Thursday, September 22, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 103

என் சரித்திரம் நூலின் நூறாவது அத்தியாயம் சிந்தாமணி அச்சுவடிவம் பெற்று நூலாக வெளிவந்த நிகழ்வை விவரிக்கும் ஒரு பகுதி. சிந்தாமணியைப் பதிப்பிக்கும் போது அது தக்க முறையில் தமிழ் மக்களைச் சென்று சேரவேண்டும் என்ற பெரிய ஆதங்கம் உ.வே.சாவிற்கு இருந்ததை இந்த அத்தியாயத்தில் காண்கின்றோம்.

சீவக சிந்தாமணியின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களோடுகடஹியின் நாயகனான சீவகனின் கதையை இணைக்கவேண்டும் என முயற்சித்து அதனை முகவுரையில் எழுதினார். தனக்கு அறிமுகமான சமண இலக்கியவாதிகளிடம் அதனைக்காட்டி தவறுகள் திருத்தி வைத்துக் கொண்டார்.பின்னர் நூலாசிரியரான திருத்தக்கதேவரது வரலாற்றைச் சமணர்கள் தமக்குள்ளே வழிவழியாக சொல்லி வந்த கர்ணபரம்பரை கதைகளின் உள்ள விசயங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வசன் நடையில் தயாரித்து அதனையும் சமண இலக்கியவாதிகளிடம் காட்டி வேண்டிய திருத்தங்களை உட்புகுத்தி தயார் செய்தார். அதோடு நிற்காமல், சீவகன் சரித்திரத்தில் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களை தனியாகப் பட்டியலிட்டு அதனை அபிதான விளக்கம் என தனிப்பகுதியாகத் தயாரித்து வைத்துக் கொண்டார். இவற்றோடு சீவக சிந்தாமணியின் பெருமைகளை விளக்கும் முகமாக ஒரு விளக்கப்பகுதி போன்று முகவுரை ஒன்றையும் தயார்செய்தார்.

இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்து சரி செய்து நூலில் இணைக்க அச்சகம் அனுப்பி வைத்தார். யாரும் தம்மை குரை கூறிவிடக்கூடாது, தவறுகள் நூலில் வந்து விடக்கூடாது என மிகுந்த கவனத்துடன் இப்பணியைச் செய்து வந்தார். அவரது அப்போதைய மன நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

அதனோடு ‘பிழையென்று தோற்றும்படி விஷயங்களை எழுதக்கூடாது’ என்ற நினைவும் இருந்தது. ஆதலின் நான் எழுதியதைப் பலமுறை பார்த்துப் பார்த்து அடித்தும் திருத்தியும் ஒழுங்கு படுத்திக் கொண்டேன். பழக்க மில்லாமையால் ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதி முடிக்கும்போது சந்தேகமும் பயமும் உண்டாயின. ‘வான்மீகத்தை இதனோடு ஒப்பிடுவது சரியோ? பிழையோ? ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஏதாவது சொன்னால் என்ன செய்வது? என்றும், ‘பிற்கால நூல்களுக்கு வழிகாட்டி என்று சொல்லுகிறோமே; ஜைன நூலாகிய இதை அப்படிச் சொல்லு வதால் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்மேல் சினம் உண்டாகுமோ?’ என்றும் கலங்கினேன். ‘நம் மனத்திற்குச் சரியென்று தோற்றியதை எழுதி விடுவோம்; பிறகு தவறென்று தெரிந்தால் மாற்றிக் கொள்வோம்’ என்று துணிந்து எழுதலானேன்.

சிந்தாமணியைப் பதிப்பிக்கத்தொடங்கிய நாள் முதல் தனக்குக் கிடைத்த சிந்தாமணி ஏட்டுச் சுவடிகளையெல்லாம் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து வைத்துப் பாட பேதங்களை ஆராய்ந்து பதிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார் உ.வே.சா. இது கடினமான ஒன்றே.

