Thursday, September 28, 2023

ஹுவான் ரோட்ரிகுஸ் காப்ரியல்லோ - கலிபோர்னியா
 புகைப்படத்தில் இருப்பவர் 16ஆம் நூற்றாண்டின் ஸ்பெயின் பேரரசின் அதிகாரியான ஹுவான் ரோட்ரிகுஸ் காப்ரியல்லோ (Juan Rodríguez Cabrillo). இவர் இன்றைய நாளில் தான் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைக் ‘கண்டுபிடித்தார்’ என ஆவணங்கள் கூறுகின்றன.
ஐரோப்பியர்கள் ஒன்றை ஆவணப்படுத்தி பெயரிட்டு கூறுவதைத் தானே வரலாறு என்று உலகே நம்பிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தக் கண்டுபிடிப்பும் அமைகிறது.
அடிப்படையில் ஹுவான் ஸ்பெயின் அரசின் ஒரு ராணுவ வீரர் என்பதோடு புதிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்பவராகவும் திகழ்ந்தார். தற்போதைய குவாட்டமாலா, எல் சல்வடோர், நிக்காராகுவா ஆகிய பகுதிகளையும் அடையாளப்படுத்தியவர் இவர் என்பது கூடுதல் தகவல். இவர் போர்த்துகல் நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அக்காலகட்டத்தில் போர்த்துகலும் ஸ்பெயின் நாடும் ஒரு பேரரசின் கீழ இருந்த காலகட்டமாகும்.
இவர் மெக்சிகோவின் கடற்கரை நகரமான நாவிடாடிலிருந்து (Navidad) 1542ஆம் ஆண்டில் இன்றைய கலிபோர்னியா பகுதியின் சான் டியாகோ பகுதியை வந்தடைந்தார்.
இன்று சான் டியாகோ நகரில் அவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1913இல் இது கட்டப்பட்டது. இவரே கலிபோர்னியாவின் இப்பகுதிக்கு வந்த முதல் ஐரோப்பியர் என்றும் அறியப்படுகின்றார்.
இவர் அனேகமாக 3 ஜனவரி 1543 காலமானார் என்றும் அது இத்தகைய ஒரு பயணத்தில் தரையிறங்கிய போது கால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு காலமானார் என்றும் அறியப்படுகின்றது.
-சுபா
28.9.2023

Friday, August 11, 2023

ரோம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பேரரசன் நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தானா?

 ரோம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பேரரசன் நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வாய்மொழிச் செய்திகளில் சொல்லப்படுவது போல ரோம் தீ பிடித்து எரிந்த போது ரோமானியப் பேரரசன் நீரோ பிடில் வாசிக்கவில்லை.

ஆனால் இசை மீதான அவனது ஆர்வம் அவன் காலத்து கலை சார்ந்த விசயங்கள் பற்றிய புதிய சான்றுகளை உறுதி செய்கின்றன.
அண்மையில் ஜூலை 26 அன்று வெளியிடப்பட்ட செய்தியில் அவன் காலத்தில் நீரோ மன்னனுக்குச் சொந்தமான ஒரு தனியார் கலைக்கூடத்தின் உடைந்த பகுதிகளின் இடிபாடுகள் சமீபத்தில் ரோமில் கண்டுபிடிக்கப்பட்டன.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கட்டுமானம் வாட்டிக்கன் சுவர் பகுதிகளோடு சேர்ந்த வகையில் சற்று தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சாய்வான செங்கல் தரைகள் மற்றும் விழுந்த பளிங்கு தூண்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு என்ன நடந்தது.. நீரோவின் ஆட்சி காலத்தில் மக்கள் அச்சத்துடன் இருந்தார்களா என பல தகவல்கள் ஆய்வுலகில் தொடர்ந்து பேசப்படுகின்றன.
-சுபா
11.8.2023
இந்த அகழாய்வு பற்றிய மேலும் செய்திகள் : https://www.miamiherald.com/news/nation-world/world/article277716028.html

Wednesday, August 9, 2023

கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு அவர்களுக்கு அஞ்சலி

 கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு அவர்களது மறைவு பற்றிய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவருக்கு எனது அஞ்சலிகள்.


புலவர் ராசு அவர்களோடு தமிழ் மரபு அறக்கட்டளை இரண்டு முறை இணைந்து சில ஆய்வுகளையும் மரபு நடைகளையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம். தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொல்லியல் அறிஞர்களில் ஒருவர். ஏராளமான ஆய்வு நூல்களைப் படைத்தவர். தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
கொங்கு நாட்டின் விரிவான பல ஆய்வுகளை நிகழ்த்தியவர். ஏராளமான ஆய்வு நூல்களுக்குச் சொந்தக்காரர். தன் வாழ்க்கையை வரலாற்று ஆய்வுகளுக்காகவே அர்ப்பணித்தவர். இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல இன்று ஆய்வாளர்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கும் வழிகாட்டியாக இருந்தவர்.
2012 ஆம் ஆண்டு புலவர் ராசு அவர்களையும் அழைத்துக் கொண்டு சித்தார்த்தா கல்லூரி மாணவர்களுடன் ஐந்து சமண பகுதிகளுக்கு கள ஆய்வுக்கு சென்றிருந்தோம். விஜயமங்கலம், சீனாபுரம் மேலும் 3 பகுதிகள். ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களுக்கு மிக அருமையான விளக்கங்களை வழங்கிக் கொண்டு வந்தார். சமணம் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் கோலோச்சிய ஒரு நெறி என்பதை விளக்கி சிதலமடைந்த கோயில்கள் பற்றிய விளக்கங்களையும் அளித்தார்.
அதற்கு மறு ஆண்டு 2013 ஆம் ஆண்டு அங்கு அவரை காணச் சென்றிருந்தபோது என்னை கலைமகள் பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். கலைமகள் பள்ளிக்கூடம் சிறப்பு வாய்ந்த ஒரு பள்ளிக்கூடம் ஆகும். ஏனெனில் இங்கு மிக விரிவான ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். முதுமக்கள் தாழி, நடுகற்கள், சிற்பங்கள் கல்வெட்டுகள் என ஏராளமான சான்றுகளுடன் கூடிய மிக அருமையாகப் பாதுகாக்கப்படுகின்ற, ஏனைய பள்ளிகளுக்கும் உதாரணமாகத் திகழக்கூடிய ஓர் அருங்காட்சியகத்தைக் கொண்ட ஒரு பள்ளிக்கூடம் இது. இவற்றைப் பற்றிய பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கங்களில் காணலாம்.
ஆய்வு என்பது காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடியும் ஒரு வேலை அல்ல. பணியில் இருக்கும் வரைக்கும் தான் ஆய்வு செய்ய வேண்டும் அதற்கு பின்னால் ஆய்வு என்றாலே என்ன என்று கேட்கின்ற பலருக்கு மத்தியில் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வரலாறு, தொல்லியல், தமிழ் மொழி ஆய்வுக்கு என செலவிட்டவர் புலவர் இராசு அவர்கள்.
புலவர் ராசு அவர்கள் தமிழ் மண்ணின் வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர். நான் இறுதியாக சந்தித்த காலகட்டங்களில் அவருக்குக் கேட்கும் புலன் செயலற்றுப் போயிருந்தது. அவரது வீட்டில் அமர்ந்து அவரது புகைப்பட சேகரிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு படத்தையும் நேரமெடுத்து மிக நீண்ட நேரம் விளக்கங்கள் கொடுத்தார்.
அவரது தமிழ் பல்கலைக்கழக பணி மட்டுமல்லாது கொங்கு மண்டல பகுதியின் பல்வேறு பகுதிகளின் வரலாற்றை ஆவணப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ்நாட்டின் வரலாற்றில் புலவர் ராசு அவர்களது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்🙏🏼
-சுபா
9.8.2023


