Monday, December 31, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 38


2012ம் ஆண்டின் இறுதி நாள் இன்று!

இந்த ஆண்டில் நான் மிகவும் ரசித்துப் படித்த ஒரு நூல் என் சரித்திரம். அந்த நூலைப் பற்றி நான் எழுதி வரும் இந்த உலாவில் இந்த ஆண்டின் இறுதி நாளிலும் ஒரு பதிவு அமைய வேண்டும் என்று என் மனதில் நேற்றிலிருந்து சிந்தனை ஓடிக் கொண்டேயிருந்தது. காலையில் தங்கும் விடுதியில் உணவை முடித்து 2 மணி நேரம் பணித்திடலில் நோர்டிக் க்ரூஸ் பயணம் செய்து முடித்து விட்டு அறைக்கு வந்ததுமே நூலை எடுத்துக் கொண்டேன். இதோ சென்ற பதிவின் தொடர்ச்சியாக சில சிந்தனைகள்..!

தளிர் ஆராய்ச்சி செய்து ஆசிரியரின் மனதில் இடம் பிடிக்க உ.வே.சா அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் பலித்தது. நைடதம் முடிந்ததும் புதிய பாடத்தை விரைவில் தொடங்கி விடலாம் என்று பிள்ளையவர்கள் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைச் சொல்லி விட்டார்.

எத்தனை நாட்கள் சவேரிநாதரிடம் மட்டுமே பாடம் கேட்பது என்று தவித்துக் கொண்டிருந்த உ.வே.சா நைடதத்தில் பாடல்களை வேக வேகமாக அவசரப் படுத்தி சாவேரிநாதரிடம் கேட்டுப் படித்து, விரைவில் முடித்துக் கொண்டார். உடனே தாமதிக்காமல் பிள்ளையவர்களிடம் சென்று நைடதம் முடிவடைந்தது என்று கூறி புதிய பாடத்தை ஆசிரியர் ஆரம்பிக்கலாம் என அவருக்குக் குறிப்பால் உணர்த்தி நின்றார். மாணவரின் ஆர்வம் பிள்ளையவர்களின் உள்ளத்தை கவர்ந்திருக்க வேண்டும். மறுநாள் தாமே உ.வே.சாவை அழைத்து அமரச் செய்து தானே இயற்றிய ஒரு பிரபந்த நூலை பாடம் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் பாடம் சொல்ல ஆரம்பித்த அந்த நூல் திருக்குடந்தைத் திரிபந்தாதி என்பது. கும்பகோணத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீகும்பேசுரர் மேல் பாடப்பட்ட திரிபந்தாதி. முதல் நாளே நூலில் இருந்த 40 பாடல்களுக்கு மேல் பாடம் சொன்னார் பிள்ளையவர்கள். எந்தெந்த இடங்களில் விளக்கம் தேவையோ அவைகளில் மட்டும் விளக்கியும், விஷேஷமான சில பகுதிகளை மட்டும் விளக்கியும் இலக்கணக் குறிப்புக்களில் கவனம் வரவேண்டிய இடங்களில் தெளிவு தரும் வகையில் விவரித்தும் பாடத்தை நடத்தினார் பிள்ளையவர்கள்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்பதை வேறு ஆசிரியர்களிடமிருந்து ஒப்பிட்டுப் பார்க்கின்றார் உ.வே.சா. இப்பகுதி என் சரித்திரம் நூலில் 30ம் அத்தியாயத்தில் இடம்பெறுகின்றது.

“அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சிலர் ஒரு செய்யுளுக்கு மிகவும் விரிவாகப் பொருள் சொல்லிக் கேட்போர் உள்ளத்தைக் குளிர்விப்பார்கள். பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறையே வேறு. அவர்களெல்லாம் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்களைப்போல் இருந்தார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும்போது ஒவ்வொரு காசையும் தனித்தனியே எடுத்துத் தட்டிக் காட்டிக் கையிலே கொடுப்பார்கள். பிள்ளையவர்களோ நிதிக்குவியல்களை வாரி வாரி வழங்குபவரைப்போல இருந்தார். அங்கே காசு இல்லை. எல்லாம் தங்க நாணயமே. அதுவும் குவியல் குவியலாக வாரி வாரி விட வேண்டியதுதான். வாரிக்கொள்பவர்களுடைய அதிர்ஷ்டம் போல லாபம் கிடைக்கும். எவ்வளவுக் கெவ்வளவு ஆசை அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாரிச் சேமித்துக்கொள்ளலாம். பஞ்சமென்பது அங்கே இல்லை.


... மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன்; என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு; சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். அமிர்த கவிராயரிடம் திருவரங்கத் தந்தாதியில் ஒரு செய்யுளைக் கேட்பதற்குள் அவர் எவ்வளவோ பாடுபடுத்தி விட்டாரே! அதற்குமேல் சொல்லுவதற்கு மனம் வராமல் அவர் ஓடி விட்டாரே! அந்த அனுபவத்தோடு இங்கே பெற்ற இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். “அடேயப்பா! என்ன வித்தியாசம்! தெரியாமலா அவ்வளவு பேரும் ‘பிள்ளையவர்களிடம் போனால்தான் உன் குறை தீரும்’ என்று சொன்னார்கள்?” என்று எண்ணினேன். “இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை” என்ற முடிவிற்கு வந்தேன்.”

பாடம் சொல்லும் போதே மாணாக்கருக்கு எப்பகுதியில் தெளிவு தேவை என்பதை உணர்ந்து கொண்டு அப்பகுதியை தெளிவாக்கி விளக்குவதில் சிறந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்ற செய்தியை அறிகின்றோம்.  ஒரு ஆசிரியர் எனப்படுபவர் மாணவர்களின் அறிவுத்தாகத்தை தீர்ப்பவராக அமைவது அம்மாணவரின் வாழ்க்கையைத் திறம்பட அமைப்பதில் உதவும்.

தற்காலத்தில் பலர் சான்றிதழும் பட்டங்களும் பெற்று ஆசிரியர் தொழிலுக்கு வந்து விடுகின்றனர்.  ஆனால் அவர்களில் பலர் தாம் ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்குக் கொண்டிருக்கும் காரணங்களை அறியும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நெறிகளோடு எவ்வளவு வேறுபாடாக இருக்கின்றது என்று நினைத்து வியக்கின்றேன். என் அனுபவத்திலேயே பல ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்குக் காரணம் காலை நேரத்து வேலை நேரம் போக மாலை  நேரம் வீட்டு விஷயங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனிக்க சரியாக இருக்குமே என்பதாகவே அமைகின்றது. இதனைக் குறை கூற முடியாது. கால ஓட்டத்தில் சமுதாய சிந்தனைகளும் எதிர்பார்ப்புக்களும் சில தேவைகளை நிர்ணயம் செய்து விடுகின்றன. ஆனால் அவ்வகையான அமைப்புக்குள் இருந்தாலும் தாம் கொண்டிருக்கும் பணியை நேசித்து அதில் ஒன்றி மாணவர்களுக்கு நல்லதொரு வழுகாட்டியாக இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசிரிய ஆசிரியைகளுக்கும் உண்டன்றோ..!


தொடரும்...
சுபா

Saturday, December 22, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 37


வாசித்துக் கொண்டிருந்த சமயங்களில் என் சரித்திரம் நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் என் மனதில் விதம் விதமான எண்ணங்களைத் தோற்றுவிக்கத் தவறியதில்லை. நூலில் உள்ள சில பகுதிகள் ஆழமான சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் கூடியவை; சில வியப்பை ஏற்படித்தக்கூடியவை; சில மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை; சில சிரிக்க வைத்தவை; சில சோகத்தால் என் மனதை வாட்டியவை; சில அன்பின் ஆழத்தை நூலிலே படித்து தெரிந்து கொள்ள உதவியவை. இப்படி பல்வேறுபட்ட உணர்வுகளை வாசிப்போர் உள்ளத்தில் தோற்றுவிக்கக் கூடிய தன்மை வாய்ந்தது என் சரித்திரம் நூல்.

அப்படிப்பட இந்த நூலில் ஒரு அத்தியாயம் நான் வாசித்துக் கொண்டிருக்கும் போதே என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. அந்தப் பதிவினையும் அதற்கான சூழலையும் இந்தப் பதிவில் குறிப்பிடலாம் எனக் கருதுகின்றேன்.

நைடதத்தை மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் பாடங் கேட்க ஆரம்பித்திருந்தார் உ.வே.சா. ஏற்கனவே உ.வே.சா நைடதத்தைக் கற்றிருந்தமையினால் தெரியாத பகுதிகளுக்கு விளக்கம் என வரும் போது அதனை ஆழமாக விவரித்து வந்தார் பிள்ளையவர்கள். பின்னர் அப்பாடத்தை சவேரிநாதப் பிள்ளை தொடரும் படி ஏற்பாடு செய்தார் பிள்ளையவர்கள். பிள்ளையவர்களிடம் கற்று அதில் இன்புற வேண்டும் என்ற கனவுடன் இருந்து உ.வே.சாவுக்கு இதில் கவலையுண்டாயிற்று. சவேரிநாதப்பிள்ளை நன்கு போதித்தாலும் பல இடங்களில் தனக்குத் தெரிந்த விஷயங்களில் கூட சவேரிநாதப்பிள்ளைக்குத் தெளிவில்லாமை இருப்பதைக் கண்டு உ.வே.சா சற்று கலக்கம் கொண்டார். அதனால் ஆசிரியருக்கு இதனை குறிப்பால் உணர்த்தும் வகையில் ஏதேனும் செய்ய திட்டமிட்டார்.

