Sunday, July 14, 2013

Robert Langdon is back..Florence Baptistery! -6

சில நாட்களுக்கு முன்னர்  திரு.முத்துராமன் (தென் அமெரிக்கா) தனி மடலில் குறிப்பிட்டிருந்தார். எனது இந்த இழையைப் பார்த்து இன்பெர்னோ வாங்கிப் படித்துக் கொண்டிருப்பதாக. திரு.ப்ரவுனிடம் கொஞ்சம் விற்பனைக்கு கமிஷன் கேட்கலாமா ?? :-)

சரி .. இன்றைக்கு மேலும் ஒரு கட்டிடம் இன்பெர்னோவில் குறிப்பிடப்படுவது. அதனைப் பற்றிய தகவல் பதியலாம் என நினைக்கின்றேன்.

கட்டிடச் சிற்பி லோரென்ஸோ கிபெர்டி (Lorenzo Ghiberti) அமைத்த பாப்டிஸ்ட்ரி.. இது இன்பெர்னோவில் மிக முக்கிய இடம் வகிக்கும் வகையில் விளக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம். ஒக்டகன் (Octagonal shape) வடிவாக எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம் இது. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கட்டிடம் இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டிடம். இன்பெர்னோவின் மைய நாயகன் டாண்டே மட்டுமன்றி, ரெனைஸான்ஸ் பன்பாட்டு மாற்றத்திற்குக் காரணமாக இருந்தோர்களில் குறிப்பிடத்தக்க மெடிசி பாரம்பரியத்தினரும் இந்த வழிபாட்டு மையத்தில் தான் ஞானஸ்தானம்  பெற்றுக் கொண்டதாக தகவல்.1058 முதல் 1129 வரை ஏறக்குறைய 70 ஆண்டுகள் தேவைப்பட்டன இந்தக் கட்டிடத்தை முழுமைப் படுத்த!


கட்டிடத்தின் வடிவம். நடுவில் மோசைக்கில் வடிக்கப்பட்ட ஏசுவின் திரு உருவம்.

இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த கிபெர்ட்டியின் உருவம் இதே கட்டிடத்தில் சொர்க்க வாசல் கதவில் இழைக்கப்பட்டிருக்கின்றது.



உள்ளே நுழைந்தால் சித்திரக் கூடத்தைத் தான் காண்போம். எங்கும் சித்திரங்கள். பைபிள் கதைகள் பலவற்றிற்கு உருவம் கொடுத்து சுவர்கள், மேல் கோபுரப் பகுதி என எல்லா இடங்களிலும் சித்திரங்கள் நிறைந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் கலை வடிவம் கொண்டது இந்த பாப்டிஸ்ட்ரி. இங்கே தான் ரோபர்ட்டும் சியன்னாவும் டாண்டேயின் முகமூடியைக் கண்டெடுப்பதாகக் கதை செல்கின்றது.

கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சிறப்புத்தான். எண்கோண வடிவத்தில் இருக்கும் இக்கட்டிடத்தைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தால் பல நூறு சிற்பங்கள், வடிவங்கள் நிறைந்திருக்கின்றன. உள்ளே சித்திரக்கூடம். உலக அதிசயங்களில் இதனையும் ஒன்றாகக் குறிப்பிடலாம். அத்தனை சிறப்புக்கள் இதற்கு உண்டு என்பதை நேரில் பாக்கும் போது உணர்வோம். இந்தச் சிறப்புக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல அமைவது பாப்டிஸ்டிரியின் உள்ளே மேல் கோபுரச் சுவரில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஏசு பெருமானின் திரு உருவம்.



இதனைப் பற்றி தனியாக ஒரு பதிவே எழுதலாம். பின்னர் பார்க்கிறேன்.

சுபா

Saturday, July 6, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

என் தோட்டத்தில் இருக்கும் ரோஜா செடிகளில் ஒன்றில் கொத்து கொத்தாக மலர்கள் நிரைந்திருக்கின்றன.

மலர்கள் மலர்ந்திருந்தாலே வண்டுகள் சூழ்ந்திருப்பதும் இயற்கை தானே..!


சுபா

Friday, July 5, 2013

Robert Langdon is back..Ponte Vecchio! -5

இன்பெர்னோவில் ப்ரவுன் குறிப்பிடும் சில பிரசித்தி பெற்ற கட்டிடங்களையும் இடங்களின் அமைப்புக்களையும் பற்றி தகவல் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டு சில பதிவுகளும் எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக இன்று எதைக் குறிப்பிடலாம் என யோசிப்பதற்கே இடமில்லாமல் போண்டோ வெச்சியோவிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காரணம் ... கடந்த மூன்று நாட்களாக நடந்த அலுவல மீட்டிங் அறையில் இருந்த உலகப் பிரசித்தி பெற்ற வரைபடங்களின் ஓவியத்தில் இந்த போண்டோ வெச்சியோவின் வரபடமும் ஒரு தனி ஓவியமாக அமைந்திருந்து என்னை பலமுறை இன்பெர்னோவை ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது.

சரி.. பொண்டோ வெச்சியோ பற்றி..

அடிப்படையில் இது ஒரு பாலம்.
ஃப்ளோரன்ஸ் நகரின் ஆர்னோ நதியின் இரு பகுதிகளையும் இணைக்கும் பாலங்களில் இதுவும் ஒன்று. ஆனால் மிகச் சிறப்பு வாய்ந்தது. என்ன சிறப்பு என்று யோசிக்கின்றீர்களா..?

படத்தைப் பாருங்கள்...


தூரத்திலிருந்து தெரிவது..




சற்று அருகிலிருந்து


இந்த பாலம் பற்றிய செய்திகள் கிபி 996ம் ஆண்டு பதிவாகியிருக்கின்ற போதிலும் சில முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் தற்சமயம் இருக்கும் இந்தப் பாலம் கி.பி 1345ம் ஆண்டு கட்டப்பட்டது.

இதன் தனிச்சிறப்பு -  பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் கடைகள். அதுவும் எல்லாமே தங்க, வெள்ளி, வைர, ப்ளாட்டின நகைகள் விற்கப்படும் இடம். மிகப் பணக்கார பாலம் இது என்று சொல்லலாம் தானே..:-) !

அதோடு நன்றாக கவனித்தால் முதல் தளம் கடைகளாகவும் மேல்தளம் அறைகளாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ப்ரவுன் தன் இன்பெர்னோவில் இப்பாலத்தில் ரோபர்ட் லாங்டனும் சியன்னாவும் தப்பித்துச் செல்வதை விவரிக்கும் போது இப்பாலத்தின் தனிச்சிறப்பையும் குறிப்பிடுகின்றார். நாவலில் சுவாரசியமான பகுதி இது.

குறிப்பு: படங்கள் இணையத்தில் எடுத்தனை. நான் எடுத்த படங்களை வேறொருமுறை பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

Monday, July 1, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 54

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய திருப்பெருந்துறைப் புராணம் எனது இந்த ஆண்டு தமிழகப் பயணத்தின் போது மேற்கொண்ட தேடலில் கிடைக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றத்தைத்  தந்த ஒரு விஷயம்.இந்த நூல் கிடைத்தால் அதனை மின்னூலாக்கி தமிழ் மரபு அறக்கட்டளை நூலகத்தில் இணைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இம்முறை அது சாத்தியப்படவில்லை. பிள்ளையவர்கள் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்திருந்து எழுதிய நூல்களில் இதுவும் ஒன்று என்ற சிறப்புப் பெறும் ஒரு தலபுராணம் இது. எப்போது நம் கைகளுக்கு இது கிடைக்க வேண்டும் என்பது இறையருள் சித்தமாக இருக்கின்றதோ அப்போது இது கிட்டலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

திருப்பெருந்துறைப் புராணம் உருவான கதை பற்றிய விரிவான விளக்கங்களை அத்தியாயம் 52ல் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

திருப்பெருந்துறை ஆலயத்தை நிர்மானித்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்குத் தமது மேற்பார்வையில் இருக்கும் திருப்பெருந்துறை ஆலயத்திற்கு இதுகாறும் ஒரு முழுமையானத் தலபுராணும் இல்லை என்றும் அந்தக் குறை நீங்கி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே இந்தத் தலத்திற்கு ஒரு தல புராணம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த நூலை சிறப்பாக பாடி அரங்கேற்றி முடித்தால் ஆலயத்தின் சார்பாக ரூபாய் இரண்டாயிரம் வழங்க சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்து திருப்பெருந்துறைக்குறிய ஒரு வடமொழி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பையும், அந்த ஆலயத்திற்கு முன்பிருந்த இரண்டு புராணங்களையும் சேர்த்து அனுப்பியிருந்தார்.

ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகருக்கும் இது நல்லதொரு வாய்ப்பாக பொருளாதார உதவியாக பிள்ளையவர்களுக்கு அமையும் என்ற எண்ணம் மனதில் தோன்றியிருந்தது. அப்போது தான்  தன் புதல்வருக்குத் திருமணம் முடித்து ஏராளமானச் செலவும் அவருக்கு ஏற்பட்டிருந்தது  அது தேசிகருக்கும் தெரியும். பிள்ளையவர்களின் அந்தக் கடன் சுமைகளை ஏதாகினும் ஒரு வகையில் குறைக்க இது உதவலாமே என்ற எண்ணம் தேசிகருக்கு மனதில் இருந்தது.

