திரு.ஈ.வே.ராவின் மலாயாவுக்கான பயணம் 1929 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்திருக்கின்றது. இந்தப் பயணத்தின் போது பினாங்கு மானிலத்திலும் ஈப்போ மானிலத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பேசியவற்றின் குறிப்புக்கள் 1930ம் ஆண்டு பெப்ரவரி மாத குடியரசு இதழில் பதிவாகியிருக்கின்றன.
திரு.ஈ.வே.ரா பினாங்கில் அவருக்குக் கிடைத்த வரவேற்பை நினைத்து திருப்தியடையவில்லை என அறிய முடிகின்றது. குடியரசு குறிப்பு கீழ்க்காணும் வகையில் இருக்கின்றது.
தனக்கும் தனது நண்பர்களுக்கு இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும் உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றிப் பேசிய புகழ் வார்த்தைகளும் தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்து தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்தமற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலாய் நாட்டுப் பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு ...
என்பதாக இக்குறிப்பு குடியரசில் இடம்பெறுகின்றது. திரு.ஈ.வே.ராவின் கொள்கைக்கு எதிரான அதிகப்படியான புகழ் வார்த்தைகள், சடங்கு சம்பிரதாயங்கள் கூடிய வரவேற்பு என பினாங்கு தமிழ் மக்கள் செய்திருப்பார்கள் போலும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
20-12-1929 அன்று ஜனாப் முகமது ராவுத்தர் அவர்களின் மாளிகையில் பேசுகையில் ..
நாங்கள் இங்கு எந்த கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ ஆதரவையோ உண்டாக்க வரவில்லையென்றும் மற்றவர்களைப் போல் பணம் வசூல் செய்து மூட்டைக் கட்டிப் போக வரவில்லையென்றும் உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோமென்றும் அதற்கு தக்க உதாரணங்கள் காட்டி பேசினோம்.
என்றும் பதிவாகியுள்ளது.
20, 21ம் தேதிகளில் பினாங்கில் அங்கு ஏற்பாடாகியிருந்த சில நிகழ்ச்சிகளில் திரு.ஈ.வே.ரா. பங்கெடுத்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.
பினாங்கில் அடுத்து 21ம் தேதி நிகழ்ந்த இன்னொரு சந்திப்பில் கப்பல் பயணிகள் குறை நிவாரண சங்கத்தில் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சியில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் 20,21.12.1929 அன்று இப்படிக் கூறியதாக 1930ம் ஆண்டு பெப்ரவரி குடி அரசு குறிப்பிடுகின்றது.
கடவுளைப் பற்றியோ, சமயங்களைப் பற்றியோ பிரச்சாரம் செய்வது தனது வேலை அல்லவென்றும் தான் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களுக்கு அதன் எதிரிகள் தக்க சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாமல் பயங்காளித் தனமாயும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியும் கடவுள்கள், மதங்கள், வேதங்கள், புராணங்கள் என்பவைகளைக் கொண்டு வந்து மூட்டுக் கட்டையாய்ப் போடுவதால் அவைகளை எடுத்து எறிந்து விட்டு முன் செல்ல வேண்டிய நிர்பந்தம் தனக்கு ஏற்படுகின்றதென்றும் ஆனாலும் கடவுளும், உண்மையான மதமும் உண்மையான வேதமும் கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டிய தில்லை என்றும் சொன்னார்.
குடி அரசு - சொற்பொழிவு - 02.02.1930
மலாயாவில் எந்தெந்த இடங்களுக்கு திரு.ஈ.வே.ரா சென்றார் என முழுமையான விவரம் கிடைக்கவில்லை. ஆனால் திரு.ஈ.வே.ரா இருந்த காலத்தில் நிகழ்ச்சிகள் பல நடந்தமையும் தொடர்ச்சியாக அவர் மக்களை சந்தித்து சமூக சீர்திருத்தங்களின் அவசியம் பற்றி உரையாற்றினார் என்பதும் அறிய முடிகின்றது.
டிசம்பர் 1929ம் ஆண்டு தனது மனைவி நாகம்மாளுடன் நாகப்பட்டிணத்திலிருந்து கப்பல் எடுத்து மலாயா புறப்பட்டு பினாங்கு வந்து சேர்ந்திருக்கின்றார்கள். அங்கு அவரை 50,000 பினாங்கு தமிழர்கள் வரவேற்றிருக்கின்றனர். அதே மாதத்தில் ஈப்போவில் தமிழர் முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தமிழர் கருத்தரங்கத்தை தலைமை தாங்கி திறந்து வைத்து உரையாற்றியிருக்கின்றார். பின்னர் அங்கிருந்து இவர்கள் சிங்கப்பூர் சென்றிருக்கின்றனர்.(http://en. wikipedia.org/wiki/Periyar_E._ V._Ramasamy)
மலாயாவில் அக்காலத்தில் இருந்த தென்னிந்திய மக்களில் பலர் தோட்டத் தொழிலாளர்களாகவும் வணிகர்களாகவும் தொழில் செய்ய தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
கூலிகளாக வந்த பலர் தோட்டக்காடுகளை அழித்து பால்மரத்தோட்டமும் செம்பனைத் தோட்டமும் வளர உழைத்தவர்கள். ஆங்கில காலணித்துவ அரசில் இவர்கள் அனைவரும் ஒரு வகையில் உழைக்கும் இயந்திரங்களாகவே பார்க்கப்பட்டனர் என்பதை எனது பொங்கல் தின சிறப்பு வெளியீடான மலேசிய தமிழ் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களின் பேட்டியின் வழியாகவும் கேட்டு அறியலாம். இந்த காலகட்டங்களில் மலாயாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்த தமிழர்களின் நிலை பல்வேறு வகைகளில் சிரமங்கள் நிறைந்ததாகவே இருந்தது. குடும்பங்களாக வந்தவர்கள் உறவுகளை தமிழகத்தில் விட்டு புது வாழ்க்கையை கடல் கடந்த சூழலில் உருவாக்க முனைந்தவர்கள். ஏற்கனவே தென்னிந்திய சூழலில் சாதிப் பிரிவினையின் தாக்கத்தை அறிந்தவர்கள். மலாயா வந்து சேர்ந்த சிலர் குழுக்களாக தங்கள் தங்கள் சாதி மக்கள் என்ற வகையில் வாழ நினைத்தவர்கள் என்ற போதிலும் புதிய இடத்தின் சூழல் அதற்கு முழுதாக வழி வகுக்கவில்லை. தமிழக நிலையில் இருந்த சாதி கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையாக, பல சமூக மக்களும் கலந்து பழகும் வாழ்க்கை நிலை விரும்பியோ விரும்பாமலோ அமைந்த காலம் அது.
பெரியாரின் முயற்சிகளின் வழியாக சில தமிழ் மொழி-இனம் சார்ந்த கழகங்கள் தொடர்ந்து மலாயாவில் செயல்படத் தொடங்கியமையும் பின்னர் படிப்படியாக சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாகவும் நடைபெற்றன. 1980களில் பினாங்கு எழுத்தாளர் சங்கமும் ஓரிரு நிகழ்ச்சிகளைப் பெரியார் சுயமரியாதை சீர்திருத்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்த்தியதாக நினைவு.
சுபா
No comments:
Post a Comment