முதலாவதாக ஆசிரியர் பாடம் நடந்து கொண்டிருக்கும் வழியே வரும் போது சவேரிநாதப் பிள்ளையை உ.வே.சா குறுக்குக் கேள்விகள் கேட்டு தனக்கு அவரை விட மேலும் தெரியும் என்பதை ஆசிரியருக்கு உணர்த்திப் பார்த்தார்.இதனால் சவேரிநாதப் பிள்ளை உ.வே.சா மேல் கோபமோ வருத்தமோ கொள்ளவே இல்லை. பிள்ளையவர்களோ இருவருக்குமாக அப்பகுதியை மீண்டும் விளக்கி விட்டுச் சென்று விடுவார். ஆனாலும் இந்த யுக்தி முழுதாகப் பலிக்கவில்லை.  இனி என்ன செய்யலாம் என யோசித்தார் உ.வே.சா. அவருக்கு இன்னொரு யோசனை தோன்றியது.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாவரங்கள், மரம், செடிகள் பால் அலாதிப் பிரியம் கொண்டவர். அவர் தானே வாங்கி குடி பெயர்ந்த அந்த மயூரம் வீட்டில் பெரிய தோட்டத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்ததோடு அத்தோட்டத்தில் தினம் சில மணி நேரங்களைச் செலவிடுவதில் கழித்து வந்தார். பிள்ளையவர்களுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் தோட்டத்தைச் சென்று பார்த்து ஒவ்வொரு செடியையும் தானே கவனித்து அதில் ஏதேனும் பட்டுப் போய் உள்ளதா, புதிய இலைகள் தளிர்கள் தோன்றியுள்ளனவா, மலர்கள் பூத்துள்ளனவா என்று கண்காணிப்பது வழக்கம். அப்படி ஏதாகினும் செடிகள் பட்டுப் போயிருந்தால் பிள்ளையவர்கள் மனம் வாடி விடுவார். அதே சமயம் ஏதேனும் புதிய செடிகள் முளைத்திருந்தாலோ செடிகளில் புதுத் தளிர்கள் தோன்றியிருந்தாலோ அவருக்கு அளவில்லா ஆனந்தம் உண்டாகும் . மாலை வேளிகளில் தானே செடிகளுக்கு நீர் விடுவது போன்ற பணிகளையும் பிள்ளையவர்களே செய்து வந்தார். இதனை உ.வே.சா நன்கு கவனித்தார்.

இந்தச் செடிகளை வைத்தே ஆசிரியரின் மனதைக் கவர முயற்சிக்கலாமே என்று சிந்தித்து அதனைச் செயல்படுத்தி வெற்றியும் கண்டார் உ.வே.சா. என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 30ல் தளிர் ஆராய்ச்சி என்ற தலைப்பில் வருகின்ற செய்திகள் சுவையானவை. நீண்ட பகுதியாக இருந்தாலும் அதனை நான் ரசித்த வகையிலேயே இப்பதிவை வாசிக்கும் நீங்களும் உணர்வதற்காக அப்படியே அப்பகுதிகளை இங்கே வழங்குகின்றேன்.

"
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் என் ஆசிரியர் தோட்டத்துக்குப் போய்ச் செடிகளைப் பார்வையிடுவார். அவைகளில் ஏதாவது பட்டுப்போய் விட்டதோ என்று பார்ப்பார்; எந்தச் செடியாவது தளிர்த்திருக்கிறதாவென்று மிக்க கவனத்தோடு நோக்குவார். ஏதாவது தளிர்க்காமல் பட்டுப்போய் விட்டதாகத் தெரிந்தால் அவர் மனம் பெரிய தனத்தை இழந்ததுபோல வருத்தமடையும். ஒரு தளிரை எதிலாவது கண்டு விட்டால் அவருக்கு உண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே இராது. வேலைக்காரர்களிடம் அடிக்கடி அவற்றை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி சொல்லுவார். மாலை வேளைகளில் தம்முடைய கையாலேயே சில செடிகளுக்கு ஜலம் விடுவார்.

அவர் இவ்வாறு காலையும் மாலையும் தவறாமல் செய்து வருவதை நான் கவனித்தேன். அவருக்கு அந்தச் செடிகளிடம் இருந்த அன்பையும் உணர்ந்தேன். “இவருடைய அன்பைப் பெறுவதற்கு இச்செடிகளைத் துணையாகக் கொள்வோம்” என்று எண்ணினேன்.

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன்; பல்லைக்கூடத் தேய்க்க வில்லை. நேரே தோட்டத்திற்குச் சென்றேன். அங்குள்ள செடிகளில் ஒவ்வொன்றையும் கவனித்தேன். சில செடிகளில் புதிய தளிர்கள் உண்டாகியிருந்தன. அவற்றை நன்றாகக் கவனித்து வைத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் ஆசிரியர் அங்கே வந்தனர். அவர் ஒரு மரத்தின் அருகே சென்று மிக்க ஆவலோடு தளிர்கள் எங்கெங்கே உள்ளனவென்று ஆராயத் தொடங்கினார். நான் மெல்ல அருகில் சென்றேன். முன்பே அத்தளிர்களைக் கவனித்து வைத்தவனாதலின், “இக்கிளையில் இதோ தளிர் இருக்கிறது” என்றேன்.