பதிப்புப்பணி என்பது ஒவ்வொரு பதிப்பாசிரியரையும் பொருத்து மாறுபடும் ஒன்று. சில பதிப்பாசிரியர்கள் சுவடி நூலில் உள்ள பிழைகளை மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அப்படியே பதிப்பதே முறை என்ற கொள்கையைக் கொண்டிருப்பர். உதாரணமாகப் பேராசிரியர் வையாபுரிப்பில்ளையவர்களின் பதிப்புப்பணி பாணி இத்தகையது எனலாம். ஒரு சிலர் சுவடி நூல்களில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியனவற்றை மாற்றித் திருத்திய நூலாகக் கொண்டு வரவேண்டும் என்ற வகையில் செயல்படுவர். ஆக, பதிப்பாசிரியரின் எண்ணத்தைப் பொறுத்தே பதிப்புப்பணி முயற்சிகள் நடந்தன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சிந்தாமணி ஆய்வின் போது வெவ்வேறு சுவடிகளில் இருந்த பாடபேதங்களைப் பார்த்து தான் வருந்தியமையும் ஆக தக்க இடத்தில் திருத்தங்களை உட்புகுத்தி சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என்ற கருத்து ஏற்படவே திருத்தங்களை செய்து பணிகளை முடித்தார். இதனை உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

ஏட்டுச் சுவடிகளிற் கண்ட பாடங்களின் வேறுபாட்டைக் கண்டு கண்டு என் மனம் புண்ணாகியிருந்தது. இன்னபடி இருந்தால் பொருள் சிறக்குமென்று எனக்குத் தோற்றின இடங்களிலும் பிரதியில் உள்ளதையே பதிப்பித்தேன். என்னுடைய கருத்தையோ, திருத்தத்தையோ சிந்தாமணியில் ஏற்றாமல் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துப் பதிப்பித்தேன். பதிப்பிக்கத் தொடங்கிய நூல் எனக்கு ஒரு தெய்வ விக்கிரகம்போல இருந்தது. அதன் அழுக்கைத் துலக்கிக் கவசமிட்டுத் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஆசை; ‘கை கோணி இருக்கிறது, வேறுவிதமாக அமைக்கலாம்; நகத்தை மாத்திரம் சிறிது திருத்தலாம்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதன் ஒவ்வோரணுவிலும் தெய்விக அம்சம் இருக்கிறதென்றே நம்பினேன். அழுக்கை நீக்கி விளக்குவதற்கும், அங்கத்தையே வேறுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக அறிந்திருந்தேன். இக்கருத்தை, ‘புராதனமான தமிழ் நூல்களும் உரைகளும் பண்டைவடிவம் குன்றாதிருத்தல் வேண்டுமென்பதே எனது நோக்கமாதலின் பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும். உள்ளவற்றை மாற்றியும், குறைத்தும் மனம் போனவாறே அஞ்சாது பதிப்பித்தேனல்லேன். ஒரு வகையாகப் பொருள் கொண்டு பிரதிகளில் இருந்தவாறே பதிப்பித்தேன். யானாக ஒன்றுஞ் செய்திலேன்’ என்று புலப்படுத்தினேன்.

தக்கக் காலத்தில் உடவியோரை நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது சான்றோருக்கு அழகு. இதனைக் கருத்தில் கொண்டு தனக்கு பல்வேறு வகையில் சிந்தாமணி அச்சுப்பதிப்பாக்கத்தில் உதவிய அன்பர்களுக்கு நன்றி கூறி நன்றியுரை பகுதி ஒன்றையும் நூலில் இணைத்தார். இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையை அடைந்து அச்சகத்தாரிடம் அனைத்தையும் கொடுத்து அதனை முழுமை பெறும் பணியைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அச்சகத்திலேயே அன்றிரவு படுத்து உறங்கினார்.

சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்புப் பணி முடிவுற்றது.

நூல் அச்சு வடிவில் வெளிவந்தது.

