Saturday, December 15, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 35



தான் இதுவரை யாரிடம் மாணக்கராகச் சேர வேண்டும் என்று கனவு கொண்டிருந்தோமோ அவரிடமே மாணாக்கராகச் சேர்ந்தாயிற்று..  இனி.. அடுத்து தொடர்ந்து பல நூற்களைக் கற்று தேர்ச்சி பெறுவதே நோக்கம் என்று பாடங் கேட்டலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் உ.வே.சா. முதல் பாடமாக நைடதத்தை தொடங்கி வைத்தார் பிள்ளையவர்கள். ஏற்கனவே நைடதத்தை உ.வே.சா வேறு ஆசிரியரிடம் படித்திருந்தாலும் இப்புலவர் பெருமானின் விளக்கத்தோடு கேட்கும் போது அதில் பல பொருள் புரியாத சொற்களுக்கு விளக்கமும் தெளிவும் பெற்றுக் கொண்டதாகவும் அவருடைய போதனை தனக்கு இன்பத்தை உண்டாக்கியது என்றும் குறிப்பிடுகின்றார் உ.வெ.சா.

சில நூல்களை நாம் ஒரு முறை படிப்பது என்பது அன்னூல் பற்றிய முழுமையான தெளிவினை நமக்கு வழங்காது. நமது மனதின் நிலைக்கும் கிரஹிக்கும் தன்மைக்கும் ஏற்ப படிக்கின்ற நூலை புரிந்து கொள்கின்றோம். ஒருமுறைக்கு மறுமுறை படிக்கும் போது நூலில் நமக்குக் கிடைக்கின்ற தெளிவு முன்னதைக் காட்டிலும் வேறுபட்டிருப்பதையும் அன்னூல் பற்றிய மேலும் ஆழமான புரிதல் கிடைப்பதற்கு உதவும் என்பது நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும் அனுபவ உண்மை. அதோடு நாம் ஒருமுறைக்கு இரு முறையாக ஒரு நூலை வாசிக்கும் போது கிடைக்கின்ற புரிதலைக் காட்டிலும் அதனை புரிந்து கொண்ட ஒருவர் தெளிவுற விளக்கினால் அது மேலும் ஆழமாக நூலின் கருத்தை புரிந்து கொள்ள உதவும். ஒரு ஆசிரியரின் பணி அது தானே!

மகன் விரும்பிய ஆசிரியரிடமே கொண்டு வந்து சேர்த்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் ஊருக்குப் புறப்பட சித்தமானார் வேங்கட சுப்பையர். உ.வே.சா என் சரித்திரம் நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடம் கேட்க ஆரம்பித்து விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கஷ்டம் தீர்ந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாஸ்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே? "

கலியின் தொல்லைகள் நீங்க நைடதத்தை வாசிப்பார்கள் என்பது புதிய செய்தியாக எனக்குத் தோன்றியது. எத்தனையோ விஷ்யங்களில் நம்பிக்கை வைத்துத்தான் மனிதர்கள் உழன்று கொண்டிருக்கின்றோம். ஒரு சில விஷயங்களில் நமக்கு ஏற்படும் நம்பிக்கைகள் தான் நமது வாழ்க்கையை நாம் தொடர்ந்து நடத்திச் செல்ல உதவுவதாக அமைகின்றது. நம்பிக்கை இழக்கும் போது மனம் நிலையில்லா தனமையை அடைந்து தன் நிலையிலேயே சோர்வு அடைகின்றது. மனிதர்கள் நாம்  நம்பிக்கையை நிலை நாட்டிக் கொள்வதற்காக பூஜைகள், சடங்குகள், உறவுகள், பொருளாதார ஏற்பாடுகள், என்பனவற்றை தொடர்ந்து பற்றிக் கொண்டு வாழ்வது இயல்பாகி விட்டது.

இளம் தலைமுறையினர் மாணவர் பருவத்தில் கல்வி மேல் சலனமில்லாத ஆர்வம் கொள்வது மிக மிக அவசியம். சிலருக்கு தானாகவே அவ்வகை ஆர்வம் இயல்பாக வந்து விடுகின்றது. சிலருக்குச் சிலரது தூண்டுதலால் அவ்வகை ஆர்வம் ஏற்படுகின்றது. புத்தகங்கள் வாசிப்பதை பரீட்சைக்காகக் கடமைக்குச் செய்வதாக நினைக்கும் மாணவர்களுக்கு நூல்கள் நிச்சயமாகச் சுமையாகித் தான் போகும். மாறாக நூலை வாசிப்பதில் இன்பம் காணும் மாணாக்கர்கள் அதில் ஒவ்வொரு முறை வாசித்தலிலும் தெளிவு பெறும் போதும் ஆழ்ந்த இன்பத்தை அனுபவிக்க முடியும். இந்த நிலையை இயல்பாகப் பெறாத இளம் தலைமுறையினருக்குக் கல்வி மேல், நூல்கள் மேல் விருப்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டிய கடமை பெற்றோரையும் ஆசிரியரையும் சேர்ந்ததாகின்றது.


தொடரும்...

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment