Wednesday, January 22, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 4

தொடர்ச்சி - 4

பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை விவரிப்பது என்பது எளிமையானதன்று. ஒரு பெண்ணில் உளவியல் கூறுகளையும், வாழ்வியல் நிலைப்பாடுகளையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் நிகழ்வுகளை பால்ய விவாகம் செய்து விடுகின்றது.

பால்ய விவாகத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்..? சட்டதிட்டங்கள் தாம் அவற்றை நீக்கி விட்டனவே எனக் குறிப்பிட்டால் அதில் உண்மையில்லை என்பது சமகால சமூக சூழலை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். 

நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமன்றி, இந்தியாவில் பால்ய விவாகம் என்பது இன்றளவும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற மானிலங்களில் நடைபெறுவதை அறிய முடிகிறது. பால்ய திருமணம் என்ற விஷயம் மட்டுமல்ல... திருமணம் என்ற நிகழ்வில், அதிலும் தமிழ்ச் சமூக சூழலில் பெண் எத்தகைய வகையில் பார்க்கப்படுகின்றாள் என சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. 

கடமைக்காக திருமணம், சமூகத்துக்காகத் திருமணம், உறவை நிலைநாட்ட திருமணம், பொருளாதார நிலைப்பாட்டிற்காகத் திருமணம், அச்சத்தின் அடிப்படையில் திருமணம்...இப்படி பல திருமணங்கள்! 
இந்தப் பிறருக்காக நடைபெறுகின்ற திருமண நிகழ்வில் அந்த மணமகள்-மணமகனுக்காகத் திருமணம் நடைபெறுவது எந்த அளவு சாத்தியமாகின்றது? 

வரதட்சணை சட்டத்தால் தடை செய்யப்பட்டது எனத் தெரிந்தும் அது நடைமுறையில் ஏற்றுக் கொண்ட சமூகத்தில் தான் வாழ்கின்றோம், அதெற்கென்று நியாயங்களை தொடர்ந்து கூறிக்கொண்டு. 

கல்வி கற்று பொருளீட்டும் திறமையான பெண்ணாக இருந்தாலும் ஆணுக்கு அடங்கி நடக்கும் பெண்ணாகத் தான் திருமண சந்தை பெண்களைத் தேடுகின்றது. புரிதல், மனம் இயைந்த வாழ்க்கை, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்பன இரண்டாம் பட்ச விஷயங்களாகி விடுகின்றன. ஆண் சமூகம் மட்டுமல்ல; பெண்களே இப்படி பெண்களைச் சொல்லி நல்ல பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனப் போடப்படும் பட்டியலில்..
  • பெண் நன்கு சிந்திக்கக்கூடியவளா?
  • பொறுப்பாக ஒரு விஷயத்தை நடத்தக்கூடியவளா?
  • தைரியசாலியா?
  • பிரச்சனையை சமாளிக்ககூடியவளா?
  • நேர்மையான குணம் உள்ளதா?
  • இன்னன்ன திறமைகள் கொண்டவளா?
... என்பன போன்ற கேள்விகள் இடம் பெறுவதற்கு பதில் கேட்கப்படும் கேள்விகளும் நடத்தப்படும் தேர்வுகளும் வேறு விதமாகத் தான் அமைந்திருக்கின்றன.

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல சமமாக கல்வி கொடுத்து உலகம் வழங்கியிருக்கும் பல்வேறு வாய்ப்புக்களை அவர்களும் நுகர அனுமதி கொடுக்கும் பெற்றோர் இன்று பெருகி வருகின்றனர் என்பது உண்மையென்றாலும் சமூக கட்டுப்பாடுகள் எனச் சொல்லி சொல்லாலும், செயலாலும், உளவியல் தண்டனைகளாலும், பெண்களை அடிமைப் படுத்தும் போக்கு இன்னமும் மறையவில்லை என்பதுவும் உண்மை.  பெண்களின் வளர்ச்சியைத் தடைபடுத்த பல்வேறு காரணங்களை தேடிக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். 

திரு.ஈ.வே.ரா, 1925ல் நிகழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து குடி அரசில் ஒரு தலையங்கம் எழுதுகின்றார். அந்த நிகழ்வு கல்கத்தாவில் ஒரு இளைஞன் 10 வயதான தனது மனைவியை பாலியல் உறவுக்கு ஈடுபடுத்த அதில் நிகழ்ந்த ஏமாற்றத்தால் ஒரு குழவியால் அக்குழந்தை பெண்ணை தலையில் அடித்து உடைத்து கொன்ற நிகழ்வு.  இதன் தொடர்பாக அவரது எழுத்திலிருந்து ஒரு பகுதி.

