Saturday, January 11, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 61


தன்னைப் சூழ்ந்திருந்த சூலை நோயைப் போக்க வேண்டி மருள் நீக்கியார் கூற்றாயினவாறு விலக்ககலீர் என்று மனம் உருகிப் பாடி வேண்டி அந்த நோயிலிருந்து விடுபட்டார் என்று பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். திருவாவடுதுறையில் நோய் பரவி மக்கள் துன்பப்பட்டு வாடிய போது, ஆதீனகர்த்தர் அருகாமையில் உள்ள கிராமங்களில் இந்த நோய் பரவுவதிலிருந்து தடுக்கவும் நோய் தீர மருந்து வாங்கிக் கொடுத்து மக்கள் குறைதீர்க்க வேண்டும் என்றும் ஒருவர் செய்யுள் பாடியிருக்கின்றார். சுவாரஸியமாக இருக்கின்றது அல்லவா இந்தச் செய்தி? அதைப் பற்றி சிறிது பார்ப்போமே. 

அம்பர் புராணம் உருவாகிக் கொண்டிருந்த வேளையில் திருவாவடுதுறை நகரில் பலரும் விஷபேதி நோய் வந்து சிரமப்பட்டிருக்கின்றார்கள். பலர் நோயின் கடுமை தாங்காது இறந்திருக்கின்றனர். பொது மக்களில் பலர் கல்வி அறிவுப் பெறாதவர்கள். இந்த நோயின் தன்மை, இது எதனால் உருவாகின்றது? எப்படி தடுப்பது ? எவ்வகை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது? இந்த நோய் பரவுவதிலிருந்து எவ்வாறு தடுப்பது போன்ற விஷயங்களில் போதிய மருத்துவ ஞானம் இல்லாத பாமர மக்கள். இவர்கள் இந்த நோயினால் தம் உறவினர்கள் இறப்பதைக் கண்டு அஞ்சி நடக்ககூடாததெல்லாம் நடக்கின்றது. எல்லாம் கலிகாலம் எனப் புலம்பி அழுதிருக்கின்றனர். இதனை உ.வே.சா தன் சரித்ததில் பதிந்து வைக்கின்றார்.

அதுகாறும் அத்தகைய நோயை அறியாத ஜனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தர்மம் அழிந்து வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று சொன்னார்கள். “ரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர்.

ரயில் வந்ததால் ஆசாரம் போய் இப்படி நோய் வருகின்றது என்ற மூட நம்பிக்கைகளை இப்போது நினைத்துப் பார்க்கும் போது நமக்கு அது சிரிப்பை வரவழைத்தாலும் அக்கால சூழலில் மக்களின் பொது அறிவு ஞானம், மருத்துவ சுகாதாரம் பற்றிய செய்திகள் அறியாத நிலையில் அவர்களின் பய உணர்வு இப்படியெல்லாம் புலம்ப வைத்திருக்கின்றது என்றே நினைக்கத்தோன்றுகின்றது.

இந்த காலகட்டத்தில் அப்போதைய அரசாங்கம் கிராமங்களில் இந்த நோய் பரவுவதிலிருந்து தடுக்க மருந்துகளை வாங்கி விநியோகித்திருக்கின்றனர். ஆனாலும் இவை போதியனவாக இல்லை போலும். இதனை நினைத்து மாயூரத்தில் இருந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் தம்மாலான உதவிகளையும் செய்திருக்கின்றார்கள். அப்படியும் மருந்துகள் போதாத நிலையில்  ஆதினகர்த்தர் சுப்ரமணிய தேசிகருக்கு ஒரு செய்யுளை எழுதியிருக்கின்றார். அச்செய்யுளில் இந்த நோய் தீர மருந்து வாங்கி ஊர் ஊராகக் கொடுத்து மக்கள் துயர் தீர்க்க ஆதீனம் ஆவன செய்ய வேண்டும் எனச் சொல்லி செய்யுளை இயற்றியிருக்கின்றார். இந்தச் செய்யுளையும் உ.வே.சா தன் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

“இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி
மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுமிந்நோய்
விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா
நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.”