Tuesday, August 8, 2023

ஐவரி லேடி

 

வாலன்சினா (Valencina), ஐபீரியாவில் (ஸ்பெயின்) உள்ள மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி தளம். அங்கு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையான புதைப்படிமங்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் சிறப்புத் தன்மையுடன் ஓர் எலும்புக்கூட்டின் எச்சங்கள் - மது மற்றும் கஞ்சா இறந்து போனவருக்குப் படைக்கப்பட்ட வகையில் இங்குள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த எலும்புக்கூட்டைச் சுற்றி யானையின் தந்தத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த நபர் முதலில் ஒரு ஆண் என்று ஆய்வாளர்கள் நம்பினர். ஆனால் புதிய அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில் அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொல்லியல் துறையினர் இந்த எலும்புக்கூட்டிற்கு ஐவரி லேடி (தந்தப் பெண்) என்று பெயர் கொடுத்திருக்கின்றனர்.
பண்டைய காலத்தில் பெண்களின் அரசியல் மற்றும் சமூக தலைமைத்துவத்தைப் பற்றிய புதிய செய்திகளை வழங்குவதாக இக்கண்டுபிடிப்பு அமைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் இனக்குழுவின் தலைமைப் பதவியை வகித்த பெண்ணாகவும் ஒரு இனக்குழு பரம்பரையினை உருவாக்கியவராகவும் இந்தப் பெண்மனி இருந்திருக்கலாம். ஏனெனில் அவர் புதைக்கப்பட்ட பகுதியில் அதற்கடுத்த 200 ஆண்டுகளில் மேலும் பல புதைக்குழுவிகள் உருவாக்கப்பட்டிருப்பது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்பூக்கூட்டைச் சுற்றிலும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இப்பெண் மணிகளால் ஆன உடையை அணிந்திருக்கக் கூடும் என்பதை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிப்பிகளால் ஆடையை உருவாக்கும் தொழில்நுட்பமும் கற்கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பமும் பயன்பாட்டில் இருந்ததை இங்குக் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படுத்துகின்றன.
ஐவரி லேடி உடல் புதைக்கப்பட்ட போது பண்டைய காலத்தில் ஒரு தலைவருக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புகள் அனைத்தும் வழங்கப்பட்ட வகையில் இந்தப் புதைகுழி அமைந்துள்ளது. இதே இடத்தில் தலைமைத்துவம் பொருந்திய பெண்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் மேலும் ஏறக்குறைய 20 பெண்களின் எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
வரலாறு புதிய செய்திகளை நமக்கு வழங்கிக் கொண்டேயிருக்கின்றது. பெண்களின் தலைமைத்துவம் மனித குல சமூகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது என்பதற்கு இக்கண்டுபிடிப்பு மேலும் ஒரு சான்றாக அமைகிறது.
-சுபா
8.8.2023
courtesy : https://www.bbc.com/reel/video/p0g543bb/mystery-of-high-status-ancient-spanish-tomb-solved?fbclid=IwAR09D9KiiJhzyVf0vPguTONdmpr0TV3N_LXLaRB8Xa8Z3AlJSFaBluRBvL4


Monday, August 7, 2023

நூல் விமர்சனம்: இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி-1

 நூல் விமர்சனம்: இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி-1

நூலாசிரியர்: அ. கா. ஈஸ்வரன்
முனைவர் க. சுபாஷிணிஆன்மா இருக்கின்றதா? இறந்து போன பிறகு மீண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுப்போம்? இறந்து போன பிறகு சினிமா படங்களில் வருவது போல தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு கண்களை உருட்டிக் கொண்டு வெள்ளை கவுன், வெள்ளை சேலை, வெள்ளை வேட்டி சட்டை போட்டுக் கொண்டு இரவு நேரத்தில் நாம் பேய்களாக. மோகினிகளாக. பிசாசுகளாக அலைந்து கொண்டிருப்போமா? இப்படி எல்லாம் யோசித்திருப்போம் அல்லவா?
நான் என் கண்களால் மோகினி பிசாசுகள் வருவதைப் பார்த்திருக்கின்றேன் என்று அடித்துக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். ஹாலிவுட் திரைப்படங்கள் Exorcist முதல் நம் தமிழ் சினிமா படங்கள் வரை பலவிதமான பயமுறுத்தும் பேய்களை திரைப்படங்களில் நாம் பார்த்து பயந்து ரசித்திருப்போம்.
இறந்து போன உறவுக்காரர்கள் எங்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்று கூறி அவர்களுக்காக என்னென்னமோ செய்து கொண்டிருக்கும் பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் மனசு ஆற வேண்டும் என்று சொல்லி அவர்களுக்காகப் பூஜை செய்வது, கடற்கரையில் போய் பிண்டம் வைப்பது என்று அது ஒரு தனி வணிகமாக மாறி தமிழ் பண்பாட்டிலும் ஒரு அங்கமாக வளர்ச்சி கண்டு விட்டது.
தமிழ்ச் சினிமா படங்கள் அவர்கள் பங்குக்கு அவர்களது சேவையை ஆற்ற வேண்டும் அல்லவா? வரிக்கு வரி வசனங்களாகவும் சினிமா பாடல்களாகவும் எழுதியதால் இந்தப் பிறவி மட்டும் இல்லை எடுக்கின்ற அடுத்த அடுத்த ஏழு ஜென்மங்களும் உன்னையே தேடி வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று உருகி உருகி காதலியும் காதலனும் பாடிக் கொள்வதும் நிறைய பார்த்திருப்போம். இந்தப் புதிய வகை தத்துவங்களை விரும்பியே தான் நாம் நமது சிந்தனைக்குள் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் ஏதோ நாம் செய்த பாவம்.. நம் முன்னோர்கள் செய்த பாவம்.. அப்பா அம்மா செய்த பாவம்.. தாத்தா பாட்டி செய்த பாவம் என்று சொல்லிவிட்டு ஒரு பிரச்சனை எழுந்தால் அதன் மூல காரணத்தைப் புரிந்து கொண்டு அதனை எப்படி சரி செய்வது என்பதை நோக்கி செல்வதை விட்டு பரிகாரம் செய்யவும், மண் சோறு சாப்பிடவும், கையில் கயிறு கட்டிக் கொள்ளவும் நம்மை நாம் தயாரித்து கொள்கிறோம்.
ஏனென்றால் ஒரு பிரச்சனையை ஆழமாக யோசித்து அது ஏன் வந்தது? அதனை எப்படி உடனடியாக நிவர்த்தி செய்வது என்று நாம் சிந்தித்து செயல்படுவதற்கு கொஞ்சம் மூளையைப் பயன்படுத்த வேண்டும். அப்படி மூளையைப் கசக்கி பிழிந்து நடவடிக்கை எடுப்பதை விட காசு கொடுத்து பரிகாரம் செய்து விடுவது சுலபம் அல்லவா? என்று குறுக்கு வழியை தேடுவதிலேயே நமது புத்தி செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
எத்தனை பரிகாரம் செய்தாலும் பிரச்சனையின் மூலவேரை ஆராய்ந்து பிரச்சனையைச் சரி செய்யாத வரை அது தீரப் போவதில்லை. ஆனாலும் நாம் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை.
இப்படி நமது சிந்தனை முழுமையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் விஷயங்களுக்கு அடிப்படையாக அமைவது நாம் உள்வாங்கி இருக்கின்ற தத்துவங்கள் தான்.
ஒருவர் எந்த பிரச்சனையையும் தாம் உள்வாங்கி இருக்கின்ற தத்துவக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் அணுகுகின்றார். நமது சிந்தனையில் தெளிவும் அதன் வழி நமது செயல்பாடு தெளிவாகவும் அமைய வேண்டும் என்றால் நாம் உள்வாங்கி இருக்கின்ற தத்துவம் தெளிவானதாக அமைந்திருக்க வேண்டும்.
நாம் உள்வாங்கி இருக்கின்ற தத்துவம் கண்மூடித்தனமான சரணாகதி தத்துவமா அல்லது அறிவை கசக்கிப் பிழிந்து யோசித்து சிந்தித்து செயல்படுத்தும் அறிவுப்பூர்வமான தத்துவமா என்பதுதான் நம்மை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் கேள்வி.
எத்தனையோ தத்துவ ஞானிகள் உலகின் பல்வேறு இடங்களில் பிறந்து அவர்களின் மூளையைக் கசக்கி பிழிந்து தத்துவங்களை எழுதி எழுதி குவித்து நமக்கு வழங்கிவிட்டு சென்றிருக்கின்றார்கள். அப்படி தத்துவங்கள் வழங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இன்று நாம் காண்கின்ற இந்தியா என்ற நில எல்லை என்பது உருவாவதற்கு முன்பாகவே இந்த நிலப் பகுதியில் குட்டி குட்டியான பல நாடுகள் இருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு சிந்தனைப் பண்பாட்டையும் கொண்டிருந்தன. பல தத்துவங்கள் இங்குப் பிறந்தன. வெளியே இருந்து கொண்டுவரப்பட்ட தத்துவங்களும் இங்கே முக்கிய தத்துவங்களாக அங்கீகாரம் பெற்று விட்டன.
ஒவ்வொரு தத்துவமும் மனிதர்கள்.. அவர்களைச் சுற்றியுள்ள இயற்கை.. இந்த இயற்கையை ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்ற ஒன்று - அது கடவுளா அல்லது மற்ற ஒன்றா என்ற கேள்வி.. மனிதருக்கும் அந்தப் பொருளுக்கும் இடையிலான தொடர்பு.. பாவ புண்ணிய சிந்தனை.. செயல் அதற்கான விளைவு.. என்பவற்றை அலசி அலசி ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக அவற்றை எழுதி நமக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றன.
புனித பிம்பங்களாக இந்த தத்துவங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புனித பிம்பங்களைக் கேள்வி கேட்கலாமா? இந்தப் புனித பிம்பங்களைத் தற்கால புதிய சிந்தனைகளுக்கு உட்படுத்தி அவற்றின் மாய தன்மையைத் தகர்க்கலாமா என்பதுதான் தத்துவ விசாரணை. கருத்துமுதல்வாதமா அல்லது பொருள்முதல்வாதமா. எது சிறந்தது.. எது நமக்கு தெளிவை தரும் என்ற கேள்வி நம்மைச் சுற்றி சுற்றி வந்து கொண்டுதான் இருக்கிறது.
இதெல்லாம் எதற்கு? வேலைக்கு சென்றோமா.. பணம் சம்பாதித்தோமா. வீட்டிற்கு வந்தோமா. சாப்பிட்டோமா. தொலைக்காட்சியில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்து தூங்கினோமா என்று இருந்து விட்டு போகலாமே, என்றால் வாழ்க்கை நம்மை சும்மா விடுவதும் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கின்ற பல நிகழ்வுகளும், நாம் பார்க்கின்ற, நாம் ஈடுபடுகின்ற அன்றாட செயல்பாடுகளும் நாம் கொண்டிருக்கும் தத்துவங்களின் அடிப்படையில் தான் நம்மை செயல்பட இயக்குகின்றன. ஆகவே தத்துவங்களைத் தேடுவதில் இருந்து நாம் தப்பி ஓட முடியாது.
தத்துவ விசாரணை செய்ய வேண்டும் என்றால் முதலில் தத்துவங்களைப் படித்திருக்க வேண்டும். இந்தியக் தத்துவங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அவற்றையெல்லாம் படித்து விட முடியுமா? அப்படியே படித்தாலும் புரிந்து கொள்ள முடியுமா? அவை நாம் அன்றாடம் பேசும் மொழியில் பேசவில்லையே. நமக்குப் புரியாத மொழியில் பேசுகின்றனவே என்று நாம் புலம்புவதும் இயல்புதான்.
இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்கும் வகையில் தோழர் அ கா ஈஸ்வரன் அவர்கள் எழுதிய "இந்திய தத்துவம் ஒரு சிறிய ஆறுமுகம் தொகுதி-1" நூல் அமைகிறது.
இந்த முதல் தொகுதியில் அவர் இந்திய தத்துவங்களாக அமைந்திருக்கின்ற 26 விஷயங்களை நமக்கு மிக எளிமையாக இந்த நூலில் விளக்குகின்றார். தத்துவங்கள் பற்றிய ஒரு அறிமுகம், நால் வேதங்கள், சம்கிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என இந்த முதல் பகுதியில் வேதங்கள் தொடர்பானவை விளக்கப்படுகின்றன. 200 பக்கங்களில் ஆயிரமாயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட விஷயங்களையும் எளிமைப்படுத்தி கொடுத்து விட்டார் தோழர் அ. கா. ஈஸ்வரன்.
பிறகு என்ன வாங்கி வாசித்தால் ஓரளவிற்குத் தத்துவ விசாரணை செய்யும் பணியின் முதல் கட்ட பணியைத் தொடங்கி விடலாமே... ?
இந்த 26 அத்தியாயங்களிலும் உள்ள விஷயங்களை ஓரளவுக்கு சுருக்கி அடுத்த அடுத்த பதிவுகளில் வழங்குகிறேன்.
பேய் பிசாசுகள் நம்மை தேடி வந்து விடுவார்களோ என்ற பயத்தை விட்டுவிட்டு வாருங்கள் தத்துவ விசாரணை செய்யப் புறப்படுவோம்.

