ஓவியப் பார்வை தொடர்கின்றது..
இன்பெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு ஓவியம் வாஸாரி உருவாக்கிய The apotheosis of Cosimo I.
இந்த ஓவியம் இருப்பது எழில் மிகு ப்ளோரன்ஸ் நகரின் பாலாஸியோ வெச்சியோவில். மேலே காணப்படும் படத்தில் வட்டவடிவிலான பகுதிக்குள் இருப்பதே அந்த ஓவியம். டான் ப்ரவுன், வாஸாரியின் மிக நுணுக்கமான விலைமதிப்பற்ற ஒரு படைப்பு என இன்பெர்னோவில் 45ம் அத்தியாயத்தில் இந்த ஓவியத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
பாலாஸியோ வெச்சியோவில் வாஸாரியின் மேலும் பல படைப்புக்களும் இருக்கின்றன. இந்த ஓவியத்தை விட என்னைக் கவர்ந்த மேலும் பல அங்கே மண்டபம் முழுக்க சுவர்களில், மேல் கூரைப் பகுதிகளில் என அதிகமாகவே இருக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் நான் நேரிலே பார்த்த போது இதன் முக்கியத்துவம் அறியாமல் ஏனைய ஓவியங்களிலும் ஒன்று என்ற நிலையிலேயே கவனித்தேன். கண்களைச் சட்டெனக் கவராத இந்த ஓவியம் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது என்பதை டான் ப்ரவுன் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
1565ம் ஆண்டு வாஸாரியால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது.
ஓவியத்தின் மையப்பகுதியே முக்கியமான பகுதி. ப்ளோரன்ஸ் நகரின் பிரபு, முதலாம் ஓஸிமோ ஒரு தேவைதையினால் மலர் க்ரீடம் சூட்டப்படுவது போல இந்த ஓவியம் உள்ளது. இந்த மாளிகையில் உள்ள தனது படைப்புக்களின் வழி முதலாம் கொஸிமோ ப்ளோரன்ஸ் நகரின் மிகப் பெரிய அறிவாளிகளும் படைப்பாளிகளும் கட்டடக் கலைஞர்களும் சூழ்ந்திருக்கும் காட்சினை தனது ஓவியத்தில் காட்டுகின்றார். பாலாஸியோ வெச்சியோவின் ஓவியங்களை வடிவமைப்பதில் தனது இறுதி நாள் வரை முழு பங்காற்றியவர் வஸாரி என்பது மிக முக்கியமான விஷயம்.
சுபா.
No comments:
Post a Comment