அந்த நாளில் உ.வேசாவிற்குஒரு பரிசு அவர் இருக்கும் இடம் தேடி வந்தது. உ.வே.சா இன்று தமிழ்த்தாத்தா எனக் கற்றோராலும் தமிழ் அன்பர்களாலும் சிறப்பிக்கப்படும் ஒரு நிலையை அவருக்குக் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு பரிசு அது.


சீவக சிந்தாமணி - ஓலைச்சுவடி நூல்
மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில்


தொடரும்...!

சுபா

Sunday, September 11, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 102

மெட்ராசிலிருந்து கும்பகோணம் திரும்பிய பின்னர் கல்லூரி வேலைகளுக்கிடையிலேயே சிந்தாமணி பதிப்புப்பணியை உ.வே.சா தொடர்ந்து வந்தார். அச்சாகி வருகின்ற தாட்களை எழுத்துப் பிழைகள் பார்த்துச் சரி செய்து அதனை அனுப்புதல் என்பது ஒரு பணி. இது சற்றே அதிக காலத்தை எடுக்கும் ஒரு பணிதான். இதற்கும் மேலாக பொருளாதாரப் பிரச்சனை என்ற ஒன்றும் இருக்கின்றது. இந்தக் காலத்திலேயே ஒரு நூலைத் தகுந்த பதிப்பகத்தாரைத் தேடி அச்சிட்டு வெளியிட்டுக் கொணர்வது என்பது எளிதான ஒன்றாக இல்லை என்பதை அறிவோம். ஆக, இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுக்கு முன்னிருந்த நிலையை ஊகித்துப் பார்க்கையில், அது எவ்வளவு சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பணி என ஓரளவு நாம் ஊகிக்கலாம், அல்லவா?

சிந்தாமணிப்பதிப்பிற்காக அச்சகத்தார் அச்சுக்கூலி, காகிதங்களுக்கான விலை ஆகியனவற்றைத் தெரிவித்துக் கேட்கும் போது அப்பணத்தைத் தகுந்த நேரத்தில் அனுப்பி வைக்க முடியாமல் திண்டாடிப்போனார் உ.வே.சா. பொருளாதார உதவி செய்கின்றோம் என அவருக்குச் சம்மதித்து கையெழுத்து வைத்துக் கொடுத்த நண்பர்களில் சிலரே பணத்தை அனுப்பி வைத்தனர். ஏனையோர் மறந்து விட்டனர் அல்லது ஒதுக்கி விட்டனர். அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் கடிதம் எழுதுவது, பின்னர் வருகின்ற பணத்தைச் சேகரித்து அச்சகத்தாருக்கு அனுப்புவது என்பதே ஒரு சுமையான வேலையாகிப்போனது உ.வே.சாவிற்கு.

அத்தகைய ஒரு காலகட்டத்தில் பாரங்களை அச்சிடக் காகிதம் தேவைப்பட்டபோது அச்சுக்கூடத்து உரிமையாளர் பணம் அனுப்பினால் தான் அச்சுப்பணி தொடரும் எனக் கூறிவிட்டார். என்ன செய்வது எனத் தெரியாது திகைத்த உ.வே.சாவின் நிலையைக் கேள்விப்பட்ட சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு காகிதக் கடைக்காரரான சண்முகஞ்செட்டியாரை உ.வே.சா தொடர்பு கொண்டு காகிதங்களை முதலில் பெற்றுக் கொண்டு பின்னர் காசு கொடுக்கலாம் என்ற வகையில் பேசி ஒரு ஏற்பாட்டினை செய்து கொடுத்தார். இது தக்க நேரத்தில் கிடைத்த ஒரு உதவியாக அமைந்தது. தேவைப்பட்ட காகிதத்தின் விலை நூற்றைம்பதுரூபாய் மட்டுமே.
ஆகக் காகிதம் கிடைத்தது.
அச்சுப்பணி தொடர்ந்தது.
உ.வே.சா. கல்லூரியில் பணிபுரியும் ஏனைய ஆசிரிய நண்பர்களிடம் கடன் வாங்கி அந்த நூற்றைம்பது ரூபாயையும் கொடுத்து விட்டார்.

இத்தகைய இக்கட்டான, தர்ம சங்கடமான நிலைகள் ஏற்படும் போது அவர் மனம் புண்படாமல் இருந்திருக்குமா?

ஒரு நூலை வெளிக்கொணர அவர் அனுபவித்தச் சிரமங்களைப் போலத்தான் இன்றும் கூட தமிழ் மொழி வளர்ச்சி, வரலாற்றுப்பாதுகாப்பு என உழைக்கும் தன்னார்வலர்களாகிய நம்மில் பலர் சிரமங்களை அனுபவிக்கின்றோம். பணம் படைத்தோருக்கு மனம் இல்லை. தாய்மொழியாகிய தமிழின் மாண்புகளையும் நிலத்தின் வரலாற்றையும் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ள அரசுக்கோ இத்தகைய விசயங்களின் மீது நாட்டமுமில்லை, அக்கறையுமில்லை, ஆர்வமுமில்லை. ஆகத், தமிழ்ப்பணி என்பது என்றென்றுமே தனிமனிதர்கள் சிலரது முயற்சிகளினாலும் சிறு சிறு குழுக்கள் அல்லது அமைப்புக்களினாலும் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றே!

அன்றைய கால சூழலில் சமண இலக்கியங்கள் என்பன சுவடியாக சமணர்கள் இலக்கிய சூழலுக்குள்ளே மட்டுமே வழக்கில் இருந்தன. சமயம் என்ற ஒரு வகைப்படுத்தலுக்குள் மொழியை வைத்துப் பார்க்கும் மனப்பான்மை கொண்ட கற்றோர் உலகமாக அக்காலகல்விச்சூழலும் கற்றோர் சூழலும் இருந்தன. வைஷ்ணவ இலக்கியங்களை வைஷ்ணவர்கள் மட்டுமே வாசிப்பது போற்றுவது என்பதும், சைவ இலக்கியங்களையும் தத்துவங்களையும் சைவர்கள் மட்டுமே போற்றுவது என்பதும் பொதுவாக இருந்த சூழல். இதில் விதிவிலக்குகளாக சில உண்டு. மறுப்பதற்கில்லை. ஆயினும் பொது நிலை என்பது ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பேணுவோர் அதன் வரையறைக்குள்ளேயே நின்று அதற்குள் உள்ள மதம் தொடர்பான இலக்கியங்களை வாசித்தல் போற்றுதல் என்றே அச்சூழல் அமைந்திருந்தது.

அத்தகைய ஒருசூழலில், பிறப்பால் சைவ சமயத்தைச் சேர்ந்த உ.வே.சா, சமண இலக்கியமான சீவக சிந்தாமணியை ஆய்ந்து நேரம் செலவிட்டு, பணத்தையும் உழைப்பும் மட்டுமல்லாது தன் முழு கவனத்தையும் கூடச் செலவிட்டு இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்க ஒரு முயற்சியே. தமிழ் ஆய்வு என்பது சமய சார்பு அற்று, மொழிக்கு முக்கியத்துவம் தரப்படும் பண்புடன் அமைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே உ.வே.சாவின் சிந்தாமணிப் பதிப்பும் ஈடுபாடும் அமைந்தது.

