Friday, November 23, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 32


நேற்று திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் அவர்கள் சிவபதம் அடைந்த செய்தியை மின்தமிழில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டதன் வழி அறிந்து கொண்டேன்.  இந்தச் செய்தியோடு உ.வே.சாவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சிந்தனையும் மனதில் வந்து  போகின்றது.

பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்துவானாக தனது இறுதி காலம் வரை இருந்து தமிழ்ப்பணி செய்தவர் என்பதை பதிவு 29ல் குறிப்பிட்டிருந்தேன். அவரது மறைவுக்குப் பின்னர் உ.வே.சா அவர்களுக்கும் திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு மிக அணுக்கமானதாகவே இருந்து வந்தது. இதனைப் பற்றி பின்வரும் பதிவுகளில் குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன். இந்தப் பதிவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும்  திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இடையிலான நெருக்கத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுவதால் அது தொடர்பான சில தகவல்களைப் பதிகின்றேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலில் திருவாவடுதுறை சென்று பாடங் கேட்டது அப்போது அங்கே ஆதீன கர்த்தராக இருந்து வந்த அம்பலவாண தேசிகரிடம் தான். அங்கே  அது சமயம் சின்னபட்டமாக இருந்தவர் சுப்பிரமணிய தேசிகர். இவர் நிறைந்த கல்வி ஞானம் மிக்கவர்.  பல நூல்களைப் பாடங்கேட்டவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மடத்திற்கு வரும் சமயத்தில் இருவருக்கும் நல்ல அன்பும் நட்பும் தோன்றியது.

பிள்ளையவர்களின் தமிழ் ஞானப் பரப்பையும் ஆளுமையையும் அறிந்தவராக இருந்த  சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களை மடத்திலேயே தங்க வைத்து அங்கேயே தம்பிரான்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் பாடம் போதிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் ஆதீன கர்த்தர் அம்பலவாண தேசிகரிடம் தனது எண்ணத்தை வெளியிட்டு சம்மதத்தையும் பெற்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை மடத்திலேயே தமிழ் வித்துவானாக இருக்கும் வகை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.

இது தொடர்பாக அம்பலவாண தேசிகருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமையும் பகுதி நூலில் மிக சுவாரசியமாகவும் அதே வேளை இருவரது சிந்தனை ஓட்டங்களையும் பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

திரிசிரபுரம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள நகரங்கள் மட்டுமன்றி சென்னையிலும் கூட இந்தக் கல்விமாணுக்குச் சிறந்த பெயரும் மதிப்பும் இருப்பதை சுப்பிரமணிய தேசிகர் எடுத்துச் சொல்கின்றார்.  தோற்றத்தைப் பார்க்கும் போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மிக சாதுவாக இருக்கின்றாரே என அம்பலவாண தேசிகர் வினவும் போது  “நன்றாகப் படித்தவர்கள் அவ்வாறே இருப்பார்கள். பிறர் தாமே அறிந்து தங்களை உபசரித்தால்தான் தம்முடைய ஆற்றலை அவர்கள் புலப்படுத்துவார்கள்” என்று பதில் கூறுகின்றார் சுப்பிரமணிய தேசிகர்.

சரி என்று ஒத்துக் கொள்ளும் அம்பலவாண தேசிகர், ”இவரிடம் அதிகமான மாணவர்கள் சேர்ந்தே இருக்கின்றனரே. இவர்கள் அவரை விட்டு நீங்கமாட்டார்கள் போலிருக்கின்றதே. இவரோடு எல்லோரும் இங்கே இருந்தால் அதிக செலவாகுமே”  என வினவ அதற்கு  சுப்பிரமணிய தேசிகர் சொல்லும் பதில் சுவையானது.

”அவ்வளவு பேரும் இவருடைய மாணாக்கர்கள். இவர் எங்கே இருந்தாலும் உடனிருப்பார்கள். அவர்களுள் முன்னமே படித்தவ்ர்கள் சிலர்; இப்பொழுது படிப்பவர்கள் சிலர்; இனிப் படிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சிலர்; அவர்களுக்குள்ளே பந்தியிலே உண்ணத்தக்கவர்களுக்குப் பந்தியிலும், ஏனையவர்களுக்கு அவரவர்க்கு ஏற்றபடியும் ஆகாரம் செய்விக்கலாம். இங்கே சாப்பாட்டுச் செலவில் ஒன்றும் குறைவில்லையே.  படித்த வித்துவான்கள் இருத்தலும் அவர்களைக் கொண்டு  பலரைப் படிப்பித்தலும் மடத்துக்கு ஏற்றவையாகும்.”

