Friday, June 18, 2021

பூப்புனித நீராட்டு விழா

 நேற்றைய எனது பதிவில் ஒரு நண்பர் ஏன் பெண்குழந்தைகளுக்கு மட்டும் பூப்புனித நீராட்டு விழா என்றும் இது உளவியல் விஷயமா என்றும் கேட்டிருந்தார். அதற்கு எனது கருத்தாக..

பண்டைய காலத்தில் இனக்குழுக்கள் பெண்கள் பூப்பெய்துவதைk குழந்தை பிறப்போடு தொடர்பு படுத்திப் பார்த்து இதனை ஒரு சடங்காக நிகழ்த்தினர். இனக்குழு தங்களுக்குள் ஒன்றிலிருந்து ஒன்று தொடர்பில் இருக்க தாய்மை அடையும் நிலையடந்த பெண் இங்கு இருக்கின்றாள் என செய்தி கூறும் ஒரு வழிமுறையாகவும் இதனைச் சொல்லலாம் . இதனால் அதே இனக்குழுவில் திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் தயாராகி இருப்பதை அறிவிக்க ஒரு உத்தியாக.
இன்றைய காலகட்டத்தில்...
மானுட சமூகம் மிக விரிவாக வளர்ச்சி கண்ட இச்சூழலில் இவ்வகை பூப்புனித நீராட்டு சடங்குகள் தேவையற்றவை. இவற்றை தவிர்ப்பது சிறப்பு.
விலங்குகளுக்குள்ளும் இதே வகை உடல் தயார் நிலை என்பது நிகழ்கிறது. இது இயற்கையின் ஒரு இயல்பான நிகழ்வு.
பெண்கள் எல்லா துறைகளிலும் காலூன்றி சாதனை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பூப்புனித நீராட்டு என்பது அந்த இளம் பெண்ணுக்கு ஒரு வகையில் அவமானமான ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன். அப்பெண் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே உள்ள இயந்திரம் அல்ல.
பெண்கள் சாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஆகவே பூப்புனித நீராட்டு செய்யலாமா வேண்டாமா .. தேவையா.. என்ற கேள்வியெல்லாம் விட்டு இதனை இயற்கையின் ஒரு பகுதி என இயல்பாக எடுத்துக் கொள்ள பழகிக்கொள்வது அவசியம்.
பூப்புனித நீராட்டு என்று சொல்லி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழிப்பதும், படிக்கின்ற இளம் பெண்களின் மனதில் உடல் ரீதியான கவனத்தைச் திருப்புவதையும் தவிர்ப்போம்.
உலகின் ஏனைய இன மக்கள் இவ்வகை சடங்குகளிலுருந்து மீண்டு விட்டனர். பெண்களின் ஆளுமை பரப்பு பெரிது, விரிவானது. இவ்வகை உடல் ரீதியான சடங்குகளைத் தவிர்த்து விட்டு அறிவுப்பூர்வமான விசயங்களில் பெண்களையும் ஆண்கள் போலவே இயல்பாக பார்க்கும் பார்வை நம் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய ஒரு தேவை!
-சுபா
Muniasamy Pandian

Thursday, June 10, 2021

பெண்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், பெண் ஆசிரியர்கள்

 பெண்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள் இருக்கவேண்டும் என்ற பேச்சுக்கள் இப்போது எழுந்திருப்பதைப் பேஸ்புக் பக்கங்களில் பார்க்க நேரிட்டது. இதுபற்றி எனது சிந்தனையைப் பதிவது அவசியம் என்று கருதுகிறேன்.


பள்ளிக்கூடங்கள் என்பவை மனித இயந்திரங்களைத் தேர்ச்சிக்காகத் தயார்படுத்தும் இடம் என நினைக்கும் போக்கு அதிகரித்துவிட்டது. இது சமூகவியல் பார்வையில் மிகத் தவறான அணுகுமுறை.

பள்ளிக்கூடங்கள் தான் குழந்தைகள் உலகைக் கற்றுக்கொள்ள அவர்களுக்குக் கிடைக்கின்ற முதல் வாய்ப்பு. ஆண் பெண் குழந்தைகள், ஆண் ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் என எல்லோரும் கலந்து ஒரு சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக பள்ளிக்கூடம் திகழவேண்டும். அப்போதுதான் இயல்பாக குழந்தைகள் சமூகத்தைப் பார்க்கக் கூடிய பார்வையைப் பெற முடியும்.

பெண் குழந்தைகளுக்குப் பெண் ஆசிரியர்கள்தான் கல்வி கற்பிக்க வேண்டும் என நினைப்பது பொதுவாக பாதுகாப்பை நோக்கித்தான். பெண் ஆசிரியர்களால் பெண் குழந்தைகளுக்குப் பிரச்சனைகளே ஏற்படாதா? கடந்த காலங்களில் பெண் பேராசிரியர்கள் பெண் மாணவியரைத் தவறான செயல்களுக்கு ஈடுபடுத்திய செய்திகளையும் நாம் செய்தி ஊடகங்கள் வழி நன்றாக அறிந்திருக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக ஆண் ஆசிரியர்களைக் குறை கூறும் வகையிலான ஒரு போக்காகவே இதை நான் காண்கிறேன். நான் அறிந்து பல ஆண் ஆசிரியர்கள் ஆண் பெண் குழந்தைகள் என்று பாரபட்சமில்லாமல் மாணவர்களின் வளர்ச்சிக்காக உழைக்கின்றனர். அவர்கள் சொந்த ஊதியத்தை செலவிட்டு மாணவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றனர். தங்கள் ஓய்வு நேரத்தில் மாணவர்களின் நலனுக்காகக் கூடுதல் நேரத்தைச் செலவிட்டு பணியாற்றுகின்றனர். அப்படிப் பல பேர் இருக்கையில் ஒரு சிலர் செய்கின்ற தகாத காரியங்களால் ஒட்டுமொத்தமாகப் பெண் குழந்தைகளுக்குப் பெண் ஆசிரியர்கள் தான் இருக்க வேண்டும் எனக் கூறுவது தவறான முடிவாகவே அமையும்.

நான் இளமை காலத்தில் எனது பள்ளிக் கூடத்தில் ஆண் குழந்தைகளுடன் பெண் குழந்தைகளுடன் இணைந்து விளையாடிய அந்த இனிமையான நாட்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன. இருபாலரும் கலந்து படிக்கும் போதும் ஆண் பெண் ஆசிரியர்கள் என கலந்து படிக்கும் போதும் கல்வி என்பது இயல்பாக இருக்கும்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால்...... என நினைப்பவர்களுக்கு... பள்ளிக்கூடங்களில் மட்டுமே பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன என்பது உண்மை அல்ல. வீடுகளில் தன் சொந்த உறவுகளாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் நிறைய பேர்.

ஆக... ஒட்டுமொத்தமாக என்ன தேவை என்றால்...
பெண் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தகைய மன ரீதியான தயாரிப்புகள் அவசியம்.... உடல்ரீதியான தயாரிப்புகள் அவசியம் என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்களுக்கு எடுத்துக்கூறி விளக்க வேண்டும். யாராகினும் ஒரு ஆசிரியர் தவறாகத் தன்னை நெருங்கினால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்... உடனே யாரிடம் அதனை தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

அதுமட்டுமன்றி தயங்காமல் அச்சப்படாமல் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தைரியத்துடன் பேசக்கூடிய வகையில் பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். இத்தகைய மன தைரியம் தான் அநீதிகளை அவை மறைக்கப்படுவதிலிருந்து வெளிப்படுத்துவதற்கு உதவும்.

-சுபா