---

நூல் விமர்சனம்: இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் -2
எங்கே போனாலும் பிரச்சனை.. என்ன செய்தாலும் பிரச்சனை என்று தொடர்ந்து பிரச்சினைகளிலேயே நாம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது ’என் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும்’ என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி சமாளித்து வாழ்க்கையைத் தொடர்கிறோம். இதற்குப் பெயர் ’விதிவாத தத்துவம்’. இதனால் ஏதும் நமக்கு பயன் இருக்கிறதா என்றால் இல்லை இல்லை இல்லைவே இல்லை. பிரச்சனைத் தீரவேண்டுமென்றால் அதன் ஆணிவேரை அல்லவா தேட வேண்டும், அதனைச் சரி செய்ய வேண்டும்.
சரி நூலைத் தொடர்வோம்.
நூலின் முதல் அத்தியாயம் இந்தியாவின் தத்துவங்கள் பற்றி ஓர் அறிமுகத்தை வழங்குகிறது. அதில்’ வைதீகத் தத்துவம்’ என்றும் ’அவைதீகத் தத்துவம்’ என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாக தத்துவங்கள் கூறப்படுவதையும் வைதீக தத்துவங்களாக சாங்கியம், யோகம், வைசேஷிகம், நையாயிகம், மீமாம்சை, வேதாந்தம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. அவைதீகத் தத்துவங்களாகக் கூறப்படுபவை உலகாயுதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்றுமாகும்.
ஆத்திகம் நாத்திகம் என்ற இரண்டு வரையறைகள் தானே இன்று பொதுவாக மக்களால் மனிதர்களின் ஆன்மீக விருப்பங்களைப் பிரித்துப் பார்க்க உதவுகிறது. இதில் ஒரு முக்கியமான கருத்தை நூலாசிரியர் சொல்கின்றார். அதாவது, ஆதி காலத்தில் வேதங்களின் ஏற்பை ’ஆத்திகம்’ என்றும் வேதங்களை மறுப்பதை ’நாத்திகம்’ என்றும் கூறப்பட்டதாகவும், ஆனால் இன்றைய நிலையில் ஆத்திகம் என்றால் கடவுளை ஏற்பது என்றும் நாத்திகம் என்றால் கடவுளை மறுப்பது என்றும் மாறியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். ஆச்சரியமாக இருக்கிறது. காலப்போக்கில் நமது சிந்தனை வழக்கு கூட எப்படி மாறியிருக்கின்றது பாருங்கள்.
நம் எல்லோருக்கும் நம் சிந்தனைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான கேள்விகள்
1) இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டதா? அல்லது
2) இந்தப் பிரபஞ்சம் என்றும் இருந்து கொண்டிருக்கின்றதா?
கருத்து முதல்வாதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இறைவன் அல்லது ஒரு சக்தியால் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று நம்புபவர்கள்.
பொருள் முதல்வாதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிரபஞ்சம் என்றும் உள்ளது என்பவர்கள்.
நூலாசிரியர் எவ்வளவு எளிதாகக் கூறிவிட்டார் பாருங்கள்.
நூலாசிரியர் மிகக் கவனமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார். நாம் நம்புவது தான் சரி என்று நினைத்துக் கொண்டு வேறு எதையுமே படிக்காமல் அதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது நமக்கு நாம் நம்பும் கருத்துக்களைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள உதவாது. ஆகவே கருத்து முதல் வாதத்தைப் புரிந்து கொள்வதற்குக் கருத்து முதல்வாத தத்துவங்களையும் வாசிக்க வேண்டும், பொருள் முதல்வாதத் தத்துவங்களையும் வாசிக்க வேண்டும். அதேபோல பொருள் முதல்வாத தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு கருத்து முதல் வாத தத்துவங்களையும் வாசிக்க வேண்டும் பொருள் முதல்வாதத் தத்துவங்களையும் வாசிக்க வேண்டும்.
’நான் நினைப்பது தான் சரி’ என்பதை விட ’எது அறிவுக்கு உகந்தது’ என்ற ஒரு முடிவை எட்டுவதே தத்துவ விசாரணையின் முக்கிய நோக்கமாகும்!
அத்தியாயம் 2 வேதங்கள்
---------------------
-நால் வேதங்கள் - ரிக், யசூர், சாமம், அதர்வணம்.
-இவை ஒவ்வொன்றுக்கும் சம்கிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் என்ற நான்கு உட்பிரிவுகள் உள்ளன.
-சம்கிதை, பிராமணம் இரண்டையும் சேர்த்து கர்ம கண்டம் என்று அழைக்கப்படுகிறது. இது இறையியல் (Theology).
-ஆரண்யம், உபநீதம் இரண்டையும் சேர்த்து ஞான காண்டம் என்று அழைக்கப்படுகிறது. இது தத்துவம் (Philisophy).
-சம்கிதப் பகுதியே பொதுவாக வேதம் என குறிப்பிடப்படுகின்றது.
-உபநிடதப் பகுதி வேதாந்தம் என்று குறிப்பிடப்படுகிறது.
-வேத சம்கிதைகள் ஆரியர்களால் படைக்கப்பட்டன; இந்த ஆரியர்கள் இன்று இந்தியா என்று சொல்லப்படுகிற பகுதிக்கு வெளியில் இருந்து வந்தவர்கள். ரிக் வேதப் பாடல்களில் உள்ள பல செய்திகள் இதனை வெளிப்படுத்துகின்றன.
-நால் வேதங்களில் மிகப் பழமையானது ரிக் வேதம்; இதன் காலம் சுமார் 3500 ஆண்டுகள்.
-குருவிடம் இருந்து சீடனுக்குச் செவி வழியாக கற்பிக்கப்படுவதால் இது ’சுருதி’ என்றும் அழைக்கப்படுகிறது. சுருதி என்றால் காதால் கேட்பது என்று பொருள்.
-வேதங்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட வேதங்களில் உள்ள அனைத்து பாடல்களும் பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை என்பதை உறுதி செய்கின்ற வகையில் பல சான்றுகள் வேதங்கள் முழுமையும் உள்ளன.
-சம்கிதையில் காணப்படும் கருத்துக்கள் அன்றைய நாடோடி மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவையை வெளிப்படுத்துகிற கருத்தாகத் தான் காணப்படுகின்றனவே அன்றி தத்துவக் கருத்துகளாக அமையவில்லை. ஆரியர்களின் வாழ்க்கைத் தேவைகள், திருமண சடங்குகள், பலியிடல் சடங்குகள், வேள்விகள், போரில் ஈடுபட்ட செய்திகள், பல்வேறு கடவுள்களை வேண்டிக்கொண்ட வேண்டுதல் துதி பாடல்கள், இயற்கையை வேண்டிய பாடல்கள் போன்றவை இதில் இடம்பெறுகின்றன.
-வேதாந்தம் எனக் குறிப்பிடப்படும் உபநிடதத்தில் உள்ள தத்துவங்களே இன்று இந்து மதத் தத்துவங்களாகப் பேசப்படுகின்றன.
அடுத்த பதிவில் சம்கிதைகள் பற்றி நூல் குறிப்பிடும் குறிப்புகளை வழங்குகிறேன்.
முனைவர் க. சுபாஷிணி
(தொடரும்)
நூல் விமர்சனம்: இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் -2
நூலாசிரியர்: அ. கா. ஈஸ்வரன்

----

நூல் விமர்சனம்: இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் -3
நூலாசிரியர்: அ. கா. ஈஸ்வரன்
முனைவர் க. சுபாஷிணி
நூலாசிரியர் ஈஸ்வரன் மிக எளிமையாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் வழங்கியிருக்கின்றார். அவற்றின் சுருக்கங்களை மட்டும் இனி காண்போம்.
ரிக் வேத சம்கிதை
---------------
இதன் காலம் சுமார் கி.மு. 1500லிருந்து 1100.
இதன் பெரும்பாலான சூக்தங்கள் ஆரியர் இன்றைய இந்திய எல்லைக்குள் வருவதற்கு முன் உருவாக்கப்பட்டவை.
ரிக் வேத சம்கிதை பத்து மண்டலங்களை உள்ளடக்கியது.
ரிக் என்பதன் பொருள் பாடல் என்பதாகும்.
இதில் 10,522 பாடல்கள் உள்ளன.
இதன் பாடல்கள் பெரும்பாலானவை தேவர்களைக் குறிப்பிட்டு உலக தேவைகளை வேண்டிக் கொள்வதற்காக பாடப்பட்டவையாக இருக்கின்றன.
சோம பானம் பற்றிய பாடல் ஒன்பதாவது மண்டலத்தில் முழுமையாகக் காணப்படுகிறது. அதாவது இந்த ஒன்பதாவது மண்டலத்தில் உள்ள 114 சூக்தங்கள் முழுமையாக சோம பானத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளன.
ரிக் வேத சம்கித எழுதப்பட்ட மொழி சமஸ்கிருதம் அல்ல; அதற்கு முன்பான வைதீக மொழி.
சமஸ்கிருதமும் வைதீக மொழியும் இரண்டுமே தேவநாகரி எழுத்துரு வடிவில் எழுதப்பட்டாலும் அவை இரண்டும் ஒன்று கிடையாது. இது இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தின் தொன்மையான மொழிகளுள் ஒன்று.
இதில் உள்ள பெரும்பாலான பாடல்கள் இயற்கையையும் வீரத்திற்குத் தலைவனான இந்திரனையும் உருவகப்படுத்தி எழுதப்பட்டவை.
திருமணம், ஈமச்சடங்குகள், சூதாட்டம் ஆகியவை பற்றி பல பாடல்கள் வருகின்றன.
ஆரியர்களின் பழங்கால வாழ்க்கையை அறிந்து கொள்ள ரிக் வேதத்தினைப் படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அதில் ஆன்மீக தத்துவங்களை காண முடியாது.
யசுர் வேத சம்கிதை
------------------
இதன் காலம் சுமார் கி.மு 1100 - 800.
இதில் 1984 பாடல்கள் உள்ளன.
யசுர் என்றால் வழிபடுதல் அதாவது யாகம் செய்து வழிபடுவதை இது குறிக்கிறது.
இது இரண்டு பிரிவுகளாக உள்ளது - கிருஷ்ண யசூர், சுக்கில யசூர்.
சுக்லம் என்றால் வெள்ளை; கிருஷ்ணம் என்றால் கருப்பு.
இதில் வேள்விக்குப் பயன்படுத்தப்படுகின்ற உபகரணங்கள் சிறப்பு பெறுகின்றன.
இங்கு யாகமே சக்தி பெற்றதாக கூறப்படுகிறது.
சிக்கலான விரிவான கிரியைகளைக் கொண்ட வேள்விகள் குறிப்பிடப்படுகின்றன.
நன்மைகளை வேண்டி செய்யப்படும் வேள்விகளும் தீமைகளை வேண்டி செய்யப்படும் கேள்விகளும் உள்ளன.
ஓம் என்ற சொல் ரகசியப் பொருள் கொண்டதாகவும், தெய்வத்தன்மை கொண்டதாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சாமவேத சம்கிதை
--------------
இது உருவாக்கப்பட்ட காலம் சுமார் கிமு 1200 லிருந்து 800 ஆகும்.
மூன்று மட்டுமே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் மொத்தம் 1875 மந்திரங்கள் உள்ளன அவற்றுள் மீண்டும் மீண்டும் வருவதை நீக்கிவிட்டால் 1549 மந்திரங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
சாம வேத சம்கிதையில் உள்ளவை பெரும்பாலும் ரிக் வேத சம்கிதையில் இருந்து எடுத்து பயன்ப்படுத்தப்படுபவை ஆகும்.
சாமம் என்றால் கானம் என்று பொருள்.
ரிக் வேத சூத்தங்களையும் 75 புதிய சூக்தங்களையும் ராகத்தில் பாடுவதற்காக உள்ளவையே இவை.
சாம கானத்தில் பயிற்சி பெற்றவர்களிடம் முறையாகக் கற்றுத்தான் இதை பாட முடியும்.
இவை மட்டுமின்றி மந்திரங்களும் கலந்து காணப்படுகின்றன.
எதிரிகளை வீழ்த்துவதற்கும், செல்வங்கள் ஈட்டுவதற்கும், ஆரியர்கள் விரும்பியதை இந்தப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
அவர்கள் செல்வங்களை வேண்டி யாகம் நிகழ்த்தினர்.
அதர்வண வேத சம்கிதை
-------------------
நன்மை தீமைகளை விளைவிக்கும் மந்திரங்களைக் கொண்டது அதர்வணம்.
இதன் காலம் சுமார் கிமு 1000- 800 வரை ஆகும்.
இதில் 5848 பாடல்கள் காணப்படுகின்றன.
மொத்தம் 20 காண்டங்கள் உள்ளன.
இதில் உள்ள பாடல்கள் வசிய மந்திரங்களாக உள்ளன.
இதில் உள்ள பாடல்கள் மந்திரங்களாக இல்லாமல் மாந்திரீகமாக உள்ளன.
எதிரிகளை அழிப்பதற்கு வரங்களைப் பெறுவதற்கும், நோயை குணப்படுத்துவதற்கும், எதிரிகளை தோற்படிப்பதற்கும், பலத்தை அதிகப்படுத்துவதற்கும், தூக்கமின்மையைப் போக்குவதற்கும், கணவன் மனைவி நல்லுறவுக்கும், ஆண்மை சிறந்திட, வாரிசை பெறுவதற்கு, சூதாட்டத்தில் வெற்றி பெற, பேயை ஓட்டுவதற்கு, விஷத்தை அகற்றுவதற்கு என மந்திரங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்தல் பற்றிய பாடல்கள் இடம்பெறுகின்றன. (இது தமிழ் மக்களின் இறந்தோருக்கான வழிபாட்டில் இன்று முக்கிய இடம் வகிக்கும் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளதை நான் காணலாம்.)
மேலும் இந்நூல் சில பொதுவான செய்திகளையும் ஒரு தனி அத்தியாயத்தில் விவரிக்கின்றது.
ஆரியர்கள் இன்றைய பஞ்சாப் வழியாக இந்திய நிலப்பகுதிக்குள் நுழைவதற்கு முன்னே இப்பகுதியில் வாழ்ந்த சிந்து வெளி மக்கள் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். ஆயினும் அக்கால கட்டத்தில் இயற்கை சீற்றத்தினால் அவர்கள் பலவீனமாக இருந்தனர் என்பதால் எளிமையாக ஆரியர்களால் வென்று கடந்து செல்ல முடிந்தது எனக் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர்.
இன்று சைவம் வைணவம் என்று கருதப்படும் சமையத்தில் காணப்படும் உருவ வழிபாட்டின் தொடக்கம் சிந்துவெளியில் தான் காணப்படுகிறது; ஆரிய பண்பாட்டில் தொடக்கத்தில் உருவ வழிபாடு ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது. ஆரியர்கள் இன்று இந்தியா முழுமைக்கும் கலந்திருப்பதால் தூய ஆரியர்கள் என்று பிரித்தறிவது முடியாத ஒரு காரியமாகும். ஆயினும் கூட பொதுவாகவே பலரது சிந்தனையில் ஆரியர்கள் என்றால் மேலானவர்கள் என்ற எண்ணம் உள்ளது, அது உண்மை இல்லை என்று தெரிந்தாலும் கூட. தூய்மையான 100% ஆரியர்களைக் காண முடியாது; ஏனெனில் இனக் கலப்பு மிக நீண்ட காலமாக நடந்துள்ளது; ஆனாலும் ஆரிய சிந்தனை என்பது இன்றும் தொடர்கிறது என்று விவரிக்கின்றார் நூலாசிரியர்.
பண்டைய ஆரியர்கள் பயன்படுத்தியது வைதீக மொழி. சமஸ்கிருதம் கிடையாது. மனுநீதி எழுதப்பட்ட காலகட்டத்தில் தென்னிந்திய பகுதிகள் மனுநீதிக்குள் வரவில்லை; அது எழுதப்பட்ட காலத்தில் வடக்குப் பகுதியில் நிகழ்ந்திருக்கலாம். ஆரியர்களின் வழித்தோன்றல்கள் சங்க கால இறுதியில் தமிழ் பேசும் பகுதிக்குள் வந்ததாகத் தெரிகின்றது. ஆனால் வைதீக சிந்தனை கொண்டவர்களை விட புத்த சமண சிந்தனை உள்ளவர்கள் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் அதிகமாக இருந்ததாகத் தெரிகின்றது என்கின்றார் நூலாசிரியர். ஆரியர்களின் மிக முக்கியமான மற்றொரு பண்பு என்னவென்றால், அவர்கள் தேவர்களை மனிதர்களாக உருவப் படுத்தி வர்ணிப்பர்; ஆனால் உருவத்தை சிலையாக வழிபட மாட்டார்கள் என்பதையும் வேதப் பாடல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆக சிந்து சமவெளி பகுதியில் இருந்த உருவ வழிபாட்டின் தன்மைகளை உள்வாங்கிக்கொண்டு புதிய வகையில் வைதீகம் இந்து மதமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு இன்று இந்திய நிலப்பகுதியில் ஓர் ஆளுமை மிக்க மதமாக வளர்ந்திருக்கின்றது.
தொடரும்..
-சுபா
8.8.2023

-----

நூல் வாசிப்பை தொடர்வோம்...
நூல் விமர்சனம்: இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் -4
நூலாசிரியர்: அ. கா. ஈஸ்வரன்
முனைவர் க. சுபாஷிணி
நாசதீய சூத்தம்
இது ரிக் வேத சம்கிதையில் பத்தாம் மண்டலத்தில் இடம்பெறுவது.
பிற்காலத்தைச் சேர்ந்தது என்றாலும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது. இதற்கு முக்கியக் காரணம் பிரபஞ்ச படைப்பைப் பற்றி விளக்குகின்ற பகுதியாக இது அமைந்திருக்கின்றது.
அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஒரு சக்தி படைத்திருக்குமோ என்ற கேள்வியாக இப்பாடல்கள் அமைகின்றன. "தத் ஏகம்" என்று அந்தச் சக்தி கூறப்படுகிறது.
பிராமணங்கள்
வேள்வி செய்யப்படும் போது அனுஷ்டிக்கப்பட வேண்டிய சடங்குகளைப் பற்றி பிராமணங்கள் விவரிக்கின்றன.
சுருக்கமாக யசுர் வேதத்தில் கூறப்படுபவை இங்கு மிக விரிவாக விளக்கப்படுகின்றன.
மந்திரங்களுக்கும் வேள்விக் கிரியைகளுக்கும் உள்ள தொடர்பையும் இவை விளக்குகின்றன.
நான்கு வேதங்களுக்கும் தனித்தனியாக பிராமணங்கள் இருக்கின்றன. மொத்தம் 19 பிராமணங்கள் இதுவரை கிடைத்துள்ளன. ரிக் 2, யசூர் 5, சாம 11, அதர்வண 1.
பிராமணங்களை இரு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று விதி - அதாவது வேள்விக் கிரியைகள் செய்ய வேண்டிய ஒழுங்கு முறைகளை கூறுவது விதி. இரண்டாவது அர்த்த வாதம் - வேள்வி கிரியைகளை நோக்கம் விளக்கம் உட்பொருள் ஆகியவை பற்றி விவரிக்கும் பகுதி.
இந்து சமயத்தில் பெரும்பாலும் இன்று நடைமுறையில் பிராமணங்களே கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஆரண்யகங்கள்
ஆரண்யம் என்றால் காடு. காடுகளில் தனியாக இருந்து கற்றறிய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இப்பெயர் காரணம்.
தத்துவங்கள் சத்திரியர்களால் படைக்கப்பட்டன.
ஆரண்யகங்களில் பிரம்மம் பற்றி பேசத் தொடங்கினாலும் உபநிடத்தில் தான் தத்துவத்தின் வளர்ச்சியைக்கான முடிகிறது
பிரஸ்தானத்திரயம்
உபனிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய மூன்றும் இணைந்தது பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது.
உபநிடதங்களில் காணப்படுகின்ற கருத்துகளுக்கு இடையே முரண்பாடுகள் இருப்பதால் அந்த முரண்பாடுகளை நீக்கி ஒருமைப்படுத்துவதற்கு எழுதப்பட்டது பிரம்ம சூத்திரம்.
மகாபாரதத்தில் ஒரு பகுதியாக பகவத் கீதை காணப்பட்டாலும் தனி நூலாகவும் அது காணப்படுகிறது.
பிரம்ம சூத்திரத்தில் பௌத்தம், சமனம் ஆகியவற்றின் தத்துவங்களை மறுக்கின்ற அதே பிரிவில் அன்றைய நிலையில் உள்ள சைவமும் வைணவமும் மறுக்கப்பட்டுள்ளன.
ராமானுஜர், ஆதிசங்கர், மத்துவர் ஆகியோர் பிரம்மசூத்திரத்திற்கும் பகவத் கீதைக்கும் விரிவுரை எழுதியுள்ளனர்.
இந்து தத்துவ பேரறிஞர்களான ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோரது தத்துவங்கள் வேறுபட்டாலும் இவர்களின் ஆதார நூல் இந்த பிரஸ்தானத்திரியமே ஆகும்.
உபநிடதங்கள்
வேதத் தொகுப்பின் இறுதியில் இடம் பெறுவது.
உபநிடதம் என்ற சொல்லின் பொருள் அருகில் அமர்வது அதாவது குருவிற்கு அருகில் அமர்ந்து உபதேசம் கேட்பது.
முக்கிய உபநிரடதங்கள் புத்தர் பிறப்பதற்கு முன்பும் பின்பும் தோன்றின. அதாவது கிமு 4ஆம் நூற்றாண்டுக்கு சற்று முன்னதாகவும் அதன் பின்னதாகவும் எனக் கொள்ளலாம்
இன்று 108 உபநீதங்கள் கிடைக்கின்றன.
இன்று இந்து மத தத்துவம் என்று கூறப்படுபவை அனைத்துக்கும் அடிப்படை உபநிடதங்களே.
பிரம்மத்தைப் பற்றி ரிக் வேத தொகுப்பில் இடம்பெறும் உபநிடதம் "பிரம்மம் பேருணர்வுப் பொருள்" என குறிப்பிடுகின்றது. அதர்வண வேத தொகுப்பில் இடம்பெறும் மாண்டூக்கிய உபநிடதத்தில் "இந்த ஆன்மா பிரம்மம்" என்று குறிப்பிடுகிறது.
யசுர் வேத தொகுப்பில் இடம் பெற்றுள்ள பிரகதாரண்யகம் உபநிடதத்தில் "நான் பிரம்மமாக இருக்கிறேன்" என்கிறது. சாமவேத உபநிடதத்தில் "அது நீயாக இருக்கிறாய்" - "தத்துவமசி" என்கிறது. இந்த நான்குமே உபநிடதங்களின் மகா வாக்கியங்கள் ஆகும்.
பிரம்ம சூத்திரம்
உபநிடதங்களிடையே காணப்படுகின்ற கருத்து முரண்பாடுகளை சமன் செய்வதற்காக எழுதப்பட்டவை பிரம்ம சூத்திரம்.
இறைவன் - ஜீவன் -உலகம் இவை மூன்றையும் ஆராகிறது.
இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. இவற்றுக்குள் நான்கு உட்பிரிவுகள் உள்ளன இவை தனி கருத்துகளை ஆராய்கின்றன.
பகவத் கீதை
மகாபாரதத்தில் 40க்கும் மேற்பட்ட கீதைகள் இருக்கின்றன அதில் ஒன்று பகவத் கீதை.
மகாபாரதத்தில் பீஷ்ம பருவத்தில் அத்தியாயம் 25 முதல் 42 வரை கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடைபெறுகின்ற உரையாடலே பகவத் கீதை என அழைக்கப்படுகிறது.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற பங்காளி சண்டையால் போர் மூண்டது. இந்தப் போர் குருசேத்திரம் எனும் இடத்தில் நடைபெற்றது. அர்ஜுனனின் தடுமாற்றத்தைப் போக்குவதற்காக சத்திரியருடைய கர்மத்தை வலியுறுத்தும் தத்துவ போதனையே பகவத்கீதை.
இந்த உரையாடல் 18 அத்தியாயங்களாக உள்ளன. 700 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
இந்து மதம் கூறும் நான்கு வர்ணாசிரமத்தில் இரண்டாவதான சத்திரியரின் கடமை நாட்டை பாதுகாப்பது என்கிறது.
நூலின் இறுதியாக இடம் பெறுவது சுவாமி விவேகானந்தரின் செயல்முறை வேதாந்தம் என்கிற நூலுக்கு பொருள் முதல்வாத பார்வையில் நூலாசிரியர் வழங்கி இருக்கும் விமர்சனம்.
சிறிய அறிமுகங்களாக இந்திய தத்துவத்தில் இடம் பெறுகின்ற வேதங்கள் அவற்றின் உள்ளே அமைந்திருக்கின்ற ஏராளமான சிறிய பகுதிகளின் விளக்கமாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
அடிப்படையில் இந்த நூலை வாசித்தால்
வேதங்கள் என்பவை கடவுளால் அருளப்பட்டவை அல்ல, மாறாக அவை மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை என்பது தெளிவாகிறது.
வேதங்களில் உள்ள பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் வாய்மொழியாகவே பாதுகாக்கப்பட்டு பிறகு அவை எழுத்து வடிவில் உருவாக்கப்பட்டன. இவற்றுள் ஏராளமான இடைச்செருகல்கள் உள்ளன.
வேதங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டவை. அவை பொதுவாக தங்கள் தேவைகளை வேண்டி பாடப்பட்ட துதி பாடல்கள். செய்யப்பட்ட யாகங்கள், கேள்விகள் அதன் இறுதிப் பகுதியான வேதாந்தம் பிரம்ம சூத்திரம் ஆகியவை ஜீவன் ஆன்மா உலகம் ஆகியவற்றை ஆராயும் தத்துவ சிந்தனை என்ற வகையில் அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் படிக்க வேண்டியவற்றை நூலாசிரியர் மிகச் சுருக்கமாக வாசகர்களுக்கு வழங்கி இருக்கின்றார். இத்தகைய நூல்கள் இந்திய தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு எளிமையான வழியை உருவாக்கித் தருகின்றன. ஆசிரியருக்கு பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும்.
-சுபா
------------------------------------------------
நூல்: இந்திய தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி-1
நூலாசிரியர்: அ. கா. ஈஸ்வரன்
பதிப்பு பொன்னுலகம் புத்தக நிலையம்
விலை ரூபாய் 230/-