அக்காலத் தமிழ்ச்சூழல் சைவ வைணவ மதங்கள் வெகுவாகப் பேணப்பட்ட காலம் என்பதால் வேற்று மத இலக்கியங்களை அறிந்தோர் இவருள் சிலரே. ஆகச் சிந்தாமணியை சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து உ.வே.சா மனதில் உருவாகியது. சிந்தாமணியின் நாயகனை விவரித்தும் இக்காப்பியத்தின் ஆசிரியரை விவரித்தும் இதே நூலில் முகவுரை எழுதவேண்டியது அவசியம் என்று உணர்ந்து உ.வே.சா அதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்

தொடரும்..
சுபா

Thursday, September 1, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 101

உ.வே.சா சென்னையில் சிந்தாமணி  பதிப்பிற்காக வந்து சேலம் இராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்த காலகட்டம் அது. தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் அவர் தங்கியிருந்தார்.  இரவும் பகலும் தனிமையில் அமர்ந்து ஒவ்வொரு ஏடுகளையும் வாசித்துப் பதம் பிரித்து, அச்சுப் பிரதிகளைக் கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிட்டு ப்ரூப் பார்த்து நூல் பதிப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

இடையில் ஒரு நாள் இராமசாமி முதலியார் உ.வே.சாவை சென்னை காஸ்மோபோலிட்டன் கிளப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்த பூண்டி அரங்கநாத முதலியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிந்தாமணி நூல் பதிப்பிற்குத் தான் நன்கொடை சேகரிப்பதைச் சொன்னதும் நூறு ரூபாய் தருவதாக கையொப்பமிட்டு அந்த நன்கொடை நோட்டு புத்தகத்தை தன் ஏனைய நண்பர்களிடம் காட்டி மேலும் பலரது கையொப்பங்களைப்  பெற்றுத்தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டதோடு, தாம் கூறியபடியே மேலும் நன்கொடைக்கு ஏற்பாடும் செய்து கொடுத்தார் பூண்டி அரங்கநாத முதலியார்.

இந்தப் பகுதியை வாசிக்கும் போது, இன்றைக்கு ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதார ஏற்றம் உள்ளவர்கள் அன்றைய மெட்ராசில் கிளப்புகளுக்குச் செல்வது என்பது ஒரு வகையான பேஷனாகவும், ஆங்கிலேய நாகரிகத்தின் தாக்கத்தில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு  தமிழகத்திற்கும் அறிமுகமாகி இருந்தமையும் தெரிகின்றது.

சிந்தாமணி பதிப்பு வேலை முழுமையையும் 1886ம் ஆண்டு கோடை விடுமுறையிலேயே செய்து முடித்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் உ.வே.சா மெட்ராஸ் வந்திருந்தார். ஆனால் அவர் நினைத்தபடி அனைத்தையும் தயாரித்து முடிக்க முடியவில்லை. கோடை விடுமுறையும் முடியும் நிலையில் இருந்தமையால் கும்பகோணம் திரும்ப வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.  அதுவரை 144 பக்கங்களுக்கான பணிகள் முற்றுப்பெற்றிருந்தன. அதாவது சிந்தாமணியில் 18 பாரங்கள் அச்சாகியிருந்தன.  இந்த நிலையில் பதிப்புப் பணிகள்  தொடர்ந்து நடக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தனக்கு அச்சுக்கோப்புக்கள் தயாராகத்தயாராக அனுப்பும்படி சொல்லி கிளம்பி விட்டார். உத்தியோகம் தானே வருமானத்தைக் கொடுக்கக்கூடியது? நிரந்தர உத்தியோகம் அவர் குடும்பத்தை வழி நடத்த மிக முக்கியமாக இருந்ததோடு அவர் விரும்பிய வகையில் மாணவர்களுக்குப் போதிப்பது என்பதும் அவருக்கு மனமகிழ்ச்சியைத் தந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனாலும்  இந்தக் குறிப்பிட்ட சூழலிலோ, அவர் மனம் கும்பகோணம் செல்வதற்கு விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. சிந்தாமணி பதிப்புப் பணியிலேயே முழு ஆர்வமும் மனமும் கவனமும் அக்கரையும் அவருக்கு இருந்தது. பிரியக்கூடாதவர்களை விட்டுப் பிரியும் துயரத்துடனேயே    மெட்ராஸிலிருந்து உ.வே.சா புறப்பட்டார்.  

தொடரும்..

சுபா