அவர் நான் அங்கே எதற்காக வந்தேனென்று யோசிக்கவுமில்லை; என்னைக் கேட்கவுமில்லை. “எங்கே?” என்று ஆவலுடன் நான் காட்டின இடத்தைக் கவனித்தார். அங்கே தளிர் இருந்தது கண்டு சந்தோஷமடைந்தார். பக்கத்தில் ஒரு செடி பட்டுப் போய் விட்டது என்று அவர் எண்ணியிருந்தார். அச்செடியில் ஓரிடத்தில் ஒரு தளிர் மெல்லத் தன் சிறுதலையை நீட்டியிருந்தது. “இதைப் பார்த்தால் பிள்ளையவர்கள் மிக்க சந்தோஷமடைவார்கள்” என்று நான் எண்ணினேன். ஆதலின், “இதோ, இச்செடி கூடத் தளிர்த்திருக்கிறது” என்று நான் சொன்னதுதான் தாமதம்; “என்ன அதுவா? அது பட்டுப்போய் விட்டதென்றல்லவா எண்ணினேன்! தளிர்த்திருக்கிறதா? எங்கே, பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே விரைவாக அதனருகில் வந்தார். அவர் பார்வையில் தளிர் காணப்படவில்லை. நான் அதைக் காட்டினேன். அந்த மரத்தில் தளிர்த்திருந்த அந்த ஒரு சிறிய தளிர் அவர் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது; அம்மலர்ச்சியைக்கண்டு என் உள்ளம் பூரித்தது. “நம்முடைய முயற்சி பலிக்கும் சமயம் விரைவில் நேரும்” என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. அத்தளிர்களை வாழ்த்தினேன்.

நான் அதோடு விடவில்லை. பின்னும் நான் ஆராய்ந்து கவனித்து வைத்திருந்த வேறு தளிர்களையும் ஆசிரியருக்குக் காட்டினேன். காட்டக் காட்ட அவர் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தார்.

அது முதல் தினந்தோறும் காலையில் தளிர் ஆராய்ச்சியை நான் நடத்திக்கொண்டே வந்தேன். சில நாட்களில் மாலையிலே பார்த்து வைத்துக் கொள்வேன். பிள்ளையவர்களும் அவற்றைக் கண்டு திருப்தியடைந்து வந்தனர்.

ஒரு நாள் அவர் எல்லாச் செடிகளையும் பார்த்து விட்டுத் திரும்பியபோது என்னை நோக்கி, “இந்தச் செடிகளைப் பார்த்து வைக்கும்படி
யாராவது உம்மிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்.

“ஒருவரும் சொல்லவில்லை. நானாகவே கவனித்து வைத்தேன்” என்றேன் நான்.

“எதற்காக இப்படி கவனித்து வருகிறீர்?”

“ ஐயா அவர்கள் தினந்தோறும் கவனித்து வருவது தெரிந்தது; நான் முன்னதாகவே கவனித்துச் சொன்னால் ஐயா அவர்களுக்குச்

-       பிள்ளையவர்களை ஐயா அவர்களென்றே வழங்குவது வழக்கம் நேரில் பேசும்போது அப்படியே கூறுவோம்.

சிரமம் குறையுமென்று எண்ணி இப்படிச் செய்து வருகிறேன்” என்றேன்.  சாதாரண நிலையிலிருந்தால் இவ்வளவு தைரியமாகப் பேசியிருக்க மாட்டேன். சில நாட்களாகத் தளிரை வியாஜமாகக் கொண்டு அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தமையால் தைரியம் எனக்கு உண்டாயிற்று. நாளடைவில் அவரது அன்பைப் பூரணமாகப் பெறலாமென்ற துணிவும் ஏற்பட்டது. “நல்லதுதான். இப்படியே தினந்தோறும் பார்த்து வந்தால் அனுகூலமாக இருக்கும்” என்று என் ஆசிரியர் கூறினார். நானாகத் தொடங்கிய முயற்சிக்கு அவருடைய அனுமதியும் கிடைத்துவிட்ட தென்றால் என் ஊக்கத்தைக் கேட்கவா வேண்டும்?

தினந்தோறும் காலையில் பிள்ளையவர்களை இவ்வாறு சந்திக்கும் போது அவரோடு பேசுவது எனக்கு முதல் லாபமாக இருந்தது. அவர் வர வர என் விஷயத்தில் ஆதரவு காட்டலானார். என் படிப்பு விஷயமாகவும் பேசுவது உண்டு. “இப்போது பாடம் நடக்கிறதா? எது வரையில் நடந்திருக்கிறது? நேற்று எவ்வளவு செய்யுட்கள் நடை பெற்றன?” என்ற கேள்விகளைக் கேட்பார். நான் விடை கூறுவேன்.


எங்களுடைய சம்பாஷணை வர வர எங்களிருவருக்கும் இடையே அன்பை வளர்த்து வந்தது.
"

தொடரும்...

சுபா

Sunday, December 16, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 36



சங்கீத நாட்டமும் அதனையே தொழிலாகவும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த உ.வே.சாவுக்கு சங்கீதத்தில் தேவையான அளவு முறையான பயிற்சி இருந்தமை குறித்து இத்தொடரின் என்னுடைய முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். சங்கீதத்தை விட தமிழ்க்கல்வியே அவர் மனதை முழுதுமாக ஆக்ரமித்தது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  தமிழ்க் கல்வி மேல் தீவிரப் பற்று இருந்தாலும் கற்ற இசை மனதை விட்டு அகலுமா?

பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்த ஓருரிரு நாட்களிலேயே உ.வே.சாவுக்கு நந்தனார் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. முதல் சந்திப்பில் அவருக்குக் கோபால கிருஷ்ண பாரதியின் மேல் இல்லாமலிருந்த மதிப்பு நாளடைவில் மாற்றம்  காண்பதையும்  என் சரித்திரம் நூலில் 29ம் அத்தியாயத்தில் காண்கின்றோம்.  கோபால கிருஷ்ண பாரதியை முதன் முதலில் சந்திக்கும் நிகழ்வை உ.வே.சா  இப்படிப் பதிகின்றார்.

" அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில் கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். ...
...“என்ன செய்து கொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து வருகிறானா?”

“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று வந்திருக்கிறேன்.”

“அப்படியா? சந்தோஷம். மீனாட்சி சுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான். நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”

இந்த விஷயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன். “நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன். அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால் உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என் தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக இருந்தேன்."

கனம் கிருஷ்னையர் பால் அதீத மதிப்பும் அன்பும் கொண்டவர் கோபாலகிருஷ்ண பாரதி. வேங்கட சுப்பையர் அவரது மாணாவராக இருந்தமையினால் கோபாலகிருஷ்ண பாரதிக்கு இவர்கள் குடும்பத்தார் மீதும் அன்பு நிறைந்திருந்தது. ஒருவாராகப் பேசி உ.வே.சா அவர்கள் கோபாலகிருஷ்ண பாரதியிடம் தினமும் சங்கீதப் பயிற்சியையும் மேற்கொள்வதென்பது முடிவாக, தினம் தினம் விடியற்காலையிலும் மாலையிலும் சங்கீத அப்பியாசம் செய்து வரலானார் உ.வே.சா. இந்த ஏற்பாடு பற்றி உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குத் தெரிவிக்க வில்லை. தாம் தமிழ் படிக்க வந்து முற்றும் முழுதும் அதிலேயே கவனம் வைக்காமல் இசையையும் படித்து வருகின்றோம் என்று தெரிந்தால் ஆசிரியர் தம் மேல் கோபம் கொள்வாரோ என்ற அச்சம்  தான் அதற்குக் காரணம். அதோடு கோபால கிருஷ்ண பாரதியார் வேறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சங்கீத விரோதி என்று  கூறி இருந்தமையால் கூடுதல் அச்சம். அதனால் இந்த விஷயத்தை உ.வே.சா மனதிற்குள் மறைத்தே வைத்திருந்தார்,  தானாக இந்த விஷயம் ஒரு முறை வெளிவரும் வரையில்.

உ.வே.சா  தருகின்ற குறிப்புக்களிலிருந்து கோபாலகிருஷ்ண பாரதியைப் பற்றியும் ஓரளவு நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

கோபாலகிருஷ்ண பாரதி வேடிக்கையாகப் பேசி ரசிக்கும் வகையில் கதைகள் சொல்வாராம். ஏதாகினும் ஒரு சொல்லைக் குறிப்பிட்டால் போதும். உடனே அதற்கு ஒரு புராணக் கதையைக் கூறுவாராம். பேச்சினூடேயே அடிக்கடி பழமொழிகளைச் சொல்வாராம். அவரது சாரீரம் கம்மலாக இருந்தமையால் சில வருஷங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று  தான் தனிமையில் இருக்கும் வேளைகளில் அதை வாசித்து பொழுது போக்குவாராம். தினமும் காலையிலும் மாலையிலும் மாயூரநாதர்கோயிலிலுள்ள அகஸ்தீசுவர ஸ்வாமி சந்நிதியில் நீண்ட நேரம் யோகம் செய்து கொண்டிருப்பாராம். பாரதியாருடன் பழகப் பழக அவர் ஒரு மகான் என்பதை தான் உணர்ந்தமையை உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

அவரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர் பல புதிய கீர்த்தனைகளை உ.வே.சா கற்றுக் கொண்டிருக்கின்றார். நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளுக்கான மெட்டையும் ராகத்தையும் தாளத்தையும் அவரே சொல்லிக் கற்றுத்தந்திருக்கின்றார்.

நந்தனார் சரித்திரம் நூலை தமிழ் இணையப் பல்கலைக்கழக இணைய நூலகத்தில் இங்கே வாசிக்கலாம். http://www.tamilvu.org/library/l5J50/html/l5J50001.htm


தொடரும்...
அன்புடன்
சுபா

Saturday, December 15, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 35



தான் இதுவரை யாரிடம் மாணக்கராகச் சேர வேண்டும் என்று கனவு கொண்டிருந்தோமோ அவரிடமே மாணாக்கராகச் சேர்ந்தாயிற்று..  இனி.. அடுத்து தொடர்ந்து பல நூற்களைக் கற்று தேர்ச்சி பெறுவதே நோக்கம் என்று பாடங் கேட்டலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் உ.வே.சா. முதல் பாடமாக நைடதத்தை தொடங்கி வைத்தார் பிள்ளையவர்கள். ஏற்கனவே நைடதத்தை உ.வே.சா வேறு ஆசிரியரிடம் படித்திருந்தாலும் இப்புலவர் பெருமானின் விளக்கத்தோடு கேட்கும் போது அதில் பல பொருள் புரியாத சொற்களுக்கு விளக்கமும் தெளிவும் பெற்றுக் கொண்டதாகவும் அவருடைய போதனை தனக்கு இன்பத்தை உண்டாக்கியது என்றும் குறிப்பிடுகின்றார் உ.வெ.சா.

சில நூல்களை நாம் ஒரு முறை படிப்பது என்பது அன்னூல் பற்றிய முழுமையான தெளிவினை நமக்கு வழங்காது. நமது மனதின் நிலைக்கும் கிரஹிக்கும் தன்மைக்கும் ஏற்ப படிக்கின்ற நூலை புரிந்து கொள்கின்றோம். ஒருமுறைக்கு மறுமுறை படிக்கும் போது நூலில் நமக்குக் கிடைக்கின்ற தெளிவு முன்னதைக் காட்டிலும் வேறுபட்டிருப்பதையும் அன்னூல் பற்றிய மேலும் ஆழமான புரிதல் கிடைப்பதற்கு உதவும் என்பது நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும் அனுபவ உண்மை. அதோடு நாம் ஒருமுறைக்கு இரு முறையாக ஒரு நூலை வாசிக்கும் போது கிடைக்கின்ற புரிதலைக் காட்டிலும் அதனை புரிந்து கொண்ட ஒருவர் தெளிவுற விளக்கினால் அது மேலும் ஆழமாக நூலின் கருத்தை புரிந்து கொள்ள உதவும். ஒரு ஆசிரியரின் பணி அது தானே!

மகன் விரும்பிய ஆசிரியரிடமே கொண்டு வந்து சேர்த்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் ஊருக்குப் புறப்பட சித்தமானார் வேங்கட சுப்பையர். உ.வே.சா என் சரித்திரம் நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடம் கேட்க ஆரம்பித்து விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கஷ்டம் தீர்ந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாஸ்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே? "

கலியின் தொல்லைகள் நீங்க நைடதத்தை வாசிப்பார்கள் என்பது புதிய செய்தியாக எனக்குத் தோன்றியது. எத்தனையோ விஷ்யங்களில் நம்பிக்கை வைத்துத்தான் மனிதர்கள் உழன்று கொண்டிருக்கின்றோம். ஒரு சில விஷயங்களில் நமக்கு ஏற்படும் நம்பிக்கைகள் தான் நமது வாழ்க்கையை நாம் தொடர்ந்து நடத்திச் செல்ல உதவுவதாக அமைகின்றது. நம்பிக்கை இழக்கும் போது மனம் நிலையில்லா தனமையை அடைந்து தன் நிலையிலேயே சோர்வு அடைகின்றது. மனிதர்கள் நாம்  நம்பிக்கையை நிலை நாட்டிக் கொள்வதற்காக பூஜைகள், சடங்குகள், உறவுகள், பொருளாதார ஏற்பாடுகள், என்பனவற்றை தொடர்ந்து பற்றிக் கொண்டு வாழ்வது இயல்பாகி விட்டது.

இளம் தலைமுறையினர் மாணவர் பருவத்தில் கல்வி மேல் சலனமில்லாத ஆர்வம் கொள்வது மிக மிக அவசியம். சிலருக்கு தானாகவே அவ்வகை ஆர்வம் இயல்பாக வந்து விடுகின்றது. சிலருக்குச் சிலரது தூண்டுதலால் அவ்வகை ஆர்வம் ஏற்படுகின்றது. புத்தகங்கள் வாசிப்பதை பரீட்சைக்காகக் கடமைக்குச் செய்வதாக நினைக்கும் மாணவர்களுக்கு நூல்கள் நிச்சயமாகச் சுமையாகித் தான் போகும். மாறாக நூலை வாசிப்பதில் இன்பம் காணும் மாணாக்கர்கள் அதில் ஒவ்வொரு முறை வாசித்தலிலும் தெளிவு பெறும் போதும் ஆழ்ந்த இன்பத்தை அனுபவிக்க முடியும். இந்த நிலையை இயல்பாகப் பெறாத இளம் தலைமுறையினருக்குக் கல்வி மேல், நூல்கள் மேல் விருப்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டிய கடமை பெற்றோரையும் ஆசிரியரையும் சேர்ந்ததாகின்றது.


தொடரும்...

அன்புடன்
சுபா

Saturday, December 8, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 34


ஒரு நல்லாசிரியர் என்பவர் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல நினைக்கையிலே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஒரு அளவு கோலாக எடுத்துக் கொள்ளலாம். மாணவர் நலன் மாணவர் கல்வி உயர்வு, மாணவர் அடிப்படை தேவைகள், மாணவர்களுக்கும் பெருமை மாணவர்களுக்கு எதிர்காலத் தொழில் அமைத்தலில் உதவி என மாணவர் நலன் மட்டுமே மனதில் கருத்தாகக் கொண்டு விளங்கிய ஒரு மாமனிதர். அவர் எழுதிக் குவித்த செய்யுட்களையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து அவற்றை பாதுகாக்க வேண்டுயது நமது பணி என்று என் மணம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது.

மாணவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியானால் தான் அவர்களுக்குக் கல்வி மேல் உள்ள ஆர்வமும் கற்கின்ற கல்வியில் தெளிவும் நிலைக்கும் என்பது அவர் எண்ணம். ஆகையால் தம்மிடம் படிக்கின்ற மாணவர்களின்  உணவு, திருமணம் அவர்களுக்குத் தக்க தொழில் அமைத்துக் கொடுத்தல் என எல்லா விஷயங்களிலும் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து வழிகாட்டியாக இருந்து அவர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

தனது ஒவ்வொரு நூல் அறங்கேற்றத்தின் போதும் கிடைக்கின்ற வருமானத்தை உடனே தனது மாணவர்களின் திருமணம், அவர்களுக்குக் குடித்தனம் செய்வதற்கான செலவுகளைப் பராமரிக்க, அவர்களுக்குத் தயங்காமல் உணவு கிடைக்க ஏற்பாடு என செய்து பார்த்துக் கொண்டவர்.  திருமணமான தனது மாணவர்கள் குடும்பத்தைப் பிரிந்து அந்தப் பிரிவின் சோகத்தில் வாடிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டாறேயானால் உடனே அந்த மாணவருக்கும் கூடத் தெரிவிக்காமல் அவர்தம் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு வரச் செய்து குடும்பத்தோருட்ன் வாழ்ந்து கல்வி கற்று வருமாறு ஏற்பாடுகளைச் செய்து தரும் பரந்த மனதைக் கொண்டவராகத் திகழ்ந்திருக்கின்றார். தனது இறக்கும் தருவாயிலும் கூட தனது அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்த சவேரிநாதப் பிள்ளைக்குச் சில கடிதங்களைக் கொடுத்து தாம்  இறந்த பின்னர் இவர்களைச் சென்று பார்த்து அதில் குறிப்பிட்டிருக்கும் படி அவர்களிடமிருந்து பொருளுதவி பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழும் படி செய்வித்து மறைந்தவர்.  தனக்கு கணிசமான அளவு தொகை கடன் இருக்கும் அந்த நிலையிலும் கூட அவர் மனம் தனக்குப் பிறகு தனது மாணவர்களை யாரேனும் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருந்தது என்பதை இவ்வகை விளக்கங்களை என் சரித்திரம் நூலிலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாகம் 1, 2 நூல்களில் படிக்கும் போதும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இப்படிப்பட்ட ஒரு கல்விமானிடம் தான் உ.வே.சா கல்வி பயில தன் இளம் வயதில் வந்து சேர்கின்றார்.

பிள்ளையவர்களின் மாயூர இல்லத்தில் தந்தையும் மகனுமாக வந்து நின்று பிள்ளையவர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்ட பிறகு நடக்கும் நிகழ்வுகளை என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 28ல் காண்கின்றோம். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“ “என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம் ஆரம்பித்து விடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார். அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்து விட்டதென்றே தோன்றியது.

“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கி விட்டோமே” என்று நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன். என் தந்தையார், “நாளைக்கு நல்ல தினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.

“மெத்த ஸந்தோஷம். அப்படியே செய்யலாம்” என்று தம் உடன்பாட்டை அவர் தெரிவித்தார். “

உடனே பாடம் ஆரம்பித்தாலும் அந்தக் கவிஞரின் மாணவராக அமர்ந்து பாடங்கேட்க சித்தமாக இருந்த உ.வே.சாவைக் இங்கு காண்கின்றோம். கல்வி மேல் அவருக்கிருந்த அளவில்லா இன்பமும் ஆர்வம் தான் நம்மை வியக்க வைக்கின்றது.


தொடரும்...


அன்புடன்
சுபா

Saturday, December 1, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 33


திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவான் என்ற சிறப்புப் பட்டம் பெற்று ஆதீனத்தின் வித்துவானாக பதவி வகித்த கால கட்டத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பல நூற்களை எழுதியிருக்கின்றார்கள். அக்கால கட்டத்திலே தமிழகத்தின் பல இடங்களிலிருந்து அவரிடம் வந்து கல்வி கற்ற மாணாக்கர்கள் பலர் இருந்தனர். சிலர் அவருடன் நெடுங்காலம் தொடர்பில் இருந்தனர். பலர் ஓரளவு கற்றதும் தாங்களும் சுயமாக வித்துவானாக ஆகி தமிழ் ஆசானாக அவரவர் ஊர்களில் இருந்து வந்தனர். சிலர்  தனியாக தாங்கள் ஆசிரியர் பணி தொடங்க உள்ள விருப்பத்தைத் தெரிவித்தோ, குடும்ப சூழலை விவரித்தோ, பொருளாதார சிக்கலின் நிலையினாலே அவரிடம்சொல்லிக் கொண்டு போவதும் உண்டு. சிலர் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விடுவதும் உண்டு. சொல்லிக் கொள்ளாமல் போய்விடும் மாணவர்களை நினைத்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையர்கள் வருந்திய செய்தியை இந்த நூலில் ஆங்காங்கே காண்கின்றோம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் நெடுங்காலம் இணைந்திருந்தவர்கள் பட்டியலில் சவேரிநாத பிள்ளையவர்களும் இணைந்து கொள்கின்றார். இவர் மதத்தால் ஒரு கிறிஸ்தவர். வேதநாயகம் பிள்ளை அவர்களால் அனுப்பப்பட்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்க வந்தவர்.  மிக நல்ல கல்வி ஞானமும் பிள்ளையவர்களின் பால் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர் இவர். உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வரும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வீட்டில் இவரை சந்திக்கும் விஷயத்தை என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார்.

சவேரிநாத பிள்ளை கல்வி ஞானத்துடன் ப்ரசங்கம் செய்வதிலும் தேர்ந்தவர். அவருக்கு இருந்த இனிய சாரீரமும் அவரது பிரசங்கங்கள் கேட்போரை அவர் வசம் ஈர்க்கும் தன்மையை வழங்கியது. பிள்ளையவர்கள் மேல் கொண்ட அளவில்லாத அன்பினால் மற்ற எல்லா மாணவர்களைக் காட்டிலும் பிள்ளையவர்களுக்கு வேண்டிய அனைத்து தொண்டுகளையும் அதிகமாகச் செய்து வந்தார் என்று உ.வே.சா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு பகுதி 1  நூலில் குறிப்பிடுகின்றார். சவேரிநாத பிள்ளை மீனாட்சி  சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவராக வந்து சேர்ந்ததன் பின்னர் அவரை ஒரு நாளும் பிரிந்து சென்றதில்லையாம். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். " இக் கவிஞர் பிரானுடைய இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையாக அவரைப் போல் வேறு எவரும் இருக்கவில்லை. "

ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் திருவாவடுதுறை ஆதீனமாக பொறுப்பேற்ற பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆதீனத்தில்  படித்து வந்த ஸ்ரீ நமச்சிவாயத் தம்பிரான் அவர்களுக்கு ஆதீனத்தின் சின்னப்பட்டமாக அபிஷேகம் செய்வித்து நமச்சிவாய தேசிகர் என்னும் சிறப்பு பெயரை ஆதீனகர்த்தர் அமைத்துக் கொடுத்தார்.  இந்தச் சின்னப்பட்டமானவர் கல்லிடைக் குறிச்சி நகரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கல்லிடை குறிச்சி சென்று பங்கேற்று  வந்தார்.

அதற்குப் பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் புதிதாக மாயூரத்தில் வாங்கி செப்பஞ் செய்திருந்த வீட்டிலேயே தங்கி  வசிக்க ஆசை கொண்டார். இந்த வீட்டில் அவருடன் மாணவர்கள் பலரும் தங்கியிருந்தனர். அவரது குடும்பத்தினர் திரிசிரபுரம் வீட்டிலேயே தங்கியிருந்தனர். இந்த மாயூர வீடு ஒரு கல்விக் கோயிலாக திகழ்ந்தது என்றே தெரிகின்றது. இந்த மாயூர வீட்டில் தங்கியிருக்க விருப்பம் கொண்டதை  சுப்பிரமணிய தேசிகரிடம் கூறி அனுமதி பெற்று தனது மாணவர் குழுவுடன் தனது மாயூரம் வீட்டிற்கு மாற்றலானார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு பாகம் 1 நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. .... இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலையமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையிலும் இவருடைய வேலையாக இருந்தன. எதை மறந்தாலும் தமிழை மறவாத பெருங்கவிஞராகிய இவர் இங்ஙணம் தமிழறிவை வரையாமல் வழங்கி வரும் வண்மையைப் புகழாதவர் அக்காலத்து ஒருவரும் இல்லை. தமிழை நினைக்கும் பொழுதெல்லாம் இக் கவிஞர் கோமானையும் உடனினைத்துப் புகழ்தலைத் தமிழ் நாட்டினர் மேற்கொண்டனர். அவர்களுள்ளும் சோழனாட்டார் தங்கள் சோறுடைய சோணாடு தமிழளிக்கும் சோணாடாகவும் இப் புலவர் பிரானால் ஆனமையை எண்ணி எண்ணி மகிழ்ந்து வந்தனர். அச்சோழ நாட்டுள்ளும் மாயூரத்தைச் சார்ந்த பிரதேசத்திலுள்ளவர்கள் தமிழ்த்தெய்வமே ஓர் அவதாரம் ஆகித் தங்களை உய்விக்க வந்திருப்பதாக எண்னிப் போற்றி வரலாயினர். தமிழ்ப் பயிற்சி இல்லாதவர்கள் கூட இப்புலவர் சிகாமணியைப் பார்த்தல் ஒன்றே பெரும்பயனென்று எண்ணி வந்து வந்து இவரைக் கண்டு களித்துச் செல்வார்கள். "

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழைப் போற்றி செய்யுட்கள் இயற்றி மாணவர்களைப் படிப்பித்து வந்த அச்செயலைத் தமிழ்த்தெய்வ வழிபாடு என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார். இந்தக் கலைமகள் நிலையத்தில் தான் தனக்கு ஆசானாக நினைத்து நினைத்து ஏங்கி உருகி எதிர்பார்த்து தன்னையும் இப்புலவர் பெருமானாரின் மாணக்கர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்தி ஏக்கத்துடன் நிற்கின்றார் உ.வே.சா.

தொடரும்.


அன்புடன்
சுபா