Sunday, November 17, 2002

ச்வேதாச்வதர உபநிஷத்து (பாகம் 3) - மனித, இயந்திர - மந்திராயனம் (வாழ்வா தண்டனையா?)


From: "ksuba100"
Date: Sun Nov 17, 2002 11:13 am
Subject: Upanishad: Svethasvathara Upanishad- Part 3

மூன்றாம் நான்காம் காண்டம் - சுருக்கம்

1.மாயாவியான ருத்ரனே உலகை ஆள்கிறான்; அவனே உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகிறான்.
2.இருளுக்கு அப்பாற்பட்டவனான கயிலையில் வாழும் அவனை நான் அறிவேன்; அவனை அறிந்த பின்னரே ஒருவன் சாவைக் கடக்க முடியும். இல்லையேல் மக்கள்துன்பமுற்றவர்களாகின்றனர்.
3.இவன் மனிதர்களின் இருதயத்தில் வாழ்கின்றான். ஒன்பது வாயில்களுள்ள இத் தேகத்தில் வசிக்கின்றான். பாலில் மறைந்துள்ள நெய்போல் அதிசூஷ்மமாய் உள்ளான்.
4.அவனே பஞ்சபூதம்; அவனே ஸ்த்ரீ,புருஷன். எல்லாம் அவனே.
5.வேத மந்திரங்கள் குறிக்கின்ற இறைவனை ஒருவன் அறியவில்லையானால், அவனுக்கு அவ்வேத மந்திரங்களால் பயனில்லை.
6.அவனது உண்மை ரூபம் கண்ணுக்கெட்டுவதில்லை. மஹா வியாபகன் அவன்.
7.பிறவிக்கடலுக்கு பயந்த ஜீவன் உன்னை சரணடைகின்றான். உனது தெற்கு முகம் (தஷிணாமூர்த்தி) எதுவோ அதனால் காத்தருள்வீர்.
8.எங்கள் சொத்துக்களையும் புத்திரர்களையும் அழிக்க வேண்டாம்; காத்தருள்வீர்..

தொடர் சிந்தனை:
இப்பூமியில் பிறந்த உடனேயே ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படும் நாள் தள்ளி வைக்கப்படலாம். இது தான் வாழ்க்கை! - நஜன் (குண்டலினி சக்தி)

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கின்ற நிகழ்வுகள் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் வாழ்க்கையின் மேல் மனிதர்களாகிய நமக்கு பயம் ஏற்படுகின்றது. எத்தனையோ வகையான பயம் மனதில் பிண்ணிப்பினைந்து கிடக்கின்றது. அந்த பயந்திலிருந்து மீண்டு வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்கின்றோம். நினைத்தது நிறைவேற இறைவனை வேண்டுகின்றோம்; மாட்டிக் கொண்டிருக்கின்ற பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறோம்; தீங்குகள் வரக் கூடாது என்பதற்கு முன்னெச்செரிக்கையாக இருப்பதற்காகப் பூஜைகள் செய்கின்றோம்; வேண்டுதல்களை ஏற்கின்றோம்; விரதம் இருக்கின்றோம். கடவுள் என்ற ஒன்றின் மேல் பற்று இல்லாதோருக்கும் பயம் இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் இறைவனுக்குப் பதிலாக மனிதர்களையோ மற்ற பொருட்களையோ (பணம், சொத்து, அதிகாரம்) பற்றிக் கொள்வதன் வழி தமது பயத்திலிருந்து தற்காலிகமாக விடுபட்டுக்கொள்கின்றனர்.

எனக்கு சிலந்திப் பூச்சியைக் கண்டால் பயம். எனது தோழி ஒருத்திக்கு பாம்பைக் கண்டால் பயம். (எனக்கு பாம்பை பார்த்தால் பயமே தோன்றாது. பாம்புகளைப் விளையாட்டுக்காகப் பிடித்து வைத்திருந்திருக்கின்றேன்.) எனது மற்றொரு தோழிக்கு திருமணத்தை நினைத்தாலே பயம். எனது நண்பன் ஒருவனுக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வதை நினைத்தால் பயம் (அங்கே அதிகமாக பூச்சிகள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றான். பூச்சிகள் கடித்து இறந்து விடுவோம் என்ற அச்சம் அவனுக்கு!) இப்படி பலருக்கும் பல வகையில் பயம். இந்த பயத்தின் அளவைப் பொருத்தே ஒவ்வொருவரின் பற்றுக்கோட்டின் அளவும் அமைகின்றது.

உலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனாலும் நாம் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு வாழ்க்கையில் பலவற்றை சேர்க்கின்றோம். வாழ்க்கை நமக்கு பல வேளைகளில் நிலையற்றவற்றினைப் பற்றிய பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் சில தேவைகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கின்றோம். எனது ஜெர்மானிய தோழன் ஒருவனுக்கு நான்கு முறை காதல் தோல்வி; இருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் காதலியைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றான்; வாழ்க்கையில் மாறுதல் வேண்டும் என்பதற்காக ஸ்டுட்கார்டிலிருந்து பெர்லினுக்கு வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றான். இலங்கையில் யுத்தத்தின் காரணமாக வாழ்க்கையைத் தேடி வந்த தமிழினம் ஐரோப்பாவில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; தமிழ் பண்பாட்டையும், மொழியையும், கலை கலாச்சாரத்தையும் ஐரோப்பிய மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்; கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஒரு இடத்தில் தடை ஏற்படும் போது மற்றொன்றில் மனதைச் செலுத்தி போராடிப் போராடி வாழ்க்கையைத் தேடிக் கொண்டே இருக்கும் ஆன்ம பலம் உள்ளவர்களுக்கு மாறுதல் வாழ்க்கையில் கிடைக்கத்தான் செய்கின்றது.

பயம் மனதை விட்டு அகல வேண்டுமானால் மகா சக்தியான அப்பேரருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இறை அருள் துணையிருக்கும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையைத் தைரியமாக கடக்க உதவும். உலகில் பிறந்த எந்த மனிதருக்குத்தான பிரச்சனை இல்லை? சோதனை இல்லை? எதாவது ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் அதில் என்ன ஆச்சர்யம் என்றால் இன்று மிகப்பெரிய கவலையாக, அதிர்ச்சியாகத் தெரிவது நாளைக்கு அதே அளவிளான மன பாதிப்பை அளிப்பதில்லை. நமது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் நாம் பயந்திருக்கின்றோம் என்று காணமுடியும். ஆனால் அந்த விஷயங்களை வெற்றிகரமாக கடந்து வந்த பின்னர் அவை நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றினைச் சாதிக்கக் கிடைத்த வெற்றியின் முதற்படியாகத் தான் நமக்குத் தோன்றும்.

வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் போராட்டத்திற்கு அஞ்சி வீழ்ந்து விட மாட்டான். லொரு வாசல் அடைக்கப்படும் போது மற்ரொரு வாச்ல் திறக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சித்துச் செல்லும் போதுதான் பிரபஞ்ச அமைப்பைக் காணும் திறமைக் கிட்டும். இத்திறம் சாதாரணமான ஒன்றல்ல. உடலுக்குள் உறைந்திருக்கும் இறைசக்தி இயக்குவதை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவனாலேயே தோல்வியிலுருந்தும் கஷ்டங்களிலிருந்து மீண்டு, சாதிக்க முடிகின்றது. அச்சக்தியைக் காண முடியாதவனுக்குச், சவம் போல அன்றாட வாழ்க்கையில் அமுங்கி வாழ்க்கையைத் தண்டனையாகக் காண்கின்ற நிலைதான் ஏற்படுகின்றது!

ச்வேதாச்வதர உபநிஷத்தின் மூன்றாம் நான்காம் காண்டங்கள், இறைவனைப் மனிதர்கள் பற்றிக் கொள்வதன் வழி எவ்வாறு உலக இன்பங்களிலிருந்து விலகி வாழ முடியும் என்பதை காட்டுகின்றது. இந்த உபநிஷத்தில் ருத்ரனனே அனைத்தையும் ஆக்கி, காத்து, அழிக்கும் வல்லமை பொருந்திய தெய்வமாகக் காட்டப்படுகின்றார். சைவ சித்தாந்தத்தின்படி எத்தெய்வம் அழிக்கும் சக்தியைக் கொண்டதோ, அதுவே அனைத்தையும் உருவாக்கவும், காக்கவும், தொழிற்படுத்தவும் கூடிய வல்லமை படைத்த தெய்வம் என்பது உண்மை. இதனை சிவஞான போதத்தின் முதற் வெண்பாவாகிய:


  'அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமைவின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்'  விளக்குகின்றது.

ச்வேதாச்வதர உபநிஷத்தில் மஹா பரம்பொருளாகவே குறிக்கப் படும் ருத்திரன், சைவ சித்தாந்தத்தின்படி அழிக்கும் தொழிலுக்கு ஒரு பகுதியளவில் 'ஏகதேச சங்காரம்' மட்டுமே செய்வதாக காட்டப்படுகின்றது. பரம்பொருளான சிவமே அனைத்துக்கும் பெரியது எனவும், சிவத்தின் ஆணையினாலேயே பிரமன், மால், ருத்திரன் ஆகிய மூவரும் பிரபஞ்ச சிருஷ்டி, திதி, சம்காரம் ஆகிய முத்தொழிலைச் செய்வதாகவும் விளக்க உறை அமைகின்றது. ஆக உபநிடத காலத்தில் மஹா பரம்பொருளாக காட்டபப்ட்ட ருத்ரனின் தன்மை நாளடைவில் மாற்றம் கண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதைக் காணமுடிகின்றது.

ச்வேதாச்வதர உபநிஷத்தில் மேலும் ருத்ரன் மக்களின் உடைமைகளையும் சொத்துக்களையும் வம்சத்தையும் காக்க வேண்டும் என்ற வேண்டுதல்களைப் பற்றிய குறிப்புக்களும் வருகின்றன. ருத்ரன் கோபம் கொள்ளக் கூடாது; அப்படி கோபம் வரும்போது தங்கள் குதிரைகள் இருப்பிடங்கள் ஆகியவற்றை அழித்து விடுவார் போன்ற பயம் கலந்த கூற்றுகளும் வருகின்றன. எல்லா பயமும் கவலைகளும் போக வேண்டுமானால் மக்கள் ருத்ரனின் தெற்கு முகத்தால் அருள் பெற வேண்டும் என்று இந்த உபநிஷத்தின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ருத்ரனின் தெற்கு முகம் என்பது தஷிணாமூர்த்தி வடிவம் என்று '108 உபநிஷத்ஸாரம்' நூலின் ஆசிரியர் 'அண்ணா' அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். தஷிணாமூர்த்தி ஞானத்திற்கு அதிபதி. ஞான வேட்கை உள்ள ஆன்மாக்களுக்கு அருள் பாலித்து அவர்களுக்கு வீடுபேற்றினை வழங்கும் சிவ பரம்பொருளே தஷிணாமூர்த்தி வடிவம் தாங்கியுள்ள தெய்வம். ஆக, ஞானம் ஒன்றே வேண்டும் என்று இறைவனை இருக்கப் பிடித்துக் கொள்ளும் ஆன்மாக்களுக்கு உலக அச்சத்தை நீக்கி, ஞானத்தை நல்குபவரே தஷிணாமூர்த்தி எனக் கொல்ளலாம். அவரே பிறவிக்கடலை தீர்த்து பிரவி அச்சத்தைப் போக்கக் கூடியவர்.!

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிகோட்டை கைக் கொள்வது எக்காலம்?

அற்ப சுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கொர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்?

புல்லாய்; விலங்கா; புழுவாய்; நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....


அன்புடன்
சுபா

Saturday, November 16, 2002

ச்வேதாச்வதர உபநிஷத்து (பாகம் 2) - மனித, இயந்திர - மந்திராயனம் (மனம் எனும் குரங்கு / மகாசக்தி)




From: "ksuba100"
Date: Sat Nov 16, 2002 1:25 pm
Subject: Upanishad: Svethasvathara Upanishad- Part II

இரண்டாம் காண்டம் - சுருக்கம்

1.மனதைக் கட்டுப்படுத்தி சீராக்குவதன் வழி தத்துவஞானத்தைப் பெறலாம்.
2.மனதின் இயல்பு இன்பத்தை நாடுவது; அதை நெறிப்படுத்தி உயர்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
3.மனதை கட்டுப்படுத்தும் திறம் பெற்றவனே சிறந்த அறிவாளி.
4.பிறவிக்கானக் காரணத்தை அழித்துவிடும் போது (தவத்தினால்) இருவினை மறைகின்றது.
5.இந்திரியங்களை அடக்கி, பிராணயாமம் செய்து பேரொளியில் கலக்க வேண்டும்.
6.யோகத்தின் பலனாக உடல் பளுவின்மை, நோயின்மை, அவாவின்மை, நிறத்தெளிவு, நல்லகுரல், இனியமணம், மலஜல குறைவு ஆகயவை உண்டாகும்; இவை அடையாளங்கள்.

தொடர் சிந்தனை:
உலகிலேயே மிகவும் சிரமமான காரியம் என்ன?

சுகிப்பது சுலபம். பேசுவது அதை விட சுலபம். சிந்திப்பது கொஞ்சம் கடினம். இன்னும் ஆழமாகச் சிந்துப்பது இன்னும் கொஞ்சம் கடினம். சிந்தித்தை செயல்படுத்துவது அதனினும் பெரும் கடினம்!

நாளைக்குக் கடைக்குச் சென்று புது ஆடைகள் வாங்க வேண்டும் என்று மனம் நினைக்கின்றது. மனம் நினைத்தால் மாத்திரம் போதுமா? மறுநாள் காலையிலேயே எழுந்து வேலைகளையெல்லாம் முடித்து, பஸ் பிடித்து, கடை வீதிக்குச் சென்று தேவையான துணிகளைத் தேடி, அதற்குத் தேவையான பணத்தைச் செலவு செய்து அந்தத் துணிகளை வாங்கி வரவேண்டியிருக்கின்றது. இத்தனைக் காரியங்களையும் செய்தால் தான் வேண்டியது (மனம் நினைத்தது) செயல்படுத்தப்பட்ட வினையாகின்றது. இதைப் போலத்தான் நாம் அன்றாடம் செய்கின்ற எல்லா காரியங்களுமே.

மனம் நினைக்கின்றது; நினைத்ததைச் செயல்படுத்தும் திட்டத்தை படிப்படியாகத் தீட்டுகின்றது. பொறிகளும் உடலின் கருவிகளும் சேர்ந்து மணம் நினைத்த காரியத்தைச் செயல்படுத்துகின்றன.

இது ஒரு சிக்கலான விஷயம். மனம் நினைப்பது என்பது சிந்தனை. அந்த சிந்தனை செயல்வடிவம் பெற்றதா? இல்லை பெறாமலேயே கறைந்து விட்டதா ? என்பதே முடிவு. இச்செயலை கீழ்க்காணும் வகையில் பிரிக்கலாம்.

1. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; உடலும் மணமும் சேர்ந்து காரியத்தை முடிக்கின்றன.
2. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; உடல் ஒத்துழைத்தாலும், மணம் மாறி காரியம் நடைபெறாமல் போய்விடுகின்றன.
3. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; மணம் செய்ய நினைத்தாலும், உடல் ஒத்துழைக்காததால் காரியம் தடை பெறுகின்றது.
4. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; மணமும் உடலும் காரியத்தைச் செயல்படுத்தாமல் தள்ளி வைத்து விடும் நிலை.
5. மனம் நினைக்கின்றது; திட்டம் எதுவுமில்லை. அதனால் காரியம் நடைபெறாமலே அந்த சிந்தனை வீணாகி விடுகின்ற நிலை.
6. மனம் எதையுமே சிந்திக்காத நிலை.
நமது வாழ்வில் கணம் கணம் நிகழும் அனைத்து காரியங்களையும் மேற்கூறிய ஏதாவது ஒன்றினில் வகைப்படுத்திவிடலாம். நினைத்ததைச் சாதித்தவர்களே மக்களால் காலம் காலமாக பேசப்படுபவர்களாகத் திகழ்கின்றனர். நினைத்தைச் சாதிக்கும் உந்து சக்தி எல்லோரிடமும் இருப்பினும் அதனை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துபவனாலேயே அதனால் பயனடைய முடிகின்ற தன்மையைப் பார்க்க முடிகின்றது. சூக்குமத் தன்மை கொண்ட மனதை ஆன்மா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்கு தூலப் பொருளான உடல் கருவியாகின்றது. இந்திரியங்களை அடக்கி யோகத்தில் சென்று மனதை பயிற்சி படுத்துவது ஆரம்ப நிலை. நமது சித்தர் இலக்கியங்கள் அஷ்டாங்க யோகமாகிய யமம், நியமம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை மனத்தை இயக்கி அடக்கும் உத்திகளாகக் காட்டுகின்றன.

1.யமம் - ஒதுக்க வேண்டியவை. தூய்மையற்ற, உண்மையற்ற, நியாயமற்ற பழக்கங்கள் ஒதுக்கப் பட வேண்டியவை.
2.நியமம் - ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை. தூய்மையான் செயல், உண்மையான செயல், அன்பான வாழ்க்கை, நெறியுடைய தன்மைகள் ஆகியவை.
3 ஆசனம் - இருக்கை. உடலை நேராக இருத்தி முதுகந்தண்டை நிமிர்த்தி இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சரியே பயனிக்க வைத்தல்.
4.பிராணாயாமம் - சுவாசப் பயிற்சி. மூக்கின் வழி உள்ளே இழுக்கப் படுகின்ற சுவாசம் சரி வர உடலுக்குள் செல்லுமாறு பயிற்சித்தல்.
5.பிரத்யாகாரம் - ஆற்றலை ஒன்றுபடுத்துவது. மனதில் தெளிவு பிறக்கும் போது ஆன்மா தனக்குள்ள ஆற்றல்களை உணரும் தன்மை பிறக்கின்றது. தனது ஆற்றலை உணர்ந்து அதனை சிந்தித்து சாதிக்க வேண்டியதை மனம் செயல்படுத்துவதே பிரத்யாகாரம்.
6.தாரணை - சக்திகளுக்கு வலிமையூட்டல். இறைசக்தி உடம்பிற்குள் உறைந்து கிடக்கின்றது. அதனை உபாசித்து இறைசக்தியே மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துச் செயல்படுத்த அனுமதித்தலே தாரணை.
7.தியானம் - மனம் தேடுகின்ற ஒன்றினை முற்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேகத்தோடும் துடிப்போடும் ஆன்மாவை பிடித்துக் கொள்வது.
8.சமாதி - பேரின்பத்தில் அடங்குதல். இறையோடு ஒன்று கலக்கும் பேரின்ப நிலை.
மனம் ஒரு குரங்கு; காட்சிக்கு இனிமையாக இருப்பவையெல்லாம், புலன்களுக்கு சுகம் தரக்குட்டிய பொருள்களெல்லாம் தனக்குச்சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் மனதிற்கு உண்டு. ஒன்றை அடைந்ததும் அதிலிருந்து தாவி அடுத்த ஒன்றினை அடைய வேண்டும் என்று தவிப்பதும் அதன் இயல்பு. உலக சுகங்களில் மாட்டிக் கொண்டு இங்கும் அங்கும் அலைகின்ற தன்மையும் அதற்கு உண்டு.