இதனை நினைத்து உ.வே.சாவை அழைத்து மாயூரத்தில் இருக்கும் பிள்ளையவர்களைப் பார்த்து இந்த நல்ல செய்தியைச் சொல்லி பணியைத் தொடங்கக் கேட்டுக்கொள்ளச் சொல்லி வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.

இந்தப் பணியைக் கேள்விப்பட்டதுமே  பிள்ளையவர்களுக்கு மிகுந்த ஆர்வம் தோன்ற அடுத்த நாட்களிலேயே திருவாவடுதுறை மடத்திற்குப் புறப்பட்டு விட்டார். உ.வே.சாவும் இது வரை இக்கோயிலைப் பார்த்ததில்லை. ஆக நூல் அரங்கேற்றம் நிகழும் போது ஆலயத்தைக் காணும் வாய்ப்பு வருமே என்ற மகிழ்ச்சி உ.வே.சா அவர்களுக்கு உண்டாயிற்று. இதனை இப்படி உ.வே. சா குறிப்பிடுகின்றார்.

“சந்நிதானத்தின் திருவுள்ளப்படி நடப்பதுதான் எனக்கு இன்பம். நீர் திருப்பெருந்துறை பார்த்ததில்லையே?”

“இல்லை; மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற ஸ்தலமென்று ஐயா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; அது நல்ல ஸ்தலந்தான். ஆவுடையார் கோவிலென்று இப்போது எல்லோரும் சொல்லுவார்கள். இறைவன் திருவருளால் புராணம் அரங்கேற்ற நேர்ந்தால் எல்லாவற்றையும் நீர் பார்க்கலாம்.”

திருப்பெருந்துறையைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குத் தோன்றியது; என் ஆசிரியர் அந்த ஸ்தல புராணத்தைப் பாட நான் அதனை எழுத வேண்டுமென்ற ஆசை அதற்குமுன் எழுந்தது.


திருவாவடுதுறை ஆதினத்திற்கு வந்தடைந்த சில நாட்களில் திருப்பெருந்துறைப் புராணம் உருவாக ஆரம்பித்தது. இத்தலத்தின் வெயிலுவந்த விநாயகனை நினைத்து முதல் பாடல் பாடி ஒரு செய்யுளமைக்க,  நூல் வடிவம் பெற ஆரம்பித்தது. பிள்ளையவர்கள் செய்யுளைச் சொல்ல சொல்ல உ.வே.சா அதனை ஓலைச் சுவடியில் எழுதி வரலானார்.

சுப்பிரமணியத் தம்பிரான் கொடுத்திருந்த இரண்டு புராண நூல்களோ ஸ்தல வரலாறுகளை வெளிப்படுத்தும் வகையில் மட்டுமே அமைந்தவையாக இருந்தன. பிள்ளையவர்கள் தான் இயற்ற ஆரம்பித்த நூலின் பொருளை மேலும் விரிவாக்கி நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என இணைத்து அதனை வளம் மிக்க படைப்பாக உருவாக்கி வந்தார்.

திருப்பெருந்துறைப் புராணம் இயற்றிக் கொண்டிருக்கும் போதே பிள்ளையவர்களுக்குக் கடன் சுமை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. நூலை முழுமையாக எழுதி அதனை அரங்கேற்றம் செய்தால் தான் 2000 ரூபாய் கிடைக்க வாய்ப்பு என்னும் நிலை. ஆனால் திருமணத்திற்குக் கடன் கொடுத்தவர்களோ அடிக்கடி வந்து கடனைக் கேட்க ஆரம்பிக்கையிலே பிள்ளையவர்களின் மனம் மிகுந்த சஞ்சலமமும் வருத்தமும் கொண்டது. பொருளாதாரம் திடமாக இருக்க வேண்டியதும் கவனம் வைத்து செலவுகளைச் செய்ய வேண்டியதும் எவ்வளவுக்கெவ்வளவு அவசியமான ஒன்றாகின்றது என்றும் பிள்ளையவர்கள் நினைத்து நினைத்து வாடிய சமயங்கள் இவை. திருமணத்திற்கு வாங்கிய கடன் சுமையால் ஏற்பட்ட துன்பங்களும் மனக் கஷ்டங்களும் இந்தச் சமயத்தில் அவரை வாட்டத்தொடங்கியிருந்தன.

தொடரும்...

சுபா