இக்கோரமான கொலைச் செயல்களுக்குக் காரணமாக இருப்பது பால் மணம் மாறாச் சிறுமிகளை காமவிகாரத்தாற் கட்டுண்டு விலங்குகளைப் போல் திமிர் கொண்டலையும் இளம்  வாலிபர்களுக்கு வதுவை செய்து  பால் ஒப்புவிக்கும் கொடிய குற்றமான  வழக்கமென்று நாம் திண்ணமாகக் கூறுவோம். இத்தகைய கொடிய, அக்கிரமமான வழக்கம் இந்து சமயத்தின் பேரால் நடைபெறுவது நமக்குப் பேரவமானம். நமது சமயத்தின் நற்பெயரை நாசமாக்கி, நாமும் அழிவென்னும் பெருங்குழியில் வீழ்ந்து இறப்போம். உண்பதும், உறங்குவதும், பூண்டதும், மனவினைசெய்வதும், மக்கள் பெறுதலும் சமயக் கோட்பாடுகள் எனக் கூறின் இதனினும் அறியாமை வேறுளதோ? 

ஆண்டவனிடத்து மக்களைக் கொண்டு உய்விக்கும் அறிவு வழியே, ஆன்ம நெறியே சமயமல்லாது, சமூகக் கட்டுப்பாடு குலையாமல், சமூகம் என்றும் அழிவுறாமல் நின்று நிலவுதற்கான முறைகளில் சேர்க்கப்படுவனவாகிய  இவையெல்லாம் சமய நெறி எனக்கூறுதல் மடமையேயாகும்.....

......காலத்திற்குத் தக்கவாறும் இடத்திற்குகேற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளுதல் கூடாதென்று நியதி இல்லை. `பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானேன்` என ஆன்றோர் கூறியுள்ளார்.  மக்கள் செய்யும் மணவினை சமூக வாழ்க்கையைச் சார்ந்தே நடைபெறுவதாகும். குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்றப் பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்து குடும்பம் என்னும் குழுயில் வீழ்த்தி கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும் எந்த தர்ம சாஸ்திரமும் போதிக்கவில்லை என்பதை மக்கள் உணரல் வேண்டும். 

...அந்தோ! இந்திய மக்களே..... . சமய உண்மையை உணரார்கள்; சமூகவாழ்க்கை நிலையை அறியார்கள். மூடக் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளும் தான் இவர்கள் கண்ட உண்மைகள். விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போல் எல்லாமறிந்திருந்தும் இளம் சிறுமியர்களுக்கு மணஞ்செய்து பின்னர் அவர்களுக்கு நேரும் கதியைக் கண்டு ஏன் அழுகிறீர்கள்?...... இளம் வயதில்மண முடிப்பதனால் நேரும் துன்பங்களை நேரில் தாமாகவே அனுபவித்திருந்தும் தாய்மார்கள் இக்கொடிய வழக்கத்தை அறவே ஒழிக்க முன்வராதிருப்பது பெருங் குற்றமாகும். வேலியே பயிரை மேய்ந்தால் வேறு யார் துணை பயிருக்கு! பத்து மாதம் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி பொன்னேபோல் போற்றி வளர்த்த பெண் செல்வங்களுக்குத் தாய்மார்களே எமனாக ஏற்பட்டு விட்டால் அவரைக் காப்பாற்றுபவர் யார்? 

ஆண்மக்கள்தான் உயர்ந்தவர்கள், பெண்மக்கள் தாழ்ந்தவர்கள் ஆண்மக்கள் தான் அறிவு நிறைந்தவர்; பெண்மக்கள் அறிவில்லாதவர் என்ற கீழான எண்ணமும் இக்கொடுஞ் செயல்களுக்குக் காரணமாகும்.  இந்தத் தாழ்ந்த எண்ணம் நம்மவர்களை விட்டு அகல வேண்டும். ஆண்மக்களும் பெண்மக்களும் சரி நிகர் ஸமானம் என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். ஆண்மக்களை விடப் பெண்மக்கள் எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர்; சமூக வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் ஆண்மக்களுக்கு உள்ள உரிமைகள், பொறுப்புக்கள் பெண்மக்களுக்கும் உண்டு என்ற உயரிய, பரந்த விரிந்த நோக்கம் உதயமாதல் வேண்டும். 
-குடி அரசு தல்லையங்கம் - 07.06.1025


சுபா

No comments:

Post a Comment