2013ம் ஆண்டின் முதல் நாள் இன்று. இந்த நன்னாளிலும் இந்தத் தொடரில் ஒரு பதிவினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆவல்!
திருக்குடந்தைத் திருவந்தாதி நூலை உ.வே.சா படிக்க ஆரம்பித்த போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவரகள் ஒரு வாரெழுத்தாணியையும் சுவடிக்கட்டையும் கொடுத்து நூலை முழுதாக பிரதி எடுத்துக் கொண்டு படித்து வரும்படி கூறிவிட்டார். இவ்வாறு அடிக்கடி சுவடியில் எழுதும் நிலை உருவானமையால் மிக விரைவாகவும் அதே சமயம் சிரமமின்றியும் தம்மால் சுவடியில் எழுத முடிந்தது என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா. அச்சுப்பதிப்புக்கள் பிரபலமாகிக் கொண்டிருந்த கால கட்டமது. ஆனாலும் பிள்ளையவர்கள் எழுத்தாணி கொண்டு தம் மாணாக்கர்கள் சுவடியில் பிரதி எடுத்துக் கொண்டு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது தெரிகின்றது.
இரண்டே நாட்களில் திருக்குடந்தைத் திரிபந்தாதி பாடம் சொல்லி முடிவடைந்தது. பாடங் கேட்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள மாணவரும் பாடம் சொல்வதையே தம் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்த ஆசிரியரும் சேர்ந்தால் என்ன நிகழும்? பல நூல்களின் பாடங்கள் ஒவ்வொன்றாகத் தொடங்கின உ.வே.சாவுக்கு.
பல வேளைகளில் உ.வே.சாவுடன் சவேரிநாதப் பிள்ளையும், கனகசபை ஐயர், சிவப்பிரகாச ஐயர் என்ற வீர சைவ நம்ப்க்கையினராகிய இரு சகோதரர்களும் இவருடன் சேர்ந்து பாடங்கேட்பதும் உண்டு.
குடந்தைத் திரிபந்தாதி பாடங் கேட்டு முடிந்ததும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய பழமலைத் திரிபந்தாதி தொடங்கியது. அது பாடங்கேட்டு முடிந்ததும் நெற்குன்றவாண முதலியாரெண்பவர் இயற்றிய திருப்புகலூர்த் திரிபந்தாதி தொடங்கியது. இந்த நூலை பாடம் சொல்லும் வேளைகளில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அடிக்கடி “என்ன வாக்கு! என்ன நயம்!” என்று மிக விரும்பிச் சொல்லிக் கொள்வாராம். அப்படி ரசித்துப் படிக்கும் வகையில் இந்த நூல் சொல்லிலும் பொருளிலும் மிகச் சிறந்து விளங்கியதாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
திருப்புகலூர்த் திரிபந்தாதி முடிவடைந்ததும் மறைசையந்தாதி என்னும் நூலை பிள்ளையவர்களிடம் ஒரே நாளில் பாடங் கேட்டு முடித்தனர் இந்த மாணாக்கர்கள். அதனையடுத்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே இயற்றிய மேலும் சில நூற்கள் பாடம் கேட்கத் தொடங்கினர். அதில் தில்லை யமக அந்தாதி, துறைசையமக அந்தாதி, திருவேரகத்து யமக அந்தாதி ஆகியன அமைந்தன.
இப்படி தினம் தினம் கல்வி எனும் தமிழ் ஞானக் குவியல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். உ.வே.சாவோ தனக்குக் கிடைக்கின்ற ஞானப் பொக்கிஷங்கள் ஒன்றையும் சிதற விடாமல் எல்லாவற்றையும் எடுத்துக் சேர்த்துக் கொள்பவராகவே இருந்தார்.
இதனை உ.வே.சா தாமே விவரிப்பதை வாசித்துப் பார்ப்பதும் இப்பகுதிக்குச் சுவை கூட்டும்.
“அந்தாதிகள் ஆன பிறகு பிள்ளைத்தமிழ் வரிசை தொடங்கப் பெற்றது. எனக்குக் கொண்டாட்டந்தான். கால் நூலும், அரை நூலும், ஒரு செய்யுளுமாகப் படித்த எனக்கு வரிசை வரிசையாகப் பிரபந்தத் தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அனாயாசமாகக் கிடைத்தன. சோர்வில்லாமற் பாடங் கேட்டு வந்தேன். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் என்பவற்றைக் கேட்டேன். திரிபந்தாதியா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. யமக அந்தாதியா? அதிலும் இரண்டு, மூன்று. பிள்ளைத் தமிழா? அதிலும் ஐந்துக்குக் குறைவில்லை. பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றிய அஷ்டப் பிரபந்தங்களில் ஐந்தாறு பிரபந்தங்கள் பாடங் கேட்டேன். அசுவதாட்டியில் நான் பாடங் கேட்டு வந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை. இப்படி நான்
பாடம் கேட்கும் காலம் ஒன்று வருமென்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. விருத்தாசல ரெட்டியார், “நாங்களெல்லாம் மேட்டு நிலத்துக் கிணற்றில் ஊறும் ஊற்றுக்கள். அவர் காவேரிப் பிரவாகம்” என்று
சொன்னது எவ்வளவு உண்மையானது? காவேரிப் பிரவாகமா? கங்காப் பிரவாகமென்று சொல்லலாம்; அதுகூடப் போதாது. “கடல் மடை திறந்தது போன்றது” என்று சொன்னாலும் தகும். ஒவ்வொரு பிரபந்தமும் கேட்டு முடிந்தவுடன் அதனைச் சிந்தித்து இன்புற்று அந்தத் திருப்தியிலே, “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று பெருமிதம் அடைந்தேன்.”
இந்தப் பகுதியில் உ.வே.சா பாடங் கேட்டதாகக் குறிப்பிடும் நூல் பட்டியலை பார்க்கும் போது இந்த நூற்களைத் தேடி மின்பதிப்பு செய்ய வேண்டும் என்ற ஆவல் மிகுகின்றது. இதற்காகத் தற்சமயம் சில முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம், இறையருள் கருணை துணை செய்யும் என்ற நம்பிக்கையில்!
தொடரும்....
No comments:
Post a Comment