குரங்காகத் தாவக் கூடிய இந்த மனத்தை ஆன்மா, பயிற்சிகளின் வழி அடக்கி ஆளும் போது உள்ளே அடங்கி இருக்கின்ற மாபெறும் சக்தியை பெறுகின்றது; அதுவே குண்டலினி. இந்தக் குண்டலினி உடலுக்குள் வாழும் பாம்பு; இது ஊணக்கண்னுக்குத் தென்படா பாம்பு. அக்னி சொரூபமான இப்பாம்பு மகா சக்தியை அளிக்கக் கூடியது. மனமெனும் மகா சக்தி இறைத் தன்மையைப் பெறும் போது பேராற்றல் வருகின்றது. இந்த பேறாற்றலே சாதனையாளர்களைப் இப்பூமியில் படைக்கின்றது. ஒருமித்த சிந்தனை, தெளிந்த குறிக்கோள், நல்ல நெறிகள்; இவை நினைத்தைச் சாதிக்கும் சக்தியை ஒரு ஜீவனுக்கு வழங்குகின்றன.

ஒரு மனிதனின் தகுதி அவனது உடம்பால் கணக்கிடப்படுவதல்ல. மனித உடலால் என்ன பயன்? ஒரு முதலையின் தோலினால் எத்தனையோ விலையுயர்ந்த் பொருட்கள் உருவாகின்றன. பறவைகளின் சிறகால் பல விலை மதிக்கத்த பொருட்கள் உருவாக்கப் படுகின்றன. ஆனால் மனித தேகத்தை மட்டும் மதிப்பிடுவதானால் மனிதர் அதிக விலை போகமாட்டார். ஒருவரின் உடலில் கிடைப்பவை: கொஞ்சம் சுண்ணாம்பு, 3 டஜன் தீப்பெட்டிகளை உருவாக்குவதற்கான போஸ்பரஸ், 3 சிறிய ஆணிகளை செய்யத் தேவையான இரும்பு, சில லிட்டர் தண்ணீர் செய்யக்கூடிய அளவு ஹைட்றோஜன், ஆக்ஸிஜன் ஆகியவையே; இவை தவிர மேலும் சிறிய அளவிலான சில உலோகங்கள். இவை அத்தனையயும் கூட்டினாலும் 10 டாலர் கூட மதிப்புப் பெறாத பொருட்கள் தான் மனிதனின் உடம்பில் இருக்கின்றன. [ இப்போதெல்லாம் சிறு நீரகம், இருதயம், கண்கள் என்று பல ஆயிரக்கணக்கில் மனித உடலின் அங்கங்கள் திருட்டுத்தனமாக விலைப் போகின்றன. அவற்றை இங்கெ ஒதுக்கி விட்டேன்..:) ] அப்படியென்றால் ஒரு மனிதரின் மதிப்பு உடம்பினால் பெறப்படுவது என்பது பொய்யாகின்றது. அவரவர் ஆன்ம சக்தியே மனிதருக்கு மதிப்பையும், தகுதியையும், சிறப்புத் தன்மையயும் வழங்கும் அளவு கோலாக அமைகின்றது.

பிறவிக்கான காரணத்தை அழிக்க முற்படும் முயற்சியில் முதலாவதானது தன்னைப் பற்றிய (ஆன்மா) உண்மைகளை அறிந்து கொள்ள ஒருவர் எடுக்கின்ற முயற்சிகளே. மனதை அலைக்கழிக்கும் பல இன்னல்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுபட தன் தெய்வீக இயற்கையை தேடுவதே சிறந்த வழி. மனதை குரங்காகவே வைத்திருப்பது, இந்த முயற்சிக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. அதனை மகாசக்தியாக மாற்றுவதே வெற்றிக்கு முதற்படி.

வேடிக்கையும் சொகுசும் மெய்ப் பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கையெல்லாம் மறந்திருப்பது எக்காலம்?

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம்?

ஒலிபடரும் குண்டலியை உண்ணி உணர்வால் எழுப்பி
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம்?

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம் போல் திரிவதினி எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....


அன்புடன்
சுபா

Saturday, July 13, 2002

ச்வேதாச்வதர உபநிஷத்து (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயனம் (ப்ரம்ம லிபி)




Date: Sat Jul 13, 2002 9:00 pm
From: "suba k."
Subject: Svethasvathara Upanishad - Part 1
To: meykandar@egroups.com

முதற் காண்டம் - விளக்கம்

- இந்தப் பகுதி ச்வேதாச்வதரர் என்ற மாமுனிவர் உபாதேசம் செய்வித்ததால் அவரது பெயரையே கொண்டு விளங்குகின்றது.
- 'சுவேத' என்பது வெண்மையையும், 'அச்வதர' என்பது குதிரையின் வர்க்கத்தையும் (அல்லது இந்திரியக் கூட்டத்தையும்) குறிப்பவை.(அகமும் புரமும் தூய்மையானவர் என்பதை குறிப்பது)
- இந்த உபநிஷத் கிருஷ்ண யஜூர் வேதத்தைச் சார்ந்தது.

தொடர் சிந்தனை:
வேதனைகளும் சோதனைகளும் நம்மைத் தாக்கி உலுக்கும் போது தெளிவை நாடி நாம் நமக்குள்ளே செல்லச் செல்ல நம்மை நாம் மீண்டும் மீண்டும் "ஏன் பிறந்தோம்? எதற்கு பிறந்தோம்? என்று அலுக்காமல் சலிக்காமல் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றோம். விடை கிடைக்கின்றதா..?

நமது கன்ம வினைகளால் இந்த உலகில் பிறந்து இப்போது கிடைக்கின்ற வாழ்க்கையை வாழ்கின்றோம் என்று ஒரு வகையாக மனதை தேற்றிக் கொண்டாலும், சரி முடிவு எங்கே..? இறந்ததும் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தொலைந்து விடுவோமா..? என்று நினைக்கும் போதே மனதை பிசைகின்ற அளவுக்கு தொண்டையில் நீர் வற்றி விடுகின்ற அளவுக்கு ஒரு பயம் நமக்கு தோன்றுகின்றதே..?
உண்மையில் எனக்கு முடிவென்று ஒன்று இருக்கின்றதா..?
அது என்ன நிரந்தர முடிவா அல்லது நான் என்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வேறு ஒரு வடிவம் பெறுவேனா..?
இந்த சுழற்சி என்றாவது நிற்குமா?
நிற்கும் போது நான் மட்டும் இருப்பேனா அல்லது என்னோடு வேறொன்றும் இருக்குமா..?

அலுவலகத்தில் எனது மேற்பார்வையின் கீழிருக்கும் வாடிக்கையாளர் நிறுவனம் ஒன்றிற்கு இரண்டு செர்வர் ரக கணினிகளை, அவை இயங்கக் கூடிய வகையில் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஒன்று L class HP-UX ரக செர்வர். மற்றொன்று K class HP-UX ரக செர்வர். இரண்டுமே ஒரே விதமான Operating System கொண்டு இயங்க வேண்டும். இவை இரண்டையும் அது அதற்குத் தகுந்த மென்பொருட்களை ஏற்றி அதற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு. மென்பொருட்கள் ஒவ்வொன்றையும் தேடி அதன் அடிப்படை இயலியின் (hardware) தரத்தை அறிந்து அதற்குத் தக்கவாறு அமைக்க வேண்டும். இரண்டுமே வெவ்வேறு தொழில்நுட்பத்தைக் கொண்டே இயங்கக் கூடியவை.

இந்த இரண்டு செர்வரில் ஒன்று புதியது; மற்றொன்று ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு ஆனால் Operating System அழிக்கப்பட்டு, அது இயங்கியதற்கான எந்தத் தடயமுமே இல்லாத அளவிற்கு பூஜியமாக இருப்பது. அதாவது, மனிதன் இறந்து மீண்டும் மறு பிறவியைப் பெற்று வாழ வரும் போது எப்படி பழைய எச்சங்களின் தொடர்ச்சி அறவே அற்றுப் போய் வருகிறதோ, அப்படிப்பட்டது!

மென்பொருட்கள் ஒவ்வொன்றாக ஏற்ற ஏற்ற செர்வரின் இயக்கம் படிப்படியாக வளர ஆரம்பித்தது. முதலில் அந்த செர்வர் தன்னை அறிந்து கொள்ள ஒரு operating System; பிறகு அது தனக்குள்ளே அடங்கியிருக்கின்ற பொறிகளையும் கருவிகளையும் (disk, tape drives, Lan cards) அறிந்து கொள்ள பிரத்தியேகமான மென்பொருட்கள் (drivers). எல்லாம் சேர்த்த பிறகு செர்வரின் இயக்கம் சீராக ஒழுங்காக இருக்கின்றதா என்பதை கண்காணிப்பதற்கு ஓரு மென்பொருளையும் ஏற்றியாயிற்று (Monitoring software). இதற்கும் மேலாக இந்த இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அதன் இயக்கத்தையும், செயல்பாடுகளைப், போக்குகளையும், 'நிமிடாந்திர' அறிக்கையைக் கொடுப்பதற்கான மென்பொருளையும் சேர்த்தாயிற்று. எப்படி நாம் வாக்காலும், மனத்தாலும் உடம்பாலும் இழைக்கின்ற ஒவ்வொரு செயலும் கன்மக் கனக்கில் பதிவாகின்றதோ அதைப் போல இங்கே செர்வரின் இயக்கத்தை உண்ணிப்பாகக் கவனிக்க இந்த ஏற்பாடு.

வேலை முடிந்தது. நான் சிந்தித்து செயல்படுத்திய லிபியின் படி இந்த இரண்டு 'இயந்திர உயிர்களும்' இயங்க ஆரம்பித்து விட்டன!

உருவாக்கிய எனக்கு பரம திருப்தி. இங்கு பிரம்ம தேவன் நானே!

இயந்திரத்தை படிப்படியாக இயங்க வைக்க பல நுண்ணிய அபாரமான செயல் திரம் மிக்க மென்பொருட்கள் அடிப்படையாகின்றன. அதேபோல ஆன்மாவிற்கு ஒரு தக்க உடலைக் கொடுத்து, வலு கொடுத்து, நோக்கத்தை கொடுத்து இயங்க வைக்க எந்த விதமான ' மென்பொருள்' தேவை என்பதை நினைக்கும் போது இறைவனின் எல்லயற்ற அளவிலா சக்தியின் மகத்துவத்தைக் கூற வார்த்தையில்லாமல் போகின்றது.

அந்த வகையில் ச்வேதாச்வதர உபநிஷத்து இறைவனின் அளப்பறிய சக்திகளை விளக்குவதாகவும், ஆண்மா இறை சக்தியினாலேயே இறைவனை அறிவதாயும் கூறுகின்றது. இந்த உபநிஷத்து முன்பு நாம் கண்ட ஏனைய மூன்றையும் விட சற்றே வேறு பட்டதாகவே எனக்குத் தெரிகின்றது. இந்த முதல் காண்டத்தில் பேசப்படுகின்ற விஷயங்கள் சைவ சித்தாந்த நோக்கில் ஆன்ம விசாரனை செய்யும் போது கேட்கின்ற அடிப்படைக் கேள்விகளைக் எழுப்புவதாக அமைகின்றன.

"எல்லா உயிர்களும் வாழ்கின்ற இந்த பிரம்ம சக்ரத்தில் ஆத்மா சுற்றிச் சுற்றி பல வேடங்களைத் தரித்து வாழ்ந்து, பின்னர் தன்னை இயக்குவிப்பவன் இறைவனே என அறிந்து அவனால் அருள் பெற்று 'அவனாகவே ஆகி' சாகா நிலையை பெறுவதாக ஒரு சுலோகம் செல்கின்றது. இன்னொரு சுலோகத்தில், "அறிகின்ற அறிவும் அறியப்படும் பொருளும், ஆள்கின்ற சக்தியும் ஆளப்படுகின்ற அதுவும், அனுபவிக்கின்ற உயிரும் அனுபவிக்கின்ற பொருளுக்கும், ஒரு உறவைத் தருவதாக" மாயை குறிக்கப்படுகின்றது. இவை, அனுபவிக்கின்ற ஜீவன், அனுபவத்தைக் கொடுக்கின்ற பகவான், இவற்களுக்குள் தொடர்பினை ஏற்படுத்தும் மாயை இவை மூன்றுமே பிரம்மம்". பதி பசு பாசம் இவை மூன்றும் அநாதியெனப் பகரும் சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கைக்கு மூலக் கருத்துகள் இங்கே஧ யும் கூறப்படுவது கவனித்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று!

இரண்டு செர்வர்களுக்கும் மென்பொருட்களை ஏற்றி அதனை இயங்க வைத்தாயிற்று; ஆனால் இந்த செர்வரை பயன்படுத்துகின்ற பயனீட்டாளர்கள் கூட்டம் அட்லாண்டாவிலும் சிங்கப்பூரிலும் ஜெர்மனியுலும் பறந்து விரிந்து இருப்பதால் அதற்குத் தேவையான தொடர்புகளை (network configuration) ஏற்படுத்த வேண்டியது அடுத்த வேலையாகிப் போனது. ஆக அதனைச் செய்ய, சரியான ஒரு IP address கொடுத்து பயனீட்டாளர்களைக் கண்டு கொள்வதற்காக அவர்களின் செர்வர்களின் பொதுவான IP address யும் கொடுத்து இந்த செர்வர்களெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் வகையில் இணைப்பினை ஏற்படுத்தியாயிற்று. இப்பொது தொடர்புகள் செயல்பட ஆரம்பித்துவிட்டன. உலகத்தின் வெவ்வேறு பகுதியில் இருக்கின்ற எந்த பயனீட்டாளர்களும் ஒரு குறிப்பிட்ட IP address மூலமாக எவ்வாறு அந்த செர்வரைக் கண்டுகொள்கின்றார்களோ அதே போல கண்ணுக்குத் தெரியா மெல்லிய தொடர்பு ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. செர்வருக்கு எவ்வாறு upgrade, alert notification, status report எல்லாம் management செர்வரிலிருந்து கிடைக்கின்றதோ அதைப் போலவே, உடலெடுத்த ஆன்மாக்களுக்கும் upgrade நடந்து கொண்டே தானிருக்கின்றது. ஆன்மாவின் செயல், அது எடுக்கின்ற முடிவு, அதனால் விளையக் கூடிய பின் விளைவுகள் அனைத்தும் ஒவ்வொரு கணமும் கன்ம வங்கியில் சேர்க்கப்பட்டு எப்போது ஆன்மா தன்னையே தான் அறிந்து தன் ஆன்ம விடுதலைக்கு இறையே காரணம் என் தெள்ளத் தெளிவாக உணர்கின்றதோ அன்றே இறுதி விடுதலையையும் பெறுகின்றது. இந்த நிலையை அடையும் வரையில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்வதே விதி!


கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தாற்போல்
உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?


இரும்பில் கனல் மூட்டி இவ்வுரு போய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்?


நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்ப விட்டு
வெட்ட வெளியில் விரவி நிற்பது எக்காலம்?

[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]



தொடரும்.....


அன்புடன்
சுபா


From: "S.Thiru"
Date: Sun Jul 14, 2002 4:18 pm
Subject: Re: [meykandar] Svethasvathara Upanishad - Part 1

வணக்கம்

யதார்த்த நிலையுடன் ஒப்பிட்டு விளக்கம் செல்கின்றது

பாராட்டுகள்
தொடரட்டும் பணி

அன்புடன்
திரு


From: "Dr K.Loganathan"
Date: Sun Jul 14, 2002 3:40 am
Subject: Re: [meykandar] Svethasvathara Upanishad - Part 1

அன்பின் சுபா,
முதலில் இந்த புதுமைச் சிந்தனை மிக்க கட்டுரைக்கு எனது வாழ்த்துக்கள். ஏற்புடைய பழைய கருஹ்துக்களுக்கு புதுமை வடிவம் தரவேண்டும். காலத்தின் கட்டாயம். அவ்வகையில் கணினியியத்திற்கும் மந்திராயணத்திற்கும் முடிச்சு போடுவது மிகவும் ஏற்புடைத்து. பெரிதும் வளர்க்கப்பட வேண்டிய சிந்தனாபோக்காகும்.

நான் ஏற்கனவே பன்முறை கூறியிருப்பது போல, Cyber Space என்பது மந்திரவுலகுதான், வேறில்லை. மந்திராயணத்தின் பிறிதொரு வடிவமே கணினியம். இதனால் போலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இத்துறையில் மிகவும் சிறந்து விளங்கின்றார்கள்!

நிற்க இத்தோடு தொடர்புடையதாக இன்னொரு தேவையும் இருக்கின்றது. ஆன்மாவை இறைவன் ஆட்டுவிக்கின்றான், அவன் ஆட்டுவிகக நாம் ஆடுகின்றோம். ஆனால் ஒவ்வொரு ஆன்மாவையும் எப்படி ஆட்டுவிக்கின்றான், இதனை எப்படித் துல்லியமாக் அறிவது என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.

இங்கு தான் தருத் தேர்வு உதவுகின்றது. எந்த வகை மென்பொருள் ஓர் ஆன்மாவின் அறிவினை இயக்குகின்றது என்பதை இந்தத் தருத்தேர்வின் வழி துல்லியமாக அறிந்துகொள்ளலாம். காட்டாக இன்று நான் இட்ட பகுதியில் விளக்கியிருக்கும் விருட்சங்களின் பொதுக் கூறுகள்.

விரக்தி கவலை வேதனை போன்றவை நம்மை நாம் அறியாதே தாக்குகின்றன. தருத்தேர்வில் இது கனிகள் போக்கப்பட்டதாகவும் கிளைகள் வெட்டப்பட்டதாகும் இன்னும் இதுபோன்றும் வெளிப்படும். இவற்றை deletion operations என்று கூறியிருக்கின்றேன். இதனை இறைவன் நடத்தும் சங்காரத் தாண்டவம் எனினும் அமையும்.

இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு தமிழர்களிடையே வரவேற்பு இல்லை. பேருறக்கத்திலிருந்து இன்னும் இவர்கள் விழிக்கவில்லை. விரைவில் விழிப்பார்கள் இப்படிப்பட்ட புதுமைகளையும் வரவேற்றுப் போற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் நலமே தொடர்வோம்.

உலகன்


From: "ksuba100"
Date: Sun Jul 14, 2002 9:12 pm
Subject: Re: Svethasvathara Upanishad - Part 1

அன்புள்ள முனைவர் லோகா,
தங்களின் வாழ்த்துக்கள் நல்ல பல கட்டுரைகளை மேலும் நான் படைப்பதற்கு ஊக்கமளிப்பவை.நன்றி

> இங்கு தான் தருத் தேர்வு உதவுகின்றது. எந்த வகை மென்பொருள் ஓர் ஆன்மாவின் அறிவினை இயக்குகின்றது > என்பதை இந்தத் தருத்தேர்வின் வழி துல்லியமாக அறிந்துகொள்ளலாம். காட்டாக இன்று நான் இட்ட பகுதியி ல் > விளக்கியிருக்கும் விருட்சங்களின் பொதுக் கூறுகள்.

உலக இயக்கத்திற்கு அடிப்படையாக அமைவது மந்திர சக்திகளே. ஒவ்வொரு மந்திர சக்திகளும் எவ்வாறு அதனதன் தன்மைக்கு ஏற்றார் போன்று இயங்கி உயிர்களுக்கு நாட்டத்தைக் கொடுத்து செயல்பட வைக்கி ன்றது என்பது போன்ற கருத்துக்களை நாம் பல முறை விவாதித்திருக்கின்றோம். அதிலும் தங்களின் திருநெறித் தெளிவு தருகின்ற விளக்கம் ஆழமான, தெளிவான கருத்துக்கள். தங்களின் விருட்சத் தேர்வு அதனை வெளி ப்படையாகக் காட்டுவது மிக்க உண்மை.

> இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு தமிழர்களிடையே வரவேற்பு இல்லை. பேருறக்கத்திலிருந்து இன்னும் இவர்கள் > விழிக்கவில்லை. விரைவில் விழிப்பார்கள் இப்படிப்பட்ட புதுமைகளையும் வரவேற்றுப் போற்றுவார்கள் என்ற > நம்பிக்கையில் நலமே தொடர்வோம்.

தமிழ் மக்கள் இன்னமும் ஆழமான சிந்தனைக்குள் செல்ல மறுக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலோட்டமாக சடங்குகளில் மூழ்கி நாமும் பக்தி செய்தோம் என்று நினைப்பதிலேயே திருப்தி அடைந்து விடுகி ன்றனர். இங்கு கூட ஜெர்மானிய நண்பர்கள் கேட்கின்ற ஆழமான கேள்விகளை தமிழ் மக்கள் கேட்டு நான் அறி ந்ததில்லை. இன்று பிள்ளையார் கோயிலின் மண்டலாபிஷேகம் சென்றிருந்தேன். ஆலய நிர்வாகம் மிக்க ஆர்வத்துடன் மக்கள் சொற்பொழிவுகளையும் கேட்டு சிந்தனைக்கும் ஆலயம் இடம் தர வேண்டும் என்ற உந்துதலில் இரண்டு சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்திருந்தது. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் குமரன் அவர்களும் நானும் சொற்பொழிவு செய்தோம். ஆனால் யாருக்கும் கேள்வி கேட்க மனமி ல்லை.உந்துதலும் இல்லை. இளம் வயதினர் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பெரியோர் தனக்குத் தெரிந்தது போதும் என சடங்குகளோடு நின்று விடுகின்றனர்.

ஜெர்மானிய நண்பர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு இந்து சமயத்தில் தெரிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக நினைக்கின்றனர். ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு மனம் அமைதி அடையும் வரையில் துருவித் துருவி கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க வைக்கின்றனர். மேலும் இப்போது பெரும் அளவில் meditation வகுப்புக்கள் பரவலாக ஜெர்மானியர்களிடையே நடைபெறுகின்றன. மேலும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பல ஜெர்மானிய இளைஞர்கள் புத்த மதத்தில் சேர்ந்து அக்கொள்கைகளைப் பின்பற்ற அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது கோடைகால ஒருவார வகுப்புக்கள் பரவலாக சுவிஸின் பல நகரங்களிலும் மற்றும் ப்ரான்ஸ் எல்லை கிராமங்களிலும் நடைபெறுகின்றன. இங்கு சென்று புத்த மதத்தைக் கற்று அவ்வழியில் செல்வது பல ஜெர்மானிய இளைஞர்களின் ஓய்வு நடவடிக்கையாகவும் இருக்கின்றது.

இதைப் போன்ற பல நடவடிக்கைகள் ஐரோப்பாவில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் நடைபெற வேண்டும். மக்கள் சமயத்தை ஒரு சடங்காக நினைத்து இறைவனைத் தள்ளி வைப்பதற்கு பதிலாக, இறைசக்தி தன்னுள்ளிருந்து பிரி க்கப்பட முடியாத ஒன்று என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து வாழ வழிகாட்டுபவையாக இந்த நிகழ்வுகள் இருக்க வேண்டும்.

அன்புடன்
சுபா


From: Njaanavettiyaan
Date: Sun Jul 14, 2002 6:16 pm
Subject: Re: [meykandar] Svethasvathara Upanishad - Part 1

அன்பின் சுபா,

வணக்கம்.
வாழ்த்துக்கள்.
கடினமான ஒன்றை எளிமையாக விளக்குவது ஓர் அற்புதக் கலை. கணிணியைப் பற்றி அறிந்தவர்கள் நன்கு இரசித்திருப்பர்.

மெய்ஞானப் புலம்பல் அருமை! மிக அருமை!!

செர்மானிய எழுத்தாளர் "Bo Van Derick" எழுதியுள்ள "Chariots of God" & "Return of Gods" என்னும் இரு பொத்தகங்களிலும், நாமெல்லாம் "pre-programmed robots"(தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை - உதவி) எனவும், விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறிய மற்றுமொரு நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்தவர்களைக் கடவுளாகப் பாவிக்கிறோம் எனவும், இன்னும் பல விடயங்களையும் ஆதாரங்களுடனுடம் புகைப்படங்களுடனும் எழுதியுள்ளார். இத்துடன் ஒத்துநோக்குங்கால், தாங்கள் எழுதியுள்ளது ஏற்புடைத்தே.

>இந்த சுழற்சி என்றாவது நிற்குமா? நிற்கும் போது நான் மட்டும் >இருப்பேனா அல்லது என்னோடு வேறொன்றும் இருக்குமா..?

தீர்க்க தெரிசனங்களை நம்புபவர்கள் கூறுவர்: விவிலிய வேதம் 13ம் அதிகாரம்:
"மிருக குணங்களைக் கொண்ட ஒரு அதிசய மனிதன் பூமியில் அரசாளுவான். மிகுந்த வல்லமையுடன் அவன் விளங்குவான். மரித்தோரை உயிர்ப்பிக்கும் அளவுக்கு அவனுக்கு அறிவு இருக்கும்." ...........வெட்டுப்பட்ட கைகள் ஆனாலும், கால்கள் ஆனாலும் அதை அதிசயத்தக்க வகையில் ஒட்டின வடு தெரியாமல் ஆக்கும் வல்லமை உடையவன். இதுவரை விஞ்ஞானம் கண்டறியாத விஞ்ஞையான செயல்களை நடத்திக் காடுவான். கடவுளுக்கீடான நாமம் கொடுத்து எல்லோரும் வணங்கும்படியான கோவில் ஏற்படுத்தப்படும். இங்கு, நேற்றய கனவு இன்றைய நடப்பு என்பதை நினைவில் கொண்டால், ஆங்கிலத் திரைப்படமான "Universal Soldier" இன்றைய கனவு. நாளை ஏன் மெய்ப்படக்கூடாது. பிரளய காலத்தில் அழிவதுறுதியே. ஆயினும், ஒரு சில சீவர்களும், சீவராசிகளும் எஞ்சி நிற்கும். அவர்களே பல்கிப் பெருகி வாழ்வார்கள் என "Nosterdamus" எழுதியுள்ளார்.

>உருவாக்கிய எனக்கு பரம திருப்தி. இங்கு பிரம்ம >தேவன் நானே!

ஆம். நாமே பிரம்ம தேவன். எண்ணங்களாலும், செயல்களாலும் படைக்கும் ஒவ்வொரு படைப்பும் நம்மைத்தான் பிரம்மதேவன் எனக் கூறும். ஆக, நாமே பிரம்மம்.

>ஆன்மாவிற்கு ஒரு தக்க உடலைக் கொடுத்து, வலு கொடுத்து, >நோக்கத்தை கொடுத்து இயங்க வைக்க எந்த விதமான >'மென்பொருள்' தேவை என்பதை நினைக்கும் போது >இறைவனின் எல்லயற்ற அளவிலா சக்தியின் மகத்துவத்தைக் கூற >வார்த்தையில்லாமல் போகின்றது.

உண்மை. உண்மை.

>ஆன்மாவின் செயல், அது எடுக்கின்ற முடிவு, அதனால் விளையக் >கூடிய பின் விளைவுகள் அனைத்தும் ஒவ்வொரு கணமும் கன்ம >வங்கியில் சேர்க்கப்பட்டு எப்போது ஆன்மா தன்னையே தான் அறிந்து >தன் ஆன்ம விடுதலைக்கு இறையே காரணம் என் தெள்ளத் >தெளிவாக உணர்கின்றதோ அன்றே இறுதி விடுதலையையும் >பெறுகின்றது.

கற்றதைப் புரிந்து, அது ஏன், எதற்கு என தனக்குள்ளே தர்க்கம் செய்து, கிடைக்கும் விடையினால் தெளிந்து, அதை கருத்தாக்கி, நினைவிலேற்றிப் பின் உணர்ந்தால் விடுதலை நிச்சயம்.

>இரும்பில் கனல் மூட்டி இவ்வுரு போய் அவ்வுருவாய்க்
> கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்?
ஒளவைக்குறள்
143. கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.
சாத்திரங்களில் விரவியிருக்கும் இறையை அறியும் மனு மூன்று வகை:
உத்தமர்: ஆகமங்களை நோங்கிக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் பிரித்து எடுத்து, சாற்றை எடுத்துப் பக்குவப் படுத்தி ஆத்ம இன்பத்திற்கு உபயோகித்துக்கொண்டு, சக்கையை எறிந்துவிடுவர். இவர்களைக் குறித்து, "கரும்பினிற் கட்டியும்" என்றார்.

மத்திமர்: ஆகமங்களைக் கற்று, சத்தாகிய உட்பொருளைப் புரிந்தவரை பிரித்து எடுத்து, சாற்றை எடுத்துப் விளங்கியபடி இயன்றவரை ஆத்ம இன்பத்திற்கு உபயோகித்துக்கொண்டு, நூலையும் பாதுகாத்து வைப்பர். சாற்றைப் பிரித்துவிட்ட பின், மிகுதி உள்ளவரையில் நீக்கவேண்டியதையும் உள்ளிழுத்துக் கொள்வர். சக்கையாகிய தயிரையும் உட்கொள்வர்.
அதனால், "காய் பாலில் நெய்" என்றார்.

அதமர் : ஆகமங்களையே அறியார். அறிந்தாலும் சாற்றை உட்கொள்ள இயலவில்லை. இது குறித்தே, "இரும்புண்ட நீர்" என்றார். அதாவது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டு எப்படி நீரை உட்கொண்டு பிரகாசமுள்ள வண்ணத்தையும் இழக்கும் நிலையாம்.

எதுவும் சாத்தியமே என நினைந்து,

அன்புடன்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
அளிமிகு நண்பர் திரு. அவர்கட்கு,
வணக்கம்.

நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
போய்ப் பாருங்கள்:
http://www.geocities.com/enjayan2000/index.htm


From: "ksuba100"
Date: Sun Jul 14, 2002 9:44 pm
Subject: Re: Svethasvathara Upanishad - Part 1

அன்புள்ள திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு

வணக்கம்
நன்றிகள் பல!
> மெய்ஞானப் புலம்பல் அருமை! மிக அருமை!!
பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் என் மனதைக் கரைக்கும் வல்லமை படைத்தவை. இச்செய்யுள் வரிகளைப் படிக்கும் போது நம்மை மறந்து பரம்பொருளோடு இரண்டறக் கலந்து விட முடிகின்றது. ஒவ்வொரு சொற்களும் சிறந்த கருத்துக்கள் நிறைந்தவையாக இருக்கின்றன.

> செர்மானிய எழுத்தாளர் "Bo Van Derick" எழுதியுள்ள "Chariots of God" & "Return of > Gods" என்னும் இரு பொத்தகங்களிலும், நாமெல்லாம் "pre-programmed robots"(தமிழ்ச் சொல் > கிடைக்கவில்லை - உதவி) எனவும், விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறிய மற்றுமொரு நட்சத்திர > மண்டலத்திலிருந்து வந்தவர்களைக் கடவுளாகப் பாவிக்கிறோம் எனவும், இன்னும் பல விடயங்களையும் > ஆதாரங்களுடனுடம் புகைப்படங்களுடனும் எழுதியுள்ளார். > இத்துடன் ஒத்துநோக்குங்கால், தாங்கள் எழுதியுள்ளது ஏற்புடைத்தே.

இந்த நூலை நான் வாசித்ததில்லை. ஆனால் இந்தக் கருத்து பிடித்திருக்கின்றது. நாமெல்லாம் "pre- programmed robots" என்று சொல்வது மிக மிக உண்மை என்றே எனக்குப் படுகின்றது.ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏறப வித்தியாசங்கள் தெரிந்தாலும், பல ஒரே மாதிரியான தன்மைகள கொண்ட மென்பொருட்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டுமன்றறி பிற உயிரினங்களுக்கும் இது பொருந்துகின்றது. மிக ஆழமான ஆதே சமயத்தில் சுவாரசியமான விஷயம் இது.

> ஒளவைக்குறள்
> 143. கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
> இரும்புண்ட நீரு மியல்பு.

இரண்டே வரிகளில் எத்தனை ஆழமான விளக்கம் பொதிந்து கிடக்கின்றது? மேலும் எழுதுங்கள். இம்மாதிரியான விளக்கங்கள் என்னைப் போன்ற சித்தர் பாடல் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

அன்புடன்
சுபா

Thursday, May 9, 2002

ஜாபாலோபநிஷத்து - (பாகம் 2) - மனித, இயந்திர - மந்திராயனம் (முக்தி எனும் முடிவிலா முடிவு - பகுதி 2)




Date: Thu, 9 May 2002 03:30:41 -0700 (PDT)
From: "suba k."
Subject:Upanishad - Jaabolaaba Upanishad (Part 2)
To: meykandar@egroups.com

மூன்றாம் காண்டம் - சுருக்கம்:(2)
குரு யாக்ஞவல்கியரை நோக்கி அவரது சிஷ்யர்கள் 'எதை' ஜபம் செய்வதன் மூலம் ஒருவர் சாகா நிலை என்னும் அம்ருதத்வம் அடைய முடியும் என வினவுகின்றனர். அக்கேள்விக்கு அவர் அளிக்கின்ற பதிலே இந்த மூன்றாம் காண்டமாக அமைகின்றது. ஸ்ரீ ருத்ரத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற சிவநாமங்களாகிய சதருத்ரீய மந்திரத்தை ஜபிப்பதனாலே ஒருவர் சாகா நிலையினைப் பெற முடியும் என அதற்கு யாக்ஞவல்கியர் பதில் கூறுகின்றார்.

குறிப்பு: ஸ்ரீருத்ரம் ருத்ரோபநிஷத் மற்றும் சத ருத்ரீயம் என்ற மற்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது. இதில் சிவ பஞ்சாட்சர மந்திரம் அடங்கியுள்ளது. 

தொடர் சிந்தனை:

மனிதர்கள் தம்மை எப்போழுதுமே அழிகின்ற ஒரு பொருளாக நினைப்பதில்லை. தன்னைச் சுற்றி பல மாற்றங்களும் பேரிடர்களும் பெரு நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதிலும் தன்னை நித்திய சொரூபமாகவே, இயற்கையாகவே மனித உள்ளம் நினைக்கின்றது. வாழ்க்கை அனுபவங்கள் நமது சுற்றங்களின் பிரிவையும் மரணங்களையும் நமக்கு காட்டிக் கொண்டேயிருப்பினும் அணையற்ற நதிபோல அன்றாட அலுவல்களிலும் எதிர்கால திட்டங்களிலும் மூழ்கி வேகமாக நம்மை இழுத்துக் கொண்டு ஓடுவதே இயல்பாக இருக்கின்றது. ஏன் இவ்வாறு?

அடிப்படையில் மனிதன் அழிகின்ற பொருளன்று. ஒரு உடலைக் காட்டி அது மனிதன் எனும் போது அங்கே நாம் அழிகின்ற ஒரு ஸ்தூலப் பொருளைச் சுட்டுகின்றோம். ஆனால் உண்மையில் மனிதன் என நாம் குறிப்பிடுவது அந்த உடம்பிற்குள் மறைந்தும் மறையாமல் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்ற ஆன்மா என்ற ஒன்றினையே. ஆன்மா அழிவற்றது; பிறப்பு இறப்பு அற்றது; பிறப்பும் இறப்பும் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கு அன்று. 'தூங்குவது போலும் சாக்காடு, தூங்கி விழிப்பது போலும் பிறப்பு' எனும் கூற்று விளக்குவது போல எண்ணற்ற பிறப்பு இறப்புக்களை அனுபவிக்கும் தன்மை கொண்டதாகவே ஆன்மா அமைகின்றது. இதன் அடிப்படையிலேயே தான் ஆன்மாவிற்குத் தான் முடியப்போகின்றோம், அல்லது இல்லாமல் ஆகப்போகின்றோம் என்ற சிந்தனை இல்லாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக, புரிந்தோ புரியாமலோ ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு உடலைக் கருவியாகக் கொண்டு இயங்கிக் கொண்டேயிருக்கின்றது.

இந்த இயக்கம் முக்தி எனும் சாகாப் பெரு நிலையை அடையும் வரை இயங்கிக் கொண்டிருப்பது. இப்பெரு நிலையைப் பெருவது எப்படி என்பதே கேள்வி. அதற்கு ஜபம் செய்தல் ஒருவழியாக இப்பகுதியில் உறைக்கப்படுகின்றது.

ஜபம் செய்வதற்கு மந்திரங்கள் தேவை. மந்திரங்கள் பல வகை. ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும் ஒரு மந்திரம் உண்டு. தெய்வ வடிவம் என்பது மனிதரால் உருவாக்கப்படுகின்ற ஒன்று அல்ல; அது இறை சக்தி தன்னை பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு வெளிப்படுத்திக் காட்ட, அவர்கள் உருவகிக்கின்ற ஒன்று என்பதை எனது முந்தைய கட்டுரைகளில் ஒன்றினில் குறிப்பிட்டுள்ளேன்.

ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும், அவ்வடிவத்திற்கான மூல மந்திரமும் யந்திரமும் உண்டு. இந்த யந்திர மந்திரங்களினால் அவ்விறை சக்தியை வெளிப்படுத்தி அதனோடு நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் முக்தியினை விழைகின்ற ஆன்மாக்களுக்குத் தேவையான மந்திரமாக இங்கு மூல மந்திரமாகிய பஞ்சாட்ஷர மந்திரம் உறைக்கப்படுகின்றது.

பஞ்சாட்சரம் என்பது 'நமசிவய' எனப்படும் ஐந்தெழுத்து மந்திரம். இந்த ஐந்தெழுத்துக்கள் ஒவ்வொன்றும் தத்தமக்கென ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்துவன. இம்மந்திரத்தை உச்சரிக்கும் முறை 'சிவாயநம' என்பதாகும். இப்பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பதால் உண்டாகும் நிலையை இப்படி விளக்குகின்றார் திருமூலர்:


வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே யருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே

"நமசிவாய மந்திரத்தை ஜெபிப்பதால் இறை அருள் பெற்று திருக்கூத்தினைக் கண்டு மகிழலாம்; இதனால் ஆன்மா முற்றிலும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறும்," என்பதே இதன் விளக்கம்.

இவ்வைந்தெழுத்துக்கள் தவிர ஆனந்தத்தின் இருப்பிடமாக உள்ள மற்ற பீஜ மந்திரங்கள் ஆ, ஈ, ஊ, ஏ,ஓ என்பன. (தமிழெழுத்துக்களின் உயிரெழுத்துக்களில் இவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த பீஜ மந்திரங்களைத் திருப்பித் திருப்பிப் போட்டு பஞ்சாட்ஷ்ர மந்திரத்தினோடு உச்சரித்து ஜபிக்கும் போது ஆனந்த லய அனுபம் கூடும் எனவும் திருமூலர் கூறுகின்றார்.


கூத்தே சிவாய நமசி வாயிடுங்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-நமசிவாய வாயிடுங்
கூத்தே இ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோளொன்று மாறே.

இதைப் போன்ற பல பாடல்கள் திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சிவ மந்திரங்க்களை பிரித்துப் பிரித்து ஒவ்வொரு பீஜமந்திரங்களின் தன்மைகளையும் அதனை ஜபிக்கும் முறையினையும், அதனால் ஏற்படும் பலனையும் விளக்குவனவாக உள்ளன். சிவ மந்திரங்களோடு சக்தி மந்திரங்களும் பல வகையில் இங்கு விளக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மந்திரங்களை ஜெபிப்பது கிரியா வழிபாட்டின் ஒரு கூறு. எந்த மந்திரத்தை ஒரு ஜீவன் உச்சரித்து உரு செய்து அதற்குள்ளேயெ தன்னை ஆட்படுத்திக் கொள்கின்றதோ, அந்த மந்திர சக்தியின் அருள் நிறம்பப்பெற்ற ஜீவனாகவே அஜ்ஜீவன் மாறிவிடுகின்றது. உலகமே மந்திர வடிவம். அதன் ஒரு சிறு கூறே மனிதர்களாகிய நாம்.

சாகாப்பெரு நிலையை அடைவதற்கான வழிகள் பல வகையில் ஞானிகளாலும் குறிப்பாகச் சித்தர்களாலும் ஆராயப்பட்ட ஒன்று. ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலை எவ்வாறு தூல வடிவிலிருந்து

கழற்றி எடுத்து சூக்கும நிலையிலேயே தக்க வைத்துக் கொண்டு பேரானந்தத்தில் மூழ்கிக் கிடக்கச் செய்வது என்பதே இவர்களின் தேடல். அண்மைய காலத்தில் இதற்கு ஒரு உதாரணம் காட்டியவர் அருட்பிரகாச வள்ளலார். இவரின் மறைவைப் பற்றி பற்பல கதைகள் இருப்பினும், இவரது ஆத்ம பயிற்சிகள் தூல உடலை பஞ்சபூதங்களோடு கலக்கச் செய்து இவருக்குச் சாகாப் பெரு நிலையை வழங்கி இருப்பதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன என்பது சித்தர் ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தெரிந்த ஒன்று. இவ்வாறு மானிட உடல் நீங்கப்பெற்ற இவர்கள் இன்றளவும் வாழ்கின்றார்கள்

என்பதுவும் ஆச்சரியம் கலந்த ஒரு உண்மை. சாதாரணமாக இச்செய்திகளை படிக்கும் போது நம்ப முடியாத ஒன்றாக இருப்பினும், மேலும் மேலும் இத்துறையில் ஆய்வு செய்யும் போது மனித அறிவுக்கு எட்டாத பலப்பல உண்மைகள் தெரிய வருகின்றன என்பது உண்மை.

உடல் நீங்கப் பெற்ற, சாகாப் பெரு நிலை எனக்கு எதற்கு வேண்டும்? நன்றாகத் தானே நான் இருக்கின்றேன் என நாம் நம்மையே கேட்டுக் கொள்ளலாம். உலகத்தில் தானே எல்லா இன்பங்களும் கிடைக்கின்றன. அவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்ட பிறகு ஏன் இந்த நிலை வேண்டும்?

முக்தி எதற்காக? இப்படி பலரும் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றோம். உடல் இருக்கும் வரை அபிலாஷைகளுக்கு எல்லையில்லை. அபிலாஷைகள் ஒன்று நிறைவேறும் பொழுதே அடுத்த ஆசை ஒன்று பிறக்கின்றது; எதிர்பார்ப்புக்களும் பிறக்கின்றன. எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத பொழுது விரக்தி தோன்றுகின்றது. இந்த நிலையில் தானே மனிதனின் வாழ்க்கை பெரும் பாலும் இருக்கின்றது.

வெளியே சந்தோஷ சட்டை மாட்டி முகமெல்லாம் புன்சிரிப்போடு என்றும் இருக்கும் மனிதருக்குள்ளும் வேதனை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. உண்மை என்னவெனில் யாரும் தனது மன வேதனைகளை கஷ்டங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதே. பார்ப்பதற்கு நம்மை விட மற்றவர் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகத் தோன்றும். ஆனால் அந்த 'மற்றவர்' படும் பாடு அவருக்குத் தான் தெரியும். ஆக அந்த் ரீதியில், அரசனோ ஆண்டியோ எல்லோரும் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியவர்களே, வேதனைகளுள் உழல வேண்டியவர்களே.

பிறப்பு இருக்கும் வரை இந்த சுழற்சிக்கு ஒரு முடிவில்லை; பிறப்பு இருக்கும் வரை உண்மையான பேரானந்தத்தை அனுபவிக்க வழியில்லை. இதனைக் கருத்தில் கொண்டே ஆசைகளைக் கடக்க முயற்சிப்பவர்கள் சாகா பெரு நிலையை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.உண்மை என்னவெனில் நாம் எல்லோருமே ஒரு வகையில், அந்த முயற்சியில் தெரிந்தோ தெரியாமலோ இறங்கி விட்டவர்கள் தான்.

நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டுன்
பேரில் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்?


பிறப்பும் இறப்பும் அற்றுப், பேச்சும் அற்று, மூச்சும் அற்று,
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது எக்காலம்?

[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]



தொடரும்.....


அன்புடன்
சுபா

Friday, April 19, 2002

ஜாபாலோப உபநிஷத் (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயணம் (முக்தி எனும் முடிவிலா முடிவு)



From: "suba k."
Date: Fri Apr 19, 2002 9:10 pm
Subject: Jaabaaloba Upanishad - Part 1
To: meykandar@egroups.com


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம்
உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி
நிற்கின்றது. 

[நன்றி:-108 உபநிஷத்சாரம், உரையாசிரியர்: அண்ணா]  

அறிமுகம்

- இந்த உபநிஷத் சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்தது.

- இதனைக் கூறியவர் ஜாபோல மகரிஷி ஆகையால் அவரது பெயரைக் கொண்டே வழங்கப்படுகிறது.

- இதில் மொத்தம் ஆறு காண்டங்கள் இருக்கின்றன.

- இந்த ஆறு காண்டங்களுமே உடம்பிலே அமையப்பெற்றிருக்கின்ற முக்தித்தலத்தையும், அம்முக்தித்தலத்தினை அறிந்த ஆன்மாக்கள் எவ்வாறு முக்தி நிலையைப் பெறுகின்றன என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

- முக்தியைப் பெற மந்திரங்கள் கருவிகளாக அமைத்திருப்பதால், அம்மந்திரங்களைக் கற்கும் முறையும் ஜபிக்கும் முறையும் கூறப்படுகின்றன.

குறிப்பு: ஜாபாலோப உபநிஷத்தின் முதல் இரண்டு காண்டங்களும் ஒன்றோடொன்று தொடர்புடயவையாக இருப்பதனால் இக்கட்டுரையில் இவையிரண்டும் சேர்த்தே விவாதிக்கப்படுகின்றன.

இந்த உபநிஷத்தின் கருத்துக்கள் பொதுவாக ஒரு மகரிஷியால் மற்றொருவருக்கு வழங்கப்பட்ட உபதேசங்களின் தொகுப்பாகவே அமைத்திருக்கின்றன. பிருகஸ்பதி யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கின்றார். அந்த விளக்கங்களே முதல் காண்டத்தில் வருகின்றன. அடுத்த காண்டத்தில் அத்ரி எனும் ஒரு மகரிஷி யாக்ஞவல்கியரைக் கேட்கின்ற கேள்விகளுக்கு அவர் அளிக்கின்ற பதில்கள் வருகின்றன. (அத்ரி யாக்ஞவல்கியரின் மாணவராக இருக்கலாம்..??)

முதல் காண்டச் சுருக்கம்:
1. எல்லா உயிரினங்களுக்கும், தாவர வகையிலிருந்து, மனிதர்கள் தேவர்கள் வரை அனைவருக்கும் பிரம்மஸதனம் என்பது அவிமுக்தம் என்பதே.
2. பிராணனுக்கு முக்கிய ஸ்தானம் குருஷேத்திரம்.
3. ஒரு ஜீவன் உடலை விட்டுப் பிரிகின்ற வேளையில் ருத்ரப் பெருமான் அந்த ஜீவனுக்கு தாரகப் பிரம்மத்தை உபதேசிப்பார்.
4. அந்த நிலையிலேயே ஜீவன் சாகா நிலையை பெற்று முக்தி பெறும்.
5. அதனால் அவிமுத்தத்தை சேவிக்க வேண்டும்.

இரண்டாம் காண்டச் சுருக்கம்:
1. ஆத்மாவை அறிந்து கொள்ள அவிமுக்தத்தை உபாசிக்க வேண்டும்.
2. ஆத்மா அவிமுக்தத்தில் நிலை பெற்றுள்ளது.
3. அவிமுக்தமே வரணாசி எனப்படுவது. அது புருவ மத்தியில் உள்ளது.

தொடர் சிந்தனை:

தோன்றுகின்ற ஒவ்வொன்றும் அழிவதே நியதி. ஒரு அழிவு வேறொன்றின் தொடக்கமாகின்றது. ஒன்று முடிந்து வேறொன்று தொடங்கி இப்படியே எண்ணிலடங்கா வகையில் இச்சுழற்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்ச இயந்திரத்தை இயக்குகின்ற இறைவன் பேறறிவாளன். அவனே பூரணன்.