இப்படி சொல்லி விளக்கிய பிறகு அவருக்குத் தக்க சம்பளம் கொடுக்க வேண்டி வருமே என வினவும் அம்பலவாண தேசிகரிடம் சுப்பிரமணிய தேசிகர் இப்படிச் சொல்கின்றார். “அதைப் பற்றி கவலை சிறிதும் வேண்டாம்.  இவருடைய மாணாக்கர்களைப் போஷித்துப் பாதுகாத்தலே போதும். அதனாலேயே இவர் மிகவும் திருப்தியடைவார். அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் “.

இப்படி ஒருவர் தன்னலம் விடுத்து, மாணாக்கர்கள் நலமே தன் வாழ்க்கை என இருந்திருக்கின்றார் என வாசித்து அறியும் போது என் மனம் அதிசயத்திலும் அதற்கு அடிப்படையாக அமைந்த அவரது எல்லையில்லா அன்பிலும் நெகிழ்ந்து போகின்றது.

இப்படிக் கூறி சம்மதம் பெற்று மடத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஆதீன வித்துவானாக நியமித்தமை குறித்து தகவலளித்து அவருக்கு வேண்டிய வசதிகளைத் தயார் செய்து கொடுக்கும் படி ஏற்பாடுகளையும் செய்வித்தார் சுப்பிரமணிய தேசிகர். அத்துடன் இவருக்கு இரண்டு  தவசிப்பிள்ளைகளையும் ஏற்பாடு செய்து தந்திருக்கின்றார். மடத்திலிருந்து மாதச் சம்பளத்தை ஏற்பாடு செய்தும் கொடுத்திருக்கிருக்கின்றார்.

அடுத்த சில நாட்களில் அம்பலவாண தேசிகர் மீது ஒரு கலம்பகம் ஒன்றை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியிருக்கின்றார். பல வித்துவான்கள் முன்னிலையில் அரங்கேற்றம் கண்டது அந்த நூல்.

இந்த அரங்கேற்ற நிகழ்வின் போது, திருவாவடுதுறை தொடர்பாக பல நூல்கள் இருந்தாலும் கூட இந்த நூல் பல புதிய விஷயங்களை ஆழ்ந்த பொருளுடன் இனிய தமிழில் விளக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றதே என அதனைக் கேட்ட அனைவரும் புகழ்ந்திருக்கின்றனர். இதற்காகவேனும் இவரைச் சிறப்பிக்க வேண்டும் என மடத்துப் பெரியோர்கள் விரும்ப, அதனை ஏற்றுக் கொண்ட அம்பலவாண தேசிகர் சுப்பிரமணிய தேசிகருடன் கலந்தாலோசித்து விட்டு இவருக்கு ”மகாவித்துவான்”  எனும் பட்டத்தை அந்த நிகழ்வில் வழங்கினார்.

அம்பலவாண தேசிகருக்குப் பின்னர் ஆதீன பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகருக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மேல் அளவற்ற அன்பு. அவரது கல்வி ஞானத்தின் மேல் மிகப் பெரிய நம்பிக்கை; ப்ரமிப்பு; வியப்பு. ஒரு உரையாடலில் இப்படிக் குறிப்பிடுகின்றார். “ உங்கள் கவித்துவத்தையும் புகழையும் யாரால் மறைக்க முடியும்? சூரியனை மறைப்பதற்கு யாரால் இயலும் ? ” (பக் 234)

பிற்காலத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு திருநாகைப் புராணம் இயற்றி வரும் வேலையில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் சிவபதம் அடைந்தார். இது 1869ம் ஆண்டு நிகழ்ந்தது.

தொடரும்..


அன்புடன்
சுபா

1 comment:

  1. உ வே சா வுடன் ஒரு உலா 32 படித்தேன்

    தளராத உழைப்பு உங்களுடையது வாழ்த்துக்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete