால் பதிய முடியும். இது இக்கால இளைய தலைமுறைக்கும் பயன்தரும் ஒரு வாசிப்பாக அமையும். 

முதல் பகுதியான பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 1 அறிமுக பகுதியில் குடியரசு நாளிதழ் தொடங்கப்படும் காரணத்தையும் யார் யார் இதில் ஈடுபட்டனர் என்பதையும்  காண முடிகின்றது. பல நாட்கள் இத்தகைய ஒரு பத்திரிக்கை தேவை என கலந்தாலோசித்து தானும் ஸ்ரீமான் தங்கபெருமாள் (வழக்கறிஞர்) அவர்களும் முடிவுக்கு வந்து குடியரசு பத்திரிக்கையை நடத்த துணிவு கொண்டதாகக் குறிப்பிடுகின்றார் ஈ.வே.ரா அவர்கள்.. 

இந்தப் பத்திரிக்கை நடத்த துணிந்ததன் நோக்கம் என்ன என்பதை பெரியாரே இப்படிக் குறிப்பிடுகின்றார்.

இப்பத்திரிக்கை ஆரம்பிக்கும் நோக்கம் :
தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிக்கைகள் பலவிருந்து, அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்ராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம். இப்பத்திரிக்காலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன். 
குடி அரசு - சொற்பொழிவு  - 02.05.1925

நூலைக் காணவும் வாசிக்கவும்: தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரம்
நூல் எண் 222.

தொடரும்..

அன்புடன்
சுபா

Saturday, January 11, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 61


தன்னைப் சூழ்ந்திருந்த சூலை நோயைப் போக்க வேண்டி மருள் நீக்கியார் கூற்றாயினவாறு விலக்ககலீர் என்று மனம் உருகிப் பாடி வேண்டி அந்த நோயிலிருந்து விடுபட்டார் என்று பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். திருவாவடுதுறையில் நோய் பரவி மக்கள் துன்பப்பட்டு வாடிய போது, ஆதீனகர்த்தர் அருகாமையில் உள்ள கிராமங்களில் இந்த நோய் பரவுவதிலிருந்து தடுக்கவும் நோய் தீர மருந்து வாங்கிக் கொடுத்து மக்கள் குறைதீர்க்க வேண்டும் என்றும் ஒருவர் செய்யுள் பாடியிருக்கின்றார். சுவாரஸியமாக இருக்கின்றது அல்லவா இந்தச் செய்தி? அதைப் பற்றி சிறிது பார்ப்போமே. 

அம்பர் புராணம் உருவாகிக் கொண்டிருந்த வேளையில் திருவாவடுதுறை நகரில் பலரும் விஷபேதி நோய் வந்து சிரமப்பட்டிருக்கின்றார்கள். பலர் நோயின் கடுமை தாங்காது இறந்திருக்கின்றனர். பொது மக்களில் பலர் கல்வி அறிவுப் பெறாதவர்கள். இந்த நோயின் தன்மை, இது எதனால் உருவாகின்றது? எப்படி தடுப்பது ? எவ்வகை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது? இந்த நோய் பரவுவதிலிருந்து எவ்வாறு தடுப்பது போன்ற விஷயங்களில் போதிய மருத்துவ ஞானம் இல்லாத பாமர மக்கள். இவர்கள் இந்த நோயினால் தம் உறவினர்கள் இறப்பதைக் கண்டு அஞ்சி நடக்ககூடாததெல்லாம் நடக்கின்றது. எல்லாம் கலிகாலம் எனப் புலம்பி அழுதிருக்கின்றனர். இதனை உ.வே.சா தன் சரித்ததில் பதிந்து வைக்கின்றார்.

அதுகாறும் அத்தகைய நோயை அறியாத ஜனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தர்மம் அழிந்து வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று சொன்னார்கள். “ரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர்.

ரயில் வந்ததால் ஆசாரம் போய் இப்படி நோய் வருகின்றது என்ற மூட நம்பிக்கைகளை இப்போது நினைத்துப் பார்க்கும் போது நமக்கு அது சிரிப்பை வரவழைத்தாலும் அக்கால சூழலில் மக்களின் பொது அறிவு ஞானம், மருத்துவ சுகாதாரம் பற்றிய செய்திகள் அறியாத நிலையில் அவர்களின் பய உணர்வு இப்படியெல்லாம் புலம்ப வைத்திருக்கின்றது என்றே நினைக்கத்தோன்றுகின்றது.