Sunday, August 6, 2023

2ஆம் உலகப் போர் - ஹிரோஷிமா
இதே நாளில் ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6, நாகாசாக்கியில் ஆகஸ்ட் 9- 1945. ஜப்பானின் இரு பெரும் நகரங்களை அமெரிக்காவின் அணுஆயுதங்கள் சிதைத்த நாள்.

ஹிரோஷிமா அன்றும் இன்றும்.. !
மனம் வைத்து உழைப்பை செலுத்தினால் அழிவிலிருந்து மீண்டு வந்து சாதனை படைக்கலாம். மனமும் உழைப்பும் இல்லையென்றால் கதை பேசிக் கொண்டு காலத்தைக் கழிக்கலாம்.
-சுபா
6.8.2023

Friday, August 4, 2023

அம்பேதக்ரியம் 50

 ஒரு தவம்'அம்பேதக்ரியம் 50’ தொகுப்புக்களைத் தயாரித்து வெளியிடவேண்டும் என்று தனது நெடுநாள் கனவை என் இணையர் கௌதம சன்னா தொடங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவரது முயற்சியும் அதற்காக அவர் செலுத்தும் உழைப்பும் கடுமையானது.
குறைவான தூக்கம்.. தொடர்ச்சியான நூல் வாசிப்பு, தொகுப்புப் பணிகள், நூல் வடிவமைப்பு, அட்டைப்பட வடிவமைப்பு .. இதற்கிடையே அம்பேதக்ரியம் கருத்துக்களைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மக்களை ஒருங்கிணைக்கும் பணி.. இடையில் கடுமையான வயிற்றுப் புண் ஏற்பட்டு தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் நிலை..
என ஒவ்வொரு நாளும் ஒரே சிந்தனையுடன் ஏறக்குறைய கடந்த 2 ஆண்டுகளாக கௌதம சன்னாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் நகர்கின்றன.
இந்தத் தொகுப்பில் அடங்குவன 50 + 2 நூல்கள்.
ஏறக்குறை 22,000 பக்கங்கள். மலைப்பாக இருக்கின்றது!
இன்று மகிழ்ச்சியான ஒரு நாள். அம்பேத்கரியம் தொகுப்புகள் அச்சாகி இன்று வரத்தொடங்கிவிட்டன என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
இது அறிவு சார்ந்த ஒரு பணி. கிராமம் தோறும் அம்பேதக்ரின் எழுத்துகளைக் கொண்டு சேர்க்கும் அரும்பணி.
வாழ்த்துகள் சன்னா!
-சுபா
குறிப்பு: அம்பேத்கரியத் தூதுவராக முன்பதிவு செய்து இத்தொகுப்பை ரூ 12,000/- க்கு வாங்க விரும்புபவர்கள் நாளை கும்பகோணத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியிலும் பதிவு செய்துக் கலந்து கொண்டு நேரடியாக இணையலாம்.. அல்லது தொடர்புக்கு +918072384874 (ஆசிரியர் செந்தில்குமார்)