பொருள்
[மும்மல நோய் கெடும்படி ஞானாசிரியனாக உலகத்தில் தங்குகின்ற சுப்பிரமணிய தேசிக, இலக்கணத்திற் சொல்லப்படும் எழுத்தாகிய மெய்க்கு அரை மாத்திரை கால அளவு. இப்போது அந்த அளவு கூடத் தம் மெய்களுக்கு இல்லாமல் விஷபேதியாகிய மலநோயால் பலர் இறந்தனர். இந் நோயை விலக்கத் திருவருள் புரிய வேண்டும்.]

நல்லுள்ளம் கொண்ட திரு.வேதநாயகம் பால் தீராத நட்பு கொண்டவர் ஆதீனகர்த்தர். ஆக இச்செய்யுளைக் கண்டதும் சும்மா இருப்பரா? உடனே திருமடத்தில் கட்டளை பிறப்பித்து ஏராளமான மருந்துகளை வாங்கச் செய்து ஒவ்வொரு கிராமந்தோறும் முனிசிப்களைக் கொண்டு இந்த மருந்துகளை விநியோகிக்கச் செய்திருக்கின்றார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பண்பினைக் காட்டும் உள்ளமல்லவா இது?

சமூகச் சேவையும் பக்தி அனுஷ்டானங்களுடன் கலந்து பரிமளிக்கும் போது சமய நிறுவனங்களின் பணிகளுக்கு அதுமேலும் பலம் சேர்கின்றது என்பது என் எண்ணம். இறை சிந்தனை என்பதே தம்மைப் போல பிற உயிர்களையும் இறையருள் காக்க காலத்திற்கேற்ற வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியாக அமைய வேண்டும். சமய நிறுவனங்கள் பக்தி அனுஷ்டானங்களில் மட்டும் தம் நடவடிக்கைகளை முடக்கிக் கொண்டு மக்கள் நலனை கருதாது செயல்படும் நிலையில் மக்களிடமிருந்து வெகு தூரம் சென்று விடும் நிலை ஏற்படும். எனது அனுபவத்தில் நான் நேரில் சென்று பார்த்து வந்த அனுபவத்தில் குன்றக்குடி ஆதீனம், கோவிலூர் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி நடைபெறும் பல சமூக நிகழ்வுகளைப் பற்றி அறிந்து மகிழ்ந்தேன். 

அறியாமை என்னும் நோயைப் போக்க வல்ல மாமருந்து கல்வி! அந்தக் கல்வியை ஏழை எளியோரும் பெற இப்படிப்பட்ட ஆதீனங்கள் இலவசப் பள்ளி, கல்லூரிகள், பெண்கள் கல்லூரிகள், தொழிற்கல்வி என நடத்தி வருவது போற்றுதலுக்குறிய ஒன்றே. இப்படி நடந்து கொண்டிருக்கும் நல்ல பல செயற்பாடுகள் பற்றி எல்லாம் எத்தனை பேர் அறிந்து கொண்டிருக்கின்றோம் என்பதும் ஒரு கேள்வி. 

தொடரும்

சுபா

1 comment:

  1. சுபாவுக்கு வாழ்த்துக்கள் பழமையை நினைவு கூர்ந்து நெஞ்சம் நெகிழச் செய்தமைக்கு நன்றி நான் திங்களன்று திருவாவடுதுறை வேணுவனவிலாசத்தில் சொற்பொழிவாற்றியபோது மகாவித்வான் பிள்ளை அவர்களையும் உ,வே, சா. அவர்களையும்தான் நினைத்துக்கொண்டே இருந்தேன்.வணங்கினேன்.நன்றி. சபா. அருணாசலம்30-1-2014.

    ReplyDelete