Friday, January 4, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 40


'எனக்கு ஏன் இந்தப் பெயர் வைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது' என்று என் அம்மாவிடம் ஒரு முறை நான் கேட்டதுண்டு. அவரது அப்பா, அதாவது எனது தாத்தா, தஞ்சையிலிருந்தவர் அவர் ஜாதகம் பார்த்து கணித்துக் கொடுத்து சு எனும் எழுத்தில் பெயரின் முதலெழுத்து வரவேண்டும் என்று வந்ததால் இந்தப் பெயரைத் தான் இடவேண்டும் என இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குத் தந்தி அனுப்ப, அப்படி அமைந்தது தான் என் பெயர் எனத் தெரிந்து கொண்டேன்.  எனக்கும் என் பெயர் பிடித்து விட்டதால் வளர்ந்த பின்னரும் நானும் அதில் எந்த மாற்றமும் செய்து கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தே சிலர் தங்கள் பெயரை வெவ்வேறு காரணங்களுக்காக மாற்றி வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கின்றேன். சில வேளைகளில் புதிய பெயரே அவர்களுக்கு நிலைத்து விடுகின்றது. அந்த விஷயம் உ.வே.சா அவர்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றது என்பதை அறிந்து கொண்ட அந்தச் செய்தியை இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உ.வே.சாவிற்கு அவர் பிறந்த சமயம் குடும்பத்தினரால் வைக்கப்பட்ட பெயர் வேங்கடராமன் என்பது. வேங்கடாசலபதி தெய்வத்தைக்குல தெய்வமாகக் கொண்டிருந்தமையால் அவருக்கு இந்தப் பெயர் அமைந்திருந்தது. ஆனாலும் அனைவருமே வீட்டில் சாமா (சாமிநாதன்) என்றே கூப்பிடுவது வழக்கம்.

இந்த வேங்கடராமன் என்ற பெயரை மாற்றி சாமிநாதனாக ஆக்கி உ.வே.சாவிற்கு இந்தப் பெயரே நிலைக்கும் படி செய்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் இவரது பெயர் பற்றி வினவுகின்றார். சாமா என்று வீட்டில் அழைப்பார்கள் என்று சொல்ல சாமிநாதன் என்ற பெயரே நன்றாக இருக்கின்றதே. நானும் இந்தப் பெயரிலேயே அழைக்க விரும்புகின்றேன் என்று சொல்ல இவருக்கு அப்பெயரே அமைந்து நிலைத்தது.

மாணவர் மேல் அளவற்ற அன்பு கொண்டவர்; அவர்களுக்காகவே வாழ்ந்தவர் பிள்ளையவர்கள் என்று முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அதனைச் சான்றுகளுடன் நமக்கு விளக்குவது என் சரித்திரம் நூல்.

உ.வே.சாவை தாயின் பரிவண்புடன் கவனித்துக் கொண்டு அவர் கல்வி வளர்ச்சியின் மேல் மட்டுமன்றி அவர் உடல் நிலையிலும் அக்கறை கொண்டு தம்மை வளர்த்து வந்த அப்பண்பைப் போற்றி இப்படிக் கூறுகின்றார் உ.வே.சா தனது நூலின் 31ம் அத்தியாயத்தில்.

" ஒவ்வொரு நாளும் நான் சாப்பிட்டு வந்தவுடன், “சாப்பிட்டாயிற்றா? ஆகாரம் சௌகரியமாக இருந்ததா?” என்று விசாரிப்பார். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்படி வற்புறுத்துவார். ஒரு நாள் பிள்ளையவர்கள் தாம் எண்ணெய் தேய்த்துக் கொள்ள எண்ணி எண்ணெயை வருவித்தார். அப்போது அருகிலிருந்த என்னைப் பார்த்தார். “உமது முகம் தெளிவாக இல்லையே; கண் சிவந்திருக்கிறதே. எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்” என்று எண்ணெயும் கொடுத்தார். உடனே நான் சென்று எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்து போஜனம் பண்ணிவிட்டு வந்தேன். பிள்ளையவர்கள் அப்போது என்னைப் பார்த்தவுடனே அருகிலிருந்த ஒருவரிடம் “இப்போது எப்படி இருக்கிறது இவர் முகம்? தெளிவாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டனர். என் முகத்தில் இருந்த தெளிவு என்னைக் காட்டிலும் அவருக்கு அதிகமான மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எனக்கு ஏதேனும் வேண்டுமென்று தெரிந்தால், உடனே அவர் வாங்கிக் கொடுப்பார். நான் சாப்பிட்டு வருவதற்கு நேரமானால், “இன்னும் வரவில்லையே?” என்று கவலையோடு இருப்பார். இராத்திரி வேளைகளில் அக்கவலை அதிகமாக இருக்கும்; தெருத் திண்ணையில் அமர்ந்தபடியே என் வரவை எதிர்பார்த்திருப்பார். “ஏன் இவ்வளவு நேரம்? கவலையாக இருந்தது” என்று உள்ளன்போடு விசாரிப்பார். இத்தகைய செயல்களால் நான் அவரது
அன்பை அறிந்து உருகினேன். அந்த அன்பிலே நனைந்து தமிழமுதத்தை உண்டு வந்தமையால் என் தாய் தந்தையரைப் பிரிந்திருப்பதனால் உண்டான துயரம் நீடிக்கவில்லை. பிள்ளையவர்களைப் பிரிந்திருக்க நேருமாயின் அதுவே கஷ்டமாக இருக்குமென்று தோன்றியது. "


தொடரும்..

சுபா

No comments:

Post a Comment