தொடர்ச்சி - 2
1925 மே மாதம் குடியரசு தொடங்கப்படுகின்றது. அந்த முதல் பத்திரிகையின் தலையங்கத்தில் ஈவே.ரா அவர்கள் எழுதும் விஷயங்கள் குடியரசு பத்திரிகை எதனை மையமாக வைத்து செயல்பட வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிடுவதாக அமைகின்றது.
அத்தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி...
ஆயிரக்கணக்கான பொருள் செலவிட்டு கட்டிய... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனித, குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாகிய கிராமம் ஆகியன இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒரு நாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் உதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும்தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு தனிக்குடும்பமும் நன்னிலையடைய வேண்டும். ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும். ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை என்னாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்திதனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும்.அடிப்படைகளான இவைகளை விடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கம் அன்று.
-குடியரசு தலையங்கம் 2.5.1925
தேசம் என்பது பல சமூகங்களை உள்ளடக்கியது. சமூகம் பல தனி மனிதர்களை உள்ளடக்கியது. தனி மனித முன்னேற்றம் என்பது ஆண் பெண் என்ற வரையறையைக் கடந்து, ஜாதி வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து நிகழ்வதாக இருக்க வேண்டும். தேசத்தின் முன்னேற்றம் தனி நபரின் முன்னேற்றத்தை ஒதுக்கி விட்டு அமைத்தல் என்பதற்கு அப்பாற்பட்டது. தனி மனிதனின் வாழ்வியல் ஆதாரங்கள் நிலைபெறும் போதே தேசத்தின் நிலைப்பாடும் உறுதியடைகின்றது. தேசத்தின் சமபிரஜைகளாக எல்லோரும் கருதப்படாத சூழலில், தனி மனிதர் நலன்கள் கவனிக்கப்படாது ஒரு குறிப்பிட்ட சுயனலப் போக்கு தோன்றி விரிந்து ஆழ வேரூன்றி நிற்குமானால் அது சமுதாய வளர்ச்சிக்கு உதவாது. இத்தகைய சூழலைத்தான் இப்போது தமிழக சூழலில் காண்கின்றோம்.
தனி மனிதர்கள் தம் அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை தமிழகம் போன்ற பெரிய சூழலில் பல்வேறு சமூக நல முயற்சிகளின் வழியாகவும், பல மக்கள் நலன் கருதி உழைக்கும் தேச அபிமானிகளின் வழிகாட்டுதலினாலும் தான் பாமர மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும். 1925ல் இந்த தலையங்கம் எழுதும் போது திரு.ஈ.வே.ரா அவர்கள் ஒவ்வொரு தனிமனிதரும் தன் அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். இந்த எதிர்பார்ப்பு எந்த அளவிற்குச் சாத்தியமாகி இருக்கின்றது இந்த 90 ஆண்டு இடைவெளியில்?
சுபா
No comments:
Post a Comment