Monday, December 31, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 38


2012ம் ஆண்டின் இறுதி நாள் இன்று!

இந்த ஆண்டில் நான் மிகவும் ரசித்துப் படித்த ஒரு நூல் என் சரித்திரம். அந்த நூலைப் பற்றி நான் எழுதி வரும் இந்த உலாவில் இந்த ஆண்டின் இறுதி நாளிலும் ஒரு பதிவு அமைய வேண்டும் என்று என் மனதில் நேற்றிலிருந்து சிந்தனை ஓடிக் கொண்டேயிருந்தது. காலையில் தங்கும் விடுதியில் உணவை முடித்து 2 மணி நேரம் பணித்திடலில் நோர்டிக் க்ரூஸ் பயணம் செய்து முடித்து விட்டு அறைக்கு வந்ததுமே நூலை எடுத்துக் கொண்டேன். இதோ சென்ற பதிவின் தொடர்ச்சியாக சில சிந்தனைகள்..!

தளிர் ஆராய்ச்சி செய்து ஆசிரியரின் மனதில் இடம் பிடிக்க உ.வே.சா அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் பலித்தது. நைடதம் முடிந்ததும் புதிய பாடத்தை விரைவில் தொடங்கி விடலாம் என்று பிள்ளையவர்கள் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைச் சொல்லி விட்டார்.

எத்தனை நாட்கள் சவேரிநாதரிடம் மட்டுமே பாடம் கேட்பது என்று தவித்துக் கொண்டிருந்த உ.வே.சா நைடதத்தில் பாடல்களை வேக வேகமாக அவசரப் படுத்தி சாவேரிநாதரிடம் கேட்டுப் படித்து, விரைவில் முடித்துக் கொண்டார். உடனே தாமதிக்காமல் பிள்ளையவர்களிடம் சென்று நைடதம் முடிவடைந்தது என்று கூறி புதிய பாடத்தை ஆசிரியர் ஆரம்பிக்கலாம் என அவருக்குக் குறிப்பால் உணர்த்தி நின்றார். மாணவரின் ஆர்வம் பிள்ளையவர்களின் உள்ளத்தை கவர்ந்திருக்க வேண்டும். மறுநாள் தாமே உ.வே.சாவை அழைத்து அமரச் செய்து தானே இயற்றிய ஒரு பிரபந்த நூலை பாடம் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் பாடம் சொல்ல ஆரம்பித்த அந்த நூல் திருக்குடந்தைத் திரிபந்தாதி என்பது. கும்பகோணத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீகும்பேசுரர் மேல் பாடப்பட்ட திரிபந்தாதி. முதல் நாளே நூலில் இருந்த 40 பாடல்களுக்கு மேல் பாடம் சொன்னார் பிள்ளையவர்கள். எந்தெந்த இடங்களில் விளக்கம் தேவையோ அவைகளில் மட்டும் விளக்கியும், விஷேஷமான சில பகுதிகளை மட்டும் விளக்கியும் இலக்கணக் குறிப்புக்களில் கவனம் வரவேண்டிய இடங்களில் தெளிவு தரும் வகையில் விவரித்தும் பாடத்தை நடத்தினார் பிள்ளையவர்கள்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்பதை வேறு ஆசிரியர்களிடமிருந்து ஒப்பிட்டுப் பார்க்கின்றார் உ.வே.சா. இப்பகுதி என் சரித்திரம் நூலில் 30ம் அத்தியாயத்தில் இடம்பெறுகின்றது.

“அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சிலர் ஒரு செய்யுளுக்கு மிகவும் விரிவாகப் பொருள் சொல்லிக் கேட்போர் உள்ளத்தைக் குளிர்விப்பார்கள். பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறையே வேறு. அவர்களெல்லாம் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்களைப்போல் இருந்தார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும்போது ஒவ்வொரு காசையும் தனித்தனியே எடுத்துத் தட்டிக் காட்டிக் கையிலே கொடுப்பார்கள். பிள்ளையவர்களோ நிதிக்குவியல்களை வாரி வாரி வழங்குபவரைப்போல இருந்தார். அங்கே காசு இல்லை. எல்லாம் தங்க நாணயமே. அதுவும் குவியல் குவியலாக வாரி வாரி விட வேண்டியதுதான். வாரிக்கொள்பவர்களுடைய அதிர்ஷ்டம் போல லாபம் கிடைக்கும். எவ்வளவுக் கெவ்வளவு ஆசை அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாரிச் சேமித்துக்கொள்ளலாம். பஞ்சமென்பது அங்கே இல்லை.


... மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன்; என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு; சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். அமிர்த கவிராயரிடம் திருவரங்கத் தந்தாதியில் ஒரு செய்யுளைக் கேட்பதற்குள் அவர் எவ்வளவோ பாடுபடுத்தி விட்டாரே! அதற்குமேல் சொல்லுவதற்கு மனம் வராமல் அவர் ஓடி விட்டாரே! அந்த அனுபவத்தோடு இங்கே பெற்ற இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். “அடேயப்பா! என்ன வித்தியாசம்! தெரியாமலா அவ்வளவு பேரும் ‘பிள்ளையவர்களிடம் போனால்தான் உன் குறை தீரும்’ என்று சொன்னார்கள்?” என்று எண்ணினேன். “இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை” என்ற முடிவிற்கு வந்தேன்.”

பாடம் சொல்லும் போதே மாணாக்கருக்கு எப்பகுதியில் தெளிவு தேவை என்பதை உணர்ந்து கொண்டு அப்பகுதியை தெளிவாக்கி விளக்குவதில் சிறந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்ற செய்தியை அறிகின்றோம்.  ஒரு ஆசிரியர் எனப்படுபவர் மாணவர்களின் அறிவுத்தாகத்தை தீர்ப்பவராக அமைவது அம்மாணவரின் வாழ்க்கையைத் திறம்பட அமைப்பதில் உதவும்.

தற்காலத்தில் பலர் சான்றிதழும் பட்டங்களும் பெற்று ஆசிரியர் தொழிலுக்கு வந்து விடுகின்றனர்.  ஆனால் அவர்களில் பலர் தாம் ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்குக் கொண்டிருக்கும் காரணங்களை அறியும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நெறிகளோடு எவ்வளவு வேறுபாடாக இருக்கின்றது என்று நினைத்து வியக்கின்றேன். என் அனுபவத்திலேயே பல ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்குக் காரணம் காலை நேரத்து வேலை நேரம் போக மாலை  நேரம் வீட்டு விஷயங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனிக்க சரியாக இருக்குமே என்பதாகவே அமைகின்றது. இதனைக் குறை கூற முடியாது. கால ஓட்டத்தில் சமுதாய சிந்தனைகளும் எதிர்பார்ப்புக்களும் சில தேவைகளை நிர்ணயம் செய்து விடுகின்றன. ஆனால் அவ்வகையான அமைப்புக்குள் இருந்தாலும் தாம் கொண்டிருக்கும் பணியை நேசித்து அதில் ஒன்றி மாணவர்களுக்கு நல்லதொரு வழுகாட்டியாக இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசிரிய ஆசிரியைகளுக்கும் உண்டன்றோ..!


தொடரும்...
சுபா

No comments:

Post a Comment