திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவான் என்ற சிறப்புப் பட்டம் பெற்று ஆதீனத்தின் வித்துவானாக பதவி வகித்த கால கட்டத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பல நூற்களை எழுதியிருக்கின்றார்கள். அக்கால கட்டத்திலே தமிழகத்தின் பல இடங்களிலிருந்து அவரிடம் வந்து கல்வி கற்ற மாணாக்கர்கள் பலர் இருந்தனர். சிலர் அவருடன் நெடுங்காலம் தொடர்பில் இருந்தனர். பலர் ஓரளவு கற்றதும் தாங்களும் சுயமாக வித்துவானாக ஆகி தமிழ் ஆசானாக அவரவர் ஊர்களில் இருந்து வந்தனர். சிலர் தனியாக தாங்கள் ஆசிரியர் பணி தொடங்க உள்ள விருப்பத்தைத் தெரிவித்தோ, குடும்ப சூழலை விவரித்தோ, பொருளாதார சிக்கலின் நிலையினாலே அவரிடம்சொல்லிக் கொண்டு போவதும் உண்டு. சிலர் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விடுவதும் உண்டு. சொல்லிக் கொள்ளாமல் போய்விடும் மாணவர்களை நினைத்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையர்கள் வருந்திய செய்தியை இந்த நூலில் ஆங்காங்கே காண்கின்றோம்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் நெடுங்காலம் இணைந்திருந்தவர்கள் பட்டியலில் சவேரிநாத பிள்ளையவர்களும் இணைந்து கொள்கின்றார். இவர் மதத்தால் ஒரு கிறிஸ்தவர். வேதநாயகம் பிள்ளை அவர்களால் அனுப்பப்பட்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்க வந்தவர். மிக நல்ல கல்வி ஞானமும் பிள்ளையவர்களின் பால் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர் இவர். உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வரும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வீட்டில் இவரை சந்திக்கும் விஷயத்தை என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார்.
சவேரிநாத பிள்ளை கல்வி ஞானத்துடன் ப்ரசங்கம் செய்வதிலும் தேர்ந்தவர். அவருக்கு இருந்த இனிய சாரீரமும் அவரது பிரசங்கங்கள் கேட்போரை அவர் வசம் ஈர்க்கும் தன்மையை வழங்கியது. பிள்ளையவர்கள் மேல் கொண்ட அளவில்லாத அன்பினால் மற்ற எல்லா மாணவர்களைக் காட்டிலும் பிள்ளையவர்களுக்கு வேண்டிய அனைத்து தொண்டுகளையும் அதிகமாகச் செய்து வந்தார் என்று உ.வே.சா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு பகுதி 1 நூலில் குறிப்பிடுகின்றார். சவேரிநாத பிள்ளை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவராக வந்து சேர்ந்ததன் பின்னர் அவரை ஒரு நாளும் பிரிந்து சென்றதில்லையாம். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். " இக் கவிஞர் பிரானுடைய இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையாக அவரைப் போல் வேறு எவரும் இருக்கவில்லை. "
ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் திருவாவடுதுறை ஆதீனமாக பொறுப்பேற்ற பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆதீனத்தில் படித்து வந்த ஸ்ரீ நமச்சிவாயத் தம்பிரான் அவர்களுக்கு ஆதீனத்தின் சின்னப்பட்டமாக அபிஷேகம் செய்வித்து நமச்சிவாய தேசிகர் என்னும் சிறப்பு பெயரை ஆதீனகர்த்தர் அமைத்துக் கொடுத்தார். இந்தச் சின்னப்பட்டமானவர் கல்லிடைக் குறிச்சி நகரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கல்லிடை குறிச்சி சென்று பங்கேற்று வந்தார்.
அதற்குப் பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் புதிதாக மாயூரத்தில் வாங்கி செப்பஞ் செய்திருந்த வீட்டிலேயே தங்கி வசிக்க ஆசை கொண்டார். இந்த வீட்டில் அவருடன் மாணவர்கள் பலரும் தங்கியிருந்தனர். அவரது குடும்பத்தினர் திரிசிரபுரம் வீட்டிலேயே தங்கியிருந்தனர். இந்த மாயூர வீடு ஒரு கல்விக் கோயிலாக திகழ்ந்தது என்றே தெரிகின்றது. இந்த மாயூர வீட்டில் தங்கியிருக்க விருப்பம் கொண்டதை சுப்பிரமணிய தேசிகரிடம் கூறி அனுமதி பெற்று தனது மாணவர் குழுவுடன் தனது மாயூரம் வீட்டிற்கு மாற்றலானார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.
உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு பாகம் 1 நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. .... இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலையமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையிலும் இவருடைய வேலையாக இருந்தன. எதை மறந்தாலும் தமிழை மறவாத பெருங்கவிஞராகிய இவர் இங்ஙணம் தமிழறிவை வரையாமல் வழங்கி வரும் வண்மையைப் புகழாதவர் அக்காலத்து ஒருவரும் இல்லை. தமிழை நினைக்கும் பொழுதெல்லாம் இக் கவிஞர் கோமானையும் உடனினைத்துப் புகழ்தலைத் தமிழ் நாட்டினர் மேற்கொண்டனர். அவர்களுள்ளும் சோழனாட்டார் தங்கள் சோறுடைய சோணாடு தமிழளிக்கும் சோணாடாகவும் இப் புலவர் பிரானால் ஆனமையை எண்ணி எண்ணி மகிழ்ந்து வந்தனர். அச்சோழ நாட்டுள்ளும் மாயூரத்தைச் சார்ந்த பிரதேசத்திலுள்ளவர்கள் தமிழ்த்தெய்வமே ஓர் அவதாரம் ஆகித் தங்களை உய்விக்க வந்திருப்பதாக எண்னிப் போற்றி வரலாயினர். தமிழ்ப் பயிற்சி இல்லாதவர்கள் கூட இப்புலவர் சிகாமணியைப் பார்த்தல் ஒன்றே பெரும்பயனென்று எண்ணி வந்து வந்து இவரைக் கண்டு களித்துச் செல்வார்கள். "
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழைப் போற்றி செய்யுட்கள் இயற்றி மாணவர்களைப் படிப்பித்து வந்த அச்செயலைத் தமிழ்த்தெய்வ வழிபாடு என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார். இந்தக் கலைமகள் நிலையத்தில் தான் தனக்கு ஆசானாக நினைத்து நினைத்து ஏங்கி உருகி எதிர்பார்த்து தன்னையும் இப்புலவர் பெருமானாரின் மாணக்கர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்தி ஏக்கத்துடன் நிற்கின்றார் உ.வே.சா.
தொடரும்.
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment