Tuesday, January 28, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 62

தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது.

ஏனைய பாடங்களை முடித்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தம் மாணாக்கர்களுக்குக் கம்பராமாயணப் பாடத்தை அப்போது தான் தொடங்கியிருந்தார். பாடல்கள் அனைத்திற்கும் பொருள் விளக்கம் தனித்தனியாக எனக் குறிப்பிடாமல் இடையிடையே நயமாக வருகின்ற செய்யுட்களுக்கு மட்டும் பொருள் சொல்வாராம் ஆசிரியர். கம்பராமாயணப் பாடம் நடத்தும் போது பூரணமாக அதனை ரசித்து நடத்தினார் பிள்ளையவர்கள் என உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

சில குறிப்பிட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் சொல்லி அதனை மனதார ரசிப்பாராம். கம்பரின் செய்யுட் திறனை பாராட்டி மகிழ்வாராம். இப்படி கம்பராமாயணப் பாடம் நடந்து கொண்டிருந்த வேளையில் பிள்ளையவர்களுக்கு பித்தப்பாண்டு என்னும் ஒரு வகை நோய் வந்திருக்கின்றது. இந்த நோய் பாதத்தை தாக்கி வயிற்றை வீங்க வைக்கும் தன்மையுடையதாம். (இந்த நோய்க்கு இப்போது வழக்கில் என்ன பெயர் எனத் தெரியவில்லை.) இந்த நோயினால் பிள்ளையவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருந்த நேரம். ஆனாலும் இந்த நோய் வந்தமையினால் பாடம் நடத்துதல் தடைபடவில்லை.  பாடம் சொல்லுதலே அவரது உடல் நோயை மறக்கச் செய்யும் மாமருந்தாக அவருக்கு அப்போது இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அந்த சூழலில் கம்பராமாயணத்தை ஆசிரியர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் சமயத்திலேயே கேட்கும் வாய்ப்பு அமையாமல் போனதே என வருந்திக் கொண்டிருந்தார் உ.வே.சா.

தனது மனக்கிலேசத்தை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

கம்பரை ஆசிரியர் பாராட்டும்போதெல்லாம் நான் கம்பரைக் காட்டிலும் ஆசிரியரைப் பற்றியே அதிகமாக நினைப்பேன். “இப்பெரிய நூலை முன்பே கேளாமற் போனோமே!” என்ற வருத்தம் உண்டாகும். “இவர்களுக்கு இவ்வியாதி வந்திருக்கிறதே; எப்படி முடியுமோ!” என்ற பயமும் என் மனத்தை அலைத்து வந்தது.

நோயால் வருந்திக் கொண்டிருந்த பிள்ளையவர்களைத் திருவிடைமருதூரிலிருக்கும் கட்டளை மடத்தில் இருந்து வர சகல வசதிகளும் செய்து கொடுத்து அனுப்பி வைத்தார் ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர். திருவிடைமருதூர் திருவாவடுதுறையிலிருந்து ஏறக்குறைய ஒன்றரை கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர். திருவாவடுதுறையில் ஆதீனத்தில் அதிகமானோர் வந்து செல்வது தவிர்க்க முடியாதது. ஆதீனகர்த்தரை வந்து பார்த்து மரியாதை செய்ய வருவோர் பிள்ளையவர்களையும் தேடிக் கொண்டு வந்து பேசுவதால் அதுவும் சிரமத்தைக் கொடுப்பதால் ஓய்வு தேவையென்ற எண்ணத்தில் இந்த ஏற்பாடு நிகழ்ந்திருக்கலாம்.

இங்கு வந்த பின்னர் உ.வே.சாவும் ஏனைய பிற மாணவர்களும் ஒரு நாள் விட்டு மறு நாளென ஆசிரியரை திருவிடைமருதூர் வந்து பார்த்து பாடம் கேட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த திருவிடைமருதூரில் இருக்கும் ஆதீனத்தின் பராமரிப்பின் கீழ் இருக்கும் சிவாலயம் மிகப் பழமை வாய்ந்தது. விஜயாலயச் சோழன் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் உத்தம சோழன் காலத்தில் விரிவாக்கப்பட்டு பின்னர் மேலும் அடுத்தடுத்து வந்த சோழ மன்னர்களால் மேலும் விரிவாக்கப்பட்ட அருமையானதொரு கலை நுட்பம் பொருந்திய ஒரு சிவாலயம் இது.

இந்த சிவாலயத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிவலிங்கம் என்ற வகையில் இரண்டு வரிசைகளில் வெவ்வேறு வடிவிலான லிங்கங்கள் ஓரிடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நான் வேறெங்கும் பார்த்திராத ஒரு அமைப்பு இது. இப்பகுதிக்குச் செல்வதற்கு முன் மண்டபத்தின் இடது புறத்தில் பாவை விளக்கு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. பல சன்னிதிகள் கொண்ட மிகப் பெரிய கோயில். கலை நயத்துடன் கட்டப்பட்ட ஒன்று என்றும் தயங்காது சொல்லலாம்.

திருவிடைமரூதூர் வந்து அங்கு கட்டளை மடத்தில் தங்கியிருந்த வேளையில் பிள்ளையவர்கள் ஓய்வாக இல்லை.  திருவிடைமருதூர் ஆலயத்தைப் பற்றி ஒரு திரிபு அந்தாதி ஒன்றினை அப்போது எழுதத் தொடங்கியிருந்தார் அவர். அது இக்காலகட்டத்திலேயே எழுதி முடிக்கப்பட்டு ஆதீனத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அத்தோடு அச்சமயத்திலேயே ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரத்தையும் எழுதத் தொடங்கினார் பிள்ளையவர்கள்.  ஸ்ரீ சிவஞான யோகிகள் மேல் ஆதீன கர்த்த்ர் சுப்பிரமணிய தேசிகருக்கு  மிகுந்த அன்பு இருந்ததாம். இதனால் இந்தச் சரித்திரத்தை மிக விரிவாக சிறப்பாக எழுத வேண்டும் என்பது பிள்ளையவர்களுக்கு ஒரு கனவாக இருந்திருக்கின்றது. ஆனால் அது நிறைவேறாத கனவாகவே முடிந்தது என்பது வருத்தம் தரும் ஒரு நிகழ்வு.

அந்த நிலையில் தன் குமாரன் சிதம்பரம் பிள்ளையின் திருமணத்திற்காக வாங்கிய கடன் முழுதும் தீர்ந்த பாடில்லை. அவ்வப்போது கிடைக்கும் வருமானத்தையும் ஏனைய மாணக்கர்கள் நலனுக்காகவே செலவிடும் குணமும் கொண்டவர் பிள்ளையவர்கள். இதனால் தனது சொந்த குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் இக்கட்டான நிலையில் இருப்பதை நினைத்து தீராத மனக்கவலை பிள்ளையவர்களுக்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். உடல் நோயுடன் மனக் கலக்கமும் அதிகரித்துக் கொண்டே வந்த காலச் சூழல் அது.

தொடரும்....

சுபா

No comments:

Post a Comment