இந்த காலகட்டத்தில் அப்போதைய அரசாங்கம் கிராமங்களில் இந்த நோய் பரவுவதிலிருந்து தடுக்க மருந்துகளை வாங்கி விநியோகித்திருக்கின்றனர். ஆனாலும் இவை போதியனவாக இல்லை போலும். இதனை நினைத்து மாயூரத்தில் இருந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் தம்மாலான உதவிகளையும் செய்திருக்கின்றார்கள். அப்படியும் மருந்துகள் போதாத நிலையில்  ஆதினகர்த்தர் சுப்ரமணிய தேசிகருக்கு ஒரு செய்யுளை எழுதியிருக்கின்றார். அச்செய்யுளில் இந்த நோய் தீர மருந்து வாங்கி ஊர் ஊராகக் கொடுத்து மக்கள் துயர் தீர்க்க ஆதீனம் ஆவன செய்ய வேண்டும் எனச் சொல்லி செய்யுளை இயற்றியிருக்கின்றார். இந்தச் செய்யுளையும் உ.வே.சா தன் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

“இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி
மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுமிந்நோய்
விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா
நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.”

பொருள்
[மும்மல நோய் கெடும்படி ஞானாசிரியனாக உலகத்தில் தங்குகின்ற சுப்பிரமணிய தேசிக, இலக்கணத்திற் சொல்லப்படும் எழுத்தாகிய மெய்க்கு அரை மாத்திரை கால அளவு. இப்போது அந்த அளவு கூடத் தம் மெய்களுக்கு இல்லாமல் விஷபேதியாகிய மலநோயால் பலர் இறந்தனர். இந் நோயை விலக்கத் திருவருள் புரிய வேண்டும்.]

நல்லுள்ளம் கொண்ட திரு.வேதநாயகம் பால் தீராத நட்பு கொண்டவர் ஆதீனகர்த்தர். ஆக இச்செய்யுளைக் கண்டதும் சும்மா இருப்பரா? உடனே திருமடத்தில் கட்டளை பிறப்பித்து ஏராளமான மருந்துகளை வாங்கச் செய்து ஒவ்வொரு கிராமந்தோறும் முனிசிப்களைக் கொண்டு இந்த மருந்துகளை விநியோகிக்கச் செய்திருக்கின்றார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பண்பினைக் காட்டும் உள்ளமல்லவா இது?

சமூகச் சேவையும் பக்தி அனுஷ்டானங்களுடன் கலந்து பரிமளிக்கும் போது சமய நிறுவனங்களின் பணிகளுக்கு அதுமேலும் பலம் சேர்கின்றது என்பது என் எண்ணம். இறை சிந்தனை என்பதே தம்மைப் போல பிற உயிர்களையும் இறையருள் காக்க காலத்திற்கேற்ற வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியாக அமைய வேண்டும். சமய நிறுவனங்கள் பக்தி அனுஷ்டானங்களில் மட்டும் தம் நடவடிக்கைகளை முடக்கிக் கொண்டு மக்கள் நலனை கருதாது செயல்படும் நிலையில் மக்களிடமிருந்து வெகு தூரம் சென்று விடும் நிலை ஏற்படும். எனது அனுபவத்தில் நான் நேரில் சென்று பார்த்து வந்த அனுபவத்தில் குன்றக்குடி ஆதீனம், கோவிலூர் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி நடைபெறும் பல சமூக நிகழ்வுகளைப் பற்றி அறிந்து மகிழ்ந்தேன். 

அறியாமை என்னும் நோயைப் போக்க வல்ல மாமருந்து கல்வி! அந்தக் கல்வியை ஏழை எளியோரும் பெற இப்படிப்பட்ட ஆதீனங்கள் இலவசப் பள்ளி, கல்லூரிகள், பெண்கள் கல்லூரிகள், தொழிற்கல்வி என நடத்தி வருவது போற்றுதலுக்குறிய ஒன்றே. இப்படி நடந்து கொண்டிருக்கும் நல்ல பல செயற்பாடுகள் பற்றி எல்லாம் எத்தனை பேர் அறிந்து கொண்டிருக்கின்றோம் என்பதும் ஒரு கேள்வி. 

தொடரும்

சுபா

Friday, January 10, 2014

Robert Langdon is back..! - The apotheosis of Cosimo I. - 14

ஓவியப் பார்வை தொடர்கின்றது..

இன்பெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு ஓவியம் வாஸாரி உருவாக்கிய  The apotheosis of Cosimo I.

Inline image 1

இந்த ஓவியம் இருப்பது எழில் மிகு ப்ளோரன்ஸ் நகரின் பாலாஸியோ வெச்சியோவில். மேலே காணப்படும் படத்தில் வட்டவடிவிலான பகுதிக்குள் இருப்பதே அந்த ஓவியம். டான் ப்ரவுன், வாஸாரியின் மிக நுணுக்கமான விலைமதிப்பற்ற ஒரு படைப்பு என இன்பெர்னோவில் 45ம் அத்தியாயத்தில் இந்த ஓவியத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

பாலாஸியோ வெச்சியோவில் வாஸாரியின் மேலும் பல படைப்புக்களும் இருக்கின்றன. இந்த ஓவியத்தை விட என்னைக் கவர்ந்த மேலும் பல அங்கே மண்டபம் முழுக்க சுவர்களில், மேல் கூரைப் பகுதிகளில் என அதிகமாகவே இருக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் நான் நேரிலே பார்த்த போது இதன் முக்கியத்துவம் அறியாமல் ஏனைய ஓவியங்களிலும் ஒன்று என்ற நிலையிலேயே கவனித்தேன். கண்களைச் சட்டெனக் கவராத இந்த ஓவியம் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது என்பதை டான் ப்ரவுன் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. 

1565ம் ஆண்டு வாஸாரியால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது. 

ஓவியத்தின் மையப்பகுதியே முக்கியமான பகுதி. ப்ளோரன்ஸ் நகரின் பிரபு, முதலாம் ஓஸிமோ ஒரு தேவைதையினால் மலர் க்ரீடம் சூட்டப்படுவது போல இந்த ஓவியம் உள்ளது. இந்த மாளிகையில் உள்ள தனது படைப்புக்களின் வழி முதலாம் கொஸிமோ ப்ளோரன்ஸ் நகரின் மிகப் பெரிய அறிவாளிகளும் படைப்பாளிகளும் கட்டடக் கலைஞர்களும் சூழ்ந்திருக்கும் காட்சினை தனது ஓவியத்தில் காட்டுகின்றார். பாலாஸியோ வெச்சியோவின் ஓவியங்களை வடிவமைப்பதில் தனது இறுதி நாள் வரை முழு பங்காற்றியவர் வஸாரி என்பது மிக முக்கியமான விஷயம்.

சுபா. 

Sunday, January 5, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 60

கடவுள் அன்பு என்ற ஒரு குணத்தை மக்களுடைய மனக்குகையில் வைத்திருக்கின்றார்.  அப்பெருந்தனம் இல்லாவிட்டால் உலகம் நரகத்துக்குச் சமமாகிவிடும். - உ.வே.சா (அத்தியாயம் 61)

பிள்ளையவர்களைக் காண அம்பருக்கு வந்த போது காரையில் தாம் நிகழ்த்திக் கொண்டிருந்த திருவிளையாடற் புராண பிரசங்கம் முடிவுறாத நிலையிலேயே அங்கிருந்தோரிடம் ஒரு வித அவசர உணர்வோடு விடைபெற்று வந்திருந்தார் உ.வே.சா. பிள்ளையவர்களைப் பார்த்து அவரோடு சில நாட்கள் இருந்ததில் அவர் மனதில் இருந்த பிரிவின் ஏக்கம் தீர்ந்து தடைபட்டுப் போன கல்வி தொடர்ந்ததினால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியும் சேர்ந்திருந்தது. அதோடு அம்பரில் பிள்ளையவர்களைப் பாராட்டி ஆதரித்து வந்த வேலுப்பிள்ளையின் தம்பியார் குழந்தைவேலு பிள்ளைக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய  சேக்கிழார் பிள்ளைத் தமிழும், திருவிடைமருதூர் உலாவும் பாடம் சொல்லிக் கொண்டு காலம் செலுத்தி வந்ததும் தமிழ்க்கல்வியோடு நாட்களைச் செலவிட  வாய்ப்பாக அமைந்ததால் அம்பரில் அவரது நாட்கள் மகிழ்ச்சியாக அமைந்ததை உணர முடிகின்றது.

பின்னர் காரைக்குத் திரும்பச் சென்று முற்றுப் பெறாத நிலையிலிருந்த புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்து விட்டு  வருவதாகக் கேட்க, ஆசிரியருக்கு விடைபெற மனமில்லாத நிலை.  ஆனாலும் உ.வே.சாவின் கையில் ஒரு ரூபாய் பணத்தை வழிச் செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொல்லி கொடுத்து வழியனுப்பி வைத்தாராம். அதுமட்டுமல்ல. உ.வே.சாவை காரையில் பராமரித்து வந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரைப் புகழ்ந்து அவருக்கு ஒரு செய்யுளும் எழுதி கொடுத்ததோடு 'சாமிநாதையரைக் கொண்டு புராணத்தை விரைவில் நிறைவேற்றித் தாமதிக்காமல் அனுப்பி விடுக' எனக் குறிப்பும் எழுதி கொடுத்தனுப்புகின்றார்.

இந்தக் காலகட்டத்தில் உ.வே.சா வின் குடும்ப பொருளாதார நிலை சற்றே பிரச்சனை சூழ இருந்தது என்பதை அவர் குறிப்புக்களாலேயே அறிகின்றோம். காரையில் இறுதி நாள் புராணப் பிரசங்கம் எல்லோரும் பாராட்டும் வண்ணம் நிகழ்வுறுகின்றது. புராணப் பாடங்கள் சில நாட்கள்  நலமே தொடர, புராணம் பூர்த்தி பெறும் நாளும் நெருங்கியது. இந்த நாளை விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தார் ரெட்டியார். புராணப் பிரசங்க இறுதி நாளில் அனைவரும் மனம் நிறைந்து போற்றிப் பாராட்டும் வண்ணம் உ.வே.சாவின் பிரசங்கம் அமைந்திருந்தது. வந்திருந்த கனவான்களும் தமிழ் பெரியோர்களும் ஆடைகளும், சன்மானமும் கொடுத்து உ.வே.சாவைக் கௌரவித்திருக்கின்றனர்.  மொத்தம் 200 ரூபாய் வரை கிடைத்தது என்றும் அதில் தம் செலவுகளுக்காக வாங்கியிருந்த கடன் போக நெடுநாட்கள் தீராமல் இருந்த நமது திருமணக் கடன் 150 ரூபாயையும் தீர்க்க முடிந்திருக்கின்றது என்றும் மேலும் குறிப்பிடுகின்றார்.

காரையில் உ.வே.சா நிகழ்த்திய திருவிளையாடற் புராண பிரசங்கம் பாடம் கேட்டோரை மகிழ்வித்தது போலவே உ.வே.சா அவர்களின் பொருளாதாரச் சுமையையும் குறைத்து அவர் தம் குடும்பத்தார் மனக்குறையையும் நீக்கியது.

உ.வே.சா வின் குறிப்புக்களின் வழி அவரது காலகட்டத்தில் பொருளாதார பலம் படைத்த செல்வந்தர்களில் பலர் தமிழ் வளர்க்கும் புரவலர்களாகவும் இருந்து செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பதை நன்கு அறிகின்றோம். பொருள் படைத்தோர் கல்வி கற்ற புலவர்களைப் போற்றி பாதுகாத்து அவர்களை அரவணைத்தமையினால்தாம் தமிழ் கல்விச் செல்வம் மேலும் தழைத்து வளர்ந்தது. செல்வந்தர்கள் மட்டுமன்றி சைவ ஆதீனங்களின் செயல்பாடுகளும் தெய்வத் தமிழ் திறமுடன் செழித்து வளர மிகச் சிரத்தையுடன் சேவையாற்றியிருக்கின்றன. இந்த நூலில் இடம்பெறும் குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு நோக்கும் போது திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் மடத்தில் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதில் தமக்கு அதிக சந்தோஷமாக இருக்கின்றது எனக் குறிப்பிடுவதிலிருந்து இதனை அறிய முடிகின்றது.

மாணக்கர்கள் அதிகரித்து விட்டனரே. அவர்களுக்கான தங்கும் வசதி, உணவுச் செலவுகளுக்கு என்ன செய்வது எனத் தயங்காமல் கல்வி கற்றலில் ஈடுபாடுடையோரை அரவணைத்து தமிழ்க்கல்வி வழங்கிய காலமது என்பதைக் காண்கின்றோம்.

தொடரும்..