மனித உடலெடுத்த யாருமே இறைவனாக முடியாது எனும் எனது கருத்துக்களைக் கொண்டு கைவல்யோபநிஷத்தின் இறுதிப் பாகத்தை முடித்திருந்தேன். அந்த விளக்கங்களின் அடிப்படையில், இது (ஜீவன்) ஆதியிலேயே பூரண வடிவான ஒன்று என்பது மறுக்கப்படக் கூடிய ஒன்றாக ஆகின்றது. பூரணத்தை நோக்கி முக்தி வேட்கையின் நிமித்தம் ஆன்மா எண்ணிலா முயற்சிகளைச் செய்து பூரணத்தோடு கலக்கின்றது; இதுவே முக்தி!

முக்திக்குச் சாதனமாக சரியா கிரியா யோக ஞான பயிற்சிகள் அடிப்படையாகின்றன. அவற்றை மேற்கொள்ள உதவும் கருவியாக உடலமைகின்றது. உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உருப்புக்களும் அதனதன் தொழிலை ஞான மார்க்கத்தை அடிப்படையாக்கிக் கொண்டு முறையுடன் இயங்கும் போது அவை முக்திப்பாதைக்கு இயல்பாகவே ஆன்மாவை வழி நடத்திச் செல்ல வைக்கின்றன. கருவிகள் இயங்குவது அதனதன் பொறுப்பில் அன்று. மாறாக அதனை இயக்க வேறொன்று தேவைப்படுகின்றது. கண்கள் பார்க்கின்ற கருவிகள். கண்கள் மட்டும் இருந்து விட்டால் பார்வை தெரிந்து விடுகின்றதா? காதுகள் கேட்க உதவும் கருவிகள்; காதுகள் உள்ள எல்லோராலும் கேட்க முடிகின்றதா? இதனைச் சிந்திக்கின்ற போது இக்கருவிகள் செயல்படவும், அதனால் ஆன்மா இயங்கவும் வைப்பது எது..? எனும் கேள்வி எழுகின்றது.

ஆன்மாதான் எல்லாவற்றையும் அறிந்து கொள்கின்றதா? அல்லது ஆன்மாவை வேறொன்று அறிந்து கொள்ள வைக்கின்றதா? ஒன்றைப் பார்க்கின்றோம். எதைப் பார்க்கின்றோம்; அதனை எப்படிப் பார்க்கின்றோம்; என்பதை நிர்ணயிப்பது எது?

பரப்பிரம்மம் உடலோடு இணைந்தே இருக்கின்றது. ஆன்மாவை அதன் இச்சை படி இயங்க சுதந்திரம் அளிக்கும் அதே வேளையில் பக்குவத்திற்கேற்ப ஆன்மாக்களை அழைத்துச் செல்கின்ற வழிகாட்டியுமாக பரப்பிரம்மம் தொழிலாற்றுகின்றது, கருணையின் நிமித்தமாக!

சூக்கும வடிவான ஆன்மா உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இல்லாமல், அதன் அப்போதைய தன்மைக்கேற்ப உடலின் எல்லா பகுதிகளுக்கும் மாறி மாறிச் செல்லும் தன்மை படைத்தது. அவ்வாறன்றி இறைசக்தியானது, எல்லா அணுக்களிலும் கலந்திருந்தாலும் குறிப்பிட்ட சில தலங்களில் நிலைப்பெற்றிறுக்கும் தன்மை கொண்டது (சூக்கும நிலையிலேயே). மூலாதாரத்தில், சுவாதிஷ்டானத்தில், மணிப்பூரகத்தில், அநாகத்தில், விசுத்தியில், பின்னர் ஆக்ஞயில், அதன் பின்னர் சகஸ்ரதலத்தில் என சூக்கும உடலில் நிலையாக இத்தலங்கள் அமைந்திருக்கும். இந்த ஒவ்வொரு தலங்களுக்கும் மூல அதிபதியாக ஒரு இறைவனும் இறைவியும் அமைந்திருப்பர். அந்த வகையில் ஜாபாலோபநிஷத் கூறுகின்ற அவிமுக்தம் அமைந்திருக்கின்ற இடத்தின் மூலதெய்வம் சாதசிவனும் மணோண்மனியுமாகும். இந்த தலத்தின் மூல யந்திரத்தின் வடிவம் வட்டம். இந்த யந்திரம் மூன்று இதழ்களுள்ள தாமரை வடிவானது.

நமது இரண்டு கண் புருவங்களுக்கு மத்தியில் இச்சக்கரம் அமைந்துள்ளது. இது மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண் இருக்கின்ற இடம் என்றும் கூறப்படுகின்றது. இப்பகுதியே அவிமுக்தம்.

யோக சாதனத்தின் போது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி பார்வையைக் கூட்டி அவிமுக்தத்தில் இருத்த வேண்டும். பொறிகளைக் கொண்டு காண்பதை விடுத்து ஞானக்கண்ணைக் கொண்டு உள்ளிருக்கும் தெய்வத்தை காண முயற்சிப்பதும், கண்ட அச்சக்தியோடு கலந்திருப்பதுமே தியானத்தின் அதிமுக்கிய நோக்கம்.

யோகப் பயிற்சிகள் பலவகைப் படுவன. அது எவ்வகை பயிற்சியாக இருப்பினும், பிராணணைக் கட்டுப்படுத்தி சீராக்கி கருத்தினை ஒருமுகப்படுத்துவதே தியானத்திற்கு அடிப்படையாகின்றது. மிகவும் எளிய வகையில் தியானப் பயிற்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பதை அடுத்து பார்ப்போம்.

1. மனதை தியானம் செய்ய முதலில் தயார் படுத்த வேண்டும்.
2. ஓரிடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து உடலை நேராக வைத்துக் கொள்ளவும்
3. ஒரு விரலால் வலது நாசியை மூடி இடது நாசியினால் 8 எண்ணிக்கை வரும் வரையில் காற்றினை இழுத்து பின்னர் 8 எண்ணிக்கை வரையில் உள்ளே வைத்திருந்து பின்னர் 8 எண்ணிக்கைக்கு அதே நாசியில் மூச்சை வெளியாக்க வேண்டும். அதேபோல இடது நாசியிலும் இதனைச் செய்ய வேண்டும். இவ்வகையில் உடலுக்குள் உள்ள காற்று சீராகச் சென்று ஆன்மாவை கட்டுக்குள் கொண்டுவருகின்றது.

4. இப்பயிற்சிக்குப் பிறகு கைகளை நீட்டி சின்முத்திரையில் வைக்க வேண்டும். (இவை நாடிகளை இழுத்து பிராணனை சீர் செய்ய உதவும்)
5. அவிமுக்தத்தில் நமது இஷ்ட பெருமானை நினைத்து அப்பெருமானுக்குரிய மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும்.


(தியானம் செய்யும் முறை, பிராண வாயு பயிற்சிகள் ஆகிய முக்கிய விளக்கங்கள் அடங்கிய தமிழ் கட்டுரை ஒன்று எனது வலைப்பக்கத்தில் இருக்கின்றது. இதனை சித்தர் தருமலிங்க சுவாமிகள் அழகான எளிய தமிழில் வழங்கியிருக்கின்றார்.) Yoga Nyaanam எனும் பகுதியைப் பார்க்கவும்!

தியானம் செய்வதற்கும், ஜபத்தினை உபாசிப்பதற்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. மந்திரங்களை எல்லா நேரங்களிலும் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். சாதரணமாக நமது பெரியவர்கள் 'சிவ சிவ' என்று சொல்லிக் கொண்டே அமர்வது, இறைவனின் பெயரை மீண்டும் மீண்டும் வழக்கில் சொல்லிக் கொண்டிருப்பது போன்றவை இந்த வகையில் அமைந்தவை தான். மந்திரங்களைச் சொல்லச் சொல்ல அம்மந்திரத்தின் மூல தெய்வம் நமது ஆன்மாவை ஆக்கிரமித்து அதனை வழி நடத்திச் செல்லும் தன்மை வந்தடைந்துவிடும். மந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மைப் படைத்தவை. உதாரணமாக, சிவபெருமானுக்குரிய மூலமந்திரமாகிய 'ஓம் நமசிவாய' என்று சொல்லப்படுகின்ற மந்திரமானது 'சிவாயநம' என்ற மந்திரத்திலிருந்து வேறுபட்ட ஒன்று. மந்திரங்களின் பொருளறிந்து முறையாகக் கற்று குருவின் (ஆசானின்) துணையோடு செய்யும் போது ஜெபம் மேலும் வலுப்பெறுகின்றது.

அவிமுக்தத்தை ஜாபாலோபநிஷத் வரணாசி எனவும் குறிப்பிடுகின்றது என்பதை மேலே பார்த்தோம். ஑வரணாஒ (உள்நாக்கு) விற்கும் ஑நாசிஒக்கும் இடையில் என்பதே வரணாசி எனப்படுகின்றது. உடலில் இருக்கின்ற இந்திரியங்களெல்லாம் செய்கின்ற பாவங்களை போக்கக்கூடியது என்பதால் ஑வரணாஒ என்றும் அப்பாவங்களை நாசம் செய்வதால் ஑நாசிஒ என்றும் குறிப்பிடப்படுவதாக உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். விசுவநாதப் பெருமாள் குடிகொண்டிருக்கின்ற காசிசேத்ரம் வாராணாசி என்றழைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். தொன்று தொட்டு பாவங்களைப் போக்க வாராணாசிக்கு தல யாத்திரைச் செல்வது என்பது நமது பாரம்பரியத்தில் வழக்கில் இருந்து வருகின்றது. அண்டத்தில் உள்ள வாரணாசியைப் போன்று இப்பிண்டமாகிய உடலில் அமைந்திருக்கின்ற வரணாசியும் பாவங்களைச் (ஆன்மாக்களின் கன்மங்களை) சுட்டெரித்து தூய்மைப்படுத்தும் தலமாக அமைகின்றது.

நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைந்தெழுப்பது எக்காலம்?


மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]


தொடரும்.....


அன்புடன்
சுபா